💟 ஜீவாமிர்தம் 2
ஜீவாவின் அருகில் வந்த விஷயத்தை பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்த அர்ஜுனிடம்,
"அப்புறம்.... எப்போ எஸ்டேட்டுக்கு பேக்கிங்? பண்ணையார் பத்து நாள் முன்னாடியே வந்து குடும்பம் மொத்தத்தையும் திருவிழாவுக்கு சீர் குடுத்து இன்வைட் பண்ணிட்டு போயிருப்பாரே? உனக்கு ஏதாவது செமையா கிடைச்சதா மாம்ஸ்?" என்று கண்சிமிட்டி புன்னகைத்தவனிடம் கோபத்துடன்,
"என்னடா எப்போ பார்த்தாலும் கிண்டல் பேசி விளையாடிட்டு..... இந்த ஃபங்ஷன்க்காவது மலைக்கு வாடா! நிர்மலாவை நான் என் தங்கச்சியா நினைக்கறேன்டா; முதல்ல எல்லாம் உங்கப்பன் அவளை பாடாய் படுத்தினான்! இப்ப அதே வேலையை நீ செய்யுற; நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருக்கிறப்ப நீ மட்டும் அங்க இல்லன்னா உங்க அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சியா ஜீவாம்மா?" என்று பயந்த படி கேட்டவரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.
"ஜீவா....ம்மா!" என்று பம்மியபடி அழைத்த தன் மாமனின் அழைப்பு காதில் விழுந்தது தான் தாமதம்.... தன் முன் இருந்த கண்ணாடி டம்ளரை தன் கையில் எடுத்துக் கொண்டு டீப்பாயை ஓங்கி தன் பலம் கொண்ட மட்டும் குத்தினான் ஜீவா.
கண்ணாடி டம்ளருடன் டீப்பாயில் ப்ளேட்டில் இருந்த ப்ரெஞ்ச் ப்ரைஸ், இவையெல்லாம் தாறுமாறாக சிதறி கிடந்தது. டம்ளர் உடைபட்டு, டீப்பாயை லேசாக சேதம் செய்து, ஜீவாவின் வலது கையில் இருந்து குருதி வழிந்து கொண்டிருக்க அர்ஜுன் பதறியவாறு "ஐயோ கடவுளே.....கிறுக்கா! என்னடா இப்படி பண்ணிட்ட.....மல்லிகா அக்கா சீக்கிரம் பர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்துட்டு இங்க வாங்க!" என்று உட்புறம் குரல் கொடுத்து விட்டு தன் கைக்குட்டையால் ஜீவாவின் காயத்தை சுற்றிக் கட்டிக் கொண்டு இருந்தார்.
ஆனால் ஜீவா எதைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த நிலையிலும் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தான். மனக் கண்ணில் பதினேழு வயதில் நடந்த சம்பவம் நிழலாக ஓடிக் கொண்டு இருந்தது.
"நல்லா தான் ஜீவானந்தன்னு தேடி தேடி பேர் வச்ச ரகு பாட்டா, இவன் லைஃப்ல ஆனந்தமே இருக்காது, பேர்லயாவது இருக்கட்டும்ன்னு நினைச்சியா?" என்று தன் பாட்டனை நினைத்து கொண்டு இருந்தவன் நினைவில் அந்த பொல்லாத விடுமுறை நாள் வந்தது.
ஜெய் நந்தனின் அன்னை ஸாகரியின் மறைவுக்குப் பின்னர் ரகுநாதரும், ஜானகி தேவியும் மனதளவில் மிகவும் நொந்து ஓய்ந்து போய் விட்டனர். எண்பத்தைந்து அகவையை கடந்து தாங்கள் வாழும் பொழுது இளைய தலைமுறையில் தங்கள் மூத்த மருமகளை பிரிந்தது இருவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் விதி எப்பொழுது முடிகிறதோ அப்போது தானே ஒவ்வொருவரும் செல்ல வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டு தங்கள் பேரனுக்கும் தைரியம் அளித்து இனி பூம்பாறையை விட்டு வெளியே எங்கும் வரப் போவதில்லை, நல்ல நாட்கள் கிழமைகளில் அனைவரும் சேர்ந்து பூம்பாறைக்கு வந்து செல்லுங்கள் என்று சொல்லி முடித்து விட்டார் ரகுநாதர்.
தன் பேரனின் ஏக்கத்தை சற்று போக்க நினைத்தாரோ, மகனும், மருமகளும் இல்லாத நிலையில் ஆனந்த ஸாகரத்துக்கு செல்ல மனமில்லாமல் ஒதுங்கிக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் ஸாகரியையும் இழந்து நின்ற பிறகு ஜெய் நந்தன் அவனுடைய ரகு, ஜானு மேல் கொண்ட பாசம் இன்னும் வலுவடைந்து விட்டது.
தன் தாத்தா சத்தமாக தும்மினால் கூட அவர் அருகில் சென்று நின்று விடுவான். ஆனால் ரகுநாதருக்கு தன் பேரனை விட பேரனின் மகனிடம் தான் பிரேமை அதிகம். தன் பரிசாக ஜீவாவிற்கு ஒரு ஹாண்டி காமிராவை பரிசளித்து முக்கியமான நிகழ்வுகளை பத்திரமாக பிடித்து வைத்து கொள் என்று சொல்லி இருந்தார்.
ஜீவாவும் சளைக்காமல் தன் பாட்டி, பாட்டா, அத்தை, மாமா, தந்தை, தாய், தங்கை, மாமன் மகள் மரிக்கொழுந்து, ராம் மாமா மகன்கள் பார்கவ், ராகவ் இவர்கள் அனைவரும் செய்த கலாட்டாக்கள், சண்டை, குறும்புகள், சேட்டைகள், வீட்டில் நடந்த ஒவ்வொரு விசேஷங்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி நினைவுகள் கூடவே இருக்கும் வகையில் தன்னுடன் வைத்திருந்தான்.
ஜீவாவிற்கு பனிரெண்டாம் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததால் அர்ஜுன், பலராம் அனைவரும் குடும்ப சகிதமாக பூம்பாறைக்கு வந்து விட்டனர். கவிப்ரியா ஒன்பதாம் வகுப்பு முடித்து இருந்தாள். பார்கவ் பத்து, ராகவ் எட்டாவது முடித்திருந்தான். ஷைலஜாவும், இனியாவும் ஏழாவது வகுப்பு கடந்து இருந்தார்கள்.
அனைவருக்கும் ஜீவா தான் கேங்க் லீடர்; எல்லோரும் அவனுடைய தலைமையை ஏற்றுக் கொள்ள, கவிப்ரியா மட்டும் அவனை எதிர்ப்பதையே முழு நேர வேலையாக வைத்திருப்பாள்.
வீட்டில் தன்னை கொஞ்சும் அப்பா, அம்மா கூட இங்கே வந்தால் ஜீவாம்மா புகழைப் பாடுவது உச்ச பட்ச எரிச்சலை ஏற்படுத்தும் அவளுக்கு. அவனது கிண்டல், கேலிகளையும் அவன் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் வேலைகளையும் கூட, "உன் கிட்ட நான் கேட்டேனா?" என்ற பாவத்துடன் தான் வாங்கிக் கொள்வாள்.
அவளது டார்லிங் ஜெய் நந்தன் மாமா தான். சற்று வளர்ந்த குழந்தை என்றும் பாராமல் அவர் ஏஞ்சல் என்ற அழைப்புடன் அவளை அவ்வப்போது தன் கையில் ஏந்தி ஒரு சுற்று சுற்றுவது கவிக்கு மிகவும் பிடிக்கும். ஜீவாவை விட அவளுக்கு அதிகமாக முக்கியத்துவம் தரும் ஒரே ஜீவனல்லவா? அதனாலும் மிகவும் பிடிக்கும்.
அன்று மதியம் ஜீவா பெரியவர்கள் அனைவருக்கும் மங்குஸ்தான் பழங்களை எடுத்து வந்து கொடுத்து கொண்டு இருந்தான். கவிப்ரியா மீராவின் தோளில் சாய்ந்து கொண்டு, "தூக்கம் வருதும்மா! கொஞ்ச நேரம் போய் தூங்கட்டுமா?" என்று கேட்க மீரா தன் மகளிடம், "விளையாடி விளையாடி டையர்டு ஆகிடுச்சா? போய் படு போ!" என்று சொன்னார்.
தன் மாமாவிடம் மாலை நேரத்தில் தன்னை ஒரு ரவுண்டு கூட்டி போக வேண்டும் என்று உறுதி செய்து விட்டு சென்று கொண்டு இருந்தாள் கவிப்ரியா.
"அம்முலு ஒரு நிமிஷம் நில்லு!" என்ற அழைப்புடன் சிறுவர்களுக்கான மாம்பழ மில்க் ஷேக்குடன் வந்தான் ஜீவானந்தன்.
"எடுத்துக்கோங்க குடமிளகா மூக்கி, மூக்கை மட்டும் வளர்க்காம உடம்பையும் சேர்த்து வளருங்க!" என்று சொன்ன தன் மாமன் மகனை முறைத்தவள்,
"எனக்கு வேண்டாம்டா மலைமாடு! எல்லாருக்கும் குடுத்துட்டு கடைசியா தான் நீ சாப்பிடுற, ஆனாலும் நீ இவ்வளவு பெரிசா எப்படி தான் வளர்றியோ..... வழியை விடு, ரூமுக்கு போகணும்!" என்று தன் பட்டுப்பாவாடை சரசரக்க வேகமாக சென்று விட்டாள் கவிப்ரியா!
"லவ்லி கேர்ள்!" என்று சிறு சிரிப்புடன் தோளை குலுக்கி விட்டுப் போய் விட்டான் ஜீவா.
அனைவருக்கும் சாப்பிட, குடிக்க என்று தேவைகளை பூர்த்தி செய்து விட்டு அமரப் போனவனை ரகுநாதர் கூப்பிட்டு, " மேல மச்சை பூட்டிட்டு சாவியை எடுத்துட்டு வந்துடு!" என்றார்.
ஜீவா சிறு சலிப்புடன், "ஏன் பாட்டா உட்காரவே விடாம அப்போலேர்ந்து வேலை குடுத்துட்டு இருக்க? இந்த பாகி எருமை எல்லாம் சும்மா தானே இருக்கான்? அவனை செய்ய சொல்ல வேண்டியது தானே?" என்று குதித்தவனிடம்,
"டேய் மச்சி நான் உன் வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுடா! நீ தான் ஓனர், ஸோ நீ தான் எங்களை கவனிச்சுக்கணும்!" என்று சொன்ன தன் மாமன் மகனை,
"வெளியே வா, வாயில மிதிக்கிறேன்!" என்று சைகை காட்டி விட்டு அலுப்புடன் சாவியைத் தூக்கிக் கொண்டு மேலே ஏறினான் ஜீவா.
தடதடவென படிகளில் பிள்ளைகள் இறங்கிய சத்தத்தை கேட்டு அவசரமாக கைகளை இரு பக்கமும் விரித்துக் கொண்டவன், "பார்த்து பத்திரமா இறங்குங்கடா செல்லம்! மாடியில் இருந்து கீழே இறங்கும் போது மெதுவா நடந்து வரணும்!" என்று தன் இரு தங்கைகளிடம் சொன்னவன், "ராகவ் அத்தான் எங்க?" என்று அவர்களிடம் விசாரணை செய்தான்.
சற்று நேரத்தில் ராகவும் வெளிறிப் போய் பயந்த முகத்தில் யோசனையுடன் கீழே இறங்கி வர, "என்னடா ராகவ், திருதிருன்னு முழிச்சுட்டு வர்ற? என்ன ஆச்சு?" என்றான்.
"மச்சி....கவி அக்கா!" என்று தயக்கத்துடன் மூச்சு வாங்கி நிறுத்தியவனிடம்,
"உங்க அக்கா தூங்கப் போறேன்னு சொல்லிட்டு போயிட்டா! நீ ஷைலு, இனியா கூடப் போய் விளையாடு...போ!" என்றவனின் கையைப் பிடித்துக் கொண்டு,
"நான் தான் கவி அக்காவை மச்சுல விளையாடலாம்ன்னு கூப்பிட்டேன். பீரோவுக்கு பின்னாடி நான் ஒளிஞ்சு விளையாடிட்டு இருந்துல தாத்தா பீரோ சாய்ஞ்சு அக்கா மேல.....!" என்று அவன் நிறுத்தியவுடன் ஜீவாவின் இதயம் அதிவேகமாக துடித்தது.
இதனால் தானே தனது ரகு பாட்டா குழந்தைகள் வந்தாலே மாடியறையை பூட்டி விட்டு கீழேயே புழங்க விடுவது?" என்ற யோசனையுடன்,
"தாத்தா பீரோவை தள்ளி விட்டுட்டீங்களா? அம்முலுவுக்கு ஒண்ணும் அடிபடலையே? அவள எங்கடா?" என்று ஜீவா அதட்டியதில் ராகவ் மேலும் மிரண்டு,
"அக்கா கை பீரோவோட மாட்டிட்டு எடுக்க வரல. அழுவுறா!" என்று சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்திருந்தது.
"இங்கே இருந்து கூப்பிட்டா யாருக்கும் கேக்காது. வேகமா ஓடிப் போய் அப்பா, பெரியப்பா, மாமா எல்லாரையும் கூட்டிட்டு வா! சீக்கிரம் போ; நிக்காம ஓடு" என்றவன், "அம்முலு! உனக்கு ஒண்ணும் ஆகாது கண்ணா, இதோ வந்துடுறேன்!" என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டு படிகளில் தாவி ஓடினான்.
மச்சு என்று அவர்களால் அழைக்கப்படும் சிறிய மாடியறைப் பகுதி ரகுநாதர் பெட்டகப் பகுதியாக புழங்கும் இடம்! இரும்புப்பெட்டி, பழைய பீரோக்களில் பத்திரங்கள், சில முக்கியமான ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வைத்து இருக்கும் பகுதி, மரச்சாமன்கள் ஒன்றிரண்டு பழையதாக இருப்பதால் பிள்ளைகள் அனைவரும் வந்தாலே அந்தப் பகுதியை பூட்டி வைத்து விடுவது வழக்கம்.
அன்று ஜீவா போவதற்குள் ஒரு களேபரம் நடந்து விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வேகமாக அறைக்குள் விளக்கை போட்டவன் சரிந்து விழுந்து கிடந்த பீரோவையும், கவிப்ரியாவையும் பார்த்து விட்டு,
"கவிம்மா.....உன் பாதி உடம்பு உள்ளே தான் மாட்டியிருக்கு. நான் தூக்கும் போது வலிச்சாலும் பரவாயில்லை....
இழுத்துட்டு வெளியே வந்துடு.....ஒன் டூ த்ரீ கவுண்ட் பண்றேன். த்ரீ சொல்ற நேரம் கரெக்ட் ஆ மூவ் பண்ணு! புரிஞ்சதா?" என்றான். அவளிடம் இருந்து ஒரு முணங்கல் சத்தம் கேட்டது.
ஒரு பெருமூச்சுடன் தன் முழு பலத்தையும் திரட்டி ஜீவா பீரோவின் ஒரு பாகத்தை நகர்த்தி மறுபடியும் கீழே விட்ட போது கவிப்ரியா தடுமாறி புரண்டு வெளியே வந்து இருந்தாள்.
அது வரை எல்லாம் சரியாக தான் நடந்திருந்தது. வெளியே வந்து விழுந்தவுடன் ஒரு பெருமூச்சு விட்டவளை ஓங்கி தன் விரல் எறிய அறைந்திருந்தான் ஜீவா.
"அறிவு கெட்டவளே....இவ்வளவு பெரிசா வளர்ந்து இருக்கியே.....பீரோ கீழே விழுந்து உடைஞ்சா நகர்ந்து நிக்க தெரியாது? இது போச்சுன்னா புதுசு வாங்கிக்கலாம். உன் உயிர் போயிட்டா வருமாடீ.....!" என்று கேட்டுக் கொண்டிருந்தவனின் கன்னத்தில் பொறி கலங்கும் வண்ணம் ஜெய் நந்தன் ஜீவாவை அடித்திருந்தான்.
"ஏன்டா பொறுமையா இருந்து ரூமை பூட்டிட்டு வராம புள்ளை இருக்குன்னு பார்க்காம பீரோவை தள்ளி விட்டுட்டு...... ஒரு வேலைக்கு உபயோகமா இருக்கியா நீ! தள்ளு...." என்று கர்ஜித்தவர்
"ஏஞ்சல்.....என்னடாம்மா ஆச்சு? எங்கேயும் வலிக்குதா கண்ணா?" என்று கேட்டவரிடம் கவிப்ரியா சொன்ன வார்த்தைகள் விபரீதத்துக்கு வழிவகுத்தது.
"எனக்கு உடம்....பெல்லாம் வலிக்குது மாமா.....கை காலெல்லாம் அசைக்கவே மு....முடியல! ஜீவா அடிச்சிட்டான் மாமா!" என்று திக்கியவளை கட்டிக் கொண்டு சமாதானம் செய்தவர்,
"அர்ஜுன்... வண்டியை எடுறா! கவிம்மாக்கு மட்டும் ஏதாவது ஆச்சு...... நீ செத்தடா!" என்று சொல்லி கோபபார்வையில் மகனை முறைத்து விட்டு சென்றார் ஜெய் நந்தன்.
அர்ஜுனும், பலராமும் ஜெய் நந்தனின் பின்னால் ஓட நிர்மலாவிடம் சரண் புகுந்தான் ஜீவா. நடந்த கலவரத்தில் ராகவிற்கு உடல் கொதித்து தூக்கிப் போட்டது.
நிர்மலா, மீரா, கீதா, ரகுநாதர், ஜானகி தேவியிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி விட்டு நிமிர்ந்து நின்று, "தப்பெல்லாம் நான் செஞ்சதாவே இருக்கட்டும். அப்பா என்ன சொன்னாலும் ஓகே..... யாரும் எதுவும் பேசக் கூடாது. இது என் மேல ப்ராமிஸ்! கீதாத்தை நீ போய் ராகவ் கூடவே இரு! அம்மா நீங்களும் மீராத்தையும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புங்க!" என்று சொல்லி விட்டு தன் தந்தையை எதிர்கொள்ள தயாராக நின்றான் ஜீவானந்தன்.
கவிப்ரியாவின் உடம்பில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அங்கங்கே காயங்களுடன் பல நேரங்களில் தன்னை மறந்த நிலையில் இருந்த போதும், "ஜீவா அடிச்சிட்டான் மாமா!" என்ற புகாரை அவள் நிறுத்தவில்லை.
பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை இங்கிருக்கட்டும். ஆனால் அதன் பிறகு கவிப்ரியா எப்போது ஜீவாவை மன்னித்து விட்டேன் என்று சொல்லி அவளும் அவனுடன் சேர்ந்து ஆனந்த ஸாகரத்துக்கு வருகிறாளோ அப்போது தான் ஜீவா எஸ்டேட்டிற்குள் கால் எடுத்து வைக்கலாம் என்று ஜெய் நந்தன் உறுதியாக சொல்லி விட அனைவரும் ஒன்றும் செய்ய முடியாமல் மவுனமாக இருக்கத்தான் வேண்டியதாகி விட்டது. இந்த காரணத்திற்காக நம் நாயகன் வீட்டில் இருந்து கிளம்பியவர் தான்...... இன்னும் கவிப்ரியாவின் கோபம் தீர்ந்து அவள் தன்னை ஆனந்த ஸாகரத்திற்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
கைக்காயத்தில் கண்ணாடி பட்டதால் ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று அர்ஜுன் சொல்ல அவர் காரில் ஏறிக் கொண்ட ஜீவா, "ஏன் மாமா கையில கட்டு போட்டுட்ட.... சரி இந்த கால்கட்டுன்னு சொல்றாங்களே..... மேரேஜ், அத எப்போ பண்ணி வைக்கப் போற?" என்று கேட்ட ஜீவாவிடம்
"கால் கட்டு தானே, போட வேண்டிய வயசு தான்.... உனக்கு வாயில அடிபடாம கையில அடிபட்டு போச்சேன்னு எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்குடா ஜீவா!" என்று சொல்லிக் கொண்டு காரை செலுத்தினார் அர்ஜுன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro