Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 1

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!" என்று பூஜையறையில் நின்று பாடிக் கொண்டு இருந்த தன் மகள் ஷைலஜாவிடம் தன் அன்னை ஸாகரியின் பிரதிபிம்பத்தை பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ ரகுநாத பூபதி அவர்கள் மலை வாசம் பிடித்துப் போய் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையை தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டு, அந்த சிறிய ஊருக்குப் பண்ணையாராகவும் ஆகி விட்டார்.

அவரது மகன் ஆனந்தன், ஸாகரி என்ற பெண்ணை அவரது சம்மதம் இல்லாமல் காதலித்து மணந்து கொள்ள ஆனந்தனுக்காக ரகுநாத பூபதி ஒதுக்கித் தந்தது தான் இப்போது கொடைக்கானலில் இருக்கும் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்! வெறும் மலைப்பாறையாக இருந்த நிலம் ஆனந்தன் மற்றும் ஸாகரியின் கடுமையான முயற்சி, உழைப்பு மற்றும் நிறைய நில ஆய்வுகளால் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்டாக வடிவெடுத்திருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் வீட்டை ஒருவழியாக நிர்மாணித்தவர்கள், அன்றாட தொழில் படுதலுக்கு என்ன செய்வது என்று யோசித்து
இருபது நிமிட பயணத்தில் ஒரு தேயிலை பாக்டரியையும் வங்கிக்கடன் மற்றும் ஆனந்தனின் முந்தைய வேலையால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மெது மெதுவாக வளர்ச்சிப் பாதையில் செல்ல தொடங்கினர்.

ஆனந்தன், ஸாகரியின் மகன் ஜெய்நந்தன் ஆனந்த ஸாகரத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய வளர்ச்சி அசுர வேகத்தில் தான் இருந்தது. தனது இல்ல வளாகத்திலுள்ள காலி இடத்திலேயே எஸ்.ஜே.என் காம்ப் ஷொல்யூஷன்ஸ் என்ற கம்ப்யூட்டர் கம்பெனியை துவங்கி அவர் தன்னுடைய கனவு வேலையையும், குடும்ப பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தார். காதல் மனைவி நிர்மலாவும், அவரது உடன்பிறவா சகோதரன் விவேக்கும் அவருக்கு உதவியாக இருக்க இப்போது பூம்பாறையில் இருக்கும் தனது சித்தப்பா, சித்திக்கும் நினைத்த நேரம் ஜெய்நந்தனால் எந்தவிதமான உதவிகளையும் செய்ய நேரம் இருந்தது. 

இப்போது ஆனந்த ஸாகரத்தில் ஆனந்தனும் இல்லை, ஸாகரியும் இல்லை. பூம்பாறையில் ரகுநாதரும் இல்லை, அவரது மனைவி ஜானகி தேவியும் இல்லை. தனது அம்மா, தாத்தா, பாட்டி மூவரின் இழப்பையும் ஒருவழியாக ஜீரணம் செய்து கொண்ட ஜெய்நந்தன் தனது குடும்பத்தினருடன் ஆனந்த ஸாகரத்தில் நித்திய கவலையுடன் வசித்து வந்தார். அவரது கவலைக்கு காரணமானவன் நம் கதையின் நாயகன் ஜீவானந்தன்...... ஜெய்நந்தனின் புதல்வன்!

"ஆரத்தி எடுத்துக்கோங்க அப்பா!" என்று சொன்னவளை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு நின்றிருந்தவரை,

"அப்ப்ப்ப்பா.......என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க....?" என்ற மகளின் உலுக்கல் தன்னிலைக்கு கொண்டு வந்தது.

"ஸாரிடா ரூபி; ஏதோ யோசனை, உன் ஸாங் வழக்கம் போல சூப்பர்....! சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டன்னா காலேஜ்ல டிராப் பண்ணிடுவேன்!" என்று சொன்ன தன் தந்தையிடம்,

"இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும்ப்பா! இன்னும் 20 நிமிஷத்துல ரெடியாகிட்டு வந்துடுறேன்! கிளம்பலாம்!" என்று சொன்ன ஷைலஜா தன் தோழி இனியாவை கல்லூரிக்கு கிளம்பி இருக்குமாறு இண்டர்காமில் சொல்லி விட்டு தன் ரூமிற்கு சென்றாள். ஷைலஜா கொடைக்கானலின் பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு புள்ளியியல் படிப்பில் இருக்கிறாள்.

இனியா பிஎஸ்சி நர்ஸிங் மூன்றாவது ஆண்டில் இருப்பவள்.  விவேக்கின் மகள்; ஷைலஜாவின் தளிர் நடை வயதிலேயே தனது கைகளுக்குள் அவள் கையை கோர்த்து கொண்ட இறுக்கமான கோந்து, பிசின் என்றும் சொல்லலாம். சங்க காலமாக இருந்திருந்தால் கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையார் என்றும் சொல்லலாம்! மொத்தத்தில் இருவரும் நல்ல தோழிகள்.

தன் பையை ஒற்றைத் தோளில் அணிந்து கல்லூரிக்கு தயாராகி வந்த இனியா நேராக ஜெய் நந்தன் வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவளது வாசமும் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்டிற்குள் தான். ஆனால் ஜெய் நந்தன் வீட்டுக்கு பின்னால் இருக்கும் ஒரு அவுட் ஹவுசில்; விவேக்கின் திருமணத்திற்கு பின்னர் ஜெய் நந்தன் விவேக்கை தன் வீட்டில் இருக்குமாறு கட்டளையிட்டும், கெஞ்சிப் பார்த்தும், அதட்டிப் பார்த்தும் அவரிடம் விவேக் சரியென்று சம்மதிக்காததால் எரிச்சலுடன் வீட்டின் பின்புறம் ஒரு சவுகரியமான அவுட்ஹவுஸை உருவாக்கி தந்து விட்டார்.

"இந்தாங்க பெரியப்பா, உங்க பேவரைட் இஞ்சி டீயும், முறுக்கும்! இதென்ன காம்பினேஷனோ தெரியல; பெரியம்மாவுக்கும் டீ போட்டு எடுத்துட்டு வந்துட்டேன். இன்னிக்கி பெரியம்மா வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சோ?" என்று கேட்டபடி ஏலக்காய் இஞ்சி டீயை அவரிடம் ட்ரேயுடன் நீட்டினாள் இனியா.

"இன்னிக்கு வார சம்பளம் போடுற நாளாச்சே.... அது தான் பண்ணையாரம்மா லேட் போலிருக்கு! நல்லா என்ஜாய் பண்ணி நீ போடுற மாதிரி காஃபியோ, டீயோ குடிக்கும் போது கூடவே சைட்ல கொஞ்சம் கறுக் மொறுக்குன்னு ஏதாவது ஒரு ஐயிட்டம் இருந்தா நல்லா இருக்கும். பார்த்து பார்த்து பெரியப்பாவுக்கு எது பிடிக்கும்னு தேடி செய்யுற உன்னை மாதிரி மக இருந்தா எனக்கென்னடா சாப்பிடறதுக்கு குறைச்சல்? ரூபியை பர்ஸ்ட் காலேஜ்ல டிராப் பண்ணிட்டு உன்னை டிராப் பண்ணட்டுமாடா? அவளுக்கு இன்னிக்கு ஏதோ சீக்கிரம் போகணுமாம்!" என்று கேட்டவரிடம்,

"எனக்கு ஒண்ணும் அவசரம் இல்ல பெரியப்பா! இன்னும் 45 மினிட்ஸ் டைம் இருக்கு!" என்றாள் இனியா.

"ஆமா...உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்டா லட்டு, இந்த கலர் சல்வார்ல அப்படி என்ன தான் இருக்கு? வாரத்துல மூணு நாள் இதே கலர்? உனக்கு போர் அடிக்கலையாடா?" என்று கேட்டவரிடம் சிறு புன்னகையுடன்,

"அதென்னமோ தெரியல பெரியப்பா, இது கொஞ்சம் பிடிச்சிருக்கு. ஏன் எதுக்குன்னு கேட்டா சொல்ல தெரியாது. பெரியம்மா காலையில மலை மேட்டுல போய் நின்னு சூர்யா ஸாரை சைட் அடிப்பாங்களே; அந்த மாதிரி எனக்கு இந்த கலர்ன்னா ஒரு க்ரேஸ் அவ்வளவு தான்!" என்று சொன்ன இனியாவை முறைப்புடன் பார்த்தவர்,

"உங்க பெரியம்மா சூர்யாவை சைட் அடிக்குறான்னு சொல்லாதடா லட்டு, எனக்கு கோபம் வருது!" என்று முகத்தை திருப்பிக் கொண்டவரிடம்,

"அடடா கோவிச்சுக்காதீங்க பெரியப்பா, சூரியனை தான் சூர்யான்னு சொல்லிட்டேன்! ஸாரி.... ஆனாலும் பெரியம்மா கிட்ட இவ்வளவு பொஸஸிவ்னெஸா காமிப்பீங்க?" என்று கேட்ட இனியாவிடம்,

"நீயே சொல்லுடா லட்டு, பெரியப்பா அழகா தானே இருக்கேன்? என்னை விட்டுட்டு உன் பெரியம்மா எதுக்கு இன்னொரு ஆளை சைட் அடிக்கணும்? அதான் கேட்டேன்!" என்று சொன்ன தன் பெரிய தந்தையை தலை முதல் கால் வரை அளவிடும் பார்வையுடன் நோக்கி விட்டு, "ரொம்ப ஹாண்ட்ஸமா இருக்கீங்க பெரியப்பா!" என்று சிரிப்புடன் சொன்ன இனியாவிடம்,

"தேங்க்ஸ்டா லட்டு, உன் பெரியம்மா காதுல விழுற மாதிரி சொல்லு! உனக்கு வேணும்னா இன்னொரு கலர் ட்ரெஸ் ப்ரசெண்ட் பண்ணுறேன்!" என்றார் ஜெய் நந்தன்.

சிரிப்புடன் அவருடையது மற்றும் தன்னுடைய கோப்பைகளுடன் நகர்ந்தவளிடம் "குட்மார்னிங் இனியா கண்ணா, எங்க உன் தோழி? பள்ளியெழுச்சி ஆகிடுச்சா? இன்னும் இல்லையா?" என்று கேட்ட படி உள்ளே நுழைந்தார் நிர்மலா.

"ஏய்....... ப.....பண்ணையாரம்மா, உன் பொண்ணு நேரமா எழுந்துரிச்சு குளிச்சு, ரெடியாகி சாமி ரூம்ல பூஜையே முடிச்சிட்டு போய்ட்டா தெரியுமா? சும்மா எப்போ பார்த்தாலும் என் அழகு ரூபினியை திட்டிட்டு இருக்கிறது தான் உனக்கு வேலை.....நம்ம லட்டு உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வந்தா. ஆறிடுச்சு. நான் போய் திரும்பி சூடு பண்ணிட்டு வரட்டுமா?" என்று கேட்ட தன் கணவனிடம் தலையாட்டிய நிர்மலா,

"பசிக்குது அத்தான். அப்படியே ஒரு தோசையும்.....ப்ளீஸ்ஸ்ஸ்!" என்று கேட்டவரிடம் மறுக்க மனமில்லாமல் மாடியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடிகாரத்தை திருப்பி பார்த்து விட்டு சென்றார் ஜெய் நந்தன்.

"என்ன பெரியம்மா.... பெரியப்பாவை தனியா கழட்டி விடுறீங்க? என்கிட்ட தனியா எதுவும் சொல்லணுமா?" என்று கேட்ட இனியாவை பாவமாக ஒரு பார்வை பார்த்த நிர்மலா,

"ஊர்ல திருவிழாவுக்கு காப்பு கட்டுறதுக்கு இன்னும் ஒரு வாரம் தான்டா இருக்கு! ரகு பாட்டா, ஜானகி பாட்டி, ஸாகரி க்ரானிக்கும் நம்ம வீட்ல படையல் வைத்து சாமி கும்பிடணும். அதனால......!" என்று சொல்லி தடுமாறியவரிடம்,

"ம்ம்ம்.....சொல்லி முடிச்சிடுங்களேன் பெரியம்மா! ஜீவா அண்ணாவை நானும், ஷைலுவும் மாறி மாறி ஆனந்த ஸாகரத்துக்கு கூப்பிடணும். எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கூப்பிடுறதுல மனசு மாறி அண்ணா இங்க வந்துடப் போறாங்க! ம்ஹூம்.....இது நடக்குற காரியம் இல்ல பெரியம்மா..... கூப்பிட வேண்டியவங்க கூப்பிட்டு பேசினா தான் அண்ணா இங்க வருவாங்க! நீங்க அவங்களை போன்ல பிடியுங்க!" என்று சொல்லி விட்டு தன் பெரிய அன்னைக்கு காஃபியை எடுத்து வர கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள் இனியா.

நிர்மலா சற்று கவலையுடன் அமர்ந்திருந்த போது ஷைலஜாவும் கிளம்பி கீழே வந்து விட்டாள்.

"ஹாய்மா, காலேஜ்க்கு டைமாச்சு. கிளம்புறோம்மா! இனியா வாடா போகலாம்!" என்று அழைத்துக் கொண்டே வாசலருகில் சென்றவளிடம், "ஷைலு சாப்பிட்டியா? இனியா இவ சாப்பிட்டாளா இல்லையா?" என்று கேட்ட நிர்மலாவிடம், "இவ தானே? ஒரு டம்ளர் ஜூஸோட ப்ரேக் பாஸ்ட்டை முடிச்சிருப்பா. ஒழுங்கா சாப்பிடுடீன்னு சொன்னா என்னை திட்டுவா!" என்று புகார் கூறியவளையும், அடுத்தவளையும் சேர்த்து காலேஜிற்கு அனுப்பி வைத்து விட்டு நிர்மலா கவிப்ரியாவிற்கு அழைப்பு விடுத்தார்.

"ஹாய் அத்தை ஹவ் ஆர் யூ? டார்லிங் எப்படி இருக்காரு? ஷைலு, இனியா, விவேக் அங்கிள், மத்த எல்லாரும்.....!" என்று பேசிக் கொண்டே இருந்தவளை,

"கவிம்மா....இங்க உன் டார்லிங் உட்பட எல்லாரும் நல்லா இருக்கோம். பூம்பாறையில தாத்தா, பாட்டியும் நல்லா இருக்காங்க. உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்குறேன். அத்தைக்காக செய்வியாடா கவிம்மா?" என்று கேட்ட தன் அத்தையிடம்,

"அத்தை அவன் கிட்ட பேசுறதை தவிர வேற என்ன வேணும்னாலும் கேளுங்க. உங்களுக்காக செய்வேன். ஆனா அவன் கிட்ட பேசுன்னு சொல்றதுக்கு நீங்க கால் பண்ணியிருந்தா, என்னால முடியாது அத்தை; மன்னிச்சிடுங்க!" என்று சொன்ன கவிப்ரியாவிடம் பெருமூச்சுடன்,

"சின்னப் பசங்க மாதிரி இப்படி சண்டை போட்டுட்டு இருந்தா, இது எங்க தான் போய் முடியப் போகுதுன்னு தெரியலடா கவிம்மா, அம்மா இருக்காளா?" என்று கேட்டு மீராவிடம் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார் நிர்மலா.

அன்று மாலையில் அர்ஜுன் ஜீவானந்தனை காண அவனுடைய தந்தை வாங்கிய ப்ளாட்டிற்கு வந்திருந்தார். ஜீவானந்தன் சென்னை நகரில் வளர்ந்து வரும் குற்றவியல் வழக்கறிஞர். தன் வாழ்க்கையில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு ஜீவா அனைத்து முடிவுகளையும் சுயமாக தான் எடுத்திருக்கிறான். பதினெட்டு வயதிற்கு பின் தன்னுடைய தந்தையின் ப்ளாட்டில் தான் வசித்து வருகிறான். சமையலுக்கு நிர்மலா ஏற்பாடு செய்த ஒரு பெண்மணியை தவிர ஜீவா தன்னுடைய அப்பாவின் ஜாகையில் தனிக் காட்டு ராஜா தான்!


அவனாக தான் படிப்பை தேர்ந்தெடுத்தான். அவனாக தான் தொழிலை கவனிக்க ஆரம்பித்தான். இப்போது ஒரு வருடமாக தனது மாமனின் வற்புறுத்தலுக்கு இணங்கி உன்னதம் பழச்சாறுகளின் விநியோக உரிமையையும் கவனித்து கொண்டு இருக்கிறான். மலையில் இருந்து ஆனந்த ஸாகரம் குடும்பத்தினர்
விளைவிக்கும் பழங்கள் தான் உன்னதம் பழச்சாறுகளாக தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ருசி சூப்பர் மார்க்கெட் அவர்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களுக்காக மலையிலேயே இயங்கி வந்தது. ஆனால் ருசியின் எழுபது சதவீத விற்பனை ஆனந்த ஸாகரம் பணியாளர்களுக்கே சரியாகப் போய் விடும். மற்ற முப்பது சதவீதம் தான் பொதுமக்கள் வாங்குவதற்காக கொண்டு செல்லப்படும். ஜெய்நந்தனின் மனைவி நிர்மலா என்று ஆனந்த ஸாகரத்தின் நிலத்தில் காய்கறிகளை பயரிட்டு அவை வீட்டுத்தேவைக்கு மேல் அபரிமிதமான கையிருப்பாக இருக்க ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து எஸ்.ஜே.என் ஐடி நிறுவன ஊழியர்களுக்கும், வீட்டில், தோட்டத்தில், பண்ணையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் ருசி சூப்பர் மார்க்கெட்டின் பொருட்கள் கிட்டத்தட்ட இலவசம் போல் தான் அவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக "சந்தைமடம் திறந்திருக்கு.... சாஞ்சு உட்காருவோம் வாங்கடீ!" என்று ஒருவர் ஒரு பொருளை முறையில்லாமல் எடுத்துச் சென்று விடவும் முடியாது. வெளிசந்தையில் கால் கிலோ பத்து ரூபாய் என்றால், இங்கு அரைக்கிலோ பத்து ரூபாய்க்கு கிடைக்கும்; அதுவும் முறையான பில்லிங்குடன், வருமான வரி கட்டும் அளவிற்கு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

ஜீவா தனது சொந்த முயற்சியில் ஒரு தனி வீட்டை வாங்கி விட்டான். அவனது அலுவலகத்திற்கான இடமும் சொந்த இடம் தான். ஆனாலும் தந்தை வீட்டை திரும்ப கொடுப்பதற்கு ஜீவாவிற்கு மனமே வரவில்லை. இந்த ப்ளாட்டில் இருந்தால் ஏதோ தன் எஸ்டேட்டில் இருப்பது போன்ற உணர்வு!

"வா மாம்ஸ்! என்ன திடீர்னு இந்தப் பக்கம் விஜயம்? ஊர்ல திருவிழா ஏற்பாடெல்லாம் எப்படி போகுது? ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடுறியா?" என்று கேட்டவனை மேலும் கீழும் பார்த்த அர்ஜுன்,

"என்னடா ஜீவாம்மா! எப்போ பார்த்தாலும் டீ ஷர்ட்டும் ஷார்ட்ஸும் தானா? வேஷ்டி சட்டை எல்லாம் பழகிக்கவே இல்லையா?" என்று கேட்ட படி அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

"அடப்போ மாமா! ஒரு ஃபேஷன் ப்ரின்ஸஸோட அப்பா நீயி? கொஞ்சமாச்சும் ட்ரெண்ட்லயே இருக்க மாட்டியா? ஈஸியா ஷார்ட்ஸ் போடுறதை விட்டுட்டு...... இப்ப எந்த யூத் வீட்ல வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுட்டு இருக்கான்? வீட்ல மீராத்தை, கீதா அத்தை, ராம் மாமா, பார்கவ் எல்லாரும் எப்படி இருக்காங்க? சரஸ் பாட்டிக்கு இப்போ உடம்புக்கு எப்படியிருக்கு?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,

"எல்லாரையும் விசாரிக்கிற. ஆனா ஒரு பொண்ணு..... அதுவும் என் பொண்ணை மட்டும் விசாரிக்க விட்டுட்ட!" என்று கேட்ட தன் மாமாவிடம்,

"ம்க்கும்..... என் அழகு கேப்ஸியை தான.....! அவளை என்ன விசாரிச்சுட்டு? அதான் டெய்லி பார்த்துட்டு தானே இருக்கேன்! ஏன் மாமா.....கேப்ஸிய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆகி நானும், அவளும் எஸ்டேட்டுக்கு போயிடலாம்ன்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்ற?" என்று கேட்ட தன் மருமகனை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தார் அர்ஜுன்.

"நீ அவளை தினமும் பார்க்குறது அவளுக்கு மட்டும் தெரிஞ்சது....?உன் ஆஃபிஸுக்கு வந்து உன் கிட்டயே உன்னை பத்தி கிரிமினல் கேஸ் குடுப்பா. கல்யாண மேட்டர் எல்லாம் அவ காதுல விழுந்ததுன்னு வை; வீட்டுக்கு வந்துட்டு போற நேரம் உஷாரா இரு ஜீவாம்மா. நீ சாப்பிடுற சாப்பாடுல பாய்சனை கலக்கிட போறா; ராட்சஸி!" என்று கவலையுடன் சொன்னவரை கண்டுகொள்ளாமல் தன் கண்களை மூடிக் கொண்டு ரசனையுடன், "ம்! சயனைடை கண்ல வச்சிருக்கிற குடைமிளகா மூக்கி! செஞ்சாலும் செய்வா!" என்று புன்னகையுடன் அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro