Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 4

அத்தியாயம் – 4

இரண்டு மாதங்கள் என இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் அடுத்த வாரத்திலே முடிவிற்கு வந்திருந்தது. ஆனால் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் உணவகமோ கோவிலோ இல்லாமல் நேரே அவள் வீட்டினை அடைந்துவிட்டான்.

திடீரென வீடு தேடி வாசலில் வந்து நின்ற பார்த்திபனை பார்த்த ஆரபிக்கு, அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. பயம் உடல் முழுதும் சூழ்ந்துகொள்ள, வீட்டின் உள்ளேயும் இவனையும் மாறி மாறி பார்த்தவள் கைகள், நடுக்கத்தோடு கதவின் கைப்பிடியை இறுக்கமாக பற்றியது.

"நீங்க என்..."

"ஆடிட்டர் ஆஃபீஸ்ல இருந்து வர்றோம்." என்றான் சாதாரணமாக.

"இல்ல... நீங்க... நீங்க..."

"யார் தம்பி நீங்க?" என்ற ஆரபியின் அன்னை கேள்விக்கு,

"சில டாக்குமெண்ட்ஸ் வாங்க வந்தோம் ம்மா, சார் இங்க வாங்கிக்க சொன்னாங்க, ஒடனே தேவைன்னு..."

அவனை உள்ளே அழைத்து அவன் கேட்டது எதையும் புரிந்து கொள்ளாதவர், மகளின் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.

பிறகு அவன் கேட்டவை அனைத்தையும் எடுத்துக் கொடுத்தது எல்லாம் ஆரபி தான். ஒரு பார்வை தவறவில்லை, ஒரு வார்த்தை தங்களைப் பற்றியும் கேட்கவில்லை.

வந்த வேலையைப் பார்த்தவன் உடனே விடைபெற்று சென்றுவிட, அளவிற்கு அதிகமாக அதன்பிறகு பார்த்திபன், ஆரபியின் மனதினில் உதிக்கத் துவங்கிவிட்டான்.

காரணம் பெண்ணுக்கு தெரியவில்லை. ஒரு வார இடைவெளி விட்டு, அவளது வேலை மீண்டும் துவங்கியது. கோவில், கடை என பயம் இல்லாது வர துவங்கினாள். அவன் மீதிருந்த பயமும் அகன்றது.

பார்த்திபனும் தான் விட்ட பணியைத் துவங்கினான். முன்பில்லாமல் இப்பொழுது ஆரபி பார்வை அவன் மேல் தினமும், கோவிலில் இருந்து கிளம்பும் பொழுது பட்டு மீண்டுவிடும்.

அந்த நேரம் பார்த்திபன் கொடுக்கும் அந்த சிறு வளைந்த சிரிப்பு என்னவோ, ஆரபியைப் பாடாய் படுத்திவிட்டு தான் போகும். புத்தகங்கள், புதிர் கணக்குகள் எல்லாம் எளிதாய் புரிந்தவளுக்கு, அவன் கண்களும் சிரிப்பையும் அறிவதற்குள் தலைசுற்றி போய் விடும்.

நாட்களும் உருண்டோட ஒரு நாள் கோவிலுக்குள் நின்றிருந்தான் பார்த்திபன். பயத்தோடு சன்னிதானத்தை சுற்றி வந்தவளைத் தாண்டி நடந்தவன் அவளை மறித்து, "உன் பேர் என்ன?" என்றான்.

வியர்த்துக் கொட்டியது ஆரபிக்கு, "என்ன பண்றேள், வழி விடுங்கோ..."

"விடுறேன், உன் பேர் சொல்லு." பிடிவாதமாக நின்றான்.

"நேக்கு பேரே வைக்கல என் தோப்பனார்." அவனைக் கடந்து நடக்க போனவள் பாதையை மறித்து நின்றான் மீண்டும்.

"ப்ச்... என்ன வேணும் நோக்கு?" சங்கோஜமாய் இருந்தது பெண்ணுக்கு, கோவிலில் வைத்து இது என்ன பிடிவாதமென்று.

"ஏன் உனக்கு தெரியாதா? தினமும் பாக்குறேன், பொழுது போகாம பாத்துட்டே இருக்கான்னு மட்டும் நினைக்காத. நீதான் இனிமே எனக்கு எல்லாமே. முடிவோடதான் உன்ன சுத்தி வர்றேன்." என்றான் ஆணித்தரமாக.

ஆரபிக்கு நெஞ்சே அடைத்தது, அவனைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும், பெற்றோரை மீறி போவதற்கு? பெயர் கூட தெரியாது. அவள் முறைப்புகளின் குறிப்புகளை அறிந்துகொள்ள, பெண்ணின் சூடான சூடு சிறிது அவகாசம் தந்து,

"பார்த்திபன்." என்றான் அவன்.

புரியாமல் விழித்தவளிடம், "பேர் சொன்னேன், என் பேர் பார்த்திபன்."

"நேக்கு எதுக்கு உங்கள பத்தின தகவல், நான் கேட்டேனா உங்கட்ட?"

"நீ கேக்க மாட்டனு தெரியும், என்னை திட்டவாது என் பேர் உனக்கு வேணும்ல... ஆனா நான் கேக்குறது அதுக்கில்ல." என்றான் உடனே தகவலாய்.

அவனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க எண்ணி, "சந்தியா!"

கால்களில் சக்கரம் கட்டி நடந்தவளை சிரிப்போடு பார்த்தவன், "மாமி...!" சத்தமாக அழைத்தான் நின்ற இடத்திலே.

கால்கள் வேரூன்ற நின்றவள் அவனைப் பார்க்காமல் மூச்சு வாங்க நிற்க, "ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ், பி.டெக் ஃபைனல் இயர். டெய்லி காலைல ஏழு இருபத்தி அஞ்சுக்கு பஸ், ஈவ்னிங் அஞ்சு முப்பத்தி அஞ்சுக்கு அதே ஸ்டாப்ல வந்து இறக்கி விடும்.

அங்க இருந்து நேரா இந்த கோவில், அப்றம் எட்டு மணி வரை உன் அப்பா சொந்த கடைல டெய்லி இருநூறு ரூபாய்க்கு வேலை. தம்பி பேர் ஸ்ரீனிவாசன், காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஹிந்துஸ்தான் காலேஜ்." எச்சில் கூட்டி விழுங்கினாள் ஆரபி. அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறான்.

அனைத்தையும் தெரிந்தே கேட்கிறான். தோளில் இருந்த பையை சரி செய்கிறேன் என நேரத்தைக் கடத்த முயற்சிக்க, அவளுக்கு முன்பே வந்து நின்றான் பார்த்திபன் புருவத்தை உயர்த்தி.

இருவருக்கும் இடையே கணிசமான இடைவேளை இருந்தாலும், தன்னுடைய கண்களைத் துளைக்கும் பார்த்திபன் பார்வை பெண்ணுக்கு சலனத்தை உண்டு செய்ய,

"நேக்கு இதெல்லாம் பிடிக்காது, தோப்பனாருக்கு தெரிஞ்சா என்ன உண்டில்லைனு ஆக்கிடுவா. இப்டி எல்லாம் வராதேள் ப்ளீஸ்..."

"என்ன வர வேணாம், நான் உன் பின்னாடி இதுவரை வந்துருக்கேனா?"

"இல்லை..." என்றாள்.

"ம்... எனக்கு தெரிய வேண்டியது உன் பேர் மட்டும்தான்..."

"அதான் சொன்னேனே..."

"சரியா கேக்கலையா? உன் பேர் வேணும் எனக்கு."

"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கேள், அது என்ன பேர் தெரியாதா நோக்கு?"

"உன் மூலமா எனக்கு தெரியணும்." என்றான் குழந்தையின் பிடிவாதத்தோடு.

ஆரபிக்கு உடல் நடுங்க துவங்கியது. அவன் குரலும் அவன் கண்களில் தெரிந்த அளவில்லா நேசம், பிடிவாதம் என பெண்ணுக்கு சுற்றத்தை மறக்க வைத்தது.

தவித்தாள், அவன் பார்வையைத் தவிர்க்க போராடி அதில் தோல்வியடைந்து தவித்தாள்.

அவனுக்கோ அவளின் அவஸ்தை சிரிப்பாய் இருந்தது போல், வசீகரிக்கும் அவன் மெல்லிய சிரிப்பில் அவளுக்கு அழுகையே வந்தது.

பெண்ணின் உணர்ச்சியற்ற பார்வையிலே பாதி வீழ்ந்திருந்தவன், அவளது மூக்குத்திக்கு இணையாக சிவக்கும் மூக்கினையும், உணர்வுகளைக் கட்டுப்படுத்த போராடும் அழுகையையும் கண்டபிறகு முக்கால்வாசி வீழ்ந்திருந்தான்.

"ஏன் என்ன சித்திரவதை பண்றேள்? பெருமாள் சன்னதில வச்சு இப்படியெல்லாம் பேசலாமா? இங்க இருக்க குருக்கள் வேற தோப்பனாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவா."

"இடம்தான் உனக்கு பிரச்சனைனா வேற எங்கையாவது பேசலாம்னு சொல்ல எனக்கு ஆசையா இருந்தாலும், உன்னோட முழு சம்மதம்தான் எனக்கு முக்கியம். இப்ப நான் வந்து நிக்கிறது உன்னோட பேரை தெரிஞ்சுக்க மட்டும்தான்." என்றான் பார்த்திபன் இன்னும் இடைவேளையை உருவாக்கி.

ஆரபிக்கோ கோவம், "அப்டி என்ன என் பேரை தெரிஞ்சுக்குற ஆர்வம் நோக்கு?"

"சொன்னா நீ கோவிச்சுப்ப." என்றான் மெல்ல சிரித்து.

அது அவளுக்கு இன்னும் அவஸ்தையை கொடுக்க, கோவமும் கூடியது. "காரணம் தெரியாம என்னோட நாவுல இருந்து ஒரு வார்த்தை நீங்க எதிர்பாக்குறது வராது." என்றாள் முகத்தைத் திருப்பி.

"சரி திட்ட கூடாது..." என்றவன் கிசுகிசுக்கும் குரலில், "மனசுக்குள்ள மாமி மாமினு சொல்லி கொஞ்சுறது, யாரையோ சொல்ற மாதிரி இருக்கு. உன் பேர் சொன்னா கொஞ்சம் கிக்கா இருக்கும்ல?"

கண்ணடித்து சிரித்த அவன் மேல் பார்வையாலே கனலை வீசியவள், அதற்கு மேல் அவன் என்ன தடுத்தும் அங்கு நிற்கவில்லை.

'என்ன பேசுறா இவா!' கனலாய் எறிந்த தீ பந்தம் அணையவே ஆரபிக்கு பல வாரங்கள் தேவைப்பட்டன. பார்த்திபன் இன்பமாக சுற்றி திரிந்தான்.

அனுபவத்தில் அல்லாத அன்பின் தேடல் மட்டுமே முற்றுப் பெறுகிறது. அவன் காதல் முற்று பெற்றது போல், அவள் அமைதியும் அவள் தவிப்பும் கூற, ஆரபிக்கு பார்த்திபன் பக்கமிருந்து எந்த தொந்தரவும் இல்லாமல் போனது.

அவனைக் காண்பதே அரிதாகி போக, தன்னையும் மீறி அவனது பார்வைத் தேவைப்பட்டது மனதிற்கு. அந்த தவிப்பே அவனை வெறுக்க தூண்டியது. எப்படி ஒருவரை பேசாமலே தன் பக்கம் ஈர்க்க முடிகின்றதென சந்தேகம் ஆரபிக்கு.

அவன் வரும் நேரங்களில் கடையில் எதிர்பார்ப்போடு காத்திருப்பதே, உடல் முழுவதும் மின்சாரத்தைக் கொடுத்தது.

அவனோ அவளுக்கு அதிகம் போக்கு காட்டினான். ஒரு மாதம் அவள் முன்பு வரவே இல்லை. தான் செய்ததை தனக்கு செய்ய நினைக்கிறானா என்ற கோவம், அழுகை ஆரபிக்கு. அவனைப் பிடித்திருந்தது.

அவன் கண்ணியமான பார்வை பிடித்திருந்தது. தான் எங்கு சென்றாலும் தன் முன்பு வந்து நிற்காமல், முழுதாய் மறைந்திருந்து குத்தும், பார்த்திபனின் ஆசை பார்வை பிடித்திருந்தது.

ஒரே முறை பேசியிருந்தாலும் அவ்வேளையிலும் அவளைப் புரிந்து இடைவேளை காத்தது மிகவும் பிடித்தது. அந்த சிரிப்பு, அந்த திமிர், தன்னைப் பார்க்கும் பொழுது சிகையை நாசம் செய்யும் அவன் விரல்கள் என எல்லாமே...

எல்லாமே...!

பார்த்திபனுக்கு அவள் தவிப்பு இனித்தது.

பெரிதாக ஆசைப்பட்டவன் இல்லை. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தவன். தேர்வுகள் என்றும் கடினமாக இருந்தது உண்டு. இது தேவை, இது தேவையில்லை என்பதை ஆராயவே நேரம் எடுப்பவனை ஒரே நாளில் ஒரே கண்ணசைவில் திருப்பியிருந்தாள்.

பிடிவாதக்காரனாய் உடனே முடிவெடுக்க வைத்து, அவள்தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை நித்தம் மனதில் பதிய வைத்திருந்தது பார்த்திபனுக்கு பிடித்தது.

அவளோ அமைதி, அவனோ நண்பர்களோடு இணைந்து வாழ்க்கையை அடாவடியாக வாழ்பவன். இருவருக்கும் வெவ்வேறு வண்ணங்கள் இருக்க, இருவரும் இணைந்து நிச்சயம் வானவில்லாய் உருமாறுவோம் என்ற நம்பிக்கை அவனுள்.

உற்சாகமாய் வேலைகளைக் கற்க துவங்கினான். அவள் வந்த பிறகு தன்னைப் போல் தோளில் பொறுப்புகள் கூடியது போல் இருந்தது.

பார்த்திபன் ஒரு பக்கம் தன்னைத் தானே மெருகேற்ற, ஆரபி கீழே இறங்க துவங்கினாள்.

கவனம் அதிகம் சிதறியது. அதற்கு மேல் பொறுக்க முடியுமென்று நம்பிக்கையில்லை. அன்று கோவிலுக்கு வெளியே வந்து நின்றவள், வேண்டும் என்றே தன்னுடைய செருப்பை அணியாமல் நிமிடங்கள் பல காத்திருந்தாள்.

நிதானமாக அவளைப் பார்த்திருந்தவன் விறுவிறுவென அவள் முன்பு வந்து நிற்க, அந்த காலனியை அணிந்து வேறு பக்கம் நடக்க துவங்கினாள்.

அவனோ அசையவில்லை, பக்கவாட்டில் திரும்பி பார்த்தவள் சிலையாய் நிற்பவனை பார்வை ஒன்று பார்க்க, பார்த்திபன் கால்கள் அவளைத் தொடர்ந்தது தேவையான இடைவெளி விட்டு.

இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த நூலகத்தினுள் நுழைய, வேறு வழியில்லாமல் தானும் சென்றான் பார்த்திபன். கைக்கு கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து ஆரபி அமர, பார்த்திபன் தேடி தேடி ஒரு புத்தகம் எடுத்து வந்து அமர்ந்தான்.

அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு தனக்கு முன்னே இருப்பவனிடம், எப்படி இப்படி உரிமை வந்ததென வியப்புதான். கல்லூரி காலங்களில் கூட படிக்காதவன் அன்று தீவிரமாக படித்தான்.

தொண்டையை செருமினாள் தானாக பேச தயங்கி. விழியை மட்டும் உயர்த்தி என்ன என பார்த்தான். ஆரபிக்கு ஐயோ என்றானது.

'என்ன எதிர்பார்க்கிறான் இவன், தான் பேச வேண்டும் என்றா?' ஆரபியின் பரிதவிப்பைப் பார்த்தவன் புத்தகத்தை மூடி வைத்து மெல்லிய குரலில், "என்ன சொல்லு..." என்றான்.

"ஏன் இப்டி பண்றேள்?" என்றாள் இயலாமையோடு.

"எப்படி பண்றேன்?" கன்னத்தில் கை வைத்து சாவகாசமாக கேட்டான்.

"இதோ இதுதான்... இந்த அசட்டுத்தனம்தான்... இதுதான் என்னை பாடா படுத்துது. நோக்கு எந்த பிரச்சனையும் இல்ல, அதான் அத்தனையையும் தூக்கி என் சிரத்துல நீங்க வச்சிட்டேளே..."

"நான் என்ன மாமி பண்ணேன்?"

கண்களை சித்திரவதையாய் மூடி திறந்தவள், "இவ்ளோ உரிமையா மாமி சொல்லாதேள்..."

"ஏன், எனக்கு உரிமை இல்லையா?"

ஆரபி கண்களில் சட்டென நீர் கோர்த்தது, "அவ்வளவு உரிமை இருக்கவா, எதுக்காக ஒரு மாசமா என் கண்ணுல படாம இருக்கேள்? நான் வாட்டுக்கு என் ஸ்டடிஸ் உண்டு, நான் உண்டுன்னு தானே இருந்தேன்?

நீங்களா வந்தேள், ஏதேதோ பேசி மனச குழப்பிவிட்டு இருந்த சுவடே தெரியாம மறைஞ்சிட்டேள். நேக்குதான் எதுலயும் கவனம் செலுத்த முடியல. ஆத்துல என்னை எல்லாரும் விசித்திர ஜீவன் போல பாக்க ஆரமிச்சிட்டா.

நேக்கு ஒரு மாதிரி ஆயிடுத்து. நோக்கு அதைப் பத்தின கவலை எதுவுமில்லை. ஏதோ ஒரு மூலைல நின்னு வேடிக்கை பாத்துண்டு போய்டுவேள்..."

"அது எல்லாம்..."

"நேக்கு உங்கள பத்தி ஒரு துளியும் தெரியாது. உங்க நாமத்தை தவர. அதுவும் அன்னைக்கு நீங்க வந்து சொல்லாம இருந்தா, புதிராவே தான் இருந்துருக்கும். எந்த நம்பிக்கைல இப்படி வந்து உங்கட்ட பேசிண்டு இருக்கேன்னும் நேக்கு தெரியல..."

அவள் முன்பே கைப்பேசியை எடுத்து வைத்தான் தன்னுடைய குடும்ப புகைப்படத்தோடு, "அம்மா, அப்பா, அண்ணன், தம்பி இதுதான் என் குடும்பம். அம்மா, அப்பா கவர்ன்மென்ட் வேலை. அண்ணன் ஐடி வேலை.

நான் உனக்கே தெரியும், ஆடிட்டர் முடிச்சிட்டு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு வேலை பாக்குறேன். தண்ணி, சிகரெட் எந்த பழக்கமும் இல்ல. இத தவர சிறப்பா என்னை பத்தி சொல்ல எதுவுமில்லை. நம்பி குடும்பம் நடத்த வரலாம் மேடம் நீங்க..." சொகுசாக சாய்ந்து அவளைக் கண் சிமிட்டாமல் பார்த்தான் பார்த்திபன்.

ஆரபிக்கு உறைந்தது உலகம். துவங்காத அத்தியாயத்தில் அதற்குள் இறுதி வரை சென்றுவிட்டான். அதற்கு தான் தயாரா என்ற சந்தேகம் வேறு, வீட்டினரை எதிர்க்க வேண்டி வரும்.

இவனை இன்னும் முழுதாய் நம்ப முடியவில்லை. எல்லாம் நடிப்பாய் இருந்தால் என்ன செய்வது? உண்மையாக இருப்பானா? கூறியது போல் அல்லாது கெட்ட பழக்கங்கள் ஏதேனும் இருந்துவிட்டால்?

தன்னிடம் பழகவே இது போல் நாடகம் நிகழ்த்தி படத்தில், செய்திகளில் வருவது போல் ஏமாற்றி ஓடிவிட்டால்? தறிகெட்டு ஓடிய மனதினைக் கடிவாளமிட்டு நிறுத்தினாள் ஆரபி ஆணவனின் குறுகுறு பார்வையில்.

ச்சீ... ச்சீ... அப்படியெல்லாம் இருக்காது என்றது ஆழ்மனம். ஏதோ அதற்கு அவன் மேல் கண்மூடித்தனமான...

"நம்பிக்கை வரலன்னு தெரியிது. ஒன்னும் அவசரமில்லை, மேடம் நீங்க பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லுங்க, வெயிட் பண்ணுவேன்." என்றான் பார்த்திபன்.

"மேடம் இல்ல" ஆரபி வெடுக்கென பேசினாள், அந்நியமாய் தோன்றியது அது.

"என் பேர் ஆ..." ஆரபி பேசும் முன்பே கை நீட்டி தடுத்தான் பார்த்திபன் அவசரமாக.

"அன்னைக்கு சொன்னது தான் மாமி, உன் பேர் நான் கேட்டது உன்ன மனசுக்குள்ள கொஞ்சுறதுக்கு. உன் பேரை நீ சொல்றது எனக்கு உன் மேல முழு உரிமை தர்ற மாதிரி, முழு சம்மதம் இருந்தா மட்டும் சொல்லு." என்றான் எழுந்து நின்று.

'பெயரை கூறாவிட்டால் விட்டுவிடுவானா?' என்ற கேள்வியும் உதித்தது மனதினில். அவள் வருவாள் என்று பார்த்திபன் வெளியேறியிருக்க, அவளோ இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. மீண்டும் உள்ளே வந்தவன்,

"இன்னும் எதுவும் பேசணுமா?" கேட்டான்.

கோவமாக எழுந்தவள், "பேர் சொல்லாம போனா விட்டுட்டு போய்டுவேளா?" சினம் குறையாது கேட்டாள்.

அவனை விட மனம் வரவில்லை, தன்னைக் காதலோடு பார்க்கும் அந்த கண்களின் கவனத்தை வேறு பக்கமோ, வேறு பெண்ணோ பெறுவது சுத்தமாக விருப்பமில்லை ஆரபிக்கு.

"நான் அப்படி சொல்லவே இல்லையே..." பொறாமை சற்று எட்டி பார்த்தவள் முகம் பார்த்து சிரித்தான்.

"சொல்லாதவா எதுக்கு என்ன விட்டுட்டு போகணும், போங்கோ..." அவனைத் தாண்டி வெளியேறியவள், வாசலின் அருகே சென்றதும் நின்று திரும்பி,

"என் நாமத்தை சொல்ல கூடாதுன்னு சொன்னேள்ல? நான் உம்மை விட பிடிவாதக்காரி. முரணா செய்றது தான் நேக்கு பிடிக்கும். ஆரபி என் பேர், என்ன பண்ணுவேள் பண்ணிக்கோங்கோ..."

உதட்டை சுளித்து கோவமாக அவள் வெளியேற, அந்த கன்னத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாக்கள் அவளது மனதின் எண்ணங்களைப் பார்த்திபனுக்கு பளிச்சிட்டு காட்டியது.

'உன் கற்பனை முழுதும் என்னை நிரப்பிக்கொள்' என்ற அவளது அனுமதியானது, பார்த்திபனுக்கு சிலிர்ப்பைத் தந்தது.

உறைந்த புன்னகை முகத்தில் மலர, தேனைப் பருகும் வண்டாய் வாசம் பிடித்து, சொக்கி போய் அவள் பின்னாலே வெளியே வந்தான். அந்த பூவோ அந்த வீதியின் பாதி தூரத்தை சுறுசுறுப்பாக கடந்திருந்தது. வந்த பொழுது இருந்த சுணக்கம் அவளிடமில்லை.

உடலில் தெம்பு கூடி, யானையே அடித்து வீழ்த்தும் சிறுத்தையின் பலத்தை ஒத்த நம்பிக்கையோடு இருந்தது அவள் நடை.

'தன்னாலா? தான் உதிர்த்த வார்த்தைகளா அல்லது மனதில் குடிகொண்டிருந்த காதலா?'

கர்வம் தலை கோத, வெட்கம் மீசையை முறுக்கியது.

நாட்கள் அழகாக நகர்ந்தது இருவருக்கும். அதிகம் பேசாமல் பார்வையால் காதலை உறுதிப்படுத்திக்கொண்டு போயினர்.

முழுதாய் பத்து மாதங்கள் கோவில், நூலகம் என காதலை வளர்க்க, இவளும் அவனிடம் சக காதலர்களைப் போல் மணி கணக்கில் பேசவில்லை. அவனுக்கும் படிக்கும் பெண்ணின் மனதை அதிகம் கெடுக்க மனம் வரவில்லை.

இதயத்தில் அடிக்கும் முதல் அலையின் தாக்கம், வாழ்க்கையை தடுமாற வைத்துவிடக் கூடாதென்ற பிடிவாதம், அவர்களை அழுத்தமாய் கால்களை வேரூன்ற வைத்தது.

கடையில் ஆரபியைப் பார்த்தாலே அங்கு வரும் சக வாடிக்கையாளராக மாறி, துரத்தில் நின்றே பார்த்து சென்றிடுவான். அந்த பத்து மாதத்தில் பார்த்திபனைப் பற்றியும் அவனது குணாதிசயங்களைப் பற்றியும், வெகுவாக அறிந்து போன ஆரபிக்கு முழு மகிழ்ச்சி.

சரியான கைகளில் வந்து சேர்ந்த திருப்தி. ஒரு நாள் பார்வையோ, வார்த்தையோ எல்லை மீறி சென்றதில்லை, கண்ணியமான காதலனாய் இருந்தான்.

அவளுக்கு ஒரே பயம், தன்னுடைய தந்தையை எண்ணிதான். தந்தையாய் தோள் கொடுத்தாலும், கண்டிப்புணர்வும் கூட. மகளுக்கு விருப்பம் போல் மாப்பிள்ளை தேட வேண்டும் என, மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதே, மகளது மனதை விதி அவர் முன்பு திரையிட்டு காட்டியது.

அன்று ஒரு நாள் கல்லாவில் அமர்ந்திருந்த ஆரபி பணம் குறைவாக கொடுத்ததாக ஒருவன் சண்டையிட, அவள் பிடிவாதமாக தான் சரியாக கொடுத்ததாக கூற, அவளை நெருங்கி வந்து அவன் பேசவும், தூரம் நின்று பார்த்த பொறுமையிழந்த பார்த்திபனின் சமாதான பேசிச்சையும் உதறினான் அவன்.

ராஜ் கோபால் எதற்கு வீண் பிரச்சனை என யோசித்து பணத்தை எடுத்து கொடுக்க மகள் விடவில்லை.

"என் மேல தப்பிருக்குன்னு நீங்களும் சொன்னா தாராளமா குடுங்கோ ப்பா." முகத்தைத் தூக்கி வைக்க, மகளை அத்தனை மனிதர்கள் முன்னிலையில் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

வார்த்தைகள் வளர பார்த்திபனால் தன்னவளை விட்டு ஒதுங்கி நிற்க முடியவில்லை. சிறுக சிறுக வளர்ந்த சண்டை கைகலப்பில் வந்து முடிய, பார்த்திபன் உடனே இடைபுகுந்து ஆரபியைக் கண்ணாலே அகல கூறி சண்டையில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் பிரித்து நிறுத்தவும் கோவம் குறையாமல் திமிறியவன் கை, சூடான எண்ணையில் பட்டு பொத்து போனது.

அதன்பிறகே அந்த சண்டை நின்று, சண்டையிட்டவனை கூட்டத்தினர் அப்புறப்படுத்தினர். ஆரபி துடித்துப் போனாள்.

கண்ணீர் மல்க கூட்டத்தின் மத்தியில் முகம் சுருங்க வேதனையைப் பொறுத்து நிற்பவனை, நெருங்க முடியாமல் அவள் தவித்த தவிப்பானது இன்றளவும் தனக்கே அடிபட்டது போல் வேதனைதான்.

உடனே ராஜ் கோபால், பார்த்திபனை அழைத்து அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி, அவன் இல்லத்தில் விட்டு வந்தார். வீட்டிற்கு வர அங்கு மகள் அன்னையின் மடியில் அழுத நிலையில் இருக்க,

"அந்த பையனுக்கு ஒன்னும் ஆவலல ன்னா. சௌரியமா தானே இருக்கா? சீக்கிரம் சரியாகிடுமோனோ?" மனைவியைக் காட்டிலும் மகளின் கண்களில் இருந்த தவிப்பு வேறாய் இருந்தது.

அந்நியனின் நிலையை அறிந்துகொள்ளும் நிலை இல்லாது, தன்னுடைய உயிருக்கு நிகரான ஒரு உறவின் நிலை பற்றி அறிந்துகொள்ளும் வேட்கை அது.

"காயம் பெருசுதான், சரியாக ஒரு திங்கள் கூட ஆகும்னு சொல்லிருக்கா."

தந்தையின் முன்பு என்ன முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அவளுக்கு. கணவன் பார்வை மகள் மீது அசையாமல் படிவதை உணர்ந்த க்ரிஷ்ணாம்பாள், "தன்னால ஒருத்தர் கஷ்டப்படுறானு மனசு பொறுக்கல உங்க பொண்ணுக்கு. சரியாகிடுவா ன்னா, நீங்க கடைக்கு கெளம்பலையா?"

"ஆரபி!" என்றார் தந்தை.

"தோப்பனார்கிட்ட ஏதாவது சொல்லணுமா?" சந்தேகம் தேங்கி நின்ற அவர் பார்வையைத் தாங்க இயலாது, தலை தாழ்ந்து போனாள் ஆரபி.

"என்னடி ம்மா... அமைதியா இருக்க? பேசு..." அன்னைக்கு இன்னும் கூட நிலைமை புரியவில்லை. ஆனால் ராஜ் கோபால் மகளது தவிப்பை ஹோட்டலிலே கண்டுகொண்டாரே, அதற்காக தான் இந்த விசாரணை.

"ப்பா..." என்றாள் அழுகையோடு தலை நிமிராமல்.

"எத்தனை நாளா இது நடக்குது?"

"ஏன்னா என்ன சொல்றேள்...?" அன்னை பதறினார்.

"நீ பேசாதே ம்மா... பொண்ணு மனசுல என்ன இருக்குனு கேப்போம்." மனைவியை நிறுத்தி மகளைப் பார்த்தார்.

அவளது தயக்கம், பயம் எல்லாம் விண்ணைக் கடந்தது, "என்ன மன்னிச்சிடுங்கோ ப்பா..." உடல் குறுக்கி விசும்பினாள் ஆரபி.

"பதில் வரல ஆரபி ம்மா..." கேட்டதற்கு மட்டும் பதில் வேண்டும் என நின்றார் தந்தை.

"ஒ... ஒரு வருஷம் ப்பா..."

"எப்படி பழக்கம்?" வியப்பை மறைத்து கேட்டார்.

"கோவில் எதிர்ல தான் அவரோட ஆஃபீஸ்."

சில நிமிடங்கள் நாற்காலியில் சாய்ந்து ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருக்க மனைவி, மகளை நிறுத்தாமல் திட்டிக்கொண்டே இருந்தார். ஆரபி சிறிதும் அசையவில்லை, கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தாள் ஒழிய, எந்த ஒரு எதிர்வினையும் வரவில்லை.

அதுவே அவளது உறுதியை கூற, கைப்பேசிக்கு வந்த அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் பேசியவர், "அந்த பையனை அழைச்சு, இங்க வர சொல்லு ம்மா." என்றார்.

மகள் அதற்கும் தயங்க, "வண்டி ஓட்ட முடியாட்டி என்ன, ஏதாவது வண்டி புடிச்சு வர சொல்லு. நேக்கு இன்னைக்கே பேசியாகணும்." பிடிவாதமாக நின்றார்.

"இல்ல ப்பா, நேக்கு அவரோட மொபைல் நம்பர் தெரியாது."

"நடிக்காதடி ம்மா... ஒரு வருஷம் பழக்கமிருக்காம், ஆனா இவா ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டதே இல்லையாம். யார் காதுலடி பூ சுத்த பாக்குற?"

மனம் பாரமாகியது, "என்ன நம்புங்க ம்மா, அவா நம்பர் என்கிட்ட இருந்ததே இல்ல. நான் காலேஜ் போறதால அவா என்னை அதிகம் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டா. நேர்ல கூட அதிகம் பேசிக்க மாட்டோம்."

க்ரிஷ்ணாம்பாள், "இவ பேசுறத வச்சு புரிஞ்சுகோங்கோ ன்னா, இது காதலே இல்ல. காலம் கெட்டு போய் கெடக்குது. ஆர்வத்துல ஏதோ பண்ணிட்டா, அப்டியே மூடிடுங்கோ." என்றார்.

மகள் அழுகையோடு தந்தையை நாடினாள், "தினம் பாத்து பேசிட்டாதான் காதலா ப்பா? மணி கணக்கா பேசி தான் எங்க காதலை வளர்க்கணும்னு, எங்க ரெண்டு பேருக்கும் தோனாம போனது எங்க தப்பில்லையே ப்பா?

இன்னைக்கு எனக்காக அவர் முன்ன வந்து நின்னது போதுமே ப்பா. ஈர்ப்புல உருவானது இல்ல ப்பா, என்னையும் மீறி எல்லாம் நடந்துத்து. மன்னிச்சிடுங்கோ ம்மா, அவாளை தாண்டி ஒருத்தரை என்னால எப்பவும் நித்தரைல கூட யோசிச்சு பாக்க முடியாது."

வாயடைத்து போயினர் பெற்றோர். ஒரு வார்த்தை எதிர்பேச்சு பேசாதவள் இன்று பிடிவாதமாக நிற்கவும், அதற்கு மேல் அவளிடம் பேசுவது வீண் என அறிந்தனர்.

தந்தையிடம் கைப்பேசியை நீட்டினாள், "என் மேல சந்தேகம் இருந்தா பாத்துகோங்கோ, அவர் செல் நம்பர் என்கிட்ட இல்ல." தந்தை வாங்கவில்லை.

அடுத்த பதினைந்து நாட்கள் இது பற்றிய பேச்சுகள் வீட்டில் எதுவும் நிகழவில்லை. ஆரபிக்கு பார்த்திபனை பார்க்கும் ஆசை அதிகம் பிறந்தது. அவன் நலனைப் பற்றி அறிய, அவனோ காயத்தின் காரணமாக அவள் கண்ணிலே படவில்லை.

பதினைந்து நாட்கள் பிறகு வந்தான் கோவிலுக்கு. அவன் கைகளைக் கண்ணீர் பெருக பார்க்க கையை காட்டினான், "சரியாகிடும் மாமி, வலி கொஞ்சம்தான் இருக்கு, நீ ரிலாக்ஸ் ஆகு."

"உங்களுக்கு என்ன பாக்கணும்னு தோனவே இல்லைல?"

"வண்டி ஓட்ட முடியல மாமி, வெளிய எங்கையும் வர முடியல. இப்போ கூட விஷ்ணு கூடதான் வந்தேன்."

"அண்ணா நல்லா இருக்காளா?"

"ம்ம்ம்... நல்லாதான் இருக்கான், உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும் மாமி."

"செத்த அங்க ஒக்காந்து பேசலாமா?" இருவரும் அங்கிருந்த முருகன் ஆண்டாள் சந்நிதானத்திற்கு சென்று அமர்ந்தனர்.

பார்த்திபன் கரம் பற்றியவள் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, கொப்பளித்து கை முழுதும் சிவந்து போயிருந்ததைப் பார்க்கவே மனம் தாளவில்லை.

"இதுக்கு தான் உன்னை பாக்க வரல."

கண்ணீரைத் துடைத்தாள், "ஏதோ சொல்லணும்னு சொன்னேளே, சொல்லுங்கோ."

"உன் அப்பா என்னை பாக்க கூப்பிட்டார்."

"தோப்பனார் எதுக்கு அழைச்சார்? உங்கள எதுவும் சொல்லலேல?" பதறினாள் ஆரபி.

"என்ன மாமி, என் மாமனாரை என்ன வில்லன்னு நினைச்சியா?"

"நான் ஏன் அவரை அப்..." அவன் பேசியது புரிய திகைத்தவள், "ஏன்னா அப்பா நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டாளா?" நம்ப முடியாமல் தடுமாறியது ஆரபி இதயம்.

"திருத்தம், காதலுக்கு ஓகே சொல்லிருக்கார். கல்யாணத்துக்கு இல்ல." என்றான் புதிர் போட்டு.

"புரியிற மாதிரி சொல்லுங்கோ ப்ளீஸ்..."

பார்த்திபன், "காலைல போன் பண்ணார், உங்க ஜாதகம் எடுத்துட்டு வாங்கனு. உங்க கடை ஆஃபீஸ் ரூம்ல வச்சு தான் பேசுனோம். உன் ஜாதகம் வச்சு பாத்ததுக்கு அப்றம் தான் முகமே தெளிச்சியாச்சு. நல்லா இருந்துச்சு போல பொருத்தம். ஆமா உன் தோப்பனார் ஜாதகம் எல்லாம் பாப்பாரா?"

ஆரபி, "அது இப்போ முக்கியமா? தோப்பனார் என்ன சொன்னார், அதை சொல்லுங்கோ." அவசரப்படுத்தினாள்.

"உனக்காக சரினு சொல்றேன்னு சொன்னார். ஆனா சொசைட்டில நல்ல இடத்துல இருக்கேன், நீங்க ஒரு இடத்துல கை நீட்டி சம்பளம் வாங்குறது எனக்கு புடிக்கல. சின்னதோ பெருசோ சொந்தமா ஒரு தொழில் ஆரமிச்சிட்டு வந்து பொண்ணு கேளுங்க, அந்த தொழில் நஷ்டப்பட்டா கூட நம்ம ஹோட்டல் பாத்துக்கலாம்னு சொல்றார்."

ஆரபி அமைதியாகி விட்டாள்!

"என்னடி வீட்டோட மாப்பிள்ளை பாக்குறாரா உன் அப்பா?" என்றவன் கேள்வியில் சினம் எட்டி பார்த்தது.

இருவருக்கும் இடையில் சிக்கி தவித்தவள் மௌனம் புரிந்தவன், அவள் கைகளில் ஆறுதலாய் தட்டி,

"உன் அப்பா என்னோட திறமையை ஈகோவை தட்டி விட்டார். இனி அவருக்கு நான் யாருனு காட்டாம இருக்க போறதில்ல. என்னோட தொழில்ல லாபம் பாக்காம உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டு வந்துருக்கேன்."

இயலாமையோடு அவனை நோக்க, "கவலைப்படாத, ஹார்ஷா பேசல, ஜெய்ச்சிடுவேன்ல மாமி?"

"உமக்காக இல்லனாலும், எனக்காக கண்டிப்பா நீங்க ஜெயிச்சு வருவேள். தைரியமா வேலைய ஆரமிங்கோ..."

***

அன்று அவள் கொடுத்த நம்பிக்கையில் தான் இன்று இவ்வாறு உயர்ந்து பறக்கிறான் பார்த்திபன். அவனது கையை எடுத்து கன்னத்தில் வைத்து சாய்ந்தவள் அதே கையில் முத்தம் கொடுத்து, "இந்த ஒன்னு போதாதா, உங்கள விடாம இறுக்க புடிச்சுக்க?"

பல வருடங்கள் முன்பு ஏற்பட்ட காயம் மாறியிருந்தாலும் அந்த தழும்பு அவன் கைரேகையாக மாறியது.

"திருப்தியா இல்ல பதில்." மனைவியின் நெற்றியில் முத்தம் பதித்து நேரமானதைக் கூறி வெளியேறினான்.

மகளின் அருகே படுத்த ஆரபி, அன்னையிடம் கணவன் இடத்திற்கு கொடுத்த பணத்தைப் பற்றி பகிர்ந்து உறங்கிவிட, மாலை தந்தையின் அழைப்பில் தான் கண் விழித்தாள்.

"என்ன ம்மா ஆரபி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்ருலாமோன்னோ? உன்னோட ஆம்படையான் பணம் குடுத்துட்டு வந்த நேரம், எமகண்ட நேரம். அதோட அவர் ஜாதக கட்டத்துல இன்னும் நாலு மாசம், எந்த முயற்சியும் புதுசா எடுக்க கூடாதுனு இருக்கு.

அவர் நேரமும் சரியில்ல, உயிருக்கே ஆபத்து நடக்கவும் வாய்ப்பிருக்கு. இப்படிப்பட்ட நேரத்துலயா இதெல்லாம் யோசிக்காம பண்ணுவேள்?" தந்தை கொடுத்த தகவலில் உலகமே தட்டாமாலை சுற்றியது ஆரபிக்கு.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro