நாணல் - 21
தீ சிறிதாக இருந்தால் பெருங்காற்று அதனை அழித்துவிடுமாம். அதே தீ பெரிய அளவில் இருந்தால், பெருங்காற்று அதனை அதிக அளவில் வளர்த்தி விடுமாம். விஷ்ணு, பார்த்திபன் வாழ்விலும் நிகழ்ந்தது அதுவே.
தாமோதரன் என்னும் பெரும் காற்று நண்பர்கள் மனதிலிருந்த தீயை இப்பொழுது பெரிதாக வளர்த்துவிட்டிருந்தார். தாமோதரனை உடனே எதுவும் செய்யா விடினும் வேகமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினர்.
அதனை பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான், "அனாயா இருக்காலடா, அவளை வச்சு அந்த ஆளோட இல்லீகல் ஒர்க் எல்லாம் கண்டு புடிச்சு எங்க இன்பர்மேஷன் குடுக்கணுமோ அங்க குடுக்கலாம், மொத்தமா மூடிடலாம்ல?"
பார்த்திபன், "அவனோட ஈ-காமர்ஸ் சர்வீஸ் தான் இப்போ நல்ல லாபத்துல ஓடுது. அதை என்ன பண்றது? அது யாரோடதுன்னு கூட வெளிய தெரிய வரல"
விஷ்ணு, "கண்டு புடிக்கலாம்டா"
பார்த்திபன், "அவன்கிட்ட இருந்து பணத்தை புடுங்குறது, பாம்பை அடிக்க போய் அடிக்காம வர்றதுக்கு சமம். எபோனாலும் திரும்பி வந்து அடிப்பான். அதோட விட மாட்டான், இன்னும் வேற குடும்பத்தை நாசமாக்குவான்" என்ற பார்த்திபன் என்ன செய்வதென யோசிக்க,
"பேசாம அவன் வீட்டுல ஒருத்தர தூக்கிடலாமா?" என்றான் பலத்த யோசனைக்கு பிறகு.
"அவனோட பெரிய வீக்னஸ் தான். ஆனா அதெல்லாம் ஈஸியா கண்டு புடிச்சிடுவான் பார்த்தி" என்றான் விஷ்ணு தாமோதரனை நன்கு அறிந்து.
அரை மணி நேரம் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து யோசிக்க, "ரெண்டையும் செஞ்சிடலாமா?" இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரிடம் கேட்க, அங்கு உதயமாக துவங்கியது அவர்கள் திட்டம்.
இன்னும் எதுவும் முழுதாய் முடியவில்லை. அவரது குடும்பத்தை சற்று சாய்தாயிற்று அனாயாவின் மேல் கோவம் வர வைத்து. தொழில் கிட்டத்தட்ட முடங்கி போன நிலை தான். ஆனால் இதோடு அவரை விட மனம் வரவில்லை.
இதற்கு பிறகு அவருடைய நகர்வு எதுவாக இருக்குமென யோசித்தவர்கள் அனாயாவை திருமணம் செய்யும் வீட்டினரை குறி வைத்தனர். தங்கள் கணிப்பு சரியே என்னும் விதமாக அந்த குடும்பத்திடம் கதை கட்டிவிட்டார் அவரும்.
உடன் சென்றிருந்த அனாயாவின் அன்னைக்கு அந்த மாப்பிள்ளையை பார்த்ததும் முதல் முறை ஒரு பின்வாங்கல் மனதளவில். வந்தவர்களிடம் சபையில் நின்று பேசும் எண்ணம் இல்லாமல் வீட்டினர் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான், அதுவும் சில நேரம் தான்.
வேகமாக எழுந்து சென்றுவிட்டான் அவன் அறைக்கு. தன்னுடைய மனதினை வெளிக்காட்ட கூட அவருக்கு தயக்கம் தந்தையின் திட்டத்தை வைத்து. திருமணத்தை விரைவிலே செய்ய வேண்டும் என்றார்.
"எனக்கு என்னமோ உங்க பக்கமிருந்து தான் இதெல்லாம் பண்றங்களோனு தோணுது தம்பி. போன வாரம் கூட எனக்கும் என் போத்திக்கும் ரெண்டு போன், கல்யாணத்தை நிறுத்துங்கனு சொல்லி மிரட்டுனாங்க. அதுக்கு பயந்தே புள்ளை போன் ஆப் பண்ணி வச்சிட்டோம்"
அவர்களும் கூட சற்று அரண்டு தான் போயினர். ஏனெனில் அவர்கள் பக்கம் அப்படி ஆட்களும் இருக்க தான் செய்கின்றனர். அதற்கு பயந்தே இந்த வேக ஏற்பாடு.
"சரிங்கயா வேகமா ஏற்பாடு பண்ணிடலாம்" என அவர்களே பேசி முடிவெடுத்தார் போல் இன்னும் மூன்று நாட்களில் என முடிவெடுத்தனர். பெற்றவரிடம் கூட அனுமதி கேட்கப்படவில்லை.
இத்தனை நாட்களும் கேட்டதில்லை அவர் தந்தை. இன்று தான் ஏன் கேட்கவில்லை என்கிற கேள்வி அவரிடம் வந்தது. வந்த வேலை முடிந்த நிம்மதியில் மகளை அழைத்து வந்த தாமோதரன் முகம் நேற்றை விட இன்று கொஞ்சம் தெளிந்திருந்தது.
"ப்பா நாம அவசரப்படுறோமா?"
"இல்ல கண்ணு. என்னைக்கோ நடக்க போகுது அது இன்னைக்கோ நாளைக்கோ நடந்தா என்ன?"
"இல்ல ப்பா, அந்த பையன்..."
"நல்லா விசாரிச்சிட்டேன்ம்மா. குணம் எல்லாம் நல்லா தான் இருக்கு, என்ன கொஞ்சம் வேலை விசயத்துல கொஞ்சம் சரியில்ல. அதெல்லாம் நான் இருக்கேன்ல பாத்துக்குறேன்" என்றார் பெரிதான நம்பிக்கையோடு.
அதற்குமேல் கேள்வி கேட்க முடியவில்லை அவருக்கு, "நான் கோவில்ல இறங்கிக்கிறேன் ப்பா" என்றார். வாகனம் கோவில் முன்பு நிற்க மகளுக்காக காத்திருப்பதாக தாமோதரன் கூறினார்.
"இல்ல இன்னைக்கு பூஜை இருக்கு, வர ரெண்டு மணி நேரமாகும்" எனவும் பூஜை முடிந்த பிறகு வாகனம் அனுப்புவதாக தாமோதரன் வாகனத்தில் பறந்தார்.
கோவில் பிரகாரத்திற்கு வந்த அனாயாவின் அன்னை கடவுளை கூட தரிசிக்க மனமில்லாமல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். ஒரு மணி நேரமிருக்கும் வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
எடுத்து காதில் வைத்தார், "என்ன நினைச்சிட்டு இருக்கார் உங்க அப்பா, கல்யாணம் வேணாம்னு சொன்னா பிளாக்மெயில் பன்றார் ஆள தூக்கிடுவேன் அது இதுனு.
இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல சொல்லிட்டேன். இந்த அதட்டல் மிரட்டல் எல்லாம் உங்களோட நிறுத்திக்க சொல்லுங்க"
அழைத்த வேகத்தில் மகள் வைத்தும்விட கடவுள் விகாரத்தை நோக்கி நடந்தார். இறைவன் முன்பு கண் மூடி நின்றவருக்கு முதல் முறை தந்தையின் செயல் பயத்தை கொடுத்தது.
மகளின் ஆசையில் விட்டால் என்ன என யோசிக்க துவங்கியிருந்தார். மனம் நிம்மதியே இல்லாமல் தவித்தது. கணவனிடம் சென்று ஆறுதல் தேடும் குடுப்பனையும் இல்லாத காரணத்தால் தான் தந்தையின் சொல் படி நடக்க வேண்டி இருந்தது.
இன்று அவர் பேச்சை சந்தேகிக்கும் நிலை வருமென சிறிதும் அவர் எதிர்பார்க்கவில்லை. கண் மூடி மீண்டும் வந்து அமர்ந்துவிட்டார். இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்கும் அவரது சிந்தனை கலையாத நினைவுகளில் இருந்து மீட்டு வந்தது ஒரு பெயர் வராத எண்ணின் அழைப்பு.
இயந்திர கதியில் கைபேசியை எடுத்தவர் செவிகளில் மகனின் மூச்சு வாங்கும் சத்தம் பலமாக கேட்க அரண்டு போனார்.
"ஆரிவ் என்ன சாமி ஆச்சு?" படபடத்தார் அவனுக்கு என்னவோ ஏதோ என.
"ம்மா..." மகனால் பேச கூட முடியவில்லை.
"சாமி என்னயா எதுக்கு இப்டி பேசுற? உடம்புக்கு முடியலையா? இது யார் நம்பர்?" என்றார் இன்னும் பயம் கூடி போய்.
"என்ன கடத்தி வச்சிருக்காங்க ம்மா"
"ஐயோ..." நெஞ்சில் கை வைத்து பதறியவர், "இரு கண்ணு தாத்தாகிட்ட ஒடனே பேசுறேன், அவர் உன்ன எப்டியா..."
"கடத்துனதே அவர் தான் ம்மா" என்றான் மிகவும் மெதுவான குரலில்.
இது அன்னைக்கு மீண்டும் பெரிய அடி. இருக்கவே இருக்காது என மனம் அடித்து கூறியது.
"கண்ணு..."
"இப்ப கூட என்ன நம்ப மாட்டீங்களா ம்மா? நான் கேட்டேனேம்மா. அவங்க உங்க அப்பாகிட்ட பேசுனதை நான் கேட்டேன். ரொம்ப நேரம் பேச முடியாதும்மா. அவங்க வெளிய போகவும் தெரியாம பேசுறேன். நீங்க எதுவும் பண்ண மாட்டீங்க, என் அக்காகிட்ட சொல்லுங்க போதும் ப்ளீஸ் ம்மா"
"ஆரிவ், எங்க கண்ணு இருக்க, அம்மா வர்றேன்யா"
"தெரியல ம்மா. இவங்க என்ன என்னமோ பேசுறாங்க. ம்மா அவங்க வர்றாங்க நான் வைக்கிறேன், திருப்பியும் கூப்பிடாதிங்க"
"ஆரிவ்... ஆரிவ்" இவர் கத்துவதை சுற்றி இருந்த பலர் வித்யாசமாக பார்த்தனர்.
அதையெல்லாம் உதறிய அன்னை வேகமாக கண்ணில் பட்ட முதல் வண்டியை பிடித்து வீட்டிற்கு சென்றவருக்கு மனம் கதறி அழுதது.
'துன்பம் என வந்த முதலில் நினைவில் வர வேண்டிய நான், என் பிள்ளைகள் இருவருக்கும் நினைவிலே வரவில்லை. அவர்களுக்காக அவர்களுக்காக என தான் செய்தது எதுவும் இப்பொழுது அர்த்தமே இல்லாமல் சிதைந்து கிடக்கிறது'
சாதாரண மனிதராக தன்னை தேடி தன் பிள்ளையின் தேடல் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு தானே. இவரது ஏக்கமும் இந்த நேரம் தான் அது மலையளவு உயர்ந்து நிற்கிறது.
ஆனால் காலம் கடந்துவிட்டது. அரவணைத்து, பாதுகாக்க வேண்டியவர் தன்னுடைய திருமண வாழ்க்கை தோற்று போனதில் தகப்பனிடம் தஞ்சம் புகுந்து அவர் கைகளிலே பெற்ற பிள்ளைகளின் எதிர் காலத்தையும் ஒப்படைத்து பிள்ளைகளின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.
தனக்காக ஒன்றானால் அன்னை வருவார் என்கிற எண்ணம் இல்லை பிள்ளைகளிடம். இதோ வீடு செல்லும் பாதை எங்கும் அழுது மட்டும் என்ன பயன்?
சென்ற பாசமும் நம்பிக்கையும் மீண்டும் வருவது சந்தேகம் தான். வீட்டிற்குள் சென்றவர் கண்டது வீட்டின் தோட்டத்தில் வாதாடி சண்டையிடும் மகளையும் தந்தையையும் தான்.
பேத்தியை தாண்டி மகளை பார்த்தவர் அவரது கசங்கிய முகத்தை கவனித்து, "என்னம்மா, ஏன் முகமெல்லாம் இப்டி இருக்கு? எதுல வந்த? வண்டி இங்க தானே இருக்கு"
அவர் பார்வை மீண்டும் வாகனம் இங்கு தான் உள்ளதா என தேடியது. தாமோதரன் மகளோ கையிலிருந்த பணப்பை மற்றும் பிரசாதத்தை அப்படியே போட்டு தந்தை முன்பு கோவமாக,
"என் பையன் எங்க?" ஆக்ரோஷமாக இருந்தது அவர் நடவடிக்கை. தாமோதரனுக்கு மகளின் நடவடிக்கை அதிகம் வித்யாசத்தை கொடுத்தாலும் சந்தேகத்தை விழுங்கி,
"அவன் இந்நேரம் காலேஜ்ல இருப்பானே ம்மா, என்ன வீட்டுக்கு வர்றேன்னு சொன்னானா?"
"பொய் சொல்லாதீங்க ப்பா" வீறிட்டு கத்தியவரை தாத்தா பேத்தி இருவரும் வியந்து பார்த்தனர்.
"அவனை... என் பையனை நீங்க என்னமோ பண்ண போறீங்க. எங்க என் மகன்?"
"என்ன கண்ணு, என்னாச்சு அப்பாகிட்ட மொத நடந்ததை சொல்லு. யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என்றார் அனாயாவை பார்த்து விஷ்ணு பார்த்திபனை மனதில் வைத்து.
அனாயாவிற்கு அவள் அன்னை கேட்கும் கேள்விகளில் பயம் அப்பிக்கொண்டது.
"யாரு என்னப்பா சொல்லணும், ஆரிவ் எங்க இருக்கான்னு அவன் சொல்லனுமா இல்ல என் பொண்ண அவளுக்கு தகுதியே இல்லாதவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, அவங்க சொத்தையும் நீங்க வாங்கிக்க அனாயா வாழ்க்கையையும் அழிச்சு ஆரிவ் உயிரையும் வாங்க முடிவு பண்ணிட்டீங்க அப்டி தான?"
"என்ன சொல்றிங்க நீங்க?" அன்னை முகம் பார்த்து அவர் உரைப்பது பொய்யில்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அன்னைக்கும் மகளை நிமிர்ந்து கூட பார்க்க இயலவில்லை, நம்ப கூடாத அனைத்தையும் நம்பி, இப்பொழுது அவளது ஒரே ஆறுதலான அவள் சகோதரனையும் தந்தையிடம் தூக்கி கொடுத்து நிற்பதன் காரணம் தான் மட்டும் தான் என்கிற தவிப்பு அவரிடம்.
"உங்கள தான் கேக்குறேன்..."
அனாயா பேசுவதை தடுத்து, "நீ இரு கண்ணு, நான் பேசுறேன். உன் அம்மா ஏதோ குழப்பத்துல இருக்கா"
"நீங்க பேசாதீங்க. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றவள் அன்னையிடம் திரும்பி, "சொல்லுங்க என் தம்பிக்கு என்ன?" பாதியிலே குரல் உடைந்தது சகோதரனுக்கு என்னவோ ஏதோ என.
"ஆரிவ்வ இவர் கடத்திருக்கார்... என் புள்ள நிலைமை என்னனு கூட தெரியலம்மா" என்றார் தலையில் அடித்து அழுதவாறு. முழுதாக நடந்ததை கூற மனமில்லாமல் மகனை எண்ணி கதறினார்.
அவ்வளவு தான், அனாயா தாமோதரன் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி போக ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த கை தடியை தூக்கி எறிந்துவிட்டார். அந்த எடை குறைவான தடியானது பெண்ணவளின் நெற்றியினை பதம் பார்த்தது.
அதுவரை சுய வெறுப்பில் அல்லாடிக்கொண்டிருந்த அனாயாவின் அன்னை மகளை தாங்கி பிடித்து, "இங்க பாருங்க. இன்னும் அஞ்சு நிமிசத்துல என் பையன் எனக்கு போன் பண்ணனும், பண்ணல அடுத்த பதினோராவது நிமிஷம் என் ஒடம்பு உயிர் இல்லாம இங்க விழும்"
"என்னமா நீ... அப்பா அப்டி பண்ணுவேன்னு நினைக்கிறியா ஏண்டா நம்ப மாட்டிக்கிற?" தவித்தார் மகள் பேசியதை தாளாமல்.
"செய்வேன். கண்டிப்பா சொன்னதை செய்வேன் நான்"
அனாயா நம்பவே முடியாமல் அன்னையை பார்க்க, அவரோ கண்ணீரோடு மகளின் காயத்திற்கு மருந்திட்டு அமர்ந்தார். இருவரிடமும் பேச்சே இல்லை, அனாயா எழுந்து சென்றுவிட்டாள்.
பெரியவரை நம்பி சகோதரன் விஷயத்தில் இருந்துவிட இயலவில்லை. மனம் பயத்தில் உழன்று தவித்தது. அறைக்கு வந்தவள் விஷ்ணுவுக்கு அழைக்க அவன் வேறு வேலையாக இருந்ததால் அழைப்பை ஏற்க முடியவில்லை.
பார்த்திபனுக்கு அழைத்து அழுகையோடு நடந்ததை பதட்டத்தில் வேகமாக கூற, "அனாயா வெயிட் பண்ணு..."
"இவரால என்னால அவன்கிட்ட பேச கூட முடியல, பாவம் சார் அவன்"
"இரும்மா, அவன் ரொம்ப சேப்"
"இல்ல சார், அவன் அம்மாக்கு கால் பண்ணி பேசிருக்கான்... அவங்களே ரொம்ப பயத்துல இருக்காங்க"
"பதட்டப்படாம கேளும்மா. அதை செட்டப் பண்ணாதே நாங்க தான்"
"சார் இதை ஏன் என்கிட்ட..." அவள் குரல் உடைந்தது.
"சாரிம்மா, உன் பெர்மிஷன் இல்லாம பண்ண வேண்டிய கட்டாயம். உன் தம்பி பத்தரமா இருக்கான். உன் தாத்தாவை பணத்தாலயோ பதவியாலயோ அடிக்க முடியாது.
அவரை முடக்குற ஒரே விஷயம் உங்க வீட்டு ஆளுங்க தான். முக்கியமா உன்னோட அம்மா. அவங்கள உன் தாத்தாக்கு எதிரா நிறுத்த தான் இந்த சின்ன பிளான்"
"எல்லாம் ஓகே தான் சார், ஆனா என்கிட்ட சொல்லிருக்கலாமே"
பார்த்திபன், "உன்னோட ரியாக்ஷன் ட்ரூவ்வா இருக்கனும் அனாயா. இவ்ளோ நாள் நீ பண்ணது ஒரு வகையான ஆக்டிங்னு தாமோதரனுக்கு தெரிஞ்சிருக்கும். அது எதுலயும் உன் அம்மா இன்வால்வ் ஆகல, ஆனா இந்த விஷயம் அப்டி இல்ல.
உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லனு காட்ட தான் விஷயத்தை சொல்லல. இனி அவர் கோவமெல்லாம் எங்கமேல்ல தான் வரும், உன் மேல திரும்பாது. உன்ன இதுக்கு மேலையும் கஷ்டப்படுத்த விரும்பாம இருக்க தான் இந்த ஏற்பாடு"
"நான் அதுக்கெல்லாம் பயப்பிட மாட்டேன் சார்..."
"உனக்கு பயம் இல்ல அனாயா, எங்களுக்கு உன்ன பத்தரமா பாத்துக்கணும். ஆரபி, பூர்விய பாக்குற மாதிரி உன்னையும் பாதுகாக்குறது எங்க கடமை, நீ எதையும் நினைச்சு ஒரி பண்ணிக்காம இரு"
அனாயா, "அம்மா... அவங்க அஞ்சு நிமிசத்துல ஆர்வி பேசலானா ஏதாவது பண்ணிக்குவாங்களோனு பயமா இருக்கு சார்"
"உன் வீட்டுல பிரச்சனை ஆகிடுச்சுல, இனி உன் தம்பிய பத்தரமா விட சொல்லிடுறேன்" என பார்த்திபன் கூறிய பிறகே அனாயாவிற்கு நிம்மதியானது.
இந்த கன்னாமூச்சி ஆட்டம் எங்கு எப்பொழுது முடியுமென தெரியாது, விரைவில் தங்களுக்கு சாதகமாக முடிய வேணடுமென்று தான் அவள் மனம் வேண்டியது.
மறுபக்கம் தாமோதரன் செய்வதறியாமல் துடித்துக்கொண்டிருந்தார் மகளை எண்ணி, அவர் நடவடிக்கையை எண்ணி. இல்லவே இல்லை இது அவர் மகளே இல்லை.
காலை வரை தன் பேச்சை தட்டாமல் இருந்த மகள், அவர் மகன் விஷயம் கேட்டு இந்த தலைகீழான மாற்றத்தை எதிர்பார்க்க வில்லை. வெறுப்பு மகளின் விழிகளில் இழையோடியதை அவரால் கண்கூடாக பார்க்க முடிந்தது.
நிலையில்லாமல் தவித்தவர் கால்கள் நில்லாது வீட்டின் தோட்டத்தில் நடக்க, கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்து நடப்பது போல் பரிதவிப்பு.
ஏதேனும் மகள் செய்துவிடுவாளோ என்பது போல் நடக்க கூடாத சாத்தியக்கூறுகளை எல்லாம் மனம் எண்ணி யோசித்து பார்த்து துடித்தது.
"கேட்டியா?" ஐந்து நொடிக்கு ஒரு முறை பேரனை பற்றிய தகவல் ஏதேனும் வந்ததா என தன்னுடைய காரிய தராசியிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.
விடை தான் பூஜ்யம், 'இல்லை' என்பதை தவிர அவர் எதிர்பார்த்த செய்தி வரவில்லை.
தோட்டத்தின் வழியே வீட்டின் வரவேற்பறையை பார்க்கும் ஜன்னலை அவ்வவ்வபொழுது எட்டிப்பார்த்துக்கொண்டார். மகள் கொடுத்த நேரத்தை தாண்டி நேரம் கடந்திருக்க மனம் திக் திக் என அடித்துக்கொண்டது.
தலையை கையில் ஊன்றி, மகளுக்காக போட்டு விட்ட கட்டை வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல் இன்னும் அவர் கையிலே தான் இருந்தது.
ஆயிரம் குற்றங்கள் செய்திருந்த பொழுதெல்லாம் பதறாத இதயம், மகளின் உறுதியில் பதறியது.
வேலையாள் ஒருவரை அழைத்து அதை வாங்க முயன்றார் தாமோதரன், முடியவில்லை. நேரம் செல்ல செல்ல அவரது பிடி அதில் கூடியது. கேட்க முடியாத வார்த்தைகளை விட்டு திட்டி பார்த்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார்.
"சார் தம்பி ஹாஸ்டல்க்கு பஸ்ல வந்து இறங்கினதா நம்ம ஆளுங்க சொன்னாங்க"
"எப்படி?"
"தெரியல சார். தம்பிகிட்ட விசாரிக்க சொல்லவா?"
"கொன்னு புதைச்சிடுவேன். அவன் பக்கத்துல எவனும் போக கூடாது. யார் ஆரிவ்வ தூக்குனதுனு மட்டும் கண்டுபுடி"
தன்னுடைய வயதிற்கு மீறிய வேகத்தோடு வீட்டினுள் மகளிடம் செல்ல, அவருக்கு இதற்கு முன் அனாயாவிடமிருந்து தகவல் வந்திருந்தது. தந்தையை பார்க்க விரும்பாமல் அறையினுள் சென்று அடைந்துவிட்டார் அனாயாவின் அன்னை.
*****
விஷ்ணு பார்த்திபன் இருவரும் ஆரபி தந்தை வீட்டில் இருந்தனர். ராஜ்கோபால் இருவரையும் தனியாக மாடிக்கு அழைத்து சென்றுவிட்டார்.
"தாமோதரன் தீவிரமா விசாரிக்கிறார் போல தெரியிது"
விஷ்ணு, "தெரிஞ்சா பிரச்சனை இல்ல ப்பா, என்ன பண்ணிடுவான் பாத்துக்கலாம்" என்றான் சற்றும் அசையாமல்.
ஆரிவை கடத்தும் எண்ணம் நண்பர்களுடையதாக இருந்தாலும் அதற்கு முழு உழைப்பும் ராஜ்கோபால் பக்கமிருந்து தான் வந்தது. ஊக்கம் கொடுத்தவரிடம் கடத்த உதவுங்கள் என நேரடியாக சென்று நிற்க தயக்கமாக தான் இருந்தது.
உதவியை நாடிய பிறகு சில நிமிடங்கள் எடுத்து யோசித்தவர் அடுத்தடுத்த வேலைகளை ஒரே நாளில் முடித்துவிட்டார். எதிர்பார்த்ததை விட அனாயா அன்னை உறுதியாக தந்தையிடம் ஒதுக்கம் காட்டியது பெருத்த ஆனந்தம் இவர்களுக்கு.
"அனாயா பேசுனா, அவங்க தாத்தாக்கும் அம்மாக்கும் ஒரு வாரமா பேச்சு வார்த்தை இல்ல போல. ஆரிவ் நேத்து வீட்டுக்கு வரவும் ஒரே அழுகையாம். வீட்டை விட்டு வெளிய போகலாம்னு. கல்யாணத்தை கூட நிறுத்திட்டாங்க" என்றான் விஷ்ணு மேலும்.
ராஜ்கோபால், "இதுக்கு மேல அவரை எதுவும் செய்ய தேவையில்லை. விட்ரலாம்" என்றார்.
விஷ்ணுவுக்கும் அதுவே சரியெனப்பட்டது, ஆனால் பார்த்திபன் தான் கை கட்டி யோசனையோடு நின்றான்.
"யோசிக்காதிங்க மாப்பிள்ளை, மனுஷனுக்கு தனிமையோட வலிய வேற எதுவும் குடுத்துட முடியாது. அதுவும் வயசான காலத்துல... சொல்லவே வேணாம்"
விஷ்ணு, "நிம்மதியா வாழணும்னு தானேடா இந்த ரிஸ்க் எடுக்குறோம். சண்டை, பழி வாங்குறதெல்லாம் வேணாம். முடிச்சுக்கலாம் எல்லாத்தையும்"
அரை மனதாக தலை அசைத்தவன், "சரி நிறுத்திக்கலாம். இருந்தாலும் தாமோதரன் இதை இப்டியே விடுற ஆள் மாதிரி எனக்கு தோணல. இப்பவும் ஆள வச்சு தேட சொல்லிருக்கான், முடியும்னு நினைக்கிறீங்களா? அந்த ஆள் அடிபட்ட பாம்பு மாதிரி. கண்டிப்பா வருவான்னு எனக்கு உறுத்திட்டே இருக்கு" மனம் கூறியதை மறைக்காமல் கூறினான்.
ராஜ்கோபால், "அப்போ ஒரே வழி தான் இருக்கு, தம்பி நீங்க அனாயாகிட்ட பேசி அவங்க அம்மாவை வீட்டை விட்டு நாளைக்கே கூட்டிட்டு வர சொல்லிடுங்க. கையோட வேகமா கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுக்கு மேல அனாயா அம்மா பாத்துக்குங்க"
பார்த்திபன், "நம்ம பாதுகாப்புக்காக ஏற்கனவே அப்பா மகளை பிரிக்கிறோமோன்னு கஷ்டமா இருக்கு மாமா, இதுல வீட்டை விட்டு வேற கூட்டிட்டு வரணுமா?"
"பெரிய பொல்லாத அப்பா பாசம். அவ்ளோ அக்கறை இருக்குற ஆள் மகளை மருமகன் விட்டு வேற ஒருத்திகிட்ட போகுறப்போவே வாழ்க்கையை சரி பண்ணிருக்கணும். இவனை எந்த விதத்துல சேர்க்குறதுனே தெரியல. கௌரவ பேய்" அவரை நினைத்து அருவருப்பாய் முகம் சுளித்தான் விஷ்ணு.
மருமகன் தோளில் தட்டிய ராஜ்கோபால், "அவர் செஞ்ச தப்புக்கு அவர் மக தண்டனை குடுக்குறாங்க. நாம அவரோட உண்மையான ரூபத்தை எடுத்து காட்டிருக்கோம். அவ்ளோ தான் மாப்பிள்ளை"
"நாம இப்டி யோசிக்கிறதுக்கெல்லாம் தகுதியான ஆள் இல்லடா அவன்" என்றான் விஷ்ணுவும்.
சரி என்றுவிட்டான் பார்த்திபன். இரவு உணவை உண்ண வைத்து நண்பனை வாசலில் வழியனுப்ப வந்த பார்த்திபன், "பணத்தை மாமா ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டார் விஷ்ணு. என்ன சொல்றது?" கேட்டான் தான் மட்டும் முடிவெடுக்க முடியாமல்.
"வாங்கிக்கலாம் பார்த்தி. யார்கிட்ட வாங்குனா என்ன, நாம திருப்பி குடுத்துட தானே போறோம். என்ன உன் மாமானா வட்டியில்லா கடன்" விஷ்ணு சிரிக்க நண்பன் கையில் விளையாட்டாக அடித்த பார்த்திபன் சிரிப்போடு அவனை அனுப்பி வைத்தான்.
நினைத்தது போலவே எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. அனாயா அன்னையை அழைத்து வீட்டை விட்டு வந்துவிட்டாள்.
விஷ்ணு ஏற்கனவே சிறிதாக இரண்டு படுக்கையறை கொண்டு வீடு பார்த்திருக்க அந்த வீடே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அனாயாவின் அன்னை தான் அமைதியாக இருந்தார் அதிக நேரம்.
அதை தாங்க முடியாமல், "எங்களுக்காக நீங்க கஷ்டப்பட வேணாம். உங்க அப்பா வீட்டுல விடுறேன் வாங்க" என ஆரிவ் அவர் கையை பிடிக்க, பிடித்த அவன் கையை உதறி இறுக்கமாக அவனை அணைத்துக்கொண்டார்.
"உங்களுக்கு நான் வேணாமா கண்ணு?"
"நாங்க அப்டி சொல்லலையே... உங்களுக்கு எங்களை விட உங்க அப்பா முக்கியம்னு நினைக்கிறோம்" என்றான் உள்ளடக்கிய வலியோடு.
ஏனோ பிறந்ததிலிருந்து அன்னையின் அன்பை அனுபவிக்காமல் வாழ்ந்துவிட்டது போன்ற எண்ணம் இரண்டு பிள்ளைகளுக்கும். அது அவர்களது ஒதுக்கமாகவே இருந்தாலும் காரணம் அன்னையின் குருட்டுத்தனமான தந்தை பாசம் என்பதும் மறுக்கவே முடியாதது.
"அதெப்படி கண்ணு இருக்கும், என் அப்பா எனக்கு முக்கியம் தான், அதுக்குன்னு நீங்க என் உயிரு இல்லனு ஆகிடுமா? வாழ்க்கைக்கு பிடிப்பே இல்லாத நேரம் உங்க முகத்தை பார்த்து உயிர் வாழ்ந்தவடா நான்.
அதுக்காக என் அப்பா சொல்லி கண்ணை மூடிட்டு எப்படி வாழுறோம்னு தெரியாமயே இவ்ளோ நாள் வாழ்ந்துட்டேன். இனியும் அப்டி இருக்க விரும்பல, எனக்காக, என் பசங்க நிழல்ல வாழணும்னு ஆசைப்படுறேன். உங்களுக்கு நான் இருக்க சிரமமா இருந்தா போறேன்"
போக சொல்லிவிடாதே என மகள் மகன் இருவரையும் அழுகையோடு பார்த்தார்.
அன்னையை கட்டி அணைத்த ஆரிவ் தன்னுடைய பதிலை கொடுக்க, இதை எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அனாயா மௌனமாக சமையலை கவனிக்க சென்றுவிட்டாள்.
சிறியவனை போல் அல்லாது அதிக அடி, வலி என இவள் பட்டது அதிகம். ஆதலால், அன்னையை ஏற்றுக்கொண்ட அதே வேகத்தில் அவரிடம் அன்பு காட்ட முடியவில்லை.
விஷ்ணுவின் வீட்டினர் வந்து முறையாய் அனைத்தையும் ஒதுக்கி வைத்து பெண் கேட்கவும் உடனே அனாயா அன்னை ஆனந்த கண்ணீரோடு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
தாமோதரன் மக்ளின் வீட்டு வாயிலில் தினமும் வெயில் பாராது தவம் கிடந்தாலும் மகள் மன்னிப்பதாய் இல்லை.
'என் பையனவே கொல்ல போயிருக்கார். அப்டி என்ன அந்த டீல் முக்கியம், அதுல இருந்து வர்ற பணமும் வேணாம், இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்க இவர்வேணாம்' ஒரே நாளில் தூக்கி எறிந்தாயிற்று. மனம் அவர் முகத்தை பார்க்க கூட ஒப்பவில்லை.
பேத்தியின் திருமண பேச்சு, அதற்கு தன்னை அணுகாத மகளின் மொத்த ஒதுக்கம் என பார்த்திபன் எண்ணியது போல தாமோதரனுக்கு வெஞ்சினம் அதிகமாகியது.
அன்று மனைவியை அழைத்து வெளிய செல்ல வந்திருந்தான் பார்த்திபன். "நான்வெஜ் சாப்பிடணும் போல இருக்கு மாமி" என்று.
அவளும் கணவனுக்காக உடன் வந்திருக்க, மகளையும் அழைத்து செல்லலாம் என காத்திருந்தனர்.
வெளியேறிய குழந்தைகளை பார்த்தவண்ணம், "ஏன்னா நாம பூர்விய இன்னும் ஆறு மாசம் கழிச்சு ஸ்கூல்ல சேர்த்திருக்கலாமோ" என்றாள் யோசனையாக.
"எதுக்கு இந்த திடீர் சந்தேகம்?"
"அங்க பாருங்கோ... ஓரளவு பெரிய குழந்தைங்க தான் வர்றா"
மனைவியை திரும்பி பார்த்த பார்த்திபன் இதழில் விரிந்த புன்னகை, "இப்பயே உனக்கு மூட் ஸ்விங்ஸ் வர ஆரமிச்சிடுச்சு மாமி" என்றான்.
சிணுங்கலோடு ஆரபி அவன் தோளில் அடிக்க, "பின்ன என்னடி, நீ தான் சேர்த்து விடணும்னு சொன்னது இப்ப நீயே வந்து இப்டி சொல்ற"
"உனக்கு தோணுறதை செய் மாமி. எனக்கு முன்னவே தோணுச்சு. நீ சொன்னா சரியா தான் இருக்கும்னு தான் எதுவும் சொல்லல. ஆறு மாசம் வேணாம். மூணு மாசம் கழிச்சு சேர்க்கலாம்" என்றான்.
பெருத்த புன்னகையோடு சரி என்றாள் ஆரபி. பேச்சின் நடுவே அவ்விடத்தை சுற்றிய ஆரபி கண்கள் தங்களுக்கு சற்று பின்னால் நிற்கும் வசந்த்தை பார்த்து,
"நான் தம்பிட்ட பேசிண்டு வந்தர்றேன்" என்றாள்.
பார்த்திபன் மனைவி கையை பிடித்து நிறுத்தி அமர வைத்தான், 'இரு' என்னும் பார்வையோடு.
புரியாமல் ஆரபி விழிக்க, பள்ளியை விட்டு வந்த மகள் காரின் கதவினை திறந்து பையை உள்ளே வைத்த வண்டு வந்த வேகத்தில் சித்தப்பனிடம் ஓடிவிட்டாள். அவனும் முகம் எல்லாம் புன்னகையோடு மகளை தூக்கி ஊர் சுற்ற சென்றுவிட்டான்.
"இது தான் தினமும் நடக்குதா?" பார்த்திபன் சிரிப்போடு ஆமாம் என்றான்.
"நீ பேச போனாலும் பூர்வி உன்ன பேச விட மாட்டா. வரட்டும் பேசலாம்" என்றான்.
ஆரபி திரும்பி கணவனை புரியாத கேள்வியோடு பார்க்க, "அவன்கிட்ட பேசணும் ஆராம்மா" என்றான் பெரிதான சிந்தனையோடு.
"எதுவும் பிரச்சனையா?"
ஆமாம் என தலை அசைத்தான், "வசந்த்த கட்டிக்க போற பொண்ணு என்ன பாக்க நம்ம ஆபீஸ் வந்திருந்துச்சு. இவன் கல்யாணத்தை நிறுத்த சொல்றான் போல"
ஆரபி அதிர்ந்து பார்த்திபனை பார்த்திபனிடம், "எதுக்கு? அதுவும் இவ்ளோ ஏற்பாடு பண்ணி?"
"தெரியல மாமி... வேணாம்னு சொல்றபோவே கண்ணெல்லாம் கலங்கிருக்கு. அவன் பண்ணது எல்லாம் சொல்லி, 'என்ன மாதிரி ஒருத்தன் யாருக்கும் வேணாம்'னு வந்துட்டான். அந்த பொண்ணு ஒரே அழுகை. இன்னும் அவங்க வீட்டுக்கு தெரியாது போல"
"பூஜா கூட நல்லா தானேன்னா இவா பேசுவா. ராத்திரி எல்லாம் கூட பேசிருக்காளே" ஆரபியால் இவனின் நடவடிக்கையை புரிந்துகொள்ளவே இயலவில்லை.
தலையை கோதிய பார்த்திபன், "சார் கில்டியா பீல் பன்றார்" என்றான் கோவமாக, "இடியட்" முணுமுணுப்புடன் சைட் மிரர் வழியாக சகோதரனுக்காக காத்திருந்தான்.
பத்து நிமிடங்கள் பிறகு வந்தவன் மகளை இறக்கிவிட்டு அவர்கள் வாகனம் கிளம்புவதாக வழக்கம் போல் காத்திருந்தான். மகள் சித்தப்பன் வாங்கி கொடுத்த சாக்லேட் ஒன்றை அன்னையிடம் நீட்டி பிரித்து கொடுக்க கூற,
"பூர்வி சித்தப்பாவை அப்பா வர சொன்னேன்னு சொல்லு" மீண்டும் அவளை இறக்கிவிட, குழந்தை தந்தை கூறியதை சித்தப்பனிடம் ஒப்பித்துவிட்டு காருக்கு ஓடி வந்துவிட்டாள்.
வசந்த் தயக்கத்தோடு அங்கேயே நிற்க எட்டி பார்த்த ஆரபி, "ஏறுங்கோ தம்பி" அழைக்கவும் தான் வந்து ஏறினான்.
"ஐ சிப்பா" குதித்து வந்த மகளோடு தான் அவனது பயணம் முழுதும். உணவகத்தினை அடைந்தவர்கள் தங்களுக்கு தேவையானதை கூற வசந்த் அமைதியை பார்த்து அவனுக்கு பிடித்ததை ஆரபியே கூறிவிட்டாள்.
முதலில் ஆரபி உண்டு முடிக்க, மற்ற இருவருக்கும் உணவு வந்தது. வசந்த் இப்பொழுதும் உண்ணாமல் இருக்க ஆரபி கூறி பார்த்துவிட்டாள் அசையவே இல்லை அந்த அழுத்தக்காரன்.
"பூர்வி சித்தப்பாக்கு ஊட்டி விடுடா"
மகளிடம் பார்த்திபன் பொறுப்பை ஒப்படைக்க, பெரியவனிடம் பிடித்த வீம்பை சிறியவளிடம் பிடிக்க முடியவில்லை. அந்த பிஞ்சு கரங்களால் கொஞ்சமும் மீதியை அவனே உண்டும் முடித்தான்.
"பூஜா கிட்ட பேசுனேளா தம்பி?"
அண்ணியை ஒரு முறை பார்த்தவன் தலை தாழ்த்திக்கொள்ள, "ஏன் ஆராம்மா சுத்தி வளைச்சு கேக்கணும், இந்த கல்யாணம் அவனுக்கு ஏன் புடிக்கலைனு கேளு" நேரண்டியாக பார்த்திபன் கேட்டுவிட்டான்.
பதில் கூற முடியவில்லை வசந்த்தால், இன்னும் ஈகோ அகலவில்லையே அதுவும் பார்த்திபனிடம் மலையளவு இருக்க தான் செய்தது.
அவனிடமே, 'உன்னை பழிவாங்க செய்த செயல் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை' என கூற முடியவில்லை.
வேகத்தில் ஆவேசத்தில் செய்த செயல்கள் யாவும் ஈட்டியாய் கண்ணை குத்த காத்திருக்கிறது. எவன் அழிந்தால், எவன் அகன்றால் நிம்மதி அங்கீகாரம் கிடைக்குமென செய்ய கூடாத துரோகத்தை செய்தேனோ அது எதுவும் நடக்கவில்லை.
சொந்த வீட்டிலே எதிரியான நிலை தான். உண்ண சென்றால் கூட அன்னை கொடுக்கும் பார்வையில் அடுத்த வாய் உணவு தான் உள்ளே இறங்குமா? நிம்மதி தரும் மெத்தை கூட அழுத்தி கழுத்தை நெரித்தது.
"வசந்த்..."
"நான் கிளம்புறேன் அண்ணி"
குழந்தையை அருகே அமர வைத்து எழ போனவனிடம், "ஒரு பொண்ணோட வாழ்க்கைனா உங்களுக்கு அவ்ளோ ஈஸியா போச்சா தம்பி?" எழுந்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவளை விட தான் வசந்துக்கு மனம் வருமா, குறுகிய காலமே ஆனாலும் பிடித்திருந்தது. குணம், பொறுமை, முதிர்ச்சி எல்லாமே பிடித்து, இத்தனை நாள் நீட்டியிருந்த வாலை கூட நறுக்கி போட்டான் அவளுக்காக.
"அது பாழாக கூடாதுனு தான் அண்ணி கல்யாணத்தை நிறுத்துறேன்" என்றான்.
"எப்படி தம்பி, ஊர் ஜனம் எல்லாத்தையும் கூடி நிச்சயம் பண்ணிண்டு பின்ன ஒண்ணுமே தெரியாதுன்னு ஈஸியா தப்பிச்சிடுவேள் அப்டி தானோ?"
"நான் யார்னு அவகிட்ட சொல்லுங்க, அவளே நிறுத்திடுவா" பார்த்திபன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறக்க துவங்கியது.
"முட்டாள்தனமான முடிவெடுத்து அது தான் சரின்னு சொல்றதே நோக்கு பழக்கமாகிடுச்சு வசந்த். ஆம்பளைங்களுக்கு இந்த சொசைட்டி ஈஸியா தப்பிக்க வழி காட்டிடும், ஆனா பொம்மனாட்டிகளுக்கு அப்டி இல்ல. பேசி பேசியே கொன்னுடுவா.
உம்மோட கில்ட்க்கு பலியாக போறது ஒரு பொண்ணு மட்டுமில்ல, அவாளோட மொத்த குடும்பமும் தான்" தலையை கையில் தாங்கி கண் மூடி மௌனித்திருந்தான் வசந்த்.
"வேணா அண்ணி. என்னால அரை குறையா எதுவும் செய்ய முடியல. கொஞ்சம் கஷ்டப்பட்டா நிம்மதியா காலம் எல்லாம் இருந்துடுவா"
ஆரபி பார்த்திபனை பார்க்க அவன் எந்நேரமும் வெடிக்கும் எரிமலையாய் காட்சி கொடுத்தான்.
கணவன் கையை பிடித்த ஆரபி, "பொறுமையா பேசுங்கோன்னா" என்றாள்.
"சரி ஆரபி அந்த பொண்ணுகிட்ட சொன்னதை அவனே ரெண்டு வீட்டுலையும் சொல்ல சொல்லிடு, காரணத்தோட"
இயலாமையில் முகம் சுருங்கிய வசந்த், "என்னால முடியல அண்ணி" என்றான் உடைந்து.
"அப்றம் என்ன இதுக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொன்னானாம். கல்யாணம் பேசுறப்போவே பிளான் படி எல்லாம் நடந்துட்டு தானே இருந்துச்சு, அப்போ இந்த கில்ட் மண்ணாங்கட்டி எல்லாம் எங்க போச்சாம்?"
"அண்ணி..."
"பேசுனது பேசுனபடியே நடந்து தான் ஆகும் ஆரபி. நான் சொன்னா தான அவன் கேக்க மாட்டான், நான் கிரி அண்ணாவை வர சொல்றேன்"
பிடித்திருந்த போர்க் கரண்டியை அழுத்தமாக பிடித்த வசந்த், "யார் சொன்னாலும் முடியாது அண்ணி. நான் பூஜாகிட்ட இன்னொரு தடவை பேசுறேன், என்ன மாதிரி ஒரு பொறுக்கிய அவ ஏத்துக்கவே மாட்டா..."
தனக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த சகோதரன் கையை வலிக்குமளவு கெட்டியாக பார்த்திபன் பிடித்திருந்தான், "என்ன நீ பண்ண பொறுக்கித்தனத்தை அவகிட்ட சொல்ல போறியா? அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. உன்ன பத்தி டாப் டு பாட்டம் அந்த பொண்ணுக்கு தெரியும்.
தெரிஞ்சும் ஏன் ஓகே சொன்னா தெரியுமா? பிகாஸ் ஷி இஸ் இன் லவ் வித் யூ. ஒரு மாசம் ரெண்டு மாசம் இல்ல. நீ டுவல்த், அவ டென்த் படிக்கிற நாள்ல இருந்து.
உனக்கு பொண்ணு பாக்கணும்னு அவ அப்பாகிட்ட பேசுனதை கேட்டு என்கிட்ட தயக்கமா வந்து பேசுனா. உன்கிட்டையே நேரடியா அப்ரோச் பண்ண சொன்னேன். பயம் நீ ரிஜெக்ட் பண்ணிடுவியோனு, முடியாதுனு சொல்லிட்டா.
அதுனால தான் இந்த கல்யாண ஏற்பாடு. நீ கூட்டிட்டு சுத்துன பொண்ணுக்கிட்டயே பேசலாம்னு நினைச்சப்போ பூஜா லவ் தான் உன் முன்னாடி அவளை நிறுத்த வச்சது.
இருந்தும் மறைக்க மனசு இல்லாம எல்லாம் சொன்னேன், அவளுக்கு உன் மேல நம்பிக்கை அவளோட லவ்வ நீ அக்சப்ட் பண்ணிக்குவனு. அதே நம்பிக்கையை உன் மேல நான் வச்சதால இந்த கல்யாணம் நடக்குது.
குற்றவுணர்ச்சி மட்ட மயிறுனு பேசுறதா இருந்தா தூக்கி எறிஞ்சிட்டு அந்த பொண்ணுக்கு மட்டுமாவது உண்மையா இரு. இல்லையா ஒரு பொண்ணோட நிறுத்த முடியாம தான் கல்யாணத்தை நிறுத்துறதா சொன்னா நானே இப்போவே எல்லாத்தையும் முடிச்சு விடுறேன்.
ஏன்னா, நம்பிக்கை உடையிறப்போ அது குடுக்குற வலிய எவ்ளோ பெரிய கொம்பனாலையும் தாங்கிக்க முடியாது" சகோதரனை உதறி தள்ளிய பார்த்திபன் எழுந்து உணவிற்கு பணத்தை கட்ட சென்றுவிட்டான்.
"அவன் சொல்றது..." ஆரபியிடம் நம்ப இயலாமல் கேட்ட வசந்த் மூச்சு சீரில்லாமல் போனது.
"அவா பொய் சொல்ல மாட்டா தம்பி" உன் முடிவே இறுதி என தம்பதிகள் அகன்றிருக்க வசந்த் கண் மூடி அமர்ந்துவிட்டான்.
வசந்த்திற்காக பார்த்திபன் வாகனத்தின் வெளியே நிற்க, உறங்கு குழந்தையோடு ஆரபி உள்ளே அமர்ந்திருந்தாள்.
"இவன்கிட்ட வரவே கூடாதுனு நினைச்சேன் ஆராம்மா, வர வச்சிட்டான்" என்றான் சலிப்பாக.
"அவா புரிஞ்சிப்பா ன்னா"
முகத்தை தூக்கினான், "கிழிச்சான்" என்று.
"பார்த்திபா..." ஓங்கி அருகே ஒலித்த வசந்தின் குரலில் பார்த்திபன் திரும்பும் முன் அவன் மேலே வசந்த் சாய்ந்திருக்க, இவர்களை ஒட்டி உரசி சென்றது அந்த இரு சர்க்கரை வாகனம்.
என்னவென சுதாரிக்கும் முன்பே சகோதரன் தோளில் சரிந்து விழுந்தான் வசந்த். பார்த்திபனுக்கு என்ன நடந்ததென்ன தெரியவில்லை ஆனால் ஆரபிக்கு தெளிவாக தெரிந்தது.
"வசந்த்..." என கத்தியேவிட்டாள் கணவனுக்கு வரவேண்டிய கத்தி குத்து கொழுந்தன் தாங்கிக்கொண்டதை பார்த்து.
பார்த்திபனும் தன்னுடைய சாட்டையில் சூடாக ஏதோ உணர, பதறி திரும்பி சகோதரனை ஏந்த, அவன் இடுப்பின் வழியாக வழிந்த குருதியானது உடையை நனைத்திருந்தது.
"டேய் வசந்த்..." அவன் உடலின் இடை கூடவே பார்த்திபனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.
சட்டையை கிழித்து ரத்தத்தை சோதித்தவன் மனைவியின் துப்பட்டாவை வாங்கி இறுக்கமாக கட்டிவிட, "சாரி பார்த்திபா" என்றான் வலியில் கண் மூடி கண்ணீரோடு.
சிறு கூட்டமே அவ்விடத்தில் கூடி எவரும் உதவ முன்வரவில்லை. சூழலை உன்னுடனே உணர்ந்த ஆரபி மகளை இருக்கையில் வைத்து அழுகையோடு கொழுந்தனை தூக்க முன்வர, வேகமாக வசந்த்தை வாகனத்தில் வைத்து மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
வழியெங்கும் வசந்த் கண்களை திறக்கவே இல்லை. பார்த்திபன் செல்லும் வழியிலே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்க மருத்துவமனை சென்று சேர்ந்த பின்னர் உடனே மருத்துவமனை பார்க்க துவங்கிவிட்டனர்.
சிகிச்சை நடந்துகொண்டு தான் இருந்தது எவருக்கும் தகவல் கூறவில்லை பார்த்திபன். தன்னுடைய தோளில் சாய்ந்து அழுகும் மனைவியை கூட சமாதானம் செய்ய முடியாத நிலையில் வீட்டினருக்கு எப்படி பதில் கூறுவான்?
சிகிச்சை கொடுக்கும் செவிலியர் ஒருவரை பிடித்து கேட்ட பொழுது, "கொஞ்சம் கிரிட்டிகல் தான் சார், ரத்தம் அதிகமா லாஸ் ஆகிடுச்சு. ரத்தம் ஏற்பாடு பண்ண வேண்டியது வரும். டாக்டர் வந்து பேசுவார்"
பேரிடியாக வந்த செய்தியை ஜீரணிக்கும் முன்பே மீண்டும் ஒரு அழைப்பு விஷ்ணுவிடமிருந்து, "நான் B1 ஸ்டேஷன்ல இருந்து கான்ஸ்டபில் பேசுறேன், இந்த பையன் உங்களுக்கு என்ன உறவு வேணும்?"
"என்னோட பிரன்ட்" என்னும் பொழுதே பார்த்திபனுக்கு இதயம் அதி விரைவாக துடிக்க, மனைவியின் விரல்க்ளை இறுக்கமாக பற்றிக்கொண்டான்.
அச்சத்தில் ஆரபி விழிகள் பார்த்திபன் விழியோடு அலைபாய்ந்தது.
"சரி இந்த பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. கை கால் எல்லாம் பயங்கரமான அடி. ஜி.ஹச் ஐ.சி.யூல தான் சேர்த்திருக்கோம். வேகமா அவன் குடும்பத்துக்கு தகவல் சொல்லி வர சொல்லிடு" கையிலிருந்த கைபேசி நழுவி தரையில் விழுந்து சிதறியது, பார்த்திபனின் நம்பிக்கையை போல.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro