Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 18




விஷ்ணு வீட்டில் இருந்தவேளை தான் வசந்த் பற்றிய தகவல் கைக்கு வந்தது. சினத்தோடு பதட்டமாய் இருந்தது, நண்பன் நம்புவானா என்கிற அச்சம் சிறிதாய் இருந்தாலும் ஒரு பக்கம் தைரியமும் வர வீட்டில் உணவை கூட உண்ணாமல் அவசரமாக கிளம்பியிருந்தான் விஷ்ணு.

"இவன் ஒருத்தன் ஏதாவது பேசணும்னு நாம நினைக்கிறப்போ தான் எங்கையாவது ஓடுவான்" விஷ்ணுவின் அன்னை சலிப்பாக கூறி எடுத்து வந்த உணவினை உள்ளே அடுக்கி வைத்துவிட்டார்.

வந்தான் விஷ்ணு பத்து மணிக்கு சோர்ந்த முகமாய். இவனுக்காக பெற்றோர் இருவருமே காத்திருந்தனர்.

"என்ன விஷ்ணு முகமே சரியில்லை" தந்தை கேட்க பார்த்திபன் வீட்டில் நடந்தவற்றை கூறினான்.

"நம்பவே முடியலடா" மகன் அருகே வந்து அமர்ந்துக்கொண்டார் அன்னை.

"நானும் அவனா இருக்க கூடாதுனு பயந்துட்டே தான்ம்மா போனேன். அவனை நீங்க பாக்கணும், அவ்ளோ தைரியமா 'ஆமா இப்ப அதுக்கு என்ன'னு கேக்குற மாதிரி நிக்கிறான். பார்த்திய நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு"

"ஆமாடா அனாதைனு சொல்றதை யாரால தான் தாங்கிக்க முடியும். எவ்ளோ பெரிய வார்த்தை அது" - விஷ்ணு அன்னை.

"எதுக்கு அவனுக்கு இவன் மேல இவ்ளோ வஞ்சகம்?" - விஷ்ணு தந்தை.

"தனக்கு உரிமைப்பட்டதை எல்லாம் பார்த்திபன்எடுத்துட்ட மாதிரி நினைக்கிறான். ஆனா பார்த்தி அவனுக்கு செஞ்சதை கிரி அண்ணா கூட செஞ்சிருக்க மாட்டார்"

"உண்மைகள் சில நேரம் முகத்துல அடிச்ச மாதிரி தான்டா நிதர்சனத்தை நமக்கு புரிய வைக்கும். இதுவும் ஒரு முன்னேற்றத்துக்கு ஆரம்பம்னு நினைச்சுக்க வேண்டியது தான்"

தந்தை கூறுவது சரி தான் ஆனால் மனத்தால் அடி வாங்கி அதிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு கடினமான காரியம்.

"சரி தான்பா, நான் அவன்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வர்றேன்" செல்ல போன மகனை பிடித்து நிறுத்தினார் அன்னை. "அவனை விடும்மா. ரொம்ப டயர்டா இருக்கான்"

"இல்லங்க நாள் தள்ளி போன வரை போதும். மாசமும் முடிய போகுது. கார்த்திகைல நாம நல்லது கெட்டது பண்ண மாட்டோம். இப்போவே பேசி முடிக்கலாம்"

கணவன் என்ன கூறியும் கேட்கும் நிலையில் அந்த தாய் இல்லை. அவனது எதிர்காலம் பற்றிய கவலை தான் அவருக்கு பெரிதாக நின்றது. பார்த்திபன் நல்ல மனிதன் தான், ஏன் இவரை கூட மிக மரியாதையாய் ஒரு அன்னை போல் தான் பாவித்து பேசுவான்.

அவனது நிலை கேட்டு மனமது மிகவும் துடிக்க தான் செய்தது. வருத்தப்படுவதை தாண்டி வேறு தன்னால் என்ன செய்திட முடியும் என்பது அவர் எண்ணம். எதை எல்லாம் பார்த்தால் மகன் வாழ்க்கை செயற்படுவது என்று?

"என்னமா?" நெற்றியை நீவி சலிப்பாக பார்த்தவனுக்கு இப்பொழுது எதுவும் பேசவே தோன்றவில்லை.

"இது பொண்ணோட போட்டோ. இது பயோ டாட்டா. இது அவங்க பேமிலி போட்டோ. குடும்பத்தை பாருடா, நல்ல சாந்தமான குடும்பம்"

ஒவ்வொன்றாக மகனின் கையில் வைத்தவர், "ஜாதகம் எல்லாம் அருமையா பொருந்திருக்கு. பொண்ணோட அம்மா அப்பா நம்ம வீட்டை பாத்தா அவங்களால எப்படி முடியாதுனு சொல்ல முடியும்னு தான் அப்பாவை அவங்கள சும்மா பேச வர சொல்ற மாதிரி சொன்னேன்.

வந்தவங்களுக்கு இனிமேலும் புடிக்காம போகுமா? முழு சந்தோஷத்தோட வீட்டுக்கு வர சொல்லிட்டாங்க. நாம போய் உறுதி பண்றது தான் மிச்சம்" "பொண்ணுக்கு புடிக்கணும் ம்மா"

"என் புள்ளைய எப்படிடா புடிக்காம போகும்? ராஜா மாதிரி இருக்க உன்ன புடிக்காம போகுமா? நாளைக்கு நல்ல நாள் தான். நீயே போய் பேசி அவ விருப்பத்தை தெரிஞ்சுக்கோ" என்றார் ஆர்வம் குறையாத குரலில்.

மகன் தந்தையை பார்க்க, "கேக்க மாட்டிக்கிறா விஷ்ணு உன் அம்மா. இனி நீயாச்சு அவளாச்சு"

மனைவியை கை காட்டிவிட்டு அமைதியாகிப்போனார். அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்க்க கூட விஷ்ணுவுக்கு மனம் வரவில்லை. எதுவும் பேசவில்லை சில நிமிடங்கள்.

கையிலிருந்த புகைப்படங்கள், காகிதங்கள் யாவையும் டீபாயில் வைத்தவன் பார்வை அதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. அவனுக்கு தேவையான நேரத்தை தாராளமாக கொடுத்த அன்னை எந்த காரணம் கொண்டும் அவ்விடத்தை விட்டு மட்டும் அசையவில்லை.

பெருமூச்சோடு எழுந்த விஷ்ணு அன்னை முன் மண்டியிட்டு அவள் கைகள் இரண்டையும் மென்மையாக பிடித்தான். மகனின் இந்த நடவடிக்கை வித்யாசமாக பட புரியாமல் கணவனை பார்க்க அவருக்கும் இவன் செயல் அதிசயம் தான்.

"நான் உங்ககிட்ட என் மனசுல இருக்கறதை மொத்தமா சொல்லிடுறேன், அப்றம் என் மனசை நீங்களே சொல்லுங்க" பீடிகை போட்டு பேசும் மகனை விசித்திர பிறவு போல் பார்த்தனர் பெற்றவர் இருவரும்.

"ஒரு நாள் ஆபீஸ்ல வேலை பாத்துட்டு இருந்தப்போ என்னை யாரோ பாத்துட்டே இருந்த மாதிரி பீல். கவனிச்சா ஒரு பொண்ணு. நான் பாக்கவும் சட்டுனு திரும்பிட்டா. எதேச்சையா பாத்தானு போனா, அப்றம் அடிக்கடி மாச கணக்கா அதே பார்வை, அதே பொண்ணு.

ஆனா அந்த பார்வைல மட்டும் ஆழம் கூடிட்டே போச்சு. ஆறு மாச குழந்தை முன்னாடி நாம சாப்பிடுறப்போ ஒரு ஆசை ஏக்கத்தோட நமக்கு அது கிடைச்சிடாதான்னு பாக்கும்ல, அதே ஆசை அந்த கண்ணுல.

நம்மளையே சுத்தி சுத்தி வர்ற ஒரு ஜீவன் மேல நம்மையும் மீறி நம்ம கவனம் போகும். என் கவனமும் போச்சு. போனதோடு நின்னுருந்தா கூட பரவால்லம்மா.

மனசுல சின்னதா ஒரு சலனம். பாத்து பாத்தே என் மனசை கரைச்சிட்டா. பணம், சொத்து, வீடு, கார் எதையும் பாக்காம எனக்கே எனக்காக மட்டுமே உருவான அன்பு அது. அதை முழுசா நான் ஏத்துக்க இருந்த நேரம் அந்த பொண்ணோட குடும்பம் பத்தி தெரிய வந்துச்சு.

என்ன பாத்தாலே அந்த கண்ணுல ஒரு மின்மினி பூச்சி வந்து ஒக்காந்துக்கும்ம்மா. அப்படிப்பட்ட கண்ண பாத்து என் ஆசைய மறைச்சு, அந்த பொண்ணோட மனசையும் உடைச்சு அவளோட லவ்வ தூக்கி எரிஞ்சிட்டேன்" பெற்றவர்களுக்கு மகன் கூறிய கதையின் பின் பாதியில் புரிந்துவிட்டது அவன் யாரை பற்றி பேசுகிறான் என்று.

"எல்லாத்தையும் மறந்துடலாம் என்ன ஒரு அட்ராக்ஷன் தானேனு மனசை மாத்தி, வீட்டுல நீங்க சொன்ன பொண்ணை பாக்க வந்து ஓகேவும் சொன்னேன். முழு மனசோட தான் சொன்னேன் இல்லனு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்.

சரினு சொன்னாலும் ஏதோ பாரம் ஒரு ஓரத்துல. பார்த்திய கானம்னு அவனை தேடி போனேன். அங்க இருந்தா அவ. என்ன முழுசா இழந்துட்டதா நினைச்சு அந்த கோவில்ல ரெண்டு மணி நேரமா அப்டி தேம்பி தேம்பி அழுதாப்பா. பாத்து மனசே விட்டு போச்சு.

ஒரு அன்பை புரிஞ்சுக்காம குடும்பம், கெளரவம், பழிவாங்குறதுன்னு எனக்கே என்ன நினைச்சு அருவருப்பு. நீங்க சொல்லுங்கபா, தாத்தா என்னைக்குமே பாட்டிக்கு உண்மையா இருந்தது இல்ல. அதுக்காக நீங்க அம்மாக்கு துரோகம் பண்ணது இல்லையே"

மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் மகனிடம் இல்லை என தலையை ஆட்டினார், "என்ன விஷ்ணு?" மகனின் வேதனை நிறைந்த கண்கள் பார்க்க அவருக்கு ஆற்றாமையாக இருந்தது.

"முடியல ப்பா. நான் எதை நினைச்சு ஒதுங்கி வந்தேனோ அதுவும் நடந்துச்சு. பசிக்கிதுன்னு வந்து நின்னவளை அசிங்கப்படுத்தி அன்னைக்கு நாள் முழுசும் சாப்பிடாம, வீட்டுக்கு பஸ் புடிச்சு போக கூட காசு இல்லாம தாலாட்டிடு நடந்தா ப்பா. முழுசா உடஞ்சிட்டேன். அவ கடைசியா எப்போ சிரிச்சானு கூட தெரியல"

அன்னையிடம் திரும்பியவன், "நீங்க சொன்னிங்களேம்மா வீடு, கடை, என்னை எல்லாம் பாத்து எப்படி ஓகே சொல்ல மாட்டாங்கனு. ஓகே தான். அது தானே ரியாலிட்டி.

அரேஞ்ட் மேரேஜ்னா அழகு வசதி பாக்குறது தான் இல்லங்கல. இருந்தாலும் ஏன்ம்மா என் மனசு எதையுமே எதிர்பாக்காம என்ன எனக்காகவே லவ் பண்ண பொண்ண தேடி போகுது?"

"விஷ்ணு..." அன்னைக்கு மகனின் வாழ்க்கையை தான் பாழாக்கி விட்டோமோ என்கிற பயம்.

"மனசே சரியில்லம்மா. நினைக்க கூடாதுனு தான் கஷ்டப்பட்டு நிக்கிறேன். ஆனா இன்னைக்கு பார்த்திக்கு பக்கபலமா ஆரோஹி துடிச்சிட்டு நிக்கிறப்போ, ஃபயர் ஆக்சிடென்ட் நடந்தப்போ என்னையே தவிப்பா பாத்துட்டு இருந்த அந்த கண்ண எதுக்கும்மா மனசு நினைக்கிது?

பணம், அழகெல்லாம் பாத்து வர்ற பொண்ணு வேணாம், என்ன எனக்காக நேசிக்கிற ஒரு பொண்ணு மட்டும் தான் வேணும்னு உங்ககிட்ட கத்தி சண்டை போட தோணுதும்மா.

ஆனா முடியல. ஒரே ஒரு நாள் அவளை பாத்தே வெறுப்பை காட்டுன இந்த குடும்பத்துல வந்து ஒவ்வொரு நாளும் அவ துடிக்கிறத பாக்க வேணாம்னு அமைதியா நிக்கிறேன்"

மகன் பேசியதில் நெஞ்சே அடைத்தது அவருக்கு. தான் செய்த செயலின் வீரியம் அன்று விஷ்ணு உணவை உண்ணாமல் தவறை குத்திக்காட்டியதிலே புரிந்து போனது.

ஆனாலும் இவன் கூறியது போல் தான் அனாயாவின் பார்வையை உணர்ந்தே மகனுக்கு பெண் தேடும் படலத்தை தீவிரமாக்கினார். அதுவும் மகன் மேல் உள்ள அதீத நம்பிக்கையில். இன்று இவன் பேசவும் தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது.

"சரி இப்போ சொல்லுங்க இந்த கல்யாணத்துக்கு நான் ஓகே சொல்லவா வேணாமா?"

"விஷ்ணு..."

கண்ணெல்லாம் கலங்கியது அன்னைக்கு, "என்னப்பா இது, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா. நல்ல குடும்பம்"

"சரிம்மா கல்யாணம் தானே பண்ணனும், பண்ணிக்கிறேன்" என்றான் பெரிதாக தலையை ஆட்டி சிரித்த முகத்தோடு.

அவன் தலையசைப்பில் மகிழ முடியவில்லை. பெரிதாக பேசினானே, அவளை பிடித்தது, மனம் தேடுகிறது என என்னென்னவோ.

"அந்த பொண்ணு குடும்பம்..."

அவர் பேசுவதை தடுத்தவன், "எந்த விளக்கமும் வேணாம். இதெல்லாம் யோசிச்சு தான் நானே வேணாம் சொல்றேன். என்ன இப்டியே விட்டா ஒரு வருஷம் ரெண்டு வருஷம் பீல் பண்ணுவா. இதுவே இங்க வந்தா காலத்துக்கும் அழுகணும்"

அவன் உதிர்க்கும் சிரிப்பில் ஒளிந்திருக்கும் வருத்தத்தை அன்னை உணராமல் போவாரா? மகன் மேல் கோவம், "உன் அம்மா என்ன அவ்ளோ கொடுமைக்காரியாடா?"

"அப்டி சொல்ல வரலம்மா..."

"நீ எப்டியும் சொல்ல வேணாம். ரொம்ப கஷ்டம்டா அப்போ நமக்கு. உனக்கு ஸ்கூல்க்கு பீஸ் கட்டணும், வீட்டுல சாப்பாடு அரிசி கூட இல்ல. இதெல்லாம் ரொம்ப கம்மி. வறுமை ஒரு பக்கம் வாட்டுச்சுனா அவமானம் இன்னொரு பக்கம். அதெல்லாம் சேர்த்து அந்த பொண்ணுகிட்ட காட்டிட்டேன்"

"பட்டுனு அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துட்டா ஆனா, அரை மணி நேரம் அதை சொல்லி அழுதாடா உன் அம்மா" கணவன் கூற இப்பொழுதும் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தது அவருக்கு.

உடனே துடைத்த மகனின் கையை பற்றியவர், "ஒருத்தர் பண்ண தப்புக்கு இன்னொருத்தர் தண்டிக்கிறது ரொம்ப பெரிய தப்பு விஷ்ணு. போ. அந்த பொண்ணு தானே வேணும். கூட்டிட்டுவா"

"ம்மா..."

"தவிக்காத தம்பி. எக்காரணம் கொண்டும் சொல்லி காட்ட மாட்டேன். முழு மனசோட தான் சொல்றேன்" கணவனை பார்த்தார், "ஏங்க..."

"வீட்டுக்காகவே ஓடுனவன், அவன் சந்தோசத்தை வாய திறந்து முதல் தடவ கேக்குறான். சந்தோசமா முன்ன நின்னு நடத்தி வைக்கலாம்" வேகமாக எழுந்து வந்து தந்தையை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் விஷ்ணு.

இப்பொழுதே சென்று அனாயாவை பார்த்து அந்த முகத்தில் சிரிப்பை வரவைக்க வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டான்.

முதலில் நண்பனிடம் பேச வேண்டும். மறுப்பு கூறுபவன் இல்லை பார்த்திபன். ஆனாலும் தாமோதரன் பேத்தி என்பதை தாண்டி நண்பனிடம் இவ்விடயத்தை கூறி எவ்வழியில் அனாயாவை அணுகலாம் என யோசிக்க வேண்டும்.

*****

வீட்டின் வரவேற்பறையில் பார்த்திபன் ஏதோ முக்கியமான வேலையை வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொண்டிருக்க ஆரபி கணவன் அருகில். ஸ்ரீனி மருமகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

தாத்தா வீட்டிற்கு வந்த பூர்விக்கு மகிழ்ச்சியோடு தெம்பும் கூடி விட்டது போல. வழக்கத்தை விட இன்று அதிக ஆட்டம். ஸ்ரீனியே ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் ஓய்ந்து அமர்ந்துவிட்டான்.

"மாமா வா... வா" மாமனின் கை புடித்து குட்டி பெண் இழுக்க, "இந்த பூரி ஓடிரு. போ உன் அப்பா அங்க தானே இருக்கார்" எழுந்து வந்துவிடுவான் ஆனாலும் பார்த்திபனை சற்று மீட்க வேண்டும்.

அது அவன் மகளால் மட்டுமே முடியும் என்பதால் மட்டுமே குழந்தையை திசை திருப்பி விட்டான். அதுவும் சரியாக வேலை செய்ய பார்த்திபனை இழுத்து விளையாட, கேள்வி கேட்க என பொழுது ஓடியது.

இடையே பார்த்திபனுக்கு அழைப்பு வர, வெளியே பேச சென்றான். அந்நேரம் வீட்டையே தன்னுடைய பிஞ்சு பாதங்கள் பதித்து சுற்றி வந்தவள் ஆரபி அசந்த நேரம் பார்த்திபன் பார்த்துக்கொண்டிருந்த காகிதங்களில் ஒன்றை எடுத்து கிழித்துவிட்டாள்.

இதை எதிர்பார்க்காத ஆரபி, கணவனுக்கு முக்கியமான கோப்போ என பயத்தில் மகளை காலில் ஓங்கி அடித்துவிட்டாள். அன்னை அடிப்பது புதிதில்லை என்றாலும் எப்பொழுதும் நடக்கும் நாடகம் துவங்கியது.

வீலென தன்னுடைய குட்டி தொண்டையை திறந்து அவ்வீடே கேட்கும் வண்ணம் அழத் துவங்கினாள்.

மகளின் நாடகம் புரிந்த ஆரபி மகளின் உதட்டில் பட்டும் படாமல் ஒரு அடி போட்டு, "ஷ்ஷ். என்ன சத்தம் வாய மூடு" அதட்டினாள்.

வாயை ஒரு நொடி மூடியவள் கண்ணிலிருந்து கண்ணீர் நிற்க மாட்டாமல் பெருகி வந்தது. "என்னடிம்மா இது பழக்கம்? எத்தனை தடவை சொல்லிருக்கேன் எதையும் கிழிக்க கூடாதுனு"

"எதுக்குடி புள்ளைய மிரட்டிண்டு இருக்க?" பேத்தியை அழுகை சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்தவர் எழுந்து வந்துவிட்டார் க்ரிஷ்ணாம்பாள்.

"ம்மா நீர் குறுக்க உம்ம பேத்திக்கு சப்போர்ட் பண்ண வராதேள்"

அன்னையை அதட்டி மகளிடம் திரும்ப அதற்குள் பூர்வி, "ம்மா பாத்திய திட்ட கூதாது" அழுகையோடு அன்னை செய்யும் தவிறினை சுட்டிக்காட்டும் மகளின் அழகில் ஆரபியே சொக்கி தான் போனாள்.

ஆனால் விட மனம்வரவில்லை, சேட்டை அதிகமாகிவிட்டது இந்த குட்டி மகளுக்கு.

அதட்டி வைத்தே தீர வேண்டும் என, "சாரிம்மா" அன்னையிடம் மன்னிப்பு கேட்டு மகளை ஆரபி பார்க்க இப்பொழுதும் அழுகையோடு தலையை ஆட்டி அன்னை செய்தது சரி என அங்கீகரித்துவிட்டாள் பார்த்திபன் மகள்.

"சமத்து" க்ரிஷ்ணாம்பாள் பேத்தியை தூக்க வர தடுத்துவிட்டாள் ஆரபி.

"அவா தப்பு பண்ணிண்டா ம்மா. நீ சொல்லு பூர்வி. உன் தோப்பனார் இப்போ வந்து இந்த பேப்பர் எதுக்கு கிழிச்சனு கேப்பார். நான் என்ன சொல்லட்டும்?"

"நானு சும்மா..."

"என்னடிமா சும்மா, அது இம்பார்ட்டண்ட் பேப்பரா இருந்தா என்ன பண்றது?"

ஆரபி குரலை உயர்த்த மீண்டும் சத்தமிட்டு அழுத குழந்தை, "இரு, அப்பாட்ட சொத்துவேன்"

"என்ன சொல்லுவ?"

"நீ அதிச்சல"

"சொல்லு. நானும் சொல்றேன். பாருங்கோ உங்க மக உங்க பேப்பர கிழிச்சு போட்டுண்டானு"

"வேதா..." வேகமாக இரு பக்கமும் தலையை ஆட்டி.

"அப்போ நீ கிழிக்கலாமா?"

"ம்ம்ம் கிழிக்கலாம்" என்றாள் குழந்தை அடங்காமல். அவள் பேசுவதை கேட்டு ஸ்ரீனி க்ரிஷ்ணாம்பாள் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி சிரித்தனர் குழந்தைக்கு தெரியாமல்.

மீண்டும் அடி வைத்தாள், "மாமா..." மாமனிடம் அழுகையோடு குழந்தை தாவ பார்க்க, விடவே இல்லை ஆரபி.

"தப்பு பண்ணிண்டு இது என்ன பிடிவாதம் பூர்வி? நீ குட் கேர்ளா இல்ல பேட் கேர்ளா?"

"குத் கேர்ள்"

"ம்ம்ம் குட் கேர்ள்ஸ் யாரும் இப்டி பண்ண மாட்டா. அம்மா சொல்றதை கேட்டுண்டு சமத்தா இருப்பா. சொல்லு இனிமேல் கிழிப்பியா, இதைனு இல்ல. எதையும் கிழிக்க கூடாது"

ஆரபி கூறியதற்கு உடனே சம்மதம் கூறாமல் முரண்டு பிடித்து செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று மட்டும் கூறவில்லை, வேகமாக, "தாரி" என்றாள்.

"சாரி ஓகேடி. இனி செய்ய மாட்டேன்னு சொல்லு"

ஆரபி கேட்க மீண்டும் மகளிடமிருந்து, "தாரி" வர இதை எல்லாம் தூரம் நின்று கேட்டுக்கொண்டிருந்த பார்த்திபன் வாய் விட்டு சத்தமாக சிரித்துவிட்டான்.

சிறியவளும் தந்தை குரல் கேட்டு எழுந்து வேகமாக அவனிடம் ஓடி அவன் காலைக்கட்டி அழ, மனமுருகி மகளை கைகளில் ஏந்திக்கொண்டான்.

"நீங்க சிரிக்காதேள், இது தான் அவளை கெடுக்குறதே"

கண் மூடி மகளின் குட்டி தலை மேல் பார்த்திபன் சில நொடிகள் சாய, தந்தைக்கு அன்னையாய் அவன் தலையில் தட்டிக்கொடுத்தாள் மகள். மனம் நிறைந்த சிரிப்பு பல மணி நேரங்கள் பிறகு.

மகளோடு சோபாவில் வந்து பார்த்திபன் அமர, தலை உயர்த்தி தகப்பனை பார்த்து கண்ணீரை இரண்டு கைகள் கொண்டு கண்ணோடு சேர்த்து துடைக்க, கன்னம் கண்கள் மூக்கு எல்லாம் சிவந்து போயிருந்தது குழந்தைக்கு. உருகிப்போனான் தந்தையானவன்.

மெல்லிய சிரிப்போடு மகள் நெற்றி முட்டி, "அந்த பேப்பர் நீ கிழிச்சலடா, அது அப்பா ரொம்ப நேரம் கஷ்டப்பட்டு வேலை பாத்தது. இப்போ திரும்பவும் பர்ஸ்ட்ல இருந்து அப்பா வேலை பாக்கணும். பாருங்க அப்பாக்கு கை, முதுகு, கழுத்து எல்லாம் வலிக்கும். அப்பா பாவம் தானேடா?"

தலையை ஆட்டியவளுக்கு அவன் கூறிய வேலை, கழுத்து எதுவும் புரியவில்லை, தான் செய்ததில் தந்தைக்கு வலிக்கும் என்பது மட்டும் புரிந்துபோக மீண்டும் அழுகை வெடிக்கும் நிலை தான்.

"தாரி ப்பா. இதிமேல் பண்ண மாத்தே"

"ஏண்டி இவ்ளோ நேரம் நான் இதை தானே சொல்ல சொல்லின்றுக்கேன்" ஆரபி கணவனுக்கு போட்டியாக வர,

"சொல்ல வேண்டிய விதத்துல குழந்தைகளுக்கு புரிய வைக்கணும்டிம்மா" என்றார் க்ரிஷ்ணாம்பாள் மாப்பிள்ளைக்கு பரிந்து.

பார்த்திபன் மகள் கண்களை மிருதுவாக துடைத்து, "அம்மா சொன்னா கேக்கணும்டா. ஓகேவா?"

சமத்தாக தலையை ஆட்டி, "ஓகே" என்றவள் ஆரபியிடம், "மாமி தாரி" என்றாள் தந்தை போல் சமாதானம் செய்யும் கெஞ்சும் குரலில்.

அதிக நேரம் பெண்ணுக்கும் கோவத்தில் இருப்பது போல் நடிக்க முடியவில்லை. மகள் கன்னம் பிடித்து முத்தம் வைக்க, அந்த குட்டி குடும்பத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை க்ரிஷ்ணாம்பாளுக்கு.

"இப்டி அழகா இருந்தா ஊர் கண்ணு எல்லாம் இவா மூணு பேர் மேல தானோ படும்" புலம்பியவாறே மீண்டும் படுக்கைக்குள் சென்றுவிட்டார்.

குழந்தை மாமனிடம் ஐக்கியமாக, பார்த்திபன் ஆரபியிடம், "ஈவினிங் ஏழு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் மாமி. ரெடி ஆகிடு" என்றான்.

ஆரபி மறந்தே போயிருந்தால் இந்த பிரச்சனையில். இந்நிலையிலும் பார்த்திபன் ஒரு சிறந்த கணவன் என காட்ட, இவனுக்கு இத்தனை மன கஷ்டம் வந்திருக்க கூடாதென்று தான் மனம் கதறியது.

பூர்வியை அன்னையிடம் ஒப்படைத்து இருவரும் மருத்துவமனை சென்றனர்.

ஆரபியை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் இதய துடிப்பை இருவருக்கும் கேட்குமாறு வைக்க பார்த்திபன் முகத்தில் மென்மையான சிரிப்பு.

மனதிலும் நிம்மதி, குழந்தையின் ஆரோக்கியத்தை மனைவியின் மனநிலையை பேணி காப்பதில் தான் அவனது கவனம் மொத்தமும் இருந்தது. இப்பொழுது இரண்டும் சரியாக இருக்க நிம்மதியோடு பயணித்தான்.

"ஆராமா" கணவனின் தயக்கமாக அழைப்பில் கியரை பிடித்திருந்த அவன் கையை பற்றி அழுத்தம் கொடுத்து, "என்ன?" கேட்டாள்.

அன்னை வீடு வந்ததிலிருந்து பெரும் அமைதி பார்த்திபனிடம். அவள் பேச வந்தாலுமே வேறு பேச்சை மாற்றிடுவான்.

"நீ தப்பா நினைக்க கூடாது ஆரபி. பாப்பாவை ப்ளே ஸ்கூல் சேர்க்கலாம்னு பேசுனோமே. போன வாரம் ஒரு ஸ்கூல் கூட நம்ம வீடு பக்கம் பாத்தேன். இப்போ வேற ஸ்கூல் பாக்கணும். உனக்கு எந்த ஏரியா ஓகேனு சொல்லு. அங்கையே ஸ்கூல் அப்றம் ஒரு வீடும் பாத்துடலாம்"

"இது நீங்களே சொல்லனாலும் நான் சொல்லிருப்பன்னா" மனைவியின் பதிலில் பெரிய ஆசுவாசம் பார்த்திபனுக்கு.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் என்பது அவனை யோசிக்க வைத்துக்கொண்டே உள்ளது.

"அப்போ மாமா வீடு பக்கத்துல பாக்கலாமா, உனக்கும் துணையா இருபாங்கல்ல?" எதுவும் பேசாமல் சரி என்றாள்.

நினைத்ததை விட வேகமாக வந்த வேலை முடிய வரும் வழியில் இருந்த பெறிய மிட்டாய் கடை ஒன்றில் மனைவியோடு இறங்கினான். அந்த கடையை பார்த்ததுமே ஆரோஹிக்கு சிரிப்பு இதழில்.

முதல் கர்ப காலத்தில் இவள் அடிக்கடி பிடிவாதம் பிடித்து வந்து நிற்கும் இடம் இது. இந்த கடையில் தான் புளிப்பான மிட்டாய்கள் பல ரங்கங்களில் எப்பொழுதும் கிடைக்கும்.

"ஏன்னா எவ்ளோ வேணாலும் வாங்கிக்கவா?"

"கடையே வாங்கிடலாமா மாமி?" பார்த்திபனின் சிரிப்பில் மேலும் சிரித்தவள் தலையை ஆட்டினாள். இந்த பார்வைக்கும் சிரிப்பிற்கு எதையும் செய்ய தோன்றும்.

"இவ்ளோ லவ் கண்ணுல காட்டாதடி மாமி" வெட்க சிரிப்போடு கடைக்குள் நுழைந்தவள் பிடித்த மிட்டாய் அனைத்தையும் வாங்கிவிட்டு, "கமல் அக்காக்கு இதுனா ரொம்ப இஷ்டம்னா, ஆசையா சாப்பிடுவா"

ஒரு நொடி யோசித்தவன், "சரி வாங்கு. துருவ்க்கும் சிலது வாங்கு" என்றான்.

அவன் கூறியதிலே ஏதோ திட்டமிட்டு தான் செய்கிறான் என புரிந்து விறுவிறுவென ஆசையாக வாங்கினாள். அவள் அத்தைக்கு, ஏன் வசந்த் விரும்பி உண்ணும் சால்டட் பிஸ்தா, மசால் முந்திரி முதற்கொண்டு வாங்கி வந்தாள்.

அனைத்தையும் ஓரமாக நின்று பார்த்த பார்த்திபன் சிறிதும் முகத்தை தூக்காமல் இன்முகத்தோடு தான் பணத்தை செலுத்தி வந்தான். ஆரபி எதிர் பார்த்தது போல் தான் பார்த்திபன் தந்தை வீட்டிற்கு செல்லாமல் தெருவின் துவக்கத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கிரிதரன் வர, அவனோடு அவன் அன்னையும். அன்னையை பார்த்ததும் பார்த்திபன் பெருமூச்சோடு வாகனத்திலிருந்து இறங்க, உடன் ஆரபியும் வந்தாள்.

வித்யா மகனை பார்த்ததும் பெரிதும் கவலைகொண்டார் என்றால், ஆரபியை பார்த்து அழுகை பெருகியது. மகனை விட்டு மருமகளிடம் தான் முதலில் சென்றார்.

"சொல்லவே இல்லையே ம்மா, இப்படிப்பட்ட நிலமைலயா வீட்டை விட்டு போகணும்"

"அத்தமா, எதுக்கு இப்போ கண் கலங்குறேள்? நேக்கு ஒன்னுமில்ல. இருங்கோ" வாகனத்திற்கு சென்றவள் தனக்கு கொடுத்த மருத்துவ அறிக்கையை அவரிடம் ஆவலாக காட்டினாள், "பாருங்கோ. உங்க பேரப்புள்ள ரொம்ப ஆரோக்யமா இருக்கா. இப்போ தான் டாக்டர்கிட்ட காட்டிண்டு வந்தோம்"

"நீங்க எப்பவும் உங்க மனசு போல நல்லா தான்ம்மா இருப்பிங்க. எங்களுக்கு தான் குற்றவுணர்வுல ஒரு வாய் சாப்பாடு கூட உள்ள இறங்க மாட்டிக்கிது" என்றான் கிரிதரன் மனந்தங்களாய்.

"ண்ணா நாங்க இங்க தானே இருக்கோம். ஒரு வார்த்தை கூப்பிட்டா அஞ்சு நிமிசத்துல வந்துடுவோம்"

"எப்படி இப்டி யாரோ மாதிரி தெருவுல நின்னு பாக்குற மாதிரியா?" குரல் கரகாரத்த்து அன்னைக்கு. சகோதரி மகன் தான்.

ஆனால் அந்த எண்ணமெல்லாம் என்றோ மறைந்து போனது. பார்த்திபன் சொந்த மகனாகவே மாறி போனான். சண்டை, சச்சரவு, ஊதாரித்தனம், எதற்கும் அலட்டிக்கொள்ளாத மகன் கையில் பெரிய தொகையை அன்று கொடுக்க மனம் இல்லை தான். அதற்காக மகன் இல்லை என்று ஆகிவிடுமா.

"ஆமா பார்த்திபா அப்பா நீ இங்க நிக்கிறதா சொல்லவும் ஒரு மாதிரி ஆகி அமைதியா ரூம் உள்ள போய்ட்டார். வசந்த் கூட வீட்ல இல்லடா. அவன் இருந்தாலுமே என்ன, அது உன் வீடு தானே. வா போகலாம்" சகோதரன் கை பிடித்து இழுக்க பார்த்திபன் நகரவில்லை.

"கடைக்கு போனோம் ண்ணா. அண்ணிக்கு புடிக்கும்னு வாங்கிட்டு வந்தோம்" சகோதரன் கையில் தான் வாங்கி வந்த பையை கொடுத்தான்.

"துருவ்க்கு சாக்லேட் இருக்கு அத்தான். மொத்தமா குடுக்காதேள், ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். அப்றம் நட்ஸ்..." என்றவள் பேச முடியாமல் தடுமாற கிரிதரன் புரிந்தது போல் தலை அசைத்தது நிம்மதியாக இருந்தது.

அதனை கையில் வாங்கிய கிரிக்கு தான் மூச்சடைக்கும் உணர்வு. நேற்று வரை நினைத்தால் பார்க்கும் தூரத்தில் இருந்த தம்பி இப்பொழுது எங்கோ இருக்கிறான்.

அந்நேரம் அவர்களை கடந்து செல்லவிருந்த வசந்தின் வாகனம் பார்த்திபன் நிற்பதை பார்த்து உடனே நிற்க, இவர்கள் அனைவரும் கூட வசந்தத்தை பார்த்துவிட்டனர்.

வசந்தோ நின்ற நொடியில் கண்களை அவ்விடத்தை சுற்றி சுழலவிட்டான்.  கண் நிறைக்க தேடிய விஷயம் கிடைக்காமல் போக பெருகிய ஏமாற்றத்தோடு நிற்க, "என்னடா என் பையன் தெரு முக்குல கூட நிக்க கூடாதுனு சொல்ல வந்தியா?"

"ம்மா..." பார்த்திபன் தடுக்க வர, "நீ சும்மா இரு பார்த்திபா. ஒத்த புள்ளையோட நிறுத்திருக்கணும் நாங்க" அதற்கு மேல் அங்கு வசந்தால் நிற்க முடியவில்லை.

"இவன்லாம் ஒரு ஆளுன்னு இவன் பேச்சை கேட்டு நீ வீட்டை விட்டு வந்திருக்க கூடாது பார்த்திபா"

"ண்ணா இப்டி எல்லாம் பேசி நான் பண்ண அதே தப்ப நீயும் பண்ணாத"

"எது ப்பா தப்பு? அவனுக்கு நல்லது நினைச்சதா?"

"இல்ல ம்மா, அவனை குறிச்சு இடைப்போட வேணாம்னு சொல்றேன்"

"ஆமா சாதாரணமா நினைச்சு தப்பு தான் பண்ணிட்டேன்" என்றார் மகன் செய்த செயலை நினைவு கூர்ந்து.

ஆரபிக்கு அவர்கள் கோவம் புரிந்து நிற்க, பார்த்திபனுக்கு தான் செய்த தவறை இன்னும் வீட்டினர் செய்து அவனது எதிர்காலத்தை கெடுத்துவிடுவார்களோ என்கிற பயம்.

"ஆயிரம் தப்பு பண்ணிருந்தாலும் அவனை இப்டி பேசியிருக்க கூடாது. அவன் இப்டி ஆன மொத காரணமே நாம தான். ஒன்னு நம்பிக்கை வச்சிருக்கணும். இல்ல ஒரு பொறுப்பை குடுத்து அவனை தனியா நிக்க விட்ருக்கனும்.

ஒன்னும் தெரியாது, எதுவும் வராதுன்னு சொல்லி அவனை வில்லன் ஆகிட்டோம். அவனுக்கு சப்போர்ட் பண்னுங்க இல்லையா எதுவும் பேசாம அமைதியா போய்டுங்க"

கோவத்தை பொறுமையாக அழுத்தி அன்னையிடம் கூறிவிட்டு, "நான் வர்றேன் ண்ணா. அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கோ. வர்றேன் ம்மா" என்றவன் ஆரபியை பார்க்க அவன் வீட்டினரிடம் விடைபெற்று இருவரும் வீட்டிற்கு நகர்ந்தனர்.

மனைவியை வீட்டின் வாசலிலே இறக்கிவிட்டவன் உள்ளே வாராதிருப்பதில், "வாங்கோ உள்ள" அழைத்தாள்.

"இல்ல ஆராம்மா கொஞ்சம் வேலை இருக்கு" என்றான்.

"பொய் சொல்றேள் பார்த்தி..." கணவன் முகத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பினாள்.

"நைட் குடவுன்ல படுக்க போறேன் மாமி" என்றான்.

"எதுக்கு?"

"அங்க கொஞ்சம் வேலை இருக்குடி. இந்த வாரத்துல ஒரு கல்யாணம். எல்லாமே புதுசா போடுறோம். முன்ன இருந்து பாக்கணும்" அவன் வேலை என கூறவும் எதுவும் மறுக்க முடியவில்லை. அனுமதி கொடுத்துவிட்டாள்.

மறுநாள் காலை பதினோரு மணிக்கு தான் வீட்டிற்கு வந்தான்.

வந்தவன் வீடு பார்ப்பதை பற்றி கூற, "மன்னிச்சிடுங்கோ மாப்பிள்ளை. ஆத்துல பொண்ணு கர்பமா இருக்கப்போ இடம் மாற கூடாது. பால் காய்ச்சி போறது எல்லாம் வழக்கம் இல்ல" என்றார் க்ரிஷ்ணாம்பாள்.

அவர் கூறியதை அமைதியாக ஏற்றுக்கொண்டான். ஆனால் அந்த அமைதியின் விளைவு அடுத்த ஒரு வாரமும் மதியத்திற்கு மேல் குடவுன் தான் இல்லமானது.

ஆரபி அன்றும் கணவனுக்கு அழைக்க, "வேலைடா" என்றான்.

சலித்து போனது ஆரபிக்கு, "சாப்பாடு ஸ்ரீனிகிட்ட குடுத்து விடுறேன்" கூறியது போலவே உணவை ஸ்ரீனியிடம் கொடுக்க, "நான் கொண்டு போறேன்ம்மா"

மகளிடம் இருந்த பையை தான் வாங்கி எடுத்து சென்றார் ராஜ்கோபால். குடவுனுக்கு செல்ல, அங்கு பார்த்திபனோடு விஷ்ணுவும் இருந்தான். பார்த்திபன் மாமனாரை சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

"நீங்க எதுக்கு மாமா வந்திங்க, கால் பண்ணிருந்தா நானே வந்திருப்பேனே"

நீ வந்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பாய் என்பது அவரது சிரிப்பே கூற, "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க" அவனுக்கென்ன எப்பொழுதும் ஆரபி வீட்டில் இலை தான்.

இப்பொழுதும் அதே மரியாதை இரவு உணவை கொடுத்து விடும் பொழுதும். மாப்பிள்ளைக்கென ஒரு இலை மட்டுமே இருக்க விஷ்ணுவுக்கு என்ன செய்வதென தெரியாமல் உணவை பரிமாற்ற தயங்கி நின்றார் ராஜ்கோபால்.

"நான் வீட்டுக்கு போய் சாப்ட்டுக்குவேன் ப்பா" என்றான் விஷ்ணு அவர் நிலை புரிந்து.

"ஒன்னும் வேணாம். இப்டி வா" நாற்காலியை சற்று நகர்த்தி நண்பனுக்கு அருகே இடம் கொடுத்தான் பார்த்திபன்.

பசியில் இருந்தவன் வீம்பு செய்ய வில்லை, உடனே மற்றொரு நாற்காலி எடுத்து போட்டு அமர்ந்துவிட்டான். ராஜ்கோபால் பரிமாற அந்த சிறிய இலையையும் பொருட்படுத்தாமல் இருவரும் உண்ணத் துவங்க தான் வாங்கி வந்த மற்றொரு பையை பிரித்து அதை எடுத்து வைக்க பார்த்திபன் விஷ்ணு இருவரும் அதிர்ந்து போயினர்.

சிக்கன் கெபாப் துண்டுகள் அந்த சிறிய இலையை இரண்டு பக்கமும் சரி விகிதமாய் நிறைத்திருந்தது.

"சாப்பிடுங்க ப்பா. நீங்க இதெல்லாம் விரும்பி சாப்பிடுவீங்கனு பாப்பா சொல்லிட்டே இருக்கும். ரொம்ப நாள் ஆகிருக்குமேனு நான் தான் வர்ற வழில வாங்கிட்டு வந்தேன்" என்றார் முகத்தில் சிறு அசூசை கூட காட்டாமல்.

முதலில் தயங்கினாலும் பார்த்திபனுக்கு மட்டுமே கொடுத்த அந்த உணவு இருவருக்கும் ராஜ்கோபாலின் உபசரிப்பில் இருவருக்கும் வயிறு நிறைந்து தான் போனது.

மெல்ல மூவரும் பேசிக்கொண்டே குடவுனை சுற்றி வர நெருப்பு பற்றியிருந்ததற்கான ஒரு அடையாளமும் அங்கில்லாமல் உடனே மாற்றியிருந்தார்கள் நண்பர்கள். கடையில் அதிகம் பொருட்கள் தான் இல்லை.

"நம்ம ஹோட்டல் ஆரமிச்சு முப்பத்தி ரெண்டு வருஷம் மேல இருக்கும் மாப்பிள்ளை. அம்மா சமையல் மேல ஒரு தனி பிரியம். அதே பிரியம் அதை கத்துகிட்டு கடை வக்கிறேன்னு வந்தப்போ தோப்பனார் சரியான திட்டு.

உங்க பணம் ஒன்னும் வேணாம்னு ரெண்டு வருஷம் வேலை செஞ்சு இங்க வந்து சின்னதா ஒரு கடை போட்டேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கவும் நல்ல ஓட்டம். வீட்டு ருசி, சுத்த சைவம்னு அந்த ஏரியால இருந்த மத்த கடைய விட நல்ல பேர் வந்துச்சு.

விரிவு படுத்தலாம்னு நினைச்சப்போ ரெண்டு ஹோட்டல் கடைகாரங்க வந்து மிரட்டிட்டு போனாங்க இங்க கடை போட கூடாதுனு. கோவில், நெய்வேத்தியம், ஆச்சாரம்னு வளந்தவனுக்கு பயம். போலீஸ்க்கு போக கூட தைரியம் இல்ல.

கடைய ஒடனே காலிபண்ணிட்டு வேற பக்கம் ஓடுனேன். அங்கையும் அதே மாதிரி பிரச்சனை வந்துச்சு. அப்போ தான் புத்திக்கு உரைச்சுச்சு, 'இங்க தொழில் பண்றதுக்கு நல்லவன் தேவையில்லை புத்தி கூர்மையானவன் தான் தேவைனு' அடுத்து நான் போய் நின்னது ரவுடிகிட்ட" நண்பர்கள் இருவராலும் அவர் கூறியதை நம்பவே இயலவில்லை.

"போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கலாம்ப்பா?" விஷ்ணு கேட்ட கேள்வியில் கைகளை பின்னே கட்டி சிரித்தார்.

"போலீஸ்கிட்ட நின்னா என் பிரச்சனை முடிய ஒரு வாரமோ ஒரு மாசமோ ஆகும். என்ன மிரட்டுனவனும் நான் மிரட்டலனு கூலா பதில் சொல்லுவான். எதுக்கு? அதான் எங்க போனா வேலை வேகமா முடியுமோ அங்க போனேன்.

வேலையும் முடிஞ்சது எங்க இருந்து என்ன துரத்தி அடிச்சானுங்களோ அதே பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இப்போ வர கெட்டியா கால் ஊனி நிக்கிறேன்"

"நீங்க என்ன சொல்ல வரீங்கனு புரியிது மாமா, தாமோதரன் சாதாரண ஆள் இல்ல"

"நீங்களும் இல்லையே மாப்பிள்ளை. அந்த ஆளுக்கு இவ்ளோ பதிலடி குடுத்து திடமா நிக்கிறிங்களே"

விஷ்ணு, "அதுக்குன்னு அவனை மாதிரி ஆக முடியாதே"

ராஜ்கோபால், "இது தான் தப்பு. பிஸ்னஸ்ல கண்ணாடியா இருக்கனும். அவன் கொஞ்சம் கொளுத்தி போட்ருக்கான், நீங்க மொத்தமா கொளுத்திடுங்க"

முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாது எதார்த்தமாக பழிவெறியை தூண்டிவிடும் ராஜ்கோபாலின் தோற்றம் பார்த்திபனை புருவம் உயர்த்த செய்தது.

"பெரிய தாதா மாதிரி பேசுறிங்களே ப்பா"

"சூழ்நிலை நம்மள சில நேரம் இப்டி தான் தம்பி மாத்திவிடும். எங்கலாம் தப்பு நடக்குதோ அங்கலாம் கடவுள் வந்து அவதரிப்பார்னு காத்துட்டு இருந்தோம்னா நம்ம வாழ்க்கை முடிஞ்சிடும்.

மனசு தான் கடவுள். நம்ம புத்தி தான் ஆயுதம். துணிஞ்சு நில்லுங்க. தப்புலயே ஊறுனவன் அவன், சட்டப்படி ஒன்னும் செய்ய மாட்டான். நமக்கு அது ரொம்ப ஈஸியா போகும்"

பார்த்திபன் கண்ணை மூடி தலையை அசைத்துக்கொண்டான், ஆச்சாரம் பார்க்கும் தன்னுடைய மாமனார் எதையும் செய் என கூறுவதை இப்பொழுதும் கனவாக தான் இருக்குமோ என யோசிக்கிறான்.

"நிதானமா யோசிச்சு பண்ணுங்க. ஆனா இனி அவன் உங்க வழிக்கே வர கூடாது அப்டி இருக்கனும் உங்க செய்கை" என்றவர், "அப்போ நான் கிளம்புறேன் தம்பி, வர்றேன் மாப்பிள்ளை"

அவர் நடக்க, "ஒரு நிமிஷம்" விஷ்ணுவிடம் குடவுனை ஒப்படைத்து தன்னுடைய காரையும் அங்கேயே நிறுத்தி மாமனாரிடம் அவரது வண்டி சாவியை கேட்டான்.

"உங்க வண்டி மாப்பிள்ளை?"

"இருக்கட்டும், நாளைக்கு ஸ்ரீனி கூட வந்துடுறேன், சாவி தாங்க" கை நீட்டி சாவி கெட்டவனிடம் வேகமாக கொடுத்தார். அவருக்கு கொள்ளை ஆனந்தம் மருமகன் தன்னோடு வீட்டிற்கு வருவதே.

இரவை கிழித்து அமைதியான பயணம். "நம்ம வீட்டுல இருக்குறது உங்களுக்கு தர்மசங்கடமா தான் இருக்கும், புரியிது. ஆனா இப்டி வெளிய தங்குறது வீட்டுல எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும்" தலையை மட்டுமே அசைத்தான்.

"பணம்..." கொஞ்சம் தன்னுடைய பேச்சை கேட்கிறான் என அவரால் உடனே எதையும் விட முடியவில்லை. கோவம் காட்டிவிட்டால்? அதனாலே தயங்கி நின்றார். பார்த்திபனிடமிருந்து சிறிய சிரிப்பு சத்தம் வந்தது.

"தேவைப்படுத்து தான்"

"நான் ஒரு ஐடியா சொல்றேன் தப்பா எடுத்துக்க வேணாம். தேவையான பணத்தை இப்போ தர்றேன். அதுக்கு வட்டி எதுவும் தர வேணாம். ஒரு ஷேர் ஹோல்டர் மாதிரி நினைச்சு அந்த பணத்தை மட்டும் தாங்க. உங்களுக்கு எப்போ பணம் வசதிபடுதோ அப்போ குடுத்துட்டு ஷேர் பணத்தையும் கூட நிறுத்திடுங்க" என்றார்.

பார்த்திபனிடம் பலமான யோசனை, "விஷ்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன்"

அவன் மறுக்காததே ஏற்றுக்கொண்டதற்கு சமம் என புரிந்தவர் நிம்மதியாக அன்று உறக்கத்தை தழுவினார்.

அவர் கொடுத்த வார்த்தைகளில் துணிவுபெற்று மாப்பிள்ளையும் அவன் நண்பனும் தெளிந்துவிடுவார்கள் என நினைத்தவருக்கு அந்த நேரம் தெரியவில்லை எப்பேர்ப்பட்ட தீ பந்தத்தை தான் ஏற்றி வந்து வந்துள்ளோம் என்று.

தீ நல்லவர் தீயவர் பாகுபாடு பார்க்காமல் தன்னை தீண்டுபவர் யவராய் இருந்தாலும் உள்ளே இழுத்துக்கொள்ளும் என்பதை அந்த மனிதரும் மறந்துவிட்டார் போல்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro