நாணல் - 17
வித்யாவால் நம்பவே முடியவில்லை. மகன் மேல் எப்பேர்ப்பட்ட குற்றத்தை இவன் சுமத்திவிட்டான் என்கிற கோவம்.
சகோதரனாக வேண்டாம் ஒரு சாதாரண மனிதனாக சக மனிதனுக்கு இப்பேற்பட்ட குற்றத்தையா தன் மகன் இழைத்துவிடுவான் என்கிற ஆதங்கம் அவருக்கு.
"யார் வீட்டுக்குள்ள வந்து யாரைடா சொல்ற?" இத்தனை நாள் மகனாய் விஷ்ணுவை அவர் நடத்தாவிடினும் அவன் மேல் அவருக்கு எப்பொழுதும் பிரியம் தான்.
அவன் வந்தால் கவனிப்பு எப்பொழுதும் அதிகம் தான். இன்று மகனை பேசவும் விஷ்ணு எல்லாம் அவருக்கு தெருவில் நடக்கும் ஒரு சாதாரண மனிதன் தான்.
"உங்க வீட்டுல வச்சு நீங்க பெத்து வளர்த்துருக்கீங்களே அந்த நாதாரிய தான் சொல்றேன். இங்க பேச கூடாதுனா ரோடுல வச்சு பேசவும் நான் தயார்"
பெரியவர், பார்த்திபன் அன்னை என்னும் முறையெல்லாம் அவர் பேசிய வார்த்தைக்கு பின்பு அவனுக்கும் காணாமல் தான் போனது. காரமாகவே பேசினான் விஷ்ணுவும்.
"என்ன சொல்றான் பாருங்க நம்ம பையன, அவன் எப்படிங்க இப்டி மனசாட்சி இல்லாம பண்ணுவான்? பணம் குடுக்கலனு சொல்லவும் என் பையன் மேல எப்படி பழி போடுறான்" ஆதங்கமாய் அழுதுகொண்டே கணவனை நாடினார்.
வித்யாவை போல் ராஜேந்திரனால் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, அவருக்கு தான் மகன் மேல் கண் மூடித்தனமாக நம்பிக்கை இருக்கலாம், அதற்காக மற்றொரு மகனை விட்டுவிட முடியாதே.
"பணத்துக்காக இவ்ளோ தரம் தாழ்ந்து போகுற ஈன புத்தி எனக்கில்லை" உறுமினான் விஷ்ணு.
"விஷ்ணு அவ ஏதோ வருத்தத்துல பேசுறா, நீ ஏதோ தப்பா புரிஞ்சிருக்குற விஷ்ணு. எங்க வசந்த் அப்டி எல்லாம் செய்ய மாட்டான்" என்றார் ராஜேந்திரன்.
"சரி இத பாருங்க" ஒரு இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு பின்புறம் வசந்த் ஒருவரிடம் பணம் கொடுக்கும் புகைப்படம் அது.
"இது உங்க பையன் தானே, இவர் உங்க முன்னாடி தான அன்னைக்கு குடவுனை பாக்க வந்தார். உங்க கிட்டையும் தானே ஆக்சிடன்ட் பத்தி விசாரிச்சார். இப்ப சொல்லுங்க உங்க பையன் அப்டி எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்னு" விஷ்ணு கேட்கும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் கொடுக்க முடியவில்லை.
"ஏன்? என் பையன் அவன் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ண முயற்சி பண்ணிருக்கலாமே"
வித்யா பேசியதை கேட்டு கை தட்டி சிரித்தான் விஷ்ணு, "எவ்ளோ நம்பிக்கை... எவ்ளோ நம்பிக்கை மகன் மேல"
"அத்தை உங்க பையன் இது வர உங்களுக்கே ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்ல, இதுல பார்த்திபன் தம்பிக்கு செய்வார்னு மட்டும் எப்படி நம்புறீங்க?"
வித்யா திரும்பி பெரிய மருமகளை முறைக்க, "நான் வசந்த் தம்பி மேல தப்பு சொல்ல வரல அத்தை, நீங்க சொன்னது நடக்க வாய்பில்லனு தான் சொன்னேன்" இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் என கிரியும் மனைவியை பார்த்தான்.
"விஷ்ணு அண்ணா நல்லா விசாரிச்சேளா? இன்னொரு தடவ..." ஆரபி தயங்கி இழுக்க அழுத்தமாக தலையை அசைத்தான்.
விஷ்ணு , "வெளி ஆள்னாவே ரொம்ப விசாரிப்பேன். பார்த்திபன் தம்பினு வர்றப்போ..."
"நான் அவன் தம்பி இல்ல" வீடே அதிர்ந்தது வசந்தின் அதீத ஒலியில்.
வாங்கிய அடி, விழுந்த பழிச்சொல் எதுவும் நினைவில் இல்லை, "என்ன சும்மா சும்மா பார்த்திபன் தம்பி பார்த்திபன் தம்பி? ஏன் எனக்குனு பேர் இருக்குல்ல"
ராஜேந்திரன், "என்ன பேசுனா நீ எதை பத்திடா கவலைப்படுற?"
"இல்ல இல்ல பேசட்டும் விடுங்க, அவன் அம்மா கேக்கணும்ல" நிதானமாக தலையை அசைத்து ராஜேந்திரனிடம் அமைதி காக்க கூறிய விஷ்ணு வித்யாவிடம்,
"கேளுங்க உங்க மகன் பார்த்திக்கு எப்படி உதவுறான்னு அவனே சொல்லுவான்" என்றான்.
அன்னைக்கோ மகன் பெயருக்கு கூட தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியில் இறங்கவில்லையே என்கிற வருத்தம் மேலேறியது.
தடுமாற்றத்தோடு வசந்த் அருகே வந்தவர், சிவந்திருந்த அவன் கன்னம் தாங்கி, "தம்பி என்னடா இதெல்லாம், உன் பக்கம் தப்பில்லன்னு சொல்லு ப்பா" குரல் கரகரத்தது அவருக்கு.
அவர் கை பிடித்து விலக போனவன் கையை வேகமாக பிடித்துக்கொண்டார், பயம் நெஞ்சமெல்லாம் சூழ்ந்தது அன்னைக்கு.
"வசந்த்... அம்மாக்கு பயமா இருக்குடா, நான் உன்ன அப்டி வளர்க்கலடா" கண்ணீர் அருவியாய் கன்னம் தொட்டது.
ராஜேந்திரனோ மனம் தாளாமல் மகன் மேல் உருவான கோவத்தை அவனை கன்னம் பழுக்கும் வரை அடித்து குறைக்க முயன்றார். அந்தோ பரிதாபம் அவனது சிலையான உருவமும் இறுக்கமான முகமும் அவரை அதிகம் வேதனை படுத்த தான் செய்தது.
"என்னடா இது, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? உன் அம்மாவோட நம்பிக்கையை இப்டி கொன்னு நிக்கிறியேடா" இரும்பாக நின்ற மகனை அடித்தும் பயனில்லை என உணர்ந்தவர் தளர்ந்து அவனது சட்டையை பிடித்தார்.
"அவனுக்கு எப்டிடா இதெல்லாம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு? குடும்பத்தை கைக்குள்ள வச்சு தாங்குறவன்டா அவன்"
"அவன் அவன் அவன்... எல்லாத்துக்கும் உங்களுக்கு அவன் தானா? அப்போ நான் யாரு தான் இந்த வீட்டுல?"
"இந்த வீட்டோட உதவாக்கரை. ஒன்னத்துக்கும் லாய்க்கி இல்லாதவன்" ஆவேசமாக மகனின் சட்டையை உதறி தள்ளினார். ஆத்திரம், சொல்லில் அடங்காத ஆத்திரம் அவன் மேல்.
"ஆமா நீங்க பெத்த புள்ள நான் உங்களுக்கு ஒன்னத்துக்கும் ஆகாதவன், உதவாக்கரை. ஆனா எங்க இருந்தோ வந்த அநாதை இவன் இந்த வீட்டுக்கு எல்லாமா?" ஆவேசமாக தந்தையை பார்த்து கத்தினான்.
வசந்தின் வார்த்தைகள் வீட்டினரை மொத்தமாய் ஸ்தம்பித்துவிட்டது. நொடிகள் நகராமல் இருக்க காதில் விழுந்த தகவல், இங்கு நடக்கும் யாவும் ஒரு கெட்ட சொப்பனமாக மாறி போகாதா என்கிற ஆசையோடு தலையை சிலுப்ப, இல்லை எதுவும் மாறவில்லை.
அதே இடம்.
அதே அதிர்ச்சி மொத்த குடும்பத்தினருக்கும்.
வீட்டில் உள்ள இரண்டு மருமகளுக்கும் இது புது செய்தி. பார்த்திபனும் ஆரபியிடம் இதுபற்றி கூறியிருக்கவில்லை, கிரிதரனும் கமலவல்லியிடம் இதனை சார்ந்து இதுவரை வாய் திறந்ததே இல்லை.
சொல்லப்போனால் கிரி இதனை மறந்தே போயிருந்தான். பார்த்திபன் அவன் சகோதரன் தான், அதை தாண்டி கடந்த காலம் எதுவும் அவனுக்கு தேவைப்படவில்லை. வெறுத்து ஒதுக்கும் போல் செயலும் பார்த்திபனிடம் இருந்ததில்லை.
"பார்த்தி..." நா தழுதழுக்க பயம் ஊடுருவிய இதயத்தோடு கணவனை வேகமாக ஆரபி திரும்பி பார்க்க இறுகிய தாடையோடு கண்ணை சில நொடிகள் மூடி திறந்தவன் கண்களில் அப்பட்டமாக வலியின் சாயல்.
விஷ்ணுவுக்கு சொல்லில் அடங்காத ஆத்திரம் நண்பனை பற்றி அவன் கூறிய உண்மையில். விஷ்ணுவுக்கு இந்த உண்மை பல வருடங்கள் முன்பே தெரியும், அன்று கேட்டத்தோடு நிறுத்திக்கொண்டான், இன்று வரை அதை பற்றி பேச்சு வரவேயில்லை இருவருக்கும்.
அதனாலே வீட்டில் அவனுக்கு இதை பற்றி எந்த நிகழ்வும் இல்லை என எண்ணியிருக்க அதெல்லாம் பொய்த்துப்போனது வசந்தின் செயலில்.
வசந்தின் கன்னம் பழுக்கும் அளவிற்கு முகம் சிவந்து போனது வித்யா கொடுத்த அரையில். மகனை விடாமல் அடித்தவருக்கு இவனிடம் இப்படியொரு இரட்டை வேடத்தை எதிர்பார்க்கவில்லை.
அவருக்கு பார்த்திபனின் முகத்தை பார்த்தே தெரிந்தது குடும்பத்தில் விரிசல் விழப்போவது என்று.
"என்னன்னுடா உன்ன பெத்தேன், இப்டி மனசாட்சியே இல்லாம இருக்கியேடா" அவனை அடித்து அவர் தான் ஓய்ந்து போனார்.
"பார்த்திபன் உங்க தம்பி இல்லையா?" கமலவல்லி கிரிதரனிடம் கிசுகிசுக்க,
"அவன் எப்பவும் என் தம்பி தான்டி" என்றான் பற்களை கடித்து.
பார்த்திபனின் தாய் தந்தையும், வித்யா ராஜேந்திரனின் உடன் பிறந்த சகோதரி சகோதரர்கள். அண்ணன் தம்பி இருவரும் அக்கா தங்கையை திருமணம் செய்திருந்தனர்.
பார்த்திபன் தந்தை தாய் இருவரும் மின்சார துறையில் பணிபுரிபவர்கள் ஆதலால் பார்த்திபன் வாசம் ராஜேந்திரன் இல்லத்தில் தான். பெற்றோர்கள் வீடு வந்த பிறகு தான் இவனும் இல்லம் செல்வான். அதுவரை சகோதரர்கள் இருவரோடும் ஒரே சேட்டை தான்.
அப்படியான ஒரு நாளில் பார்த்திபன் தாய் தந்தை ஒரு கட்டிடத்தை மேற்பார்வை சென்ற சமயம் அந்த பழைய கட்டிடமானது இடிந்து விழ இருவருமே சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.
அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்துவிட, பெற்றவர்களுக்கு இறுதி காரியங்கள் கூட பார்த்திபன் கையாலே நிகழ்ந்தது. எட்டு வயது சிறுவன், ஓரளவிற்கு அனைத்தும் தெரியும், தாய் தந்தை இனி வரவே போவதில்லை என்பது அந்த பிஞ்சு மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தத்தளித்தான் அவர்கள் அன்பிற்காக ஏங்கி தவித்து. ஒரே பிள்ளை, செல்ல பிள்ளையாக வளர்ந்தவன் உலகம் வித்யா ராஜேந்திரன் இல்லத்தோடு இணைந்தது.
பணி நேரத்தில் உயிர் இழந்ததால் அவர்களது வேலை ராஜேந்திரன் வித்யா கைக்கு மாறியது. வெளியில் குறும்போடு சுற்றுபவன் உள்ளத்தில் முதிர்ந்து போனான்.
பெரியப்பா பெரியம்மா என்கிற அழைப்பு அப்பா அம்மாவாக மாற பல மாதங்கள் ஆகியது. குறும்பு செய்தாலும் வித்யா ராஜேந்திரனுக்கு எந்த விதமான தொந்தரவும் அவனால் ஏற்படவில்லை.
அப்படி தான் அவன் இன்று வரை நினைத்தது. அப்படி இல்லை என வசந்தின் சொற்கள் இன்று நிரூபித்தது.
ராஜேந்திரன், வித்யா, கிரி என ஆளுக்கு ஒரு பக்கம் அவனை வார்த்தைகளால் தாக்க எதுவும் பார்த்திபனுக்கு கேட்கவில்லை. நடப்பதை எல்லாம் அமைதியாக மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
"எப்ப பாரு பார்த்திபன் பார்த்திபன் தான். என்னைக்கு அவன் வந்தானோ அன்னைக்கு என் நிம்மதி மொத்தமா போச்சு" வசந்தின் வார்த்தையை செவி கொடுத்து கேட்டான் பார்த்திபன்.
"அவன் உன்ன என்னடா பண்ணான்? இத்தனைக்கும் அவனை ஸ்பெஷலா கவனிச்சா அவன் மனசு பாதிக்கும்னு உங்கள போல தானேடா வளர்த்தோம், அவனுக்குனு நாங்க எதுவுமே தனியா பண்ணது இல்லையேடா" ஆதங்கமாக மகனை பார்த்தார் அன்னை.
"அதுல கூட அவனுக்காக தான். இது தான் என்னால ஏத்துக்கவே முடியல, அவனுக்காக செய்யலனு சொல்லி சொல்லியே அவனுக்காக தான் எல்லாம் செஞ்சீங்க. உங்க டைம், பாசம், கோவம் எல்லாத்துல இருந்தும் அவனுக்கும் பங்கு போச்சு.
அவன் வேலைக்கு போகாதப்பவும் அவனை தான் தலைல தூக்கி வச்சு கொண்டாடுனீங்க. அவன் நல்ல இடத்துக்கு வரவும் கொண்டாடுறிங்க. எல்லாமே அவனுக்கு தான் தெரியும். ஏன் நான் இப்போ வேலைக்கு தானே போறேன். என்கிட்டே உங்க எல்.ஐ.சி பணத்தை வச்சு என்ன செய்யலாம்னு கேக்க வேண்டியது தானே?"
"நீ சின்ன பையன் வசந்த், உனக்கு இன்னும் வெளி உலகம் தெரியாது" கிரி கூறியதை முகத்தை சுளித்து நிராகரித்தான்.
"சின்ன பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி வக்கிரீங்களா? உங்கள பொறுத்த வரை அவன் தான் எல்லாம். அவனுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். தெரிஞ்சவன் அதோட நிறுத்திக்க வேண்டியது தானே, எதுக்கு என் விசயத்துல வர்றான்?"
"அவன் என்னைக்கும் எதையும் போர்ஸ் பண்ணதில்ல வசந்த், நாம என்ன செய்றதுன்னு குழம்பி நின்னப்போ ஐடியா குடுப்பான்" அன்னையானவருக்கு பிள்ளைகளிடையே மனக்கசப்பு வந்துவிட கூடாது, அதற்காக மகனிடம் இயன்றமட்டும் தன்மையாக எடுத்துரைக்க முயன்றார்.
"எப்டி? நான் என்ன படிக்கிறது, என்ன வேலை பாக்குறது, யாரை கல்யாணம் பண்ணிக்கிறதுனு எல்லாத்துக்கும் குழம்பி நிக்கிறப்போ உங்க மகன்... சாரி உங்க தங்கச்சி மகன் எனக்கு ஐடியா குடுத்தானா?" நக்கலாக அன்னையிடம் கேட்டான்.
"அடிச்சேன்னு வை, காது கிழிஞ்சிடும்" வசந்த்தை நோக்கி நடந்த விஷ்ணு,
"நீ என்ன பெரிய உத்தமன் மாதிரி உன்ன காட்டிட்டு இருக்க, ஒவ்வொரு வருஷம் ஒவ்வொரு பொண்ணு கூட ஊர் சுத்துன பொறுக்கி தானேடா நீ? அதை மாத்தி உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு குடுக்க நினைச்சான் இவன்" இன்னும் இவனிடம் என்ன என்ன உள்ளதோ என பதறியது மனம், வளர்ப்பில் தவறினேனோ என வித்யா துவண்டு அமர்ந்துவிட்டார்.
"என் வாழ்க்கையை பத்தி கவலைப்பட இவன் யாரு?"
விஷ்ணு, "உன்னோட நிச்சயத்துக்கு லிஸ்ட் போட்டியே சாப்பாட்டுல இருந்து டெக்கரேஷன் வரை, அப்போ தெரியலையா இவன் உனக்கு ஆகாதவன்னு?
அன்னைக்கு நீ கேட்டனு ரெண்டு லட்சத்துக்கு புது சரக்கு இறக்குனான். ஒரு பைசா நீ குடுத்துருப்பியா, இல்ல அவனும் தான் கேட்டானா? அவனை பாத்து இப்டி மனசாட்சியே இல்லாம பேசுறியேடா"
"என்னமோ அவன் பெருசா தியாகம் பண்ண மாதிரி பேசுறீங்க, அவன்கிட்ட கேளுங்க" என்றவன் பார்த்திபனிடம்,
"பேர் தான் என்னோட பங்க்ஷன் ஆனா அங்கையும் உன்னோட பிஸ்னஸ்க்கு விளம்பரம் பண்ணி ஆதாயம் தேடுனவன் தானேடா நீ. நான் அன்னைக்கு போட்ட டிரஸ், டை, ஷூனு எல்லாமே இவன் விருப்பம். என்னோட வாழ்க்கையை இவன் வாழ்ந்தா அப்போ நான் என்ன மயித்துக்கு இருக்கனும்?"
பார்த்திபன் நிச்சயம் வசந்த் கூறிய வகையில் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்திருக்க மாட்டான் என வீட்டினர் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் புரிந்தாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என நிற்பவனிடம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது வீண் என மொத்தமும் அமைதியாகிவிட்டனர்.
"இவன் இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு உடம்பெல்லாம் எரியிது. அவன் பிஸ்னஸ் சக்ஸஸா போறதால தானே இவனை நீங்க எல்லாரும் தலைல தூக்கி வச்சு ஆடுறிங்க அப்போ அதை கெடுத்து விடணும்னு வெறியே வந்துச்சு.
அதுக்காக மட்டும் தான் இவன் எனக்கு குடுத்த வேலைக்கு போய் பணம் சம்பாதிச்சு அதை வச்சு இவனை அடிக்க நினைச்சேன். முதல் தடவ இவன் அசிங்கப்பட்டு கோர்ட் கேஸ்னு அலையணும்னு தான் அந்த மாதிரி நடிக்க ஆள உள்ள சேர்த்தேன். நடக்கல. சொதப்பிட்டானுங்க"
கையை தனக்கு அருகில் இருந்த இருக்கையில் ஓங்கி குத்த அது கிட்டத்தட்ட உடைந்தே போனது.
"அப்றம் லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேற ஏதோ ஒரு மகராசனால வர அதை வச்சு அவனை சாய்க்க பாத்தேன். எதுக்காக மொத்த சம்பளத்தையும் சேர்த்து வச்சேனோ அது யூஸ் ஆச்சு. யூஸ் பண்ணிக்கிட்டேன்" என்றான் சிறிதும் வருத்தம் கொள்ளாமல்.
ஆரபிக்கு அழுகையாக வந்தது, கோவம் உருமாறி அழுகையாக மாறிய வேதனை அது.
"ரொம்ப மனசை கஷ்டப்படுத்திடேள் தம்பி" வசந்த் அவளை எதிர்கொள்ள விரும்பாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.
"உமக்குள்ள இப்டி எல்லாம் இவா மேல வெஞ்சினம் இருக்கும்னு நேக்கு கனவுல கூட தோணல. சொல்லி காட்டுறேன்னு தப்பா எடுத்துக்காதேள், அவா உம்ம என்னைக்கும் டாமினேட் பண்ணனும் நினைச்சதே இல்ல. நிச்சயத்துக்கு நாங்க ரெண்டு பேரும் அஞ்சு ஆறு கடை ஏறி இறங்கிருப்போம்.
அவாளுக்கு அவா தம்பி எல்லாத்துலயும் பெஸ்ட்டா நிக்கனும்னு ஆசை. அதான் அத்தனை கடையையும் அலசிண்டா. பாத்து பாத்து நோக்கு எது செட் ஆகும்னு தேடி எடுத்தது நீர் போர்ஸ் பண்ணி திணிக்கிறதா சொன்ன டை, ஷூ எல்லாம்"
"ஆரபி வா" பார்த்திபன் வேகமாக அவன் அறையை நோக்கி சென்றுவிட கணவன் சொல்லை பின்பற்றி இவளால் செல்ல முடியவில்லை.
"உங்க பங்ஷன் வச்சு அவா விளம்பரம் படுத்தி ஆதாயம் தேடுறாளா?" கசப்பாக சிரித்தாள்,
"ரொம்ப தப்பு தம்பி. அவாளோட மனசு புரியாமலே பேசுறேள். நீர் நாலஞ்சு படத்தை காட்டி இது இது வேணும்னு சொல்லிண்டு போய்ட்டேள். நானும் பார்த்தியும் அன்னைக்கு நைட் எல்லாம் செத்த நேரம் கூட தலையை சாய்க்கல.
நான் டிசைன் பண்ண கூடவே இருந்து, 'வசந்த் இப்டி சொன்னான், இங்க இது வேணும்னு சொன்னான்' னு உங்க சித்தி பையன் தான் என்ன கரெக்ட் பண்ணின்டே இருந்தா.
விடிஞ்சும் விடியாம தேவையான எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாங்கி வந்தா. பொட்டு தூக்கமில்லை, ஆனா அவாளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. முகம் சுளிக்காம சந்தோசமா செஞ்சா.
அதை கூட அவாளோட ஆதாயத்துக்காகனு மனசாட்சியே இல்லாம பேசிட்டேள். நேக்கு அவாளோட பாஸ்ட் பத்தி தெரியாது, நீர் எந்த மனநிலைல அவாளோட பழகுனேள் கூட தெரியல. ஆனா என்னோட பார்த்தி மனசு சுத்தம்"
கண்ணீர் கன்னத்தை நனைக்க பசிக்காக தன்னுடைய காலை சுருண்டும் மகளை கூட மறந்து போனாள் அந்த தாய்.
"என்னோட தோப்பனார் எங்களுக்கு கல்யாணம் ஆக முன்ன ஏதோ இவாளா சொல்லிண்டா, அதை மனசுல வச்சு என் ஆத்துல போட்ட நகையை கூட பார்த்தி வாங்கல. அவ்ளோ ரோசம் அவாளுக்கு. இப்போ கூட என் தோப்பனார் பணத்துக்கு ஏற்பாடு பண்ணவானு கேட்டுண்டு தான் இருந்தார்.
ஒரே வார்த்தைல மாட்டேன்னு சொல்லிட்டா அத்தம்மா, இந்த வீட்டு ஆட்கள் மேல இருக்க நம்பிக்கைல. ஒரு தடவை ஏமாத்துன அவர் குடும்பம் இன்னொரு தடவை அதை செய்ய வாய்ப்பில்லன்னு உறுதியா இருந்தார். காரணம் என்ன அவா அவாளை இந்த ஆத்து பிள்ளையா நினைச்சிண்டார்.
அப்டி இல்ல நீ இந்த ஆத்து பிள்ளை இல்லனு இவ்ளோ ஹார்ஷா புரிய வச்சிருக்க வேண்டாம். உங்க புள்ளைக்குனா இந்நேரம் கொடுத்திருப்பேள் தானே? ரொம்ப நொந்து பொய்ட்டா பார்த்தி. எப்படி அவாளை இதுல இருந்து மீண்டு வர போறான்னு நேக்கு தெரியல"
கோவம் அவளுக்கு. அத்தை, மாமா, கிரி, வசந்த், கமலவல்லி என அனைவர் மீதும் கோவம். உதவி என கேட்டு நிற்பவனை இப்படிப்பட்ட ஒரு சூழலிலா தள்ளிவிடுவார்கள்?
ஏன் அவன் உடன் பிறந்த சகோதரன் வசந்த் திருமணத்திற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற பொழுது அவன் மனம் நோக கூடாதென தன்னுடைய பணத்தை எடுத்து கொடுக்கிறேன் என கூறியவன் அல்லவா தன் கணவன்?
அந்த ஒரு வார்த்தைக்காக, அந்த கள்ளமில்லா பாசத்திற்காக ஒரு முறை சிந்தித்திருக்கலாமே என்கிற வேதனை அவளுக்கு. கணவன் வெறுத்தானோ இல்லையோ பெண்ணவள் வெறுத்து போனாள்.
"என்ன ஆரபி இப்டி எல்லாம் பேசுற, அவன் ஏதோ புத்தி பேதலிச்சவன் என்ன என்னமோ பேசிட்டான். நான் பணம் தர்றேன் ம்மா என் பையனுக்கு" ராஜேந்திரன் வேகமாக கூறினார்.
"வேணாம் ப்பா" பார்த்திபன் கையில் இரண்டு பெரிய ட்ராளிகள், "நான் பாத்துக்குறேன்" உறுதியாக மறுக்கும் குரல் மகனிடம்.
"பார்த்திபா என்ன இது" ஆரபி, கணவன் அனைவரையும் தாண்டி மகன் முன்பு நின்றார் வித்யா.
அவர் முகமே அரண்டு போய் தெரிந்தது, யூகித்தது தான் ஆனால் அது கண் முன்பு நடக்க ஏற்றுக்கொள்ளும் வலிமை தான் மனதிற்கு இல்லாமல் போனது.
சகோதரியின் மகன் தான், பெற்ற பிள்ளையாக அல்லவா இந்த இடைப்பட்ட வருடங்களில் மாறி போனான். அவன் இல்லாத இவ்வீட்டை சுத்தமாக நினைத்து கூட பார்க்க மனம் வரவில்லை.
"நாங்க கெளம்புறோம் ம்மா" என்றான் தனயன்.
"வெளி ஊர் எங்கையாவது போறியா ப்பா? சரி தம்பி நீ வருத்தப்படாம போய்ட்டு வா, நீங்க வர்றதுக்குள்ள அம்மா இங்க எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்"
தானே ஒன்றை யூகித்து அதற்கு தானே ஒரு பதிலும் மனதை சமாதானம் செய்யும் வகையில் கூறிக்கொண்டார். மகனோ அவருக்கு விளக்கம் கூட கொடுக்க விரும்பவில்லை.
ஏமாற்றம் தாண்டிய துரோகத்தை உணர்வது போல் மனம் வேதனையில் உழன்றது. இதற்கு மேலும் இந்த இடத்தினில் இருந்தால் மனம் துடித்தே மடிந்து விடுமோ என்கிற பயம் அவனுக்கு.
அவனாக மட்டும் இருந்தால் பரவாயில்லையே எப்படியோ போ மனமே என விடலாம், அவனை நம்பி மூன்று உயிர்கள் அல்லவா அவனோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
அதற்காக ஆவது தனித்து சுயமாய் நிற்க கிளம்பிவிட்டான். மனைவியை பார்த்தான், நிறைய அழுத்திருப்பாள் போல அதிகப்படியான சோர்வு. மசக்கை படுத்தும் பாடு இல்லை இது என அவனுக்கு நன்கு தெரிந்து தான் இருந்தது.
கணவன் பார்வை உணர்ந்து, "பார்த்தி..." அழைத்தாள்.
"என்ன நம்புற தானே ஆராம்மா?" கால்கள் அவனை நோக்கி ஓடாத குறையாக விரைந்து அவன் கரம் பற்றியது, 'என் உயிருக்கும் மேல' என செய்தியோடு.
கடினப்பட்டு மெல்லிய புன்னகை சிந்தி விஷ்ணுவை பார்த்தவன், "மேல ரெண்டு பேக் இருக்கு விஷ்ணு..."
உடனே விஷ்ணு மேலே செல்ல பயம் நெஞ்சை கவ்வியது குடும்பத்தினருக்கு. கமலவல்லி கண்கள் கூட பார்த்திபனின் நிலையில் கலங்கியது.
"பார்த்திபா என்ன பண்ற நீ? எங்க போவ? அவன் எல்லாம் ஒரு ஆள்னு அவன் பேசுறதை பெருசா எடுத்துட்டு கெளம்பிடுவியா? நீ இந்த வீட்டு பையன்டா. என் தம்பி. எங்கையும் போக கூடாது நீ"
"அவசரப்பட்டு முடிவெடுக்காதிங்க தம்பி. கொஞ்சம் ஆறப்போடலாம் இதை" கமலவல்லி கூட பேசி பார்த்தாள், பார்த்திபன் சிறிதும் அசையவில்லை.
விஷ்ணு பையோடு கீழே வர, குழந்தையிடம், "பூர்வி எல்லாருக்கும் பாய் சொல்லிட்டு வாடா" என்றான்.
பசியின் பிடியில் இருந்தவளோ வாடிய முகத்தோடு அனைவருக்கும் பொதுவாய், "எல்லாதுக்கும் பாய்" என மழலை மொழியில் கூற வித்யா குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு அழுதார்.
மகன் ஒரு புறமென்றால் இந்த பூச்செண்டு கைகளும், குட்டி பாதங்களும் இல்லாமல் இந்த வீட்டின் நிலையை யோசிக்க யோசிக்க அவரால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவரை மேலும் சோதனைப்படுத்தவே அவர் காதில் கிசுகிசுப்பாக, "பாட்டி மம்மம் வேது" பூர்வி கேட்டுவிட சிதறி தான் போனார் வித்யா.
வீட்டில் ஏனையவரும் ஸ்தம்பித்து போக உடனே குழந்தையை கையில் எடுத்தவர் சமையலறை நோக்கி செல்ல, "நாங்க வெளிய சாப்டுக்குறோம்" என்றான் பார்த்திபன்.
அவரோ நிற்க கூட இல்லை. பேத்தி கேட்கவும் உடனே தோசை ஒன்றை வார்த்து சமையல் மேடையில் வைத்து கண்ணீரோடு ஊட்டிவிட, இன்று ஏனோ சேட்டை செய்யாமல் பாட்டியின் வேதனையை உணர்ந்து அமைதியாக உண்டாள் பார்த்திபன் மகள்.
குழந்தையை சுற்றி வீட்டினர் அனைவரும் கூடிவிட்டனர். துருவ் எப்பொழுதும் போல் சகோதரியோடு பேசி சிரிக்க, கமலவல்லி பூர்வியின் சிகையை சரி செய்து அவள் விரும்படியான தலை அலங்காரத்தையும் வைத்துவிட்டாள்.
ஏனோ யாருக்கும் ஒரு வார்த்தை கூட பேச வரவில்லை. மிகவும் கனமான சூழல். குழந்தைகள் இருவரின் பேச்சு குரலும் வித்யாவின் விசும்பல் சத்தமும் தான் அவ்வீட்டையே ஆக்கிரமித்திருந்தது.
உண்டு முடித்த குழந்தை முகத்தை தன்னுடைய புடவை முந்தானையால் வித்யா துடைக்க பற்கள் தெரிய சிரித்து அவரை மேலும் அழுக வைத்தாள் பார்த்திபன் மகள்.
அன்னையின் வாட்டம் தாளாமல், "பூர்வி" என மகளை பார்த்திபன் அழைக்க வேகமாக கிரி மூலம் டைனிங் மேஜையிலிருந்து கீழே இறங்கியவள் அனைவரிடமும் விடைப்பெற்று சித்தப்பனிடம் செல்ல வீட்டினர் அனைவர் உடலும் இறுகியது.
"பூர்வி வாடா அப்பா கூப்பிடுறாங்க பாரு" கிரிக்கே சிறியவள் தம்பியிடம் செல்வது பிடிக்கவில்லை.
செய்யாதே என கூறியதை செய்தே பழக்கம் கொண்ட அந்த வாண்டு வேகமாக சித்தப்பனை நோக்கி ஓடி அவன் கால்களை கட்டிக்கொண்டாள். வசந்தின் முகம் சட்டென நிர்மலமானது.
"சிப்பா தூக்கு..." அவன் முகம் பார்த்து குழந்தை கேட்க யோசிக்கவே இல்லை, உடனே தூக்கிக்கொண்டான்.
குழந்தையோ சிரிப்போடு அவன் கன்னத்தில் எச்சில் பட முத்தம் வைத்தவள், "பாய்" என கூறி முடிக்கவில்லை கிரிதரன் பிள்ளையை வேகமாக வாங்கியிருந்தான்.
வசந்துக்கோ மனம் பெரிதாக அடி வாங்கிய உணர்வு. அவனுக்கு பார்த்திபன் ஆகாதவன் தான், பிடிக்காதவன் தான். ஆனால் ஆரபி, பூர்வி மேல் அவனுக்கு எந்த விதமான கோவமும் இல்லை.
சொல்லப்போனால் பூர்வி மேல் அவனுக்கு அளவில்லாத பாசம். வீட்டில் அவன் அதிகம் நேரம் செலவிடும் நபரும் அவள் தான். தனக்கே பிறந்த பெண் போல் அவள் பிறந்ததிலிருந்து அடிக்கடி கையில் ஏந்தி அவள் சிரிப்பது பேசுவது என அனைத்தையும் அப்படி ரசிப்பான்.
பூர்வியும் வசந்த்திடமிருந்து அவ்வளவு எளிதில் தந்தையிடம் கூட வருவதில்லை. பார்த்திபனே சில நேரம் மனைவியிடம் குறைபாடுவான், "என் பொண்ண என்கிட்ட விட மாட்டிக்கிறான்டி இவன்" என்று.
அவனுக்கும் தெரியும் மகள் தான் சித்தப்பனை விட்டு அகலாமல் அடம் பிடிப்பாள் என்பது.
அத்தனை பிணைப்பு இருவரிடமும். அத்தகைய அழகிய உறவில் விழுந்த இந்த விரிசல் தன்னால் தான் என நினைக்கும் பொழுது தான் பார்த்திபனை கருத்திலே எடுத்திருக்காமல் விட்டிருக்கலாம் என தோன்றியது.
கைக்கு வந்த குழந்தையை கொஞ்ச கூட நேரம் கொடுக்காமல் வாங்கி சென்றது ஏதோ உயிரையே பறிப்பது போல் வலித்தது.
சண்டையிட்டு பிள்ளையை வாங்கவும் தயக்கமாக இருந்தது. செய்த தவறின் வீரியம் அவ்வாறு. தன்னுடைய மனதினில் தான் மருகிக்கொண்டிருக்க வித்யா ராஜேந்திரன் பார்த்திபன் கையை பிடித்து விட மாட்டேன் என கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர்.
"தர்மசங்கடமான நிலைமைல விடாதீங்க ப்பா. தள்ளி நிக்கிறது தான் என்னைக்கும் நமக்கு நல்லது"
"என்ன ப்பா மூணாவது மனுசங்க கிட்ட சொல்ற மாதிரி சொல்ற, நீ என் புள்ளடா"
மகன் முகத்தை கையில் தாங்கி. இவன் யாரோ போல் பேசுவது அவருக்கு குற்றவுணர்ச்சி தன்னையே தின்பது போல் இருந்தது. பதில் பேசவில்லை, அவன் பதில் கொடுத்தால் அவரால் தாங்க இயலாது அல்லவா, கிளம்புவதாக கூறினான்.
"பார்த்திபா கொஞ்சம் யோசிடா" சிரித்தே சமாளித்த பார்த்திபன் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை அங்கிருந்த டீ பாயில் வைத்தான்.
"இதை ஏன் ப்பா இங்க வக்கிர?" என்றார் ராஜேந்திரன்.
"இங்கையே இருக்கட்டும் ப்பா" தான் வாங்கி கொடுத்த வாகனம் கூட எடுத்து செல்ல மகன் விரும்பவில்லை என்னும் பொழுது எந்த தந்தையின் உள்ளம் தான் கசங்காது?
மகனின் கையை பிடிக்க, அவர் முகம் பார்க்காமல் அவரிடமிருந்து பிரிந்தான்.
"கிளம்பலாம் ஆரபி" அவள் தலை அசைத்து ட்ராளியை எடுக்க வர அதை தான் வாங்கிக்கொண்டான். மற்ற இரண்டை விஷ்ணுவை எடுக்குமாறு கண் காட்டினான். தந்தை இரண்டு கைகளிலும் பொதியை வைத்திருக்க அன்னையிடம் தாவினாள் குழந்தை.
அதனை கவனித்த பார்த்திபன் குழந்தையிடம், "பூர்வி நடந்து வாடா. நீ தான் அப்பாவோட ஸ்ட்ராங் கேர்ள் ஆச்சே" அவளும் உடனே தலை அசைத்து அன்னை கைபிடித்து நடந்தாள்.
இதனை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யா ஆக்ரோஷமாய் மகனிடம் விரைந்து வந்து அவன் மார்பிலே அடித்தார், "என்னடா பண்ணி வச்சிருக்க, பாரு உன்னால ராத்திரி நேரத்துல வயித்துல புள்ளையோட என் மருமக போறா. மாசமா இருக்க பொண்ண இப்டி மனசு நோகடிச்சு அழுக வச்சிட்டியேடா. எங்க போய் இந்த பாவத்தை எல்லாம் கழுவ போற?"
என்ன அதட்டி, திட்டியும் அவன் செயலின் விளைவை அவரால் தாங்கவே முடியவில்லை. வித்யா கூறிய செய்தியை கேட்டபிறகு இன்னும் நொடிந்தது அந்த குடும்பம்.
வித்யாவின் வார்த்தைகளும் அவரின் அனுமானங்களையும் கேட்ட ஆரபி பார்த்திபன் கை பிடித்து கண்ணீர் சிந்த, "நமக்கான வீடு இது இல்ல போல ஆராம்மா" எவ்வளவு வேதனையை வார்த்தையில் அடக்கி அவன் பேசவும் மனைவியின் அழுகை விசும்பலாய் மாறியது.
அவளுக்காக அவளது காம்போர்ட் பாதிக்கப்பட்டதால் வருத்தமில்லை, அவள் எண்ணம் மொத்தமும் பார்த்திபன்.
"நீ எதுக்கு ம்மா அழகுற? உங்களுக்கு நான் இருக்கேன். டேய் வீட்டுக்கு வண்டி எடுத்துட்டு வா. நாளைக்கு பேசிக்கலாம். ஆரபி சாப்பிடணும்" என்றான் விஷ்ணு.
"இல்ல விஷ்ணு நாங்க ஏதாவது ஹோட்டல் பாத்துக்குறோம்"
"பைத்தியம் மாதிரி பேச கூடாது, குழந்தையை வச்சிட்டு எவ்ளோ நாள் ஹோட்டல்ல தங்க முடியும்? ஒன்னு என் கூட வா, இல்ல பழசை எல்லாம் மறந்து ஆரபி வீட்டுக்கு போ. மனுஷன் அந்த நேரத்துல நாலு வார்த்தை பேசியிருந்தாலும் உன் தம்பி மாதிரி விஷம் இல்ல அவர்"
சில நொடிகள் யோசித்தவன் ஆரபியை மனதில் வைத்து, "நான் ஆரபி வீட்டுக்கு போறேன். வேகமா ஒரு வீடு பாத்துடலாம்" என்றான்.
விஷ்ணுவும் சரி என கூறவும் பார்த்திபனின் வாகனம் ஆரபி வீட்டிற்கு சென்றது. பெட்டிகளோடு வந்து நிற்கும் பிள்ளைகளை பார்த்ததும் ராஜ் கோபால் சில நொடிகள் அதிர்ந்தாலும் உடனே ஸ்ரீனி மூலம் பெட்டிகளை ஆரபி அறைக்கு கடத்தியிருந்தார்.
என்ன எது என ஒரு வார்த்தை கேட்கவில்லை க்ரிஷ்ணாம்பாலும் ராஜ் கோபாலும். மருமகன் வீட்டிற்கு ந்து தங்குவதே அரிதாக இருக்க, அவனை மேலும் சங்கடப்படுத்தாமல் இரவு உணவை உன்ன வைத்து பொதுப்படையான பேச்சுக்களை பேச துவங்கினார் ராஜ்கோபால்.
குழந்தையை உறங்க வைக்க சென்ற ஆரபி மன சோர்வில் தன்னையும் மறந்து உறங்கிவிட்டாள். தன்னுடைய மகளிர் இருவரும் உறங்கவும் உறக்கம் வராமல் அமைதியாக மாடிக்கு சென்ற பார்த்திபனை பார்த்த ராஜ் கோபாலும் உடன் மாடிக்கு சென்றார்.
பூர்விகாக அவள் தாத்தா செய்த ஊஞ்சல் அது. முதலில் ஒருவர் மட்டுமே அமர்ந்து ஆட கூடிய வகையில் தான் வாங்கியது, பயத்தில் குழந்தை அன்னையையும் தேடி அழ, அவர்கள் அடுத்த முறை வரும் பொழுது மூவர் அமரும்படி சற்று பெரியதாகவே செய்துவிட்டார் ராஜ் கோபால்.
மருமகனையும் மனதில் நினைத்து செய்ததோ என்னவோ. ஆரபி கூற தான் இத ஊஞ்சல் பற்றி கேள்வியுற்றது, வரவேற்பறை செல்வான் அதிகப்படியாக ஆரபி அறைக்கு செல்வான், இங்கு மாடிக்கு வந்தது அவர்கள் திருமணம் ஆன புதிதில் தான், அதன் பிறகு இப்பொழுது தான் வந்தது.
இப்பொழுது மேலே வந்தவன் கண்கள் அந்த அழகிய வேலைப்பாடு நிறைந்த மர ஊஞ்சலை சுவாரஸ்யமே இல்லாமல் அவதானித்தான்.
மிகவும் அழகாக இருந்தது, குழந்தை எவ்விதத்திலும் அடிபட்டு விட கூடாதென்பதை கருத்தில் கொண்டு எங்கும் கூர்மையாக இல்லாதபடி மழுங்கி விடப்பட்டிருந்தது அந்த மரத்தினால் இழையோடிய மலர்களும் கொடிகளும்.
ராஜ் கோபால் நல்ல தந்தை மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மாமனாரை மெச்சி அதில் அமர்ந்தான். அவனை தொடர்ந்து அவர் வரவும் இடைவேளை விட்டு அமர, அவர் மற்றொரு ஓரத்தை தனதாக்கினார். நீண்ட நெடிய மௌனம்.
"வீட்டுல பணம் கேட்டேன், எதிர்பார்த்த மாதிரி இல்லாம பணம் கிடைக்கல. அதோட வசந்த் கொஞ்சம் அதிகமா பேசிட்டான்" சகோதரன் தனக்கு செய்த விஷயங்களை மட்டுமே கூறினான்.
அவன் கூறுவதை அமைதியாக கேட்ட ராஜ் கோபால், "நீங்க அவர் கூட பிறந்தவர் இல்லனு கோவமோ?"
பார்த்திபன் தலை அசைத்தான். ஆரபியிடம் தன்னை பற்றி கூறியிராதவன் தங்கள் திருமண பேச்சினை ராஜ் கோபால் எடுத்த பொழுதே தன்னுடைய பெற்றோர், வித்யா ராஜேந்திரன் பற்றி எல்லாம் கூறிவிட்டான்.
பிற்காலத்தில் இதனை மறைத்தாய் என மாமனார் தன்னை குற்றம் சுமத்தும் விழியோடு பார்க்க கூடாது என தான் சொன்னது, அவருக்கு மகள் விருப்பம் மட்டுமே பெரிதாய்ப்பட பெரிதாய் அதை பற்றி பேசியதில்லை.
இத்தனை வருடங்களில் இல்லாமல் இன்று எதற்கு இந்த பேச்சு வரவேண்டும் அதுவும் வசந்தால்? என்கிற ஒரு சலிப்பு அவரிடம். மருமகனின் நிம்மதியில் சார்ந்திருக்கும் மகள் பேத்தி நிம்மதியும் குலைக்கிறது அல்லவா.
"சின்ன வயசுல நான் அவங்க வீட்டுக்கு போக கொஞ்சம் லேட்டா ஆனாலும் வாசல்ல கேட் புடிச்சிட்டு நின்னுடுவான். நான் போனதும் அவ்ளோ சந்தோசப்படுவான். நான்னா அவ்ளோ இஷ்டம் அவனுக்கு.
அவங்க வீட்டுக்கு போனதும் ஆரம்பத்துல அவ்ளோ சந்தோசமா சுத்துனவன் போக போக சரியா பேசல. சரி கூடவே இருக்கதால இப்டி இருக்கானானு நினைச்சு விட்டேன்.
ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ வெறுப்பு இருக்கும்னு எதிர் பாக்கல" மனைவியோடு கூட பகிராத வேதனையை மாமனாரிடம் கூறினான்.
கிரிதரன் மேல் பாசம் இருக்கும், அதே போல் வசந்த் என்றால் அவனுக்கு ஒரு படி மேல் தான். சிறிய வயதில் எந்நேரமும் பார்த்திபன் அண்ணா என தன்னை வால் பிடித்தே சுற்றியவன் அல்லவா, ஒரு தனி அக்கறை அவன் மேல்.
"அதுனால தான் அவன் ஒரு இடத்துல தேங்கி நின்னாலும் மனசு கேக்காம ஏதாவது பண்ணிடுவேன். இப்போ தோணுது அவன் தப்பு பண்றதே என்னால தான்னு"
"அப்டி நினைக்காதீங்க. சுயமா நிக்கனும்னு நினைக்கிறவங்களோட எண்ணங்களை ஊடுருவி ஒரு ஒளி வந்தாலும் அது அவங்களுக்கு ஒரு தடையா தான் இருக்கும். அது மாதிரி உங்க தம்பி எதையாவது சாதிச்சு உங்க முன்னாடி பெருமையா வந்து நிக்கனும்னு ஆசைப்படுறார்"
அந்த தடை தான் தானா என்கிற எண்ணம் உருவாக, "அதுக்காக உங்கள எந்த விதத்துலையும் நீங்க குறைச்சு நினைக்க வேணாம். உலகத்துல நடக்குற எல்லா நிகழ்வுக்கும் நாம ஏதோ ஒரு வகைல சம்மந்தபட்ருப்போம். அதுக்குன்னு நடக்குற எல்லாத்துக்கும் நாம பொறுப்பேத்துக்க முடியாதுல?"
"என் பொண்ணு தப்பு பண்ணா அதுக்கு நான் தானே பொறுப்பு? அவனும் எனக்கு அது மாதிரி தான். ஒதுங்கி நிக்க முடியல" என்றான் எங்கோ பார்த்து. மருமகனை உன்னிப்பாக கவனித்த ராஜ் கோபாலுக்கு மருமகன் மேல் அத்தனை பெருமிதம் கண்ணில்.
ராஜ் கோபாலுக்கு பார்த்திபன் மேல் ஆரம்ப காலத்தில் பெரிதாக அபிப்ராயம் இல்லை. மகள் விருப்பம் என்று தான் சுற்றி திரிந்தார்.
என்று அவன் சுயமாய் நிற்கும் முடிவோடு அனுமதி கிடைத்தும் திருமணத்தை செய்யாமல் தொழிலில் முன்னேறி பிறகு வந்து தன் முன் வந்து நின்றானோ அன்று பிடித்தது.
பிடித்தது என்பதை தாண்டி, நெஞ்சை நிமிர்த்தி முழு ஆண்மகனாக வந்தனை பார்த்து ஒரு சிலிர்ப்பு உடலில். அதே ஆச்சிரியம் மெல்ல மரியாதையாய் மாறியது.
பார்த்திபன் செய்தால் சரியாக இருக்கும், அவனிடம் எதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கும் அளவிற்கு அவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை கொடுத்தது அவனது வார்த்தை தவறாத நாணயமும், எதனையும் துணிந்து நிதானமாய் செய்யும் புத்தி கூர்மையும் தான். அசத்திவிட்டான் மாமனாரோடு அதிகம் உரையாடாமலே.
இதோ இப்பொழுது தனக்கு துரோகம் செய்தும் சகோதரன் பிள்ளை போல் தான் என கூறும் இவன் மேல் மரியாதை பன்மடங்கு கூடியது. வேறு யாராக இருந்தால் முட்டாள் என பார்த்திபனை திட்டினால் கூட அதிசயிக்க தேவையில்லை.
வெளி உலகை பார்த்த ராஜ் கோபாலுக்கு இந்த அன்பு தான் வாழ்க்கையில் அச்சாணி என தெரிந்திருக்க அத்தனை பெருமிதம் மகளின் வாழ்க்கை துணை தேர்வில்.
"இந்த அன்பை அவனுக்கு எப்போவாவது புரிய வச்சிருக்கீங்களா?"
அவனிடம் பதில் இல்லை. பல வருடங்கள் ஆகியது சகோதரனிடம் மனம் விட்டு பேசி. குடும்பமாக அமரும் பொழுது ஏதேனும் ஓரிரு கிண்டல் வார்த்தைகளை தவிர வேறு இல்லை. ஏதோ இடைவெளி உருவாகி ஆளுக்கு ஒரு திசையில் பயணித்தனர்.
"சில விஷயங்கள் சொல்லி தான் புரிய வைக்க முடியும். சில விஷயங்கள் சொல்லாமலே புரியும். இதுல அன்பு ரெண்டுக்கும் நடுல விழும். கொஞ்சம் பேசணும் நிறையா செயல்ல காட்டணும். உங்க கணிப்பு தப்பா போனது அங்க தான்.
சொல்லாமலே எல்லாம் புரிஞ்சுக்குவான்னு விட்டீங்க, அந்த பையன் சின்னவன் தானே, புரிய நேரமாகுது. உங்க அன்பை புரிஞ்சு அவன் வர்ற நாளும் தூரம் இல்ல"
"என்னால பழைய மாதிரி இருக்க முடியாது" வசந்த் செய்த துரோகம் முன்னே வர பாசம் எல்லாம் ஒரு படி பின்னே சென்றது.
"உங்க மனசு போலவே வாழ்க்கை அமையும். காலம் தான் நமக்கு மருந்து. தூங்குங்க மாப்பிள்ளை. முழிச்சே இருந்தா வேண்டாதது எல்லாம் யோசிக்க தோணும்"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro