Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 15




விஷ்ணுவின் வீட்டினர் அனைவரையும் ஆரபி பார்த்திபன் அழைத்திருக்க அவர்கள் காரில் வந்து இறங்கும் பொழுதே வாசலில் இருந்த சில விளக்குகள் எரியாமல் இருப்பதை ஆட்களை வைத்து சரி செய்துகொண்டிருந்தாள் அனாயா.

அவளை பார்த்ததுமே விஷ்ணுவின் அன்னை தனக்கு கணவரிடம், "என்னங்க, நான் சொன்னேன்ல தாமோதரன் வீட்டு பொண்ணு இது தான்" என்றார் அவளை காட்டி.

"ம்ம், நீ அவ வயித்துல அடிச்ச, உன் புள்ள அவ கைல அடிச்சிருக்கான்" என்றார் அவளது கையை பார்த்து.

"நான் ஏதோ கோவத்துல..."

"அதான் தப்பு. இத்தனை நாள் இந்த பேச்சே வராம தானே இருந்துச்சு. அப்போ கோவம் வரல தான, அது என்ன ஒருத்தர் பண்ண தப்ப இன்னொருத்தர் மேல காட்டுறது? உன்ன மாதிரியே உன் மகனும் இருக்கான்"

"ம்மா இவங்களா?" அத்தனை நேரம் கைபேசியில் கேம் விளையாடிக்கொண்டிருந்தவன் தலை தூக்கி பார்க்க சந்தேகமாய் கேட்டான் விஷ்ணுவின் தம்பி.

அவர் ஆமாம் என்க, "என் ஃப்ரண்ட் அக்கா ம்மா இவங்க. ரொம்ப நல்ல குணம். அவன் சொல்லுவான் அவன் தாத்தாவை இவங்களுக்கு புடிக்காது அதுனால வீட்டுல ரொம்ப பிரச்சனை வரும்னு" இப்பொழுது விஷ்ணுவின் தந்தை பார்வை இன்னும் அவரை எரித்தது.

"உன் அவசர புத்தி என்னைக்கு தான் நிதானமா யோசிக்க போகுதோ. அவ்ளோ வசதி இருக்க பொண்ணு இங்க ஏன் வேலை செய்ய வருதுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சிருக்க வேணா?" வாகனத்தை விட்டு இறங்க போன தந்தை கை பிடித்தான் இளையவன்.

"ப்பா, இவங்களுக்கு அன்னான் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு நினைக்கிறன். கண்டிப்பா தெரியல ஆனா என் ஃப்ரண்ட்  கூட உறுதியா சொல்லல, அவனுக்கும் சந்தேகம் தான்."

தெளிவாக சூழ்நிலையை இளையவன் கூற அவன் அன்னையை தான் திரும்பி பார்த்தார் தந்தை.

"இதுக்கும் ஏதாவது பண்ண போறியா?"

"ஏங்க?" என்றார் கஷ்டத்தை வெளிக்காட்டி, "நான் வேணும்னா அவகிட்ட பேசவா?"

"ஒன்னும் வேணாம், வா" மூவரும் கீழே இறங்க விஷ்ணு வெளியே வந்தான்.

"வாங்க ப்பா, வாங்க ம்மா. உள்ள போங்க நான் ஒருத்தருக்கு வழி சொல்லிட்டு வர்றேன்"

"ஒரு நிமிஷம்டா விஷ்ணு" சிரியவனுக்கு அனாயாவிடம் பேசாமல் செல்ல முடியவில்லை. இவன் சென்று அவள் நலம் விசாரிக்க பேசியவள் கண்கள் அவனுக்கு பின்னிருந்த விஷ்ணுவின் குடும்பத்தை பார்த்தது.

முகத்தை திருப்பாமல் வணக்கம் வைத்து சிரிக்க விஷ்ணுவின் அன்னைக்கு பெரும் சங்கடமாக போனது. விஷ்ணுவின் சகோதரனோடும் அதிகம் பேசவில்லை, 'அவனே இனி அந்நியமான பிறகு அவன் குடும்பம் என்ன?' என்கிற அந்நியத்தன்மை அவளை அவளே கடினப்படுத்தி வரவழைத்த எண்ணம்.

அவர்கள் உள்ளே சென்றுவிட இவளால் உள்ளே செல்ல முடியவில்லை. வழி கூற வெளியே நின்ற விஷ்ணு இவளை பார்த்து அருகே வந்தான். இரண்டு வாரங்களாக பேச முயற்சி நடக்கின்றது. முடியவில்லை அவனால்.

இன்று பேசிவிட வந்தான், "ஏன் வெளியவே நிக்கிற உள்ள போ" என்றான்.

"வேணாம் சார், நான் கிளம்ப போறேன்" என்றாள்.

"ஏன் பங்ஷன் முடிஞ்சு சாப்பிட்டு போகலாமே"

"என்ன சார் கை உடைச்சதுக்கு மருந்து போடுறிங்களா?"

அனாயா நக்கலாக சிரிக்க, "அது ஏதோ தெரியாம நடந்தது" சரி என்றுவிட்டாள்.

"ஏதோ ஹாஸ்டல்ல தங்கிருக்குறதா கேள்விப்பட்டேன்" அவனை பார்க்காமல் சிறிய தலை அசைப்பை கொடுத்தாள்.

"ஏன் இந்த வீம்பு, கை சரியாகுற வர வீட்டுல இருந்துருக்கலாமே"

"உங்களுக்கு அது வீம்பா இருக்கலாம், எனக்கு அது வைராக்யம். யாரையும் நம்பி இருக்க கூடாது நினைக்கிறன்"

"நீ என்ன சொல்லு, இப்டி இருக்க நேரம் உதவிக்கு ஆள் தேவைப்பட தானே செய்யும். ரெண்டு மூணு மாசம் அப்றம் வந்திருக்கலாமே" என்றான் விஷ்ணு சமாதானம் ஆகாமல்.

குளிப்பது, உடை மாற்றுவது, உண்பது, தினசரி வேலைகள் செய்வது என அனைத்திற்குமே துணை தேவையே.

"அவங்கள மாதிரியே நானும் மத்தவங்கள தேவைக்கு யூஸ் பண்ணிக்க சொல்றிங்க ரைட்?" விஷ்ணுவுக்கு ஐயோ என்றானது.

"அது நாம எடுத்துக்குற அர்த்தம் பொறுத்து. அவங்களுக்கு ஒன்னுனா நீ செய்ய மாட்டியா அது..."

"மாட்டேன். கண்டிப்பா செய்ய மாட்டேன்" அழுத்தமாக பேசியவள் உறுதி விஷ்ணுவுக்கே ஆச்சிரியம் தான்.

"சரி செய்ய மாட்ட. கோவம் இருக்கு. அதை தாண்டி உனக்குன்னு ஒரு வாழ்கையிருக்கே. அதுக்கான பொறுப்பு அவங்களோடது. நல்லது கெட்டது உனக்கு பண்ணணுமே"

அவளது கோவம் வெறுப்பு அவள் எதிர்கால வாழ்க்கைக்கே எதிரியாக நின்றுவிட கூடாதென்கிற ஆதங்கம் விஷ்ணுவிடம். அவள் மேல் உள்ள தனிப்பட்ட எண்ணம் அல்ல அது, ஒரு மனிதனாக மனிதாபிமானம் எழுப்பிய அக்கறை.

"எத்தனை நாள் தனியா இருந்துடுவ, உனக்குன்னு ஒரு துணை இல்லாம இந்த உலகம் உன்ன நிம்மதியா விடாது. ஏதாவது வகைல குடைச்சல் குடுக்கும், பாதுகாப்பு இல்ல"

அவன் பேச பேச அனாயாவுக்கு அழுகை தான் வந்தது. அவள் யோசிக்காத ஒன்றும் இல்லையே. இதோ ஒரு மாதம் கூட ஆகவில்லை, தொல்லைகள் பின்தொடர்கின்றது இப்பொழுதே. இதில் காலமெல்லாம்?

ஆனால் இதெல்லாம் பேச, அவளை வழிநடத்த இவன் யார் என்கிற ஆத்திரம் இன்னும் அழுகையை கூட்டியது.

"நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க சார். என்னோட வாழ்க்கைல தலையிடுற உரிமை எனக்கும், எனக்கு உரிமைப்பட்டவங்களுக்கும் தான் இருக்கு. உங்களுக்கு தூரமா நின்னு வேடிக்கை பாக்குற வேலை மட்டும் தான்"

சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்த பெண் தானா இவள், அந்த கண்ணில் எத்தனை மயக்கம், சந்தோசம், ஆசை தென்பட்டது. இப்பொழுது அதில் ஒன்றின் சாயலும் ஒரு சதவீதம் கூட இல்லை.

எதனால் இந்த இழப்பின் வலி? தான் தான் என்கிற பதில் விடையாய் வர அதனை ஏற்க முடியாமல் தடுமாறி போனான் விஷ்ணு. சாத்தியமே இல்லாத ஒரு சத்தியம் அல்லவோ அவளது ஆசை?!

*****

"உன் கடை இந்த தீ புடிச்சு எரியிது தம்பி"

"அண்ணே..." பார்த்திபன் கால்கள் விறுவிறுவென விழா நடக்கும் இடத்திற்கு விரைந்தது. செவிகளில் விழுந்தது உண்மை என்பது பின்னணியில் வந்த சத்தத்தில் தெரிந்துக்கொண்டான்.

கையிலிருந்த குழந்தை வேறு நழுவுவது போல் எண்ணம் வர, "பூர்வி அப்பாவை கெட்டியா புடிச்சுக்கோ" என்றான்.

"தம்பி நாங்க முடிஞ்ச வர முயற்சி பண்றோம் ப்பா, தீயணைப்பு வண்டிக்கு சொல்லியாச்சு. நீ சீக்கிரம் வாயா"

"வர்றேன் ண்ணே..." பார்த்திபன் வேகமாக மண்டபத்திற்குள் ஓடினான். பெண் புடவை மாற்ற சென்றிருந்தபடியால் இன்னும் கூட்டம் கலையாமல் மேடையை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

விஷ்ணுவை தேடியவன் மணமேடை அருகே அவன் நிற்பது தெரிந்து வேகமாக சென்றவன் வழியில் ஸ்ரீனி அவனிடம் வர, குழந்தையை அவனிடம் ஒப்படைத்தான்.

குழந்தை தந்தையிடமிருந்து போகாமல் அடம்பிடிக்க, "பூர்வி அப்பா பாப்பாக்கு ரோஸ் மில்க் வாங்க போறேன்டா. மாமாகிட்ட இருங்க" இறுக்கமாக பேசிய மாமனின் முகத்தை பார்த்த ஸ்ரீனிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

"அத்திம்பேர் என்னாச்சு, முகமே சரியில்லையே"

"அதெல்லாம் இல்ல, ஒரு கிளைன்ட் மீட் பண்ண போறேன்"

இவனை கடந்து இரண்டடி சென்றவன், "விஷ்ணு" என குரல் கொடுக்க விஷ்ணுவோடு கணவனை பார்த்துக்கொண்டிருந்த ஆரபி கூட அவன் அருகே வந்துவிட்டாள்.

"நீ என்ன இங்க வர்ற, மேடைக்கு போ. நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்தர்றேன்" என்றவன் விஷ்ணுவிடம், "வாடா" என்று வெளியே நடக்க, என்ன ஏது என கேட்காமல் விஷ்ணுவும் பின்னாலே ஓடினான்.

"க்கா, அத்திம்பேர் உன்கிட்ட எதுவும் சொன்னாரா, முகமே சரியில்ல ஆனா கேட்டா கிளைன்ட் பாக்க போறேன்னு சொல்றார்"

"தெரியல ஸ்ரீனி, நேக்கும் அவா முகமே சரியில்லைன்னு தான் தோணுத்து, எதுவும் பிரச்சனை இருக்காதோனோ?"

"இருக்காது க்கா, அத்தை உன்ன பாத்துட்டே இருக்காங்க. நீ போ" என அனுப்பி வைத்தான்.

விழாவும் இனிதாக நடந்தது.

வித்யா, ராஜேந்திரன் மற்ற வீட்டினர் அனைவரும் பார்த்திபனை கேட்க அவன் வேலை இருப்பதாக கூறி சமாளித்தாள். இரவு ஒன்பதை தாண்டி நேரம் ஓட, பார்த்திபன் விஷ்ணு இருவரும் வருவது போல தெரியவில்லை.

இருவரது கைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பயம் கூடியது அவன் மனைவிக்கு.

குழந்தை ஓடி ஆடி விளையாடிய அசதியில் உறங்கியிருக்க அவள் பெற்றோரிடம் கொடுத்து ஸ்ரீனியோடு முதலில் ஆடிட்டர் அலுவலகம் சென்றாள். கடை பூட்டியிருக்க அடுத்து குடவுன் சென்றனர்.

கிடங்கு இருந்த தெருவின் தொடக்கத்திலே அவர்கள் குடவுன் முன்பு தீயணைப்பு வண்டிகளும் பல மக்களும் கூடி நின்றனர். போதாதற்கு வானையே சாம்பல் நிறமாகிய புகை வேறு.

"ஸ்ரீனி என்னடா ஆச்சு?" ஆரபி குரல் நடுங்கி வர, ஓடும் வண்டியிலிருந்து இறங்க பார்த்தாள்.

புகைமண்டலத்தை கவனித்த ஸ்ரீனிவாசன் கூட வேகத்தை குறைத்திருக்க ஆரபி இறங்க முயன்ற பொழுது பெரிதாக பாதிப்பில்லை.

"அக்கா" ஸ்ரீனி விரைந்து வாகனத்தை நிறுத்த அதற்குள் ஆரபி இறங்கி வேகமாக நடக்க துவங்கினாள்.

இவனும் வாகனத்தை அப்படியே நிறுத்தி சகோதரியோடு நடந்தான்.

"அவா... அவா ஏன் ஸ்ரீனி போன் எடுக்கல. அவாளுக்கு ஒன்... ஒன்னும் ஆகிருகாதுல ஸ்ரீனி?" சித்தம் கலங்கியவள் போல் ஆரபி நடக்க, சகோதரி கையை பிடித்துக்கொண்டான்.

"அதெல்லாம் ஒன்னும் ஆகியிருக்காது க்கா. அத்திம்பேர் நல்லா தான் இருப்பார்" தைரியமூட்டி வேகமாக அவளை அழைத்து சென்றான்.

அருகே நெருங்கிய பொழுதே பார்த்திபன் வெளியே போடப்பட்டிருந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்திருப்பது தெரிய வேகமாக கணவனிடம் ஓடினாள்.

அவனது அந்த கிரீம் நிற சட்டையானது அதிகம் கருப்பு நிறமாய் மாறியிருந்தது. சிகை களைந்து, உடை கசங்கி அமர்த்திருந்தவன் நிலை மனைவியை சென்றடையவில்லை.

அவன் நலம்.

தான் எப்படி அவனை அனுப்பி வைத்தேனோ அப்படியே இருக்கிறான் இதுவே போதுமானதாக இருந்தது.

வேகமாக அவனை பிடித்து அருகே அமர்ந்தவள், "பார்த்தி... நோக்கு ஒன்னும் ஆகலயே" அவன் முதுகை கைகள் கால்கள் அனைத்தையும் ஆராய்ந்தாள். நலமாக உள்ளான்.

அடுத்து கண்கள் விஷ்ணுவை தேடியது. சிறிது தூரம் தள்ளி காவல் துறையினரிடம் தீவிர வாக்குவாதத்தில் இருந்தான்.

சகோதரனை கண் காட்டி அவன் அருகே இருக்காமாரு கூற, ஸ்ரீனி விஷ்ணுவிடம் சென்றான்.

அவன் நகரவும் கணவனை பார்த்தாள். பார்த்திபன் பார்வை மொத்தமும் எதிரிலிருந்த அவர்கள் கிடங்கில் தான் இருந்தது.

எப்படி தீ பற்றியது என இன்னும் தெரியவில்லை. ஆனால் முக்கால்வாசி பொருட்கள் தீயில் சாம்பலாகியிருந்தது. அதிகம் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த இடத்திலிருந்து தான் தீ பரவியுள்ளது என்பது மட்டும் கிடைத்த தகவல்.

ஒவ்வொரு செக்ஷன் நடுவே மரத்தினால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டிருக்க அது எளிதாக மற்ற இடங்களுக்கு பரவியிருந்தது. வேகமாக தீயணைப்பு வண்டி வந்திருந்தாலும் முக்கால்வாசி பொருட்கள் நாசமாகி தான் போயிருந்தன.

ஆறுதல் பட வேண்டியது உயிர் சேதாரம் இல்லாதது மட்டுமே.

"ஏன்னா..." மனைவி வந்ததிலிருந்து அவளிடம் முகத்தை கூட திருப்பவில்லை பார்த்திபன். நிர்மலமான முகத்தோடு இன்னும் எதிரிலிருந்த கடையை தான் பார்த்தான்.

"பார்த்தி இன்சூரன்ஸ் இருக்குல்ல, பீல் பண்ணாதேள்" அவனது உள்ளடக்கிய வேதனையில் இவளுக்கு அதிகமாய் மனம் வலித்தது.

"எத்தனை வருஷ உழைப்பு. ஒரே நிமிசத்துல சாம்பலாகிடுச்சுல" துக்கத்தை சுமந்த அவன் குரல் இவளுக்கு அழுகையை கொடுத்தது.

பார்த்திபன் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டாள், "எல்லாம் சரியாகிடும் ன்னா. நீங்க சரி செஞ்சிடுவேள். உம்மால் முடியாததா. தைரியத்தை இழந்துடாதேள் பார்த்தி"

அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. சரி என்று கூட தலையை அசைக்கவில்லை, ஒரு இறுக்கம். இருளை வெறித்து மௌனமாய் அதனோடு போர் செய்யும் அமைதியின் வலி அவனிடம்.

ஸ்ரீனிவாசன் மூலம் தகவல் அறிந்த ஆரபி தந்தை வந்துவிட்டார்.

அமைதியாக அமர்ந்திருந்த பார்த்திபன் அருகே வந்தவர், "கவலை படாதீங்க மாப்பிள்ளை. நல்ல வேலை யாரும் இல்லாத நேரம் இப்டி நடந்துச்சு இல்லனா என்ன பண்றது. இப்டி இடிஞ்சு உட்காராம அடுத்து ஆக வேண்டியதை பாக்கலாம்" மாப்பிள்ளையை தேற்றி பார்க்க அவன் அசையவில்லை.

"நான் பாத்துக்குறேன் ப்பா, நீங்க கொஞ்சம் விஷ்ணுகிட்ட போங்களேன், அவாளை தான் ஸ்ரீனியால கண்ட்ரோல் பண்ண முடியல"

மகள் தந்தையிடம் கூறி அனுப்பி வைக்க பார்த்திபன் முன்பு வந்து நின்றார் தாமோதரன். ஊன்றுகோலுடன் இரண்டு கையையும் அதில் வைத்து பார்த்திபனை சிரிப்போடு பார்த்தார்.

பார்த்திபன் அவரை கவனிக்கவே இல்லை, ஆனால் ஆரபி வந்தவரை பார்த்த பார்வையில் அதிக மாற்றம்.

குழந்தைக்கு உதவியவராக நன்றியோடு பார்த்த கண்களில் இன்று அவர் நிற்கும் தோற்றம் விளங்கவில்லை. இத்தனை கபளீகரத்தின் நடுவே, சிரித்த முகமாக வந்து நிற்பது ஆச்சிர்யத்தை கொடுத்தது.

அந்த நேரம் தான் பார்த்திபன் கோவம் நினைவிற்கு வந்தது.

"என்ன தம்பி இடமே ஜெகஜோதியா இருக்கு"

"தாத்..." தாத்தா என அழைக்க வந்தவள் வார்த்தை அவரது சிரிப்பில் அப்படியே நின்று, "சார்?" என கேட்டாள் வியப்போடு.

தாமோதரனின் வருகையும் அவரது வார்த்தையும் அவனை சென்றடையவே இல்லை, தன்னை பிடித்திருந்த மனைவி கைகளின் நடுக்கத்தில் தான் அவளை பார்த்தவன் அவளது பார்வையின் உறைவிடத்தை நோக்கினான்.

"என்ன சார் பேசுறேள், அவாளே இடிஞ்சு போய் ஒக்காந்துருக்கா இந்த நேரம் பேசுற பேச்சா இது?" மனம் பொறுக்காமல் ஆரபியே அவரிடம் கேட்டாள்.

"இடிஞ்சு ஒக்காரனும்னு தானே பண்ணது" ஆரபியால் காதில் கேட்டதை நம்பவே முடியவில்லை, திரும்பி பார்த்திபனை நோக்க, அவன் முகத்தில் இன்னும் மாறாத அதே பார்வை தாமோதரன் மேல்.

"டேய் நீ என்னடா இங்க பண்ற?" இவரை கவனித்த விஷ்ணு இருக்கும் கோவத்தை மொத்தமாய் இவர் மேல் காட்ட வர,

"அண்ணா, இவா தான் இந்த ஆக்சிடென்ட்க்கு காரணம் போல" அவர் இங்கு வந்த பொழுதே ஓரளவு பார்த்திபன் ஸ்ரீனி விஷ்ணு யூகித்திருந்தனர்.

ஆதலால் அவர்கள் மூவருக்கும் அது அதிர்ச்சியை கொடுக்கவில்லை. விஷ்ணுவின் இந்த அதிர்ச்சியில்லாத கோவம் வியப்பை கொடுத்தது பெண்ணுக்கு.

"அதுல உனக்கு சந்தேகமே வேணாம் ம்மா. இதோ உன் வீட்டுக்காரர் தான் உன்னால என்ன பண்ணிட முடியும்னு கேக்குறான்"

"யோவ்..." விஷ்ணு எகிற,

"என்ன தம்பி உன்ன விட்டுட்டேன்னு கோவமா?" கேலி பேசினார் அவனிடமும்.

விஷ்ணு கையை பிடித்து நிறுத்தியிருந்தான் பார்த்திபன். ராஜ் கோபால், ஆரபி தந்தைக்கு தாமோதரன் இன்னாரென தெரியாதிருக்க பார்த்திபனின் அமைதியில் அவரும் அமைதியாக நின்றார்.

"உங்கள மாதிரி பூச்சாண்டி காட்ட எனக்கு தெரியாதுடா. என் பேக்டரிக்கு தீ வைப்பேன்னு சொன்ன. நான் வச்சு காட்டிட்டேன். இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்" என்றவர் விஷ்ணுவிடம்,

"பால் பாட்டில் இன்னும் வாங்கல?" என கேட்டு சிரிக்க அவரை அடிக்கவே சென்றுவிட்டான் விஷ்ணு.

உடன் துணைக்கு ஸ்ரீனியும் செல்ல தாமோதரனை ஒரே நொடியில் பத்து பேர் சூழ்ந்து பாதுகாப்பு கொடுக்க இந்த இரண்டு பேரால் அவர்களை தாண்டி தாமோதரனிடம் செல்ல இயலவில்லை.

அன்று அவர்களுக்கு அதுவே இரண்டாவது தோல்வியாக அமைந்தது.

விஷயம் கேள்வியுற்று அனாயாவும் அடித்து பிடித்து ஓடி வர அவளை பார்த்துவிட்ட தாமோதரன், "இனி நீ இங்க வர கூடாது. மீறி வந்த துணியும், பிளாஸ்டிக் பூவை எரிக்க தெரிஞ்ச எனக்கு பேப்பர எரிக்க ரொம்ப நேரமாகாது"

அவர்களின் ஆடிட்டர் அலுவலகத்தையும் எரித்துவிடுவேன் என சபதம் எடுத்து நின்றார். அனாயா ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

"எங்க எரிச்சு கட்டுடா பாப்போம்" விஷ்ணு இன்னும் முறுக்கிக்கொண்டு போக அதற்குள் அவர் வாகனத்தில் ஏறி பறந்திருந்தார்.

விஷ்ணு கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக ஒரு பக்கம் அச்சுறுத்த, மறு பக்கம் பார்த்திபன் கடலின் ஆழ் அமைதியில் அச்சுறுத்தினான்.

"ஸ்ரீனி என்ன நடந்ததுன்னு எனக்கு இப்போ உடனே சொல்லணும்" தந்தை உறுத்து விழித்து கேட்க பயத்தோடு அத்தனையையும் சொல்லி முடிக்க பார்த்திபன் வீட்டினர் வந்துவிட்டனர்.

வித்யா ஒரு பக்கம் அழுக, கிரி வசந்த் என சகோதரர்கள் ஆறுதல்படுத்தினர். அந்த நாள் இரவு நீண்ட இரவாகி போனது. விஷ்ணு பார்த்திபன் என இருவரின் குடும்பமும் உறக்கம் இல்லாமல் தத்தளித்தனர்.

அடுத்த நாள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என எழுந்த பேச்சுக்கு எடுத்த எடுப்பிலே முற்றுப்புள்ளி வைத்திருந்தான் பார்த்திபன்.

"குடுத்தா எல்லாம் அந்த ஆள் கழுத்த புடிச்சிடுவாங்களா, அஞ்சே நிமிஷம் இது நாங்க வேணும்னே வச்ச தீனு ரூட்டை மாத்தி இன்சூரன்ஸ் பணத்தை வர விடாம பண்ணிடுவான்" என்றுவிட்டான்.

இரண்டு நாள் பார்த்திபன் விஷ்ணு இருவரும் அவ்வவ்போழுது ஆடிட்டர் அலுவலம் சென்றாலும் அதிகம் குடவுனுக்கு சென்றுவிடுவார்.

அடுத்து என்ன என்ன என வந்து நின்ற பொழுது இன்சூரன்ஸில் அவர்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காது என்கிற தகவல் வரவும் அதிகம் சோர்ந்து போயினர்.

இன்னும் பல லட்சங்கள் தேவைப்பட்டன. சாத்திய கூறுகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தனர், "நான் வேணும்னா வீட்டை வித்துடவா பார்தி" என கேட்ட நண்பன் தோளில் கை போட்டு சிரித்தான் பார்த்திபன்.

"சிரிக்காதடா பைத்தியக்காரா நான் நிஜமா கேக்குறேன்" விஷ்ணுவின் குரல் தீவிரத்தை தெரிந்தே சிரித்தான் பார்த்திபன்.

"ஒரு விஷயத்தை அழிக்கிறது ரொம்ப ஈஸி விஷ்ணு, உருவாக்குறது தான் கஷ்டம். இனி நாம எதையும் அழிக்க கூடாது. உருவாக்க மட்டும் வழிய பாக்கலாம்" என்றுவிட்டான்.

தெரிந்த இடத்தினில் கேட்கலாம் என முடிவிற்கு வந்திருந்தனர்.

ஆனால் சோதனைக்கென்றே, "ஏற்கனவே வாங்குனது என்னாச்சு தம்பி?" என்றோ, "கேள்விப்பட்டேன் கஷ்டமா தான் இருக்கு. எந்த நம்பிக்கைல குடுக்குறதுனு தான் தெரியல" என க்கு வைத்து பேசுபவர்கள் அனைவரும் ஒன்று போல பதில் கொடுத்தார்கள்.

வெறுத்து போனார்கள் நண்பர்கள் இருவரும்.

"ஏதாவது ஒரு வழி இல்லாமையா போகும், விடுடா பாத்துக்கலாம்" நண்பனுக்கு ஆறுதல் கொடுத்த பார்த்திபனுக்கு அதை விட அதிக ஆறுதல் தேவைப்பட்டது.

வீட்டிற்கு களைப்பாக நள்ளிரவை தாண்டி வந்தவன் அங்கு சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த மகளை பார்த்து மனைவியை ஏறிட்டான்.

"அவா இன்னைக்கு மதியம் கொஞ்சம் அதிகமா தூங்கிட்டா, அதான் மேடம்க்கு இப்போ தூக்கம் வரலயாம்" என்றாள் மனைவி.

தலையை அசைத்தவன் உணவு உண்டு அறைக்குள் சென்றனர். பார்த்திபன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க அவன் கவனத்தை தன்னிடம் ஈர்க்க எண்ணி அப்பா அப்பா என அழைத்துக்கொண்டிருந்தாள் அவன் மகள்.

தகப்பன் கவனம் தன்னிடம் இல்லை எனவும் அவனிடம் வந்தவள் அவன் முகத்தை இரு கைகள் கொண்டு பிடித்து தன்னை பார்க்க செய்ய, "அம்மாகிட்ட போ பூர்வி" என்றான் பார்த்திபன்.

ஆரபி இருவருக்கும் பால் எடுத்து வர கீழே சென்றிருக்க, தந்தையின் மனநிலையே அவன் குரலின் பேதமோ குழந்தைக்கு தெரியவில்லை.

"ப்பா நானு பூச்சி புடிச்சு டுர்ர்ர் போதேன்... அம்மா அப்பா நானு..." என அவளது நாளின் கதையை தந்தைக்கு மெதுவாக எடுத்து கூற பார்த்திபனுக்கு பொறுமை இல்லாமல் போனது.

அதோடு நில்லாமல் உற்சாக மனநிலையில் இருந்த குழந்தை அவன் கழுத்தோடு கைகள் கட்டி அவனை நசுக்க குழந்தையை வேகமாக பிரித்து எடுத்தவனின் மூர்க்கமான செயலில் பூர்வி முகம் சுருங்கிவிட்டது.

போதாமல், "போனு சொன்னா கேக்க மாட்டியா நீ? சும்மா நொய் நொய்னு அப்பா அப்பானு. இறங்கு" என கடினமாக பேச வீறிட்டு அழுதது குழந்தை தந்தையின் இந்த புதிய பரிமாணத்தில்.

பூர்வியின் அழுகை சத்தத்தில் வேகமாக வந்த ஆரபி குழந்தை முழுவதையும் அதை சிறிதும் சட்டை செய்யாமல் அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து அதிர்ந்தாள்.

ஆரபியை பார்த்ததும் அவளை நோக்கி குழந்தை, "ம்மா" என தாவி அவள் கழுத்தில் முகம் புதைத்து அழுதாள்.

"பார்த்தி என்னாச்சு, ஏன் இவா அழுறா?"

"உன்ன சொல்லணும்டி. வீட்டுக்கு வந்த மனுஷனால நிம்மதியா இருக்க முடியிதா. நீ நிம்மதியா இருக்கணும்னு என் தலைல எல்லாத்தையும் கட்டிட்டு போய்டுற"

மனம் நோகும்படி விழியால் எரித்தவனின் வார்த்தைகள் நெஞ்சினில் தீயை வைத்தது போல் சுட்டது மனைவிக்கு. குழந்தையை சுமையாக எப்பொழுது பார்க்க துவங்கினான்?

ஆக அவள் அழுதது கூட இவனின் கோவத்தால் தான் இருந்திருக்கும். எங்கேனும் அடி பட்டுவிட்டதோ என குழந்தையை ஆராய மடிக்கட்டு சிவந்திருந்தது.

அதிர்ந்து பார்த்திபனை பார்த்தவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி போனது. தன்னுடையா பார்த்திபனா இது, இந்த முரட்டுத்தனம் அதுவும் குழந்தையிடம்?

அவனிடம் சண்டையிட்டு வாதாட வந்த மனதினை இழுத்து பிடித்து நிறுத்தியவள் கண்ணீரை துடைத்து குழந்தையை அழைத்து வெளியே வந்துவிட்டாள்.

நீண்ட நேரம் அழுதாள் குழந்தை, அழுது அழுது பூர்வி உறங்கிவிட ஆரபிக்கு தூக்கம் மொத்தமாய் பறிபோனது. அறைக்கு குழந்தையோடு வந்தவள் அமைதியாக படுத்துவிட்டாள்.

பார்த்திபனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் கேட்கவும் இல்லை. அன்றொரு நாள் மட்டும் அல்லாது அடுத்த இரண்டு நாட்களும் பார்த்திபனின் சினம் அதிகமாக தான் செய்தது.

வீட்டினரிடம் கோவத்தை காட்டாமல் மொத்தமாய் அமைதியாகிவிடுபவன் மொத்த மனஅழுத்தத்தையும் மனைவி மகளிடம் காட்ட துவங்கினான்.

விளைவு ஆரபி தந்தை பக்கம் செல்வதையே நிறுத்திவிட்டாள். எந்நேரமும் அன்னை வால் பிடித்து செல்வாள். ஆரபி கூட குழந்தையை அதிகம் பார்த்திபனிடம் விடவில்லை.

அவன் கோவத்தை தான் தங்கலாம் குழந்தை எதற்கு தாங்க வேண்டும், அது மட்டும் அல்லாமல் தகப்பன் மேல் குழந்தைக்கு எந்த வித தவறான எண்ணமும் வந்துவிட கூடாதென்கிற கரிசனை அது.

மனஅழுத்தம், மனைவி குழந்தையின் ஒதுக்கம் என எரிச்சல் கடலில் மிதந்தவன் மொத்தமாய் வெடித்தான் அன்று.

சனிக்கிழமை என்பதால் வேகமாக வீட்டிற்கு வந்திருந்தான் பார்த்திபன். அமைதியாக அமர்த்திருந்தவன் சிந்தை எல்லாம் சில நிமிடங்களுக்கு முன்பு விஷ்ணு கொடுத்த தகவலில் சிக்கிக்கொண்டு இருந்தது.

"எரிஞ்ச பொருள் வச்சு எப்படி கல்யாணத்துக்கு டெக்கரேட் பண்ணுவீங்கனு குதிக்கிறான்டா அவன். சொல்லியாச்சு புதுசு வாங்கி தான் பண்றோம்னு. ஒரேடியா வேற இடம் சொல்லுகிறோம்னு வச்சிட்டான்"

இது என்ன புது சோதனை என்று தான் இருந்தது இருவருக்கும். எதையும் கடந்து வந்துவிடலாம் என்கிற தைரியம் இருந்தாலும் அந்த தைரியத்தை சோதிக்கவே வரிசையாக நிகழ்வுகள் நடக்கின்றது.

துருவ்வோடு விளையாடிக்கொண்டிருந்த பூர்வி அங்கிருந்த ஒரு மர நாற்காலியில் மோதி கீழே விழுந்துவிட குழந்தையின் அழுகை சத்தத்தில் வேகமாக வந்த பார்த்திபன் அவளை எழுப்பி நிறுத்தி,

"என்னடா ஆச்சு, எங்க வலிக்கிது" என அவளை ஆராய்ந்து கொண்டிருந்தான் தந்தை.

குழந்தை அழுகுரலில் வேகமாக வந்த ஆரபி கணவனிடம் சென்று குழந்தையை வேகமாக தூக்க முற்பட்டாள்.

பார்த்திபனுக்கு தன்னை பார்க்காமல் குழந்தை மேல் மட்டுமே முழு கவனம் வைத்திருக்கும் மனைவியின் செயல்பாடு அதன் பிறகு தான் புரியவே செய்தது.

சுள்ளென கோவம் வர, வீட்டினர் அனைவரும் அங்கு தான் உள்ளனர் என்பதை கூட மறந்து போனான்.

"நான் குழந்தையை பாத்துக்குறேன் நீ போ" என்றான் மெதுவாக.

அவளோ நகரவில்லை, பயமாக இருந்தது அவனிடம் மகளை விட, "இல்ல நான் பாத்துக்குறேன் குடுங்கோ" என்றாள் இன்னும் அவனை பார்க்காமல்.

"என்னடி ரொம்ப தான் ஓவரா பண்ற, நானும் பாக்கறேன் என் பொண்ணு என்கிட்ட வந்தாலே ஏதோ ஆகாதவன் கைக்கு போன மாதிரி இந்த துடி துடிக்கிற. என்ன மொத்தமா என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிக்க பாக்கறியா?"

எதற்காக இவ்வாறு பேசுகிறோம், தான் பேசியதில் அர்த்தம் உள்ளதா, இல்லை மனைவியின் செயலின் காரணம் என்ன என எதுவும் ஆராயாது அவன் பேசிவிட வீடே அமைதியில் மூழ்கியது.

ஆரபியால் பார்த்திபனின் வார்த்தையை ஜீரணிக்கவே இயலவில்லை.

என்ன வார்த்தை கூறுகிறான், குழந்தையை எதற்காக தகப்பனிடம் பிரித்துவிட போகிறேன் அதுவும் வார்த்தைக்கு வார்த்தை அவன் பெண் என்று அழுத்தம் வேறு.

அப்பொழுது தான் யார்? என்கிற வினாவும் இணைந்து உருவாகி பெண்ணவளை மருக செய்தது. பூர்வியோ தந்தையின் கோவத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்த வலியையும் மறந்து அன்னையிடம் வருவதற்கு தாவினாள்.

"நீ நினச்ச மாதிரி தானே நடக்குது. புடி" வெறியோடு கத்தியவன் பூர்வியை ஆரபியிதே ஒப்படைத்தான்.

"பார்த்திபா என்ன இது இப்டி பேசுற, பாரு மருமக அழுகுது" வித்யா மருமகளின் கலங்கிய முகத்தை பார்க்க தாளாமல் மகனை அதிசயமாக பார்த்தார்.

இது வரை பார்த்திபன் இது போல் மனைவி மக்களிடம் நடந்ததே இல்லை. சிறு அதட்டல் கூட இருந்ததில்லை. இன்றோ அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போல் கடும் சொற்களால் தங்கியிருந்தான்.

"எல்லாம் நடிப்பு தான் ம்மா. என் பொண்ணு என்கிட்ட வந்து மூணு நாள் ஆச்சு. இப்ப அழுதா நம்பிடுவேனா" நிற்காமல் வெளியே சென்றுவிட்டான்.

ஆரபிக்கு அங்கு நிற்கவே கால்கள் கூசியது. கமலவல்லி, வசந்த் என அனைவரும் அங்கு நிற்க துடிதுடித்து போனாள். ஓட்டமும் நடையுமாக அறைக்குள் புகுந்தவள் இரவு உணவுக்கு கூட வெளியே வரவில்லை.

குழந்தையை மட்டும் அத்தையிடம் அனுப்பி வைத்தாள். கீழே சென்ற குழந்தையோ வித்யாவுடனே உறங்கிவிட இவளை தனிமை அதிகமாக வாட்டியது. அப்படி ஒரு அழுகை வந்தது.

பார்த்திபன் வந்தது, மெத்தையில் விழுந்தது என எல்லாம் தெரிந்தது. சமாதானம் செய்ய வருவான் என நினைத்திருக்க அனைத்தையும் பொய்யாக்கினான்.

மறுநாள் காலை பார்த்திபன் வாக்கிங் செல்ல தயாராக அவன் முன்பு தன்னுடைய மொத்த நகை பெட்டிகளையும் நீட்டினாள்.

'என்ன?' கேட்டான் புருவம் உயர்த்தி.

"உமக்கு பண பிரச்சனைன்னு நேக்கு புரியிது. இதை எடுத்துகோங்கோ. இது பத்தாது தான் ஆனாலும் அவசர தேவைக்கு வித்துட கூட செய்ங்கோ" என்றாள் அவன் கண் பார்த்து.

நகை பெட்டிகளை திறந்து பார்த்தான் அனைத்தும் அவள் தந்தை வீட்டிலிருந்து கொண்டு வந்தது. எப்படியும் நூறு சவரன் மேல் இருக்கும். கண்ணாலே எடை போட்டவன் இதழ்கள் கேலியில் வளைந்தது.

"ஆக என்ன ஒன்னத்துக்கும் ஆகாதவன்னே முடிவு பண்ணிட்ட அப்டி தானே?"

இதுவும் தப்பா என நொந்து போனாள் பெண், "பார்த்தி..." தோள்கள் தளர்ந்து இயலாமையில் கணவனை நோக்கினாள்.

"நேத்து நான் அவ்ளோ சொல்லியும் குழந்தையை ரூம்க்கு கூட்டிட்டு வரல. போதாதுக்கு உன் அப்பன் குடுத்த நகையை எடுத்து நீட்டுற. ம்ம்ம்?"

"அவா அங்கையே தூங்கிட்டா ன்னா, அதான் விட்டுட்டேன். நீங்க ஏன் அப்டி நினைக்குறேள், உங்க சிக்கல்க்கு இது ஒரு சின்ன உதவிப்படியா நினைச்சுக்கோங்கோ. தோப்பனார் எதுவும் நினைக்க மாட்டார்"

அவன் கை பிடிக்க வர இரண்டடி பின்னே சென்று அவளை இன்னும் முறைத்தான்.

கண்ணீர் துளி ஒன்று கன்னத்தை நனைக்க, "ஏன்... ஏன் இப்டி எல்லாம் பண்றேள்? உம்மை கஷ்டம் நேக்கு புரியிது அதுல இருந்து வெளிய வர ஹெல்ப் தான் பண்றேன் நான். பணத்தால் தானே நோக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ், கோவம் எல்லாம் வருது"

"ஓ ஒரு பிஸ்னஸ் போச்சுன்னா என்கிட்ட காசு இல்ல, மரியாதை இல்ல, தகப்பன்னு உரிமை கூட இல்லாம போய்டும்? அப்டி தானே"

ஐயோ என்றிருந்தது அவளுக்கு, "நான் எப்பவும் அப்டி நின்ன மாட்டேன் பார்த்தி. விஷ்ணு அண்ணாகிட்ட பேசுனேன் அவா தான் நீர் பணத்துக்கு அலைஞ்சிட்டு இருக்கதா சொன்னா"

"அதுக்குன்னு உன் அப்பா பணத்தை நான் எடுக்குமா?" என குதித்தான்.

ஆரபிகோ கோவம் தான் வந்தது அவனது இந்த அர்த்தமற்ற உதாசீனத்தில், "ஆமா அஞ்சு வட்டி, பத்து வட்டிக்கு வெளிய கடன் வாங்குவேள். ஆனா என்னோட தோப்பனார் நேக்கு போட்ட நகைல உமக்கு எதுவும் வேணாம். அவர் எத்தனை தடவை உங்ககிட்ட பேச முயற்சி பண்ணிருப்பார், ஏதோ எதிரியை பாத்தாப்ல பாக்குறது. எல்லாம் திமிர், தான்னு அகங்காரம்"

"ஆமாடி எனக்கு அகங்காரம் தான். உன்ன கட்டிக்குடுக்க உன் அப்பா போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? வீட்டோட மாப்பிள்ளையா நான் வரணுமாம் உன் அப்பனுக்கு.

அதோட நிறுத்துனாரா, என்ன பத்தி விசாரிச்சாராம் விளையாட்டு குணம், பொறுப்பிலாம இருந்தவனாம். அதுனால என்னால வெளிய வேலை செஞ்சு அவரோட மகளை பாத்துக்க வக்கிலாதவனா நிக்கிறேனாம்.

அதான் மொத்தமா என் வீட்டுக்கு வந்துடு, என் கடைல கல்லால ஒக்கார வச்சு அழகு பாக்குறேன்னு சொன்னார்" நினைக்க நினைக்க பார்த்திபனுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.

பழைய வடு இன்னும் ஆறாமல் தீயாய் நெஞ்சினில் குத்தியது இப்பொழுதும். சிறுக மறக்க முயன்றும் இன்று மனைவி அந்த காயத்தினை ஆழமாக தோண்டிவிட்டிருந்தாள்.

"நீ எதுக்குமே லாய்க்கி இல்ல, உதவாக்கரைனு சொன்ன ஆளோட காசு எனக்கு ஒன்னும் வேணாம்"

இது எதுவும் அவளே அறியாத ஒன்று. அவள் தந்தையும் இதனை பகிர்ந்ததில்லை பார்த்திபனும் ஒரு நாள் கூட சொன்னது இல்லை.

"சா... சாரி பார்த்தி தோப்பனார் இப்டி பேசியிருப்பார்னு நே... நேக்கு தெரியாது"

நெற்றியை நீவினான் எரிச்சலில், "உனக்கு எப்படி தெரியும், உன்னால தானே இந்த பேச்செல்லாம் நான் கேக்க வேண்டி இருக்கு, அங்க ஆரமிச்சது எனக்கு பிரச்சனை"

விழி விரிந்தது ஆரபிக்கு, "ரெக்ரட் பன்றேளா ன்னா"

என்ன முயன்றும் அழுகையை ஆரபியால் கட்டுப்படுத்த இயலவில்லை, அதோடு அவன் மௌனம் அவளை கொன்று வதைத்தது.

கண்ணீரை வேகமாக துடைத்தவள் தான் எடுத்திருந்த நகைகளை எல்லாம் மீண்டும் அலமாரியில் சேர்க்க பார்த்திபன் வெளியேறியிருந்தான்.

அவன் நகர்ந்ததும் ஒருபாடு அழுது சோர்ந்தவள் தன்னுடைய உடைகளை ஒரு பையில் வைத்து குளித்து வர பார்த்திபனும் வந்திருந்தான்.

பை மற்றும் மனைவியின் அவசரத்தை பார்த்தவன், "எங்க போற?" என்றான்.

"அம்மா வீட்டுக்கு. ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன்" அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

மனமெங்கும் ரணம். ஒரே நாளில் கணவனுக்கு வேண்டாதவளாகி போனோமா என்று.

"என்ன திடீர்னு"

"நான் மட்டும் தான் போறேன். பூர்வி இங்க தான் இருப்பா"

பதில் கொடுத்தவள் கைகள் மளமளவென அலமாரியை சுத்தம் செய்தது. கணவன் உடைகளுக்கு அருகிலே அவனுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று பூர்வியின் உடையை அருகே வைத்தாள்.

"உன்ன விட்டு பிள்ளை எப்படி இருப்பா?"

"நீங்க பாத்துக்குவேள்" உன் பிள்ளையை நான் பிரிப்பதாக கூறினாய் தானே இப்பொழுது நீயே பார் என்று இருந்தது அவள் வார்த்தை.

"என்ன ஒரு மாதிரி பேசுற" அவள் மணிக்கட்டை பிடித்து பார்த்திபன் திருப்ப முயல, 'யார் நானா?' என கத்த துடித்தவள் அவன் பிடியை உதறினாள்.

"நான் நல்லா தான் இருக்கேன், அப்றம் இதுக்கும் நடிக்கிறேன்னு நடிகை பட்டம் குடுத்துடாதேள்" சிரிப்போடு பதில் கொடுத்தவள் குளியலறை சென்று முகம் கழுவி வந்து தன்னுடைய பையை எடுத்து கணவன் முகத்தை கூட பார்க்காமல் கீழே சென்றாள்.

ஆரபியை மௌனமாய் பின்தொடர்ந்த பார்த்திபனுக்கு மனம் தவித்தது மனைவி விலகி நடப்பதில். ஆனாலும் அவன் அவளை நிறுத்தவில்லை, கீழே சென்றவள் வித்யா அறைக்கு சென்று உறங்கும் குழந்தைக்கு வலிக்காமல் ஒரு முத்தம் கொடுத்து, "அம்மா வீடு வர போய்ட்டு வர்றேன் அத்தமா" என்றாள்.

அவர் பார்வை முகம் சிவந்து கண்கள் வீங்கியிருக்கும் மருமகளையும் அவள் பின்னே அவளையே பார்த்து நிற்கும் மகன் மீதும் மாறி மாறி விழுந்தது.

தடுத்தாலும் நிற்கும் நிலையில் அவள் இல்லை என உணர்ந்தவர் சரி என்றார், ஆனாலும் குழந்தையை விட்டா என யோசித்த பொழுது நேற்று பார்த்திபன் பேசியது நினைவு வர, 'அவன் அனுபவிக்கட்டும்' என்றுவிட்டார்.

வீட்டில் மற்றவர் அவரவர் அறையை விட்டு வெளியே வராதது ஆரபிக்கு வசதியாகி போனது.

வாசலை நோக்கி நடந்தவளிடம், "வா வீட்ல விடுறேன்" அழைத்தான் பார்த்திபன்.

அவளோ நிற்காமல் நடக்க, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பார்த்திபன் நெஞ்சினில் முள்ளாய் குத்தியது.

"மாமி" உருகும் குரலில் வந்தவன் அழைப்பு அவளை திரும்பி பார்க்க செய்தது. இப்பொழுது தான் அவளை நன்கு ஆராய்ந்தான். நிறைய அழுத்திருக்கிறாள் என அடித்து கூறியது சிவந்து வீங்கிய முகம்.

"கேப் சொல்லிட்டேன்" என்று அவன் கண்ணிலிருந்து மறைந்தே போனாள் பார்த்திபன் மனைவி.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro