Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 10


"இன்னைக்கு அவர் வரவும் நீ நல்லா கேக்குற க்கா. நீ கேக்குற கேள்வில அவர் பயந்தே போகணும்..." சகோதரிக்கு கட்டளையிட்டு, அந்த அறையில் அங்கும் இங்கும் நடந்தே அளந்து கொண்டிருந்தான் ஸ்ரீனிவாசன்.

ஆரபி கட்டிலில் அமர்ந்திருக்க, அவள் மடியில் பூர்வி அமைதியாக அமர்ந்து, மாமனை அவன் செல்லும் பக்கமெல்லாம் கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆரபியிடம் அதிகமான அமைதி மட்டுமே இருந்தது. குழந்தைக்கு மாமனிடம் செல்ல கைகள் எல்லாம் பரபரத்தது.

"மாமா... மாமா... தூக்கு..." கைகளை நீட்டி அவனிடம் கேட்க, அவனோ அசையவில்லை.

"நோடா... நோ... வர கூடாது, வர கூடாது மாமாகிட்ட... இன்னைக்கு அம்மாவும் மாமாவும் உன் அப்பா கூட சண்டை போட்டு முடிகிற வர மாமா பக்கத்துலயே நீ வர கூடாது."

தன்னுடைய கையை அவளிடம் நீட்டி, "பாருடா... மாமா கை சூடா இருக்குல்ல?" ஸ்ரீனிவாசன் படு சீரியஸாக கேட்க, சிறியவளுக்கோ மாமன் ஏதோ தன்னிடம் கொடுக்கிறான் என்ற ஆசையில், அவன் கையை எட்டி தொட்டு பார்க்க அதில் அவள் குட்டி கைகளுக்கு ஒன்றுமே அகப்படவில்லை.

"காதோ..." என்றாள் உதட்டைப் பிதுக்கி.

ஆரபி சிரிப்பை அடக்கி சகோதரனைப் பார்த்தாள்.

"என்னது காணமா?" திருதிருத்தவன், அதனை மறந்து மீண்டும் கோவத்தை அருகில் அமர்த்திக்கொண்டான்.

"சூடா இருக்குற கை குளுராகுற வரை மாமா உன்ன தூக்க மாட்டேன்டா. இருக்கு, இன்னைக்கு உன் அப்பாக்கு..."

அவன் பேசுவது எதுவும் புரியாதவள், இறுதியாக அவன் தன்னை தூக்க மாட்டான் என்றதை மட்டும் புரிந்துகொண்டு உடனே சிறு தொண்டையைத் திறந்து வீறிட்டு அழத் துவங்கிவிட்டாள்.

சரியாக அந்த நேரம் அறையினுள் நுழைந்த பார்த்திபன், குழந்தை ஸ்ரீனியை நோக்கி கை நீட்டி அழுவதைப் பார்த்து ஸ்ரீனியைப் பார்க்க, அவனோ கைகள் இரண்டையும் பின்னே கட்டி பிடிவாதமாக நின்றான்.

"பூரி, மாமா உன்ன தூக்குனா கோவத்தை மறந்துடுவேன், சும்மா இருடா..." என்றான் தான் இருந்த பிடியிலிருந்து தளராமல்.

"பிள்ளையை ஏன்டா அழுக வக்கிற? தூக்குடா..." மிரட்டினான் பார்த்திபன்.

"ம்ம்... வாங்க வாங்க... உங்க மகனா அப்டி... அடுத்தவங்க மகனு வந்தா ஈஸியா இருக்கா உங்களுக்கு?" சண்டைக்கு நின்றான் ஸ்ரீனி.

"இவன் என்ன பேசுறான் ஆராம்மா?" மனைவியிடம் கேள்வி கேட்டு அழுகும் குழந்தையை வாங்கி சமாதானம் செய்ய முயன்றான்.

ஆரபியிடமிருந்து பதிலே வரவில்லை. குழந்தையோ தந்தையிடம் வந்து அழுகையை சற்று நிறுத்தினாலும், தாய்மாமனைப் பார்த்து பார்த்து ஏங்கியது.

தந்தையானவனுக்கு பொறுக்க முடியவில்லை, ஸ்ரீனியின் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்தவன், குழந்தையை வம்படியாக அவனிடம் விட்டு, "பிச்சிடுவேன், இது மாதிரி எதுவும் பண்ணதை பாத்தேன்னா..." கோவமாக மிரட்டி விலகினான்.

சிறியவள் மாமனிடம் வந்ததும் அவன் கழுத்தைக் கட்டி, கழுத்தில் முகம் வைத்து படுத்துக்கொண்டாள்.

ஸ்ரீனிக்கே சங்கடமாகிப் போனது. குழந்தையை அழுக வைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலோங்க, "சாரிடா பூரி... சாரி... மாமா இனிமேல் அப்டி பண்ண மாட்டேன். பேபிக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, மாமா வாங்கி தர்றேன்."

"அவன் ஒன்னும் என் பொண்ணுக்கு வாங்கி தர வேணாம். அழுக வச்சிட்டு சமாதானம் பண்றானாம்... இதுக்காடா இங்க வந்த நீ?"

"யோவ்... நான் உன்கிட்ட பேசல. என் மருமககிட்ட தான் பேசுறேன். பூரி உனக்கு என்னடா வேணும்?" தந்தை பேச்சை சிறிதும் மீறாமல் எதுவும் வேண்டாமென தலையை ஆட்டியது குழந்தை.

"ஸ்ரீனி இது என்ன அத்திம்பேர்கிட்ட இப்டி பேசுற?" இதுவரை மாமனிடம் தனியாக இருக்கும் பொழுது மட்டுமே பேசும் அதீத உரிமை பேச்சு முதல் முறை சகோதரி முன்பு பேச, ஆரபிக்கு பயம் வந்தது, எங்கே கணவனுக்கு கோவம் வந்துவிடுமோ என்று.

"விடு ஆராமா..." மிக சாதாரணமாக கூறி படுக்கையில் அமர்ந்தவன் சாக்ஸை அவிழ்க்க, ஆரபி வந்து கணவன் முன்னே நின்று அவன் நெற்றியில் திருநீறை வைத்துவிட்டு சகோதரனுக்கும் வைத்தாள்.

அவனுக்கோ கோவம், "ம்ம்... நீ இப்டியே இரு, அவர் உன்ன நல்லா ஏமாத்திட்டே போகட்டும்..."

சகோதரி கையைத் தட்டிவிட அவள் அவனை முறைத்து மீண்டும் திருநீறை வைத்துவிட்டு தான் அடங்கினாள். பார்த்திபன் என்ன நடக்கின்றது என பார்க்க, மனைவி சலனமே இல்லாமல் ஒரு லட்டை எடுத்து கணவனுக்கு ஊட்டிவிட தலையில் அடித்துக்கொண்டான் ஸ்ரீனி.

"போதும்டி, நீ சாப்பிட்டியா? உன் தம்பிக்கு குடுத்தியா?" மனைவிக்கு ஊட்டிவிட்டு, மீதம் இருந்த பதார்த்தத்தை வாங்கி உண்டான் பார்த்திபன்.

"நோக்கு அந்த பெருமாள் கோவில்ல இருக்க பிரசாதம் புடிக்கும்ல, அதான் ரெண்டு வாங்கிண்டு வந்தேன்." இருவரின் பாசத்தைப் பார்த்து அகம் பூரித்தாலும் வெளியில் இரும்பாக காட்டிக்கொண்டான் ஸ்ரீனி.

அவன் முகத்தை வந்ததில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்த பார்த்திபன், "இவனுக்கு என்னவாம்?" மனைவியைப் பார்த்து கேட்டான்.

ஆரபி தோள் குலுக்கி சகோதரன் தோளில் உறங்கிக் கொண்டிருக்கும் மகளை வாங்கி படுக்கையில் படுக்க வைக்க, ஆரபி எதுவும் பேசப் போவதில்லை என்பதை உணர்ந்து, சட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்த பார்த்திபனிடம், அவன் காலையில் அனாயாவோடு நின்ற புகைப்படத்தைக் காட்டினான் ஸ்ரீனி.

அதனைப் பார்த்ததும் பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, முதலில் திரும்பி மனைவியை தான் பார்த்தான். தன்னை பார்த்திபன் பார்வை துளைப்பதை உணர்ந்து கணவன் பக்கம் திரும்பியவள்,

'என்ன?' என சாதாரண பார்வையோடு கேட்க, ஒன்றும் இல்லை என தலையை ஆட்டியவன் எதுவும் பார்க்காதது போல், வேறு உடையை எடுத்து குளியலறைக்கு செல்லவிருந்தவன், ஒரு நொடி நின்று ஸ்ரீனியைப் பார்த்து, "நாளைக்கு குடோன் வந்து சேரு, வேலை இருக்கு."

"வர முடியாது போங்க..." முகத்தைத் தூக்கி வைத்து அவன் பேசியதை பொருட்படுத்தவே இல்லை பார்த்திபன்.

அவன் உள்ளே சென்றதும் சகோதரியிடம், "என்ன ஏதுனு கேக்க மாட்டியா நீ? அவரும் நல்லதா போச்சுனு எஸ்கேப் ஆகிட்டார். ஊட்டிவிடு, இன்னும் லட்டு, கேசரினு..."

சரமாரியாக பேசிக்கொண்டிருந்த சகோதரனைப் பார்த்து மார்புக்கு குறுக்காக கை கட்டி, "சரி என்ன விடு... நீ அனுப்புன இருக்க போட்டோ பாத்து உன் தோப்பனார் எண்ணங்கள் நோக்கு தப்பா தோணுத்தா?" ஆரபி கேட்ட அந்த கேள்வியில் ஸ்ரீனி முகத்தில் இருந்த கோவம் எல்லாம் காற்றோடு பறந்து போயிருந்தது.

"என் ஃப்ரண்ட் எனக்கு இதை அனுப்பி என்ன மச்சான்னு கேக்குறான். இவர் எதுக்கு அப்டி பப்ளிக்கா ஹக் பண்ணிட்டு நிக்கிறார்?"

"அது உன் பிரச்சனை ஸ்ரீனி. நேக்கு தெரியும், என்னோட ஆத்துகார் பத்தி. அவர் என்ன பண்ணாலும் அது என்னை பாதிக்காத மாதிரி தான் பாத்துப்பார், அது நேக்கும் தெரியும். இது போல ஏதாவது ஒன்ன என்கிட்ட எடுத்துட்டு வர கூடாது.

வந்தனா இனி ஜென்மத்துக்கும் உன்கிட்ட நான் பேச மாட்டேன் சொல்லிண்டேன். இந்த போட்டோ இல்ல, இது போல எத்தனை போட்டோ வந்தாலும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு, எங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு."

அழுத்தமாக ஆரபி மொழியும் நேரமே, "மாமி... சொக்க வக்கிறடி..." குளியலறையிலிருந்து மகிழ்ச்சியோடு ஓங்கி ஒலித்தது பார்த்திபன் குரல். ஆரபிக்கு முகம் குப்பென வெட்கத்தில் சிவக்க, ஸ்ரீனிக்கு சங்கடத்தில் முகம் சிவந்தது.

"நாளைக்கு இருக்குயா உனக்கு..." பார்த்திபனிடம் கூறிய ஸ்ரீனி சகோதரியிடம் கிளம்புவதாக கூற, "கீழ வெயிட் பண்ணு ஸ்ரீனி, நான் பாப்பாவை எழுப்பிண்டு வர்றேன்."

சகோதரியை முறைத்து குழந்தையைத் தூக்கி அவன் நகர்ந்துவிட குளியலறை கதவின் அருகே சென்றவள், "ஏன்னா பூண்டு சட்னி வைக்கவா?" கணவனிடம் கேட்க, எந்த பதிலும் இல்லாமல் போக கதவை தட்டி மீண்டும் கேட்டாள்.

கதவு திறக்கவும் சற்று விலகி நின்றவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தவன், அதே கதவின் மேல் மனைவியை மடக்கி நிறுத்தினான்.

"பார்த்தி..." ஆரபி வியப்போடு அவனை நோக்க, அழுத்தமாய் மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவன், "என்னோட அழகிடி நீ...!" அத்தனை காதலைக் கண்களில் தேக்கி கூறினான் பார்த்திபன்.

அவன் அழகி இன்னும் அழகாக சிரித்தாள், "என்ன ஆச்சு?" என்று. பார்த்திபன் மீண்டும் அவளது கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து விலகி வெளியே செல்ல வழிவிட்டு நின்றான்.

அவன் அன்பில் சொக்கி நின்றவள் கணவன் மனதினை சரியாக புரிந்துகொண்டு சிரிப்போடு எக்கி, பட்டும் படாமல் கணவன் இதழில் முத்தம் ஒன்றை கொடுத்து ஓடியிருந்தாள்.

***

"இப்ப உன்னால எதுவும் பண்ண முடியுமா, முடியாதா?" ஆவேசமாக கேட்டான் அவன்.

"யார் சார் முடியாதுனு சொன்னது, கண்டிப்பா முடிக்கலாம். ஆனா நீதான் கவனிக்கவே மாட்டிக்கிற..." குற்றம் சாட்டியது கைப்பேசியிலிருந்து வந்த மற்றொரு குரல்.

"என்ன கவனிக்கணும்? இல்ல என்ன கவனிக்கணும்ங்கிறேன்? வேலைய ஒழுங்கா செய்ய துப்பில்லை, இதுல கவனிக்கணுமாமே... முடிக்கணும்... அந்த பார்த்திபனை அடக்கிடணும். மொத்தமா அடக்கிடணும். அதுக்கு அவன் உசுர மட்டும் விட்டு என்ன வேணாலும் பண்ணிக்கோ. பண்ணிட்டு சொல்லு, நீ நினைக்கிறத விட அதிகமாவே செய்றேன்." என்றான் இவன் அத்தனை வன்மத்தை வைத்து.

"பாத்தியா சார் இதான் என் பிரச்சனையே... ஆள தூக்கணும்னா ஒரே நிமிசத்துல தடயமே தெரியாம அலேக்கா தூக்கிடலாம். நீ சும்மா தட்டி விடதான் சொல்ற சார். இது நிதானமா...? அடி வாங்குறவன் அசருற நேரம் பாத்து அடிக்கணும். நீ டீடையில்ஸ் இன்னும் நல்லா சொல்லு. நான் ஸ்கெட்ச் போட்டு சொல்றேன். கொஞ்சம் தப்பிச்சாலும் நானும் மாட்டுவேன், நீயும் சிக்குவ."

"என்னமோ சொல்ற, ஆனா ஒரு மாசம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள வேலைய முடிச்சிட்டு வர்ற..." இணைப்பைத் துண்டித்தவன் மனம் குழப்பத்தில் அதிகமாய் உழன்றது.

***

"எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றிங்களா?" முகத்தை அப்பாவியாக வைத்து அனாயா, ஸ்ரீனியிடம் கேட்க, அவளது அப்பாவித்தனத்தைப் பார்த்து தன்னுடைய மாமன் எதற்கு இவளைத் தன்னிடம் நெருங்க விட்டான் என புரிந்தது.

சிறிதும் தவறான பார்வையோ, அர்த்தமற்ற அதிகப்படியான பேச்சுகளோ அவளிடம் இந்த இரண்டு நாட்களில் இல்லை. வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும், கொடுத்த நேரத்தில் வேலையை முடிக்கும் வேகமும் அதிகமாகவே இருந்தது.

இந்த பெண்ணையும் அல்லவா தவறாக யோசித்துவிட்டோம் என்கிற வருத்தம், சிறிதேனும் முளைக்கதான் செய்தது ஸ்ரீனிக்கு. இரண்டு நாட்கள் ஆகியது அனாயா மற்றும் ஸ்ரீனி, பார்த்திபன் மற்றும் விஷ்ணு குடோனில் வேலை பார்க்க துவங்கி. 

இருவரையும் அங்கு சூப்பர்வைசர் பணியில் அமர்த்தி மொத்த பொறுப்பையும் நீங்கள் தான் பார்க்க வேண்டும் என்ற கட்டளையோடு விட்டு சென்றான்.

அந்த மாதத்தின் கடைசி முகூர்த்தம் நாளை மறுநாள் இருக்க, நாளையே ஒரு பெரிய வீட்டின் திருமணத்திற்கு சென்று சேர வேண்டிய பொருட்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு, போன பொருட்களை எல்லாம் இன்றே எடுத்து வைத்தால் தான் நாளை அதிக வேலை இருக்காது.

"என்ன பண்ணணும்?" பொருட்கள் எடுத்து வைத்திருந்த இடத்திற்கு கையிலிருந்த நோட்டோடு நடந்தான் ஸ்ரீனி.

"கஸ்டமர் திடீர்னு நேம் போர்டு மாடல் அனுப்பி அது மாதிரி வேணும்னு சொல்றாங்க. அதோட நைட் பதினொரு மணிக்கு மேல அந்த பார்ட்டி ஹால் பின்னாடி இருக்க, எம்ப்ட்டி ஸ்பேஸ்ல டிஸ்கோ செட் பண்ணி தர சொல்றாங்க."

"லூசா அவனுங்க? சரி, மியூசிக் சிஸ்டம் ஏதாவது இருக்கா?" ஸ்ரீனி.

"இல்ல, எல்லாமே வேற வேற இடத்துக்கு புக் ஆகிடுச்சு." என்றாள் அனாயா.

ஸ்ரீனி, "சரி இரு, அத்திம்பேருக்கு போன் பண்றேன்." உடனே தகவல் சென்றிருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பார்த்திபன் அங்கு நின்றான்.

"என்ன இது, இப்டிதான் நினைச்சு நினைச்சு பேசுவாங்களா? போன் பண்ணி என்னனு நாலு வார்த்தை கேளுங்க." என்றான் ஸ்ரீனி கோவமாக.

"இருடா... ஏன் ம்மா, இப்பதான் சொல்றாங்களா?" அனாயாவிடம் திரும்பியது பார்த்திபன் பார்வை.

"ஆமா சார், இப்பதான் சொல்றாங்க. நேம் வேற கிளாஸ்ல டிஸ்ப்ளே கேக்குறாங்க." என்றாள் அவள்.

"நேம் போர்டு வைக்கிறது பிரச்சனை இல்ல ம்மா, எல்இடி லைட் வச்சு பண்ணிடலாம். மியூசிக் சிஸ்டம் கூட வேற இடத்துல இருந்து எடுத்துக்கலாம், இப்ப பிரச்சனையே டிஜே தான். எப்படி அரேன்ஞ் பண்றதுனு தெரியல." கைப்பேசியைப் பார்த்துக்கொண்டு யோசித்தான் பார்த்திபன்.

"நீங்க எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்க? போன் பண்ணி பண்ண முடியாதுனு சொல்லுங்க." காரமாக எரிந்தான் ஸ்ரீனி.

"கூல் டவுன் ஸ்ரீனி. இக்கட்டான நிலமைல தான் நிதானமா யோசிச்சு பண்ணணும். பெரிய இடத்து ஃபங்ஷன் இது, லாஸ்ட் மினிட்ல ஒரு தரமான டிஸ்கோ செட்டப் குடுத்தா, இத விட பெரிய விளம்பரம் நமக்கு கிடைக்கவே செய்யாது.

எல்லா ஆபர்ச்சூனிடியையும் நல்லா யூஸ் பண்ணிக்கணும். நீ கிளாஸ் வாங்கிட்டு வர சொல்லு. அந்த வேலைய பாக்கலாம். நான் ஸ்பீக்கர்க்கு பாக்குறேன்." அடுத்தடுத்த வேலைகள் மும்முரமாக நடக்க, பார்த்திபன் எதிர்பார்த்தது போல் ஸ்பீக்கர் அவன் கேட்ட வரை கிடைக்கவில்லை.

"நீ இங்க பாரு ம்மா, நான் புதுசாவே கடைல எதுவும் கெடைக்கிதானு பாத்துட்டு வர்றேன்."

அனாயாவிடம் கூறி திரும்ப விஷ்ணுவின் புல்லட், அவ்விடத்தையே அதிர வைத்து உள்ளே நுழைந்தது.

'இவன் எதுக்கு இங்க வந்தான்?' யோசனையோடு பார்த்திபன், விஷ்ணுவைப் பார்க்க, கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்த விஷ்ணுவுக்கு, தூரத்தில் இருந்து பார்த்த பொழுதே அனாயாவின் இருப்பு தெரிந்துவிட்டது.

அவளையும் பார்த்திபனையும் பார்த்துக்கொண்டே கண்ணாடியை அவிழ்த்து சட்டையினுள் மாட்டி மெல்ல நடந்து வந்தான். முகத்தில் எந்தவிதமான பாவனையும் இல்லாமல் வந்தவன் பார்வை, தன் மேல் விழுந்த நொடியே தன்னுடைய மனதின் வேதனைகளை எல்லாம் தோண்டி புதைத்தவள், அவ்விடத்தை விட்டு வேலையைத் தொடர சென்றுவிட்டாள்.

"இவ இங்க என்ன பண்றா?" தனக்கு முதுகு காட்டி செல்பவளை விட்டு பிரியாமல் வந்தது விஷ்ணுவின் கேள்வி.

"வேலை பாக்குறா விஷ்ணு. நீ என்ன திடீர்னு இங்க?" அவளை பற்றி நீ கேட்க கூடாது என்ற பார்த்திபனின் உத்தரவில், மீண்டும் விஷ்ணு அவளைப் பற்றி கேட்கவில்லை.

"அவசரமா ஏதோ வந்தனு ஆஃபீஸ்ல சொன்னாங்க. அதான் வந்தேன், என்ன எதுவும் பிரச்சனையா?" பார்த்திபன் நடந்ததைக் கூற,

"ஏன்டா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல, ஒரே நாள்ல நல்ல ஆடியோ செட் கிடைக்காதே. பேசாம என் வீட்டுக்கு வாங்கியிருக்க செட்டை எடுத்து மாட்டி விடலாமா?" கேட்டான் விஷ்ணு.

"ஓபன் ஸ்பேஸ்ல கேக்குறாங்கடா. சவுண்ட் எஃபக்ட் வேணும்ல... செய்றதை தெளிவா செய்யணும்."

விஷ்ணு, "அது இம்போர்ட்டட் சவுண்ட் சிஸ்டம் பார்த்தி. ஃபுல் சவுண்ட்ல வச்சா தீயா கேக்கும். யோசிக்காத, காலைல மாட்டிவிட்டு செக் பண்ணிக்கலாம், பத்தலனா எக்ஸ்ட்ரா ரெண்டு ஆட் பண்ணிடலாம். ஆனா அதுவே போதும்னு தான் நினைக்கிறேன். நீ டிஜேக்கு மட்டும் பாரு." விஷ்ணு மொத்த வேலையும் முடித்திருந்தான் ஒரே நிமிடத்தில்.

"ண்ணா டிஜே கூட ரெடி பண்ணியாச்சு. என்னோட சீனியர் ஒருத்தர் இருக்கார். அவர் ஃப்ரீ தானாம் அன்னைக்கு. பேமன்ட் பத்தி மட்டும் பேசிடுறிங்களா?" கைப்பேசியை நீட்டி ஸ்ரீனி கேட்க, பார்த்திபன் அவனோடு பேச துவங்கினான்.

தான் வாங்கி வந்த கண்ணாடியை விஷ்ணு கையில் கொடுத்த ஸ்ரீனியும் மாமனோடு செல்ல, அந்த கண்ணாடியை எடுத்து உள்ளே நுழைந்தவன் கண்ணில் மீண்டும் சிக்கினாள் அனாயா.

யோசிக்காமல் அவன் கால்கள் அவளை நோக்கி நகர, தன்னை துளைக்கும் விஷ்ணுவின் பார்வையின் வீரியத்தில் அவள் உடலே இறுகி போனது.

"இங்க என்ன பண்ற நீ?"

சூடாக வந்த விஷ்ணுவின் வார்த்தையில் திரும்பியவள் உணர்ச்சி துடைத்த முகத்தோடு, "பாத்தா தெரியலையா சார், வேலை பாக்க வந்தேன்." என்றாள் சளைக்காமல் அவனை போல் திமிராக.

புருவம் உயர்த்தி அவளை அளந்தவன், "ம்ம்... வேலைய மட்டும் பாத்தா நல்லது!" என்று அங்கிருந்த ஒருவரைப் பார்த்து, "ண்ணே... கொஞ்சம் பாத்தே இருங்க." விஷத்தைக் கக்கி அனாயாவை விஷ்ணு பார்க்க, அவனது குற்றச்சாட்டில் கண்ணே கலங்கிவிட்டது மங்கைக்கு.

கடினமாக அதனை உள் இழுத்து, "என்ன பாத்து இருக்கணும்? நான் என்ன உங்க ஆஃபீஸை தூக்கிட்டா ஓட போறேன்? பாத்து இருக்க சொல்றிங்க, அப்டி வேணும்னா அதோ அந்த கேமராவ எந்நேரமும் பாத்துட்டே இருங்க. நான் எதையாவது தூக்கிட்டு ஓடுனா வந்து இங்க என்ன தூக்குங்க.

அதுக்கு முன்ன எதுவும் பேச கூடாது சார் நீங்க. அதையும் மீறி என்கிட்ட உங்களுக்கு பிரச்சனைனா பார்த்திபன் சார்கிட்ட பேசிக்கோங்க. அவர்தான் எனக்கு வேலை குடுத்தது." அதற்கு மேல் அங்கு நிற்க தெம்பில்லாமல் அனாயா விறுவிறுவென அந்த குடோனின் பின்புறம் சென்றுவிட்டாள்.

கண்ணீர் வற்றியிருந்தது. அழுவதை விட்டுவிட்டாள், தனக்கு தானே புலம்புவதை விட்டுவிட்டாள். ஆனால் நினைப்பதை மட்டும் நிறுத்த முடியவில்லை. உயிர் மூச்சை போல் நினைவுகள் மட்டும் ஆடிக்கொண்டே உள்ளது.

இன்று வந்து நேரில் நின்று அதன் செயலையும் அதிகப்படுத்தி அதற்கொரு வலியையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். முடிவுற்ற காதல் முடிவில்லா காவியமாய் ஆழ்மனதில் புதைந்தது.

"பார்த்தி கொஞ்சம் தனியா வா." கூட்டத்தை விட்டு சற்று நண்பனைத் தள்ளி நிறுத்தினான் விஷ்ணு.

"தாமோதரன் அந்த பேக்ல என்ன வச்சிருக்கான்னு விசாரிச்சேன்டா. நாம எதிர்பாக்குற மாதிரி எதுவும் இல்ல. அவன் சேஃப்டிக்கு ஒரு லைசன்ஸ்ட் கன், அவனோட ஒரு டேப் இருக்கு. இன்னும் சில டாக்குமெண்ட்ஸ் தான். சோ நாம வேற தான் யோசிக்கணும்."

விஷ்ணு கூறியதை அமைதியாக உள்வாங்கிய பார்த்திபன், "வேற என்ன பண்ணலாம்?" கேட்டான்.

"அவனோட ஒரு வீக்னஸ் தெரிஞ்சா போதும் மாப்பிள்ளை, அதை வச்சே அடிக்கலாம். ஏன்டா இந்த பொண்ணு மேல அவனுக்கு அதிகமான பாசம் இருக்கும்ல?" கேலியாக விஷ்ணு கேட்க, பார்த்திபன் ஏகத்திற்கும் முறைத்தான்.

"உன்ன கொன்னுடுவேன் விஷ்ணு. அவனுக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லனு காட்ட சொல்றியா? அதுவும் அந்த பொண்ணு என்னை நம்பி வந்துருக்கு. உன்ன எதிர்த்து நின்னாலும் அவளுக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்."

பார்த்திபனின் அதீத கோவத்தில் சிரித்தான் விஷ்ணு, "சும்மா சொல்றேன்டா... ம்ம்... இந்த கன் நல்ல மேட்டர் தான். என்ன வேணாலும் பண்ணி அவனை தூக்கி உள்ள வைக்கலாம். ஆனா நாமதான் கொலை செய்ற அளவு போக மாட்டோமே..." வருத்தத்தோடு மொழிந்தான் விஷ்ணு.

"இவ்ளோ நாள் போகலனா என்ன? இனி போவோம்." பார்த்திபன் கூறியதைக் கேட்டு, நண்பன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

"டேய்..." விஷ்ணு தயங்க, தனக்கு தோன்றிய திட்டத்தை நொடியில் நண்பனிடம் விலக்கியிருந்தான் பார்த்திபன்.

"எல்லாம் சரி தான், எப்படி அந்த துப்பாக்கியை தூக்குறது?" விஷ்ணு.

"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு..." இருவரும் பேசிக்கொண்டிருந்த சுவற்றுக்கு பக்கமிருந்து, ஜன்னல் வழியாக இருவர் பேசுவதைக் கேட்ட ஸ்ரீனி தலையை வெளியே விட,

"இவன் எப்படா வந்தான்?" விஷ்ணு, பார்த்திபனை பார்த்தான்.

"நீங்க என் அத்திம்பேரை தனியா இழுத்துட்டு போனீங்கள்ல, அப்போவே இங்க வந்துட்டேன்." என்றான் சிரிப்போடு ஸ்ரீனி.

"ஸ்ரீனி நீ கேட்டதை மறந்துரு, உன் அக்காக்கு தெரிஞ்சா என்னை வீட்டை விட்டு வெளிய விட மாட்டா." என்றான் பார்த்திபன் சற்று அதட்டலாக.

"அதெல்லாம் சொல்ல மாட்டேன், நான் சொன்னா அப்டியே விட்டுடுவீங்களா என்ன? அதான் உங்களுக்கே ஹெல்ப் பண்ணலாம்னு தோனுச்சு." என்றான் உண்மையாக ஸ்ரீனி.

"என்னடா உன்னால தான் இந்த பிரச்சனைனு ஃபீல் பண்ணி வர்றியோ?" சந்தேகமாய் பார்த்தான் விஷ்ணு.

"அதெல்லாம் சத்தியமா இல்ல. என் மாமன் எனக்காக ஒரு சண்டைக்கு கூட போகலனா நல்லாவா இருக்கும்?" பார்த்திபனை பார்த்து கண்ணடித்தவன், "என் மருமக மேல கை வச்சவனை கொஞ்சமாவது அடிக்கணும். அதுக்காக தான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். சரி சூர்யவம்சம் பாத்துருக்கீங்களா?"

புருவம் உயர்த்தி ஸ்ரீனி சிரிக்கும் பொழுதே, அவன் கூறவரும் பொருள் புரிய நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அடுத்த பத்து நிமிடத்தில் தீட்ட வேண்டிய திட்டங்கள் அழகாக வகுத்திட, விஷ்ணுவின் முகத்தில் தான் அத்தனை ஆனந்தம்.

"ரொம்ப துள்ளாதடா... உனக்கு பொண்ணு பாக்குற படலம் முடிஞ்ச பிறகு தான் இதெல்லாம்..." என நண்பனை அடக்கி வைத்தான் பார்த்திபன்.

***

"அக்கா நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?" கால்களில் வீக்கம் அதிகமிருக்க, இடத்தை விட்டு எழ முடியாமல் வரவேற்பறையின் முகப்பில் அமர்ந்துகொண்ட கமலவல்லியிடம் கேட்டாள் ஆரபி.

வீட்டில் இருவரைத் தவிர எவரும் இல்லை. வித்யா, பேரப்பிள்ளைகள், கிரி மற்றும் ராஜேந்திரன் என அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

"எனக்கு அத்தை செய்ற பள்ளிபாளையம் சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு ஆரபி, செய்யலாமா?"

"அதுக்கென்ன க்கா, செஞ்சிடலாம். நான் தேவையானது எல்லாம் நறுக்கி வைக்கிறேன். வசந்த் தம்பி வரப்போ சிக்கன் மட்டும் வாங்கிட்டு வர சொல்லிடுறேன்." என்றவள் இரவு வேலைகள் அனைத்தையும் துவங்கும் முன்பு, பார்லி கஞ்சி செய்து கமலவல்லிக்கு கொடுத்து,

தனக்கான சமையலை செய்து குழந்தைகளுக்கும் இரவு உணவைத் தயாரித்து வைக்க, வசந்த் இறைச்சி எடுத்து வந்து நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டான்.

நேரம் ஏழு முப்பதைக் கடந்து செல்ல, கோவிலுக்கு சென்ற வீட்டினர் இன்னும் வராமல் இருக்க, வாயிலை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அந்த மாமிசத்தை மட்டும் தூரமே வைத்துவிட்டாள். வித்தியாவிற்கு அழைத்து பார்க்க, கோவிலில் ஏதோ விசேஷமிருக்க வர தாமதமாகும் என்ற தகவல்தான் வந்தது.

கமலவல்லியிடம் வந்து அவர்களின் தாமதத்தைக் கூறி, "நீங்க கொஞ்சம் செய்றேளா க்கா? நான் வெங்காயம் எல்லாம் கட் பண்ணி தர்றேன்." என்றாள் கெஞ்சலாக.

"நானா? ஆரபி கண்டிப்பா என்னால முடியாது. குறுக்கு எல்லாம் ரொம்ப வலிக்கிது ம்மா. ப்ளீஸ்... கொஞ்சம் நீயே செய்றியா?"

"அக்கா இன்னைக்கு வெள்ளிக்கிழமை க்கா..." ஆசையாக அவள் கேட்டு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் அமைதியாக்கியது ஆரபியை.

"அடுத்த மாசம் சாப்பிட முடியாதேனு தான் ஆரபி கேட்டேன்." மகப்பேறு காலங்களில் வாய்க்கு ருசியாக கேட்கும் உணவுகளை ருசி பார்த்திட யாருக்குதான் பிடிக்காது.

அதிலும் இன்று அதனை அதிகம் எதிர்பார்த்திருந்த கமலவல்லிக்கு, அதிகப்படியான ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஆரபி ஏதாவது சில தினங்கள் மட்டும் மாமிசம் சமைப்பாள், இன்று வெள்ளிக்கிழமையாக இருக்க அதிகம் யோசித்தாள்.

"நான் வேணும்னா அவாளை வாங்கி வர சொல்லவா க்கா?"

"இல்ல ஆரபி வேணாம், வீட்டுல செஞ்சு சாப்பிட்ட மாதிரி வாராதுல..." என்றவள் சில நொடி மௌனத்திற்கு பிறகு, "என்ன இருந்தாலும் பார்த்திபன் தம்பி இந்த வீட்டுக்கு ஸ்பெஷல் தான் இல்ல ஆரபி?" ஆரபி விழுக்கென அவளைப் பார்த்தாள்.

"நம்ம வசந்த்துக்கும் தான் சனி பெயர்ச்சி நடந்துச்சு, அப்போ அவரை வச்சு வீட்டுல எவ்ளோ பிரச்சனை நடந்துச்சு. அப்போல்லாம் நம்ம வீட்டுல எந்த மாற்றமும் இல்ல. இப்போ பாரு, அத்தை கோவிலுக்கு போகுறதென்ன, மொத்த வீடே விரதம் இருக்குறதென்ன? குழந்தைகளுக்கு ஒன்னுனா கூட இவ்ளோ பயம் இருக்காது ம்மா..."

சிரிப்போடு கூறியவள் அதே சிரிப்போடு, "எனக்கு தான் இந்த நேரத்துல அதிகமா நான் வெஜ் சாப்பிடணும் போல தேடுது. கடை சாப்பாடு ரொம்ப எடுத்துக்க கூடாது. இதுக்காக ஈரோடுல இருக்க என் அம்மா வீட்டுக்கு தான் போகணும் போல ஆரபி..." தானே சிரித்துக்கொண்டாள்.

"இல்லனாலும் இவர் வாங்கி தந்துடுவார் ஆரபி. பரவால்ல, என் ஒருத்தி ஆசை தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்." ஒருவித இயலாமை, கோவம் எல்லாவற்றையும் மறைத்து, அவள் சிரிப்பைக் காட்ட ஆரபி உடனே எழுந்து நின்றுவிட்டாள்.

மனம் எதிலோ அடிவாங்கியது போல் இருக்க கண்ணீரைக் கடினப்பட்டு தடை செய்து, "க்கா நானே சிக்கன் செய்றேன்." விறுவிறுவென நடந்து சமயலறைக்குள் ஒளிந்துவிட்டாள்.

சமையலை தான் செய்கிறேன் என கூறி வந்துவிட்டாள். சமையலறை வந்தும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கவனம் செய்ய போகும் சமையலில் இல்லை, அவள் வார்த்தை வெவ்வேறு திசையிலிருந்து தாக்கியது போல் நின்றுவிட்டாள்.

நறுக்க வேண்டிய உணவு பொருட்களை நறுக்கி முடித்தும், இன்னும் கழுவப்படாத அந்த இறைச்சியின் மேல் பார்வை குத்தி நின்றது. பிறந்ததில் இருந்து அசைவத்திற்கு சிறிதும் பழக்கப்படாதவள், கணவனுக்காக அவன் குடும்பத்தை அனுசரித்து வாழ்ந்து பழக வேண்டும் என்ற, ஒரு பிடிவாதத்தால் சில அசைவ உணவுகளை சமைப்பதுண்டு.

அதற்கும் அவள் பட்ட பாடு அந்த வீட்டினர் அனைவருக்குமே தெரியும். அந்த இறைச்சியை சுத்தம் செய்கிறேன் என வந்தாலே குமட்டிக்கொண்டு வரும். உதவிக்கு வித்யா வந்தாலும், கணவன் ஆசையாக உண்டு மகிழும் உணவை தான் தன் கையால் சமைக்க வேண்டும் என்கிற ஆசையில் செய்ய துவங்கியது.

அவனும் எவ்வளவோ கூறி பார்த்துவிட்டான், மனைவி கேட்டால் தானே. பிடிவாதம்! அதே கணவனே வெள்ளிக்கிழமை நாட்களில் அசைவம் கேட்டால் கூட அடமாக முடியாது என்றிடுவாள்.

கூடுதலாக கணவனுக்கு ஜாதகம் சரியில்லை என தந்தை வாய்மொழி கேட்டு, இறைவனை மட்டும் நாடியிருந்தவள் மனம் கமலவல்லியின் வார்த்தைகளை விட அதிகமே பாதித்தது. பார்த்திபன் வந்ததும் கோவிலுக்கு வேறு சென்று வர வேண்டும்.

வெறித்து வெறித்து அந்த இறைச்சியைப் பார்த்தவள் விழிகள் கலங்கியது இயலாமையிலும், கமலவல்லியின் நறுக்கென்ற பேச்சிலும்.

"ஆராமா..." காதருகினில் கேட்ட கணவன் குரலில் அதிர்ந்து திரும்பியவள் முகம் பார்த்து ஆராய்ந்தவன், அவள் முகத்தைப் பார்த்து, "ஹே! ஆராமா என்ன இப்டி முழிக்கிற?" பரிதவிப்போடு இருந்தவள் முகம் பார்த்திபனை ஆட்டியது.

மனதினை மறைத்து அந்த கோழிக் கறியை காட்டினாள். "வெள்ளிக்கிழமை ன்னா..." கண்ணே கலங்கிவிட்டது.

"தூக்கி ஃப்ரிட்ஜ்ல வை ஆரா, நாளைக்கு அம்மா செய்யட்டும்." என்றான்.

"இல்ல ன்னா... கமலா அக்கா சாப்பிடணும் போல இருக்குனு சொன்னாங்க, கடைலயும் அவங்க ரொம்ப சாப்பிட வேணாம்னு தான்..."

யோசனையோடு சட்டையின் கையை மடித்துவிட்டவன் டக் இன் செய்திருந்ததை எடுத்துவிட்டு, மனைவியின் இடையைப் பிடித்து தூக்கி சமையல் மேடையில் அமர்த்திவிட்டான்.

"பார்த்தி..." பதறி ஆரபி கீழே இறங்க பார்க்க, அவளை இரண்டு பக்கமும் கை வைத்து முற்றுகையிட்டு சிலையாக்கினான்.

"வீட்டுல யார் யார் இருக்கா?" ஆழமான அழுத்தத்தோடு வந்த பார்த்திபன் கேள்வியில் உறைந்தவளின், "அக்கா..." என்ற வார்த்தை கூட காற்றை விட மெலிதாக தான் வந்தது.

அவளுக்கோ பயம், இவன் சேட்டைகளை செய்வதற்கு வேறு இடம், நேரம் இல்லையா என்று.

"அப்போ அண்ணி மட்டும் தான் இருக்காங்க..." தானே வீட்டின் அமைதியை வைத்து உறுதி செய்தவன் மனைவியின் நெற்றி முட்டி, "இந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகர கூடாது. ஆர்டர் மட்டும் தான் பண்ணணும்."

கணவனின் நெருக்கமும் வார்த்தைகளின் அழுத்தமும் அவன் கூறியதை அப்படியே செய்ய வைத்தாலும், வாய்க்கு தான் அவன் பூட்டு போடவில்லையே.

"அக்காக்கு சமைக்கணும் ன்னா... சேட்டை செய்யாதேள்..." பட்டும் படாமல் மனைவியின் இதழில் அழுத்தமாக ஒரு நொடி முத்தம் கொடுத்தவன், "நான் செய்றேன் மாமி, நீ ரெஸ்ட் எடு." அதன்பிறகு பார்த்திபன், மனைவியின் சொற்படியே நடந்தான்.

கணவன், மனைவிக்கு தனிமை கொடுத்து கமலவல்லியும் அவர்களை நெருங்கவே இல்லை. அது பார்த்திபனுக்கு வசதியாகி போக, ஆரபி சொல்படி ஒவ்வொரு செயலாக பொறுமையாக செய்தான்.

அடுத்த பதினைந்தே நிமிடத்தில் பார்த்திபன் கையினால், மணக்க மணக்க உணவை செய்து முடித்திருந்தான். தான் செய்ததை ருசி பார்த்து தன்னையே மெச்சிக்கொண்டு சிரித்தான். 

ஆரபி இட்லியை ஊற்றி வைக்க, மீண்டும் மனைவியை சமையல் மேடையில் அமர்த்தி நிமிர போக, அவனை விடாமல் சட்டையை பிடித்து கழுத்தோடு அணைத்து மனபாரம் நீங்க அழுதாள்.

அமைதியாக கணவனுக்கு பலவற்றை கூறிக்கொண்டே இருந்தாலும், பல எண்ணங்கள் மனதை அரித்துக் கொன்றது. எத்தனை செய்திருப்பான் இந்த வீட்டிற்கு, ஒரு நாளும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இன்றும் அப்படி ஒன்றும் ஆத்திரம் வரவில்லை, ஆனாலும் ஆதங்கம் அதிகமிருந்தது.

ஒரு மாதம் தானே, அதுவும் தானாய் விரதம் இருக்க வேண்டுமென்று எவரையும் கட்டாயப்படுத்தவில்லை பார்த்திபன். அவர்களாகவே முடிவெடுத்தார்கள். அப்படியே ஆனாலும் குழந்தைகளுக்காகவே கணவன் வீட்டினருக்கும் சேர்த்து வெளியில் வாங்கி வந்துவிடுவான்.

அவனை பற்றி அதிகம் தெரிந்தும் இந்த மறைமுக தாக்குதல் வலித்தது. அனைத்தையும் மனம் திறக்கும் கணவனிடம் கூட இதை பற்றி பகிர வேண்டாம் என்ற சிந்தனையோடு இருந்தவளுக்கு, மூச்சே முட்டியது போல் தவிப்பு. தொண்டை அடைத்து பேச்சுக்கே பஞ்சமாகியது.

இப்பொழுது கூட அவர்களுக்காக நான் ஏன் செய்ய வேண்டும் என கேட்காமல் செய்பவனிடமா, பார்க்காத கணக்கெல்லாம் பார்ப்பார்கள்?

"என்னடி மாமி?" பதறியது கணவன் மனம், மனைவியின் அழுகையில்.

"நான் சொல்றத கேப்பேளா?" பார்த்திபனிடமிருந்து விலகி அவன் முகம் பார்த்தாள்.

"நீ சொல்லி கேக்காம போவேனா, அதுக்கு ஏன் ஆராமா அழகுற?" கன்னம் துடைத்தான்.

"உங்களுக்காக நீங்க, நான் மட்டும் விரதம் இருக்கலாமே. வீட்டுல இருக்கவாள ஏன் சங்கடப்படுத்தணும்?" பார்த்திபன் கண்கள் மனைவியை ஆராய்ந்தது.

"என்னாச்சு ம்மா?"

"ஒன்னுமாகல பார்த்தி, ப்ளீஸ்... எனக்காக வீட்டுல பேசுங்கோ." மனைவி மறைப்பதை உணர்ந்தவனுக்கு காரணமும் பிடிபட்டது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தான் வீட்டில் சிக்கன் செய்வதாக பேசிய பொழுது கூட குரலில் வாட்டம் இல்லையே. ஒரு மணி நேரத்தில் ஏதேனும் நடந்திருந்தால் நிச்சயம் கமலவல்லியின் வார்த்தை வீரியமாக தான் இருக்கும் என்பதை புரிந்தவன், "இப்ப பேச வேணாம் மாமி, நான் பாத்துக்குறேன்." என்றான் முடிவோடு.

"ஏன்னா யாரையும் எதுவும் கேக்காதேள் ப்ளீஸ்..."

மன்றாடிய மனைவியிடம், "கண்டிப்பா யார் மனசையும் கஷ்டப்படுத்த மாட்டேன்." வாக்கு கொடுத்தான் பார்த்திபன்.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro