போர்!! (முன்கதை)
ஆத்ம லோகத்தின் கிழக்கு முனை...
அராலி பர்வதம்
"இருள் நிரந்தரமானது... ஒளி நிச்சயமில்லாதது..
பிரபஞ்சத்தின் எந்த ஒளிக்காக நீ என் உடனிருப்பவனை பலி கொடுத்தாயோ, அவனின் உயிர்-ஆத்ம சக்தியால் உனக்கு கிடைப்பது வெறும் துன்பங்களும் இழப்புகளுமே.
விதியின் முதல் கட்டளை.. 'அது அது அதனதன் இடத்தில் இருக்கவேண்டும்.. அவைகளுக்கென கொடுக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்'.
அனைத்தையும் மீறிவிட்டாய் நீ.. உன் விருப்பத்திற்கு இப்பிரபஞ்சம் தலை வணங்கிடும் என்னும் ஆணவத்தில் அனைத்தையும் மீறிவிட்டாய் நீ.
நடப்பவைகளை உன் விருப்பம்போல் கொண்டாடினாய் அல்லவா?.. முதல் விதியையே மறந்தாய் அல்லவா??.. இப்பொழுது நான் சொல்வதை உன் காலம் உள்ளவரை மறந்திடாமல் நினைவிலிருத்திக்கொள். இன்று நீ செய்த செயலுக்கான பலன்.. நான் இழந்தது போலவே நீயும் உன் பிரியமானவர்களை இழப்பாய்.. விரும்பியவை.. விரும்பாதவை.. உனக்கென இருக்கும் அனைத்தையும் இழப்பாய்..
.. ... ... ஒரு முறை... வெறும் ஒரே முறை தான் உன் எண்ணத்தை மாற்றக் கோறினேன்..", கண்ணிலிருந்து ஒரு துளி, நிலத்தை அடைந்தது.. அவள் விழி, நீர் ஊற்றியதால் நிலத்தில் மலர்ந்தது கருநீல நிற புதுமலர். "பிரபஞ்சக் கட்டளையினால் மாட்டேனென மறுத்தாய்... அந்த ஒரு முறை உன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாததால்... இனி நீ சிந்திக்கும் ஒவ்வொரு முறையும் உன் எண்ணங்களை வெறுப்பாய்.. உன்னை நீயே வெறுப்பாய்..
உடனிருந்த என் உடையவனை என் முன்னேயே பலி கொடுத்த பொழுதில், தடுக்க நினைத்தாலும் முடியாமல் நான் தவித்தது போல்.. நடக்கப்போவது பேரிழப்பு என்பதை உணர்ந்தாலும் தடுக்க வழியில்லாமல் உள்ளுக்குள்ளேயே தவிப்பாய் . செய்யும் காரியங்கள் சரியெனவே செய்தாலும், நீ யாருக்காக செய்தாயோ அவராலேயே தூற்றப்படுவாய். இன்று, இந்த பொழுதில், என் உடையவனை பிரிந்து நான் அனுபவிக்கும் வார்த்தையில்லா வேதனைகள் ஒவ்வொன்றும் உயிர்பெற்று வந்து இதே வேதனையில் உன்னை தள்ளும். உன் காரணமாக வாழும் ஒவ்வொரு உயிரும் உன்னை தூற்றியே வாழும்.. நீ காப்பாற்ற நினைத்த விதிகளை உன் பஞ்ச-லோகங்களே மீறும்.. சமநிலையை இழந்து அழிவை நோக்கிச் செல்லும்.. எதுவும் செய்ய முடியாமல் வலியை மட்டுமே உன்னில் வைத்து நடப்பவைகளை வேடிக்கைப் பார்."
அவள் இறுதி வார்த்தை முடிந்த கணம், செந்நிற பதக்கம் கோர்த்து அவள் கழுத்தில் ஆடிய சங்கிலியை ஒரே இழுப்பில் அறுத்து தனக்குப் பின்னால் இருந்த எல்லையில்லா அதல பாதாளத்தில் வீசி எறிந்துவிட்டு, நெடுந்துயர்ந்த அந்த மலை முகடின் உச்சிமுனையில், தலைவிரி கோலத்தில், முகத்தில் உணர்வுகள் இல்லாமல் நின்றிருந்தாள் அவள். அவள் எறிந்த பதக்கத்தின் அதே நிறத்தை கொண்டு அவளின் தலைக்கு மேலே, ரத்தத்தை உருட்டிப் பந்தாக்கி வானில் ஒட்டவைத்தது போல் மிளிர்ந்து கொண்டிருந்தது, நிலவு..
அவள் முதுகின் பின், எல்லை தெரியா பாதாளம். அவளுக்கு முன், அவளின் நிலைக்கு காரணமானவனின் நிழல் மட்டுமே... அவனை நோக்கி நிமிர்ந்த அவளின் உயிரில்லா விழிகள் இரண்டும் வெறுப்பையும் கோபத்தையும் ஒன்றாக வீசிடும் அதே வேலையில் வந்தது அவளின் சூடேறிய ஆழ்ந்த குரல். "இவை, என் மரண வாயிலில் நான் உனக்கிடும் சாபம்".
.
.
.
.
மூன்று மாதங்களுக்கு பின்...
காலனின் கோட்டை.
மேக கூட்டங்களுக்கு மத்தியில் முளைத்த வெள்ளி ராஜ்யம் போல் ஜொலித்துக் கொண்டிருந்த அவ்விடத்தில், வெள்ளை நிற ஆடை அணிந்த ஒரு உருவம், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தது. நான்கடி உயரத்தில், வாலிப வயதின் தொடக்கத்தில் இருப்பதுபோல் தோற்றம் கொண்ட ஒரு சிறுவன் அவன். பார்ப்பதற்குத்தான் அவன் முகத்தில் தெரிவது அமைதி.. அருகில் சென்று பார்த்தால்தான் அவன் முகத்தில் காரணமில்லாமல் படரும் ஒரு சோகம் தெரியும்.
தங்க வேர் படர்ந்து, வெள்ளி தண்டுகளைக் கொண்ட வெள்ளை இலை மரங்கள் வரிசையாக இருபக்கமும் வளர்ந்து நிற்க.. அவைகளுக்கு நடுவே மௌனமாக நடந்து கொண்டிருந்தவனின் மௌனத்தை கலைத்தது அவளின் குரல்.
"காலா!.. சற்று நில்!", முகம் நிறைந்த புன்னகையுடன், தரையில் பரசிடும் தன் பச்சை நிற ஆடையை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அவனை நோக்கி ஓடி வந்தாள் ஒரு யுவதி.
"இளைய அரசி, நீங்களா?!", அவளைக் கண்ட நொடியில், சோகம் மறைந்து அதிர்ச்சி மலர்ந்தது காலாவின் முகத்தில். "இங்கே யாது செய்கிறீர்கள்?"
"காலா.. உன் உதவி வேண்டி வந்திருக்கிறேன்", லேசாக மூச்சு வாங்கிக்கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள் அவள், பாதாள லோக அரியாசனத்திற்கு உரியவனின் ஒரே தங்கை, மித்லரூபினி.
"அதற்காக இவ்வளவு தொலைவு வர வேண்டுமா? ஒரு குரல் கொடுத்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?"
"அவசியம் இல்லை.. இங்கேதான் நான் கேட்பது கிட்டும்", மெல்லியதொரு இதழ் மலர்ச்சியுடன் பதில் கொடுத்து, அவனை தாண்டி முன்னோக்கி நடந்தாள், மித்லா.
இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த காலா, 'நான் முடிவெடுத்தால் அது நடக்கும்வரை மாறாது' என்னும் அவள் நடையை பார்த்து மெல்லச் சிரித்தபடி அவளை தொடர்ந்து நடந்தான்.
"யாது வேண்டும், இளைய அரசியே? கேளுங்கள்."
"ரட்சகன் என்னிடம் வேண்டிய பரிசு குறித்து முன்பே சொல்லியிருக்கிறேன், நினைவிருக்கிறதா?"
"ம்ம். ஆதியின் வாழ்வு குறித்த மாய ஏடு தானே?"
"ஆம்.. அது அவரே என்னிடம் வந்து கேட்டது.. .. ... இப்பொழுது, நானே ஒரு பரிசினை கொடுக்கவும் தீர்மானிதேன்."
"யாது அந்த பரிசு?.."
"என் உடையவர் ஆகியதாக அவர் சபையில் ஒப்புக்கொண்டதும், அவரின் வாழ்வு குறித்த மாய ஏடு ஒன்று தயாரித்து கொடுப்பது தான்.. நானும் அவரும் மட்டுமே முழுதாக புரிந்துகொள்ளும் மாய ஏடு.", என்ற நொடியில் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி, அவன் முகத்தில் குழப்பம் கலந்து இருந்தது.
"அதற்கு இவ்விடம் வரவேண்டிய அவசியம் யாது அண்ணி?"
"இங்கு தானே அவர் சிறு வயதில் அதிக காலம் கழித்தது?", அவள் காலனின் முகம் பார்த்து பதிலளித்த நொடியில் அவன் முகம் வெளிரியது.
"வேண்டாம், இளைய அரசி.. இவ்விடத்தின் நினைவுகளை அந்த ஏட்டில் சேகரிக்காதீர்கள்."
"ம்ம்ச், காலா.. உன்னை உன் சகோதரனுடன் சமாதானம் செய்து வைக்கிறேனென வாக்கு கொடுத்தேன்.. அதனை நிறைவேற்றவே இந்த திட்டம். நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு அமைதியாக எனக்கு உதவி செய்", அவள் கட்டளையாகச் சொல்ல, "சரி, உங்கள் விருப்பம் போலவே செய்யுங்கள், இளைய அரசி." பெருமூச்சுடன், மீண்டும் மெல்லியதொரு புன்னகையுடன் முகம் மலர்ந்து தலையசைத்தான் காலா.
சில அடி தூரம் இருவரும் அமைதியுடனே நடக்க, "அண்ணி, இந்த திசையில்" முன்னால் நடந்து கொண்டிருந்தவளை நிறுத்தி, காலா முன்னோக்கி நடந்தான், ஒரு வளைவான பாதையில். அவர்களின் பாதை முடிந்ததோ, பிரம்மாண்ட அழகில் மேகங்களுக்கு மத்தியில் மிதக்கும் கோட்டை-வாயிலில் தான். மித்லாவை கோட்டைக்கு உள்ளே வழிநடத்தியவன், வரவேற்பு கூடத்தின் மையத்திலேயே இருந்த ஒரு மேஜையின் மீதிருக்கும் உள்ளங்கை அளவு புத்தகத்தை சுட்டிக்காட்டியபடி தன் நடையை நிறுத்தினான்.
"இதென்ன ஏடு..", காலாவின் கை சுட்டிக்காட்டும் அந்த புத்தகத்தில் கை வைத்தவள், "சகோதரன்களின் விளையாட்டுகள்?" அதன் முகப்பில் இருந்த தலைப்பை வாசித்து, குழப்பமாக காலாவை பார்க்க..., "உங்கள் உடையவராக மாறவிருப்பவர், இங்கு காலங்களை கழித்த பொழுதுகளின் முழு நினைவுகள் அடங்கிய மாய ஏடு", மென் புன்னகையுடன் பதில் கொடுத்து நின்றான் காலா.
"ஆஹ்!!.. மெய்யாக?!!.. நீயே தயாரித்தாயா?"
"ஆம் அண்ணி..", அவன் மெல்லிய புன்னகையுடன் பதில் கொடுத்த நொடி, ஆர்வமாக அந்த உள்ளங்கை அளவிலான ஏட்டினை திறந்தாள் மித்லா. முதல் பக்கத்தை திறந்த உடனேயே அந்த பக்கத்தில் சேகரிக்கபட்டிருந்த நினைவுகள் மேலெழும்பி, ஒரு காட்சி-படம் போல் காற்றில் தெரிந்தது. சிறுவயதில் காலாவும் அவன் சகோதரனும் செய்த குறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிக்கொண்டே இருக்க.... அதை ரசித்துக்கொண்டே அந்த நினைவுகளை சேகரித்தவள், தன் புத்தகத்திற்கான பக்கங்களை தயாரிக்கத் தொடங்கிய நொடி, அவ்விருவரின் கவனத்தையும் திசை திருப்பியது ஒரு குதிரையின் குரல்.
"ராஜா?!", அதிர்ச்சியும் குழப்பமமுமாய் இருவரும் கோட்டைக்கு வெளியே பார்க்க.. அவர்களை நோக்கியே வந்து கொண்டிருந்தது, ரெக்கை வைத்த ஒரு வெள்ளை குதிரை. அடுத்த நொடியே அதனிடம் விரைந்தார்கள் இருவரும்.
"ராஜா!.. என்னானது. நீ இவ்வளவு தொலைவு வர காரணம் யாது?", மித்லா பரபரக்க... அந்த குதிரை, அதன் மொழியில் ஏதோ சொல்லியது..
"ரட்சகனையா?!", கண்கள் அகல விரிய அதிர்ச்சியில் அந்த குதிரையிடம் பதில் வினா தொடுத்தாள் மித்லா.
"ராஜன் யாது சொல்கிறான் அண்ணி?"
"ரட்சகனை என் சகோதரன் சிறையில் அடைத்து விட்டானாம்.. ஆதி அண்ணிக்குக்கு எவரோ நஞ்சு புகட்டி விட்டார்களாம்.. அது ரட்சகன் தானென சந்தேகிக்கிறார். பாதாள லோகத்தில் பெரும் அனர்த்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது காலா!.. நான் உடனடியாக அங்கு புறப்பட வேண்டும்.", அவன் பதிலுக்காக காத்திறாமல் ராஜாவின் மீதேறியவள், நொடியில் ஒரு வெள்ளை ஒளியினுள் மறைந்து போனாள்.
அவள் அந்த வெள்ளை ஒளிக்குள் மறைந்த கணம் "இவை, என் மரண வாயிலில் நான் உனக்கிடும் சாபம்", காலாவின் காதில் ஒலித்தது அந்த வார்த்தைகள்.
"அனைத்தும் தொடங்கி விட்டது.. ", மெல்ல முனுமுனுத்தது காலாவின் உதடுகள்.
.
.
.
.
இரண்டு நாட்களுக்குப் பின்...
பாதாள லோகம்.
"சகி!.. இதையும் எடுத்துக்கொள்.. விரைவாக..", பரபரப்புடன் எதை எதையோ எடுத்து தன் அருகில் நிற்பவளிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் மித்லா.
"இளவரசி, யாது அசம்பாவிதம் நிகழப் போகிறது? தெளிவாக சொல்லுங்கள்", பரபரப்பாக மித்லா கொடுக்கும் பலவித மாய பொருட்களை தன் கையில் இருக்கும் பையில் வைத்துக்கொண்டே, அவளைப் போலவே பதட்டத்தில் நின்றிருந்தாள் மித்லாவின் தோழி.
"அறியவில்லை நான். ரட்சகனை சிறையில் இருந்து மீட்டு வந்த தினம் முதல் அவரிடம் பேசவும் முடியவில்லை. நடப்பவைகளை எனக்கு விளக்க எவரும் இல்லை சகி.. இப்பொழுது போர்க்களம் விரைய வேண்டும் நாம்.. அது மட்டுமே நான் உணர்கிறேன். இவைகளை என் இளைய சகோதரனிடம் ஒப்படைத்துவிடு.. நான் போர்க்களம் செல்கிறேன்.. உன் வேலை முடிந்த நேரம் நீயும் போர்க்களம் விரைந்திடு", பரபரப்பில் நிலமையை சுருக்கமாக விளக்கியவள், தோழியின் பதிலுக்காக பொறுமை காக்காமல், நொடியில் ஒரு வெள்ளை ஒளிக்குள் மறைந்தாள்.
அவள் மறைந்து சில நொடிகளுக்கு பின்பே மித்லா சொல்லிய வார்த்தைகளை முழுவதுமாக புரிந்துகொண்டாள் அவளின் தோழி. "இளைய அரசரிடம் விரைய வேண்டும்.", கையிலிருக்கும் பையை பார்த்துக்கொண்டே முனங்கியவள், "ஆனால் எங்கிருக்கிறார் அவர்?", குழப்பத்துடன் பார்வையை நிமிர்த்த.. அவள் இருந்த அறையின் ஜன்னல் வழியாக தன் கிளைகளை நீட்டி அசைந்து கொண்டிருந்த இளஞ்சிவப்பு நிற மரம், அவள் கண்ணில் சிக்கியது.
தீர்மானத்துடன் மூச்சை இழுத்து விட்டவள், தன் கைகளை நீட்டி அதன் கிளைகளை பிடித்து கண்களை மூட.. அந்த மரத்தின் முழு உருவத்தை தன் மனக்கண்ணில் உணர்ந்தாள். அதன் வேர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவளின் மனக்கண்ணின் பார்வை பயணித்தது.. கிட்டத்தட்ட பாதி பாதாளலோகத்தின் நிலபகுதியை ஆக்கிரமித்திருந்தது அந்த வேர். ஆனால் இளைய அரசனை எங்கும் காண முடியவில்லை.
வேர் செல்லும் ஒவ்வொரு திசையின் எல்லை வரை, துள்ளியமாகத் தேடிக் கொண்டிருந்தவளின் மனம் சட்டென நின்றது ஓரிடத்தில். ஒரு போர்க்களத்தில். "வல்சி", பட்டென விழி திறந்தவள் உதடுகள் மெல்லமாக உச்சரித்தது அவன் பெயரை. முழுதாக ஒரு நொடிக்கூட தேவைபடவில்லை அவள் கண்ணீர் ஊற்றெடுக்க.. கொட்டும் விழிநீரை துடைக்க கூட நேரமில்லாமல் மீண்டும் அந்த இளஞ்சிவப்பு கிளையினை பற்றிக்கொண்டு அவள் பார்த்த காட்சியினை தெளிவாக பார்க்க முனைந்தாள்.
வல்சி என்ற அந்த பெயருக்கு உரியவன், அவள் மனக்கண்ணில் தெரிந்த போர்க்களத்தில் மரண காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அந்த இடத்தின் மேலே இருந்த வானில், கோரமாக காட்சி கொடுக்கும் ஒரு மாய சுழல், போர்க்களத்தில் மரணித்த.. மரணிக்காமல் இருக்கின்ற எல்லா ஆன்மாக்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டே இன்னும் இன்னும் கோரமாக மாறிக்கொண்டிருந்தது.
"இளைய அரசரை சந்திக்க வேண்டும்", தனக்குத்தானே கூறியபடி கண்களை இறுக்கமாக மூடி வலுக்கட்டாயமாக தன் பார்வையை அந்த போர்களத்தை விட்டு விளக்கியவள், இளைய அரசரை தேடத் தொடங்கினாள். அவள் விழியின் நீர் மட்டும் நில்லாமல் வழிந்து கொண்டிருந்தது.
✨✨✨
ஆத்ம லோகத்தின் தெற்கு முனை,
பாதாள லோகத்தின் வாயில் இருக்கும் இடம்.
யுத்தம் இப்போதே முடிந்ததற்கு ஆதாரமாக.. ரத்தக்கிளரியாக காட்சியளித்து அப்போர்களம். திக்கெங்கிலும் எரிமலைகள் போல மலைகள் உயர்ந்து நின்றது.. ஆனால் நெருப்பை கக்கவில்லை. மாறாக, மொத்த மலையுமே கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது...
அனல் பறக்கும் அம்மலைகளால், கரிபடிந்து கொடூரமாகக் காட்சியளிக்கும் பறந்து விரிந்த நிலம். அதில், மரித்து போன பல உடல்களுக்கு மத்தியில், இன்னும் முழுதாக மரணிக்காமல் துடித்துக் கொண்டிருக்கும் சில உடல்கள். மொத்தமாக பிரிந்திடாமல் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருக்கும் அந்த உயிரை தங்கள் உடலுக்குள்ளேயே சிறைவைக்க, போர் முடிந்தும் போராடிக் கொண்டிருக்கும் உயிர்கள்.
பலமான காயங்கள் இல்லாவிட்டாலும் ஏதோ காரணத்தால் அந்த சிலரின் உயிர்கள் அவர்களின் உடல்களை விட்டு நீங்கத் துடித்துக்கொண்டிருந்தது. பலரும் உயிர்பிரியும் வலியில் கதறிக் கொண்டிருந்த நேரம்... அனைத்திலும் மேலாக ஒலித்தது அவளின் அலறல் ஓசை...
"பத்ராஆஆஆஆ.... .... ... .. பத்ரா.... ", குருதி வெள்ளத்தில் இறுதி மூச்சுகளை உள்வாங்கிக்கொண்டு மரணத்தின் பிடியுள் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன் சகோதரனை மடியில் தூக்கிவைத்து அவனை அனைத்திருந்தவள், "நீயும் என்னை கைவிடாதே பத்ரா... நான் தனிமையில் வாழ்வேனடா.. மீண்டு வா... இமைகளை திறந்து என்னை பார்... எனக்காக.. எழுந்திரு..", வற்றிபோன தொண்டையால் கதறினாள் ஆதிலோகினி.. அவள் மடியில், ஆதியின் ஒரே சகோதரன், பாதாள லோகத்தின் ரட்சகன், அமிழ்த பத்ரன்.
அதே நேரம், சற்று தொலைவில் பளிச்சிட்டது ஒரு வெள்ளை ஒளி. அதனுள் இருந்து வேகமாக ஓடிவந்த மித்லா, ஆதியும் பத்ரனும் இருக்கும் நிலையை கண்ட மாத்திரத்தில் தன் காலடியிலேயே உரைந்து நிற்க.. அவள் கண்ணில் நீர்துளிகள் எட்டிப்பார்த்தது... அந்தக் காட்சியைக் கண்ட நொடியில் அவள் கால்கள் நடுங்கியபடியே முன்னோக்கி நடந்து அவர்களருகில் சென்ற நொடி, உணர்வற்றவளாய் மண்டியிட்டு மண்ணில் சரிந்தாள்... கத்தி அழக்கூட சுயநினைவு கொண்டிருக்கவில்லை அவள்.
இடது நெஞ்சில் ஒரு வாள் இறங்கி முதுகில் வெளிவந்த ஒரு ஆழமான காயம்... பின்கழுத்தில் பெரிய வெட்டு... தலையில் ஒரு சிராய்ப்பு, அதற்கு மேலே எதிலோ மோதியதை போல் பலத்த அடி என குறுதியுள் முழுமையாக நனைந்துபோய் கிடந்தான் பத்ரன்.
"அ..மிழ்தா..", காற்றில் உருவாகிய குரலில் அவன் பெயரை அழைத்தபடி, நடுங்கிடும் கரத்துடன் மித்லா அவன் கன்னத்தை தொட முனைய.. .. என்ன உணர்ந்தானோ பத்ரன்!.. போகத்துடித்த உயிரிடம் சில நிமிடம் அவகாசம் பெற்று, நீண்டதொரு மூச்சினை உள்ளிழுத்தவாறே பட்டென அவள் கரத்தை பற்றிகொண்டான்.. இவ்வளவு நேரமும் பிரியேன் என இணைந்திருந்த இமையானது மெல்ல பிரிந்தது. அவன் விழிகள், வலியுடன் காதலையும் நிரப்பி அவளை நோக்கிப் புன்னகைக்க.. விழியை போலவே அவன் இதழ்களும் மெல்ல மேல்நோக்கி வளைந்துகொடுத்து, மரண வலியிலும் புன்னகைப்பதில் அவனுக்கு சலைத்தவன் வேறாரும் அல்ல என நிரூபித்தது.
அவள் கரத்தை எடுத்து இதயத்தில் பதித்தவன், மாறாத புன்னகையுடன் அவளை நோக்கி, "வாக்கை காப்பாற்றினேன்... உன் இதயத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன்....", நீண்ட உள்மூச்சுகளுக்கு இடையில் கூற, அதை கேட்டவளின் நாவிலிருந்து ஒரு வார்த்தையும் எழவில்லை... கண்ணில் இருந்து துளி-நீர் சிந்தவில்லை.... பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் மித்லா.
"உன் வாக்கை. நிறைவேற்றினாயா மித்லா?", பிரியத்துடிக்கும் உயிரின் காரணமாக தடுமாறும் வார்த்தைகளில் பத்ரன் கேட்க... பதிலுக்கு வார்த்தைகளை உதிர்க்க முடியாத மித்லா., "அமிழ்தா...", அதே காற்றில் கரையும் குரலில் அழைத்துக்கொண்டே தன் கையில் இருந்த புத்தகத்தை அவன் கையில் வைத்தாள்... மாயோள் என்னும் தலைப்பை தாங்கிய அட்டையுடன் கண்ணை பறிக்கும் ராஜமிடுக்கில் இருந்தது அந்த உள்ளங்கை அளவிலான புத்தகம்.
மித்லாவிடம் இருந்து அதை வாங்கியவன் ஆதியிடம் நீட்டி, "ஆதி... நீ கேட்ட பரிசு... என் மருமகளுக்காக...", என ஆதியின் கரத்தில் அதை திணித்தான்.
"பத்ரா.... என்றோ எனக்களித்த வாக்கை நினைவில் கொண்டு அதை நிறைவேற்றுகையில்... இன்று கேட்டதை மட்டும் ஏன் செய்ய மறுக்கின்றாய்...", புத்தகம் பிடித்திருக்கும் அவன் கரத்தை, தன் தலையில் முட்டிக்கொண்டு, மௌனத்தின் இடையே முளைத்த வார்த்தைகளால் ஆதி கதற... சகோதரியின் வார்த்தைகளை உள்வாங்கியவன் புன்னகை மாறாமலே அவள் கரத்தை இறுக்கமாக பற்றினான்.
"உனக்களித்த வாக்கை மறுக்கவோ மறக்கவோ நான் பழகவில்லை ஆதி...", அவள் கரத்தில் தன் பிடியை உறுதியாக்கி, "உயிர் பிரியினும் உனக்களித்த வாக்கை மெய்பிக்கவே நிச்சயம் மீண்டுவருவேன்..", ஆதியின் அனைப்பிலிருந்து பிரிந்தவன் அவளை பிடித்துக்கொண்டே, தளர்ந்த தேகத்தை நிமிர்த்தி அமர்ந்த அதே நெடியில், மித்லாவின் வலி நிறைந்த இமைக்குள் இருந்து வெளியேற துடிக்கும் விழிநீரை நேருக்கு நேர் நோக்கினான். அவள் விழிகளில் இருந்து இன்னமும் ஒரு துளி கண்ணீர் கூட கன்னம் தாண்டவில்லை... எல்லாம் இமைக்குள்ளேயே பத்திரமாக இருந்துகொண்டு ஒரு மகா சமுத்திரத்தையே உருவாக்கியிருந்தது. வலியை வெளிபடுத்த நினைத்திருந்தாலும் உச்சகட்ட வலிகள் இடித்துபிடித்து ஒன்றாக வெளியேற துடித்து... அது முடியாமல் போக, அவளுள்ளேயே அடைபட்டுக் கிடந்தது.
"மித்லா.......", அவள் கண்ணைப் பார்த்து ஒரு வார்த்தைதான் கூறினான்.. அவனின் தளர்ந்த குரலிலேயே தன் உணர்வை அடைந்தவள், மறுகணமே அவன் மடியில் மயங்கி சரிந்தாள்.. முட்டிகொண்டிருந்த வலிகள் மொத்தமும் அவளை மயக்கமடைய செய்திருந்தது.. அவளை எழுப்பிட நினைக்கவில்லை அவன்.. எழுப்ப விரும்பவும் இல்லை.
"மித்லா... நான் உனக்காக இதுவரை எதையும் செய்ததில்லை... இருப்பினும் எனக்காய் அனைத்தையும் அக்கறையுடன் செய்யும் உன்னை போன்ற ஒரு தோழியை... என் காதலியை... இவ்வாறு துன்பத்தில் வதைப்பதற்கு என்னை மன்னித்து விடு.... உன் சகோதரனுக்களித்த வாக்கினை நிறைவேற்றிவிட்டேன்... அந்த துரோகிகளிடம் இருந்து உம் இருவரையும் இன்று காத்து விட்டேன்....", மெல்ல மெல்ல வார்த்தைகளை உச்சரித்தவன், தன் மடியில் கிடப்பவள் தலையை கோதி, இறுதியில் அவனது வலதுகரத்தை அவள் நெற்றியில் பதித்தான்.
"உன் காதலை, ஜென்மங்கள் கடப்பினும். நான் மறவேன் மித்லா... எத்தனை முறையானாலும், என் பிறப்பு முதல் உன்னை காணும் நாளை எதிர்நோக்கியே காத்திருப்பேன்... இந்நிலைக்கு காரணமான அந்த கொடிய துஷ்ட்டர்களையும் தேடி, இதே இடத்தில் வைத்து அழித்திடுவேன். இது என் ஜென்ம வாக்கு மித்லா..", எனக்கூறி அவன் கரத்தை விலக்க.... அவனது கரம் பதிந்திருந்த மித்லாவின் நெற்றியில் மூன்று சுழிகள் ஒரே புள்ளியில் இணைவது போல் மிளிர்ந்து மறைந்தது ஒரு ஆச்சு. அதே அச்சு, பத்ரனது வலது உள்ளங்கையிலும் ஒளிர்ந்த அதே நேரம்... இருவரிலும் ஒளிர்ந்த அந்த அச்சைக் கண்டாள் ஆதி.
நிதர்சனம் உணர்ந்ததில் அவள் விழிகள் அகல விரிய. அதே நேரம், "நல்ல காரியம் செய்துள்ளாய் ரட்சகனே!.. விதி உனக்காக மீண்டும் ஒரு பிறப்பைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கவில்லை எனினும்... என் மகளுக்கு கொடுத்த ஜென்ம வாக்கை தீர்க்க நீ பிறப்பெடுத்தே ஆகவேண்டும்...", அவனை கர்வமாய் பார்த்தபடி, அந்த கொடிய போர் களத்தின் நடுவே வெள்ளை ஒளியை போல் நின்றிருந்தார் கர்ணவிஜயன்.
தன் திட்டத்தை அவர் சரியாக கணித்துவிட்ட நிம்மதியில், அவரை வெற்றி புன்னகையுடன் பார்த்தவன், இருந்த இடத்திலிருந்தே அவர் பாதங்களை பணிய.. கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்த கர்ணவிஜயன், பத்ரன் தலையில் கை வைத்து, "பத்ரா... ஓர்நாள் மீண்டும் ஜனிக்கும் இக்கயவர்களை அடக்கிட மீண்டும் பிறப்பெடுப்பாய்.. விதியை மீறி தலைதூக்கும் இருளின் கீற்றை உன் ராஜனின் ஒளி கொண்டு தகர்த்தெறிவாய் நீ... சென்றுவா ரட்சகனே!...", எனக் கூறியவர், அவனுள் ஏதோ மாயத்தை செலுத்த... பொன்னிற ஒளியால் சூழப்பட்டவன் அப்படியே காற்றில் கரைந்தான்..
அதைப்பார்த்து ஆழப் பெருமூச்சை இழுத்து விட்டவர், அங்கே நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் ஆதியை நோக்கித் திரும்பிய அதேநேரம், மயக்கம் தெளிந்து எழுந்தாள் மித்லா. முதலில் பத்ரனை காணாது பார்வையை பரபரப்பாக்கியவள், அங்கே நிலத்தில் சிந்தியிருந்த பொன்நிற துகள்களை கண்ணால் கண்ட நொடியில் நடந்ததை ஓரளவு யூகித்து, "ஆதி!!", உடைந்து போன குரலில் அதிர்ச்சியையும் கலந்து அவளை அழைக்க.., அவள் பார்வையின் கேள்வியை அறிந்த ஆதி, "ஏற்றுக்கொள் மித்லா.. இது நிகழ்ந்தாக வேண்டும்.", கண்ணீர் நிரம்பியிருந்த கண்களுடன் தன் தோழியை அனைத்தபடி தன் வலியை மறைக்க முனைந்தாள்.. நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மித்லாவும் ஆதியின் தோளில் கண்ணீர் தடங்களின் தடையங்களை உருவாக்கத் தொடங்கினாள், மௌனமாக..
"ஆதி!.. நிகழ்ந்தது மாறாது..", கர்ணவிஜயனின் குரல் அவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்த்தது. "இனி எஞ்சியிருக்கும் உயிர்களை காப்பது உன் முடிவில் தான் உள்ளது ஆதி.", நேருக்கு நேராக அவளை எதிர்கொள்ள துணிவில்லாமல், தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடி அவர் கூற.. அவரின் பார்வை செல்லும் இடங்களில் எல்லாம் வீரர்களின் உயிர்கள், காரணமே இல்லாமல் அதன் உடலைவிட்டுப் பிரியத் துடித்துக் கொண்டிருந்தது. கர்ணவிஜயனின் பார்வையை தொடர்ந்தே அக்காட்சிகளை கண்டார்கள் மித்லாவும் ஆதியும்
"இனி இங்கு எவ்வுயிரும் நீங்க கூடாது மாமா.... அதற்கு நான் அனுமதியேன்....", ஆதியின் முகத்தில் ஒரு தீர்க்கமான முடிவு தென்பட்டது. அவளின் சொல் புரிந்ததும் பட்டென ஆதியை விட்டு விலகிய மித்லா, "இல்லை ஆதி... நீ இவ்வாறு செய்யக்கூடாது... நீ... நீ என்னை விட்டுச் செல்லக் கூடாது... நீயும் எங்களை விட்டுச் செல்லாதே.. பிறகு.. பிறகு நீயின்றி உன் மகளின் நிலை?", தன்னை பிரிந்து எழுந்து நின்று, நான்கு ரெக்கைகள் கொண்ட பெரும் வெண்ணிற பாம்பின் ரூபத்தை எடுத்தவளை பார்த்து அழத் தயாரான மித்லாவை கர்ணவிஜயன் பிடித்துத்தடுக்க..., "அவள் யாருடைய மகள் என்பதை அறிவாய் தானே மித்லா... அவள் அன்னை-தந்தைக்காக காத்திருப்பாள்...", என கூறியபடி விண்ணை நோக்கி சீறி பறந்தாள் ஆதி. அவளின் முப்பது அடி நீள பறக்கும்-பாம்பின் ரூபம், மேகம் தாண்டி வானம் தாண்டி விண்ணுக்குள் மறைந்தது.
"ரூபினி..", வானை வெறித்தபடி கன்னத்தின் வழியே சிந்தும் கண்ணீரின் தடத்துடன் தந்தையின் அழைப்பிற்கு கவனம் கொடுத்தவள், "அப்பா.. ஏன் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது?", இருவரின் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் விடத் தொடங்கினாள்..
"ரூபினி, அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பிடும். உன் உடையவன் மீண்டும் உன்னை அடைவான்... உனக்கு ஜென்மவாக்கு அளித்துள்ளான் அவன்...", அவர் சொல்லிய நொடியே, தன்னில் ஏதோ புதிதாக இருப்பது போல் மித்லாவிற்கு தோன்றியது. சட்டென அவளின் கண்ணீர் தடைபட்டது. முகத்திலிருந்த வேதனையின் சாயம் மறைந்து தெளிவு தோன்றியது..
"அவன் மீண்டும் பிறக்கும் நாளில், அவனுக்கான கடமையை புரியவைக்கும் வழியை நீயே உருவாக்கிட வேண்டும். இப்போது நடக்கும் பேரழிவில், அந்த வழியானது அழியாமல் காக்கப்பட வேண்டும்...", மகளிடம் இருந்து மெல்ல பிரிந்தவர், அடிகளை பின்னோக்கி வைத்துக்கொண்டே, "நான் ஆதிக்கு உதவ செல்கிறேன் மகளே.. நீ செய்ய வேண்டியவைகளை விரைந்து செயல்படுத்து... அரை நாழிகையே அவகாசம்.", என சொல்லிய அடுத்த நொடியில் விண்ணில் சீறிக்கொண்டிருந்தார்.. ஆதியை போன்றே மஞ்சள் நிற பாம்பு ரூபத்தில்.
தந்தையை பார்த்தபடி விண்ணை நோக்கி நிமிர்ந்த மித்லாவின் கண்ணில் தீர்க்கம் தென்பட.. அதே நேரம், சற்று தொலைவில் ரெக்கை வைத்த வெண்ணிற புரவி, ராஜன், ரத்த வெள்ளத்துடன் தட்டுத்தடுமாறி தன்னை நோக்கி நடந்து வருவதை வலியுடன் நோக்கினாள். அவன், மித்லாவின் அருகில் வந்து அவள் தோளில் தன் தலையை மொத, "நம் மக்களை காக்க நாம் இந்த தியாகத்தை எதிர்கொள்ளத் தான் வேண்டும் ராஜா..", மென்குரலில் சொல்லிக்கொண்டே அதன் தலையை வருடி, ஆழ பெருமூச்சை இழுத்துவிட்டு தயாராக நின்றாள்.
கொடிய காட்சியைத் தரும் அந்த மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு கைகள் இரண்டையும் அவள் மேலே உயர்த்த.. காற்றில் இருந்த நினைவுகள் எல்லாம் பல வண்ணங்கள் கலந்த ஒரு பெரும் பந்தாக ஒன்று திரண்டது.. அவளுக்கு தெரிந்த நினைவுகள்.. தெரியாத நினைவுகள் என எல்லாமே.. அந்த லோகத்தில் இதுவரை நிகழ்ந்த எல்லா நினைவுகளுமே அந்த மாபெரும் மாய பந்தினுள் ஒன்று திரண்டது. அவைகளை இறுதி பார்வையில் நோக்கியவள் தன் மாய சக்தியால் அவைகளை பல காகிதங்களாக மாற்றி, உள்ளங்கை அளவில் ஒரு புத்தகத்தை உருவாக்கினாள்... அனைத்து நினைவுகளையும் தன்னுள் பதுக்கி, காற்றில் மிதந்துகொண்டிருந்தது அந்த புத்தகம்.
அதற்கு தலைப்பிடுவதற்காக அந்த புத்தகத்தை நோக்கி மித்லா தன் கைகளை நீட்ட... அவள் கரத்தின் வழியே பாய்ந்த வெள்ளை நிற ஒளி, அந்த புத்தகத்தின் மேல்பரப்பில் அமிழ்தன் என்னும் தலைப்பை உருவாக்கியவாறு அவள் உள்ளங்கையில் வந்து அமர்ந்தது. இதழில் தோன்றிய சிறு புன்னகையுடன் அதை மென்மையாக வருடியவள் தன் கையை விலக்க.. அமிழ்தன் என்னும் அந்த பெயர், ஆதிகால ரட்சகன் என மாற்றமடைந்திருந்தது.
அடுத்த நொடி, அந்த போர்க்களத்தில் உயிருக்கு போராடிய எல்லா உயிர்களையும் ஒரு வெள்ளை ஒளி மாயமாக்க... கண்மூடி திறக்கும் நேரத்தில் அம்முழு லோகமும் வெடித்துச் சிதறியது. அதற்கு ஒரு நொடி முன்பாக மித்லாவின் முன்பாக தோன்றியிருந்தான் காலன்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro