9. அறியா ரகசியங்கள் பல
எவ்வளவு நேரம் கடந்ததோ, இருளரசனால் உடைந்துபோன அந்த எலும்புகூடை வைத்துக்கொண்டு, அதன் அருகிலேயே அழுகையில் கரைந்து கொண்டிருந்தான் ராணா. அவனை சமாதானம் செய்ய முன்வந்த மற்ற எழும்புகூடுகள், எப்படியோ அவனை ஓரளவிற்கு அமைதிபடுத்தி, கட்டில் வரையில் அழைத்துவந்து படுக்க வைத்திருக்க.. அவனோ உடைந்துபோன எலும்பை கட்டிக்கொண்டு இன்னுமும் தேம்பிக்கொண்டுதான் இருந்தான்.
இந்த எலும்புகள் அனைத்தும் உயிரற்றவை தான். சிந்திக்கும் சிந்தை இல்லைதான். மனம் என்னும் ஒன்று இல்லவே இல்லாமல் வலியை உணரும் உணர்வற்றவைகள் தான். ஆனால், தேவைகள் ராணாவிற்கு என்று வருகையில் அவன்முன் இவைகள் அனைத்தும் ஒரு தாய்.
தந்தையாகிய இருளரசனின் கோபத்தில் இருந்து தப்பிக்க வழி அறியாமல் ராணாவால் எழுப்பப்பட்ட உதவிக்குரல், அவனால் தாயாக எண்ணப்படும் இந்த எலும்புகளை எழுப்பிவிட்டது. இவைகள் உயிருடன் இருக்கையில் யாருக்கு வேண்டுமானாலும் தாயாக இருந்திருக்கலாம்... எத்தனைப் பிள்ளைகளை வேண்டுமானாலும் வளர்த்திருக்களாம்.. ஆனால், இறுதி நிமிடங்களில் ராணாவின் வசியத்தால் அவனின் தாயாக மாறி உயிரை விட்டிருப்பதால் இப்போது அவைகள் அவனுக்கு மட்டுமே தாய்.
தாயே இல்லாமல் உருவாக்கப்பட்ட பிள்ளைதான் என்றாலும், தாய் ஸ்தானத்தை நிறப்பிட இன்று அவனுக்கு பலர் இருக்கிறார்கள். இருந்தும், பெற்றத்தாய் போல் ஆகிடுமா என்ன?.. இதற்கெல்லாம் காரணம் முற்பிறவியில் ராணா பெற்றிருக்கும் சாபம்... அதனுடன் சேர்ந்து அவனுக்குக் கிடைத்த ஒரு வரம். அது குறித்து அறிந்தவர்கள், அவனும் அவனை உருவாக்கிய இருளரசனும் மட்டும் தான்.
நீண்டநேரம் தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தவன், எழுந்தமர்ந்து தனது உடைந்து போன தாயை இறுதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, அதனை முழுவதுமாக தன் வலகரம் கொண்டு வருட... காற்றோடு காற்றாகி கரைந்து போனது உடைந்துபோன அந்த எலும்புகூடு. சில நிமிடங்கள் வரையில் அப்படியே அழுது முடித்தவன், விசும்பியபடியே அவ்வறையிலிருந்து வெளியேறிட.. அவனின் எலும்புத் தாய்மார்கள் மீண்டும் அந்த அமில அகழியினுள் சென்று மறைந்துக் கொண்டார்கள்.
அறையை விட்டு வெளியேறிய ராணா, இருள்மாளிகையினுள் இருக்கும் ஒரு நீண்ட நடைபாதை வழியாக, வெறுமை குடிகொண்ட முகத்துடன் நடந்து கொண்டிருந்தான். சரியாக அதே நேரம், சமாராவை கையில் தூக்கிக் கொண்டு, அவளை முறைத்து முறைத்து பார்த்துகொண்டே எதிரில் வந்து கொண்டிருந்தான் ஷேனா.
குழந்தைகள் என்றால் பார்ப்பவர்களுக்கு அள்ளிக் கொஞ்சத்தான் தோன்றும். தூக்கி விளையாடத்தான் தோன்றும். ஆனால் ஷேனாவிற்கு மட்டும் சாமாராவை கண்டாலே கோபம் தான் மேலெழும்.. ஒவ்வொரு முறையும் இருளரசரோ இல்லை அவரின் தங்கையோ, சமாராவை தூக்கி வருமாறு பணிந்தால் மட்டுமே அவளை தூக்கச் செல்வான். அப்படி அவன் தூக்கும் ஒவ்வொரு முறையும் அவனைக் காயப்படுத்துவது சமாராவின் வழக்கம். அந்தப் பிஞ்சுக் குழந்தை, தன் நகங்களை கொண்டு ஷேனாவின் உதிரத்தை உறிஞ்சுவது இதுவரையில் பிறர் கண்களில் சிக்காத ஒன்று என்பதுதான் ஆச்சரியம். அவளின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் என்னவோ? அவளைப் பற்றி முழுமையாக தெரிந்தவருக்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம்.
இப்போதும் அதே போல் தான்... தன்னை தூக்கத் தெரியாமல் கட்டிப்பிடித்து தூக்கியிருக்கும் ஷேனாவின் தோளிலேயே தலையை சாய்த்துக்கொண்டு, அவன் இரு தோள்பட்டையிலும் தன் கூரிய நகங்களால் சமாரா கோடுபோட்டுக் கொண்டிருக்க.. அவளை கீழே விடவும் முடியாமல் வலியைத் தாங்கவும் முடியாமல் தவித்திருந்த நேரத்தில் அவன் கையில் தொங்கிக் கொண்டிருந்தவளை சட்டென தூக்கியது ஒரு கரம். ஷேனாவின் கரத்தில் இருந்து பிரிந்த சமாரா, அதனை உணர்ந்ததும் தன் அழுகையை தொடங்கிட.. கண்ணீர் தேங்கி இருக்கும் தன் விழிகளால் அவள் அழுகையை பார்த்துக் கொண்டிருந்தான் ராணா.
"அவளை என்னிடம் கொடு... அவள் அம்மா அழைத்துவர சொல்லியிருக்கிறார்கள்.. நான் செல்ல வேண்டும்...", கிட்டத்தட்ட பயத்தில்தான் ராணாவை நோக்கினான் ஷேனா. இப்போது குழந்தை ராணாவிடம் இருப்பது தெரிந்தால் அதற்கு இருளரசன் கடிந்துகொள்ளப் போவது அவரின் மகனை அல்ல... ஷேனாவைத் தான்.
"கொடு... அவளை என்னிடம் கொடு...", ராணாவிடம் இருந்து சமாராவை தூக்குவதற்கு ஷேனா முயற்சிக்க.. ம்ம்ஹும்.. ராணா கொடுப்பதாகவே தெரியவில்லை. ஷேனா, வலுக்கட்டாயமாக சமாராவை தூக்க முயற்சித்த சமயம், அவனை ஒரே தள்ளாக கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடியே விட்டான் ராணா. எதிர்பாரா நேரத்தில் நடந்த ராணாவின் இச்செயலால் தடுமாறி கீழே விழுந்த ஷேனா, அடுத்த கணமே எழுந்து முன்னே நோக்க.. சமாராவுடன் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ராணா.. அவ்வளவு வேகம்.
ஷேனாவும் அவனைத் துரத்திக்கொண்டு ஓட... இரண்டு மூன்று இடுக்குகளில் புகுந்து.. நான்கைந்து வளைவுகளில் வளைந்து ஓடியப்பின் எங்கு சென்று ஒளிந்தானோ?... ராணாவை தவறவிட்டான் ஷேனா.
அவன் எங்கு சென்றான் என புரியாது அங்கேயே நின்று சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டே பின்னோக்கி நடந்த ஷேனா, எவரின் மீதோ மோதி நிற்க.. சட்டென பின்னோக்கியவன் முன்பாக நின்றிருந்தாள் காத்யாயினி.
"என்ன, நீ மட்டும் தனிமையில் உலாத்துகின்றாய்?.. குழந்தையை அழைத்துவரத் தானே உன்னை அனுப்பினேன்.. இன்னும் அவளை அழைக்கக்கூட செல்லவில்லையா??...", கடுகடுக்கும் குரலுடன் காத்யாயினி ஷேனாவை பார்க்க..., "இ... இல்லை.. ராணா... ராணா தான்... என்னிடம் இருந்து அழைத்து சென்றுவிட்டான்...", அவளின் கடுகடுப்பில் மருண்டு போனவன் தயங்கியவாரே பதிலளித்ததில், அதிசயமாக அந்நொடியே சாந்தமாகினாள் காத்யாயினி.
"சரி, நீ செல். நானே சென்று அவளை அழைத்துக் கொள்கிறேன்....", அலட்சியமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட.. இப்போதைக்கு வேறு வேலையும் இல்லாததால் ஷேனாவும் அங்கிருந்து சென்றுவிட்டான்.
இங்கே, சமாராவை தூக்கிக்கொண்டு ஓடிவந்த ராணா, இறுதியாக அவனறைக்கே வந்துவிட்டான். அவளோ ஷேனாவிடமிருந்து தன்னைப் பிரித்ததற்காக இன்னுமும் அழுதுகொண்டே தான் இருந்தாள்.
சமாராவை மடியில் வைத்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்த ராணா, "நீ ஏன் அவனிடமே செல்கிறாய்?? அவனிடம் மோதாதே. அவன் யாரென்று அறிவாய் தானே. .. .. .. சரி, அழதே... உனக்கு குருதி தானே வேண்டும்... எனதை எடுத்துக்கொள்...", என்றபடியே அவள் பிஞ்சு கரத்தினில் தன் மணிக்கட்டை பதிக்க... அவன் கரத்தினுள் தன் நகங்களை இறக்கினாள் சமாரா. ராணாவோ, அவள் செய்கையானது வலிக்கிறதா இல்லையா என்பதை பிறர் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு நிலையில்தான் இருந்தான்.
இரண்டே நொடி தான்... ராணாவின் கரத்தில் இருந்த தன் மகளின் கரத்தை வெடுக்கென பிரித்தெடுத்து உடனடியாக அவளைத் தன் கரங்களில் தூக்கியிருந்தாள் காத்யாயினி. அடுத்தநொடி, தன் அழுகையை மீண்டும் தொடங்கி விட்டாள் அவள். சமாராவின் செய்கையால் அவள் அன்னையின் கண்களில் ஒருவித மிரட்சி. தன் மகள் இப்படி உதிரம் குடிப்பவள் என்பது இப்போதுதான் தெரிகிறது அவளுக்கு.
தாயாகிய தானே இவ்விஷயம் குறித்து அறியாமல் இருக்கையில் ராணா எப்படி அறிந்துக் கொண்டான்? அதுவும் ஐந்து வயது சிறுவனுக்கு இதுகுறித்த தகவல் எங்கிருந்து கிடைத்தது? என்னும் குழப்பங்கள் மேலோங்கிட... அதற்கு மேலாக, தன் மகளை அமிலஅகழி இருக்கும் இந்த அறைக்கு அழைத்து வந்ததில் ராணாவின் மீது பயங்கர கோபத்தில் இருந்தாள் காத்யாயினி.
ஆனால் அக்கோபத்தை வெளிக்காட்டவில்லை. காட்டுவதற்கு துணிவு எப்படியிருக்கும்? இப்போது தானே தன் சகோதரனுக்கு நடந்ததை கேட்டு வந்திருக்கிறாள். தானும் இவன் மீது கோபம் கொண்டு, மீண்டும் இவன் அந்த எலும்புகளை எழுந்துவரச் செய்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அமைதியாக ராணாவை நெருங்கியவள் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
"ராணா.. நானும் இவளும் இன்றே முத்துமாளிகைக்கு புறப்படுகிறோம்... இனி இவ்விடம் வருவதற்கு பல காலம் ஆகும். நீயும் எங்களுடன் வருகிறாயா??...", மென்மையாக கேட்க... முதலில் சம்மதமாய் தலையாட்டியவன், அழுது கொண்டிருக்கும் சமாராவை சுட்டிக்காட்டி, "நான் விளையாட வேண்டும்... அவளை என்னிடம் கொடுங்கள்...", இரு கைகளையும் ஏந்திக்கொண்டே கேட்டான்.
அந்த அறையில் இருக்கும் அகழியை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த காத்யாயினி, "சரி.. இங்கேயே அமர்ந்து விளையாடு. வேறெங்கும் செல்லக்கூடாது... சரியா? நான் மீண்டும் வந்து இருவரையும் அழைத்துச் செல்கிறேன்..", என்றுவிட்டு சாமாராவை அவனிடம் கொடுத்த காத்யாயினி, வேகமாக அங்கிருந்து புறப்பட்டு, ஓட்டமும் நடையுமாக எங்கோ விரைந்தாள்.
சமாரா, மீண்டும் ராணாவின் கைக்கு வந்தவுடன் அவளாகவே ராணாவின் மணிக்கட்டை தன் நகங்களால் பதம் பார்க்க... வழக்கம்போல சாதாரண முகபாவத்துடன் தான் இருந்தான் அவனும். எங்கும் செல்லக் கூடாது என காத்யாயினி சொல்லிவிட்டுச் சென்றது அவன் நினைவுக்கு வர... 'நமக்கு தான் சொல்பேச்சை கேட்கும் பழக்கமே இல்லையே' என்பதுபோல் நேராக அந்த அமில அகழியை நோக்கித்தான் நடந்தான் அவன். சமாராவை கையில் தூக்கியவாரு அகழி முனைக்கு சென்றவன், என்ன நினைத்தானோ.. இரு நொடி அவள் முகத்தை பார்த்தபடியே அவள் மீதிருக்கும் தன் பிடியை சட்டென தளர்த்திட... கண்மூடி திறப்பதற்குள் அமிலம் நிறைந்த அகழியை நோக்கி கீழே விழுந்தாள் சமாரா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro