Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8. பெயர்சூட்டு விழா

தன்னறையில் மகனுடன் உறக்கத்தில் இருந்த ஷிவேதனாவை எழுப்பியது ராணாவின் அலறல் மொழிதான். என்ன ஏதேன்று புரியாமல் திடுக்கிட்டு விழித்தவர் ஒரு வேகத்தில் வெளியே செல்ல முனைய.. அங்கு படர்ந்திருந்த இருள் அவளைத் தடுத்ததில் அங்கேயே தடையுண்டு நின்றுவிட்டாள்.

அக்குரல், யாருடைய குரல் என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், எவரோ உதவிக்காக ஏங்குவதை தெளிவாகவே உணரமுடிந்தது ஷிவேதனாவால். சில நொடிகளிலேயே அக்குரல் நின்று விட்டதால் சற்று அமைதியடைந்து மகனருகில் சென்று அமர்ந்தவள், உறங்கும் ஷேனாவின் தலையை மென்மையாக வருடத் தொடங்கினாள். அதேநேரம், கழுத்தில் இருந்த உறவுசங்கிலியையும் மெதுவாக வருடினாள்.

"உன் அம்மாவை மன்னித்துவிடு ஷேனா... என் வாழ்வில் இனி ஒளியில்லை எனினும் உனக்கான அழகான உறவுகளை உன்னிடம் இருந்து பறித்து விட்டேனடா...", என்றவள் எண்ணத்தில் அவளின் மொத்த குடும்பமுமே இருந்தது. தன் குடும்பத்தை பிரிந்த வேதனையில் இவள் இங்கே வாடிக்கொண்டிருக்க... அங்கு ரட்சகராஜ்யத்திலோ.. புதிதாக பிறந்திருக்கும் இரு உயிர்களின் பெயர்சூட்டு விழாவிற்கான ஏற்பாடு கோலாகலமாக தொடங்கியிருந்தது.

விழா என்றால் சாதாரண விழா இல்லை.. ராஜ்யமே கொண்டாடும் திருவிழாவாக இருந்தது இரு மழலைகளின் பெயர்சூட்டு விழா. காரணம், முன்னால் இளவரசியான ஷிவேதனா, தன் ராஜ்யத்தை துறந்து சென்றபின் மாகாராணியால் மக்களுக்குச் அறிவிக்கபட்ட செய்தி, 'ரட்சகராஜ்யத்தில் அடுத்து பிறக்கும் உயிரே அடுத்த ராஜ பதவிக்கு உரியவர்'.

ராஜ்யத்தில் அடுத்த உயிரின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்ததுதான், முன்னால் இளவரசியின் வீட்டிலேயே இரட்டையர்கள் கருவாக உருவாகியிருந்த செய்தி. இறுதியாக இன்று, வருங்கால இளவரசிகள் இருவருக்கும் பெயரசூட்டு விழா.

இரு குட்டி தேவதைகளையும் பொம்மைப்போல் அலங்காரம் செய்து, வைரமாளிகையின் வாயிலில் இருக்கும் தொட்டிலில் கிடத்தியிருக்க... ரட்சகராஜ்யத்தின் ஒட்டுமொத்த ஜனமும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் வாழ்த்திச் சென்றுகொண்டிருந்தது. இதுவே ரட்சகராஜ்யத்தின் வழக்கம். பிறப்போ இறப்போ.. ஊர்மக்கள் ஒன்றுகூடிதான் சகல சம்பிரதாயங்களையும் முன்னின்று செய்வார்கள். இப்போது அனைவரும் குழந்தைகளைப் பார்த்து முடித்தப்பின், இறுதியாக மகாராணியின் வருகைக்காக தான் காத்திருந்தார்கள்.

மகாராணி என்றால் பிறரைப்போல் மனிதஉருவம் கொண்ட சாதாரண பெண்மணி அல்ல அவர். மகாராணி என்பவர் இந்த மொத்த லோகத்திற்கும் இதயம் போன்றவர். ஆதிலோகம் இயங்குகிறதென்றால் அதன் காரணம், அவர்கள் தான். அவருக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூட எவரும் அறியமாட்டார்கள். ஏனென்றால் அவர் காட்சிகொடுக்கும் விதம், ஒன்றே ஒன்று தான். மக்கள் அறிந்த வரையில், பெரும் ஒளிபந்து ரூபத்தில் தான் அவரின் தோற்றம் இருக்கும்.

மக்களின் காத்திருப்பை நீட்டிக்காமல், வைரமாளிகையின் உள்ளே இருந்து நீல நிற ஒளிபந்தாக வெளி வந்தார் இம்மண்ணின் மகாராணி. மக்கள் அனைவரும் மரியாதை நிமிர்த்தமாக அவருக்குத் தலைவணங்க... சத்யஜித்-சத்யபாமா தம்பதிகள், இரு குழந்தைகளையும் கையில் ஏந்திக்கொண்டு மகாராணியின் முன்னிலையில் சென்று பணிந்து நின்றார்கள்.

இரு குழந்தைகளையும் தன் ஒளிக்கதிர்களால் ஆசிர்வதித்த மகாராணி, "குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டவிருக்கிறீர்கள்??.. ஏதேனும் முடிவெடுத்திருக்கிறீரா?? ", குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்க, "மகாராணி... முதல் பிள்ளைக்கு மாயா என்றும் இரண்டாமவளுக்கு ஹாசினி என்றும் பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம்..", ஆர்வமாக பதிலளித்தார் சத்யஜித்.

"அழகான பெயர்கள்..", என்றவர், சில கணம் மௌனமாக குழந்தைகளுக்கு முன்னிலையில் இருந்தார். நீல ஒளி தங்கள் கண்ணுக்கு முன் இருப்பதைப் பார்த்த இரு குழந்தைகளும் அதனை பிடிப்பதற்காக என்னதான் கைகளை ஆட்டியும் அது சிக்காமல் போகவே, ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் வந்துவிட்டது போலும்... தங்கள் பிஞ்சு குரலுக்கு எட்டிய ஒலியை பிரயோகித்து மகாராணியை நோக்கி விதவிதமாக திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அழகை பார்க்கும் மக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை எனினும், குட்டிகள் இரண்டும் படுசுட்டி என்பது தெள்ளந்தெளிவாக புரிந்து போனது.

சில நொடிகளிலேயே இருவரின் அருகில் வந்த மகாராணி, "நம் ராஜ்யத்தின் வருங்கால மூத்த இளவரசி மஹிமாயா... இளைய இளவரசி ரக்ஷஹாசினி.. இவ்விருவரின் வாழ்வும் பிரபஞ்சத்தின் சரித்திரத்தின் முக்கிய பக்கங்களாக, நாங்கள் வாழ்த்துகிறோம்...", இருவரின் பெயர்களையும் உறக்கக் கூறிவிட்டு இரு குழந்தைகளுக்கும் வாழ்த்து சொல்லிய நொடி, உற்சாகத்தில் திளைத்தது ரட்சகராஜ்ய மக்கள்கூட்டம்.

பின், இளவரசிகளின் பெற்றோரிடம் சென்றவர், "இவர்கள் இருவரும் ராஜ கலைகளை கற்றதும் பதவியை முழுமையாக ஏற்கத் தயாராகிடுவார்கள்... இளவரசிகளை தயாராக்குவது உங்கள் பொறுப்பு", கூறிவிட்டு, மகாராணி அங்கிருந்து வைர மாளிகையின் உள்ளே சென்று மறைந்து விட... மக்களின் உற்சாக குரல் சத்யஜித்-சத்யபாமா தம்பதிகளை மனம் குளிரச் செய்தது.

அப்போதே தன் மகன் அபிஜித் அங்கில்லாததைக் கண்ட சத்யபாமா, "நீங்கள் அபியை பார்த்தீர்களா??", என கணவனை நோக்கிக் கேட்க..., "இங்கு தான் பிள்ளைகளுடன் இருப்பான்", என திரும்பியவர் முன், ராகவி மற்றும் சங்கவி தனியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது இருவரின் பார்வையும் மூலை முடுக்கெல்லாம் பாய, "இன்றைய நாள் என்னவென்பதை மறந்தீர்களா அண்ணா?.. அவன் ராஜ்ய வாயிலில்தான் இருப்பான்", சத்யஜித்தின் மூத்த தங்கை ரோஹினியின் குரல், வலியோடு ஒலித்தப் பின்புதான் மற்ற இருவருக்கும் இன்றைய நாளின் நினைவு வந்தது. ஷிவேதனா, தங்களைப் பிரிந்து இன்றுடன் சரியாக ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டது. அதை நினைத்தவர்கள் பெருமூச்சு மட்டுமே விட, அதேநேரம், ரட்சக ராஜ்ய வாயிலில், கண்ணீர் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தான் அபிஜித்.

அவன் கழுத்தில், அவனால் செய்யப்பட்ட உறவுசங்கிலி, சிவப்பு நிறத்தில் மின்னி கொண்டிருக்க.., "வேதா அத்தை, மீண்டும் என்னிடம் வாருங்கள்... நீங்கள் இன்றி இங்கு எதுவும் நன்றாக இல்லை.. எதுவுமே நன்றாக இல்லை..", வார்த்தைக்கு இடையில் இரு நொடிக்கு ஒரு விசும்பல் சத்தம், "இன்னும் ஒன்று தெரியுமா.. நேற்று மாலை எனக்கு இரு தங்கைகள் பிறந்துள்ளார்கள்... அவர்களை பார்க்க நீங்கள் வரமாட்டீர்களா??", ராஜ்ய வாயிலில் நின்றுகொண்டே இவன் அந்த சங்கிலியில் பேசிக்கொண்டிருக்க.. அதன் மறுபுறமிருந்து பதில் தான் வரவே இல்லை.

அவனிடம் இருப்பது போலவே இன்னொரு உறவுசங்கிலி, ஷிவேதனாவின் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் தன் மருமகன் தன்னிடம் பேசிடுவதற்கு முயற்சிக்கையில் அவனை ஏமாற்றுவது பெரும் வலியாகத் தான் இருந்தது அவருக்கும். ஆனால், பதில் சொல்லத்தான் குரல் எழவில்லை. இன்று, தன் சகோதரனுக்கு பிறந்திருக்கும் குழந்தைகளின் முகங்களைக் கூட பார்க்க வாய்பில்லாமல் மாறிப்போன தன் நிலையை நினைத்து நொந்துகொள்ள மட்டும்தான் முடிந்தது அவரால்.

தான் என்னதான் குரல் கொடுத்தாலும் தன் அத்தை பதிலளிக்கவில்லை என்னும் வலி அபியை பிடித்துக்கொள்ள.. அங்கேயே மடிந்தமர்ந்து கத்தி அழுதவனுக்கு அத்தை மேல் கோபமும் தலைதூக்கியது. கழுத்தில் இருந்த உறவு சங்கிலியை கழற்றி தூர எறிந்துவிட்டு பின்னால் திரும்பிக்கூட பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான் அபிஜித்.

இருள் மாளிகையில், தன்னிடம் இருக்கும் உறவு சங்கிலியை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்த ஷிவேதனா, தன் கையில் மற்றுமொரு உறவுசங்கிலி திடீரென தோன்றியதைக் கண்டு முதலில் ஒன்றும் புரியாமல் விழிக்க.. பின், என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துவிட்டாள். பாலத்தின் ஒரு முனை உடைந்துவிட்டால் அது தானாகவே மற்றைய முனைக்கு அறுந்து சென்றுவிடும். உறவு சங்கிலி, இரு உறவுகளை இணைக்கும் பாலம்.. அறுந்துபோன பாலத்தின் அதே நிலைதான் இங்கும்.

இத்தனை காலம் கேட்டுக்கொண்டிருந்த மருமகனின் குரலைக்கூட இனி கேட்க முடியாது என்கையில், அதை ஏற்றுக்கொள்ள ஷிவேதனாவின் மனம் ரணமாய் ஆகியது. அதில், அவரின் கண்கள் தானாகவே கலங்கியது.

✨✨✨

ராணாவின் அறையிலிருந்து வெளியேறி வந்த இருளரசன், ஒரு முடிவுடன் நேராக வந்தது அவரின் தங்கை காத்யாயினியை பார்க்கத்தான். காலையில் நிகழ்ந்தவை அனைத்தையும் அவளிடம் சொல்லி, உடனடியாக தன் மகனை எங்கேனும் தூரமாக அழைத்துச் செல்லும்படி கேட்கதான் வந்திருந்தார்.


"என்ன சகோதரா இது... அவன் உங்கள் மகன். இப்படி அவனை பிரிந்து வாழ உங்களால் முடியுமா??", தயங்கினாள் காத்யாயினி.


"காத்யாயினி... நான் என் மகனை இழந்து வாழ்வதற்கு பிரிந்து வாழ்வது மேல். இன்றே அவனை இங்கிருந்து உனது கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிடு. அந்த ஜடங்களுடனும், அமில அகழியுடனும் இனி அவனுக்கு எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது", அவர் தீர்மானமாகச் சொல்ல... சகோதரனின் வார்த்தையை மீற முடியாமல் சரியென ஒப்புக்கொண்டாள் காத்யாயினி.


இருளரசனுக்கு ஒரேயொரு பயம் தான். ஆசை ஆசையாய் வளர்க்கும் ஒரே மகன், அவனை அவனே மெல்ல மெல்ல அழித்துக்கொள்கிறான் என. அதைத் தடுக்கு ஒரே வழி, ராணாவை அந்த அமில அகழியிடமிருந்து, முடிந்தளவிற்கு தூரமாக விளக்கி வைப்பதுதான். அதற்காக அவர் எடுத்த முடிவுதான், தன் மகனை தங்கையுடன் அனுப்பி விடுவது.


✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro