57. ரட்சகனின் பிறப்பு! (நிறைவு)
அன்றைய விடியல் கதிர்கள் ஜகஜோதியாக உதிக்க... காலங்காத்தாலேயே வீட்டிலிருந்து நைசாக நழுவி எங்கோ புறப்பட்ட தீரா, அபியின் கண்களில் வசமாக சிக்கிவிட்டாள்.
"விடிய காத்தால எங்க ஓடுற?" அபியின் குரல் கேட்டதும், தப்பித்து ஓடும் போசிலேயே வாயிலில் நின்றவள், அவனை நோக்கித் திரும்பி, "ஹிஹி.. பூமிக்கும், மாமா." அவள் பதில் கொடுப்பதை, மாடிப்படியின் மேலிருக்கும் சாளரத்தின் நடுவே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான் அபி.
"பூமிக்கா? எதுக்கு?"
"அது... வந்து மாமா, எனக்கு பூமில ஒரு புது குட்டி ஃப்ரண்ட் (18-ம் பகுதியில்...) கிடைச்சிருக்கான்னு சொன்னேன்ல... அவன் ரொம்ப பாவம் மாமா. பல ஆயிரம் வருஷமா யாருக்கோ வெயிட் பண்ணிட்டு தனியாவே இருக்கானாம். அதான். போய் கொஞ்சம் கம்பெனி குடுக்கலாமேன்னு..."
"ஓஹோ. எப்போ வரையும்?"
"அது... ஒரு.... ரெண்டு... மூணு, நாள்?"
"எதே?"
"இல்ல, மாமா! நாளைக்கு மதியம் ஒரு ரெண்டு, மூணு மணி போல வந்துறேன். அவன்வேற, எதாச்சும் கத சொல்ல ஆரம்பிச்சான்னா நேரம் போராதே தெரியாது எனக்கு."
"ஹ்ம்ம்... சரி, போய்ட்டுவா-"
"ஹை-"
"விராவையும் கூட்டிட்டு போ."
"அய்யோ! வீரா வா?"
"என்ன வீராவா? அவன் எப்பவும் உன்கூட வருவான் தானே?"
"வருவான் தான். ஆனா... இப்போ," ஏதேனும் சாக்குபோக்கை தேடியவள், "இன்னைக்கு, மாயா-ரக்ஷா அவன வனதேசம் கூட்டிட்டுப் போறாங்க" என்று பட்டெனக் கூறிய நொடி, அங்கே பின்பக்கமாக திரும்பியிருந்த சோஃபாவின் பக்கவாட்டிலிருந்தும் பின்னால் இருந்தும் ஒரேபோல் இரு தலைகள் எட்டிப்பார்த்தது.
அபி, கேள்வியாத் தன் தங்கைகளை நோக்க... அவ்விருவரும் தீராவை நோக்க... அபியின் பார்வை தன்னை நோக்கித் திரும்பும்முன் அவர்கள் இருவருக்கும் கண்களால் சைகை காட்டிவிட்டாள் தீரா.
"ஆமா'ண்ணா, வீராவ கூட்டிட்டு வனதேசம் போறோம் நாங்க." என்றபடி, சோஃபாவில் அமர்ந்திருந்த ரக்ஷா எழுந்து நிற்க, "ஆமா. போறோம், சோஃபாவில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்த மாயாவும் எழுந்து நிற்க, "கொண்ணுபுடுவேன் ரெண்டு பேரையும்." சட்டென பதில் கொடுத்த அபியை கண்டு கப்சிப் என்றாகி விட்டார்கள் மூவருமே.
"மொதல்ல ரெண்டு பேரும் சண்ட போட ஒழுங்காக கத்துக்கோங்க. அப்பறம் தான் ராஜ்யத்த விட்டு வெளிய போறதெல்லாம். இப்போ, வீராவ தீராட்ட அனுப்பிருங்க." என்றவிட்டு அபி நகர முனைந்த நொடி, தீரா கலவரமாக இளவரசிகளை நோக்க... நொடியில் சுதாரித்த மாயா, "உம்ம்... அப்போ... அப்போ, நாங்க ராஜ்யத்துக்கு உள்ளேயே வீராவை கூட்டிட்டு சுத்தப் போறோம்."
"ஆமா, சுத்தப் போறோம்." மாயாவிற்கு ஒத்து ஓதினால், ரக்ஷா.
பின்னால் திரும்பி மூவரையும் ஒரு பார்வை பார்த்த அபி, "என்னவோ பண்ணித் தொலைங்க." என்றுவிட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றுவிட... அவன் சென்றதும், சைகையிலேயே இளவரசிகளுக்கு நன்றி கூறிவிட்டு ஒரே ஓட்டமாக வெளியில் ஓடினாள் தீரா.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் சந்தேகப் பார்வையில் பார்த்துக் கொண்டார்கள், இரட்டை சகோதரிகள்.
✨✨✨
பூமி.
அந்த மாலை வேலையில், பதட்டத்துடன் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் தேவயாசினி. காரணம், சற்றுமுன் அவள் கண்ட கனவுதான்.
தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது போன்றும்.. அவன் பிறந்துத் தன் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கையிலேயே திடீரென அவனுக்குக் கூரிய பற்களும் நகங்களும் வளர்ந்து, தன்னைத்தானே கழுத்தில் குத்திக் கொண்டும், கைகளை கடித்துக் குதறிக் கொண்டும் அவன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதுபோல் ஒரு காட்சி... அதே நேரம், நேற்று இரவு ஷிவேதனாவை சந்தித்த நினைவுகளும் மெல்ல மேலெழும்பியது. அவள் தனக்குள் செலுத்திய சக்திகளால் தன் குழந்தைக்கு ஆபத்தா என நினைக்கத் தொடங்கியிருந்தது அவளின் மனம்.
நேற்று, மாய சக்திகள் தனக்குள் சென்றதும் மயங்கிய தேவா, தன் அண்ணனும் அண்ணியும் வந்து எழுப்பியதும், வீட்டினுள் உள்ள சோஃபாவில் விழித்து கொண்டாள். ஆனால், சற்றுமுன் நிகழ்ந்தவற்றை கனவென நினைத்துக்கொண்டாள். இப்போதும் அதை கணவென நினைத்தாலும், உண்மையாக இருக்குமோ என இன்னொரு மனமும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க... அந்திவான சூரியன் கிழக்கே மறைய தொடங்கியிருந்தது. ஜொலிக்கும் பௌர்ணமி உதிக்கத் தொடங்கியது.
பௌர்ணமி நிலவு பிரகாசித்து மின்ன தொடங்கிய அந்நோடி, தேவயாசினியின் அடிவயிற்றில் சுறீரென வலியெடுக்க. தன் சிந்தனைகள் அனைத்தையும் நொடியில் மறந்தவர் வலியில் அலர தொடங்கினார். அவர் குரல் கேட்டு அவசர அவசரமாக அவரை சூழ்ந்த குடும்ப நபர்கள், நேரம் கடத்தாமல் உடனடியாக மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றார்கள்.
✨✨✨
புகைசூழ்ந்த அந்தக் கூண்டினுள்ளே, வாகாகக் காலை நீட்டியபடி பத்ரன் மல்லாக்கப் படுத்துக் கிடக்க, "பத்ரா," கோபத்தின் உச்சத்தில் கத்தியபடி அங்குக் காட்சிக் கொடுத்தான், காலன்.
"என்ன?" எதுவுமே நடவாததை போல், மெல்லமாக எழுந்தமர்ந்து சோம்பல் முறித்தவனை நோக்கி, "என்ன செய்ய போகிறாய் நீ? இதன் பொருள் என்ன?" கத்திய காலன், தேவாவின் கனவை ஒரு திரையில் போட்டுக் காட்டிட... அந்தக் கனவை பார்த்துவிட்டு எவ்வித சலனமும் காட்டாமல், "ஓஹ்! என் தாய்க்கு என்மேல் இத்தனை பாசமா? ஆஹா! என் திட்டத்தை அப்படியே சொப்பணம் கண்டிருக்கிறாரே!" போலி ஆச்சரியத்துடன் அந்தத் திரையை வர்ணித்தான், அமிழ்த பத்ரன்.
"பத்ரா... விளையாடாதே. இது ஒன்றும் உனது மாய உலகமல்ல, இறந்து இறந்து மீண்டும் பிறபெடுக்க. இது, என் பூமி. ஒருவனுக்கு ஒரு வாழ்வு தான்." கூண்டினுள் கைவிட்டு பத்ரனின் ஆடையை, காலன் பிடித்திருக்க, "நானறிவேன். அதுவே என் திட்டமும் கூட.. ஹாஹ்." தெனாவெட்டாக அவன் கையை தட்டிவிட்டவன், "என்னதான் உன் பூமி மாயங்களற்றது எனினும், நான் மாயனின் மகனடா! என்னுள் இருக்கும் மாயத்தினை உன்னால் எதுவும் செய்ய முடியாது. பூமியில் பிறந்தாலும், அங்குள்ள மக்கள் முகம் என் மனதில் பதியும்வரை இங்கு நடந்தவை அனைத்தும் என் நினைவில் தான் இருக்கும். இங்குக் கற்ற மாயங்கள் அனைத்தும் என் கட்டுபாட்டில் தான் இருக்கும். ஹ்ம்ம்... நான் மீண்டும் பிறபெடுப்பது, அதுவும்... உன் பூமியில் பிறப்பது... அது எவ்வளவு பெரிய அழிவு என்பதை நானறிவேன், காலா! இருப்பினும் உன் வலையில் சிக்கிவிட்டேன். தப்ப முடியவில்லை. பிறந்துதான் ஆகவேண்டும். ஆனால், பிறந்தப்பின் என்னை எப்படித் தடுப்பாய், காலா? மாயம் என்வசம். நினைவுகளும் என் வசம். என்.உயிர்.கூட.என்.வசமே." காலனால் இதற்குமேல் தன் திட்டத்தில் நுழைய முடியாது என நினைத்து அவன் உலறிக் கொண்டிருக்க, "ஆஹ்ஹ்ஹ்ஹ்" அவன் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்த நொடி, கோபத்தின் உச்சத்தை தாண்டிச் சென்றுவிட்டான் காலன். அந்நொடி, நிலமையை அறிந்து அவ்விடம் வரவழித்தார் பத்ரனின் ஒரே குரு, அவனது மாமா, கர்ண விஜயன். காலனோ பத்ரனோ, இருவருமே தட்டாமல் கேட்பது இவர் ஒருவரின் சொல்லை மட்டுமே .
வெண்ணிற மின்னல் வழியே திடீரெனத் தோன்றியவர், "பத்ரா, இது விளையாட்டல்ல... உன் ஒருவனை மட்டுமே பாதிக்கும் செயலும் அல்ல, உன்னை நம்பியே காத்திருக்கும் பல லட்ச உயிர்களின் தேவை இது. நீ மீண்டும் ஜனித்து அக்கயவர்களை அடக்கிடதான் வேண்டும். ஜென்ம வாக்கிலிருந்து பின்வாங்காதே.. அதன் விளைவு, விபரீதமாக இருக்கும்." எப்போதும் சாந்தமாக இருக்கும் அவர் சற்று கோபமாகவே எச்சரிக்க, சற்று தயங்கினான் பத்ரன்.
"ஆனால், குரு.. நான் பின்வாங்கிடும் விளைவை விட மாயங்கள் இல்லா பூமியில் ஜனிக்கும் விளைவு மிகவும் மோசமானதாக அல்லவா இருக்கும்."
"நீ எதை சிந்தித்து பயப்படுகிறாய் என்பது எனக்கு புரிகிறது, பத்ரா. ஆனால், அதற்கு அவசியமில்லை. நீ மாயோனின் மகன்! நீ எந்த ரூபத்தில் இருப்பினும் அவன் மகன் இருக்குமிடம் அவனும் இருப்பான். ஆதாலால், அது மாயங்களற்ற பூமியாகிடாது, ரட்சகனே! உனக்குத் துணையாக உன் உறவுகள் அனைவருமே உன்னிடம் வருவார்கள், தயங்காமல் செல்." என்றவர், அவனுள் ஏதோ மாயத்தை செலுத்த... அந்த மாயத்தின் மூலமாக பத்ரன் அங்கிருந்து மறையும்முன், காலனை நோக்கி நக்கலாக புன்னகைக்க, அந்தநொடி, காலனின் வெள்ளி நிற ஒளியால் சூழப்பட்டான், பத்ரன்.
"உன் நினைவுகளும் சக்திகளும் உன்னிடம் இருந்தால் மட்டும் போதாது, அண்ணா! அதை உபயோகிக்க நான் அனுமதிக்க வேண்டும். செல் இங்கிருந்து" காலனின் விசை, அதிவேகமாக பத்ரனை தாக்கியதில் அப்படியே காற்றில் கரைந்தான் அவன். ஆனால், வேறு எவனோ ஒருவன் அதே கூண்டினுள் மயங்கிக் கிடந்தான்.
✨✨✨
பூமி...
பௌர்ணமி நிலவானது கீழ்வானத்தை விட்டு மேலெழும்பி, உலகின் பார்வையில் தெளிவாகத் தெரிந்துக் கொண்டிருந்த நேரம், அந்த நிலவின் பிரகாசத்தை ஒத்து பூமியில் பிறந்தான், ரட்சகன்.
மகாராணி சொன்னது போலவே, மேகம் தோடும் அந்த நீலகிரி மலையில், இடியும் மின்னலும் வானை அலங்கரித்த அந்த அடைமழை இரவில்தான் அவன் பிறந்திருக்கிறான். ஆனால், தீராதான் இன்னுமும் அவனை அடையவில்லை. காலைமுதல் தேடிக் கொண்டிருக்கிறாள் இவனை. ஆனால் இருளரசனுக்கோ, ரட்சகன் ஜனித்த கணமே அவன் இருப்பிடம் தெரிந்துவிட... உடனடியாக அந்தக் குழந்தையை கைபற்றி வரக்கூறி ஷேனாவிடம் உத்தரவிட்டார். சமாராவின் வசியத்தில் இருந்ததால் அவரின் உத்தரவிற்கு எளிமையாகவே அவன் கட்டுப்பட... அடுத்தநொடியே, இருளரசன் உருவாக்கிய கருநிற மாயவாயிலை கொண்டு, ரட்சகனை கடத்திவர பூமிக்குச் சென்றுவிட்டான்.
தன் மாயமான உருவத்துடன் பூலோகம் வந்தவன் நேராக சென்ற இடம், ரட்சகன் பிறந்து, ஓயாமல் அழுது கொண்டிருக்கும் அந்த மருத்துவமனைக்கு தான். குரலை கணித்து அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து விட்டான், ஆனால், ஷிவேதனாவின் சக்திகள் ரட்சகனை ரட்சிப்பதால், ஷேனாவால் ரட்சகனின் அருகில் செல்ல மட்டுமே முடிந்தது. அவனை தன் கைக்குக் கொண்டிவர முடியவில்லை.
அதேநேரம், தன் மைந்தன் ஓயாமல் அழுவதை கண்ட தேவயாசினி, அவனை மெல்ல கையில் ஏந்தி மார்போடு அணைத்துக்கொண்டு, "என்னடா, பட்டு! ஏன் அழறீங்க.. ஒன்னு இல்லடா.. அம்மா பக்கத்துல இருக்கேன்ல..அழாதீங்க அழாதீங்க" அவனை சமாதனம் செய்ய... அவனோ, அழுகையை தொடர்ந்துக் கொண்டே தான் இருந்தான். அவளுக்கும் சற்று சோர்வாக இருந்ததால் அவனை தன்மேல் கிடத்திக்கொண்டு, மெல்லமாக தட்டிக் கொடுத்துக் கொண்டே கண்ணை மூடியவள், கதவு திறக்கும் சத்தத்தில் எழுந்துக் கொண்டாள்.
வந்திருக்கும் நபரை கண்டு அவள் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, "இங்க பாருடா, தங்கம்... அப்பா வந்துருக்காங்க. அப்பா பாரு... அப்பா பாரு" என மெல்லிய குரலில் தன் அன்னை கூறியதை செவிமடுத்தவானாய் தன் உருண்டை விழிகளை உருட்டி உருட்டி அந்த நபரை காண... அங்கே, கதவை மெல்லமாக திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் ரட்சகனின் தந்தை. ஆருத்ரன்.
உள்ளே வந்தவர் தன் மகனை மெல்ல கையில் ஏந்தி, "ஹெய்! குட்டி... அம்மா மாதிரியே இருக்கீங்க டா! என் தங்கபுள்ள! செல்லம்..." அழகாய் கொஞ்சிகொண்டிருக்க... ரட்சகனோ, தன் தந்தையின் குரலையும், அவரின் அறுகாமையையும் உள்வாங்கியபடியே கத்திக் கொண்டிருந்தான்.
இரு நிமிடத்தில் மற்ற குடும்பத்தாரும் அங்கே கூடி விட்டார்கள். குழந்தையை அவன் தந்தை வேறு யாரிடமும் கொடுக்கவே இல்லை, தன் கைக்குள்ளேயே வைத்திருந்தவர் மனதில் திடீரென என்ன தோன்றியதோ, "எல்லாரயும் காக்கவந்த ரட்சகன் டா நீ. ரக்ஷவன். என் செல்லம், ரக்ஷவன்" எனக்கூறி மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டார்.
இதுவரை கண்ணால் கண்டிராத தந்தையின் அரவணைப்பில் அவரது முத்தத்தை முதல் முறையாக மனதார உள்வாங்கியவன், மீண்டும் வீறிட்டு அழுதான். குடும்பத்தாரும் முகத்தில் ஒரு புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதேசமயம், அந்த அறையில் ஒரு ஓரத்தில், இவனை நோக்கி முறைத்துக் கொண்டே நின்றிருந்தான், ஷேனா.
சில நொடிகள் அவனையும் அவன் குடும்பத்தினரையும் முறைத்துக் கொண்டிருந்த ஷேனாவின் மனதில், 'எப்படியும் குழந்தை தன் கைக்கு வரப் போவதில்லை.. ஆனால் இவர்களே அந்தக் குழந்தையை கொன்று விட்டால்?' என்னும் கொடிய எண்ணம் எழுந்த மறுகணமே அதனை செயல்படுத்தத் தொடங்கினான் அவன்.
தன்னால்தான் அவனை நெருங்க முடியவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் எளிதாக நெருங்கலாம் என்பதை உணர்ந்து, திடீரெனத் தன் கைகளை சுழற்றி, மாயக்கீற்றை செலுத்தி.. ரக்ஷவனை தூக்கிக்கொண்டு நிற்பவரின் முதுகிலிலேயே தாக்கினான்.
ஆருத்ரனின் முகம் நொடியில் மாற்றம்கொள்ள.... அவரின் முகத்தில் பதட்டம் குடிகொள்ள... கையில் வைத்திருந்த குழந்தையை தேவயாசினியிடம் கொடுத்தவர், நெஞ்சை பிடித்துக்கொண்டு தன் மகனின் அருகிலேயே மயங்கிட... விரைந்துச் செய்யபட்ட குடும்பத்தினர், உடனடியாக மருத்துவரை அழைத்தார்கள். மருத்துவர் தெரிவித்த செய்தி, ஆருத்ரனின் மரணச்செய்தி. அதைக்கேட்ட தேவயாசினியும் அவள் குடும்பத்தாரும் அதிர்ந்துப்போய் நிற்க... ஷேனா, அடுத்ததாக ஏதோ ஒரு மாயத்தை அந்தக் குடும்பத்தாரின் மீது செலுத்தினான்.
அதிர்ச்சியில் இருந்த தேவயாசினிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக வந்தது அவளின் குடும்பத்தாரின் அந்தக் கடுஞ்சொற்கள்.
"பொறந்ததுமே அப்பன கொன்னுட்டான்."
"இவன் நம்ம குடும்பத்துல இருந்தா அடுத்தடுத்து எல்லாரையும் கொன்னுருவான் போல"
"நேத்தே இவ ஏதேதோ கனவுகண்டு பைத்தியமாட்டம் பொலம்பீட்டு இருந்தா... இந்த கொழந்த ஏதோ சாபம் போல... இவன் உயிரோடு இருந்தா நமக்குத்தான் ஆபத்து" என ஆளாளுக்கு ஒரு ஒரு விதமாகக் கூற, "தேவா, புள்ளைய இப்டி குடு" எனக் கூறியவாரே ரக்ஷவனை நோக்கி முன்னேறினார் தேவயாசினியின் அன்னை. மறுநொடியே, தேவாவின் மென்மையான-இருக்கமான அரவணைப்பில் இருந்தான், ரக்ஷவன். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இங்கு நடப்பது என்னவென்று புரியவில்லை. 'இது, தன் குடும்பம் தானா?' என்ற சந்தேகம்கூட எழுந்தது அவளுக்கு.
அப்போது, அவளுக்குமட்டும் ஒரு குரல் கேட்டது. அது, அவள் கணவனின் குரல்தான். "தேவா, கொழந்தைய கூட்டீட்டு மேகமலைக்கு போ. இவன் இந்த பிரபஞ்சத்தக் காக்க வந்த ரட்சகன். இவன யாராலயும் எதுவும் பண்ண முடியாது. இவனுக்கு நினைவு தெரிஞ்சதுக்கப்பரம், பதினாலு வயசுக்குள்ள அங்க இருக்குற சிவன் கோவிலுக்குக் கூட்டீட்டு போ. ஏன்னா, அதோட உன் விதியும் முடிஞ்சுரும். இது ஏற்கனவே உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். அதுகுள்ள அவனுக்கு அவன பத்தின உண்மைகள் தெரிஞ்ஜாகனும், தேவா." என்றதுடன் அந்தக் குரல் மறைந்தது. ஆனால், அதில் ஒரு வார்த்தை கூட அவள் கணவனின் உதடுகள் உச்சரிக்கவில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அக்குரலை அவளால் சந்தேகிக்க முடியவில்லை. தன் குடும்பத்தாரிடம் இருந்துத் தன் குழந்தையைக் காக்க, அக்குரல் கூறியபடியே செய்யத் தொடங்கினாள், தேவயாசினி.
அருகிலிருந்த ஒரு வெண்ணிறத் துணியை உருவிக்கொண்டுத் தன் குழந்தையை அதில் சுற்றி, தன் மார்போடு அணைத்தவள்.. வலியை பொருட்படுத்தாமல், எவர் கையிலும் பிடிபடாமல், மருத்துவமனையை நீங்கி வேகமாக ஓடினாள். நடந்த அனைத்தையும் கண்ணீர் தேங்கிய விழியுடன் பார்த்துக் கொண்டிருந்தார், வீட்டிலிருந்து அப்போதே வந்திருந்த செல்வகுமார். நிச்சயம் இது தன் குடும்பத்தாரின் சொல் அல்ல என்பதை அவர் நன்கு அறிவார். ஆனால், யோசிக்க நேரமில்லை என, இப்போது வெளியே விரையும் தங்கையை பின்தொடர்ந்து ஓடினார் அவர்.
'கணவனை இழந்தப்பிறகு மாங்கல்யம் எதற்கு?' என தனக்கு உரிமையானவன் தன் கழுத்தில் போட்ட பொன்னாலான மாங்கல்யத்தை கலற்றி, அதை விற்று..அதில் வந்த பணத்தை வைத்து எவர் கண்ணுக்கும் சிக்காமல் பேருந்து நிலையம் வந்துவிட்டாள். சரியாக மேகமலை செல்லும் பேருந்தின் அருகில் விதியே அவளை அழைத்து வந்துவிட்டது.
மூச்சிரைக்க அவள் அந்தப் பேருந்தை நோக்கி பெருமூச்சு விட, "தேவா.." பின்னிருந்துக் கேட்டக் குரலால் திடுக்கிட்டு, ரக்ஷவனை தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு சட்டென பின்நோக்கி திரும்ப... உணர்வுகள் துடைத்த முகத்துடன் அங்கு நின்றிருந்தார் செல்வகுமார்.
"பயப்புடாத மா. எதுக்கும் பயப்புடாத. தைரியமா இரு. எதுனாலும் அண்ணனையோ அண்ணியையோ கூப்புடனும் சரியா. இந்தா. இத வச்சுக்கோ", ஒரு பையில் பணக்கட்டு ஒன்றும்...புதிய செல்ஃபோன், சிம் கார்டு இருந்தது. அதை தேவயாசினியின் கரத்தில் திணித்தவர் ரக்ஷவனின் தலையை மென்மையாக வருடிவிட்டு, "ஹாஸ்பிட்டல்ல நடந்தத பாத்தேன் மா. நீயும் மருமகனும் தூரமா போய்ருங்க. எதாச்சும் தேவபட்டா தயங்காம கூப்புடு. அண்ணன் இருக்கேன் உனக்கு" எனக் கூறியவர், இருவரையும் திரும்பியும் பாராமல் விறுவிறுவென அங்கிருந்துச் சென்றுவிட்டார்.
தேவயாசினி, தன் அண்ணனின் முதுகையே வெறித்து கொண்டிருக்க... மறுபுறம், கண்ணீருடன் நடந்துக் கொண்டிருந்தார், செல்வகுமார். செல்லும் அண்ணனின் முதுகையே விநோதமாக பார்த்தபடி, பேருந்தில் ஏறினாள் தேவயாசினி.
✨✨✨
எந்தவித மேகங்களும் தொந்தரவு செய்யாத அந்த இருள் வானத்தில், ஒற்றை சூரியன் போல் ஜொலிக்கும் பௌர்ணமி நிலவானது சாலையில் மிதமான வேகத்தில் ஊர்ந்துக் கொண்டிருக்கும் அந்தப் பேருந்தையே பின்தொடர்ந்துச் செல்ல... நீலகிரி-தேனி விரைவு பேருந்தில், முன் வாசலுக்கு அடுத்து முதலாவதாக உள்ள இருக்கையின் ஜன்னல் ஓரத்தில், சற்றுமுன் பிறந்தத் தன் மகனை நெஞ்சோடு அணைத்தபடி உணர்வற்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள் தேவயாசினி.
அனைத்தும் மிக வேகமாகவே நடந்து முடிந்துவிட்டது. நினைத்துப் பார்த்தால் இப்போதும் அனைத்தும் கனவு போல் தான் இருக்கிறது. ஆனால், கனவில்லையே! நேற்று சந்தித்த அந்தப் பெண்ணும் கனவில்லை... அவள் கூறியவையும் கனவில்லை... இன்று நடந்த எதுவுமே கணவில்லை. சொல்லப்போனால் அனைத்தையுமே கனவென நினைத்ததற்கு இப்போது வருந்துகிறாள் அவள்.
கணவனின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. ஆனால், கைக்குழந்தையுடன் திக்குத்தெரியாத இடத்தை நோக்கித் தன்னந்தனியாக சென்றுக் கொண்டிருக்கிறாள். அதை நினைக்கும்போது அவள் கண்ணில் கண்ணீர் சொட்ட.. அதேநேரம், தன்மீது உணர்ந்த மெல்லிய வருடலால், நினைவுகள் மறந்து நிஜ உலகை அடைந்தாள் அவள்.
பால்நிறத்துப் பிஞ்சுமுகம் கொண்ட அவன், தனதுப் பிஞ்சு கரங்களை கொண்டு அம்மாவை அடித்து அழைக்க... அவனது முகதில் படர்ந்த சிரிப்பை நோக்கிய கணமே சோகம் மறந்து, கவலை தொலைந்து... குழப்பம், சிந்தனை என அனைத்தும் நொடியில் காற்றோடு காற்றாகியது தேவாவின் மனதில். அவனை கண்ட நொடியில் ஒரே ஒரு நிம்மதி. தான் கனவென நினைத்து ஒதுக்கிய அனைத்தும் நிஜத்தில் நடந்ததுத் தன்னை சோகத்தில் ஆழ்த்திய நேரம், உண்மையாக கண்ட கனவு பலிக்காமல் போய்விட்டது என. தன் கையில் தவழ்ந்தக் குட்டி உருவத்தை கண்டு புன்னகை பூத்தது தேவாவின் முகத்தில்.
"ரக்ஷவ்," மெல்லியக் குரலில் மென்மையாகத் தன் மகனின் பெயரை அவள் உச்சரிக்க... அதைக்கேட்டு அழகாகச் சிரிக்கும் அவனைத் தன் விரல்கள் கொண்டு வருடியபடி அவனிடம் பேசத் தொடங்கினாள்.
"ரக்ஷவ்! எல்லாரையும் விட்டுட்டு தூரமா போரோம்ன்னு அம்மாவ கோச்சுக்காத டா, உன் உயிர நா காப்பாத்தனும் தங்கம்... உன்ன பத்ரமா வச்சுக்கணும். யாரு கண்ணுலயும் படாம, என் கைகுள்ளையே ஒளிச்சு வச்சுக்கணும்.
நேத்து ஒரு பொண்ண பாத்தோம், உனக்கு நியாபகம் இருக்கா டா, ரக்ஷவ்? அந்தப் பொண்ணு உன்ன பத்தி ஏதோ சொன்னாங்க. நீதான் நம்ம உலகத்தையும் அவங்க உலகத்தையும் சேத்துக் காப்பாத்தனுமாம். அத யாரோ தடுக்குறாங்களாம்" என்கையில் அவர் விழிகள் கசியத் தொடங்கிட, "அவங்கதான் தங்கம் உன் அப்பாவையும் நம்ம வீட்டுல உள்ளவங்களையும் ஏதோ செஞ்சுட்டாங்க... உன்னயும் கொல்லப் பாக்குறாங்க டா." என கண்ணீர் விட்டபடியே அவனை அணைத்துக் கொண்டார்.
"அந்தப் பெண்ணு ஒரு ஊர் சொன்னாங்க, அங்கதான் நீ பாதுகாப்பா இருப்பியாம். நீ வளர்ற வரைக்கும் அவங்க சொன்ன அந்த ஊர்லயே போய் நாம பத்தரமா இருப்போம் டா தங்கம்! வேற யாரும் நமக்கு வேண்டாம்... நமக்கு யாருமே இல்ல... நீயும் நானும் மட்டும் தா, வேற யாரும் கெடையாது." வெடித்து வரும் அழுகையை அடக்கியபடி மகனை அணைத்துக்கொண்டு தேம்பி அழத் தொடங்கிய நேரம், டமாரென ஒரு சத்தம். பேருந்து சடன்பிரேக் இட்டு நின்றது.
அந்த இரவு நேரத்தில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பத்து பதினைந்து பயணிகளும், திடீர் சத்தத்தின் காரணமாக உறக்கம் கலைந்து திகிலுடன் எழுந்து, பேருந்தின் மேற்கூரையை ஒரே போல் அண்ணாந்து நோக்க... வண்டியிலிருந்து கீழே இறங்கி சென்ற நடத்துனர், பேருந்தின் மீது என்ன விழுந்துள்ளது என்பதை ஆராய்ந்தார். ஆனால், இவ்வளவு பெரிய சத்தத்திற்கு ஏற்றதுபோல் அந்தப் பேருந்தின் மீது எதுவுமே இல்லை.
குழப்பத்துடன் தலையை சொரிந்தவர், வண்டி கடந்துவந்த பாதையை திரும்பி நோக்க... அங்கு ஒரு பிரம்மாண்டம் மரம், தன் கிளைகளை பேருந்தின் உயரத்திற்கு பரப்பிக்கொண்டு ஜாம்பவான் போல் உயர்ந்து நின்றிருந்தது, "ச்ச... வெறும் மரம் தா." அதை கண்டு தோளை குலுக்கிக்கொண்டவர், "ஒன்னுல்ல ப்பா... ஒன்னுல்ல ப்பா.. அந்தப் பெரிய மரம் தா வண்டி மேல இடிச்சுருக்கு... வேற ஒன்னுமில்ல" கூறிக்கொண்டே வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டியும் மீண்டும் புறப்பட்டது.
அதுவரை பதட்டத்தில் இருந்த தேவயாசினி, "ஒன்னும் இல்லையாம் டா, தங்கம். அம்மா தான் பயந்துட்டேன். சரி, நீங்க தூங்குங்க... ரொம்ப நேரமா முழிச்சுட்டே இருக்கீங்க," மகனை தோளில் கிடத்தித் தட்டிக்கொடுக்கத் தொடங்கிய நேரம், "ஹலோ, அம்மா!" அருகில் கேட்டது ஒரு குரல்.
அது யாரென தேவயாசினி திரும்பி நோக்க... பேருந்தினுள் இருந்த சொற்ப வெளிச்சத்தின் மூலம் அது ஒரு பெண் என அறிந்துக் கொண்டவள், என்னவென தலையசைத்துக் கேட்க, "பின்னாடி தனியா இருக்க போர் அடிக்குது... தூக்கமும் வர மாட்டேங்குது... எப்டியும் குட்டிப்பையன் தூங்குற வரைக்கும் நீங்களும் தூங்க மாட்டீங்க, அதுவர இங்க ஒக்காந்துக்கட்டா?" என கேட்டு நின்றாள், தீரா.
"ஹம். ஒக்காரு பாப்பா," மென் புன்னகையுடன் அவளுக்கு தலையசைத்தவள், ரக்ஷவை தூங்கவைக்கும் முயற்சியில் இறங்கினாள்.
மருத்துவமனையை விட்டு தேவா வெளியேறிய சமயமே ரட்சகனை அடைந்திருந்த தீரா, அவனை தொடர்ந்து வரும் ஷேனாவை தடுத்தபடியே ரட்சகனை நெருங்க முயல.. ஷேனாவை போல் தீராவாலும் ரட்சகனை நெருங்க முடியவில்லை. எவ்வித மாயமும் அவனை நெருங்க முடியாதபடியான வலுவானக் கவசத்தை உருவாக்கியிருக்கிறாள், ஷிவேதனா. அதனால், இன்னுமும் எல்லா வழிகளிலும் ரட்சகனைக் கொல்ல முனையும் ஷேனாவை தடுத்தபடியே, தேவயாசினியையும் அவள் குழந்தையையும் பின்தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள்.
இவள் ஒருவாளாக நின்று இந்த நிலமையை சமாளிக்க முடியாதென, மகாராணி, பூமிக்குச் சென்று தீராவுக்கு உதவும்படி அபிக்கு மட்டும் கட்டளையிட்டிருந்தார். ஆனால், காரணம் எதுவும் சொல்லவில்லை. இதில், எவருமே எதிர்பார்த்திராதத் திருப்பம், அண்ணனைத் தொடர்ந்தே பூமிக்கு வந்திருந்தார்கள் இளவரசிகள் இருவரும். அதுவும் நல்லதாக தான் இருந்தது. கடும் முயற்சிக்குப்பின், இளவரசிகளின் ராஜ சக்திகளை வைத்து, தூய மாயங்கள் மட்டும் நெருங்குபடி ரட்சகனின் கவசத்தை மாற்றியமைத்திருந்தார்கள்.
"குட்டிப் பையன் தூங்க மாட்டேங்குறானா ம்மா?"
"ஹஹ. ஆமா மா, பஸ்ல போறது புடிக்கல போல,"
"என் கிட்ட குடுங்க ம்மா... நா தூங்க வைக்குறேன்" அவள், தன் மகனை தூக்க முன்வந்த நொடி, தேவா தயங்க, "யோசிக்காதீங்க ம்மா, என் பக்கத்து வீட்டுல உள்ள குட்டிப்பசங்க எல்லாரையும் நான் தான் தூங்க வைப்பேன். எனக்கு நெறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு" என ரக்ஷவனை தூக்கிக் கொள்ள... அவள் கைக்கு வந்ததுமே ஆடாமல் அசையாமல் அவளையே குறுகுறுவென பார்க்கத் தொடங்கிவிட்டான் அவன். அதேநேரம், அவளுக்கு பக்கவாட்டில் சறுக்கி வந்து விழுந்தான், ஷேனா. ஆனால் யாருமே அவர்களை கவனிக்கவில்லை.
அவன் எழும்முன் அவனை தொடர்ந்து வந்த அபி ஷேனாவின் கைகள் இரண்டையும் பின்னால் மடக்கிப் பிடிக்க... திமிரியடித்து எழுந்த ஷேனா, அபியை பின்நோக்கித் தள்ளிவிட்டு தீராவின் கையிலிருந்தவனை தூக்க முனைய... அவன் கைகளை வந்துச் சுற்றியது, சிவப்புநிற மாயக்கயிறு ஒன்று.
"பாத்தீங்களா ம்மா! என் கைக்கு வந்ததும் எப்டி பாக்குறான்னு... சீக்கிரமே தூங்கிருவான் பாருங்க," தனக்குப் பின்னால் எவ்வளவோ நடந்துக்கொண்டிருக்க... எதுவுமே நடவாதாதைபோல் ஒரு பாவனையுடன், சாதாரணமாகவே தேவாவுடன் பேச்சை தொடர்ந்தாள், தீரா.
"அடியாத்தி! என்னாமா நடிக்கிறா பாரு'ண்ணா... இப்டி நடிச்சுத்தான் காலைல நம்மல ஏமாத்திட்டா... இன்னைக்கு இவள விடக்கூடாது," மாயாவின் மாயப்பிடியிலிருந்து மிக சுலபமாக நழுவிய ஷேனாவை தன்னுடைய கயிற்றில் சிறை வைத்தபடியே ரக்ஷா கத்த, "அம்மா, நீங்க கொஞ்சம் தூங்குங்க, இவன நான் பாத்துக்குறேன்." மென்நகையுடன் தீரா கேட்டதற்கு அவளை விநோதமாக நோக்கினார் தேவா.
ரக்ஷாவின் பிடியிலிருந்தும் ஷேனா சுலபமாக தப்பி, ரக்ஷவனை நெருங்க... பின்னிருந்தே அவனை நகரவிடாமல் பிடித்துக்கொண்ட அபி, "அடியே கிறுக்கச்சி! புள்ள கையில இருக்கைல எந்த அம்மா டி தூங்குவாங்க? மத்தவங்கள தூங்க வச்ச மாதிரி அவங்களையும் தூங்க வச்சுட்டு, அவன தூக்கிட்டு வெளிய போ!" எனக் கத்திய பின்பே, தலையில் அடித்துக்கொண்ட தீரா, "ஸாரி ம்மா," என ரக்ஷவனுடன் எழுந்து நிற்க... அதைகண்டு பதறிய தேவாவும் எழும்முன் அப்படியே உறங்கிப்போனார், தீராவின் மாயத்தால்.
ஷேனா, தன் காலை கீழே ஓங்கி அழுத்திப் பின்நோக்கி எம்பிக் குதிக்க... தடுமாறிய அபி, கம்பியை பிடித்து நின்றநொடி, ரக்ஷவுடன் பேருந்தின் வாயிலுக்குச் சென்றிருந்த தீரா, இறுதிப் படியில் நின்றபடியே ஜன்னல் கம்பியை ஒற்றை கையால் பிடித்து, ஒரே தாவலில் தேவா இருக்கும் ஜன்னலில் வெளிப்புறம் நிற்க... உள்ளிருந்தே ஷேனா அவளின் காலை பிடித்து இழுக்கும்முன் மற்ற மூவருமாக சேர்ந்து அவனை பின்நோக்கி இழுத்து விட்டார்கள். பேருந்தின் மேல்தளத்தை அடைந்துவிட்டாள் தீரா. அவள் கையில் இருந்தவனோ, இன்னுமும் அவளையேதான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஒரே துள்ளலில், தன்னை பிடித்திருந்த மூவரையும் உதறித் தள்ளிய ஷேனா, தீராவை போன்றே ஜன்னலில் தவ்வி பேருந்தின் மேலே ஏறிவிட... குழந்தையை தன் தோளோடு அனைத்திருந்த தீரா, அவனை நோக்கித் திரும்பிநின்ற நொடி, அபியின் மாய விசையால் கீழே தள்ளப்பட்டான் ஷேனா. விழுந்த அடுத்தநொடியே தன் கைகளை ஊன்றி எழுந்தவன், தன்னை தாக்கியவனை கவனிக்காமல் அந்தக் குழந்தையையே வன்மத்துடன் நோக்கிக் கொண்டிருக்க... அதேநேரம், இளவரசிகளும் மேலேறி வந்துவிட்டார்கள்.
பேருந்தின் பின்-விளிம்பில் தீரா நிற்க... முன் வாயிலுக்கு நேராக-மேலே அபியும் மாயாவும் நிற்க... அவர்களுக்கு ஒரு அடி முன்னால் விழுந்து, இப்போது, தீராவை நோக்கி எழுந்துக் கொண்டிருக்கும் ஷேனாவின்முன் சென்று தடுப்புபோல் நின்றாள் ரக்ஷா.
"தீரா, இப்பவாச்சும் சொல்லித் தொல! மகாராணி எதுக்கு திடீர்னு அண்ணன கூப்புட்டாங்க? இவனுக்கும் உனக்கும் என்ன பிரச்சன? அந்த கொழந்த யாரு? அவன ஏன் இவன் கொல்ல நெனைக்குறான்?" சரமாரியாக கேள்விகளை தொடுத்த ரக்ஷாவின் கழுத்தை நெறுக்கிப் பிடித்த ஷேனா, அடிமேல் அடியாக தீராவை நெருங்கிய நேரம், அபியின் மாயக்கயிறு ஷேனாவின் உடலை முழுவதுமாக சுற்றி பேருந்தின் முன்னால் தூக்கி எரிந்தது.
விளிம்பை பிடித்துக்கொண்ட ஷேனா, பேருந்தின் முன்-கண்ணாடியில் வைப்பர் போல் தொங்கிக் கொண்டிருக்க... அதையெல்லாம் கவனிக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையிலும் சாதாரணமாகவே வண்டியை இயக்கிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர். தன் பிடியை இருக்கமாக பிடித்துக்கொண்ட ஷேனா, ஒரே தாவலில் மீண்டும் மேலேறி விட.. அப்போதுதான் அபியின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது.
"அம்மு... பாப்பா... ஒரு ராஜ சக்திய இன்னொரு ராஜ சக்தி, குறிப்பிட்ட எல்லைக்குள்ள வரவிடாம தடுக்க முடியும். அவனும் இளவரசன்னு தானே சொன்னீங்க.. சோ, உங்களால தான் அவன தடுக்க முடியும். சீக்கிரம்!! ஒரு எல்லைய உருவாக்குங்க," அபி பரபரக்க... இளவரசிகள் இருவரும் சாலையை நோட்டமிட... தூரத்தில் தெரிந்தது ஒரு பச்சை நிற வரவேற்பு பலகை. தேனி மாவட்டம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
"பாப்பா, ரெடியா?" மாயாவின் முகத்தில் புன்னகை பூக்க, "ரெடி, அம்மு." சகோதரியுடன் கை கோர்த்த ரக்ஷா, தன் கரத்தை அந்த பலகையை நோக்கி நீட்ட... மாயவும் அதே போல் செய்ய... இருவரின் சக்திகளும் ஒன்றாக சென்று, தேனி மாவட்டத்தின் எல்லையிலேயே இருள்தேசத்து இளவரசனுக்கு தடை-எல்லையை உருவாக்கியது.
அதை கவனிக்காத ஷேனா, தீராவை நோக்கி வேகமாக நடக்க... அபியின் மாயக்கயிறு, இம்முறை அவன் காலை சுற்றி கீழே தள்ளியது. அவன் மீண்டும் எழும்முன் எல்லையை கடக்க வேண்டுமென, தீரா, தன் வலதுகை விரலை சொடுக்கிட... காற்றை கிழித்துச் சாலையில் பறந்த பேருந்து, இரண்டே நொடியில் எல்லையை அடைந்தது. அது எல்லையை தாண்டிய நொடி, இளவரசிகளின் சக்தியால் சாலையில் தூக்கியெறியப்பட்டு உருண்டு விழுந்தான், ஷேனா. பேருந்தின்மேல் நின்றிருந்த நால்வரும் ஷேனாவை திரும்பி நோக்க... தார் சாலையில் உருண்டு, ஏகப்பட்ட சிராய்ப்புகள் வந்தாலும் மீண்டும் எழுந்து ஓடிவந்தவன், எல்லையை தாண்டி உள்ளே வர முடியாமல் கடுகடுப்புடன் அங்கிருந்து மறைந்துவிட்டான்.
அதை கவனித்தவர்கள் இப்போது ஒன்றாக தீராவை நோக்கி திரும்பி, 'எங்க கேள்விக்கு பதில் சொல்லு' என்பதுபோல் பார்த்த பார்வையை புரிந்துக்கொண்டவள், "சாரி! ரூல்ஸ் இஸ் ரூல்ஸ். நான் உங்கள கூப்டவே இல்ல. சோ, கூப்புட்டவங்கள்ட்ட போய் பதில தெறிஞ்சுக்கோங்க." என கூறியபோதே மூவரின் விழிகளும் வெண்ணிறம் ஆனது. அத்துடன் அவர்களின் பின்னால் மூன்று வெள்ளை மாயவாயில்கள் திறக்க... தாமாகவே உள்ளே சென்று மறைந்தார்கள் மூவரும்.
அவர்கள் சென்றதும், மீண்டும் தேவாவிடம் சென்ற தீரா, ரக்ஷவை பத்திரமாக அவர் கையிலேயே வைத்துவிட்டு ஒரு சொடுக்கிட்டாள். அங்கே அனைத்தும் சகஜமாகியது.
✨✨✨
நேராக இருள்மாளிகைக்கு சென்ற ஷேனா, நடந்தவை அனைத்தையும் இருளசரிடம் கூறியிருக்க.. முதலில் கத்தி கூச்சல் போட்டவர், பின், 'எப்படியோ, அவன் வந்துவிட்டான். இனி எந்த சக்தி நினைத்தாலும் என் தேவனின் வரவை தடுக்க முடியாது. தாமதமாயினும் சரி, அவன் கவசங்கள் உடையும்வரை காத்திருப்பேன்' மனத்தினுள்ளேயே நினைத்துக் கொண்டவர் ஷேனாவை இழுத்துக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையில் ஏறி, அங்கே நிற்கும் சமாராவின் அருகில் அவனை நிற்க வைத்தார்.
நிழல்தேசத்து மக்கள் கூட்டம் மொத்தமும் அங்கு கூடியிருக்க, "எம் ராஜ்ய மக்களே! இன்று, என் மகன் ஷேனாவிற்கும் என் சகோதரியின் மகள் சமாராவிற்கும் திருமணம்! நம் வழக்கத்தின்படி இந்த இரு ஆரிமல்லி மாலைகளை இவ்விருவருக்கும் அணிவித்து என் வாழ்த்துகளை வழங்குகிறேன்." என ஷேனாவின் கழுத்தில் அடர்-மஞ்சள்நிற ஆரிமல்லி மலர்மாலையையும் சமாராவின் கழுத்தில் கருநீலநிற ஆரிமல்லி இலை மாலையையும் அணிவித்தார்.
பின், ஒருவரை ஒருவர் நோக்கியபடி, ஷேனாவும் சமாராவும் திரும்பி நிற்க... மக்களின் வாழ்த்தொலியும் கரகோஷமும் சபையை நிறைத்த நொடியியில் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி, சமாராவிற்கு அணிவித்து அவளை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான், ஷேனா. அதேபோல் இலை மாலையை அவன் கழுத்தில் அணிவித்து, ஷேனாவை தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள், சமாரா.
இக்காட்சியை, முப்பத்தி-இரண்டு இன்ச் பெரிய எல்.இ.டி. டிவியில் லைவ் டெலகாஸ்ட் பார்த்தபடி பாப்-கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலன், பத்ரன் இருந்தக் கூண்டில் இப்போது மயங்கி கிடக்கும் வேறொருவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அருகில் ஆட்டமாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு கூண்டினை நோக்கியபடி, "நீயும் உன் தோழனைபோல் முட்டாள்தனம் தான் செய்வாய் என்பதை அறிவேன், வல்சி. அதனால், அவனது ஆத்மசக்திகளை பிடித்து வைத்ததுபோல் உன்னுடைய நினைவு சக்திகளை நான் வைத்துக்கொள்கிறேன். ஹஹா. எந்தவித நினைவுகளும் இல்லாமால் எப்படி உன்னை நீயே மாய்த்துக் கொள்வாய், சொல்?" நக்கலாக வினவ, "காலா! உன்னிடம் போராடி வெல்லமுடியாது என்பதே மெய்! என்ன வேண்டுமோ செய்துக்கொள். ஆத்மசக்தி வேண்டுமா! எடுத்துகொள்... நினைவுகள் வேண்டுமா, எடுத்துக்கொள்.... ஆனால். என்றேனும் ஒருநாளில் நீயே அனைத்தையும் ஒன்றினைப்பாய். அன்று செயல்படுத்திக் கொள்கிறோம் எங்கள் திட்டங்களை." என சூழுரைத்தவனை கண்ட காலன், "திட்டம் உமதாயினும் முடிவு என் மூலமே!" ஆழ்ந்தக் குரலில் அவனுக்குக் கூறினான்.
✨முற்றும்✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro