55. ரட்சகன் கவசம்!
இருளரசனிடம் இருந்து மாயவாயில் வழியாக தப்பி வந்திருந்த ஷிவேதனா, நேராக ஷேனாவிடம் செல்லலாம் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், தன்னை தேடி அவர்கள் முதலில் செல்வது தன்னுடைய அறையாகதான் இருக்கும் என்பதால், இப்போது அவள் வந்திருக்கும் இடம்.. தன் மகனுடைய சிம்மாசனம் இருக்கும் அந்த ராஜ சபைக்குதான். அவ்வறையில் பிரவேசித்த அந்நொடியே தரையில் சரிந்து கதறி அழத் தொடங்கிவிட்டாள் அவள்.
ஒரே நாளில் அளவுக்கு அதிகமான உண்மைகளை தெரிந்துக்கொண்டாள். எக்காரணத்திற்காக அவள் இன்றளவிலும் உயிர் வாழ்ந்தாளோ; எதற்காக, அறிந்தே தன் மகனை இந்தக் கொடிய நரகத்தில் வாழ அனுமதித்தாளோ; எதற்காக தன் கணவனை குறித்து.. ஷேனாவின் தந்தையை குறித்து அவனுக்கே சொல்லாமல் மறைத்தாளோ அதற்கான காரணமே பொய்யாகிவிட்டது இன்று.
ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்துத் தன் தவறுகள் அணைதிற்காகவும் தன்னைதானே நொந்துக்கொண்டு, முகத்தை கைகளால் மூடிய நிலையில் தரையில் விழுந்துக் கதறிக் கொண்டிருந்த நொடி, அவள்மீது விழுந்தது ஒரு வெண்ணிற ஒளி. ஆனால், அதை கவனிக்கும் நிலையில் இல்லை ஷிவேதனா.
"ஷிவேதனா!" ஓரிரு நொடிகள் கடந்த நிலையில், ஒரு கம்பீரக் குரல் அவளை மென்மையாக அழைக்க, "மகாராணி!!" நொடியில் அக்குரலை அடையாளம் கண்டுக்கொண்டவள், துன்பத்தில் நீராடிய முகத்துடன் நிமிர்ந்து நோக்கினாள், அந்த வெண்ணிற ஒளிபந்தை.
"மகாராணி! நி-நீங்கள்?... இங்கே!"
"நானேதான், ஷிவேதனா. எழுந்திரு", ஒளிபந்து, குரல் கொடுக்க.. அதிர்ச்சியிலிருந்து மீண்டவள், தன் மகாராணியை நோக்கிக் கைகூப்பி மன்றாடத் தொடங்கிவிட்டாள்.
"மகாராணி... மன்னித்து விடுங்கள். மன்னித்து விடுங்கள் என்னை. அன்று- அன்று நான் செய்த தவறுக்கான தண்டனையை என்னிடமே கொடுத்து விடுங்கள். இப்போது என் மகனை ரட்சியுங்கள், மகாராணி. என் மகனை இக்கயவர்கள் மத்தியிலிருந்து காத்தருளுங்கள்..."
"இதில் உன் தவறு ஏதுமில்லை, ஷிவேதனா. உன்னை நீயே வருத்திக்கொள்ளாதே." மகாராணியின் குரல் மென்மையாக ஒலிக்க... அவருக்கு பதிலளிக்க முடியமல், மௌனமாகவே கதறிக் கொண்டிருந்தாள் ஷிவேதனா .
"கண்ணீரில் கரைவதற்கான நேரம் இதுவல்ல, ஷிவேதனா... காலம் கைமீறிடும் முன் நாம் அவர்களை தடுக்கவேண்டும். பிறக்கவிருக்கும் ரட்சகனை காக்கவேண்டும்." மகாராணி கூற... எதுவும் புரியாமல், என்ன கேட்பதெனத் தெரியாமல் அவரை வியந்து நோக்கினாள் அவள்.
"ஷிவேதனா, நான் சொல்வதைக் கேள். நடந்தவை மாறாது.. நடக்கவிருப்பவை எவற்றையும் நம்மால் தடுக்கவும் முடியாது. அனைத்தும் கால தேவனின் விருப்பப்படிதான் நிகழும். ஆனால், அவற்றிற்கு நன்மையான ஒரு முடிவை நம்மால் கொடுக்க முடியும். அந்த நல்முடிவை கொடுப்பது இன்று உன் கரத்தில்தான் உள்ளது, ஷிவேதனா!" மகாராணி கூறக் கூற அதிர்ச்சியில் உறைந்துதான் போனாள் அவள். காரணம், ஆதிலோகம் உருவாகிய நாள் முதல், ரட்சகனின் வரவை எதிர்நோக்கியே இந்த லோகமும் லோகத்தின் மக்களும் காத்திருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அத்தகைய ஒருவன் பிறக்கப் போகிறான், ஆதிலோகம் வரப்போகிறான் என்பதை நினைக்கையில் உள்ளுக்குள் ஒரு சிலிப்பு எழுந்தது அவளுக்கு.
"ஆதிகாலத்தின் காலச்சக்கரம் மீண்டும் சுழலத்தொடங்கி பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டது, ஷிவேதனா. இருளரசனின் யாக முடிவிலேயே இனி நிகழ வேண்டியவை நிச்சயிக்கபட்டு விட்டது. அவனென்னவோ ரட்சகனின் காலச்சக்கரத்தை உயிர்பிக்கவே நினைத்தான். ஆனால், ரட்சகனின் வாழ்வு மொத்த ஆதிகாலத்துடனும் பின்னிப் பிணைந்த ஒன்றென அவன் மறந்துவிட்டான். அவன் யாகம், மொத்த ஆதிகாலத்திற்குமே மறுஉயிர் கொடுத்துவிட்டது. இதில் நீயும்.. நானும்.. உன் மகனும் கூட அடக்கமே. இதிலிருந்து நம்மை காக்கக்கூடிய ஒரே ஜீவன், நம் ரட்சகனே. ஆதிகாலம் தொடங்கி எத்தனை காலம் கடந்து நம் ரட்சகன் பிறந்தானோ, இருளரசனின் யாகம் மூலம் அதே நேரத்தில் மீண்டும் பிறக்கப் போகிறான் நம் ரட்சகன்." மகாராணி கூறிய நொடியில் நிதர்சனத்தை உணர்ந்த ஷிவேதனா, தன்முன் மகாராணியால் திறக்கபட்டிருக்கும் ஒரு வெண்ணிற மாயவாயிலைக் கண்டு விழிக்கத் தொடங்கினாள்.
"செல், ஷிவேதனா. இந்த வாயில் வழியாக நேரடியாக ரட்சகனிடமே செல். வேறு எதுபற்றியும் சிந்திக்காதே. இக்கயவர்கள் பிடியிலிருந்து ரட்சகனை காப்பது மட்டுமே, காலச்சுழலில் சிக்கியிருக்கும் நம் அனைவரையும் மீட்கும் ஒரே வழி. இப்போது அவன் உயிர் ஆபத்தில் உள்ளது. இவர்களின் அடுத்தத் திட்டம், அவனை சிசுவாக இருக்கையிலேயே கொல்வதுதான். என் மாயங்கள் மூலம் ரட்சகன் இருக்குமிடத்தை கணித்துவிட்டேன். இதையே அவர்களும் கணிக்க வெகுகாலம் எடுக்காது, ஷிவேதனா... அதற்குள் அவனை காக்க வேண்டும். அவன் ஆதிலோகத்திற்கு வரும் முன் அவன் சக்திகளை அவனே உணர வேண்டும். அந்த பக்குவம் வரும் வரையில் அவனது அடையாளம் இக்கயவர்கள் கண்ணிலிருந்து மறைக்கப்பட வேண்டும். எதையும் சிந்திக்காமல் நீ செல். மேகமலையின் திரிபுரா நகரில் உள்ள மகா சிவாலயத்தில் அவனுக்கான வாயில் என்றும் திறந்திருக்கும் என்பதை அவனுக்குச் சென்று தெரிவி." அவர் கட்டளையிட, "மகாராணி... ஆனால், ஷேனா? என் மகனை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லையே, மகாராணி! அவன்-"
"அவனுக்கு எதுவும் ஆகாது, யுகங்கள் ஆயிரம் கடந்தாலும் உன் மகன் அனைத்து மகிழ்வையும் பெற்று வாழ்வான். இப்போது காக்க வேண்டியது ரட்சகனின் உயிரே... காலம் கடப்பதற்குள் உடனடியாக புறப்படு." என்றதுடன் வெண்ணிற ஒளிபந்து அங்கிருந்து மறைந்து போக, "உத்தரவு மகாராணி" கண்களை துடைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்துநின்றாள் ஷிவேதனா .
"மகாராணி... என் உயிரை கொடுத்தேனும் நம் ரட்சகனை காப்பது என் பொறுப்பு. என் மகன் வாழ்க்கை அவன்வசம் எனில், அவன் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு." தனக்குத்தானே சூழுரைத்துக் கொண்டு, மாயவாயிலில் சென்று மறைந்தாள் ஷிவேதனா .
✨✨✨
ஷிவேதனாவை தேடிக் கொண்டிருந்த சமாரா, யாரோ தன்னை திடீரென பிடித்து இழுத்ததில் கடுப்பாகி, அது யாரெனக் கூட அறியாமல் அவர் கழுத்தை பிடிக்கக் கோபத்துடன் திரும்பியவள், தன் முன் நின்றிருப்பவனை கண்டு அப்படியே உரைந்துவிட்டாள். அங்கே, முகம் முழுவதும் பதற்றம் தொற்றியிருக்கும் நிலையில் அவள்முன் நின்றிருந்தான் ராணா.
"ராணா! இங்கென்-"
"சமாரா! சமாரா, என் தந்தை சொல்வதையெல்லாம் நீ கேட்காதே. அவர் சொல்வதை நீ செய்யாதே." அவளை இடைமறித்து, பரபரத்தான் அவன்.
"என்ன முட்டாள்தனமாக உளறுகிறாய் நீ? மாமா என்ன சொன்னார்? எதை கேட்கக்கூடாது?"
"அது... அந்த ஷேனா- இல்லை... உன் திருமணம். நீ... நீ, யாரையும் திருமணம் செய்யக்கூடாது. அது முடியாது. நீ யாரையும் மணக்கக்கூடாது சமாரா. உன் கணவனுடன் இணைந்து வாழத் தொடங்கினால் பிறகு... அதன்பிறகு, உன் சக்திகளை மொத்தமாக இழந்துவிடுவாய் நீ. அதை மீண்டும் பெறுவதற்குக்கூட நீ உயிருடன் இருக்க மாட்டாய். வேண்டாம் சமாரா." அவளின் கரம் பற்றி கெஞ்சலாக ஒரு பார்வை பார்த்தான் ராணா.
"என்ன ராணா இதெல்லாம்? என்னை விடு, நான் செல்லவேண்டும் "
"சமாரா, ஒருநிமிடம். நான்தான் உன் சக்திகளைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேனே.. நீ எவருடனும் இணைந்து வாழக்கூடாது... அது உன் உயிருக்கு தான் ஆபத்து." அவன் பதைபதைபுடன் கூறிக் கொண்டிருக்க.. அதை அசட்டை செய்யாமல் ஏளனமாக ஒரு புன்னகை பூத்தாள் சமாரா.
"ராணா... இணைந்து வாழ்வது தானே உயிருக்கு ஆபத்து. நான் எங்கே அவனுடன் இணைந்து வாழப் போகிறேன், அவன் வேறு எவருடனும் இணைந்து வாழ்ந்திட விடாமல் தடுக்கதான் போகிறேன். அப்பொழுது தானே எனக்கு தேவையான சக்திகளை வேறு எவருக்கும் பங்கிடாமல் நானே எடுத்துக் கொள்ளலாம்!?.. அதற்குதான் இத்திட்டம். நீ கவலை கொள்ளாதே ராணா, எனது அதிசய சக்தியைகுறித்து நான் எவரிடமும் சொல்லமாட்டேன். ஆனால், அந்த ஷேனாவின் சக்திகளை மட்டும் வேறு எவரும் அனுபவிக்க அனுமதிக்க மாட்டேன். அவ்வளவுதான்." அவள் தோளை குலுக்கிக் கூற, "ஹான்?!" வாயடைத்து அவளை நோக்கினான் ராணா.
"என்ன, ஹான்? வழியிலிருந்து விலகிச்செல். அறிந்தே உயிரைவிட நான் என்ன கோழையா? விலகிச்செல், ராணா." அவனை நகர்த்திவிட்டு முன்னேறி நடந்தவள், சட்டெனத் தன் நடையை நிறுத்தி அவனை நோக்கித் திரும்பி, "அம்ம்- ராணா? நீ முத்துமாளிகையில் தானே இருக்கவேண்டும்? இங்கென்ன செய்கிறாய்?" அவனை கேள்வியாக நோக்க, "அ-அது... நான்... ..." பதிலளிக்க அவன் திணறிக் கொண்டிருக்கும் போதே, "சரி, என்ன செய்தாலும் பரவாயில்லை. இங்கிருந்து உடனடியாகச் சென்றுவிடு. இங்கிருப்பது உன் உயிருக்குதான் ஆபத்து. சரியா?" என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள் அவள். அங்கேயே சிலையாக நின்றவாறு, அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தான் ராணா.
✨✨✨
இருள்மாளிகையை மொத்தமாக அலசிவிட்டார்கள் மாய அரக்கர்கள். ஆனால், ஷிவேதனா எங்கும் கிடைக்கவில்லை. எனவே, இருளரசன் தன் சக்திகளை உபயோகித்து, மாளிகையினுள் மாயங்கள் ஏதேனும் உபயோகம் செய்யப்பட்டுள்ளதா என தேடிக் கொண்டிருக்கும்போதே, "மாமா, என்னவாயிற்று? அவள் கிடைத்தாளா?" அந்த அறைக்குள் நுழைந்தாள் சமாரா. இமைமூடி ஆராய்ந்துக் கொண்டிருந்தவர் பட்டென இமைபிரித்து, "காத்யாயினி, நீ இங்கேயே இரு. நான் சிறிது நேரத்தில் வருகிறேன். சமாரா, நீ வா." எனக்கூறி சமாராவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினார். இறுதியாக அவர்கள் வந்து நின்றது அந்த ராஜசபையில்.
"இங்குதான்... இங்கிருந்துதான் அவள் மாயவாயிலை உபயோகித்து எங்கோ சென்றிருக்கிறாள். நானறியாமல் அவள் எப்படிச் சென்றால்? பிறகு, அவள் சென்ற இடம்! அவ்விடம் ஆதிலோகத்தில் எங்கும் இல்லை. ஏதோ புதிய இடம் போல இருக்கிறது.
"நாமும் அதே இடம் செல்லலாம், மாமா.
"செல்லலாம்தான். ஆனால், ஆபத்து நேர்ந்தால்? அது என்ன இடம் என்பதே தெரியவில்லையெ,சமாரா."
"என்ன இடமாக இருந்தால் என்ன மாமா, நம் திட்டத்தில் தலையிட்ட அவளை கொல்லவேண்டும். நான் செல்கிறேன் அங்கே. நிச்சயமாக அவளை கொன்று வருவேன், மாமா அது எந்த இடமானாலும் சரி, உங்கள் மருமகள் 'நான்' செல்கிறேன்."
"எனில் சரி, சமாரா. செல்லும் இடத்தில் ஜாக்கிரதையாக இரு. அங்கு செல்வதற்கான வாயிலை நான் திறக்கிறேன். விரைந்து மளிகை திரும்பிடு." அவர், கறுநிறத்தில் ஒரு மாயவாயிலை திறக்க, "விரைந்து வருகிறேன், மாமா. சில மாய அரக்கர்களையும் அழைத்துச் செல்கிறேன்." இருளரசரின் சேவகர்களுடன், அந்த மாயவாயிலினுள் சென்று மறைந்தாள் சமாரா.
✨✨✨
பூமி..
இரவு வானத்தில் ஜொலிக்கும் நிலைவை ரசித்தபடி தன் கருவினுள் இருக்கும் குழந்தையுடன் பேசிக்கொண்டே நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தாள் தேவயாசினி. உள்ளிருக்கும் குட்டி உயிர் எந்நேரமும் அட்டாகசம் செய்துக்கொண்டே தான் இருக்கிறது. அது சிறிதாக வலியை கொடுத்தாலும் அதற்காக தன் குழந்தையை செல்லமாக திட்டிக்கொண்டே தினம் தினம் இப்படி நடக்கத்தான் செய்கிறாள் அவள்.
சீரான வேகத்தில் அவள் நடந்துக் கொண்டிருக்க.. அடர் வெள்ளை நிறத்தில் கோடு ஒன்று அங்கே தோட்டத்தில் மின்னியது. அதைக்கண்டு அதிர்ந்தவள், தயங்கித் தயங்கி அதனருகே நடந்துச் செல்ல.. அந்த வெள்ளைநிறக் கோடானது மெல்ல மெல்ல விரிந்து ஒரு வாயிலாக மாறியது. அதேநோடி, அதனுள் இருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தாள் ஷிவேதனா. அவள் வந்த வேகத்தில், தேவயாசினியின் மேலேயே மோதுவதுபோல் செல்ல.. சட்டென அவளைப் பிடித்து நிறுத்தினாள் தேவயாசினி.
பதட்டத்துடன் ஓடிவந்தவளை தேவயாசினி பத்திரமாக பிடித்துக்கொண்டாலும் அந்த வாயிலை கண்டு குழம்பிப் போனாள் அவள். இங்கு ஷிவேதனாவிற்கும் அதேநிலை தான். முதல் முறையாக பூமியை காண்கிறாள். மனம் முழுவதும் 'இது என்ன இடம்? ரட்சகன் எங்கே? மகாராணி ஏன் இங்கு அனுப்பினார்? என ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும் அதை ஆராயும் நிலையில் இல்லை அவள்.
தன்முன் இருப்பவள் முகத்தில் இருந்தப் பதட்டமும் பரபரப்பும், அவள் பாதுகாப்பை தேடுவதுபோல் தேவயாசினிக்கு தோன்ற.. அவளால் ஆபத்து நேருவது போலும் இல்லாதிருந்ததால், அந்த மின்னும் கதவை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவுசெய்து, முதலில் ஷிவேதனாவை ஒரு மரத்தடியில் அமரவைத்தவள், நான்கடிக்கு அப்புறம் இருந்த ஊஞ்சலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துவந்து அவளிடம் கொடுத்தாள்.
தண்ணீர் பாட்டில் ஷிவேதனாவுக்கு புதிதாக இருந்தாலும் உள்ளிருக்கும் நீரை கண்டதும் அதை வேகமாக வாங்கி குடிக்கும்போதே எதிரில் நிற்பவளின் நிறைமாத வயிற்றை கவனித்தவள், தான் நினைப்பது மெய்தானா என சிந்தித்துக்கொண்டே தேவயாசினியின் நிறைமாத வயிற்றில் மென்மையாக தன் கரம் பதித்தாள்.
அவளின் இந்த திடீர் செயலால், ஏற்கனவே குழப்பத்தில் இருந்த தேவயாசினி சட்டெனப் பின் நகர.. தன் மாயங்களை கொண்டு, கருவில் உள்ளவன்தான் ஆதிலோகத்தின் ரட்சகன் என்பதை புரிந்துக் கொண்டாள் ஷிவேதனா.
தேவயாசினியின் முகம் இப்போது பயத்தில் மூழ்கத் தொடங்கியது. இவ்வளவுநேரம் இவளால் தனக்கு தீங்கில்லை என்றே நினைத்திருந்தவர், அவள் கரம் தன் குழந்தைமேல் பதிந்த நொடியில் பதறிவிட்டார். ஆனால் அந்த பதட்டத்தை வெகு நேரம் நீடிக்க விடாமல் தடுத்தது ஷிவேதனாவின் அடுத்த செயல்.
"தேவி, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்." மரத்தடியில் அமர்ந்த நிலையிலேயே தன்னருகில் இருப்பவளை நோக்கிக் கைகூப்பியவள், "நான், இந்த லோகத்தில் வாழ்பவள் அல்ல... ஆதிலோகம் என்னும் மாய லோகத்தை சேர்ந்தவள். இப்போது என் லோகம் முழுவதும் பெரும் ஆபத்தில் உள்ளது. உங்கள் கருவில் இருக்கும் எங்களின் ரட்சகனாலேயே எம்மை காக்க முடியும், தேவி! கருணை காட்டுங்கள்." மன்றாடிடும் பார்வையில் ஷிவேதனா இருக்க, "எ-என்ன பேசுறீங்க நீங்க, கருவுல இருக்குற ரட்சகனா?. எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ பிரச்சனைல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருக்கீங்களேன்னு பாத்தா... என்னென்னமோ சொல்லுறீங்க. மொதல்ல இங்கருந்து கெளம்புங்க நீங்க." ஷிவேதனாவிடம் இருந்து மெல்லப் பின்வாங்கினாள் தேவயாசினி.
"தேவி, அப்படி சொல்லாதீர்- ஆஹ்ஹ்", கெஞ்சிடும்போதே திடீரென அவளின் பின் கழுத்தில் ஒரு வெட்டு விழுந்திட.. தன்முன் இருப்பவள் திடீரென அலறியதுடன் அவள் கழுத்திலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு உறைந்துவிட்டாள் தேவயாசினி. எப்படி காயம் ஏற்பட்டது என புரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருந்த நேரம், கழுத்தை பிடித்துக்கொண்டு பின்னால் திரும்பிய ஷிவேதனா, தன் மாயத்தைக் கொண்டு அங்கிருந்த நான்கு மாய அரக்கன்களை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு மீண்டும் தேவயாசினியை நோக்கித் திரும்பினாள். வெற்றிடத்தில், கண்ணுக்குத் தெரியாத நான்கு உருவங்கள் எரிந்ததை கண்கூடாக கண்டாள் தேவாயாசினி.
"தேவி! எங்கள் ரட்சகனைதான் நீங்கள் கருவில் சுமக்கிறீர்கள். என்னை நம்பிடுங்கள். அவன் பிறப்பே, இருளை அழித்து மக்களை காப்பதுதான். ஆனால், அதை தடுக்க முனைகிறார்கள் எதிரிகள். மாய அரக்கர்கள் என்னை துரத்தி வருகின்றார்கள். உங்கள் கருவிலிருக்கும் சிசுவை கொல்லவே அவர்கள் துடிக்கிறார்கள். என் சக்திகள் மூலம் அவனுக்குக் கவசம் உருவாக்க மட்டும் அனுமதி கொடுங்கள். தயைகூர்ந்து என் வார்த்தைகளை நம்புங்கள்", கைகூப்பி நின்றார் ஷிவேதனா .
ஷிவேதனாவின் வார்த்தையாலும் சற்றுமுன் நடந்த நிகழ்வாலும் குழம்பிப்போய் இருந்த தேவயாசினி, இறுதியாக, தன் குழந்தையை கொல்ல யாரோ வருகிறார்கள் என்பதை கேட்டு அதிர்ந்தாள். அவளின் கரங்கள் தன் குழந்தைக்குக் கவசமாகிட.. அரண்ட விழிகள் ஷிவேதனாவை, "பயப்படாதீர்கள் தேவி.. எங்கள் ரட்சகனை காக்க என் உயிரை கொடுக்கக் கூட தயாராக உள்ளேன். நான் மட்டுமல்ல.. என் லோகத்திலிருக்கும் அனைவருமே அவனுக்காக உயிரை கொடுப்பார்கள். இன்று, இந்த எதிரிகளிடம் இருந்து அவனை காக்க வேண்டும் தேவி." கெஞ்சலுடன் ஒரு பார்வை பார்த்தாள் ஷிவேதனா .
".. ..... .... உங்க நிலம எனக்கு புரியுது. ஆனா... ... ... இது, என் கொழந்தைக்கு எதாச்சும் பிரச்சன ஆயிட்டா? அதான்.. .. கொஞ்சம் பயமா இருக்கு." தயங்கித் தயங்கி அவள் கூற, "கவலை வேண்டாம் தேவி. கருவில் இருக்கும்வரை சிசுவை அவர்களால் எதுவும் செய்யமுடியாது. அவன் பிறப்பெடுக்கும் பொழுதே என் கவசத்துடன் பிறபெடுக்கும் பட்சத்தில் அவனின் இளமை வயது வரையில் அவனை என் கவசமே காக்கும். அதற்குள் அவனது சக்திகளை உணரவேண்டும் அவன். இல்லையேல்... எங்கள் லோகதிற்கு ஏற்பட்டும் ஆபத்து, உங்கள் லோகத்தினையும் ஆட்கொள்ளும். இரு லோகத்தினையும் காக்கும் கடமை ரட்சகன் ஒருவனுக்கே உள்ளது தேவி. அதனால், நான் எனது மொத்த சக்தியையும் இவன் ரட்சையாய் மாற்றுகிறேன், அவர்களால் ரட்சகன் பிறந்த பின்பும் எதுவும் செய்ய முடியாது. அவகளை எதுவும் செய்ய விடாமல் எனது சக்திகள் பாதுகாக்கும்." என கூறி தேவயாசினியிடம் அனுமதி வேண்டிட... தயங்கினாள் அவள்.
"ஆஹ்ஹ்ஹ்..", மீண்டும் ஒரு அலறல்.. ஷிவேதனாவின் வயிற்றிலிருந்து ஊற்றெடுத்தது ரத்தம். வேகமெடுத்தது டெவயாசினியின் இதயம். மேலும் இரு மாய அரக்கர்கள் எரிந்துச் சாம்பலாகினார்கள் ஷிவேதனாவின் சக்தியால்.
"என்னிடம் நேரமில்லை, தேவி. கவசத்தை உருவாக்க விடாமல் இவர்கள் என்னை தடுக்கிறார்கள். அந்த இருளரசன் என்னை தேடி வருவதற்குள் அனுமதி கொடுங்கள்.", வயிற்றை பிடித்துக் கொண்டவள், "தயங்காதீர்கள், தேவி. என் உயிர் பிரிந்துவிட்டால் அனைத்தும் கைமீறிடும்.", வலியுடன் கெஞ்சினாள்.
முடிவெடுக்கத் தினறிய தேவயாசினி, இறுதியாக, தன் மனம் சொல்வதைக் கேட்டு ஷிவேதனா கேட்பதற்கு சம்மதித்தாள். அடுத்தநொடி, தன் வேலையை தொடங்கினாள் ஷிவேதனா.
"இந்த சக்தி, மகா சக்திகளை கொண்ட ரட்சகனை காக்கும். ஆனால், இந்த சக்தியின் தாக்கம்.. எவ்வித சக்தியும் இல்லாமால் இருக்கும் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை, நீங்கள் மறுத்துவிட்டால், இரண்டு லோகத்தின் அனைத்து உயிர்களுக்குமே ஆபத்து. உங்கள் சிசுவுடன் சேர்ந்து மொத்த பிரபஞ்சமும் இருளின் அதிகாரத்தின் கீழ் சென்றுவிடும். இப்பொழுது முழு உலக பாதுகாப்பின் பொறுப்பும் உங்களிடமே உள்ளது. இப்போதும், உங்களுக்கு சம்மதம் தானே?" எனக் கூற சில நொடிகள் சிந்தித்த தேவயாசினி, சரியென ஒப்புக்கொண்டார். இந்த பரபரப்பில்கூட தன்னிடம் அனுமதிவேண்டி நிற்பதால் அவர் மீது நம்பிக்கை பிறந்தது தேவயாசினியின் மனதில்.
நிம்மதி பெருமூச்சு விட்ட ஷிவேதனா, தன் கரத்திலிருந்து மினிமினுப்பான தங்க ஒளியை தேவயாசினியின் வயிற்றில் உள்ள கருவை நோக்கிச் செலுத்தினாள். தன் சக்திகள் மொத்தத்தையும் ரட்சகனின் கவசத்திற்கே அற்பனித்து விட்டாள் ஷிவேதனா. அப்போதே அவளுக்கு வேறொன்றும் நினைவுவர... மீண்டும் தேவயாசினியின் வயிற்றில் கரம் பதித்தாள் அவள். இம்முறை, தகதகவென மின்னும் தங்கநிற ஒளி தேவயாசினியின் கருவினுள் நுழைந்தது. ஷேனாவிடமிருந்து பிரித்தெடுத்த அவனது ஆத்ம சக்திகளும் இப்போது ரட்சகனுக்கு கவசம் ஆகிவிட்டது.
"உங்கள் குழந்தை பிறந்து ஈரேழு ஆண்டுகாலம் உங்களின் உயிரையும் சேர்த்தே எனது சக்தி பாதுகாக்கும். ஆனால், அதற்குள்... அவனை மேகமலை அடிவாரத்தில் உள்ள திரிபுரா நகர மகா சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்... அவன் வாழ்வுக்கான பொருளை உணர்வான் அவன்... ... .... மறந்து விடாதீர்கள் தேவி... இரு லோக பாதுகாப்பும் உங்களிடம்தான் உள்ளது." என சொல்லும்போதே தேவயாசினிக்கு தலை சுற்றுவது போல் இருக்க... அதை சரியாக கவனிக்காத ஷிவேதனா, அவளுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து வேகவேகமாக கிளம்பிவிட்டாள்.
தன்னுள் நுழைந்த புதிய சக்திகளால் தேவயாசினி மயங்கிச் சரிய... சரியான நேரத்தில் தன் தங்கையை தாங்கி பிடித்தது செல்வகுமாரின் கைகள்.
✨✨✨
வெள்ளை பேன்ட் மற்றும் பச்சை நிற மினுமினுக்கும் குர்தாவில், அப்பாவி போல் முகத்தை வைத்தவாறு காலா நின்றுக் கொண்டிருக்க... அவன் எதிரில் அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் அந்த யுவதி.
"மதி, அப்டி பாக்காத டா. அண்ணன் செய்யுறதுல காரணம் இருக்கும்ன்னு நீ தானே சொல்லுவ."
"காலா'ண்ணா! ஆனா இதெல்லாம் நியாயமே இல்ல. பத்ரா'ண்ணா பாவம் டா. அவன மறுபடியும் கஷ்ட்ட படுத்ததான் போற நீ."
"மதி, புரிஞ்சுக்கோ மா. இதெல்லாம் மாத்த முடியாது. நான் ஒருதடவ நெனச்சுட்டா அது நடந்தே தீரும்."
"ஹும்ஹும். அண்ணா.. பத்ரா'ண்ணா பாவம். அவன் பூமிக்கு போக வேணாம். போய் கஷ்ட்ட படுவான். என்னால பாக்க முடியாது."
"ம்ச், அதெல்லாம் நீ பாக்க வேணாம். பாக்கவும் கூடாது" காலனின் குரல் கண்டிப்புடன் ஒலிக்க, "ஹான்? அப்போ என் அண்ணன நா பாக்க கூடாதா?" அவன் சகோதரி கோபத்துடன் விழியை விரித்ததில் மீண்டும் பழையபடி அப்பாவி பார்வை பார்க்கத் தொடங்கிவிட்டான்.
"அட, இல்ல மதி மா. அவன கஷ்டபடாம நா பாத்துக்குறேன். ஏற்கனவே கஷ்ட படுதுனதுக்கு ஒரு பிராயச்சித்தம்ன்னு வச்சுகோயேன்."
"எதே! பிராயச்சித்தம் செய்யுறியா? நீயா?"
"ம்ம்."
"அட போயா, உன்னலாம் நம்ப முடியாது. ஒழுங்கா என் பத்ரா'ண்ணாவ இந்த ஜெயில்ல இருந்து ரீலீஸ் பண்ணு. இல்லனா நானும் அதே ஜெயில்லுகுள்ளயே போறேன். என்னையும் உள்ள அனுப்பி வை."
"ஆர்ஹ்ஹ்! மதி! நீ ரொம்ப அடம்-", அவளை திட்ட முனைந்த காலனின் குரல் சட்டென தடைபட்டது. அங்கே கூண்டினுள் இருக்கும் பத்ரன், காட்டுக்கூச்சல் போட்டுத் தன்னை அழைப்பது காலனுக்கு மட்டும் கேட்டது.
"மதி, நீ இங்கேயே இரு டா. நா வந்துறேன்." என்றுவிட்டு நொடியில் அங்கிருந்து மறைந்துப் போனான் காலன். அவன் மறைந்ததும் வெள்ளிநிற மின்னும் துகள்கள் அவ்விடத்தில் கொட்டிட... கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் மதி.
✨✨✨
"அழைத்தீர்களா, பத்ரா?" பத்ரன் அடைபட்டிருக்கும் அந்த கூண்டில் உள்ள புகையை அப்புறப்படுத்தியபடி காலன் அங்கு வந்து நிற்க.. பல கூண்டுகளுக்கு மத்தியில், ஆட்டமாக ஆடி கொண்டிருக்கும் அந்த இரு கூண்டுகளில், ஒன்றில் இருந்தவன் மட்டும் காலனை கொலைவெறியில் பார்த்துக் கொண்டிருந்தான்..
"என்ன நடக்கிறதிங்கே?" அவன் குரல், உச்ச ஸ்தாணியில் எதிரொலிக்க, "என்ன நடக்கிறது?" ஏதுமறியாதவன் போல் சாதாரணமாகவே கேட்டான் காலன்..
"ஏதுமறியாதது போல் நடிக்காதே காலா. இந்த இடத்தில் எவ்வாறு மாயங்கள் உள் நுழைகிறது? இதன் பொருள் என்ன? அதுவும், இந்த மாயம்!! அரசனுடைய மாய சக்திகள் இது. அது எவ்வாறு இதனுள் நுழைந்தது? புதிதாக என்ன செய்து வைத்திருக்கிறாய் நீ?" அவன் கோபத்தில் கொந்தளிக்க... மெல்ல மெல்ல மாற்றம் கண்டது காலனின் முகம்.
"புதிதாக ஏதுமில்லை அண்ணா. நான் செய்த தவறை சரி செய்யவே முயல்கிறேன். உனக்கு செய்த துரோகத்தை போக்க முயல்கிறேன்." என்கையில் அவன் கண்கள் கலங்கிட... மெல்ல மெல்ல உருமாறத் தொடங்கியது காலனின் உருவம். பத்து வயது சிறுவனாக மாறி கண்ணீருடன் நின்றான்.
"காலா...!!...." கூண்டினுள் இருப்பவன் கண்கள் தவிப்புடன் காலனை நோக்க, "அ- .. அண்ணா... பூமியில் உனக்குத் தாயாக போகிறவர்... தந்தையாக போகிறவர்... வேறாருமல்ல. சித்தியும் சித்தப்பாவுமே தான். ஒளியும் மாயமும் உனக்காகவே மீண்டும் மனித ரூபம் எடுத்திருக்கிறார்கள்." என கூறிய பத்து வயது காலன், பூமியில் ஷிவேதனாவும் தேவயாசினியும் உரையாடும் அந்தக் காட்சியையும் இப்போது தேவயாசினி மயக்கத்தில் இருந்து தெளிந்து, தன் அண்ணனுடன் சேர்ந்து வீட்டினுள் நடந்துச் செல்லும் காட்சியையும், ஒரு திரையில் காட்டினான்.
"காலா... இவர் தான் என் அம்மாவா? எனில், ஆதி?" அவன் குரல் தவிப்பும் ஆசையும் கலந்து ஒலிக்க, "ஆதி, மரணித்தால் தானே மீண்டும் பிறபெடுக்க?" காலனின் பதிலால் கலங்கியது அவன் கண்கள்.
"அம்மா!" கூண்டினுள் இருந்தவன் கண்கள் கண்ணீரில் நிரம்ப, உள்ளுக்குள் இருந்துக்கொண்டே, காலன் காட்டிய அந்த திரையில் தெரியும் தன் அன்னையை தீண்ட முயன்றான் அவன். அந்த கண்ணாடி போன்ற கூண்டின் தடுப்பில், அவன் கரம் அழுத்தமாக பதிய... அதேநேரம் அங்கே பூமியில், பெறும் குழப்பம் ஒன்றை மனதில் சுமந்தபடி தன் அண்ணனுடன் நடந்துக் கொண்டிருந்த தேவயாசினி, திடீரென தன்னுள் புதிதாக ஒன்றை உணர்ந்து பூரித்துப்போனாள். அவள் தன் கரத்தை எடுத்து வயிற்றின் மீது வைக்க... உள்ளிருப்பவனது குட்டி கரங்கள் முதல் முறையாக அன்னையின் கரத்தை தீண்ட முனைந்தது. அதேநேரம், அந்த கூண்டின் விளிம்பில் கரம் பதித்திருந்த பத்ரணுக்கு, தன் தாயையே தீண்டியதுபோல் ஒரு பூரிப்பு. கண்ணில் ஆனந்தக் கண்ணீர் கசிந்தது. அவன் அப்படியே கண்ணீருடன் கூண்டினுள் மடிந்தமர, "மன்னித்து விடு பத்ரா. உன் சொல்லை மீறி உன்னை அண்ணனென அழைத்துவிட்டேன்." கண்ணீரை துடைத்துக் கொண்டே வாலிபனான காலன், "நாளைய தினம் பூமியில் ஜனிக்கத் தயாராகிடுங்கள் பத்ரா." என்றதுடன் அங்கிருந்து மறைந்து போனான். வெள்ளிநிறத் துகள்கள் கீழே கொட்டியது.
✨✨✨
பூமி...
ஆள்நடமாட்டம் இல்லாத அந்தத் தன்னந்தனி சாலையில், தலையில் இருந்து ரத்தம் ஓட சாலையில் மயங்கிக் கிடந்தாள் ஷிவேதனா. அங்கே அவளுக்கு அரண் போல், இருபதடி வெண்ணிற சர்ப்பம் ஒன்று, கோரமாக சீறிக்கொண்டும் கோபத்தில் தன் வாலை இப்படியும் அப்படியும் அடித்துக் கொண்டும் இருக்க.. ஷிவேதனாவை தாக்கவந்த மாய அரக்கர்கள் யாவரும் அந்த வெள்ளை சர்ப்பத்தின் கூறிய பற்களுக்கும்... கத்தி போன்ற ரெக்கைகளுக்கும் இரையாகிக் கொண்டிருப்பது, அங்கே தெறிக்கும் ரத்தத்தின் மூலமாக தெரிந்தது.
அதேசமயம், தூரத்தில் நடந்து வரும் சமாராவின் நிழல், சாலை விளக்குகளின் உதவியால் அந்த சாலையின் எல்லையில் நிற்கும் சர்பத்திற்குத் தெரிய... அதை பார்த்து அந்த சர்ப்பம் தன் உருவத்தை சுருக்கி சிறிய வெண்ணிற வளையமாக மாறி ஷிவேதனாவின் மணிக்கட்டில் வளையம்போல் சுற்றிக் கொண்டது.
அதை கவனிக்காத சமாரா, அங்குவந்ததும், கோரப் புன்னகையுடன் தன் கையிலிருந்த மாயத்தால் பெரும் வாள் ஒன்றை உருவாக்கி, ஷிவேதனாவை நோக்கி ஒரே வீச்சாக வீசினாள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro