54. உண்மையை அறிந்த ஷிவேதனா.
காலையில், வனதேசத்திலிருந்து வந்தபின் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தன் கழுத்திலிருந்த உறவு சங்கிலி காணாததை கண்டுகொண்ட ஷேனா, பரபரப்புடன் அதை தேடத் தொடங்கிய நொடியில் இருளரசன் அவனை அழைத்து, காத்யாயினி மற்றும் சமாரா மீண்டும் இருள்மாளிகைக்கு வரப்போவதாகக் கூறி இருவருக்கும் அறைகளை தயார்செய்யக் கட்டளையிட... ஏற்கனவே உறவுசங்கிலி தொலைந்துபோன வேதனையில் இருந்தவனுக்கு சமாராவின் வரவு குறித்த செய்தி, எரிச்சலை கிளரியது.
பச்சிளம் குழந்தையாக இருக்கும்போதே தன் உதிரத்தை குடித்தவள், இப்போது என்னென்ன செய்யப் போகிறாளோ என்னும் கடுப்புடன் இருவருக்கும் அறைகளை தயார் செய்து முடித்தவுடன், இப்போது தன் அறைக்குள் வந்து அனைத்தையும் உருட்டிக் கொண்டிருக்கிறான். தொலைந்துப்போனத் தன் உறவுசங்கிலியை தேடி.
இரவெல்லாம் மகனின் நினைவிலேயே உறங்காமல் இருந்ததால் இப்போது லேசாகக் கண்ணயர்ந்திருந்த ஷிவேதனா, பொருளெல்லாம் உருளும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்துப்பார்க்க... அறையை அலங்கோலம் செய்ய சபதம் மேற்கொண்டதுபோல் அனைத்துப் பொருட்களையும் தாறுமாறாக வீசிக் கொண்டிருந்தான் ஷேனா.
"ஷேனா! என்ன செய்கிறாய் நீ?" என்றபடியே அவனருகில் செல்ல, "அம்மா... எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. உறவுசங்கிலியை காணவில்லை அம்மா." கிட்டத்தட்ட அழும் நிலையில்தான் இருந்தான் அவன்.
"அட! இதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டமா? என்ன ஷேனா இது. குழந்தை போல்," ஷிவேதனா சிரிக்க, "அம்மா! சிரிக்காதீர்கள். எனக்கு என் உறவுசங்கிலி வேண்டும். பிறகு, நான் தொலைவில் இருக்கையில் உங்களிடம் எப்படி பேசுவதாம்? எனக்கு அது வேண்டும், அம்மா. என் உறவுசங்கிலி எனக்கு வேண்டும்." என்றவனின் கண்ணிலிருந்து துளி நீர் கசிந்தது.
"அட- ஷேனா..." அவன் கண்ணீரை துடைத்தவள், "நீ வருந்தாதே... நாளைய விடியலில் நாம் புதிதாக ஒன்றை செய்துவிடலாம்." அவனுக்கு சமாதானம் சொல்ல... அன்னை சொன்ன ஒற்றை வார்த்தையால் நொடியில் உற்சாகம் அடைந்தாலும் முழுவதுமாகத் திருப்தி கொள்ளவில்லை ஷேனா.
"ஆனால், நான் முதலில் வைத்திருந்ததுதான் எனக்குப் பிடிக்கும். அதுதான் நீங்கள் எனக்கு கொடுத்தது!"
"ஹஹா. ஆம் கண்ணா. அதேபோல் இன்னொன்றையும் உனக்காக நானே என் கைபட உருவாக்கித் தருகிறேன். போதுமா?"
"ஹான்! எனில் இப்பொழுதே அதை செய்திடலாமே? ஏன் நாளை வரையில் காத்திருக்க வேண்டும்." லேசாக சமாதானம் ஆகியிருந்தாலும் அவன் முகம் வாடியது.
"ஷேனா... எதற்கும் காலம் என்ற ஒன்று உள்ளது. அதன்படி விடியலில் தான் தூய மாயங்களை உபயோகிக்க வேண்டும். உறவுசங்கிலி எத்தகைய சக்தியில் உருவாகும் என்பதை சொல்லியிருக்கிறேன் அல்லவா."
"ஹான். மெய்யான அன்பை மனதில் நிறுத்தி தூய மாயங்களை கொண்டு செய்யவேண்டுமல்லவா? சரி, அம்மா. நான் நாளைய விடியல் வரை காத்திருக்கிறேன்." எப்படியோ சோகம் மறந்து உற்சாகம் கொண்டான் ஷேனா.
"ஹான், ஹான். காத்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்," மகனின் கரத்தை இறுக்கமாக பிடித்துகொண்டு, "இப்போது என்னுடன் வா. உணவருந்த. நேற்றிலிருந்து நீ என்னுடன் இல்லை. இளவரசன் ஆகியதும் அன்னையை மறந்து விட்டாயல்லவா நீ." சொல்லிக்கொண்டே உணவு மேஜைக்கு அவனை இழுத்துச் சென்றார் ஷிவேதனா.
"இல்லை... இல்லை, அம்மா." முதலில் பதறியவன், தன் அன்னை வாய்க்குள்ளேயே சிரிப்பதை கண்டுகொண்டப்பின், "ஹும். நீங்கள் தானே சொன்னது. இளவரசன் தன் கடமையை சிறப்புடன் செய்திட வேண்டும், அதுவே அவன் முதல் கடமையென... அதை செய்ய வேண்டுமெனில் நான் சென்று தானே ஆக வேண்டும்." சிணுங்கினான் அவன்.
"ஹாஹா. விளையாட்டாக கூறினேனடா. இதற்குபோய் நொந்துக் கொள்வாயா நீ." அவன் கன்னத்தில் தடடியவர் அவனை கீழே அமரச்செய்து இரு தட்டுகளை எடுத்து உணவினை பறிமாறத் தொடங்கியபோதே, திடீரென மனதில் ஏதோ தோன்றியதுபோல் ஷேனாவை நோக்கி நிமிர்ந்தவர், உள்சென்றக் குரலில், "இப்படியே எப்போழுதும் இருந்திடு ஷேனா. எப்பொழுதும். நான் உன்னுடன் இல்லாவிட்டாலும் நீ தைரியமாக இருக்கவேண்டும். தீயவழியில் செல்லாமல் இருக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்க வேண்டும்." என்றவரின் பார்வையில் வினோதமான ஒரு உணர்வு தென்பட்டது. ஆனால் அவ்வுணர்வை அவராலேயே பகுத்துச் சொல்ல முடியவில்லை. அன்னையின் சொல்லால் நொடியில் குழம்பினான் ஷேனா.
"அம்மா. ஏன் இப்படி வித்தியாசமாக பேசுகிறீர்கள்? அதெல்லாம் நீங்கள் என்னைவிட்டு எங்கும் செல்ல அனுமதியில்லை. எப்போதும் என்னுடன்தான் இருக்கவேண்டும். நீங்கள் என்னோடு இருக்கும் வரையில் நான் எப்படி தீயவழியில் செல்வேன்?" அவன் கோபமாக முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள... மெல்லியப் புன்னகையுடன் அவன் கன்னம் வருடியவாறு, "ஹ்ம்ம். சரி எங்கும் செல்லமாட்டேன் கண்ணா. ஏதோ. சொல்லவேண்டுமென தோன்றியது. சொன்னேன். ம்ம். இதை வாங்கிக்கொள்." உணவை எடுத்து அவன் வாயருகே நீட்ட... என்றும்போல் இன்றும், மலர்ந்த முகத்துடன் உணவினை பெற்றுகொண்டான் ஷேனா.
ஒருவாய் தான் வாங்கினான். மறுவாய் உணவினை பெறுவதற்கு ஆ'வென வாயை திறந்தவன், அ-அம்மா! தந்தை அழைக்கிறார்." தலையை பின்நோக்கி நகர்த்திக்கொண்டு, உணவை வாங்காமலேயே படக்கென எழுந்து, "நீங்கள் உணவுண்னுங்கள், அம்மா. நான் விரைந்து வந்துவிடுவேன்." வழக்கம்போல கண்ணிமைக்கும் வேகத்தில் வாயிலை கடந்துச் சென்றிருந்தான்.
"அட, ஷே-." அவனை தடுக்க முனைந்த ஷிவேதனா, ஏதோ காரணத்திற்காக சட்டென தன் வார்த்தைகளை நிறுத்தி விட்டார்.
'எப்படியும் இவன் திரும்பி வருவதற்கு தாமதம்தான் ஆகும். அதற்குள்... அதற்குள், நான் சென்று என் கணவரை தேட சிறிது காலம் கிடைக்கும் தானே? ம்ம். நான் விரைந்து வருகிறேன். எவ்வாறேனும் நீங்கள் இருக்குமிடம் தேடி வந்திடுவேன். உங்களை அடைந்ததும். நம் மகனுடன் வேறு எங்கேனும் தூரமாக சென்றுவிடலாம். எங்கேனும்; மிக தூரமாக... எவர் பார்வையிலும் சிக்கிடாமல் சென்றுவிடலாம்.' என மனதினுள்ளேயே தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டவரது விழியில், துளித்துளியாக சில துளிகள் விழ... ஆழ மூச்சை உள்ளிழுத்து, கண்களை துடைத்துக்கொண்ட ஷிவேதனா, உண்மை அறியாமல், ஒரு முடிவுடன் தன் அறையை விட்டு வெளியேறினார். அவர் கணவனை தேடி.
✨✨✨
இருளரசரின் குரல் எப்படிதான் ஷேனாவின் செவியினை மட்டும் அடையுமோ. ஒருமுறையே காதில் விழுந்த அவர் குரலை துல்லியமாக கணித்து, பல வளைவுகளில் வளைந்து வளைந்து விரைந்துக் கொண்டிருந்தான் அவன்.
அங்கே, தனக்கென கொடுக்கப்பட்ட அறையினுள் நுழைந்த சமாரா, அறையின் மையத்தில் கிடந்த மெத்தையில் மல்லாக்க படுத்துகொண்டு, தங்க நிற ஒளியால் மின்னும் அந்த அறையின் அலங்காரங்களையும் கலைநயத்தையும் சில நிமிடங்கள் வரையில் சுற்றிச் சுற்றி நோக்கிக் கொண்டிருக்க... திடீரென அவள் கண்கள் இரண்டும் கறுநிறத்தில் ஜொலிக்கத் தொடங்கியது. கைகள் அனிச்சையாகவே அவள் இடையிலிருக்கும் கறுமுத்தை இறுக்கமாகப் பிடிக்க... கண்களிலிருந்த கறுநிற ஒளி இருமடங்காக பிரகாசித்த அதே நொடியில் அவள் அறைக்குள் நுழைந்தான் ஷேனா. அவனது விழிகளும் ஆழ்ந்த கறுநிறத்தில் மூழ்கிப்போய் இருக்க. அவனின் வெறுமையான முகபாவனையே சொன்னது, ஷேனா தன் சுயநினைவிலேயே இல்லை என்பதை.
நொடியில் தன் வெளவால் ரூபத்தை அடைந்த சமாரா, காற்றில் உயரே பறந்த நொடியில் அவள் கரங்கள் இரண்டும் ஷேனாவை நோக்கி நீண்டிருக்க.... அவன் உடலில் இருந்தும் அணிந்திருக்கும் ராஜ பதக்கத்திலிருந்தும் தங்க நிற ஒளியானது பெருமளவில் சமாராவை நோக்கி வெளிவரத் தொடங்கியது.
ஷேனாவின் சக்திகள் குறையக்குறைய சமாராவின் வசியத்தின் பிடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுக் கொண்டிருந்தவனுக்கு, பல ஆண்டுகளுக்கு முன் இருளரசன் மூலம் அனுபவித்த அதே வலியை மீண்டும் உணரச் செய்துக் கொண்டிருந்தது அவளின் இச்செயல். அதே நேரத்தில், தான் இதுவரையில் அனுபவித்திராத புத்தம்புது அதிசக்தி, இப்போது தன்னுள் படர்ந்து கொண்டிருக்கும் புதிய அனுபவத்தில் திளைத்திருந்த சமாரா தன் மனித வெளவால் ரூபத்திலிருந்தபடியே உற்சாக மிகுதியில் வெளியிட்ட கூச்சல், இருள் மாளிகையின் ஒவ்வொரு இடுக்கிலும் அசரீரியாக எதிரொலித்தது.
பக்கத்து அறையிலிருந்த இருளரசனும் அவர் தங்கையும், திடீரென கேட்ட வினோத ஓசையால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, "சகோதரா.. சமாரா." தன் மகளின் குரலை கணித்துவிட்ட காத்யாயினி, இப்போது அவள் எந்த நிலையில் இருப்பாள் என்பதையும் யூகித்து, அவளிடம் செல்ல வேண்டிய அவசியத்தை பார்வையிலேயே காட்டித் தன் சகோதரனை பார்க்க... நொடியும் தாமதிக்காமல் அடுத்த அறையை நோக்கி விரைந்தார்கள் இருவரும்.
அவ்விருவரும் சமாராவின் அறை வாயிலை அடைந்த நொடி, முழுமையாக தன் சுய நினைவினை அடைந்திருந்த ஷேனா, தன் உயிரில் கலந்த சக்திகள் தன்னைவிட்டுப் பிரியும் மரண வலியை பொறுக்க முடியாமல் கோரமாக அலர, "சமாரா." கத்யாயினியின் கோபக்குரல், சமாராவின் செவியை அடைந்த நோடியில் சட்டெனத் தன் செயலை நிறுத்தினாள் அவள். பொத்தென தரையில் மயங்கிச் சரிந்தான் ஷேனா.
இதே, மற்றைய நேரமாக இருந்திருந்தால், சமாராவிற்கு இருக்கும் சக்தி தாகத்திற்கு காத்யாயினியின் குரலெல்லாம் அவளை அடையாது. அவளின் முழு சக்தியும் மீண்டும் பெறும் வரையிலோ அல்லது எதிரில் இருப்பவர் மரணிக்கும் வரையிலோ யாரின் சொல்லும் அவளை அடையாது. ஆனால், இன்றைய கதையே வேறு. சமாராவிற்கு இன்று காலையில்தான் ஒரு மாய அரக்கனின் சக்திகள் முழுமையாக கிடைத்திருந்தது. அவ்வாறிருக்க, இப்போது ஷேனாவின் சக்திகள் இவளுக்கு அவசியமற்றது. ஆனாலும் அவன் சக்திகளை உரிஞ்சியெடுத்தாள் இவள். காரணம், ஷேனாவின் சரீரத்தில் உள்ள அதிசக்திதான் அவளை ஈர்த்தது. இத்தனை ஆற்றல் கொண்ட சக்தி தன்னை சுற்றி இருந்திடும் சமயம், அதனை அடையாமல் இருக்க முடியவில்லை சமாராவால்.
அன்னையின் கோபக்குரலுக்கு பின் தன் சுய ரூபத்திற்கே மீண்டும் மாறியவள், அப்போதே கவனித்தால் தன் முன்னால் மயங்கி கிடப்பவனை. அவனை கண்ட நொடியில் அவனது கழுத்தில் கிடந்த ராஜ பதக்கத்தையே சமாராவின் முதல் பார்வை தீண்டிவர.... அவள் ஷேனாவை நோக்கிக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்து நின்ற இரு பாதங்களையும் கவனித்துச் சட்டென நிமிர்ந்து இருளரசனை நோக்கினாள்.
அவர் பார்வையில், இந்த உணர்வுதான் உள்ளதென தனித்துக் கூறிட முடியாது. அதிர்ச்சி, மகிழ்ச்சி, வியப்பு, ஆச்சரியம் என அனைத்தும் கலந்திருந்தத் தன் மாமாவின் முக பாவனையை தவாறாகப் புரிந்துக்கொண்ட சமாரா, "மன்னித்துவிடுங்கள், மாமா." மெல்லியக் குரலில் மன்னிப்பு வேண்டி, சிரம் தாழ்த்தி நிற்க... அதுவரையில், உறவுசங்கிலி இல்லாமல் மயங்கிக் கிடக்கும் ஷேனாவையே கண்டுக் கொண்டிருந்த இருளரசன், தன் மருமகளை நோக்கி நிமிர்ந்தார்.
"அஹ்ம். மன்னிப்பா? எதற்காக சமாரா? இதில் தவறேதும் இல்லையம்மா!"
"மாமா?"
"ஆம் மருமகளே! இவன் சக்திகள் எல்லாம் உனக்குதான். இம்முறை மாத்திரமல்ல. இனி தினம் தினம் உனக்கு வேண்டிய சக்திகளை இவனிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் நீ. இவன் உனக்கானவன் தான் சமாரா."
"மாமா? மெய்யாகவா? இத்தனை அற்புதமான சக்தி கொண்டவன், எனக்காகவா?"
"ஆம், சமாரா. அதற்காக நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்."
"என்னவென்று சொல்லுங்கள் மாமா. நிச்சயம் செய்கிறேன். இத்தகைய சக்திகளை அடைய நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் மாமா."
"நீ இவனைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், சமாரா. மேலும், காலம் முழுக்க உனது மாய வசியத்தின் பிடியிலேயேதான் இவனை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் என்றும் குறைவில்லாத இவன் சக்திகளை உன்னால் அனுபவிக்க முடியும்."
"ஹாஹ்! இவ்வளவு தானா மாமா. வசியம் செய்வதெல்லாம் எனக்கு அத்துபடி." ஏளன புன்னகையுடன் மயக்கத்தில் இருந்த ஷேனாவை நோக்கி, "ஆனால், எதற்காக மாமா இவனை வசியத்தின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும்? தேவையான சமயத்தில் மட்டும் வசியம் செய்தால் போதாதா என்ன? இவன் முதலில் யார்? இவ்வளவு ஆற்றல் எப்படி வந்தது இவனுள். ஒரு திங்களுக்கு எனக்கு வேண்டிய மாய சக்திகள் ஒருவனிடம் இருந்தே கிடைத்திருக்கிறது. இருந்தும், இவன் இன்னும் மரணிக்கவில்லை எனில்... இவனது ஆற்றல் அளப்பரியது தான் மாமா." கண்களில் பேராசையுடன் பார்வையை அவன் மீதே வைத்திருந்தாள் அவள்.
"அது மெய்தான் சமாரா. அத்துடன் இவன் சாமான்யனல்ல. இருள் உலக இலக்கியத்தின் ராஜ சிம்மாசனம் தேர்ந்தெடுத்த இளவரசன் இவன். மேலும், ரட்சகராஜ்யத்தின் உதிரம் ஓடும் நிழல்தேசத்து வாரிசு. இவனுக்கு இருக்கும் சக்தியைபோல் ஆதிலோகத்தின் வேறு எந்த இனத்தவரிடமும் இருக்காது. இவன் உன் வசியத்தில் இருக்கும் வரையில் வேறு எவரின் சொல்லுக்கும் பணியமாட்டான். அவனாலும் சுயமாக சிந்திக்க முடியாது. அதனால்தான் சொல்கிறேன், இவனுக்கு சிந்திக்கும் அவகாசமே அளிக்காமல் காலம் முழுவதும் உனது வசியத்திலேயே வைத்திருக்க வேண்டும் நீ"
"ஹ்ம்ம். அவ்வளவு தானே மாமா, நிகழ்த்திவிட்டால் முடிந்தது. ஒரு முறை. ஒரேமுறை இவன் என் விழிகளை நேருக்கு நேராக கண்டுவிட்டால் போதும். நிரந்தர வசியம் நிறைவுபெறும். ஹஹஹா! சரி, அதுபோகட்டும் மாமா. ரட்சகராஜ்யம் பற்றி அறிவேன்.... ஆனால், அதென்ன? இருள் உலகம்? ராஜ சிம்மாசனம்? இவையெல்லாம் குறித்து அம்மா எனக்கு சொன்னதே இல்லையே." என கேள்வியாக அவள் அன்னையை ஒரு பார்வை பார்க்க... "சமாரா. அது குறித்து நானும் எதையுமே அறியேன். உன் மாமாதான் நம் இருவருக்குமே விளக்கமளிக்க வேண்டும்." தன் சகோதரனை நோக்கி பார்வையை திருப்பினார் காத்யாயினி.
தாய், மகள் இருவரின் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பையும் ஒருமுறை நோக்கியபின், நன்றாக மூச்சை உள்ளிழுத்து தன்னை தாயார்படுத்தி கொண்டவர், "ஹாம். அனைத்தையும் சொல்கிறேன் சமாரா. இவையெல்லாம் இன்று தொடங்கியதல்ல. அத்துடன், இதுகுறித்து சொல்வதற்கான அவசியம் எப்பொழுதும் ஏற்பட்டதில்லை. அதனால்தான் காத்யாயினிக்குக் கூட தெரியாது. ஆனால், இப்போது அந்த அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் உங்கள் இருவரையும் இங்கு அழைத்தேன்" தீர்க்கமாக சொன்னார் அவர்.
"என்ன? எனில், இவனை குறித்துச் சொல்லத்தான் என்னையும் அம்மாவையும் அழைதீர்களா மாமா?"
"ஹான். ஆனால் அதற்காய் மட்டுமல்ல. இன்னும் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும். அம்-. அதை சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது, சமாரா. ஆதிகாலம் முதல் சொல்லவேண்டும். அதை இங்கு சொல்வதை விட... இன்னொரு இடம் இருக்கிறது. அங்கு, நம் தேவன்கள் முன்னிலையில் வைத்து சொல்லிடுவதே சரியாக இருக்கும். இருவரும் வாருங்கள் என்னுடன்." என அவ்விருவரையும் இருளரசன் அழைத்த நொடி, "அம்- சகோதரா. இவன்? இவனை இப்பொழுது என்ன செய்ய சகோதரா? எழுந்து எங்கும் சென்டறிட மாட்டானா?" ஷேனாவை சுட்டிக்காட்டினாள் காத்யாயினி.
"ஹ்ம்ம். அவனை அப்படியே விடு காத்யாயினி. சென்றாலும் பிரச்சனையில்லை.. என் ஒரு குரலுக்கே ஓடிவந்து காலடியில் நிற்பான். வாருங்கள், நாம் செல்லலாம்" என வாயிலை நோக்கி நடக்க... அவரை தொடர்ந்து இருவரும் வெளியேறிய கணம், சட்டென ஒரு தூணின் பின்னால் மறைந்துக் கொண்டாள், வாயிலருகில் மறைந்து நின்றிருந்த ஷிவேதனா. ஷேனாவின் அலறல் ஓசை கேட்கும்போதே இங்கு வந்துவிட்டவள், இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கண்கலங்கி நின்றுக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் மூவரின் தலையும் மறைந்ததும் விரைந்துத் தன் மகனிடம் சென்றவள், கண்ணீர் ததும்பும் விழியுடன், "ஷேனா. எழுந்திரு மகனே. எழுந்து அம்மாவை பார். உன்னை இந்நிலையில் காணவா இத்தனை காலம் என் உயிர் நிலைத்திருக்க வேண்டும்? என்னால் நீ கஷ்டங்களை அனுபவித்தாலும் நிம்மதியாக இருப்பதாக அல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இத்தனை வேதனையை இன்னுமும் அனுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாயா ஷேனா? என்னை மன்னித்துவிடடா. அம்மாவை மன்னித்துவிடு. இன்னும் கொஞ்சம் காலம் தான். உன் தந்தையை அடையும் வரையில் மட்டும் தான். பிறகு, நாம் அனைவரும் எங்கேனும் சென்றுவிடலாம்." பரிதவிப்புடன் கதறிக்கொண்டே தன் மகனை கைத்தாங்கலாக எழச்செய்து, அவனை மெல்ல மெல்ல நடக்கச் செய்தார். தானாக எழுந்து நடக்குமளவு சுயநினைவு இல்லாமல் இருந்தாலும், அன்னையை பிடித்துக்கொண்டு எப்படியோ அவள் வழியிலேயே மெல்ல நடக்க தொடங்கினான் ஷேனா.
✨✨✨
அன்னையின் அருகாமை தந்த அரவணைப்பில், தன் வலிகளையெல்லாம் மறந்து அவர் மடியிலேயே நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருக்கிறான் ஷேனா. ஆனால் அவன் அன்னையோ, வலியிலும் கோபத்திலும் விண்ணைமுட்டும் அனல் போல் தகித்து எரிந்துக் கொண்டிருக்கிறாள்.
கணவன் உயிரைக் காக்கவேண்டி மகனை பலியிட்டு விட்டோமோ என அவர் மனம் கிடந்து அடித்துக்கொள்ள... சிறுவயது முதலாக தன் மகன் இப்படிதானே வலிகளை அனுபவித்திருப்பான். நீண்ட நேரம் அவனை காணாமல், தான் காத்திருந்த ஒவ்வொரு நாளும் இப்படித்தானே ஆதரவற்றவன் போல் எங்கோ ஒரு மூலையில் மயங்கிக் கிடந்திருப்பான்? என துடித்துப் போனவளுக்கு இவையெல்லாம் பற்றி முன்பே தெரியும்தான், ஆனால் கண் முன்னே கண்டத்தில் தாயுள்ளம் தவித்தது. எவருமே ஆதரவுக்கு இல்லாத இந்த தன்னந்தனி தேசத்தில், கணவனின்றி வாழவும் முடியாது, அரசனான இருளரசரின் அனுமதியின்றி நிழல்தேசத்தை விட்டு வெளியேறவும் முடியாது.
ஒவ்வொன்றாக புரியப்புரிய அவர் விழிவழியே விழும் நீர் இரட்டிப்பாகிட, "என்னை மன்னித்துவிடு ஷேனா. அன்று உன் அம்மா ஆசைப்பட்டு செய்த ஒரு தவறுக்காக உன் வாழ்வையே நரகமாக்கி விட்டேன். நான் இங்கு வந்திருக்கவே கூடாது. உன் தந்தையை சந்தித்திருக்கவே கூடாது. அவருக்காக என் குடும்பத்தை பிரிந்து இன்று என் ஒரே சொந்தமான உன்னையும் நரகத்தில் கைவிட்டிருக்க கூடாது. என் தவறுதான் மகனே. அனைத்தும் என் தவறு தான்." கண்ணீருடன் அவர் கரம் மகனின் நெற்றியில் பதிய... அவனுள் இருந்து தங்கநிற ஒளி ஒன்று, ஷிவேதனாவின் கரத்தினுள் நுழையத் தொடங்கியது. அதே நேரம், அவன் முகம் வலியில் சுருங்கியது.
"சற்று பொறுத்துக்கொள், ஷேனா. இதற்காகத்தான்... இதற்கு பயந்துதான் மாய வித்தைகளுக்கு உன்னை பழக்கிடவில்லை நான். இருந்தும், உன் சக்திகளை எடுத்து அவர்கள் உன்னை துன்புறுத்தியிருக்கிறார்களே!" கண்ணில் கண்ணீருடன், மறுகரத்தால் மகனின் சிகையை வருட... வலியில் தன் தலையை அன்னை மடியினுள் அழுத்தமாக புதைத்த ஷேனா, அன்னையின் ஆடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
"அவர்கள் எவ்வளவு தான் உன் சக்திகளை எடுத்திருந்தாலும் உனது ஆன்மாவின் ஆழத்தில் உள்ள சில அதிசக்திகள் குறித்து என்னையன்றி அவர்கள் அறிய மாட்டார்கள். அறியவும் கூடாது. மீறி அறிந்தாலும் அது அவர்களுக்கு கிடைக்கக்கூடாது ஷேனா" என்றதுடன் அவர் குறிப்பிட்ட அந்த சக்திகளை முழுமையாக அவனிடமிருந்து பிரித்து எடுத்துவிட... வலியால் இருக்கமாக பற்றியிருந்த அன்னையின் ஆடையை விடுவித்து, உறக்கத்திலேயே பெருமூச்சுவிட்டான் ஷேனா.
தீர்க்கமான பார்வையுடன் அவனை நோக்கிய ஷிவேதனா, தன் மடியில் இருந்த மகனை மெத்தையில் கிடத்தி, "நீ ஓய்வெடு ஷேனா. நான்- நான் சென்று அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களின் திட்டம் குறித்து அறிய வேண்டும். என் மகன் திருமணத்தை பற்றி என்னிடம் சொல்லாமலே... அதுவும், என் மகனிடம் கூட சொல்லமலே அவனை வசியம் செய்து நிகழ்ந்த போகிறீர்களா? நடக்காது. நடக்க விடமாட்டேன்." ஆவேசமாகக் கூறியவர் அங்கிருந்து நகர முற்பட... உறக்கத்திலேயே அன்னையின் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டான் ஷேனா.
தன் கரத்தை பிடித்திருக்கும் மகனின் கரத்தையே இரு நொடிகள் நோக்கிய ஷிவேதனா, கலங்கிய விழிகளுடன் மெல்ல அவனருகில் மண்டியிட்டு, அவன் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டு அவன் கன்னம் வருடிகொண்டே, "நான் செல்லவேண்டும். அம்மா செல்ல வேண்டும். பயப்படாதே! அம்மா எப்போதும், எந்நேரமும் உன்னுடன் தான் இருப்பேன்." அவன் செவியில் மென்மையாக சொல்லிக்கொண்டே தன் கரத்திலிருந்து மகனின் விரல்களைப் பிரித்தெடுத்துவிட்டு எழுந்தவர், மகனை பார்த்துக்கொண்டே வாயிலின் திசையில் பின்நோக்கி நடந்தார். இறுதியாக தன் பார்வையை மகன்மீது பதித்தவர், அரை மனதுடன் அறையை விட்டு வெளியேறி... இருளரசன், அவரின் தங்கையையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு சென்ற திசையை நோக்கி விரைந்தார்.
✨✨✨
இருள் உலக இலக்கியத்தின் ராஜ சிம்மாசனம் என்பது என்னவென சமாராவிற்கும் காத்யாயினுக்கும் காட்டியிருந்த இருளரசன், இப்போது இருவரையும் அழைத்து வந்திருக்கும் இடம், அரக்க சிலைகள் இருக்கும் அந்த அறைக்கு தான். வாயை பிளக்காத குறையாக, அந்த சிலைகள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சமாரா.
அவற்றில், மேடையின் மையத்திலிருக்கும் அந்த ஆறடி உருவத்தை சுட்டிக்காட்டிய இருளரசன், "அவர்தான் விவேகநாசன். பல யுகங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஆதிகாலத்தில், இருள்உலகின் மொத்த ரூபமாக நாம் வணங்கிடும் தெய்வம், யக்ஷரதேவனை போற்றி வணங்கியவன். குறிப்பாக, இவன் செய்யும் யாகங்கள்... தியான, தூப, மாய வழிபாடுகளின் மூலம் கிடைக்கும் சக்திகளால், யக்ஷரதேவனுக்கு அவரின் சக்திகளை முக்கால்வாசி பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. அத்தகைய அளவிற்கு இவன் தனது சக்திகளை தன் தேவனுக்கு படைத்து விடுவான். கிட்டத்தட்ட யக்ஷரதேவனின் உடன்பிறவா சகோதரன் போலதான் விவேகநாசன்," என்கையில் மற்ற இருவரின் பார்வையும் பூரிப்புடன் அந்த சிலையை தீண்டிவர... உலகின் ஒட்டுமொத்த வன்மையும் அந்த சிலையின் முகத்தில் தாண்டவமாடியது. இருளரசன், தன் வார்த்தையை மேலும் தொடர்ந்தார்.
"இருளுக்கும் ஒளிக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் ஒளியானவள் வென்று இருளை அழித்து அதனை பாதாளத்திற்கு துரத்திய சரித்திரம் உங்களுக்குத் தெரியும். சிலகாலம் கடந்தபின் அந்த பாதாளத்திலும் ஒளி வந்துத் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினாள். ஆனால், அவளே அறியாதது அவள் பாதாளம் வரும் முன்பே அவளை அழிப்பதற்காக தன் வாரிசை அதே பாதள லோகத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தார் யக்ஷரதேவன். அந்த வாரிசு, நிலத்தில் தன் பாதங்களை ஊன்றி நிற்கும் முன்பாகவே ஒளியவள் பாதாளத்திற்கு வந்துவிட்டதால் யக்ஷரதேவன் அங்கிருந்து கிளம்பியிருந்தார். பல யுகங்கள் கடந்து அவர் மீண்டும் பாதாளத்தை அடைந்த அந்த நாளில் அனைத்தும் தலைகீழாக மாறி இருந்தது. அதில் பலவற்றை நாம் அறிந்திருக்கமாட்டோம்.
நம் அதிலோக மக்கள் அறிந்தவரையில், யக்ஷரதேவன் மீண்டும் வந்தபொழுதில் தன் வாரிசுக்கு அவன் உருவாக்கபட்ட காரணத்தை சொல்லி, ஆதிமஹா யுத்தத்தை தொடக்கி வைத்தார். ஆனால், அதில் தோல்வியடைந்தார். அவ்வளவு தான் நமக்கு தெரியும். ஆனால் நடந்தது அதுவல்ல. தோற்றதும் இருளல்ல. அப்போது நிகழ்ந்தப் போர், ஒளியை பாதாள லோகத்தை விட்டு துரத்துவதற்கு மட்டும்தான். அதன் பிறகுதான் நிறைய நடந்தது. எதன் காரணமாகவோ, இருளையே எதிர்க்கத் தொடங்கிவிட்டான் அவரின் வாரிசு.
அதை கண்ட நொடியே இருள்தேவனுக்கு சினம் தலைக்கேறியது. அவன் உருவாக்கப்பட்ட காரணத்தையே மறந்து, தன்னையே எதிர்க்கிறான் என்னும் செய்தி அவரின் கோபத்தை மேலும் அதிகரித்தது. அந்த சமயத்தில் தன் வாரிசை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றும் நோக்கம் கொண்ட யக்ஷரதேவன், ஒரு தீவிர முடிவெடுத்தார். தன் வாரிசின் ராஜ்யத்தில் உள்ள ஐந்து தளபதிகளை முதலில் தன்வசப்படுத்தினார். அவர்கள் தான் இவர்கள்." அந்த அறையில் இருந்த மற்ற சிலைகளை சுட்டிக்காட்டினார். "இவர்களில் முதன்மை தளபதி தான் விவேகநாசன். அவர்கள் அனைவரையும் அழைத்து, தன் வாரிசை அவனது பிறப்பின் நோக்கத்தை மறக்கக்செய்த அந்த நபரைக் கொள்வதற்காக பணிய... தன் தேவனின் மனதை தொண்ணூறு சதவீதம் நன்றாக அறிந்திருந்ததால், மற்ற நால்வரை மட்டுமே அனுப்பிவிட்டான் விவேகநாசன். அவர்கள் நால்வரும் வெற்றிகரமாக அந்த நபரைக் கண்டறிந்து, அவருக்கு நஞ்சு புகட்டிவிட... இறுதி நிமிடத்தில் அவரை காத்துவிட்ட இருளின் வாரிசு தன் தளபதிகள் நால்வரையும் வெட்டி வீழ்த்திவிட்டு, இதற்கெல்லாம் காரணமானவர் தன்னை படைத்த இருள்தேவன் தான் என்பதையும் கண்டறிந்து யக்ஷரதேவனை சபித்துவிட்டான். அவரின் சக்திகள் நான்காகப் பிரிந்தது. அந்த நான்கு சக்திகளும் இந்த நான்கு தளபதிகளின் சரீரத்தினுள் தான் மறைந்திருக்கிறது. இவர்கள் நால்வரும் விடுதலை பெறும் தினமே யாக்ஷர தேவனுக்கும் விடுதலை."
"எனில்... இந்தச் சங்கிலி? இது எதற்கு சகோதரா?" காத்தியாயினி, சந்தேகமாக, தரையிலிருக்கும் அந்த நான்கு சிலைகளின் கால்களையும் நோக்கியபடி கேட்க, "அதுதான் சாபம். தூய மாய சக்தியாலும். இவர்கள் கீழ்தரமாக நினைக்கும் ஒரு அடிமையாலும் மட்டுமே இவர்களுக்கு விடுதலை கிடைக்கச் சாத்தியங்கள் இருக்கின்றன. தூய உள்ளம் கொண்ட ஒருவரது மாய சக்திகள் மட்டுமே இவர்கள் ஐவரையும் விடுவிக்கும். இந்த நான்கு சிலைகளில் சிறைபட்டுக் கிடப்பவர்கள் மொத்தமாக விடுதலை ஆகும் நாளில், இவர்களின் காலை கட்டியிருக்கும் சங்கிலியின் மறுமுனை, நம் விவேகநாசனின் கையிலிருந்து அவரது அடிமையின் கைக்கு இடம்மாறிவிடும். பிறகு, விடுதலை பெற்ற நால்வரும் தூய மாயங்கள் உள்ள இடத்தில் ஒருமுறை நடமாடினால், அவர்கள் சிறைப்பட்டிருந்த சிலைகளின் மூலமாக அவர்கள் நடமாடிக்கொண்டிருக்கும் இடத்தை சுற்றியிருக்கும் தூய மாயங்களை சங்கிலி மூலமாக உறிஞ்சி இழுத்துவிடும் இந்த அடிமை, அந்த சக்தியை வைத்து யக்ஷரதேவனை விடுவிக்க முடியும். ஆனால், இதிலிருக்கும் சிக்கல், நால்வரையும் ஒரே நேரத்தில் விடுவிக்க வேண்டும். அந்த அளவிற்கு எவரிடமும் சக்திகள் இல்லை" இருளரசன் நொந்துக்கொள்ள, "எனில், என்ன செய்தால் இவர்களை விடுவிக்கலாம் மாமா? அத்துடன், இதில் நானென்ன செய்ய வேண்டும்?" அடுத்ததாக இருளரசன் சொல்லப்போவதை கச்சிதமாக கணித்துவிட்டாள் சமாரா.
"நீ செய்யவேண்டியது எல்லாம் ஷேனாவை நம் திட்டத்திற்கு ஒத்துழைக்கச் செய்வது தான். அவனால் மட்டும் தான் இது முடியும்."
"ஹான்! அந்த அளவிற்கு சக்திகள் கொண்டவர் எவரும் இல்லை என்றீர்கள். இப்போது ஷேனா இருக்கிறான் என்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை மாமா."
"ஹாஹாஹா. இதுநாள் வரையில் அவனாளும் முடியாது தான். ஆனால் இருள்உலக இளவரசன் நினைத்தால் முடியும். இதற்கு முன்பாக நீங்கள் இருவரும் பார்த்த அந்த ராஜ சிம்மாசனம், இருளின் வாரிசு அமர்ந்து ஆட்சிபுரிந்த சிம்மாசனம். அது இப்போது ஷேனாவை தான் அதன் அரசனாக தேர்ந்தெடுத்துள்ளது. எனில்! இருளின் வாரிசிடம் இருந்த அதே சக்திகள் ஷேனாவிடமும் நிச்சயம் இருக்கும். அவனிடம் நாமே சென்று இத்தகைய காரியத்தை செய்யச் சொன்னால் அவன் செய்யமாட்டான். அதற்காகவே அவனை உன்வசம் வைத்து இந்தக் காரியத்தை நாம் நிகழ்த்த வேண்டுமெனச் சொல்கிறேன்."
"ஹஹ். அவ்வளவு தானே மாமா! எப்பொழுதெனச் சொல்லுங்கள். உடனடியாக காரியத்தை நிகழ்த்திக் காட்டுகிறேன்."
"இப்பொழுது இல்லை சமாரா, அதற்கு சரியான நேரமென்று ஒன்று உள்ளது. நான் சொல்லும்பொழுது இவர்களை விடுவிக்கலாம், ஆனால், ஷேனாவினுடைய வசியம் உடனடியாக நிகழவேண்டும்."
"நிச்சயம், மாமா. அவன் ஒருமுறை என் விழியை கண்டுவிட்டால் போதும். காலம் முழுவதும் அவன் என் அடிமை. ஆனால், அதென்ன மாமா இவர்களை விடுவிக்க சரியான நேரம்?"
"அது... அம்ம்ம். யக்ஷரதேவனின் நேரடி எதிரி ஒருவன் உள்ளான். ஐலோகங்களின் காப்பாளன். ஒளியின் மகன், அமிழ்த பத்ரன். ஆதிகாலத்தில் அவன் மரணம் நிகழும் தருவாயில் ஜென்மவாக்கு ஒன்றினை மேற்கொண்டான். அந்த வாக்கின்படி ஆதிகாலத்தின் காலசக்கரம் சில அறிகுறிகளால் மீண்டும் சுழலும். அந்த சமயம் மீண்டும் பிறப்பெடுப்பான் அவன். அப்படி அவன் இந்த உலகில் அல்லது வேறு ஏதேனும் உலகில் பிறந்த பின்னர் தான் யக்ஷரதேவனின் விடுதலை நிகழும் என்பது பல்லாயிரக்கணக்கான தூய ஆன்மாக்களின் கூற்று.
நிச்சயம் அவர்களின் கூற்றுபடியே தான் அனைத்தும் நிகழும். அதன்படி பார்த்தால் முதலில் நம் தேவனின் எதிரியான அந்த ரட்சகன் பிறக்கவேண்டும். அதற்கான காலத்தை உருவாக்கத்தான் நான் பல்லாயிரம் ஆண்டாக போராடி வருகிறேன். என்று ஷேனாவின் பிறப்பை குறித்து அறிந்தேனோ, அன்றே இதற்கான முழு திட்டங்களையும் வகுத்து விட்டேன். ரட்சகராஜ்ய வாரிசின் தூய சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து மொத்தமாக இவர்களை விடுதலை செய்யலாம் என்று கத்திருந்தேன். ஆனால் அவன் அன்னை, அவனது ரட்சையாக ஒரு உறவுசங்கிலியை அவன் கழுத்தில் மாட்டி என் திட்டத்தை தடுத்துவிட்டாள். பிறகு, யாகம் மூலம் பஞ்ச லோகங்களின் சமநிலையை கலைத்தேன். அந்த சமநிலை கலையும் நாளில் இரட்சகனின் பிறப்புக்கான நாள் குறிக்கப்படும் என்பதும் தூய ஆன்மாக்களின் கூற்றுதான். அதன்படி அன்று அவன் பிறப்புக்கான நாளும் குறிக்கப் பட்டிருக்கும். அத்துடன் நேற்றைய பொழுது ரட்சகனின் தோழன்.. அவனின் ராஜன்.. அந்த வெள்ளை குதிரையை வனதேசத்தில் வைத்து என் கண்ணாறக் கண்டுவிட்டேன். எனில், அந்த குதிரை இத்தனை சுதந்திரமாக வனதேசத்தில் உலாவுகிறதெனில். அவனது பிறப்பு வெகு விரைவிலேயே நிகழஉள்ளது." என்னும்போது தன் மாமாவின் முகத்திலிருந்து மகிழ்ச்சியை தெளிவாகக் கண்டாள் சமாரா.
"அப்படியா மாமா? எப்பொழுது அந்த லோகங்களின் சமநிலையை களைத்தீர்கள்? அவன் பிறபெடுக்க இன்னும் எவ்வளவு காலம் உள்ளது மாமா?"
"அது நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாகிறதம்மா. ரட்சகன் பிறப்பு அத்தனை எளிதல்ல, ஆனால் அவன் பிறக்கப்போகும் காலம் இப்போது நெருங்கிவிட்டது."
"ஆனால், இத்தனை தாமதமா? பல்லாயிரம் ஆண்டுகளாக நீங்கள் காத்திருக்கிறார்களா மாமா?"
"ஆம், சமாரா. ஆனால், அன்றே அவன் ஒப்புகொண்டிருந்தால் இவை அனைத்துமே உன் பிறப்பிற்கு முன்பே நிகழ்ந்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்தது அவன் தான். அவன் ஒருவன் மட்டும் தான்."
"யார் சகோதரா? யாரை குறித்துச் சொல்கிறீர்கள் நீங்கள்?"
"நீயும் அவனை நன்கு அறிவாய் காத்யாயினி. அவன் தான். ஷேனாவின் தந்தை. அவனிடம் என் திட்டம் பற்றி அன்றே சொன்னேன். ஆனால் அவன் என்னுடன் வர மறுத்துவிட்டான். ஹ்ம்ம். அதனால் பாவம், அன்றே மரணதேவனையும் அடைந்துவிட்டான்." என்று இருளரசன் சொல்லி வாயை மூடவில்லை. சடாரென விழுந்து நொறுங்கியது ஏதோ ஒன்று. ஓசை வந்த திசை நோக்கி திரும்பியது அங்கிருந்த மூவரின் பார்வையும். அங்கே அறையின் வாயிலில், திகில் படர்ந்த முகத்துடன் அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றிருந்தாள் ஷிவேதனா. இங்கு நடந்த அனைத்தையும் அவர் கேட்டுவிட்டதை அவர் முகமே எடுத்துச்சொல்லியது.
"ஷிவேதனா." இருளரசரின் குரல் எரிச்சலுடன் ஒலிக்க, "உன் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. என் மகன் எந்நிலையிலும் உன் செயலுக்கு துணை வரமாட்டான். அதற்கு நான் என்றும் அனுமதியேன்." உண்மையை அறிந்துகொண்ட ஷிவேதனாவின் குரல், சபதம் போல் ஒலித்தது.
"ஷிவேதனா. இன்றுவரை உன்னை கொல்லும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் இன்று நீ.... இன்று, உன் சொல்லால் அந்த எண்ணத்தை என்னுள் வர வைத்துவிட்டாய் நீ. சேவகர்களே! பிடியுங்கள் இவளை." அவரின் குரலை தொடர்ந்து தடதடவென காலடி ஓசைகள் மட்டுமே கேட்க. நொடியில் விரல் சொடுக்கிய ஷிவேதனா ஒரு நீலஒளியினுள் மறைந்துப்போனார்.
"அவள் எங்கும் தப்பியிருக்க முடியாது. இந்த இருள்மாளிகையினுள் தான் இருப்பாள். அவள் மகன் இங்கு தானே இருக்கிறான். தேடுங்கள் அவளை... இன்றே அவள் மரணிக்க வேண்டும்." இருளரசனின் குரல் கர்ஜனையாக ஒலிக்க, "மாமா, நான் செல்கிறேன். அவளை கொன்று வருகிறேன்." எனக்கூறி, மறுநொடியே அறையைவிட்டு வெளியேறி, ஷிவேதனாவை முழு வீச்சில் தேடத் தொங்கினாள் சமாரா. அவள் எங்கெங்கோ தேடி அலைந்துக் கொண்டிருந்த சமயம். திடீரென அவளை பிடித்திழுத்து அவளின் வேகநடையை தடுத்து நிறுத்தியது ஒரு வலிய கரம்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro