52. முன்னோர்களின் ஆசியா அவள்!
மின்னும் மஞ்சள் சூரியனும் ஜொலிக்கும் சிவப்பு நிலவும் ஒன்றாக அந்த வானத்தை அலங்கரித்துக் கொண்டிருக்க... இரு நிறமும் ஒன்றோடு ஒன்று மோதும் அழகிய வானத்தை அண்ணாந்துப் பார்த்தவாரு, வனதேசத்தின் நட்டநடுவே நின்றிருந்தான் ஷேனா. உலகையே வென்ற ஆனந்தம் அவன் முகத்தில். பாரமில்லா வெற்று உள்ளம் சிறகடித்துப் பறக்க விருப்பம் கொண்டதுபோல் கைகள் இரண்டினையும் விரித்துவைத்து மெல்லமாக அவன் விழிகளை மூட... அவனை பின்னிருந்து இடித்துத்தள்ளி பக்கவாட்டில் கடந்து ஓடினாள், அந்த சிவப்பு நிற அழகி.
அவள் இடித்ததில் தடுமாறி நின்றவன், தன் பார்வையை முன்னோக்கி நிமிர்த்த... முத்து கிரீடம் சூடி, முதுகு வரையில் துள்ளிக் குதிக்கும் அவளின் கூந்தலில் ஆங்காங்கே இருந்த சிவப்பு இரத்தினங்கள் எல்லாம் அவன் விழிக்குள் ஜொலித்தது. அவளோ, கலகலவென சிரித்தபடியே, சவால் விடும் பார்வையுடன் இவனை நோக்கித் திரும்பி, தன்னைத் துரத்திப் பிடிக்குமாறு அவனை விரல்நீட்டி அழைக்க... அதைகண்டு உற்சாகமாகியவன் அவளை துரத்தி ஓடினான்.
அவள் கையசைவில், பச்சை மரங்கள் யாவும் அவளை காக்கும்பொருட்டு தங்களின் கிளைகளை நீட்டி அவனை தடுக்க.. அவைகள் ஒவ்வொன்றையும் தவ்விப்பிடித்துத் தாண்டிகுதித்துக் காற்றைக் கிழித்து ஓடியவன், தன்னை முந்தி ஓடும் சிரிப்பழகியின் கரம் பற்றி இழுத்துத் தன்னோடு சேர்த்தணைத்த நேரம், மரங்களின் தயவால் மலர் மழை பொழிந்தது அங்கே.
வண்ணவண்ண மலர்கள் மேலிருந்து கீழ் கொட்ட... இவள் கீழிருந்து மேல் நோக்க... அவனோ, இவள் முகத்தை குனிந்து நோக்கி, "இல்லம் செல்லலாமா?" காற்றில் கசியும் குரலில் வினவியதற்கு சம்மதமாய் ஒரு பார்வை சிந்தினாள் அவள்.
"எவ்வழியாக செல்லலாம் அழகியே?"
"என் வழியாக செல்லலாம்." மெல்லிய காந்தக் குரலில் பதில் கொடுத்தவள், அவனே எதிர்பாரா நேரத்தில் அவன் வலது கன்னத்தில் மெல்லியதொரு முத்தமிட்டு மறுநொடியே காற்றில் கரைந்துவிட... மையாழி மரத்தின்மீது சாய்ந்து உறங்கியிருந்தவன், படக்கென உறக்கம் களைந்து திருதிருவென விழித்தபடி எழுந்தமர்ந்தான் ஷேனா.
வைரமாளிகையின் விடியல் கதிர்கள் அப்போதே வனதேசத்தின் வழியாக பரவிக்கொண்டிருந்தது. அந்த அழகிய காட்சியை முதன் முறையாக காண்கிறான் இவன். ஆனால் ரசிக்கு நிலையில் இல்லை. தான் கண்ட கனவிற்கு, என்னவென்று தன் மனதிற்கு விளக்கம் கொடுப்பதென புரியாமல், கண்களை சிமிட்டி சிமிட்டி தன் உள்ளங்கைக்குள் விடை தேடிக் கொண்டிருந்தான் அவன்.
அறிமுகமில்லா பெண்ணொருத்தி அவன் கனவினுள் நுழைவது இதுவே முதன் முறை. அதிலும், அவன் பார்வையில் அவள் அழகி. மேலும், இறுதியாக அவளளித்த முத்தம்... இப்போதும் தன் கன்னத்தில் ஒட்டியிருப்பது போன்றே ஒரு உணர்வு.
பேயரைந்தது போல் அமர்ந்திருந்தவன் 'இதுதான் அம்மா சொன்ன முன்னோர்களின் ஆசியா?' உறைந்த நிலையிலேயே தன் வலது கன்னத்தை வருடிக்கொண்டான் ஷேனா.
✨✨✨
வனதேசத்தில் இரவவை கழிக்கிறேன் என்ற பெயரில் இரு மரங்களுக்கு இடையே ஊஞ்சல் ஒன்றை கட்டி அதில் படுத்துக்கொண்டு, இரவு முழுவதும் கதை கதையாய் பேசிக் கொண்டிருந்த இளவரசிகள் இருவரும், விடிந்ததும் உடனடியாக ராஜ்யம் திரும்பிடாமல் சற்று சுற்றிவிட்டுச் செல்லலாம் என ரட்சகராஜ்ய வாயிலுக்கு எதிர்திசையில் நடந்து கொண்டிருகிறார்கள்.
"அட, நம்பு டா பாப்பா. நா நெஜமா தா சொல்லுறேன். எப்பவுமே பவுர்ணமி நாள்ல நா உக்காந்துருப்பேன்ல அந்த டவர் கட்டடம். அது பேரு கூட?? அய்யோ! அண்ணா என்னமோ சொல்லுவானே அதுக்கு?"
"காவல் ஸ்தூபியா?"
"ஹான்! ஆமா, ஆமா. சரியா அதுக்கு கீழ தா நடந்துட்டு இருந்தான் அந்த கருப்பு உருவம். கண்டிப்பா அது ஒரு பையன் தான். அவ்ளோ ஸ்ட்ராங்கு. ஒரு கால செவத்துல மிதிச்சு என் தலைக்கு மேல அப்படியே பறந்தான் தெரியுமா. யம்மாடி."
"டோன்ட் வர்ரி அம்மு. நாமளும் ஒருநாள் பறப்போம்."
"ஹாஹாஹா. டன். சீக்கிரமே பறக்க கத்துக்கலாம். சரி கேளு, அப்பறம் அப்படியே ராஜ்யத்த விட்டு வெளிய ஓடிட்டான்! அப்டினா அவன் வெளிய இருந்து வந்தவன் தானே? வெளிய இருந்து வரவங்க, நம்ம ராஜ்யத்துல இருக்குற யாரோட துனையாச்சும் இருந்தா தானே உள்ள வர முடியும்? ஆனா அவன் தனியா இருந்தான். அதா ஒரு நிமிஷம் அவன் பின்னாடி போகவா வேணாமான்னே எனக்கு தெரியல. அப்பறம், சரி போய்தான் பாப்போமேன்னு அப்போ தா நா வனதேசத்துக்கு வந்துட்டேன். கடைசியா அவன் போன எடம் ரொம்ப வித்தியாசமா., பயங்கரமா இருந்துச்சு. அதா திரும்பி வந்துட்டேன். இப்போ அங்க வெளிச்சமா இருக்கும்ல. வா இப்போ போய் பாக்கலாம்." முந்தைய இரவில் தான் கண்ட காட்சியை அச்சுபிசகாமல் ரக்ஷாவிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்த மாயாவின் உளரல் மொழிகள் சட்டெனத் தடைப்பட்டது. அவள் பார்வை ஒரு திசையை நோக்கி கூர்மையாகியது.
சகோதரி பார்க்கும் திசையிலேயே பார்த்த ரக்ஷா, "என்ன அம்மு? என்ன பாக்குற நீ?" புதர்களுக்கு இடையே தன் பார்வையால் அலச... அவள் தலையை பிடித்து நிமிர்த்திய மாயா, புதருக்கு பின்னிருக்கும் ஒரு மரத்திற்கு மத்தியில் சுட்டிக்காட்டினாள்.
"அங்க பாரு பாப்பா. தூரத்துல. யாரோ நிக்குறாங்க."
"அங்க- ஆமா, அம்மு. இந்த விடியகாலையில இங்க யாரு சுத்திட்டு கெடக்கறது?"
"பாப்பா. அண்ணன் சொன்னான்ல, இந்தப் பக்கமா தான் நம்ம எதிரி ராஜ்யம் இருக்குதுன்னு. அங்க உள்ளவங்களா?"
"ஐயையோ! அண்ணன கூப்புடுவோமா?"
"வேணாம், வேணாம். ஃபர்ஸ்ட் நாம போய் பாப்போம். சமாளிக்க முடியலனா அண்ணன கூப்புடலாம்."
"டன். வா போலாம்." என அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரின் மீது எச்சரிக்கை பார்வையை வைத்தபடி பூனை நடையிட்டு முன்னோக்கி நடந்தார்கள் இருவரும்.
அங்கே, மையாழி மரத்தடியில் வழக்கபோல தன் காலைநேர பயிற்சிகளை முடித்துக்கொண்டு அன்னையிடம் செல்வதற்காக ஷேனா தயாராகி கொண்டிருக்க, "ஓய். யாருடா நீ? வித்தியாசமா இருக்க?" என மிரட்டலாக ஒலித்த குரலால் திடுக்கிட்டு தன் பார்வையை பக்கவாட்டில் திருப்பிய நொடி, கண்ணாடியின் முன் நிற்க வைத்ததை போல் இருவேறு நிறம் கொண்ட ஆடைகளில் நிற்கும் அந்த இரட்டையர்களை கண்ட ஷேனா விழிக்கத் தொடங்கிவிட்டான்.
✨✨✨
இருளரசன், ஷிவேதனாவை சந்தித்தபின் தன் அறைக்குள் வந்து நேற்று தொடங்கிய நடைதான், இன்னுமும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
'எதுவுமே சரியாக இல்லை. அனைத்தும் கைமீறிச் செல்ல முனைகிறது. என்ன செய்வேன் இப்போது? ரட்சகனின் ஜென்ம வாக்கு நிறைவேறும் காலநிலையை உருவாக்கதானே யாகம் மேற்கொண்டேன்... இதுஎன்ன? மொத்த ஆதிகாலமுமே மீண்டும் நிகழ்வதுபோல தோன்றுகிறதே! இதில், இந்த ஷிவேதனா...... அவள் கணவனை பற்றிய உண்மையை அவள் அறிந்திடக் கூடாது. இத்தனை காலம் இருளுக்கு அஞ்சி அவள் அந்த அறையை விட்டு வெளியேறவில்லை. இனி, தைரியமாக வெளியேறிட வாய்ப்புண்டு. அவள் மெய்யை அறியும் முன் இளவரசன் என்னுடன் கரம் கோர்க்க வேண்டும். அதுவே என் தேவன்களின் விடுதலைக்கு இரட்டிப்பு வேகம் கொடுக்கும். இந்த மாய மூலிகைகளை நம்பிக்கொண்டிருந்தால் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் நான். ஹாஹ்... இவை நடக்க நான் எவ்வழியில் செல்ல? என்ன செய்வேன் நான்? அன்னையாகியவள் தான் பிள்ளைக்கு முதன்மை மாயங்களை கற்பிக்கவேண்டும். இல்லையெனில், அவன் சக்திகள் அனைத்துமே வீண். ஹஹ்ஹ். அந்த உறவுசங்கிலி. அது இருப்பதனால் என்னால் கூட அவன் சக்திகளை அபகரிக்க முடியாது. ஆஹ்ஹ்ஹ். ஷிவேதனா. நீ அவனுக்கு மாய கலைகளை கற்பிக்க மறுக்கும் பட்சத்தில் அவனை காக்கும் அந்த உறவு சங்கிலியை அவனிடமிருந்து சூழ்ச்சி கொண்டு பறிப்பதே ஒரே வழி. தாயும் மகனும் பிரியவேண்டாம் என எண்ணியிருந்தேன். என்னை அந்த முடிவினை எடுக்க வைத்திடாதே. எவ்வாறேனும் அவன் என் பக்கம் இணைய வேண்டும். அதுவே என் பலம். என்ன செய்ய? என்ன செய்ய? எதை கொடுப்பின் அவன் எனக்கு பணிவான். ஹம். அவன் தான் ஏற்கனவே என் வார்த்தைக்கு பணிகிறானே. இருப்பினும் பதவி கிட்டிய பின் மனம் மாறிடாமல் இருக்க வேண்டுமே! அவன் இன்னும் என்னை தந்தை என நினைப்பது ஒருபுறம் பலம் தான், இன்னும் என் வார்த்தைகளை மதிக்கிறான்... ஆனால், மதித்தென்ன பிரயோஜனம். முதலில் அவன் சக்திகளை உபயோகிக்கப் பழகவேண்டும். அதற்குமுன், எனது சொல்லுக்கு முழுமனதாக பணிய வேண்டும் அவன்! அவன் பதக்கத்தின் ஆதிக்கத்தை எவ்வாறு என் தேவைக்காக உபயோகிப்பது?' ஒரே குறிக்கோளுக்காக ஓராயிரம் முறை அறையை அளந்துவிட்டவர் இன்னுமும் நடந்துக்கொண்டே.... புலம்பி கொண்டே.... அருகிலிருந்த மர மேஜையின் மீது மீண்டும் மீண்டும் தன் கால்களை இடித்துக் கொண்டிருக்க... அவர் ஒவ்வொரு முறை இடிக்கும் பொழுதும் அதன் மேல் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்த அந்த தடித்த புத்தகம், 'இதற்கு மேல் என்னால் முடியாது' என்பது போல் அவர் காலடியிலேயே விழுந்துவிட்டது.
அந்த சத்தத்தில், நில்லாமல் நடந்துக் கொண்டிருந்தவரின் நடை நின்றுவிட... கீழே குனிந்து அந்தப் புத்தகத்தை கையில் எடுத்தநொடி, இவ்வளவு நேர புலம்பல்களுக்கும் சேர்த்து ஒரே நொடியில் விடை கிடைத்த ஆனந்தம் அவர் விழியில்.
"அஹ்! இதை எப்படி மறந்தேன் நான். ஹஹா.. ஷேனா! இனி நீ தப்ப முடியாது." ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்த நொடியில்தான் வேறொன்றையும் கவனித்தார் அவர். நேற்று இரவில் இருந்தே தன்னை சுற்றிலும் உள்ள பொன்னிறக் கதிர்கள் மங்கலாகவே இருக்கிறது. எனில், ஷேனா நேற்றிலிருந்து மாளிகையில் இல்லை.
'எங்கு சென்று விட்டான் இவன்? ம்ம்? அவன் செல்லும் ஒரே இடம் வனதேசம் தான். உடனடியாக அவனை சந்திக்க வேண்டும்' என நினைத்த அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டு வனதேசம் நோக்கி பயணித்திருந்தார் இருளரசன்.
✨✨✨
ஷேனா, தன் பயிற்சிக்கான ஆயுதங்களை வழக்கமாக வைக்கும் மர பொந்தினுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே தீடீரென கேட்ட மிரட்டல் குரலால் ஒருபக்கமாகத் திரும்பிநின்றுப் பார்க்க... சற்றுமுன் தன் கனவில் வந்த அதே பெண், இங்கு இரு வேறு நிற ஆடைகளை அணிந்து இரண்டாக நிற்கிறாள். அதில் அவன் குழம்பிப்போய் விழித்து கொண்டிருக்க... அவன் மீது பார்வையை பதித்திருந்தாலும் இங்கு இரு இளவரசிகளும் தங்களுக்குள்ளேயே தீவிர வாக்குவாதத்தில் இணைந்திருந்தார்கள்.
"பாப்பா, கொஞ்சம் சைலன்ட்டாவே பேசு. பாக்க இன்னசன்ட்டா இருக்கான்" ரக்ஷாவின் காதில் மாயா கிசுகிசுக்க, "அட, அது தெரிஞ்சு தானே அம்மு நானே மெரட்டீட்டு இருக்கேன். நீ சும்மா இரு. நா மெரட்டுனதுக்கு இவன் முழிக்குறது கியூட்டா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெரட்டிக்கிறேன்." மாயாவின் சொல்லுக்கு பதில் கொடுத்தவள், "ஓய். இளவரசியோட வார்த்தைக்கு மரியாத இல்லையா? சொல்லு, யாரு நீ? இங்க என்ன செஞ்சுட்டு இருக்க?" மீண்டும் ஷேனாவிடம் தன் குரலை உயர்த்தினாள் ரக்ஷா.
அதுவரையில் திருதிருவென விழித்துகொண்டு நின்றிருந்தவன், அவள் பேசும் மொழியில் இன்னும் குழம்பி நிற்க... இறுதியாக, அவள் இளவரசி என குறிப்பிட்ட பின்பே முழுமையாக அவ்விருவரையும் நோக்கித் திரும்பினான்.
"இளவரசியா? நீங்கள் இளவரசிகளா?" மெல்லிய புன்னகையுடனேயே அவ்விருவரையும் ஷேனா நோக்க, "ஆம்! நான் இளவரசி மாயா. இவள், என் சகோதரி ரக்ஷா. எம் கழுத்திலிருக்கும் இந்த பதக்கத்தை கண்டுமா இப்படி கேட்கிறாய்?" ஷேனாவிற்கு ஒருபுறம் பதில் கொடுத்த மாயா, "பாப்பா.. இவன் என்ன டா பழைய ஸ்லாங்ல பேசுறான்? கண்டிப்பா எதிரி ராஜ்யம் தா. அவங்களுக்கு மட்டும் தா பூமியோட லிங்க் இல்ல. பேசாம அண்ணன கூப்டலாம்?" ரக்ஷாவிடம் முணுமுணுக்க, "அதா நானும் யோசிக்கிறேன், அம்மு. ஃபர்ஸ்ட் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்." சகோதரிக்கு பதில் கொடுக்கும் போதே, "உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ள என்னிடம் எதற்காய் கேள்வியை கேட்டீர்கள்?" என குரல் கொடுத்த ஷேனாவின் பார்வை, ஜொலிக்கும் இரு பதக்கங்களை ரசித்துக் கொண்டிருந்தது.
"அதையெல்லாம் நீ கேட்கக்கூடாது. முதலில் எங்கள் கேள்விக்கு பதில் கொடு. யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?" ரக்ஷா மீண்டும் குரலுயர்த்த... மெல்லிய புன்னகையை வீசியவன், "ஹம்? என் பதக்கத்தை கண்டுமா இக்கேள்வி? நான் நிழல்தேசத்து இளவரசன். ஷேனா." அவர்கள் தோரணையிலேயே பதில் கொடுத்தவன், அடுத்த சம்பவத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. இளவரசிகள் இருவரின் கரங்களிலிருந்து வந்த வைர வாள், நொடியில் அவன் கழுத்தை கத்தரிக்கோள் போல சிறை வைத்திருந்தது.
சுதாரித்த ஷேனா, உடனடியாக பின்னோக்கி வளைந்து தரையில் உருண்டுத் தன் புதிய மரகத வாளை மரப் பொந்தினுள் இருந்து உருவியெடுத்து அவ்விருவரையும் ஒரே வீச்சில் தாக்க முனைய... ஆனால், அடுத்த நொடியே அந்த சிந்தனையை கைவிட்டான். இளவரசிகளின் கண்ணில் கண்ட சிறு பயத்தால்.
நக்கலாக தனக்குள் சிரித்துக் கொண்டவன், அவர்கள் ஏனோ தன்னை கண்டு பயப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்களிடம் சற்று விளையாடும் நோக்கில், தன் வாளைக் கொண்டு இருவரின் வாளையும் ஒரு நேரத்தில் இடிக்க... அவன் ஒருவனுக்கு நிகராக இருந்தது இரு இளவரசிகளின் வலிமை.
"எக்காரணத்திற்காக இவ்விடம் வரவளித்தாய்? மரியாதையாக உன் திட்டத்தை சொல்லிவிடு. எந்த ராஜ்யத்தின் மீது தாக்குதலை தொடுக்க வனதேசத்தில் அலைந்துக் கொண்டிருங்கிறாய்?" ரக்ஷாவுடன் சேர்ந்து மாயாவின் குரலும் இப்போது பயம்கொள்ள... எவரும் எதிர்பாரா நேரத்தில் எங்கோ இருந்து சீறி வந்த வீரா, சத்தமாக கனைத்தபடி தன் முன்னங்கால்கள் இரண்டாலும் ஷேனாவின் நெஞ்சில் உதைத்து அவனை கீழே தள்ளிவிட்டான். ஷேனாவின் கையிலிருந்த வாளும் தூரமாகச் சென்று விழுந்தது.
அவன் மண்ணிலிருந்து எழ முனைய... இரு புறமும் வேலியாக வந்து தடுத்தது இரு வைர வாள்கள். "என்னிடம் மோத துணியாதீர்கள் இளவரசிகளே! மரியாதையாக உங்கள் செயலுக்கு மன்னிப்பை வேண்டுங்கள்." வீரா செய்த காரியத்தால் லேசாக கோபம் கொண்ட ஷேனாவின் குரல் எச்சரிக்கையாக ஒலிக்க... அவன் சொல்லிய சொல்லானது மாயாவினுள் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தைத் தட்டியெழுப்பி விட்டது.
"மன்னிப்பா? இந்த வனதேசம், எம் கோட்டை. எம் ராஜாங்கம். இங்கு தலை வணங்க வேண்டியவன் நீயே தான் நிழல் தேசத்து இளவரசனே." அவள் கண்ணில் கோபம் எரிய, "ஹ்ம்ம். தாயை தவிர வேறு எவரின் முன்பும் என் தலை பணியாது... ரட்சக ராஜ்ய இளவரசியே." அவன் கண்ணிலோ திமிர் தலைக்கேறி இருந்தது. இதனிடையில் மெதுவாக அங்கிருந்து நழுவிய ரக்ஷா, நொடியை கடத்தாமல் அபிக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
"என்ன துணிச்சல் உனக்கு? என் வார்த்தையையே அவமதிப்பாயா நீ? எவ்வளவு தைரியம்?"
"ஹம். உனக்கிருப்பதை காட்டிலும் ஒரு பங்கு அதிகமே."
"நிராயுதபாணியாக இருப்பினும் என்ன ஆணவம் உனக்கு?"
"அதில் எமக்கு பெருமையே இளவரசியாரே. ஆயுதமின்றியும் உங்களிடம் இன்னும் பணியவில்லையே நான்!"
"நீ அதிகம் பேசுகிறாய், ஷேனா."
"ஹாஹ். உம்மை விடவா? .. மாயா!"
"நான் இளவரசி. பெயரைச் சொல்லி என்னை அழைக்காதே."
"அதே போல். நானும் இளவரசனே. பெயரிட்டு அழைக்காதே."
"ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்." வார்த்தைக்கு வார்த்தை வீம்பாக பேசுபவனை எவ்வாறு சமாளிப்பதென தெரியாமல் அவள் தலைமுடியை பிடித்துக்கொள்ள.... தரையிலிருந்து தவ்வி எழுந்து நின்றவன், "கோபம்... குலத்தை கெடுக்குமாம். என் அம்மா சொல்வார். கோபத்தை குறையுங்கள் இளவரசியே" என, நொடி நேர இடைவெளியில், வாள் இருக்கும் இடத்தை தேடிப்பிடித்தவன் ஒரே தாவலில் அதை தன் கையில் எடுத்திருக்க... "எ.து.வு.ம்.பே.சா.தே." அவன் சொல்லால் பல்லைக்கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள் மாயா.
ஷேனா, மீண்டும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டதை கண்டு அவள் சுதாரிக்கும் முன், "பாப்பா... தள்ளிப்போ." அபியின் அவசரக்குரல் அவளை அடைய... அண்ணனின் கர்ஜனையைத் தொடர்ந்து சில மினிமினுப்பான வெள்ளை துகள்கள் தன்னை கடந்து ஷேனாவை நோக்கி பறப்பதை கண்ட மாயா, குனிந்து கொண்டாள்.
ஒன்றும் புரியாமல் ஷேனா குழம்பிக் கொண்டிருந்த நொடி.. அந்த துகள்கள் அவனை அடையும் முன்பாகவே ஒரு வெண்ணிற மாயவாயிலால் சடக்கென உள்ளுக்குள் இழுக்கப்பட்டான் அவன். அக்காட்சியை கண்டு இளவரசிகள் முதற்கொண்டு மூவரும் விழி விரிக்க, "ஆஹ்ஹ்ஹ்ஹ். இந்த மகாராணிக்கு அறிவே இல்ல. இவன போய் எதுக்காக காப்பாத்துனாங்க." அபியை பிடித்துக் கத்த தொடங்கிவிட்டாள் மாயா.
அதே நேரத்தில், ஷேனாவை காண அவ்விடம் வந்திருந்த இருளரசன் இக்காட்சிகள் அனைத்தையும் கண்டிருக்க.. மாயாவையும் ரக்ஷாவையும் அதிர்ந்துப்போய் நோக்கியவர், சத்தமெழுப்பாமல் வந்த வழியே சென்று விட்டார்.
✨✨✨
நேற்றைய தினம், ஷேனாவை மாய சக்திகளுக்கு பழக்கும்படி இருளரசன் சொல்லிவிட்டு சென்றதிலிருந்து ஷிவேதனாவின் மனதில் ஒரேயொரு சிந்தனைதான். தன் மகனை மாயங்களுக்கு பழக்கப் படுத்தினால் அவனறியாமலே பெரும் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது... மேலும், அதன்பிறகு இருளரசனுக்கு தன் தேவை இருக்காதென தன்னை கொல்லவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, எப்படியேனும் தன் கணவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவருடன் தன் மகனையும் அழைத்துக் கொண்டு எங்கேனும் சென்றுவிடலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால், இருளரசனின் பார்வையில் அகப்படாமல் எங்கு செல்ல? எப்படி செல்ல என்பது தான் இன்னுமும் யோசனையாகவே இருந்தது.
அவர் சிந்தனையிலேயே உழன்று கொண்டிருக்க... வனதேசத்தில் ஷேனாவை உள்ளிழுத்த வெண்ணிற மாயவாயில், அவனை சரியாக ஷிவேதனாவின் அறை வாயிலிலேயே விடுவித்திருந்தது.
அவனுக்கு, நோடிக்கணக்கில் நிகழ்ந்த நிகழ்வால் ஒன்றும் புரியாமல் விழித்தபடியே அறைக்குள் நுழைய... மகனை கண்டதில் அன்னைக்கும், அன்னையை கண்டதில் மகனுக்கும், இதுவரையில் இருந்த யோசனை முழுவதுமாக மறைந்து போனது. "அம்மா." வேகமாக வந்து அன்னையை அணைத்துகொள்ள... பதிலுக்கு அவனை அணைத்துக் கொண்டாள் ஷிவேதனா.
"ஷேனா, எப்படி இருந்தது உன் இரவு பொழுது? முன்னோர்களின் ஆசி கிடைத்ததா?" அன்னை ஆர்வமாக கேட்டதில் சற்று சிந்தித்தவன், "அம்மா? அது எப்படியம்மா அவர்கள் ஆசி வழங்குவார்கள்? முதலில் அவர்கள் பார்பதற்கு எப்படி இருப்பார்கள்? நான் யாரையுமே காணவில்லையே?" குழப்பமாக கேட்க... மகனின் கேள்வியால் பலமாக சிரித்துவிட்டார் ஷிவேதனா.
"அட, என் புத்திசாலி மகனே! முன்னோர்கள் எவரும் நேரில் வர மாட்டார்கள். அவர்கள் அனைவரும் இயற்கையுடன் கலந்திருப்பார்கள். அதனால், ஏதேனும் சமிங்கை மூலமோ, இயற்கை மூலமோ, அல்லது கனவு மூலம் கூட உனக்கு ஆசி வழங்கலாம்."
"ஆஹ்! எனில் அந்த பெண் தான் அவர்கள் வழங்கிய ஆசி அம்மா!" யோசனையுடன் சொல்லிக்கொண்டே அன்னையருகில் இருந்து எழுந்தவன், நீராடச் செல்வதற்காக ஆடைகளை எடுக்கத் தொடங்கிட, "பெண்ணா? எந்த பெண்? ஷேனா......" குழப்பத்துடன் அவன் நிற்கும் திசையை கண்டவர், இறுதியாகக் குறும்புடன் அவனை பார்க்க.. ஒரு பெட்டியை திறந்து உள்ளிருக்கும் ஆடைகளை கலைத்துப் போட்டபடி, "அவள் தான், அம்மா. இன்று விடியலில் என் கனவில் வந்த பெண். நேரிலும் அவள் வந்தாள். ஆனால் நேரில் அவள் மோசம்." முகத்தை கடுமையாக வைத்துக்கொள்ள, "ஹான்! எனில் கனவில்? அதில் எப்படி இருந்தாள் அப்பெண்?" தன்னை காணாமல் நின்றிருக்கும் மகனை நோக்கி நக்கலாக புருவமுயர்த்தினார் ஷிவேதனா.
"அதில்... அவள் அழகாக இருந்தாள் அம்மா."
"ஹான். என்ன?"
"ஆம், அம்மா! கனவில் மிகவும் அழகாக இருந்தாள்." தேவையான உடையை எடுத்து கீழே போட்டுவிட்டு மற்றவைகளை பெட்டிக்குள் திணித்துக் கொண்டே, "ஆனால் நேரில் திமிர் பிடித்தவள்" இறுதியாக தனக்குள்ளேயே முணங்கிக்கொண்டான். மகனின் முணங்கள் தாய்க்கு தெளிவாகவே கேட்டுவிட்டது.
"ஹாஹாஹா. கனவிலேயே வருகிறாள் எனில்... உன் காதலியா, ஷேனா?" ஷிவேதனா, தன் மகனிடம் கேலியாக கேட்க, "அப்படியென்றால் யார்?", சலிப்புடன் மருவினா கேட்டான்.
"என்ன ஷேனா.. உன் மனைவி ஆகப் போகிறவள் தான்"
"மனைவியா?" என ஒரு கணம் சிந்தித்தவனது விழிகள், நொடியில் விரிந்தது. "அம்மா! மனைவி எனில்? உங்களை என்னிடமிருந்து பங்குபோட வருபவள் என சிறுவயதில் சொல்வீர்களே! அவளா?" என அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு வாயைப்பிழந்தபடி விறுவிறுவென அன்னையருகில் வந்தமர்ந்து அவர் கரம் பற்றி கேட்க... ஷிவேதனாவோ கலகலவென சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
"ம்ச். அம்மா சிரிக்காதீர்கள். உறவுசங்கிலியை என்னிடம் கொடுக்கும்போது அவ்வாறு தானே கூறினீர்கள்? எனக்கு மனைவி, என் உறவு சங்கிலியையும் உங்களையும் என்னிடமிருந்து பங்கு போட்டுக் கொள்வாள் என-" சிணுங்கியபடியே தன் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை வருடிய நொடியே அவன் முகம் அதிர்ச்சியில் விரிந்தது. படக்கென குனிந்து அவன் கழுத்தை நோக்க. அவன் உறவுசங்கிலி அவனது கழுத்தில் இல்லை.
✨✨✨
அபியும் ரக்ஷாவும் ரட்சகராஜ்ய வாயிலினுள் நுழைந்து, முன்னால் நடந்துக் கொண்டிருக்க.... வீராவை இழுத்துக்கொண்டு, அவர்களை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த மாயாவின் முகமோ, எண்ணெய் சட்டியினுள் ஈரமான கரண்டியை விட்டதுபோல் புகைந்துக் கொண்டிருந்தது.
"அம்மு. உன் அம்முவுக்கு என்னாச்சு இப்போ? ஏன் இப்டி வாரா?" ரக்ஷாவின் தோளில் கை போட்டபடியே நடந்துக் கொண்டிருந்த அபி, லேசாக பின்பக்கம் திரும்பி நோக்கிவிட்டு திகிலுடன் கேட்க... பதிலுக்குத் தானும் பின்னோக்கித் திரும்பிப்பார்த்த ரக்ஷா, ஒரு நக்கல் சிரிப்புடன், "அண்ணா... நம்ம சயனா அத்தைய எங்கேயோ அனுப்புனதுக்கே அவளுக்கு இன்னும் மகாராணிமேல கோபம் கொறையல... இப்போ, அவள மன்னிப்பு கேக்க சொன்ன ஒருத்தன மாயவாயில் வைச்சு காப்பாத்திருக்காங்க... அதோட விபரீத வெளிப்பாடு தான் இது." என வாய்க்குள் சிரித்துக் கொண்டாள்.
"அதா ஏன்னே புரியல... அவன எதுக்கு காப்பாத்துனாங்க? அவன் எப்டியும் நம்ம எதிரி ராஜ்ய இளவரசன். அப்டி பாத்தா அவன நம்ம காவல் ஸ்தூபில தானே புடிச்சு போட்டுருக்கணும்? ஹ்ம்ம்?" என மீண்டும் பின்னால் திரும்பிய அபி, "அவ கிட்ட போய் பேசுவோமே? மூஞ்சிய பாரு... எப்டி எரிஞ்சுட்டு இருக்குன்னு." என சொல்லிய நொடி, அண்ணனை திகில் பார்வையில் நோக்கினாள் ரக்ஷா.
"ஆத்தி. இப்ப மட்டும் அவ கிட்ட நீ வாய குடுத்த... அவ்ளோ தா. இருக்குற காண்டுல எல்லாத்தையும் உன் காதுல கொட்டுவா. அப்பறம் உன் காது பஞ்சர் ஆயிடும் டா அண்ணா. அவன திட்ட வேண்டிய எல்லாத்தையும் உன்ன திட்டி தீத்துப்பா. சோ, இப்போ நீ என்ன பண்ணுறனா.... இப்படியே போனா நம்ம தெரு வரும்ல? அந்த சந்து வரவும் நைஸா நழுவி ஓடிறு. அவள நா பாத்து பத்தரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ கிளம்பிரு டா அண்ணா."
"அப்ப! நா இந்த எடத்துல இருக்கக்கூடாது. அப்டி தானே?"
"ஹாஹா. அப்படியே தா"
"ஆனா, நீ தனியா சமாலிச்சுப்பியா அம்மு?"
"அதெல்லாம் அசால்ட்டா டீல் பண்ணிறுவேன். நீ ஓடு."
"ரைட்டு." என பின்னால் திரும்பியவன், "பாப்பா... எனக்கு வீட்டுல ஒரு சின்ன வேல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் வீராவ விட்டுட்டு வந்துருங்க. பை பை." தூரத்தில் இருக்கும் மாயாவை நோக்கிக் கத்தியவன், அவள் பதிலுக்கு காத்திராமல் அந்த சந்தினுள் வளைந்து வேகமாக நகர்ந்து விட்டான். மாயாவும், சம்பந்தம் இல்லாத யார் யாரையோ மானசீகமா திட்டிக் கொண்டிருந்ததால் தன் அண்ணன் தன் பதிலை எதிர்பார்க்காமல் ஓடியது எல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அண்ணன் சென்றதும் அமைதியாக வந்து சகோதரி உடன் இணைந்துக் கொண்டாள் ரக்ஷா. அவர்களின் பயணம் மௌனத்திலேயே கடக்க... ரத்ன மாளிகையில் இருக்கும் விலங்களுக்கான லாயத்தை சில நிமிடங்களிலேயே அடைந்துவிட்டார்கள் இளவரசிகள்.
மாயா, வீராவை அவனுக்கான இடத்தில் கட்டிக் கொண்டிருக்க... அருகே ஒரு திண்டில் சாய்ந்துகொண்ட ரக்ஷா, "அம்மு, அந்த இன்னசன்ட் பையன் பாவம்ல. வீரா அவன ஓங்கி ஒதச்சுட்டான்ல." என பரிதாப குரலில் கேட்க... அவ்வளவு தான். மாயா மலையேறி விட்டாள்.
"பாப்பா.. அவனா இன்னசன்ட்டு? ஹான்? அவனப் பாத்தா அப்டி சொல்லுற நீ? அவன் பக்கா கிரிமினல். நிழல்தேசத்து இளவரசனாச்சே, வேற எப்டி இருப்பான்? அடேய் வீரா. நீ ஏன்டா அவன ஒரு மிதியோட விட்ட... அவன நீ இன்னும் நல்லா ஒதச்சு இருக்கணுமா இல்லையா?" தன்போக்கில் நின்றிருந்த வீராவின் முதுகில் சுரீரென ஒரு அடியைப் போட... கணைத்துகொண்டே அவளிடம் இருந்து விலகி ஓடினான் வீரா. அப்போதே அவன் காலில் ஏதோ மின்னுவதை பார்த்தாள் மாயா.
"சரி பாப்பா. நீ வீட்டுக்கு போ நான் ஒரு வேலையா ரத்ன மாளிகை போயிட்டு வாரேன்."
"ஹான்! தனியா எங்க போற அம்மு? என்ன விட்டுட்டு எப்டி நீ மட்டும் போகலாம்?"
"அட, இல்ல பாப்பா. ஆயுத கிடங்குக்கு போகணும். உனக்கு தா அங்க வர புடிக்காதே. சத்தமா இருக்கும்ன்னு சொல்லுவியே? அதா நா மட்டும் போறேன்னு சொல்லுறேன்.
"ஓஹோ! சரி, சரி. சீக்கிரம் போய்ட்டு வீட்டுக்கு வா. எனக்கு தூக்கம் தூக்கமா வருது." கொட்டாவி விட்டுக்கொண்டே, "மகாராணி செஞ்சத பத்தி ரொம்ப யோசிக்காத. எதாச்சும் ரீசன் இருக்கும். சரியா? ஃப்ரீயா விடு." என சொல்லிய ரக்ஷா, சகோதரியிடம் இருந்து கிடைத்த சமாதான பார்வையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றாள். அவள் தலை மறைந்ததும், வீராவுக்குப் புல் கட்டுகளை எடுத்துப் போட்டுவிட்டு ரத்ன மாளிகையை நோக்கிச் சென்றாள் மாயா.
✨✨✨
வனதேசத்திலிருந்து வந்தது முதல் யாருமில்லா அறையில் சுற்றிதிரியும் காற்றிடம், தான் பார்த்தக் காட்சிகளை எல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பலாக புலம்பித் தள்ளியவர் இப்போது தான் உருப்படியாக அமர்ந்து யாருக்கோ மடல் வரைந்து கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் அந்த ஒற்றை மடலை எழுதி முடித்தவர், "சேவகனே!" வழக்கம்போல் வெற்றிடத்தை நோக்கி குரல் கொடுக்க... குரலுக்கு பதில் கொடுப்பார் எவரும் இல்லை எனினும், தான் எழுதிய மடலை காற்றில் நீட்டியதும் அதை பற்றிக் கொண்டது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று.
"அனாலி பர்வதம் செல். அதன் மையத்தில் உள்ள முத்து மாளிகையில் இருப்பாள் என் தங்கை காத்யாயினி. அவளிடம் சேர்த்து விடு இம்மடலை." தனக்கென இருக்கும் தனியொரு குரலில், அதிகாரமாய் அவரிட்ட கட்டளையானது ஏற்கப்பட்டது போல், வாயில் வழியாக காற்றில் வெளியேறியது அம்மடல்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro