5. இரட்டை தேவதைகள்
ஆளில்லா ஒரு வெற்றிடத்தில், நட்டநடுவே ஷேனா பயத்துடன் நின்றிருக்க... காத்யாயினியும் இருளரசனும் அவனுக்கு நேரெதிரே நின்றிருந்தார்கள். இருளரசனின் கையில் இருந்த ஒரு கோளிலிருந்து வெளிவந்த ஒரு விசை, நேராக சென்று ஷேனாவின் சரீரத்தில் பாய.... அவன் உயிரில் கலந்திருக்கும் சக்திகள் அவனைவிட்டு வெகு விரைவாக பிரிந்துசெல்லும் வலி ஷேனாவின் உடலெல்லாம் பரவியது.
ஷேனா, மாய சக்திகளை கையாழ்வதற்கு இயற்கையால் தேர்ந்தெடுக்கப் படாதவன் என்றாலும் அவன் தாய்-தந்தை இருவருமே மாயங்களை கையாழ்பவர்கள்.. இருவேறு ராஜ்யத்தின் இருவேறு மாயசக்திகளின் மகனாகிய இவன் உயிரில் கலந்திருக்கும் சக்தி, ஆதிலோகத்தில் இருக்கும் யாரைவிடவும் மிகப்பெரிய சக்திதான். ஏதோ காரணத்தினால் இவன் சக்தியைக் குறித்து இவன் தாய்க்கே தெரியவில்லை என நினைத்துக்கொண்ட இருளரசன், ஷேனாவை முதல்முறை பார்த்ததிலிருந்தே அவன் சக்திகள் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டுமென்னும் ஆசையை வளர்த்துக்கொண்டார். இவன் சக்தியை முதல் முறையாக உபயோகித்தது, ராணாவை உருவாக்கதான். இப்போதும், அதேபோல் ஏதோ ஒரு காரியத்திற்காக ஷேனாவின் சக்திகளை திருடிக்கொண்டிருக்கிறார்.
உயிரைப்பறிக்கும் வலி இருந்தும் அவன் கத்தவில்லை... கத்தினால் இருளரசனின் விசை இன்னும் வேகமெடுக்குமே!.. முதலில் கொஞ்சமாக ஆரம்பித்த வலி மெல்ல மெல்ல அதிகரிக்க... சிறுவனால் தாங்கும் அளவை காட்டிலும் இருமடங்கு அதிகரித்த சமயம், இதற்குமேல் தாங்க முடியாமல் அலறினான் அவன். வெறும் சக்திக்காகவே இவனையும் இவன் அன்னையையும் சிறை வைத்திருக்கும் இந்த மூர்க்கனின் கல்-நெஞ்சத்திற்கு சிறுவனின் கதறல்கள் எங்கே எட்டப் போகிறது... இவன் குரலைக் கேட்டு ஷிவேதனா இவ்விடம் வந்துவிடுவாளோ என்னும் எண்ணம் மட்டுமே அவர் மனதினுள். அதன் காரணமாகவே, அவன் அலற ஆரம்பித்தால் விசையை அதிகமாக்கி அவனை விரைவில் மயக்கத்தில் ஆழ்த்திடுவார் இவர்.
"என்ன ஷேனா இது... இந்த சிறு வலியைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டாயா?,.. கூச்சலிடாதே...", ஷேனாவை மிரட்டியவர் விசையை அதிகரிக்க... இரு நொடியில் விசையும் தானாக தடைபட்டது... மயங்கி மண்ணில் சரிந்தான் ஷேனா .
ஷேனாவின் அதிசக்திகள் அடங்கிய அந்த கோளை, பேராசை குடிகொண்ட பார்வையில் அண்ணன்-தங்கை இருவரும் பார்த்திருக்க..., "ரட்சகராஜ்ய வாரிசு நம்மிடத்தில் பிறப்பது இனி எக்காலத்திலும் நடவாது காத்தியாயினி... என்ன நேர்ந்தாலும் சரி... இந்த ஷேனா நம் ராஜ்யத்தை விட்டு எங்கும் சென்றிடக் கூடாது.. அவன் சக்திகளே எம்மை மூலோகங்களுக்கும் அரசனாக்கப் போகிறது.", அவர் பார்வையில் வெறி கூடிட, "அதற்கு அவன் அன்னையை சிறைபிடித்ததே போதும் சகோதரா... அவன் எங்கும் செல்ல மாட்டான்... அவள் இவ்விடம் இருக்கும் வரையில் இவனும் இங்குதான் இருந்தாக வேண்டும். ஹாஹாஹா...", அண்ணனின் பார்வையை போன்றே தங்கையின் பார்வையும், கோளினுள் இருக்கும் ஷேனாவின் சக்திகள் மீது பதிந்திருந்தது.
"சரி சகோதரா.. இப்போது இவனை என்ன செய்வது?", மண்ணில் கிடக்கும் ஷேனாவை கண்ணால் காட்டி வினவ, "ஹ்ம்.. அப்படியே விட்டு வா.. அவனே எழுந்து செல்வான் அவன் அன்னையிடம்...", எந்தவித உணர்வும் இல்லாமல் எப்போதும் போல ஷேனாவை ஆதரவின்றி விட்டுச்சென்றார் இருளரசன்.
மயக்கத்திலும் வலி அவனை ஆட்கொள்ள... கத்தி அழவும் முடியாமல்... எழுந்து நிற்க வழியும் இல்லாமல்... தூக்கிவிட ஒரு கரமும் கிடைக்காமல் நிர்கதியாய் ஷேனா மண்ணில் விழுந்திருந்த அதே சமயம், ஆதிலோகத்தின் மறுமுனையில்.. ரட்சக மஹா சாம்ராஜ்யத்தில்.. வைர மாளிகையின் வைரத்தின் அந்தி பொழுதிற்கான மங்கிய ஒளிக்கீற்று அவள் மேனி தீண்டிட... அதீத வலியில் அலறிக் கொண்டிருந்தாள் சத்யபாமா.
அன்னையை அதிகம் சோதிக்காமல், தன் வரலாறை ஆதிலோக சரித்திரத்தில் ஒரு பாகமாக பதிக்க.. வான்னோக்கி தன் தளிர் கரங்களை கம்பீரமாக நீட்டிக்கொண்டு அழுகுரலோடு பிறப்பெடுத்தது அந்த பிஞ்சு.
அவள் பெருமூச்சு விட..., "மகள் பிறந்துள்ளாள் தேவி..", என்ற செவிலி பெண்ணின் வார்த்தை ஓயவில்லை, மீண்டும் அவள் அடிவயிற்றில் உயிர்போகும் வலி.. தன் உடனிருந்தவளை காணாது இரண்டே நிமிடத்தில் பிரசவித்தாள் இரண்டாமவள்.
செய்தி அவ்வறையை விட்டு வெளியே செல்ல.. சில நிமிடங்கள் கடந்ததும், இரு மழலைகளின் தந்தையான சத்யஜித், அறைக்குள் வந்து கண்ணில் கண்ணீருடன் தன் மகள்களை கையில் ஏந்தினார். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, இரு புது வரவுகளின் அத்தைமார்கள் இருவரும் சத்யஜித்தின் கையிலிருக்கும் குழந்தைகளை ஆளுக்கு ஒருவராக தூக்கிக்கொள்ள, அவரின் மூத்த மகன் அபிஜித்தும் மூத்த சகோதரி ரோஹினியின் இரண்டு மகள்கள், ராகவி மற்றும் சங்கவியும் புதிய குழந்தைகளை எட்டிக்கொண்டு பார்த்தார்கள். அணைத்து முகங்களையும் குறுகுருவென பார்க்க தொடங்கினார்கள் இரு குட்டி மழலைகளும்.
✨✨✨
இருளரசன், தன் மாயங்களை உறிஞ்சியதும் மயங்கியிருந்த ஷேனா, கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்து மயக்கம் தெளிந்து எழுந்தான். எழுந்தவன் உடலில், சக்திகளை இழந்தனால் ஏற்பட்ட வலிகள் எல்லாம் மறைந்திருக்க... சமாரா ஏற்படுத்திய காயம்தான் ஆதீத எரிச்சலை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
இது அவனுக்கு பழகிப்போன ஒரு விஷயம் தான். இருளரசன் மூலமோ.. இல்லை, இப்போது புதிதாக சமாராவின் மூலமோ.. இருவரிடமும் அவன் அனுபவிப்பது வலி ஒன்றே. அந்த வலியானது தன் அன்னை முகம் கண்ட நொடியே அவர் அன்பில் கரைந்து போகும் என்பதால், காயம்பட்ட தன் கையை உதறிக்கொண்டே அன்னையை நாடி ஆர்வமாக சென்றான் அவன். ஆனால் அவனுக்கு அங்கு காத்திருந்ததோ அன்னையின் வெற்று அறையே.
எப்போதும் தன் வரவை எதிர்பார்த்தே கத்திருப்பவளை காணாமல் ஷேனாவின் முகம் சுருங்கிட... அறை முழுவதும் அன்னையைத் தேடி சோர்ந்தவனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. "அம்மா.. அம்மா..", எனத் தேம்பி அழுதவன், அழுகையுடன் வெளியே சென்று அன்னையைத் தேடத் தொடங்கினான்.
அதேநேரம் ஷிவேதனாவை கைபிடித்து அழைத்துச் சென்ற ராணா, இருளரசன் அவனுக்கென கொடுத்திருக்கும் இடத்திற்கே அவளை அழைத்து வந்துவிட்டான். அது, அதே அரை தான். ஷேனாவின் சக்திகளை கொண்டு அவனை உருவாக்கிய அதே அறை. மற்ற இடங்களை போலவே இருள் ஆட்சி செய்யும் ஒரு வெட்டவெளி அது.. நான்கு பக்கமும் பத்தடிக்கு சுவர் எழும்பி நிற்க... ஒரு அறைக்குத் தேவையான அணைத்து பொருட்களும் அங்கே இருந்தது. ஆனால் ஒரே ஒரு குறை தான்.. அறையின் மேற்கூரை மட்டும் திறந்த நிலையிலேயே தான் இருந்தது. அங்கே, அறைக்கதவில் இருந்து சில அடி தூரத்தில் அகழி போல் ஒரு நீர்நிலை இருக்க... அதன் மையத்தில் மேடையிட்டு ஒரு மெத்தை போடப்பட்டிருந்தது.
அதனை நோக்கியே ஷிவேதனாவை அழைத்துச் சென்ற ராணா, அந்த நீருக்குள் இறங்கிக் கொண்டு ஷிவேதனாவையும் இறங்கச்செய்ய... அவளின் கால், நீரைத் தொடப்போன நொடி வெடுக்கென அன்னையின் கையை ராணாவின் பிடியிலிருந்து விடுவித்தான் ஷேனா. இன்னுமும் ஷிவேதனாவின் விழிகள் கறுமை படர்ந்தே இருக்க... அன்னையின் விழியை நிமிர்ந்து நோக்கியவன் தன் இதழ்களைச் சுருக்கி இன்னும் அதிகமாக பொறுமினான்.
"என் அம்மாவை ஏன் அழைத்து வந்தாய்?", அழுகையுடன் ராணாவை நோக்கி கத்திய ஷேனா, கண்ணீருடன், தன் அன்னையை அழைத்துச்செல்ல... ஷேனாவையே ஏக்கமாய் பார்த்திருந்தான் ராணா.
சிறிதுதூரம் சென்ற பின்பு ஷிவேதனாவின் கண்கள் சகஜ நிலைக்குத் திரும்பிட.. இப்போது, பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.. சுற்றிலும் இருள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய.. யாரோ தன் கரம்பிடித்து முன்னோக்கி அழைத்துச் செல்வதை மட்டுமே முதலில் உணர்ந்தவள், சில நொடிகள் கழித்தே அது ஷேனா என்பதை உணர்ந்தாள்.
"ஷேனா... இது எந்த இடம்... இங்கு ஏன் என்னை அழைத்து வந்தாய்? நாம் எப்படி இங்கு வந்தோம்??", என்ற ஷிவேதனாவுக்கு அவனின் விசும்பல் ஒலியே பதிலாக வந்தது.
"ஷேனா.. அழுகின்றாயா??.. என்னானது கண்ணா... ஏன் அழுகிறாய்?", தாயுள்ளம் பதற.. ஷேனா மௌனமாகவே, தான் செல்லும் பாதையில் கவனத்தை பதித்திருந்தான். இடையிடையே அவன் விசும்பல்கள் மட்டும் ஷிவேதனாவின் செவியைத் தீண்டிவர.. அவன் பதிலளிக்காமல் இருப்பது அவளை மேலும் பதறச் செய்தது.
சிறிது தூரம் நடந்ததிலேயே ஒளி சூழ்ந்த அந்த அறையும் வந்துவிட... அப்போது தான் அவளால் காணமுடிந்தது, ஷேனாவின் அழுது சிவந்த முகத்தை. அறைக்குள் நுழைந்த ஷேனா, கண்ணீர் ததும்பிடும் கண்களுடன் அன்னையின் கரத்தை விடுவித்து அவளை நிமிர்ந்து நோக்க. அவனுக்கு சமமாக அமர்ந்தவள், மகனின் கன்னத்தை பிடித்துக்கொண்டு, "என்னானது கண்ணா...?" மென்மையாக கேட்ட மறுகணமே தன் கன்னத்தில் பதிந்திருக்கும் அன்னையின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழத் தொடங்கிவிட்டான்.
"ஷேனா... அழாதே கண்ணா.. என்னானது?... சொல்... அம்மாவிடம் சொல்.. ஏன் அழுகின்றாய்?...", அதற்கும் அழுகையே.. முதல் முறையாக பிரிவின் வலியை உணர்கிறான் அல்லவா. குழந்தையவன் அந்த உணர்வை எப்படி விளக்கிக் கூறுவது என்பது புரியாமல் அழுதுக் கொண்டிருந்தான்.
ஒன்றும் புரியாத தாயுள்ளமும் கதற.. ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா?.. அதனால் தான் அழுகிறானா என சோதித்தவளுக்கு சமாராவால் அவன் கையில் ஏற்பட்டிருந்த விஷக்காயம் கிடைத்து விட்டது. அது தரும் வலி பொறுக்காமல் தான் அழுகிறான் என நினைத்துக்கொண்டவள், தன் மாயங்களால் அவன் காயத்திற்கு மருந்திட்டு, "இதற்கு தான் அழுதாயா?. சொல்லியிருந்தால் மருந்திட்டிருக்களாம் அல்லவா??.. பார்.. குணமாகி விட்டது...", என அவன் முகம் பார்க்க.. இன்னும் அழுதுகொண்டே தான் இருந்தான்.
இதற்கு மேலும் என்ன பிரச்சனை என்பது புரியாமல் இருக்க, "என்ன ஆனது கண்ணா??.. அம்மாவிடம் சொல்ல மாட்டாயா??..", என அவன் கண்ணீரைத் துடைத்து தன் கண்ணில் நீர் வடித்ததும், சட்டென ஷிவேதனாவின் கழுத்தைத் தாவி அனைத்துக் கொண்டவன், "அம்மா.. என்னைவிட்டு எங்கும் செல்லாதீர்கள்...", என குலுங்கி அழத் தொடங்கினான்... அவனை தன்னோடு அனைத்து கொண்டார் ஷிவேதனா.
அவன் சொல்லிய விதத்திலேயே ஷிவேதனாவுக்கு புரிந்துபோனது.. தன்னை அறையில் காணாமல் பயந்துபோய் தான் அழுகிறான் என்பது. ஆனால், இவன் இப்படி அழுகிறான் என்றால், தான் வெளியே சென்றதற்கு நிச்சயமாக ஷேனா காரணம் கிடையாது. எனில், வேறு எப்படி வெளியே சென்றோம் என்பதுதான் இப்போது புரியாமல் இருக்க.. இறுதியாக, ராணா அவளை அம்மா என்றழைத்தது வரையில் மட்டுமே அவர் சிந்தையில் பதிந்திருந்தது.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro