Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

47. இருளரசரின் யாக நிவர்த்தி.

இருளரசன் அவரது எண்ணங்களை ஈடேற்றுவதற்காக அமர்ந்த யாகம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இன்றைய ஒரு பொழுது மட்டும் எவ்வித தடைகளும் இல்லாமல் அவரது யாகம் நிறைவு பெற்றுவிட்டால், அதன்மூலமாக அவருக்குக் கிடைக்கப்போகும் அளப்பறியா ஆற்றல்கள் எவ்வித அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்மட்டுமே அறிவார்.

அவர் இங்கு நிழல்தேசத்தில், அழிவுக்கு வழிவகுத்துக் கொண்டிருந்த அதேநேரம், அங்கு வனதேசத்தின் அந்த விடியல் பொழுதில், மையாழி மரத்தைச் சுற்றிலும்  கிட்டத்தட்ட முப்பதடி தூரம் வரையிலும் நிலவிய மௌனத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது அந்த ஒற்றை வாளோசை. ஷேனாவின் வாளோசை.

நில்லாமல் சலசலக்கும் இலைகளைத் தனது வாள்வீச்சின் வேகத்தைக்கொண்டு கட்டுக்குள் கொண்டுவர.. அவனது வலுவேறியப் பிஞ்சுக் கரமும், கரம் பிடித்திருக்கும் அவனுக்கேற்ற இரும்பு வாளும் செல்லும் திசைக்கெல்லாம் அந்த இலைகளும் தலைசாய்த்து மயங்கிக் கொண்டிருந்தது.. அவன் வேகத்தைக் கண்டு. காற்றைக்கிழித்துச் சீறியது அவனது ஒவ்வொரு அசைவும்.

அவனதுத் தளிர் உடலில் துளிர்த்திருக்கும் வியர்வை முத்துக்கள் ஒவ்வொன்றும் வைர மாளிகையின் விடியல் கதிர்களால் மின்னிக் கொண்டிருக்க.. அவைகள் நிலத்தை அடையும் முன்பாக ஷேனாவின் வாள்வீச்சு வேகத்தின் காரணமாக ஒருநொடியேனும் காற்றில் இங்குமங்குமாகப் பயணித்துவிட்டுதான் நிலத்தைத் தொடமுடிந்தது. ஆனால், ஒரேயொரு குறை தான் இக்காட்சியில். நாளுக்குநாள் முன்னேறிவரும் இவனது வேகத்தைக்கண்டு வியக்கவும் ரசிக்கவும் புது உற்சாகம் கொள்ளவும் இவனது குருக்கள் தான் மூன்று நாட்களாக இங்கில்லை. ஷேனாவின் கடந்த மூன்றுதினப் பயிற்சி, அவனைச் சுற்றிலும் இருந்த மௌனத்துடனும் மரக்கிளைகளின் சலசலப்புடனும் தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

எந்தச் சூழலிலும் பயிற்சியைக் கைவிடக் கூடாதெனக் கூறியிருக்கும் தனது குருக்களின் வார்த்தையை மதித்து ஒரு பண்புள்ள மாணவனாகத் தன் குருக்கள் இல்லாவிட்டாலும் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டேதான் வருகிறான் இவன். காலைமுதல் தொடங்கிடும் இவனதுப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சியில் தொடங்கி ஆயத்தப் பயிற்சி, வில் பயிற்சி, வாள் பயிற்சி என அவன் எண்ணத்திற்கு ஏற்பத் தானாகவே மாறிக்கொள்ளும். இப்படியே தொடர்ந்தது குருக்கள் இல்லாத அவனது மூன்றாம் நாள் பயிற்சி.

அதேநேர அங்கே பூமியில், வெறுமை குடிகொண்ட குடிலுக்குள் புகுந்த வானரக்குட்டி போல், ஒன்றுமில்லாத அந்த நீண்ட பரண்மீது ஏறிக் கொண்டிருந்தாள் தீரா. அவளைவிட இரு மடங்கு உயரத்தில் இருக்கும் அந்தப் பரண்மீது ஏறிடுவதற்கு அவளுக்கு உதவியாக நின்றிருந்த வீராவும் 'இப்போது எங்கிருந்தடா உருண்டுக் கீழே விழப் போகிறாள்? இவள் உருண்டு விழுவாளா? இல்லை, எதையாவது உருட்டி விடுவாளா?' என்பதுபோல் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுமாறு பாதியில் தொங்கியபடி இருப்பவளை எச்சறிக்கையுடன் நோக்கியவண்ணமே நின்றிருந்தான். இரண்டாம் நாளாகத் தொடர்கிறது இந்தப் பரண் ஏற்றம்.

இவளால் சகோதரன்கள் என அழைக்கப்படும் கோவன்களும் சகாத்ய சூரர்களும் தீடீரென தங்களின் ராஜ்யம் புறபட்டுச்சென்ற முதலாவது நாளின் இவள் இவ்விடம் வரவில்லை. இரண்டாம்நாள் மாலையில், அவசர அவசரமாகத் தன் பெரிய பூனைக் குட்டிகளைத் தேடி வந்தவள், இங்கே கண்டது வெறுமையான முற்றத்தையே. சரியெனக் குடிலுக்குள் சென்றால், சகோதரன்களையும் காணவில்லை. குடிலுக்குப் பின்பக்கமாகச் சென்றால், தனது நான்கு-கால் நண்பர்களையும் காணவில்லை. சில நிமிடங்கள் குடிலைச் சுற்றிச்சுற்றி அனைவரையும் தேடியவள், யாரும் கிடைக்காமல் போனதால் மீண்டும் குடிலுக்கு வர... சற்று உயரமான ஒரு மேஜைமீது மினுமினுப்பாக ஏதோ கண்ணில் தட்டுபட்டதில் விசுக்விசுக்கென வீராவின் மேலே ஏறி அதைக் கையில் எடுத்துத் திருப்பித் திருப்பி நோக்கினாள்.

அது ஒரு சிவப்புப் பட்டுத் துணியில் உருவாக்கப் பட்டிருக்கும் மடல். தங்களைத்தேடி ஷேனாவோ தீராவோ இவ்விடம் வரவளித்தால், தாங்கள் ராஜ்யம் திரும்பிவிட்டதாகக் கூறி அம்மடலில் குறிப்பிட்டிருக்க.. வெறும் படம்பார்த்துக் கதைசொல்லும் தீராவின் மடல் வாசிப்புத்திறன் குறித்து அறிந்திருக்கவில்லை அவர்கள்.

சர்ரென இரு கைகளாலும் அதைப் பிரித்தவள், பிரித்தவேகத்தில் அதைச் சுருட்டித் தலைக்குமேலே தூக்கி எறிந்துவிட்டு, தோளைக் குலுக்கிக்கொண்டு வீராவுடன் தன் இல்லத்திற்கேச் சென்றுவிட்டாள். இன்று, மூன்றாம் நாள், பொழுது போகவில்லை என இங்கு வந்தவள், தற்காலிகமாக வானரத்தின் மகளாகிப்போய் பரணுக்குப் பரண் தாவி, ஏதாவது மினுமினு பொருள் விளையாடுவதற்குக் கிடைக்கிறதா என ஆராய்ந்துக் கொண்டிருக்கிறாள்.

இவளின் அட்டகாசங்களைப் பொறுக்காத வீரா, பலநிமிடப் போராட்டத்திற்கு பின் அவளை எப்படியோ கீழே இழுத்து, தானே ஒரு வெண்ணிற மாயவாயிலை உருவாக்கி அதன்வழியே அவளைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டான்.

✨✨✨


ஒன்பது அரக்கச் சிலைகளைக்கொண்ட அந்த அறையினுள் தன் யாகத்தின் இறுதிக்கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் இருளரசன். அவரின் யாகம் எவ்வித தடைகளும் இல்லாமலே நகர்ந்திருப்பதற்கு ஆதாரமாக, அவரின் முன்னிலையில் தனித்தனியாக வரையபட்டிருந்த ஐவண்ண வட்ட வளையங்களும் முக்கால்வாசிக்கும் மேலாக அழிந்துப்போய் அலங்கோலமாகக் காட்சிக்கொடுத்தது.

ஆதிகால ரட்சகனின் சக்தியால், இன்றளவிலும், எவரின் பார்வைக்கும் சிக்கிடாமல் ஏதோ ஒரு கண்காணா இடத்தில் இன்னுமும் ஒருங்கிணைந்து இருக்கும் ஐந்து லோகங்களில் ஒற்றுமையைக் களைப்பதே இருளரசனின் முதல் இலக்கு. பஞ்சலோகத்தின் ஒற்றுமையைப் பற்றி ஆதிலோத்தில் எவருமே அறியாதிருக்க... தன்னிடம் இருந்த மாயோள் புத்தகத்தைக் கொண்டு எப்போதோ அறிந்திருந்தார் இருளரசன். ஆனால், ஷிவேதனா தன் கைப்பட எழுதியப் புத்தகங்களை ஷேனாவிடமிருந்துத் திருடி என்றுமுதல் வாசிக்கத் தொடங்கினாரோ.. அன்றுமுதல், துண்டுத்துண்டாகத் தனக்குத் தெரிந்த தகவல்களில் பல விஷயங்களுக்குக் கோர்வைக் கிடைத்திருக்க... அவர் கண்ணில் இறுதியாக சிக்கிய 'ரட்சகனின் மும்மணிகள்' குறித்து அறிந்த நொடிமுதல், இருளரசனின் மொத்தத் திட்டத்திற்கும் முழு உருவம் கிடைத்திருந்தது.

இந்த யாகம் வென்றுவிட்டால், பஞ்சலோகங்களின் ஒற்றுமை தானாகவே கலைந்துவிடும். பஞ்சலோக ஒற்றுமையானதுக் களைந்திடும் பட்சத்தில், ரட்சகனின் மும்மணிகளும் எங்கே உள்ளது என்பதை அறிய வழி பிறந்திடும். அத்துடன், யாகத்தின் வெற்றியால் தனக்குக் கிடைக்கும் அதீத ஆற்றலைக் கொண்டு மும்மணிகளையும் கைபற்றிடலாம். இந்தத் திட்டங்களுடன் தான் இப்போதைக்கு நடந்து கொண்டிருக்கிறது இந்த யாகம்.

இன்னும் சில நொடிகளே! நொடிநொடியாய் நேரம் நகர்வதுடன் சேர்ந்து, ஐந்து வட்டங்களில் எஞ்சியிருக்கும்  வட்டமும் மெல்ல மெல்லக் கரைய... அது மொத்தமாகக் கரைந்துக் காற்றில் மறைந்த நொடி, வெற்றிப்புன்னகையுடன் தன் விழிகளைத் திறந்த இருளரசன், முழுவதுமாகக் களைந்துப்போன வண்ண வளையங்களை உற்சாகத்துடன் நோக்கினார். தத்தம் ஒளியிணை இழந்துக் கலையற்றுப்போன வட்டங்கள் ஐந்தும் இப்போது ஒன்றாக இணைந்து நான்கடி உயரத்தில் ஒரு வெண்ணிறச் சுழலாக உருவாகிட.. அதை இன்னும் ஆர்வாமாக நோக்கினார் அவர். அந்தச்  சுழலுக்கு மத்தியில் கரும்புகை போல ஒரு உருவம் தோன்றிட, "வணங்குகின்றேன் காலதேவா!" அந்த உருவத்தின் முன்னிலையில் மண்டியிட்டுத் தன் வலதுகரத்தை நெஞ்சில் பதித்து, பணிவுடன் தலை தாழ்த்தியிருந்தார் இருளரசன்.

"இருளரசனே! அதியாற்றல் யாகத்தினை மேற்கொண்டு எம்மை நாடியதன் நோக்கம்?" கறும்புகையின் நடுவிலிருந்து உதித்த அந்த உருவம் கேட்க, "காலதேவா! ஆதிகால ரட்சகனின் மும்மணிகளை அடைய விரும்புகிறேன்.  அவை இருக்கும் இடம் குறித்து அறிய விழைகிறேன்." பணிவுடன் பதிலளித்தார் இருளரசன்.

"ஹாம்! அழிவின் நோக்கம்." நக்கலாகக் குரல் கொடுத்த அந்நிழல், "நின் யாகத்தின் வெற்றி பொருட்டு ஐலோகங்களும் தத்தம் ஒற்றுமையை களைந்திருப்பினும் ஐலோகத்தின் மத்தியில் மறைந்திருந்த முதல் மணியை மாத்திரமே கைப்பற்றிடலாம், இருளரசனே! ஆயினும், நின் வேண்டிய வினாவிற்கு விடையளிக்கின்றேன்.

'அவன், ராஜனை காத்திட தன்னாற்றல் கொடுத்து உயிர்பித்தான். அசம்பாவிதம் மேலும் நிகழாதிருக்க அவனாற்றலை பறித்தும் கொண்டான். பறிக்கப்பட்ட ஆற்றலை அழிவுக்கு வேண்டுகிறாய் நீ! செவிசாய்த்துக்கொள்! மும்மணிகளில் முதல் மணி, 'அவள்' பொறுப்பில் கொடுத்த மணி. உள்ளங்கை அளவிலான உயிர்களின் ராஜப் பதக்கத்தில் மறைந்துள்ளது. நினைவில் கொள்! உன் கரம்பட்டு மீண்டும் அவள் கரம் அடையுமாயின் அழிவின் நோக்கம்  கொண்டவரால் மீண்டும் தீண்டும் தன்மையை இழக்கும் வெண்மணி

இரண்டாம் மணி திரிலோக மணி. பஞ்சலோக அழிவின் பின் உருவான திரிலோகங்களை இணைத்து வைத்திருக்கும் மணி. அதன் வரவு, இரு காரணங்களால் மட்டுமே. ஒன்று, ரட்சகனின் வரவு. இரண்டு, ஓர் லோகத்தில் பிறந்து மூலோகங்களுக்குப்  பிரிந்த சகோதரிகளின் இணைவு. 

மூன்றாம் மணி, கறும்முத்து. இவை குறித்துக் கூறினாலும் நின் திறனால் பகுத்தறிய இயலா ஆற்றலால் காக்கப்படும் அதிசயம் இது! இருப்பினும் கவனி, எவனொருவன் அதன் ஆற்றலை உணர்கிறான் என்பதை புரிந்துக்கொள்ளும் மற்றொருவரின் குரல் அறிந்தே செயல்படும் கறும்முத்து!! அடைபவனுக்கு இதன்மூலம் பயன் வேண்டுமாயின் உணர்பவன் அனுமதி நிச்சயம் வேண்டும்! தெளிந்து செயல்படு இருளரசனே!" என்றதுடன் மறைந்தது அந்தக் கரும்புகை உருவம்.

அப்புகை மறைந்த அடுத்தநொடி, மஞ்சள் வண்ண ஒளிக்கதிர் அவ்வறையெங்கிலும் பரவிட, ஓரிரு நொடிகள் காற்றில் கரைந்த அந்த ஒளிக்கதிர்கள் யாவும் ஒன்றுகூடி இருளரசனின் தேகத்தினுள் நுழைந்தது. யாகத்தின் முழு பலனாகிய ஆதீத ஆற்றலின் அதிபதியாகிவிட்ட இருளரசன், தன் சிரிப்பலையால் அவ்விடத்தையே அதிரவைக்கத் தொடங்கினார்.

"ஹாஹாஹாஹா!! மும்மணிகளையும் அடையாவிடில் என்ன காலதேவா? என் திட்டம் அதுவல்லவே. ஹாஆஹ்ஹ்ஹ்!! மும்மணிகளால் இந்த  ஆதிலோகத்தை வேண்டுமானால் ஆழலாம். ஆனால் நான், அதை உருவாக்கிய அந்த ரட்சகனையே ஆழ நினைக்கின்றேன்... ஆர்ஹ்ஹ்ஹ்!!.. அவனது ஜென்மவாக்கின் காலநிலையை மீண்டும் தோற்றுவித்து, அவனை மீண்டும் பிறப்பெடுக்க செய்து, அவனை என் பாதங்களால் நசுக்கப் போகின்றேன். ஹாஹாஹாஹா. ஹாஹாஹா ஹாஹா!!!... ஹாஆஹ்ஹ்ஹ்ஹ். வெளிப்படுங்கள், இருள் தேவன்களின் ஏவல்களே!! உங்கள் தலைவன்களின் பகைமையை தீர்த்துக்கொள்ள வெளிப்படுங்கள்!! இம்முறை தோல்வியைத் தழுவினாலும், இது வெற்றிக்கான தோல்வியே. வாருங்கள்... வெளிவாருங்கள்!!" பெரும் கர்ஜனையுடன், தான் பெற்ற சக்திகளை வைத்து, அந்த ஒன்பது சிலைகளின் அடிமைகளை எல்லாம் உயிர்த்தெழவைக்கத் தொடங்கினார் அவர்.

✨✨✨


ஆதிலோகத்திற்கோ இல்லை பூமிக்கோ, அன்றைய விடியல் பலவற்றுக்கும் மாற்றுத்தீர்ப்பு எழுதவிருக்கும் தினமாகத்தான் விடிந்திருந்தது, இரு உலகங்களிலும். மூன்று நாட்களாகத் தங்களின் சிஷ்யனை காணாதிருந்த குருக்கள் மூவரும் அன்றைய தினத்தில், வழக்கமான பயிற்சி நேரத்திற்கு முன்பாகவே களத்திற்கு வந்து விட்டிருந்தார்கள். வழக்கமாக, அவர்கள் வந்ததுமே ஏதேனும் பேச்சுக்கொடுக்கத் தொடங்கிவிடும் மையாழி மரமும் இன்று மிகுந்த அமைதியுடன்தான் இருந்தது. அதன் காரணத்தை கோவன்களும் நன்கு அறிவார்கள். தங்களின் வாழ்வையும் ஆதிலோகத்திற்கான தங்களின் வரவையும் நன்கு அறிந்திருப்பது இம்மரம் மட்டும் தானே!

வேந்தன்யபுர மஹா சாம்ராஜ்யத்தை நெருங்கியிருக்கும் பெரும் ஆபத்தை எதிர்த்துப் போராடும் போராட்டக் களத்திலிருந்து, தங்களுக்கென கிடைத்த சொற்பநேர அவகாசத்தில், தங்கள் சிஷ்யனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிடவே இன்றைய தினத்தில் இங்கு வரவளித்திருக்கிறார்கள் கோவன்கள். 'மூன்று தினங்களாகத் தாங்கள் வரவில்லையெனப் பயிற்சிக்கு வருவதை ஷேனா நிறுத்தியிருப்பானோ? இன்று அவன் வாராவிடில் அவனுக்கு கொடுத்த வாக்கினை எவ்வாறு நிறைவேற்றிடுவது?' எனக் கோவன்கள் மூவரும் யோசனையில் மூழ்கியிருந்த நேரம், அவர்களை அதிகம் யோசிக்கவிடாமல் தனது தினசரி பயிற்சிக்காக அவ்விடம் வந்துச்சேர்ந்தான் ஷேனா.

அவனை கண்ட மாத்திரத்தில் கோவன்களின் கண்கள் ஆனந்தத்தில் மின்ன... விளையாட்டுப் போக்கில் சாதாரணமாகவே நடந்து வந்துக் கொண்டிருந்தவன், தூரத்தில் இருக்கையிலேயே தனது குருக்களை அடையாளம் கண்டு அப்படியே உறைந்து நின்றுவிட்டான். தங்கள் சிஷ்யனின் நிலையை கண்ட மூவரும் மெல்லமாகச் சிரித்துக் கொண்டே ஒன்றுபோல் கைநீட்டி அவனை அழைத்தநொடி, வேறு எதையும் சிந்திக்காமல் ஓடிவந்து மூவரின் கால்களையும் சேர்த்தணைத்தான்.

தன் குருக்கள் மூவரையும் ஒரே அணைப்பினுள் இழுத்திருந்த ஷேனா, அவர்களை இன்றைக்குள் விடுவிப்பதாக தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே தன் முகத்தை புதைத்திருந்தவன் மெல்ல விசும்பத் தொடங்கியதை உணர்ந்தக் கோவன்கள், வலுக்கட்டாயமாக அவனை தங்களிடமிருந்துப் பிரித்து நிற்கவைத்து, சோகம் வழியும் அவன் முகத்தை நோக்கினார்கள். இதழ்களை சுருக்கி மூவரையும் முறைத்துக் கொண்டிருந்தவனது விழிகளில் உருளை உருளையாக நீர்த்துளிகள் கோர்த்திருக்க.. அவனைக்கண்டு மூவரின் முகத்திலும் புன்னகை அறும்பியது.

"சிரிக்காதீர்கள். ஏன் நேற்றெல்லாம் வரவில்லை?" கோபமாக தன்னை பாவித்துக் கொண்டாலும், மூன்று  திங்களாக தன்னுடன் இருந்தவர்கள் திடீரெனப் பிரிந்துச் சென்றதன் தாக்கம் ஷேனாவின் கண்களின் வழியே ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தது.

அவனுக்கு நிகராக அமர்ந்த யுவன், சிஷ்யனின் முகத்தை தன் கரத்தில் ஏந்தி, "அழக்கூடாது, ஷேனா." கட்டை விரல்களால் அவனது கண்ணீரைத் துடைத்துவிட... சக்தி மற்றும் விஷ்ணு, ஷேனாவின் தோளில் கைவைத்தவாறு அவனுக்கு இருபுறத்திலும் அமர்ந்தார்கள்.

"கண்ணா, நீ மிகவும் திடமானவன்.. பலசாலி! உன் குருக்களின் தேவை உனது பயிற்சிக்காக மட்டுமேதான் தவிர, காலமெல்லாம் எம் தேவை உனக்கிருக்காது. அதனை இந்த மூன்று நாட்களில் நீ நிச்சயம் உணர்ந்திருப்பாய்." விஷ்ணு ஒருபுறம் கூற, "யாம் இல்லாமலே இந்த மூன்று தினத்திலும் நீ பயிற்சி மேற்கொண்டே வருகிறாய் தானே? அதேபோல் எப்போதும் செய்திடவேண்டும். உன் அம்மாவின் ஆசைபடியே மாவீரனாக வேண்டும். சரியா?" சக்தி, மறுபுறமிருந்துத் தன் சிஷ்யனுக்கு போதித்தான்.

ஷேனா, வார்த்தையேதும் கூறாமல் தன் குருக்களின் சொல்லுக்கு தலையை மட்டும் அசைக்க.. கண்ணீர் வழிந்தோடிய அவன் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு அவனை தன் கரத்தில் தூக்கினான் யுவன். "இன்னுமும் எம்மீது கோபமா?" யுவன் வினவ, "ம்ம்ஹும்." மறுப்பாக தலையசைத்தான் ஷேனா.

"பிறகேன் என் சிஷ்யனின் முகம் இப்படி உள்ளது?".

"உம்ம்... நான் கோபமாக இருக்கிறேன்!", மூக்கை உறிஞ்சிக்கொண்டே அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, "ஹஹஹ.. கோபமாக இருக்கும் சிஷ்யனை சமாதானம் செய்திடும் வழியைதான் நாங்கள் அறிவோமே!" பக்கவாட்டிலிருந்து சக்தி குரல் கொடுததும் சட்டெனத் திரும்பி அவனை நோக்கினான் ஷேனா.

"காட்டிடலாமா எவ்வாறென?" மற்ற இரு சகோதரன்களையும் புன்னகையுடன் சக்தி நோக்க.. யுவன், ஷேனாவை தன் கரத்திலிருந்து இறக்கிவிட்டதும் கோவன்கள் மூவரும் தங்களின் கரங்களை ஒன்றுகோர்த்துப் பிடித்தார்கள். மூவரின் கோர்த்திருக்கும் கரத்திலிருந்தும் மூவர்ண ஒளி வெளிப்பட்டு அவர்களின் நடுவே ஒன்றாக சங்கமிக்கத் தொடங்கிட... அங்கு ஒரு பெரும் ஒளிபந்து உருவாகத் தொடங்கியது. அந்த அற்புதக் காட்சியை விழி விரித்து நோக்கிக் கொண்டிருந்தான் ஷேனா.

✨✨✨

தன் திட்டத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடாக இருளரசன் மேற்கொண்ட முயற்சி, அவர் கணிப்பிபடியே தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த தோல்விதான் அவர் திட்டத்தின் வெற்றிக்கான முதல்படியாக இருந்தது.

நேற்று மாலையில் தான் விடுவித்திருந்த ஏவல் படைகளுடன்,  இன்றைய விடியலிலேயே மாயதேவதை இனத்தவர்களின் இருப்பிடத்தை அடைந்திருந்தவர், மொத்த இடத்தையும் நாசம் செய்ததுடன் அவர்களின் ராஜபதக்கத்திலிருந்த வெண்மணியையும் கையில் எடுத்திருக்க.. அதை எடுத்தநொடியே பெரும் விசையால் தூக்கி எரியப்பட்டவர், கண்விழிக்கையில் இருந்தது இருள் மாளிகையினுள். வெண்மணியின் முழு காவலாக இருக்கும் ஆதிலோக மகாராணியின் செயல்தான் இது. இருளரசன், இந்த யாகத்தை தொண்டாங்கியபோதே மகாராணியால் நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவரின் கணக்கே வேறு. இருளரசனிடமிருந்து மீண்டும் கைபற்றியிருந்த வெண்மணியை, நிழல்தேசத்திலேயே ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருந்தார் அவர். காரணம், இருளரசன் கரம்பட்டு அது மீண்டும் மகாராணியின் கரத்திற்கே சென்றுவிட்டதால் தீய நோக்கம் கொண்டவர்களால் தீண்டும் தன்மையை இழந்திருந்தது வெண்மணி. காலதேவனின் கூற்றும் இதுவே. 

அதனால், இருளரசனுக்கும் இவ்விஷயம் தெரியும். ஒருவேளை அந்த தடையையும் மீறி ஏதேனும் தீய நோக்கத்திற்காக எவரேனும் வெண்மணியை நெருங்கினால், அதன் தாக்கம், அது இருக்கும் இடத்தையும் அதனை சுற்றியிருக்கும் பெரும்பாலான இடத்தையும், உயிர்கள் வாழும் தன்மையற்றதாக மாற்றிவிடும். இப்போது, வெண்மணி இருப்பதும் அவரின் ராஜ்யமே என்பதால் மறந்தும்கூட அதை தொடும் எண்ணம் கொள்ளமாட்டார் என்பதாலேயே மகாராணி இப்படியொரு ஏற்பாட்டினை செய்திருந்தார்.

✨✨✨


தனக்கேற்ற அளவுடன் தன் கரத்தில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்த தங்கநிற வாளை, கண்கள் முழுவதும் நிரப்பிக்கொண்டு, திறந்தவாய் மூடாமல் ரசித்துக் கொண்டிருந்தான், ஷேனா. அவன் கைக்கு அடக்கமான கைப்பிடியின் இருபக்கமும் தங்க இறக்கை விரிந்து, கோவன்களின் சக்திகளை குறிக்கும் மூன்று சின்னங்கள் மையத்தில் இருக்க... அதன் கூர்மையோ, கண்ணை பறிக்கும் ஜொலிப்பில் மின்னிக் கொண்டிருந்தது.

"ஷேனா, இவ்வாள் எம் மூவரின் சக்திகளையும் ஒருங்கே பெற்ற வாள். நீரின் அழுத்தத்தையும் காற்றின் வேகத்தையும் எளிதாக எதிர்த்திடும்... எவ்வளவு கொடிய நெருப்பானாலும் இதனை உருக்கிடாது" ஷேனாவிற்கு நேராக குனிந்த சக்தி, அவன் சிகையை கோதியபடிக் கூறிட.. ஷேனாவின் முதுகை தட்டிய யுவன், "நன்கு நினைவில்கொள், கண்ணா! நன்கு சிந்தித்து நல்வழியில் பிரயோகிக்க வேண்டும் உனது அனைத்து ஆயுதங்களையும். அப்பாவிகளை காரணமின்றித் துன்புறுத்தக் கூடாது", மென்மையாக கூறியதற்கு சம்மதமாய் தலையசைத்தான் ஷேனா.

"சரி, கண்ணா.. யாம் புறப்படவேண்டும். நீ பத்திரமா இரு." தன் சிஷ்யனை கையில் தூக்கி அணைத்துக்கொண்ட விஷ்ணு, அவனை இறக்கிவிட்டு சகோதரங்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் செல்ல... என்றும்போல் இன்றும் தன்னுடன் பயிற்சி செய்வார்கள் என ஆர்வத்தில் நின்றிருந்த ஷேனா, அவர்கள் வந்த வழியே செல்வதை ஒருநொடி வித்தியாசமாக நோக்கிவிட்டு , அடுத்தநொடியே அவர்களை நோக்கி நக்கலாக கத்தினான்.

"ஏன் செல்கிறீர்கள்? என்னை பார்த்து பயமா? இல்லை, என் வாளை பார்த்து பயமா? ஹிஹிஹி. நான் உங்களைக் காயப்படுத்த மாட்டேன், மீண்டும் வாருங்கள். பயிற்சி செய்யலாம். வாருங்கள், புதிய வாள் வைத்துப் பயிற்சி செய்யலாம்." உற்சாகமாக கூச்சலிடுபவனை ஒருமுறை திரும்பிப்பார்த்து சிரித்துவிட்டு, வழக்கமாக தாங்கள் பூமிக்குச் செல்லும் வெண்ணிற மாயவாயில் வழியாக சென்றுவிட்டார்கள் அம்மூவரும்.

அவர்கள் சென்றதும் அந்த மாயவாயில் தானாக மூடிக்கொண்ட அதே நொடி, "ஹ்ம்ம். மீண்டும் ஒரு ஆன்மாவின் விதிமீறல்", கோவன்களைத் தொடர்ந்தே சென்ற ஒரு சிவப்பு-நீலம் ஒளிப்பந்தை நோக்கிக் ஒலித்தது மையாழி மரத்தின் குரல். ஆனால், அதை செவிமடுக்கதான் எவரும் அங்கில்லை. அதேநேரம், ஏதோ ஒரு விதி, தன் முன்னிலையில் மீறப்பட்டிருப்பதன் அடையாளமாக, மையாழி மரத்தின் உச்சியில், சிவப்பு மாணிக்கத்தின் பளபளப்பை ஒத்த ஒரு பிஞ்சு அறும்பியிருந்தது.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro