Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

44. யுகி, அகி, விகி.

முந்தையநாள் எதுவுமே நடவாததைப்போல், வழக்கம்போல அன்றைய தினமும் விரைவாகவேத் தன் பயிற்சிக்கு வந்துவிட்டான் ஷேனா. கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு கண்களை மூடிய நிலையில் மையாழி மரத்தின்மீது சாய்ந்து நின்றிருந்த யுவன், ஷேனாவின் வரவை உணர்ந்து அவனை நோக்கித் தன் வெறுமையான முகத்தைத் திருப்ப.. தன் பார்வையை அலைபாயவிட்ட ஷேனா, "அவர்கள் எங்கே?" மற்ற இரு குருக்களையும் தேடினான்.

இத்தனைச் சாதாரனமாக வினவும் தன் சிஷ்யனை எவ்வொரு உணர்வும் இல்லாமல் நோக்கிய யுவன், "அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது ஷேனா. அதன் காரணம்கூட நீதான். அதற்குள் மறந்துவிட்டாயா?" யுவனின் வெறுமையான குரலை ஷேனா அடையாளம் கண்டுக் கொண்டதாகவேத் தெரியவில்லை, "ஒருவருக்குத் தானே காயம் ஏற்பட்டது? மற்றொருவர் எங்கே?" வழக்கமானக் குரலிலேயே அடுக்குக் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினான் அவன்.

"மற்றொருவர் அவருக்கு உதவிடுவதற்கு எமது குடிலிலேயே இருக்கிறார்", நீண்ட பெருமூச்சுடன் ஷேனாவிற்கு பதிலளிக்கையிலேயே, தன் காலினைச் சுற்றிக்கொண்டு வந்த ஒரு சிவந்த நிறப் பூனைக்குட்டியைத் தன் கரத்தில் தூக்கினான் யுவன். "இது என்ன குட்டி மிருகம்? ஹஹா! குட்டி மெத்தைப்போல் உள்ளது?" திடீரென ஷேனாவின் வியக்கும் பார்வை, அந்தப்  பூனையின்மீது பாய்ந்தது. அவனது கைகள் இரண்டும் யுவனின் கையிலிருந்த அந்தப் பூனையை அமுக்கி அமுக்கி ரசித்ததில் மியாவ் எனச் சத்தமாகக் கத்தியபடி, லபக்கென யுவனின் கழுத்திற்குத் தாவிக்கொண்டு ஷேனாவை மிரட்டிடும் பார்வையில் நோக்கியது அந்தப் பூனை.

ஆனால் அப்பார்வையோ ஷேனாவின் கண்களில் விளையாட்டாகவேத் தெரிந்ததால், முதல்முறையாக ஒரு பட்டாம்பூச்சியை ரசிக்கும் குழந்தையைப்போல் அந்தக் குட்டி-மிருகத்தை ரசித்தான் ஷேனா. உண்மையில், இதுவரையில் ஒரு பூனையை அவன் கண்டதில்லை. கேள்விப்பட்டதுக் கூட இல்லை. காரணம், ஆதிலோகத்தில் மிருகங்களில் நடமாட்டமே கிடையாது. ரட்சகராஜ்யத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் சில அபூர்வ இன விலங்கினங்கள் மட்டுமே இந்த ஆதிலோகத்தில் இருக்கும் விலங்குகள். மற்றபடி, வனதேசத்தின் இரு இனத்தவர்களின் இருப்பிடத்திலும் இருக்கும் ஒருசில சாது உயிர்கள் அவ்வப்பொழுது வனதேசத்தில் சுற்றித்திரியும். இவை எதிலுமே நாய், பூனை போன்ற எவ்வொரு வளர்ப்புப் பிராணிகளும் கிடையாது. அப்படியே இருந்திருப்பினும், இருள்மாளிகையின் உள்ளேயே இருந்தவனுக்கு அதையெல்லாம் காணும் வாய்ப்பும் கிடைத்திருக்காது. அதன் காரணமாகவே ஷேனாவின் கண்ணில் இத்தனை ஆர்வம் மின்னிட.. அதனை ரசிக்க நினைக்கும் மனதினைக் கட்டுப்படுத்திக்கொண்ட யுவன், அவன் ஏன் சாதாரண பூனையைக் கண்டு இப்படி வியக்கிறான் என்றுக்கூட யோசிக்காமல் தன் கழுத்தில் நின்றுக் கொண்டிருக்கும் பூனையைப் பிடித்து ஷேனாவின் கையில் கொடுத்தபடியே, "இவன், யுகி. இன்று நீ இவனுடன்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், ஷேனா." அதே உணர்வில்லாதக் குரலில் கூறினான். 

ஆனால், அந்த மிருதுவான விலங்கு தன் கைக்கு வந்த ஆனந்தத்தில் யுவனின் குரலை இப்போதும் கவனிக்கவில்லை ஷேனா. யுகியை சரியாகப் பிடிக்கத் தெரியாமல் தாறுமாறாக அவனைத் தூக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "என்னுடன் வா ஷேனா," யுவன் முன்னோக்கி நடக்கத் தொடங்கிட.. யுகியின் முன்னங்கால்கள் இரண்டையும் தன் இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, "எங்கே? பயிற்சி செய்யவில்லையா இன்று? ஆனால், இந்தக் குட்டி யுகியுடன் பயிற்சி செய்ய வேண்டுமெனச் சொன்னீர்கள்?" என்றபடியே, மண்ணில் பின்னங்கால்களை உரசிக்கொண்டிருக்கும் யுகியைத் தன் கையில் தொங்கவிட்டபடி ஓடினான் அவன். 

"பயிற்சிக்குத்தான். வேறொரு இடத்தில்-", யுகியின் அலறலைக் கேட்டுப் பின்னோக்கித் திரும்பிய யுவன், "ஷேனா, அவனைக் கீழே விடு. அவனே நடந்து வரட்டும்" என்ற கர்ஜனையில் ஷேனா மிரண்டுப்போய் யுகியைக் கீழே விட... விட்டால் போதுமென யுவனைத் தாண்டி ஓடியேவிட்டான் யுகி. கண்களை மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திகொண்ட யுவன், மிரட்சியாகத் தன்னை நோக்கிடும் சிஷ்யனுக்கு ஒருவார்த்தையும் கூறாமல் 'பின்தொடர்ந்து வா' என்பதுபோல் சைகை மட்டும் செய்துவிட்டு முன்னோக்கி நடந்துக்கொண்டே இருக்க.. அவன் காலோடு ஓடிக்கொண்டிருந்த யுகி, தன்னை மீண்டும் இம்சிக்க அந்தக் குட்டி இம்சை வருகிறதா? எனத் திரும்பிப்திரும்பிப் பார்த்துக்கொண்டே நான்கு கால்களால் குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்தான். பாவம், ஷேனாதான் யுவனின் இந்தக் கர்ஜனையில் சர்வமும் ஒடுங்கிப்போய் நடுங்கியபடியே அவர்களைப் பின்தொடர்ந்துக் கொண்டிருந்தான். ஏனோ, இம்முறை இங்கிருந்துத் தப்பி ஓடிடுவதற்குக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை.

✨✨✨


இன்று ஷேனாவைக் காணச் செல்லலாமா? சகோதரன் வார்த்தையை மதித்துக் குடிலிலேயே இருக்கலாமா? என்னும் தீவிரச் சிந்தனையுடன், பல நாழிகைகளாகத் தங்களின் குழப்பத்தில் மூழ்கிப்போய் சிறு பதட்டத்துடன் இருந்தார்கள் சக்தி மற்றும் விஷ்ணு. நேற்று மாலைபொழுதில் இங்கிருந்து புறப்பட்ட யுவன் இன்னும் குடிலுக்குத் திரும்பிடவில்லை என்னும் பதட்டமெல்லம் கிடையாது.. அங்கே தங்களின் சிஷ்யனுக்கு என்ன பாடம் கற்பிக்கப் போகிறானோ? யுவனின் கோபத்தை ஷேனா எப்படி சமாளிக்கப் போகிறானோ என்னும் பதட்டமே.

"நம்மீதும் தவறு உள்ளது, சகோதரா. சிறுவனுக்கு முதலில் முறையான மரியாதையைத்தான் நாம் கற்பித்திருக்க வேண்டும்.", ஒற்றைக்காலை  நீட்டிச் சுவற்றோடுச் சாய்ந்த நிலையில் தரையில் அமர்ந்திருந்த விஷ்ணு, விட்டத்தை நோக்கியடியே சோகக்குரல் கொடுக்க, "ஆனால், அதற்கு அவசியம் இருப்பதாகத் தெரியவில்லையே! அவன் அன்னையே அவனுக்கு அனைத்தையும் கற்பிக்கின்றார். இப்போது, அவன் மிகவும் சிறியவன். குறும்புத்தனத்தில் தானே இவ்வாறெல்லாம் செய்கிறான்." தன் சிஷ்யனுக்காகப் பரிந்துப் பேசினான் சக்தி. 

"இருக்கலாம். இருப்பினும், நாமும் அவனது குறும்புகளை இந்தளவிற்கு வளர அனுமதித்திருக்கக் கூடாது. முதல்முறை அவன் எனது உள்ளங்கையைத் தாக்கியப்போதே இது தவறென மென்மையாகவேனும் கூறியிருக்க வேண்டும்."

"ஹாம்ம். அதுவும் சரியே. சிறிதேனும் கண்டித்திருக்க வேண்டும். இன்று யுவனின் கோபம் எல்லை மீறிடாமல் இருந்தால் சரிதான். அவனைக் கண்டு ஷேனா பயந்திடக் கூடா- ... அகி?" அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தவனின் குரல், அதிர்ச்சியாக வாயிலை நோக்கியதில் விஷ்ணுவும் சட்டென அத்திசையை நோக்கிட... யுகியைப் போன்றே நீல நிறத்திலிருந்த ஒரு பூனை, ஓடிவந்து சக்திமீது பாய்ந்த அதே நொடியில், அவனை தொடர்ந்து உள்ளே வந்தது, வெள்ளையும் சாம்பலும் கலந்த மற்றொரு பூனை.

"விகி! இருவரும் இங்கென்ன செய்கிறீர்கள்?" வெண்ணிறப் பூனையைக் கையில் தூக்கினான் விஷ்ணு. சக்தியின் மீது பாய்ந்திருந்த அகி, பஞ்சுக் கட்டுகள் கட்டியிருந்த அவன் தோள்பட்டையில் தொங்கியபடித் தன் நகங்களால் அந்தக் கட்டைக் கீறிகொண்டே சோகமாக முனங்க, "ஹஹா.. ஒன்றுமில்லை, அகி. சிறு காயம்தான். நாளைய தினத்தில் குணமாகிடும்." மெல்லியப் புன்னகையுடன் கூறியபடி அவனைப் பிடித்துத் தன் மடியில் வைத்து வருடிக்கொண்டே கூறினான் சக்தி. அவனது காயம் ஆழமாக இருப்பினும் அக்காயம், கோவனாகிய அவனை அவ்வளவாகப் பாதித்திருக்கவில்லை.

"சரி, எதற்காக கோட்டையைவிட்டு இருவரும் எம்மிடம் வரவளித்தீர்கள்?" இரு பூனைகளையும் நோக்கி விஷ்ணு வினவிட, அவைகளின் மொழியில் விடை கொடுத்தான் விகி. "என்ன? யுவன், யுகியை அழைத்துச் சென்றிருக்கிறானா?" அதிர்ச்சியின் உச்சத்தில் கத்திய சக்தியை நோக்கிய அகி, அதன் மொழியில் குரல் கொடுக்க... சட்டெனத் தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவன், "இல்லை, இல்லை. பிரச்சினையெல்லாம் ஏதும் இல்லை, அகி. ஒரு புதிய இடத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருக்கிறார்கள் நம் சகோதரர்கள்." சக்தி, விடை கொடுக்க.. மறுபுறம், ஏதோ முணங்கினான் விகி.

"கவலைக்கொள்ளாதே விகி, நாம் நாளை செல்லலாம்" மெல்லியக் கோபத்தில் முணங்கிய விகியை, விஷ்ணு மென்மையாக வருடிய அதே நொடியில், "ஹை! என் பூனைக் குட்டிகள்ள்ள்ள்ள்.", கண்கள் மின்னிடும் அழகில், கன்னத்தில் இரு கைகளையும் வைத்தபடி அகி மற்றும் விகியை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டு அங்கே நின்றிருந்தாள் தீரா. அவளுக்குப்பின்னே 'இது என்ன புது பிராணி? இப்படி ஒரு குட்டியை நான் ஆதிலோகத்தில் பார்த்ததே கிடையாதே? இவள் எப்போது இவைகளுக்கு பூனை எனப் பெயரிட்டாள்?' என்பதுபோன்ற ஒரு பார்வையுடன், குடிலின் வாயில் வழியே தலையைமட்டும் நீட்டிக்கொண்டு நின்றிருந்தான் வீரா.


 ✨✨✨

​"ஏன் என்னைக் கட்டி வைத்திருக்கிறீர்கள்?" ஒரு ஒல்லியான மரத்தில், தன் கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் நின்றுக்கொண்டு, மிரண்டப் பார்வையுடன் யுவனை நோக்கினான் ஷேனா. அது வழக்கமாக அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடம் கிடையாது. அங்கிருந்து கிழக்கே, வெகுதூரத்தில் இருக்கும் ஒரு ஓடைகரை அது. நில்லாமல் ஓடிடும் அந்த ஓடையின் ஓரத்தில் நின்ற நிலையில், முகம் பார்க்கிறானா? மீனைப் பார்க்கிறானா? என குழம்பிடும் விதத்தில் யுகி நின்றுக் கொண்டிருக்க... ஷேனாவை அந்த மரத்தோடு கட்டி வைத்துவிட்டு அவனிடமிருந்து பத்தடி தள்ளி நின்றிருந்தான் யுவன்.

"இதுவும் பயிற்சிதான், ஷேனா", அதே உணர்வற்ற குரலில் விடைகொடுக்க.. இப்போதுதான் கவனித்தான் தன் குருவின் குரல் மாற்றத்தை."நீங்கள் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்? எனக்கு பயமாக இருக்கிறது. என்னை அவிழ்த்துவிடுங்கள். நான் அம்மாவிடம் செல்லவேண்டும்" தன்னை அந்த மரத்திலிருந்து விடுவிக்கப் போராடியபடி கண்கள் கலங்க நின்றிருந்தவனை நோக்கி பெருமூச்சு விட்ட யுவன், "பயப்படாதே,  கண்ணா! இதுவும் உனக்கான ஒரு பயிற்சிதான். முந்தைய பயிற்சிகளைவிட மிகவும் சுலபம். எனது கேள்விகளுக்கு நீ சரியாக பதில் கூறினால் போதும். நீ இப்போதே கூட உன் அம்மாவிடம் செல்லலாம். ஆனால், தவறான விடை கொடுத்தால்..." வார்த்தையை முற்றில்லாமல் நிறுத்தியவன் தன் பார்வையை, ஓடைக் கரையோரம் திருப்பி, "..அவனுக்கு உணவாகி விடுவாய் நீ." தீவிரமான முகபாவத்துடன் யுகியை தன் கண்ணால் சுட்டிக்காட்ட.. இவ்வளவு நேரமும் மிரண்டுப்போய் நின்றிருந்த ஷேனா, 'இந்தக் குட்டி மிருகத்தின் வயிற்றுக்குள், என் அளவிற்கு இடம் இருக்கிறதா?' என்னும் பார்வையில் யுகியை சோதிக்கத் தொடங்கினான்.

அதேநேரம், "என் முதல் கேள்வி... நேற்று. நீ செய்தது. சரியா?. தவறா?.", யுவனின் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தந்திருத்தமாக காற்றில் உதிர... தன் குருவின் அக்குரல் மாற்றத்தில் எச்சிலை விழுங்கியவன், எதைக் கேட்கிறார் என்றே புரியாமல் அரண்டு விழிக்க, "சொல் ஷேனா... நேற்று உன் குருவுக்கு ஆழமான காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியுள்ளாய். அதை நீ சரியெனச் சொல்கிறாயா? தவறெனச் சொல்கிறாயா?" இம்முறை யுவனின் குரல் சற்று உயர்ந்திருந்தது. அதைச் செவிமடுத்த யுகி, சட்டென இப்புறம் திரும்பி நோக்க, "அது-?. எனக்குத் தெரியாது.", தடுமாற்றத்துடன் கூறினாலும் தெளிவாகவே கூறிட... யுவனின் இரு சிவப்பு விழிகளும் ஜொலித்தது. 

"தவறு, கண்ணா. நீ செய்தது, தவறு... .... யுகி." அழுத்தக்குரலில் ஷேனாவிடம் கூறியவன், யுகியைக் கத்தி அழைக்க.. இறுதியாக ஒருமுறை தன் தலைவனிடம் அனுமதியைப் பெற்றப்பின் தன் உண்மை ரூபத்திற்கு மாறினான் யுகி. அவன்மீது பார்வையைப் பதித்த ஷேனா, மேலே மேலேத் தன் பார்வையை உயர்த்திக்கொண்டே போக... அரை-அடியில் தரையோடுத் தரையாக ஓடிக் கொண்டிருந்த யுகி, வானளவிற்கு உயர்ந்து நின்றான். சிவந்த நிறம் கொண்ட சிம்மயாளியாக.

சற்றுமுன் தன் முன்னிலையில் நின்ற அழகிய குட்டி மிருகம், திடீரென இத்தனை பெரிதாக மாறியதைக் கண்ட ஷேனாவிற்கு சர்வமும் அடங்கிட, பூனைக்குட்டியாய் குதித்துக் கொண்டிருந்த யுகி, பிரம்மாண்ட உருவம் கொண்ட சிம்மயாளியாக மாறிப்போய் விண்ணை நோக்கி உறுமிய ஒரேயொரு உருமலில் வேர்த்து விதிர்விதிர்த்துப் போய் நின்றான் அவன்.


✨✨✨


சூரர்கள் எண்வருடன் சேர்ந்து அந்தக் காட்சியை கோவன்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க... பிரிக்க இயலாப்பாசப் போராட்டம் ஒன்று நிகழ்ந்தேரிக் கொண்டிருந்தது அங்கே.

காலைமுதல் தீராவுடன் விளையாடிவிட்டு, இப்போது தத்தம் தலைவன்களின் அனுமதியின்றியே தங்களின் யாளி உருவத்தை அடைந்துவிட்டார்கள் அகி மற்றும் விகி. பூனைக்குட்டிகள் என ஆசையாக அவர்களைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்ற தீரா, அவர்களின் உண்மை ரூபத்தைக் கண்டு மிரண்டு அழுவாள் என நினைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டு, 'என் பெரிய பூனை குட்டிகள்ள்ள்ள்!!!.. ஹே! ஹே! ஹேஏஏஏ!!' என ஓடிச்சென்று, மலையேறுவதுபோல விசுக்விசுக்கென அகியின் நீலநிற உரோமங்களைப் பிடித்துக்கொண்டு அவன் மீது ஏறியவள், பஞ்சுமூட்டையின் மேல் நிற்பதாக நினைத்துக்கொண்டு குதியோ குதியெனக் குதித்துக் கொண்டிருக்க.. அதைக்கண்ட விகி, தீராவைப் போலவே தனியாகக் குதிக்க முனைந்த நொடி, சர்ரென பறந்துச்சென்ற வீரா, மலைபோல் வளர்ந்து நிற்கும் அகியின் மேலிருந்த தீராவின் சட்டையைக் கவ்விப் பிடித்துத் தரைக்குத் தூக்கி வந்துவிட்டான்.

வீரா தரையிறக்கிய வேகத்தில் அவன் வாயிலிருந்து நழுவி பொத்தென தரையில் அமர்ந்தவள், தன் ஆடையில் ஒட்டிய மண்ணைத் தட்டியபடியே குதித்தெழுந்து, மீண்டும் மலையைச் சேர்வதற்கு விகியிடம் ஓட... கண்டிப்புடன் ஏதோ கணைத்த வீரா, அவளின் ஆடையைப் பிடித்து இழுத்து ஓரமாக நிறுத்தினான். அதைக்கண்ட அகி, தன் தலையால் வீராவை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு, தீராவைப் பிடித்துத் தன் முன்னங்கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு, அவளை யாரும் தூக்கிச் செல்லாதவாரு அங்கேயே அமர்ந்து விட... சத்தமாகக் கணைத்தபடி சிலிர்த்துக்கொண்டு அகியிடம் வந்த வீராவை, முன்னின்றுத் தடுத்தான் விகி.

"இவர்கள் என்ன செய்கிறார்கள்? சற்று விளக்க இயலுமா?" கோவன்கள் இருவரையும் கேள்வியாக நோக்கிய சூரர்கள், தீராவுடன் நிற்கும் மூன்று விலங்குகளையும் சுட்டிக்காட்ட, "அவர்கள் யுத்தமிட முனைகிறார்கள்! தீராவுடன் விளையாடுவதற்காக!" கிசுகிசுக்கும் குரலில் விஷ்ணு கூறிய அதேநொடியில், அகியின் முன்னிலையில் சென்றிருந்தான் சக்தி.

"அகி! இவள் குழந்தை. நீ இவ்வாறு பிடித்திருந்தால் அவளுக்கு வலிக்குமல்லாவா." சக்தி, மென்மையாக அவன் மனதை மாற்ற முயற்சிக்க.. தலைவனின் சொல்லைக் கேட்டுத் தீராவை குனிந்து நோக்கி ஏதோ முணங்கினான் அகி. அவனை நிமிர்ந்து நோக்கிய தீரா, "ஆமாம். பாப்பாக்கு கைகள் வலிக்கிறது." பாவமாகக் கூறியதில் படக்கென அவளை விடுவித்த அகி, அவள் அங்கிருந்து ஓடிடும் முன்பாக தன் கால்களை அவளைச் சுற்றி வேலிபோல் வைக்க.. சற்றுத் தொலைவிலிருந்து, தீராவை விடுவிப்பதற்காகக் காத்திருந்த வீரா, அகி அவளை மீண்டும் ஒளித்துவைத்துக் கொண்டதில் கடுப்பாகி அகியைத் தாக்கிடுவதற்கு அவனை நோக்கி வேகமாக வரும்போதே மீண்டும் விகியால் தடுக்கப்பட்டான்.

விகியின் கணுக்கால் அளவிற்கே இருக்கும் வீரா, மலைபோல் உயர்ந்து நிற்கும் சிம்மயாளியை எதிர்த்து நிற்பதைக் கண்டு அனைவருக்கும் திக் திக் என்றிருந்தது. யாருமே அக்காட்சியினை எதிர்பார்த்திருக்கவில்லை... அத்தனைப்பெரிய உருவத்தைத் தன் பலம் கொண்டுத் தடுத்துக் கொண்டிருக்கிறான் வீரா. பிளந்த வாயை மூட மறந்து அனைவரும் அவர்களை நோக்க.. விகியும் வீராவும் தங்களின் தலையை ஒன்றாக முட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் தடுக்கவும் தகர்க்கவும் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

"இது எவ்வாறடா சாத்தியம்? சிம்மயாளியை ஒரு குதிரை எதிர்க்கிறதா?" கண்முன் காணும் காட்சியினை நம்பிட முடியாமல் சூரர்களின் கண்கள் வெளியே குதிக்க முனைந்த நேரம், "வீரா, சாதாரண புரவியல்ல. இவன் ஆதிலோகத்தில் இருப்பவன். அதனால் இதில் ஆச்சரியம் கொள்வதற்கு ஒன்றுமில்லை" தோளைக் குலுக்கிவிட்டு, விகியை நிறுத்துவதற்காக முன்னோக்கி சென்றான் விஷ்ணு.

ஆனால் அதற்கு முன்பாகவே, "வீராஆஆஆஆ.. ஹான்ன்ன்ன்ன் வீரா.. இங்கு வா. என்னிடம் வா வீராஆஆஆ." வேலியாக இருக்கும் அகியின் கால்களுக்குமேல் ஏற முடியாமல் அங்கிருந்து எம்பிக்கொண்டுத் தன் கைகள் இரண்டையும் நீட்டியபடி தீரா அழத் தொடங்கிவிட... அதைக்கண்டு  விகியை அப்படியே விட்டுவிட்ட வீரா அவளிடம் வருவதற்கும், தீராவின் அழுகையை பார்த்து அகி அவன் கரத்தை எடுத்துவிட்டு அவளுக்கு வழி கொடுக்கவும் சரியாக இருந்தது. 

தன்னைத் தடுத்துக் கொண்டிருந்த வேலி விலகியதும் ஓடிச்சென்று வீராவை அனைத்துக்கொண்ட தீரா, வழக்கம்போல அவன் தலைவழியாக கழுத்துக்கு ஏறி, முதுகில் சென்று அமர்ந்துக்கொண்டாள். அதை பார்த்து சோகமாகிய அகியும் விகியும் ஏக்கமாக தீராவை நோக்கி முணங்கியபடியே தங்களின் பூனை ரூபத்திற்கே வந்து விட்டார்கள்.

"ஹோய்! இருவரும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? மாலையாகிவிட்டது.  நான் அபி மாமாவைப் பார்க்கச் செல்லவேண்டும். மாமாவுக்கு காலில் மருந்திட வேண்டும். அதனால், நான் நாளை வருகிறேன். அழாதீர்கள்." பூனைக் குட்டியாகிய யாளிகளிடம் கூறிவிட்டுத் தன் சகோதரன்களுக்கும் கையசைத்துவிட்டு மாயவாயிலை திறந்தாள் தீரா. அவள் உயரத்திற்கு இருந்த வாயிலை கண்ட வீரா, 'இதனுள் நான் எப்படிச் செல்வதாம்?' என்பதுபோல் சிலுப்பிக்கொண்டு தன் கண்களை மூடித்திறக்க.. அவன் விழிவழியே பாய்ந்த வெண்ணிற மாயக் கதிர்கள், தீராவின் மாய வாயிலை பெரிதாக மாற்றியப்பின் அதனுள் சென்று மறைந்துவிட்டார்கள் இருவரும். அவர்களை வழியனுப்பிவிட்டு, குடிலுக்குள் சென்றுவிட்டார்கள் மற்றவர்கள். 

அபிக்கு மருந்திடவேண்டுமெனக் கூறிவிட்டு கிளம்பியவள், சொன்னதுபோலவே மருந்தைத் தூக்கிக்கொண்டு அபியின் முன்னிலையில் நின்றிருந்தாள். அவள் கையிலிருந்த மருந்தை வாங்கி அபியின் காயத்தில் பூசிவிட்டாள் சயனா. அவன் காலில் ஏற்பட்டிருந்தக் காயம் மிக ஆழமாக இருந்ததால், ஒரு திங்களாவது ஓய்வில் இருக்க வேண்டுமெனக் கூறியிருக்க.. அவனும் வேறு வழியின்றி அந்த அறையினுள்ளேயே அடைந்துக் கிடக்கிறான். 


மேலும், அன்று ராகவியிடம் கடிந்துக்கொண்டதற்கு அவனாகவே வருந்தி, மறுநாளே அவளிடம் பேச வேண்டுமெனக் கேட்க.. அந்தப் பிடிவாதக்காரி ஒப்புக்கொள்ளவில்லை. பதினைந்துநாள் அவளின் முகத்தைக் காணாமலே அபியின் பொழுது கழிந்திருந்தது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய பெரும் பாசப்போராட்டத்தின் பின்னர்தான் அபியுடன் பேசமட்டும் ஒப்புக்கொண்டாள். அதேநேரம், அன்றுத் தொடங்கியது ராகவியின் புதிய அவதாரம்.

'என் முகத்தைப் பார்க்க ஜித்தூவுக்குப் பிடிக்கவில்லை... அப்படி அவன் என்னைப் பார்த்தால் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமாம். அதனால், அவன் என் முகத்தை இனி பார்க்கவேண்டாம்." என முகத்திற்கு திரையிட்டு மறைத்தபடியேதான் வளம் வருகிறாள் ராகவி. அபி பேசிய பேச்சுக்கு தண்டனையாக, அவனே இவளை சமாதானம் செய்யட்டும் என பெரியவர்களும் அவளை அப்படியே விட்டுவிட, தன் ராவியை சமாதானப்படுத்தி்டும் வழியரியாது திக்குமுக்காடி போனதென்னவோ அபி தான்.


✨✨✨


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro