43. குறுவாள் பயிற்சி
மையாழி மரத்தின் முன்னிலையில், ஆறடி உயரமான கம்பம் ஒன்று நட்டுவைக்கப்பட்டு அதில் ஒரு வட்டப் பலகையைப் பொருத்தியபடி நின்றிருந்தான் சக்தி. அருகே இருக்கும் வேறொரு மரத்தினடியில் அமர்ந்திருந்த யுவன் மற்றும் விஷ்ணுவின் நடுவே நின்றுக்கொண்டு, சக்தி செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஷேனா, "அவர் என்ன செய்கிறார்?" பலகையைச் சரியாகப் பொருத்துவதற்கு அதை ஆட்டிக் கொண்டிருக்கும் சக்தியைச் சுட்டிக்காட்டியபடி கேட்க.. சிஷ்யனின் பார்வையைக் கண்டு மெல்லச் சிரித்துக்கொண்ட விஷ்ணு, "அவர், உனக்கான இலக்கைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார் ஷேனா." என்றபடி அவனை இழுத்து நடுவில் அமர வைத்தான். "ஓஹ்! ஆனால், அது எதற்காக?" சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டு மறுகேள்வியைக் கேட்க, "அதுவும் உன் பயிற்சிக்காகத்தான் ஷேனா" விடை கொடுத்தான் யுவன்.
"பயிற்சிக்காகவா? நேற்று என்னிடம் குறுவாள் பயிற்சி என்று தானே சொன்னீர்கள்?"
"ஆம், கண்ணா. குறுவாள் பயிற்சியே தான். உன் குறுவாளை நீ அந்த பலகையின் மையத்தில் உள்ள இலக்கின் மீது சரியாக வீசிட வேண்டும். அவ்வளவு தான்", கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இலக்கு-வட்டமானது சரியான உயரத்தில் உள்ளதா எனச் சரிபார்த்தபடி பின்னோக்கி நடந்துவந்த சக்தி, ஷேனாவிற்கு விடை கொடுத்தபடி அவர்கள் மூவரையும் நோக்கித் திரும்பி நிற்க, "எனில், இன்று என் கண்களைக் கட்டவில்லையா?", அதையும் ஆச்சரியத்துடனே கேட்டான் அவன். "ஹம். முதலில், கண்களைத் திறந்துக்கொண்டுக் குறிபார்க்கக் கற்றுக்கொள், கண்ணா. பிறகு, கண்களைக் கட்டிக்கொண்டுப் பயிற்சி மேற்கொள்ளலாம்." என்ற விஷ்ணு, நேற்றைய பயிற்சியைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க.. பாவம், அவனுக்குத்தான் கண்ணைக் கட்டியது.
"ஹான், சரி. நான் இரண்டு விதத்திலும் குறிப்பார்க்கிறேன். ஆனால், என்னிடம் குறுவாள் இல்லையே. என் அம்மா கொடுத்ததையும் அன்று நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்." முகம் சுருங்கப் புகார் கூறியவனைக் கண்டு மெல்லச் சிரித்த சக்தி, அவனுக்கு முன்பாக அமர்ந்து, "ஹஹா! கவலைக் கொள்ளாதே, கண்ணா. உன் அம்மா உனக்குக் கொடுத்த 'உன்'னுடைய குறுவாள், என்னிடம் தான் பத்திரமாக உள்ளது." மெல்லியப் புன்னகையுடன் கூறியவன் தன் இடையிலிருந்தக் குறுவாளினை உறுவி, "இதோ.. இதைப் பெற்றுக்கொள்." அவன்முன் நீட்டிட, "என்னுடைய குறுவாள்!" ஆர்வமாக அதைக் கையில் வாங்கினான் ஷேனா.
யுவனும் விஷ்ணுவும் அவனைப் புன்னகையுடன் பார்த்திருக்க, "சரி, இன்னும் ஒரேயொரு பணி மட்டும் உள்ளது. நான் அப்பணியினை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரையில், நீ ஆயத்தப் பயிற்சிகளை மேற்கொள்." என்றுவிட்டுத் தன் பணியினை கவனிக்கச் சென்றுவிட்டான் சக்தி. "ஆயத்தப் பயிற்சி எனில்?" தன் குறுவாளை ஆர்வமாக நோக்கிக் கொண்டிருந்த ஷேனா, சக்தியின் வார்த்தையால் குழம்பிப்போய் மற்ற இருவரையும் நோக்கிட, "ஆயத்தப் பயிற்சியெனில், முக்கியமான அல்லது கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளும் முன்பாக, அதற்காகத் தயாராகிடுவதற்கு மேற்கொள்ளப்படும் பயிற்சி. அதைச் செய்ய நீ தயாரா, ஷேனா?", விளக்கம் கொடுத்தவாறு எழுந்த யுவனுக்கு ஆர்வமாக தலையசைத்தான் ஷேனா.
"சபாஷ்! இந்த ஆர்வத்தைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன், ஷேனா. எங்கே.. ஓடிச்சென்று, அதோ தெரிகிறதே ஒரு நீல வண்ண மரம்... அதைத் தொட்டுவிட்டு மீண்டும் இங்கு வா பார்க்கலாம்." யுவன் கூறியதை அடுத்து, குடுகுடுவென ஓடிச்சென்று அவன் குறிப்பிட்ட மரத்தினைத் தொட்டுவிட்டு மீண்டும் வந்துத் தனது குருவின் முன் நிற்க, "இதேபோல் பத்து முறை ஓடிவிட்டு வா." என்றவனைப் பட்டென நிமிர்ந்து நோக்கி முறைக்கத் தொடங்கினான் அவன். "ஷேனா, குரு சொல்வதைக் கேட்கவேண்டும் என உன் அம்மா கூறியுள்ளார். நினைவில் உள்ளது தானே?" ஏதோ ஒரு திசையை பார்த்தபடி விஷ்ணு கூறியதில் அவ்விருவரையும் முறைத்த நிலையிலேயே நீல நிற மரத்தை நோக்கி ஓட்டமெடுத்தான் அவன். மறுபுறம் சக்தி, வட்டப் பலகையில் சிவப்பு, கருப்பு, வெள்ளை என வட்டவட்டமாகச் சாயம் பூசிடும் நிலையிலேயே அமர்ந்திருக்க... ஷேனாவின் ஓட்டம் முடிந்ததும் அவனை அடுத்தடுத்த ஆயத்தப் பயிற்சிகளைச் செய்யக்கூறி அவனது பலத்தைச் சோதித்த வண்ணமே இருந்தார்கள், யுவன் மற்றும் விஷ்ணு.
'உன் கைகள் இரண்டினையும் தலைக்கு மேல் உயர்த்து.'
'அப்படியே கீழே குனிந்து உனது பாதங்களைத் தொடு..'
'இன்னும் நன்றாகக் குதி, ஷேனா. இந்த வேகம் போதாது'
'இது சிறிய மரக்கிளை தான். இதைப் பிடித்துச் சற்றுநேரம் தொங்கு.. அடுத்ததை பிறகு சொல்கிறேன்', என கிட்டத்தட்டக் கால்மணி நேரமாகச் சில ஆயத்தப் பயிற்சிகளுக்கு ஷேனாவைப் பழக்கப்படுத்தத் தொடங்கியிருக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பகியவன், "ஹாஹ்.. என்னால் முடியாது. போதும். எனக்குக் கால்கள் வலிக்கிறது. இதற்குமேல் நீங்கள் சொல்லும் எதையும் நான் செய்யமாட்டேன். எனக்கு இது பிடிக்கவில்லை." கோபமாகக் கத்தியவனை, அவரவர் வேலையில் இருந்தபடியே வெவ்வேறு திசையிலிருந்து ஒரேபோல் திரும்பி நோக்கினார்கள் அம்மூவரும்.
முதல்நாள் ஓடியதுபோல் இன்றும் ஓடிவிடுவானோ என கோவன்கள் மூவரும் அவனைத் திகிலுடன் நோக்க.. நல்லவேளையாக அப்படி எதுவும் செய்திடவில்லை அவன். தப்பி ஓடுவதற்கு வழி இல்லாமல், பயிற்சி மேற்கொண்டதில் கால்வலி வந்துவிட்டது போலும்.. கால்கள் இரண்டினையும் நீட்டி அப்படியே அமர்ந்துவிட... அதைக்கண்டுப் புன்னகைத்துக் கொண்ட யுவன், அவன் வழியிலேயே செல்ல முடிவெடுத்துவிட்டான். "சரி. சரி, ஷேனா. உனக்குப் பிடிக்கவில்லை எனில் அது வேண்டாம். நீ சிறிதுநேரம் ஓய்வெடு. பிறகு, குறுவாள் பயிற்சியைத் தொடங்கிடலாம். சரி தானே?" யுவன் மென்மையாகக் கேட்க.. தன் வேலையை முடித்துவிட்டு கைகளில் தூசி தட்டிக் கொண்டிருக்கும் சக்தியை நிமிர்ந்து நோக்கிய ஷேனா, "இல்லை, வேண்டாம். எனக்கு ஓய்வு வேண்டாம். இப்போதே கற்றுக் கொடுங்கள்." உற்சாகமாக எழுந்துக் கொண்டான்.
அவனின் இந்த வீம்புச் செயல்களையெல்லாம் கோவன்கள் மூவருமே கண்டிக்கவில்லை. ரசிக்கத்தான் செய்தார்கள். அவன் ஆசையின்படியே அன்றுமுதல் அவனுக்கு குறுவாள் பயிற்சித் தொடங்கிட.. முதலில், அதை முறையாகப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அது வெறும் ஒருநாள் தான். மறுநாள், குறுவாளுடன் சேர்த்துக் கை-கால்களின் அசைவுகளையும் தாக்குதல் யுக்திகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அடுத்து, குறிப்பார்த்து இலக்கினைத் தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. முழுவதுமாக இரண்டே வாரம்தான், குறுவாளுக்குக் கச்சிதமாகப் பழகிக்கொண்டான் ஷேனா. அவன், குறுவாள் பிடிக்க முறையாகக் கற்றுக்கொண்டப் பின், முதல் தக்குதலே விஷ்ணுவின் உள்ளங்கை தான். தாக்கியப்பின், யாரேனும் தன்னைக் கடிந்துக்கொள்ளும் முன்பாக ஒரே ஓட்டமாக ஓடியே விட்டான். ஆனால் கோவன்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.
அடுத்தடுத்த நாட்களில் அவனுக்குச் சில தற்காப்புப் பயிற்சி, வில் பயிற்சி, வேல்கம்புப் பயிற்சி, கத்தி எரியும் பயிற்சி என ஒவ்வொன்றாகக் கற்பித்துக்கொண்டேச் செல்ல... ஒரு பயிற்சிக்கு அதிகபட்சம் ஒரு வாரம் தான். விரல் நுனியில் கற்றுக்கொள்வான் அவன். கற்றுக்கொண்டக் கையோடுத் தன் குருக்களில் ஒருவரையேனும் காயப்படுத்திட மறந்ததில்லை. குறைந்தபட்சம், அவர்களைக் காயப்படுத்த முயற்சியாவது எடுத்துவிடுவான். அதற்கு, குருக்கள் கடிந்துக்கொள்ளும் முன் சிட்டாகப் பறந்துவிடுவான். இருள்மாளிகைக்குச் சென்றதும் தன் அன்னையிடம், அன்றையதினம் கற்றுக் கொண்டவைகளைப் பற்றி உற்சாகமாகக் கூறுவான். ஆனால், தன் குறும்புகளை மறைத்துவிடுவான். ஷிவேதனாவிற்கும் மகிழ்ச்சியே. தன் மகன், மாவீரனாக மாறுவது எந்தத் தாய்க்குத்தான் கசக்கும்? ஆனால் அவரின் ஒரே குழப்பம், இருளரசன், அப்படி என்ன யாகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதுதான்.
இங்கே இன்னொருபுறம், ஆதிலோகத்தில் நடப்பவையெல்லாம் அன்றைய பொழுதின் மாலைகளில் தங்களின் குடிலுக்குச் சென்றதும், தங்கள் சிஷ்யன் செய்த அட்டகாசங்களைச் சூர்களிடம் கூறிப் புலம்பிக்கொண்டு, தலையைப் பிய்த்துக்கொள்வது கோவன்களின் வழக்கம் ஆகியிருக்க.. சூரர்களும், தங்களுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் தங்கையாகிய தீராவைக் குறித்துக் கோவன்களிடம் கூற மறந்ததில்லை. அன்று, வீராவுடன் வந்திருந்தவள், முழுக்க முழுக்க இவர்களுடன்தான் தங்கியிருந்தாள். கோவன்கள், வீராவின் தோற்றத்தைக் கண்டு முதலில் வியந்தாலும் ஆதிலோகத்தின் அற்புதங்களில் இதுவும் ஒன்று என நினைத்து அப்படியே விட்டுவிட்டார்கள். மறுநாள், மையாழியிடம் இதுபற்றிக் கேட்டு, தீரா, தாரி மற்றும் வீராவின் ஆதிலோக வருகையைப் பற்றித் தெரிந்துக்கொண்டார்கள்.
அபி அனுமதிகொடுத்த நாள் முதலாக தீராவின் பூலோக பயணம், தினசரி பயணமாக மாறியிருக்க.. சூரர்கள் எட்டுபேர் மட்டுமல்லாமல் கோவன்கள் மூவரும் கூட அவளின் சேட்டைகளை தினசரி விடியல்நேரப் பொழுதுபோக்காக மாற்றியிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நண்பன் எனவும் சகோதரன் எனவும் அழைப்பதை பார்த்து தீராவும் அவ்வாறே அழைக்கத் தொடங்கியிருந்தாள்.
மேலும், நான்கே வயதில் சூரர்களின் திறமைசாலியான குட்டி சிஷ்யை ஆகியிருந்தாள் தீரா. அவளின் பயிற்சித் தொடங்கியது, ஒரு கம்புக்குச்சியை வைத்துதான். அன்று ஒருநாள், சூரர்களில் ஒருவன் வாள்பயிற்சியில் இருந்த சமயம், தனக்குப் பக்கவாட்டில் ஒரு குட்டி நிழலைக் கவனித்தான். தன்னுடைய அசைவுகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அந்த நிழலும் அசைந்துக்கொண்டிருந்தது. குறும்புன்னகையுடன் பின்னால் திரும்பியவன் கண்டது, குச்சியை வாளாக நினைத்து அதை வைத்துக்கொண்டு நிற்கும் தீராவைத் தான். அன்றுமுதல் தொடங்கியது அவளுக்கான பயிற்சிகள். கற்றுக்கொடுக்கும் அசைவுகளை ஒருமுறை கண்ணால் பார்த்ததற்கே, அதைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு அப்படியேச் செய்துக்காட்டி அனைவரையும் வியக்கச்செய்வாள். மேலும், இரும்பு வாளை அவள் கையில் கொடுத்தால், வாளோடு சேர்ந்துக் குப்புறக் கவிழ்ந்து மண்ணைக் கவ்விக் கொள்கிறாளென, அவளுக்கு ஏதுவாக ஒரு மர-வாள் வேறு செய்துக் கொடுத்திருக்கிறார்கள் சூரர்கள். அந்த மர வாளை வைத்துகொண்டு அவள் ஆடிடும் ஆட்டங்களைக் கண்டு அவளின் அபி மாமாவே பொறாமை கொள்வான். ஆனால், அவள் ஷேனாவை போலெல்லாம் தினசரி பயிற்சி மேற்கொள்ள மாட்டாள். தோன்றும்பொழுது உடன் வந்து நிற்பாள். பிடிக்கவில்லை எனில் தனது நான்கு கால் நண்பர்களுடன் கலந்துரையாடலுக்கு கிளம்பி விடுவாள்.
இதுதான் அவர்களை வெகுவாக அதிசயிக்கச் செய்தது. அவளுக்கு மிருகங்களின் மொழி புரிகிறது. அவைகளுக்கும் இவளின் மொழி புரிகிறது. கோவன்களால் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துக்கொள்ள முடியும் என்பதால்தான் இந்த விஷயமே அவர்களுக்குப் புரிந்தது. இல்லையெனில், குழந்தை.. விளையாட்டாக ஏதோ பேசுகிறாள் என விட்டிருப்பார்கள்.
இப்படியே, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. ஷேனாவின் சேட்டைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், 'சிறுவன்... ஆர்வமிகுதியில் விளையாடுகிறான். நம் சிஷ்யன் தானே. சிஷ்யன் தாக்கிக் காயம் பெறுவது எத்தனை குருக்களுக்கு கிடைக்கும்?' என கோவன்கள் ஆரம்பத்தில் விளையாட்டாக அதைக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதுவே பெரும் வினையாகி வளர்ந்து நின்றது அன்றைய நாளில்.
தங்களின் குடிலில், தன் முதுகில் ஏற்பட்டிருந்த ஆழமான காயத்திலிருந்து நில்லாமல் ஓடும் உதிரத்துடன், ஒரு விரிப்பில் படுத்திருந்தான் சக்தி. இதற்கு காரணமும் அவர்களின் குறும்பு சிஷயன் ஷேனாவே. ஒருஅடி நீளம் இருக்கும் கையடக்க ஈட்டியை எரியக் கற்றுக் கொண்டதை அவன் சோதித்துப் பார்த்திட இன்று பலியாகியவன் தான் சக்தி.
ஏதோ யோசனையில், கோவன்கள் மூவருமே ஷேனாவை கவனிக்கத் தவறியிருக்க... மின்னல் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டுச் சென்ற அவனது ஈட்டி, சக்தியைப் பதம்பார்த்தப் பின்னரே நிகழ்ந்ததை கவனித்தார்கள் மூவருமே. ஆனால், அவர்கள் ஏதும் சொல்வதற்குள் ஓடிவிட்டான் அவன்.
"மெய்யாகவே ஒரு சிறுவன்தான் உம்மைத் தாக்கியதா?" சக்தியின் காயத்தைச் சுத்தப்படுத்தி முடித்திருந்த சூரர்களில் ஒருவன், அதன் ஆழத்தைச் சோதித்தபடியே கேட்க, "ஏனடா? மருந்திடாமல் இப்படியொரு வினாவினை வினவுகிறாய்? முதலில் காயத்திற்கு மருந்திடடா, மடையா!" நண்பனின் தலையிலேயே அடித்தான் விஷ்ணு. சரியெனக் கூறி மருந்திட்டுக்கொண்டே, "அப்படி ஒரு சிறுவன் தான் உம்மைத் தாக்கியதெனில்... அவன் மெய்யாகவே ஒரு பலசாலி தான்! காயம் எத்துனை ஆழமாக உள்ளது!? இதைச் செய்தது ஒரு சிறுவனெனில் அதை எவருமே நம்பிட மாட்டார்கள். இப்போது ஒப்புக்கொள்கிறேன் உம் சிஷ்யனின் திறனை." ஷேனாவின் திறனைக் கற்பனை செய்துக்கொண்டே அவன் வியந்துக் கொண்டிருக்க, "அதென்னவோ உண்மைதான். எங்களின் குறும்புக்கார சிஷ்யன், எம் மூவரின் செல்ல மாவீரனே." சக்தி, குப்புறப் படுத்த நிலையிலேயே தன் சிஷ்யனைக் கொஞ்சிய அதே நொடி, "நாம் செல்லம் கொடுத்ததுதான் இப்போது தவறாகி உள்ளது. நம்மில் ஒருவரேனும் அவன் முதல்முறை தாக்கியபோது கண்டித்திருக்க வேண்டும்." என யுவன் கத்தியக் கத்தலில் மற்ற பத்து பெரும் அவன் புறம் பார்வையை திருப்பினார்கள்.
"இதை இனியும் நடக்க விடக்கூடாது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்." கோபம் போங்கும் தன் ஆழ்ந்தக் குரலில் உறுமிய யுவன், "சக்தி.. விஷ்ணு.. இன்னும் இரு தின பயிற்சிக்கு, தாம் இருவருமே வர அவசியமன்று. நான் கவனித்துக்கொள்கிறேன் அவனை. என்னையும் இரு தினம் யாரும் தேட வேண்டாம். நான், இங்கு வராமளிருக்கக்கூட வாய்ப்புள்ளது." கட்டளையாகக் கூறிக்கொண்டே, தன்னைத் தடுக்க முனையும் மற்றவர்களின் சொல்லையெல்லாம் காதிலேயே வாங்காமல் தன் நீண்ட சிவப்பு நிற ரெக்கையை விரித்து, மின்னல் வேகத்தில் காற்றில் பறத்தான் யுவன்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro