Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

42. ஷேனாவின் ஆர்வம்.

"அம்மா, அம்மா... சீக்கிரம் உணவை ஊட்டி முடியுங்கள். நான் குருக்களைச் சந்திக்க விரைவாகச் செல்லவேண்டும்." என்றும் இல்லாமல் இன்று அவனாகவே முன்வந்து உணவை உண்டுக் கொண்டிருக்கிறான் ஷேனா.

"அட! நேற்றுதான் 'அவர்கள் என்னைத் துன்புறுத்துகிறார்கள்... அவர்களை எனக்குப் பிடிக்கவேயில்லை.. நான் அவர்களிடம் செல்ல மாட்டேனென அடம்பிடித்தாய். இன்றென்ன, இத்தனை ஆர்வம்?" மகனின் மலர்ந்த முகத்தைக் கண்டுப் புன்னகைத்தபடி, அவனுக்கு உணவு ஊட்டியபடியே ஷிவேதனா கேட்க, "அம்மா! இல்லை... அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் நேற்று என்னைத் திட்டவேயில்லை. என்னை பாராட்டினார்கள். உங்களைப் போலவே" பின்புறமாக இருந்து அன்னையின் கழுத்தில் தொங்கியவன், "அவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது அம்மா." முன்னும் பின்னுமாக அசைந்தாட, "ஆஹா! என் மகனுக்கு என்னைவிட வேறு ஒருவரைப் பிடித்துள்ளதே... நான் என்ன செய்வேன்?" போலியாக முகம் சுருக்கினாள் ஷிவேதனா.

அன்னையின் நாடகத்தைத் தெளிவாக அடையாளம் கண்டுக்கொண்ட ஷேனா, "ஹிஹி. அம்ம்ம்மா! அவர்கள் உங்களைப் போலவே இருப்பதால்தான் அவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால், உங்களை எப்போதுமே பிடிக்கும்." அன்னையின் கன்னத்தொடு தன் கன்னம் உரசிட.. புன்னகைத்துக்கொண்ட ஷிவேதனா, அவனுக்கு உணவை ஊட்டி முடித்தார். மகனின் இந்த உற்சாகம் அவர் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்திருந்தது. எப்படியாயினும் தன் மகனுக்குச் சிறந்த வாழ்வு கிடைத்தால் போதுமென மட்டும்தான் விரும்பியது அந்தத் தாயுள்ளமும். சமத்துப் பிள்ளையாக உணவை உண்டு முடித்திருந்த ஷேனா, வழக்கம்போல் அன்னைக்குக் கன்னத்தில் முத்தமிட்டு, இருளரசனின் தொல்லை இல்லாமல் நேற்றைய தினத்தைக் காட்டிலும் சற்று விரைவாகவேத் தன் குருக்களை நாடி ஓடி விட்டான்.

ஷேனா, தன் குருக்களைக் காண அதிவிரைவாக வனதேசம் புறப்பட்டான் எனில், அவன் குருக்கள் அவனுக்கும் மேல். சிஷ்யனின் ஆர்வத்திற்குத் தீனிபோட அவனுக்கு முன்பாகவே மையாழி மரத்தை அடைந்து, சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்கள் அம்மூவரும். ஷேனாவிற்குத் தடையாக இருந்த இருளரசன், மூன்றுத் திங்கள் வரையில் தியானத்தில் அமர்ந்துவிட்டார் என்னும் செய்தியை நேற்று ஷேனா கூறிய நொடியே, இன்று எப்படியும் அவன் விரைவாகவே வந்துவிடுவான் என்பதை அவர்கள் யுகித்திருக்க, அதனைப் போய்யாக்கிடாமல் அவர்கள் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே வந்துவிட்டான் அவன். 

வந்ததும், முதல் வேலையாக குருக்கள் மூவரையும் வரிசையில் வந்து நிற்கக்கூறி, மூவரின் பாதங்களையும் பணிந்து எழ.. தங்களின் சிஷ்யனாக இருப்பினும் ஆசி பெறுவதற்கே தங்களை அதிகாரம் செய்பனைப் பார்த்து உள்ளுக்குள் வியந்துக் கொண்டாலும் அவனை மனமாற வாழ்த்த மறக்கவில்லை கோவன்கள்.

"இவையெல்லாம் எதற்கு?" செடி-கொடிகளை வைத்து வட்ட வேலியைப்போல் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து, சில மூங்கில் கம்புகளை ஆங்காங்கே நட்டுவைத்து அதில் கயிறுகட்டி நாலாத்திசையிலும் சில பந்துகளைத் தொங்க விடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஷேனா, குழப்பமாக மூவரையும் நோக்க, "எல்லாம் உன் பயிற்சிக்காகவே தான் ஷேனா." அவனைத் தன்னோடு அனைத்தபடி விடை கொடுத்தான் யுவன்.

  "எனக்காகவா? இதைவைத்து என்ன செய்ய வேண்டும்?"

"தியானப் பயிற்சியில் முதல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி. நேற்றைய தினம் நீ அதைச் சிறப்பாகச் செய்துவிட்டாய், ஷேனா. அடுத்தக்கட்டப் பயிற்சிதான் இது. உன் சுற்றத்தைக் கூர்ந்து கவனிக்கும் பயிற்சி."

"தொடங்கலாமா?" யுவனைத் தொடர்ந்து விஷ்ணு கேட்க... சரியென தலையாட்டியபடி ஆர்வமாகக் குதித்தவனின் கண்களை, சிறு துணியைக்கொண்டு கட்டிவிட்டான் விஷ்ணு.

"ஹான்ன்! ஏன் என் பார்வையை மறைக்கிறீர்கள்?" ஷேனா, சினுங்கிட.. "இதுதான் அடுத்தப் பயிற்சி, ஷேனா. அஞ்சாதே! யாம் இங்கேயேதான் இருக்கிறோம்." தன் சிஷ்யனை சமாதான படுத்தினான் சக்தி. இருள்மாளிகையின் இருளுக்குள்ளேயே தன் மொத்த வாழ்நாளையும் கழித்துக் கொண்டிருக்கும் இவனுக்கு, இந்த மெல்லியத் துணி கொடுத்திடும் இருளா அச்சத்தைக் கொடுக்கப் போகிறது? கண்களைக் கட்டியப் பின்னரும் அதே உற்சாகத்துடன், "சரி, சரி! என்ன பயிற்சி அது?" நின்ற இடத்திலேயே குதிக்கத் தொடங்கிவிட்டான் ஷேனா. 

✨✨✨


ரட்சகராஜ்யத்தின் ஜனக்கூட்டம் மொத்தமும் ரத்னமாளிகையின் தென் முனையில் இருக்கும் விசாலமான ராஜசபையில் தான் கூடியிருந்தது. மாளிகையின் வாயில்முதல் நீண்டிருந்த சிவப்புக் கம்பள நடைபாதை எங்கிலும் பலவண்ண வாசனைமலர்கள் தூவப்பட்டிருக்க... சபையெங்கிலும் பன்னீர் வாசம் பரவிக்கிடக்க... தூபங்களின் மெல்லிய புகையும் வாசமும் இதமாக அவ்விடத்தைச் சூழ்ந்திருக்க... அந்தச் சிவப்புக் கம்பளம் நிறைவடையும் இடத்திலிருந்து, நவ-ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கு ஏழு படிகளைத் தாண்டி வீற்றிருந்தது ரட்சகராஜ்ய தலைமையின், கம்பீர ராஜசிம்மாசனம். 

ஆறடி நீளம் எட்டடி உயரத்தில், கண்ணாடிப் பளிங்குப் போன்ற வைரத்தாலும் முத்து, மாணிக்கம் என ஜொலிக்கும் வண்ண வண்ண ரத்தினங்களாலும் மிடுக்குடன் உருவாக்கப்பட்டிருந்தது அந்த ராஜ சிம்மாசனம். இத்தனை பிரம்மாண்டத்தின் மத்தியில், குட்டி மலர்களாக மலர்ந்திருந்தார்கள் இன்றைய முக்கியஸ்தர்களான வருங்கால இளவரசிகள் இருவரும். சிவப்புப் பட்டுப்பாவாடையில் மூத்த இளவரசியான மஹிமாயாவும், நீலப் பட்டுப்பாவாடையில் இரண்டாம் இளவரசியான ரக்ஷஹாசினியும் அந்த ராஜ சிம்மாசனத்தின்மீது ஜம்மென அமர்ந்திருக்க... மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அடைந்து, பலவித பரிசுகளால் அவ்விரு தேவதைகளையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்களைநோக்கி வரும் பரிசுகளில், கண்ணைப் பறிக்கும் அழகில் ஜொலிக்கு பரிசுகளைக் கண்கொட்டாமல் பார்த்தபடியும், சிலர் தங்களின் கைப்படச் சமைத்து எடுத்து வந்திருக்கும் இனிப்புகளை ஒருவாய் ஊட்டியப்பின் மறுவாய் வேண்டி அவர்களை நோக்கி எம்பி எழ முயற்சிப்பதுமாக விழிகளை உருட்டி உருட்டி அனைவரின் முகங்களையும் நோக்கிக் கொண்டிருக்கும் மகள்கள் இருவரையும் மெல்லிய புன்னகையுடன் பார்த்தபடியே சிம்மாசனத்தின் இரு பக்கத்திலும் நின்றிருந்தார்கள் சத்யஜித்-சத்யபாமா தம்பதிகள்.

வெகுநேரம் இதேக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததால் சலிப்புத் தட்டியச் சிறியவர்கள் பட்டாளம், தங்களில் விளையாட்டு இடமாகிய விலங்கு லாயத்திற்கு ஓடிவிட.. தாரியைத் தூக்கிக் கையில் வைத்திருந்த ராகவி மட்டும், அபிக்கு ஆயுதம் தேர்வுசெய்யப் போகிறேனென அவனை இழுத்துக்கொண்டு ஆயுதக் கிடங்கிற்கு நகர்ந்துவிட்டாள். ரத்னமாளிகையின் வடக்கு வாயிலின் இடதுபுறத்தில், மற்ற மாளிகைகளை காட்டிலும் சற்றே அளவில் சிறியதாக இருக்கும் அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தபடியே, "ஜித்தூ, உனக்கு வாள் வேண்டும். வில் அம்பு, கோடாரி, ஈட்டி, வளரி இவையெல்லாம் வேண்டும். ஆனால், முதலில் எந்த ஆயுதம் வைத்துப் பயிற்சிக் கொடுப்பார்கள்? ஹுஃப்... நாம் முன்னரே மாமாவிடம் கேட்டிருக்க வேண்டும். சரி, நானே எதையாவதுத் தேடுகிறேன்." மாயாஜாலங்களின் உதவியால் கிளங்.. டங்.. டிங்.. கிளிங் என நாலாத்திசையிலும் உருண்டுக் கொண்டும் உரசிக்கொண்டும் இடித்துக்கொண்டும், தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பலவித ஆயுதங்களுக்கு மத்தியில் நடந்துக் கொண்டிருந்தார்கள் அபி மற்றும் ராகவி. 

வாயில் விரல்வைத்துச் சப்பியவாரே, இங்குமங்குமாகப் பறந்துக் கொண்டிருக்கும் சிறு சிறு இரும்புப் பொருட்களை வேடிக்கைப் பார்த்தபடி ராகவியின் கரத்தில் சாவகாசமாக அமர்ந்திருந்தாள் தாரி. மாளிகைக்கு வரும்முன்பாக நிழந்த நிகழ்வால் தோன்றியிருந்த ராகவியின் பயம், அப்போதே நீங்கியிருந்தது. மேலும், இப்போது வரையில் பயப்படும் அளவிற்கு அவள் எந்தக் காட்சிகளையும் பார்த்திடவில்லை. ஆனால், அபியின் நிலமைதான் பரிதாபம்! 'அந்தப் பரிசுப் பொருளானது ஒருவரின் மன தைரியத்தைச் சோதிப்பதற்காகப் பல்வேறு மாய பிம்பத்தைத் தோற்றுவிக்கும்' என மகாராணி கூறியதாக சத்யஜித் அபியிடம் கூறியதுமுதல் அவனும் தன் பயத்தை மறக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அவன் முயற்சிகள் ஒவ்வொன்றும் காலையில் பார்த்த அந்தக் காட்சிகளையே நினைவுப் படுத்திட... வேறு எந்த விஷயத்திலும் தன் கவனத்தைச் செலுத்திட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான் அபிஜித்.

"ஜித்தூ, இந்த ஈட்டி உனக்கு பொருந்துமா?" நீளமான ஈட்டி ஒன்றினை எடுத்த ராகவி அபியின் கரங்களில் தினித்ததில் தன் சுய உணர்வின்றியே அவன் அதைப் பிடித்துக்கொள்ள, "ஆஹான். இது உயரமாக இருக்கிறது. இது வேண்டாம்." அவளே திரும்ப வாங்கி, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள். "ஹம்ம், குருவாள்?.. ..  குருவாள் பயிற்சிதான் வாள் பயிற்சிக்கு முன்பாகக் கொடுப்பார்கள். இதை எடுத்துக்கொள் நீ. ஆனால், இதற்கும் முன்பாக வேறு பயிற்சி ஏதேனும் இருக்கிறதா என்ன?" குருவாள் ஒன்றினை அவன் கரத்தில் வைக்க... அதைப் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக திருப்பித்திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் கவணம் இங்கில்லை. 

"பரவாயில்லை, இதையும் வைத்துக்கொள். உனக்குக் குருவாள் பயிற்சி கொடுக்கும்போது இதையே வைத்துக்கொள்." என்றுவிட்டு அடுத்த ஆயுதத்தைத் தேர்வுசெய்ய அவனை இழுத்துக்கொண்டு நகர.. அவனும் எதுவுமே கூறாமல் நடந்தான். இப்படியே பல ஆயுதங்களை அவர்கள் பார்த்துக்கொண்டேச் செல்ல.. எதிலும் கவனம் பதிக்காமல் ராகவி இழுக்கும் இழுபிற்கெல்லாம் நடந்துக் கொண்டிருந்தவன், திடீரென அலறியபடி தரையில் அமர்ந்தான். அவனது இடதுகால் முழுவதிலும் இரத்தம் ஆறாகி ஓடத்தொடங்கியது. 

தரையோடுத் தரையாக நகர்ந்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கூர்மையான ஆயுதத்தைக் கவனிக்காமல் அபி நகர்ந்திருந்தாதால் புத்தம் புதியதாக இருந்த அந்த ஆயுதம், மெல்லியக் கீரலிலேயே மிக ஆழமானக் காயத்தை அபியின் காலில் ஏற்படுத்தியிருந்தது. அபியின் அலரலிலும் அவன் காலில் ஓடிடும் ரத்தத்திலும் ராகவின் கண்கள் மடை திறந்திட.. அவள் கையிலிருந்த தாரியும் ஓவென வீரிட்டு அழத் தொடங்கியிருந்தாள்.

"ஆஹ்! ராவி... இங்கிருந்துச், செல். ஸ்ஸ்.. சென்று யாரையேனும் அழைத்து வா, ராவி! என்னால் எழ முடியாவில்லை."

"ஜி-ஜித்தூ.. ஜித்தூ, நான்- உடனடியாக சித்தியை அழைத்து வருகிறேன். நீ இங்கேயே இரு. நான் விரைந்து வருகிறேன்." அழுதுக் கொண்டிருக்கும் தாரியை அவனருகில் வைத்தபடி பரபரப்பாகக் கூறியவள், வேகமாக அங்கிருந்து ஓடிச்சென்றாள். இங்கு, தன்னை நோக்கியே அழுதுக் கொண்டிருக்கும் தாரியைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன், காலில் ஏற்பட்ட வலியாலும், நில்லாமல் ஓடிடும் தன் உதிரத்தைக் கண்ட பயத்தாலும் அப்படியே மயங்கிச் சரிந்து விட. தன்னந்தனியாக விசும்பிக் கொண்டிருந்தாள் தாரி.

✨✨✨


மையாழி மரத்தைச் சுற்றிலும் கோவன்களால் உருவாக்கப்பட்டிருந்த அந்த பெரும் வளையத்தின் மத்தியில், கண்கள் கட்டிய நிலையில் இதழோரம் மலர்ந்தக் குறுநகையுடன் தனிக்காட்டு ராஜாவாய், மிடுக்குடன் நின்றிருந்தான் ஷேனா. அவன் பயிற்சிகளும் வெற்றிகரமாகவேச் சென்றிருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் அவர்களின் பயிற்சிநேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது. காலைமுதல் அவன் திறனைக் கண்டிருந்தக் கோவன்கள் மூவரும், இப்போது, முட்டியில் கைவைத்துக்கொண்டு வேகப் பெருமூச்சுகளுக்கு மத்தியில் பிரமித்துப்போய் மூன்றுத் திசையில் நின்றிருந்தார்கள். சரியாகக் கூற வேண்டுமானால், அவன் வேகத்தையும் கூரிய கவனத்தையும் கண்டு விக்கித்துப்போய் நின்றிருந்தார்கள் அவர்கள்.

தன் சுற்றத்தின்மீது தீவிர கவனம் இருக்கவேண்டுமென, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தபடியே சுற்றிலும் கேட்கும் ஒலியைக் கூர்ந்து கவனிப்பதற்காகக் கோவன்கள் கொடுத்த முதல் பயிற்சி, கம்பங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் பந்துகளின்மீது சிறுசிறு கற்களை வீசி, ஒலி வரும் திசையை கவனிக்கும் பயிற்சி. அவ்வளவுப் பெரிய இருள்மாளிகையில் இருந்துக்கொண்டு, இருளரசனின் சிறு குரலுக்கே ஓட்டம் பிடிபவனுக்கு இத்தனைச் சிறிய வட்டதினுள் கேட்டிடும் ஒலியைக் கணிப்பதா கடினம்?

இரண்டாவதாக கொடுத்தப் பயிற்சி, தன்னைச் சுற்றிலும் காற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, தன்னைத் தாக்கவரும் பந்துகளை தடுத்திடுவது. கயிறுகளால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் பந்துகள், முதலில் மெல்லமாகவும் பின் வேகமாகவும், தனித்தனியாகவோ இரண்டு மூன்றாகவோத் தன்னை நோக்கி வந்தாலும், காற்றின் சக்திகளைக்கொண்ட  விஷ்ணுவையே அதிசயிக்க வைக்குமாறு மிகத்துல்லியமாகத் தன்னை நோக்கிச் சீரும் பந்துகளைக் கணித்து அவைகளிடமிருந்து லாவகமாகத் தப்பிவிட்டான் ஷேனா.

அடுத்ததாகக் கோவன்களே களத்தில் இறங்கிவிட.. அவர்கள் நிற்கும் திசையைச் சுட்டிக்காட்டச் சற்றும் சிரமப்படவில்லை அவன். கோவன்களின் பார்வையில், ஒரேநாளில் இது முற்றிலும் அசாத்தியமே! ஆனால், பிறந்ததுமுதல் இருளுக்குள்ளேயே உலாவித்திரியும் இவனுக்கு, இத்தகையப் பயிற்சிகளெல்லாம் அவசியமே இல்லை என்பது அவர்களுக்கு ஏனோ விளங்கிடவில்லை. ஒருவேளை, இருள் ராஜ்யத்தின் உள்ளே செல்வதற்கு ஒருமுறையேனும் வாய்ப்புப் கிடைத்திருக்கும் பட்சத்தில். ஷேனாவின் தினசரி வாழ்வைக் கண்கூடாகக் கண்டிருக்கும் பட்சத்தில்.. அவர்களும் அதை உணர்ந்திருக்க கூடும். ஆனால், அவர்களின் துர்ரதிஷ்ட்டம், அப்படியொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மையாழி மரமும் தன்னுடைய வேர்கள் மூலமாக நிலத்தில் நடப்பதை மட்டுமே உணர்ந்துக் கொண்டிருப்பதால், அங்கு நிலவிடும் இருளை உணர்ந்திருக்காததால், அதுவும் ஏதும் கூறியதில்லை. அனைத்திலும் மேலாக, அவனது கண்கட்டு! ஷேனாவிற்குக் காலையில் கட்டப்பட்ட கண்கட்டு தான்.. இப்போது வரையில் உருத்தலோ வலியோ இருப்பதாக அவன் கூறிடவில்லை. மதிய உணவின் பொழுதும் அவர்களே தான் அவிழ்த்து விட்டார்கள். மற்றைய நேரமெல்லாம், தானாகவே கண்களை கட்டிக்கொண்டுத் துடிப்புடன் களமிறங்கிக் கொண்டிருந்தான். குருக்களே ஓய்வுக் கொடுப்பினும் அதை ஏற்காமல், அவர்களையும் ஓய்வெடுக்க விடாமல், அவர்களைச் சோர்வடைய வைக்கத் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருந்தான் அவன்.

"ஹான். இது முடிந்ததா? அடுத்து என்ன பயிற்சி? ஏன் இப்படிக் கால்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறீர்கள்?" கண்கள் கட்டியிருந்தாலும் அவர்களின் நிலையை ஷேனா துல்லியமாகக் கூறிட, "ம்ம்க்கும். இது வேறயா?" நொந்துப்போய் நிமிர்ந்த யுவன், "ஷேனா, நிச்சயமாக உனக்குத் தெரியுமா! இதற்குமுன் நீ யாரிடமும் பயிற்சியை மேற்கொள்ளவில்லை தானே?" சந்தேகமாகக் குரல் கொடுக்க... சகோதரனைத் தொடர்ந்து மற்ற இருவரும் அதே சந்தேகப் பார்வையில் தங்களின் சிஷ்யனை நோக்கினார்கள்.

"இல்லை. எத்தனைமுறை இதையேக் கேட்பீர்கள்."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை வரும் வரையில்." சிரித்துக்கொண்டே ஷேனா கொடுத்த விடைக்கு, வாய்க்குள் முனங்கிக்கொண்ட விஷ்ணு, நிமிர்ந்து நிற்க.. அவனைத் தொடர்ந்து நிமிர்ந்த சக்தி, ஷேனாவை நெருங்கி, "சரி, கண்ணா. இன்று உன் பயிற்சி நிறைவடைந்தது. நீ செல்லலாம். நாளையும் இதேபோல் விரைவாக வந்துவிடு. குறுவாளைப் பிரயோகிக்க நாளை கற்றுக் கொள்ளலாம்." அவனது கண் கட்டினை அவிழ்த்து விட்டபடிக் கூறியதில், "குறுவாளா!" ஆனந்தத்தில் குதித்த ஷேனா, "சரி. நான் நாளை வருகிறேன். மாலையாகிவிட்டது. அம்மா என்னை சீக்கிரமாக வரச் சொல்லியிருக்கிறார். முதலில் வந்து இங்கு நில்லுங்கள் மூவரும்" எனக் கூறிவிட்டு, தன் முன் நிற்கும் மூவரையும் பணிந்து, அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ஓட்டம் பிடித்தான் ஷேனா.

மாலை ஆகிவிட்டது! அதையே ஷேனா கூறித்தான் கோவன்கள் அறிந்துக் கொண்டார்கள். இவனது குறும்பால் நேரம் ஓடிடுவதே தெரியவில்லை அவர்களுக்கு. மேலும், இங்கு சூரியன் இல்லாததால், எந்த வேளை நடந்துக் கொண்டிருக்கிறது என்பதையே அவர்களால் இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை. 'இந்தச் சிறுவன் நிச்சயம் அசாத்தியமானவனே' என மனதினுள் வியந்துக்கொண்ட மூவரும், களைப்புடன் ஆதிலோகத்தை நீங்கிச் சென்றார்கள் இன்றையப் பொழுதில்.

✨✨✨


விழா முடியும் முன்பாகவே ரத்னமாளிகையிலிருந்து அழைத்து வரப்பட்ட அபிக்கு அரவிந்தன் முழுமையாக மருத்துவம் பார்த்திருக்க.. அப்போதிலிருந்து இன்னுமும் தன் மெத்தையில் படுத்தபடியே வலியில் முணங்கிக் கொண்டிருந்தான் அபி. சத்யஜித் மற்றும் சத்யா இளவரசிகளுடன் நின்றிருந்ததால் விழா முடிந்து அவர்களாகவே வீட்டிற்கு வரும் வரையிலும் அவர்களிடம் தகவலைக் கூற வேண்டாமென மறுத்திருந்தார் அரவிந்தன். விழா முடிந்து, இரவாகிடுவதற்கு இரண்டு நாழிகைகள் இருக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தவர்கள், தகவலைக் கேட்டதும் பதறிப்போய் மகனிடம் விரைந்தார்கள். 

"ஒன்றுமில்லை, அபி. உனக்குச் சீக்கிரமே சரியாகிடும். இங்குப்பார், உன்னைப்பார்த்து இவர்கள் மூவரும் அழுதுக் கொண்டிருக்கிறார்கள்." தொங்கிய முகத்துடன், கண்ணைக் கசக்கிக்கொண்டே அபிக்கு இடதுபுறம் அமர்ந்திருந்த சங்கவி மற்றும் தீராவையும், தன்னருகில் இருக்கும் ராகவியையும் சுட்டிக்காட்டி, வேதனைக் குரலுடன் கூறியபடி அவன் கேசத்தை மென்மையாகக் கோதினார் சயனா. "ஹும்ஹும். வலிக்கிறது அத்தை. மிகவும் வலிக்கிறது." வலியில் சினுங்கியபடி அவள் மடியில் தன் தலையைப் புதைத்தவன்,  அம்மாவைக் கேட்டு அழத்தொடங்கியிருக்க, "அழாதே, ஜித்தூ. அத்தை சீக்கிரம் வந்துவிடுவார். நீ அழாதே.", தானும் அழுதுக்கொண்டே, அவன் கண்களைத் துடைத்துவிட்ட ராகவி, அவனின் அடுத்துச் செயலைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வெடுக்கென அவளின் கரத்தைத் தன்மீதிருந்துத் தட்டிவிட்ட அபி, "நீ பேசாதே. எல்லாம் உன்னால் தான். நீதான் காரணம். இன்றையப் பொழுதின் தொடக்கத்திலேயே உன் முகத்தில் நான் விழித்ததுதான் காரணம். நுவழி பாட்டி எனக்குக் கொடுத்தப் பரிசு உடைந்துவிட்டது. என் தங்கைகளின் விழாவை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. இப்போது, இந்தக் காயம். எல்லாம் உன்னால் தான் ராவி. நீதான் அனைத்திற்கும் காரணம்", வலியின் காரணமாக எழுந்த ஒன்றுமில்லாதக் கோபத்தால், அழுகையுடன் ராகவியை நோக்கி அவன் எரிந்து விழ, முதல் முறையாக ஒருவரின் கோபத்தை.. அதுவும் தன் பிரியமான ஜித்தூவின் கோபத்தைக் கண்டதில் ராகவியின் கண்ணீர் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கியது. "இல்..லை. நான் இல்லை. நான்.. எதுவும் செய்யவில்லை." தன் சித்தியின் முந்தானையை இழுத்துத் தன் முகத்தைப் பாதியாக மறைத்தபடியே, மெல்லியக் குரலில் அழுகையைக் கலந்துக் கூறிட.. அவளைத் தன்னோடு அனைத்தபடி, "அபி, என்னப் பேசுகிறாய் நீ! எங்கிருந்துக் கற்றுக்கொண்டாய் இப்படிப் பேச." தன் குரலை உயர்த்தினார் சயனா. 

"நான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. நானேதான் சொல்கிறேன். செல் இங்கிருந்து. எனக்கு, உன் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. செல், ராவி." சட்டெனத் தன் அத்தையிடமிருந்து ராகவியைத் தள்ளிவிட்ட அபி, அப்புறம் திரும்பிகொள்ள... பொத்தென மெத்தையிலேயே பின்னோக்கி விழுந்தவள், சத்தமாக அழுதுகொண்டே கீழே இறங்கி, அவனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து ஓடிவிட்டாள். சங்கவியும் தீராவும் மிரண்டுப்போய் அக்காட்சியை நோக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால், தன் மருமகனின் இந்தப் புதிய ரூபத்தைக் கண்ட சயனா வாயடைத்து அமர்ந்திருக்க.. அனைவருக்கும் மேலாக, ராகவி வெளியே ஓடிய அதே நொடியில் உள்ளே வந்திருந்த சத்யா, சில நொடிகள் முன் கேட்ட மகனின் கோபக் குரலால், சிலையாகிப் போய் நின்றிருந்தார்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro