Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

41. பரிசு தந்த அதிர்ச்சி

அன்றைய தினத்தின் விடியல் கதிர்கள் இன்னும் வெளிப்படவில்லை. ஆனால், நம் குட்டி இளவரசிகளின் வீட்டில் ஆள்நடமாட்டம் தொடங்கிவிட்டது. இளவரசிகள் இருவருக்கும் இன்றைய விடியல் ஒரு முக்கியமான நாள். இருவரும் நடக்கக் கற்றுக்கொண்டப் பின், ரத்னமாளிகையின் ராஜ சிம்மாசனத்தில் இருவரையும் அமர்த்தி அழகு பார்ப்பது ரட்சகராஜ்யத்தின் ஒரு வழக்கம். வீட்டிலுள்ளப் பெரியவர்கள் அனைவரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருக்க... சிறியவர்களில், வெகு விரைவாக எழுந்துக்கொண்ட ராகவி மட்டும் என்ன செய்வதெனத் தெரியாமல், பரபரப்பாக சுழன்றுக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒற்றன் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தாள். வெகுநேரமாக அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு அது சலிப்புத்தட்டத் தொடங்கியதும், சட்டெனத் தன் சிந்தையில் உதித்த ஏதோ ஒரு நினைவால், தொல்லை செய்யத் தனக்கென இருக்கும் ஒரேயொரு ஜீவனைத் தேடி அபியின் அறைக்கு ஓடினாள் அவள்.

மெல்லமாகக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே ஓடியவள், பூனைக்குட்டி பால் பாத்திரத்தைக் கண்ட வேகத்தில் அபியின் மெத்தை மீதுத் தாவி, ஊறுகாய் பானையில் உப்புபோட்டு குழுக்குவதுபோல் அவனைக் குழுக்கத் தொடங்கினாள். "ஜித்தூ, ஜித்தூ, ஜித்தூ, ஜித்தூஉஉஉ.. எழுந்திரு, எழுந்திரு.. எழுந்திரு, ஜித்தூ. சத்யஜித் மாமா நம்மை ரத்னமாளிகைக்கு அழைத்துச்செல்லப் போகிறார். நினைவில் உள்ளது தானே? இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாய் நீ? ஜித்தூ, இன்னும் மூன்றுத் திங்களில் உனக்கு ரத்னமாளிகையில் போர்ப்பயிற்சிகள் தொடங்குகிறதல்லவா? அதற்குள் உனக்கு ஆயுதம் தேர்ந்தெடுக்கச் செல்லவேண்டும் அல்லவா? இன்றே செல்லலாமா? ஜித்தூ, சொல். இன்றே செல்லலாமா உனக்கு ஆயுதம் தேர்ந்தெடுக்க? ஹான்? ஜித்தூ, சீக்கிரம் எழுந்திரு.. எழுந்திருஉஉஉ.. ... ..." அவள் அபியைப்போட்டுப் பாடாய்ப் படுத்தியெடுக்க, "ஹும்ம்ம்... ராவி... இன்று ஏன் நீ இவ்வளவு விரைவாக எழுந்துக்கொண்டாய்? இன்னும் விடியல் கதிர்களே வரவில்லை பார். செல்.. சென்றுத் தூங்கு நீயும்" மெல்லமாகத் தன் விழியைத் திறந்து ஜன்னலை நோக்கியவன், வெளியில் சூழ்ந்திருக்கும் இருளைக் கண்டுச் சினுங்கியபடி, ராகவியை ஓரங்கட்டிவிட்டு குப்புற புரண்டுப்படுத்து மீண்டும் உறங்கத் தொடங்கினான்.

"நான் தூங்கவா? முதலில், நீ எழுந்திரு ஜித்தூ.. விடியல்கதிர் பிறகு வந்துவிடும். நீ முதலில் எழுந்திரு. மாளிகைக்கு நீ எந்த நிறத்தில் ஆடை அணியப் போகிறாய்? எனக்கும் அதே நிறத்தில் எடுத்துக்கொடு... வா, ஜித்தூ." பொரித்த மீனைக் கவிழ்த்திப் போடுவதுபோல் ராகவி, அவனைக் கவிழ்த்துப்போட.. அரைத் தூக்கத்தில் இருந்தவனுக்கு 'மாளிகை' என்றச் சொல் மூளைக்குள் சென்று மணியடித்ததில், தங்கைகளுக்கான விழா நினைவிற்கு வந்து, படக்கென எழுந்தமர்ந்தான் அவன்.

"ராவி, இன்னும் யாரும் கிளம்பிடவில்லை தானே?" அவசரமாகக் கேட்க.. எப்படியோ இவன் எழுந்துவிட்டதே போதுமென நினைத்த ராகவி, "ஹான், ஹான். யாரும் இன்னும் செல்லவில்லை. ஆனால், தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வா, நாமும் தயாரகலாம்." ஆர்வமாக அழைத்தாள் அவள். "ஹம்ம்ம்ம்.. இத்தனை விரைவாகவா?" உறக்கத்தை விட்டு எழுவதற்குச் சலித்துக் கொண்டாலும், மென்மையாகப் போர்வையை விலக்கிவிட்டு அபி எழும்போதே 'கிளிங்' என்றச் சத்தத்துடன் அலமாரியின் மேஜையிலிருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்ததில், அப்புறம் திரும்பினார்கள் இருவரும். நுவழி பாட்டி அபிக்குப் பிறந்தநாள் பரிசு எனக் கொடுத்த அந்த ஐவண்ண-கோலிகுண்டுகளைத் தன்னுள் வைத்திருக்கும் வளையம்தான் கீழே விழுந்து ஜொலித்துக் கொண்டிருந்தது.

"இது ஏன் கீழே விழுந்தது?" பலமான காற்றுக்கூட வீசிடாமல் இவ்வளவு தடிமனானப் பொருள் எப்படிக் கீழே விழுந்தது எனச் சிந்தித்துக்கொண்டே மெத்தையிலிருந்து இறங்கிச்சென்ற அபி, அதைக் கையில் எடுக்க.. அதேநொடி, வைரமாளிகையின் உச்சியிலிருந்து புறப்பட்ட வெண்ணிற விடியல் கதிர்களின் முதல் கதிரானது ஜன்னல் வழியாகப் பாய்ந்துவந்து அபியின் கையிலிருந்த வளையத்தின்மேல் பட்டது. 

"ராவி, எனக்கு இப்போதுதான் நினைவு வருகிறது. நுவழி பாட்டி உங்கள் அனைவருக்கும் கொடுத்தப் பரிசினைத் திறக்க முயற்சித்தீர்களா?" கையிலிருக்கும் தன் பரிசைப் பார்த்துக்கொண்டே அவன் வினவ, "ஹான். மூவரும் முயற்சித்தோம் ஜித்தூ. ஆனால், அது திறக்கவே இல்லை." விடை கொடுத்தபடி, அபியைத் தொடர்ந்து அவனருகில் வந்த ராகவி, அவன் கையிலிருந்தப் பொருளைக் கேள்வியாக உற்றுநோக்கத் தொடங்கினாள். அபியும் அந்த வளையத்தைக் கேள்வியாகத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்க... மெல்லத் தன்மேல் விழும் முதல் விடியல் கதிரை உள்வாங்கியபடியே இருந்த அந்த வளையம், திடீரென, லேசாக அதிரத் தொடங்கியது. அதனுள், பிடிமானமே இல்லாமலிருந்த ஐந்து உருளைகளும், ஒன்றையொன்றுத் துரத்திடும் மின்னல் கீற்றுகளின் வேகத்தில் அதிவிரைவாகச் சுழலத் தொடங்கியது.

திடீரெனச் சுழலத்தொடங்கிய உருளைகளைக் கண்டு அதிர்ந்த அபியின் கைகள், பயத்தில் மெல்லமாய் நடுங்கிட.. அரண்ட விழிகளுடன் அபியும் ராகவியும் அதனை நோக்கிக் கொண்டிருந்த நேரம், அதிவேகமாய்ச் சுழன்றுக் கொண்டிருந்த ஐந்து உருளைகளின் மையத்தில் தீப்பொறி கிளம்பியது. திடுக்கிட்டு, வளையத்தைத் தூர வீசினான் அபி. அவன் கரத்தின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுத் தரையில் விழுந்துதும், இன்னும் வேகமாகச் சுழலத் தொடங்கியது அந்த வளையம். இப்போது, ஐந்து உருளைகள் மட்டுமல்லாது  மொத்த வளையமும் தரையில் கிடந்தபடியே கிடுகிடுவென ஆட்டம்கண்டது.

மெல்ல மெல்ல அதன் அதிர்வு அதிகரிக்க... வைரமாளிகையிலிருந்து விடியல் கதிர்கள் முழுமையாக வெளிப்பட்டப் பின்னரும் அவனது அறையை மட்டும் இருள் ஆக்கிரமித்திருந்தது. சரியாகக் கூறவேண்டுமானால், அந்த வளையம்தான் அபியின் அறையிலிருந்த மொத்த ஒளியையும் தனக்குள் இழுத்தபடி, இருளைப் பரப்பத் தொடங்கியிருந்தது. பயத்தில், அபியின் முதுகுக்குப்பின் மறைந்துக்கொண்ட ராகவியின் உடல் மொத்தமும் நடுங்கத் தொடங்கியிருக்க... அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தாள் அவள். அபியும் அவளைப்போலவே பயத்தின் உச்சத்தில் உள்ளூர நடுங்கிக் கொண்டிருக்க.. சட்டென அவனறையின் இரு ஜன்னல்களும் கதவும் ஏதோவொரு பெரும் விசையினால் சடாரென இழுத்து அடைக்கப்பட்டது. இருந்த கொஞ்சநஞ்ச ஒளியும் அறவே இல்லாமல், இருள் படர்ந்தது.

 வளையத்தின் மையத்திலிருந்து உருவாகிடும் மஞ்சள் வண்ணத் தீப்பொறி மட்டும் மினுங்கிக் கொண்டிருக்க... பயத்தில், அபியின் கையை இறுக்கமாகப் பற்றியிருந்த ராகவி, "ஜித்தூ, வெளியே சென்றிடலாம். வா. பயமாயிருக்கிறது.", அவன் கையினுள் முகத்தைப் புதைத்தபடி, கண்களை மட்டும் வளையத்தின் மீது வைத்துக்கொண்டு, நடுங்கிடும் குரலில் முணங்கிக் கொண்டிருந்தாள். "ரா-ராவி... ராவி, ஒன்றுமில்லை. வா.. மெதுவாக வா. நாம் சென்றிடலாம்." அவளுக்குக் கவசமாய் அவளை அணைத்தபடி தைரியமளித்த அபி, மெல்லமாக அங்கிருந்து நகர முனைந்த நொடி, சர்ரென சீறிக்கொண்டு விட்டதை அடைந்தது மஞ்சள் நிற ஒளி.. அந்த வளையத்தின் மையத்திலிருந்து.

அதனைத் தொடர்ந்து வெண்மை, கறுமை, நீலம், பச்சை, சிவப்பு என ஐந்து நிற உருளைகளும் தத்தம் ஒளியினை ஒன்றன்பின் ஒன்றாக அந்தரத்தை நோக்கிச் செலுத்திட... அன்று, அபியால் சரியாகக் காணமுடியாத ஐந்து சின்னங்களும், விட்டத்தில் வட்ட வளையமாகத் தெரிகின்ற ஐவண்ண ஒளிகளையும் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டிருந்த மஞ்சள் நிற நட்சத்திரத்தின் உதவியால், இப்போதுத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

ஒளியின் வெண்மையில் சூரியச் சின்னம்... இருளின் கறுமையில் ஆத்மாவின் ரூபம்.. ஆழியின் நீலத்தில் மீன் சின்னம்... வனத்தின் பசுமையில் மலரின் சின்னம்.. நெருப்பின் சிவப்பில் கனன்று எரியும் தீஜ்ஜுவாலையும் என ஐந்து வண்ண ஒளிகளும் அதனதன் சின்னங்களின் ரூபத்திலேயே மாறி நிற்க... அபி மற்றும் ராகவியின் நடுங்கும் பார்வை, அந்தக் காட்சியின்மீது நிலைக்குத்தி நின்றது. கண்முன்னால் அந்தரத்தில் விரிந்த வண்ணக் காட்சியினைப் பார்த்து மிரண்டுப்போய் நின்றிருந்தார்கள் அவ்விருவரும். 

ஐந்துச் சின்னங்களுடன் மெல்லமாகச் சுழன்றுக் கொண்டிருந்த அந்த உருளைகள் ஒவ்வொன்றும் மெல்ல மெல்லப் பிரிந்து, மையத்திலிருக்கும்  நட்சத்திரத்தின் தலைமையின்கீழ் வரிசையாக, தனித்தனியாக நின்றுவிட... முதலில், வெண்ணிறச் சூரியச் சின்னத்திலிருந்து, வெண்மையான மாய பிம்பமாய் அதிவேகமாக வந்தது மலையளவிலான ஒரு மிருகம். 

அது தங்களை நோக்கியே வருவதை உணர்ந்து இருவரும் கண்களை இருக்கமாக மூடிக்கொண்டு, ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ள.. சீறிப்பாய்ந்து வரும் அந்த அஜானுபாகுவான மிருகம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த ராகவி, நடுங்கிப்போய், அபியைப் பிடித்திருந்தப் பிடியை இருக்கமாக்கினாள். தலையைத் தாழ்த்திக்கொண்டு கண்களை மூடினாள். ராகவியைத் தன்னில் ஒளித்துக்கொண்டு, சீரிவரும் அந்த மிருகத்திற்கு முதுகை காட்டிய அபி, மூன்று நொடிகளுக்குப் பின்னும் எதுவும் ஆகாததால், அது சென்றுவிட்டதா என பார்ப்பதற்காக மெல்லப் பின்னோக்கித் திரும்பிட.. அந்த வெண்ணிற மாயமிருகம், சிவந்த நிறக் காயங்களுக்குள் மூழ்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்தது. பலமாக அலறிக் கொண்டிருந்தது. ஆனால், ஒலியேதும் கேட்டிடவில்லை. பிம்பம் மட்டுமே. 

வெறும் பிம்பத்திலேயே அதன் வலி, அதன் போராட்டம் என அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது அபிக்கு. அதன் கழுத்தில்... தோளில்.. முதுகில் எனக் கண்ணுக்குத் தெரியாத, கணமான ஆயுதமொன்று மின்னல் வேகத்தில் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருக்க... பீறிட்டுத் தெறித்த அதன் உதிரத்துளிகள் ஒவ்வொன்றும் அவன்மீதே தெறிப்பதுப்போன்ற உணர்வு, அவனை உள்ளூரப் பதறச்செய்தது. 

அந்த மிருகத்தின் காயங்கள், சிறிது சிறிதாகப் பெரிதாகி.. அந்த வெண்ணிற உருவம் முழுவதும் சிவப்பாகி.. அது வெடித்துத் தெறித்த அதேநொடி, நீல நிற மாயத் தோற்றமாகச் சீறிக்கொண்டு வந்தது, ஒரு ரெக்கை முளைத்த பிரம்மாண்ட கடல் மீன். அதுவும் தன்னை நோக்கியே சீறி வருவதை உணர்ந்தவன், மீண்டும் பயத்தில் கண்களை மூடிக் கொண்டாலும் அடுத்தநொடியே அதைநோக்கித் தன் பார்வையைத் திருப்ப... அதன் கண்ணிலிருந்துப் பாய்ந்த நீல மின்னல், தன்னை நோக்கிப் பாய்ந்ததில் மீண்டும் நடுங்கிப்போய் கண்களை மூடினான். ஆனால், அந்த மின்னல் தன்னைத் தாக்கினாலும் எவ்வித உணர்வும் அவனுக்கு இல்லை என்பதை அடுத்த நொடியே உணர்ந்தான்.

ஆக்ரோஷமான விழிகளுடன் அபியின் முகத்திற்கு ஒரு அடி முன்பு வரையில் வேகமாகக் காற்றில் நீந்திவந்த அந்த மீன் சட்டென வலது புறம் திரும்பி, அங்குப் புதிதாக நீல நிறத்தில் முளைத்த ஒரு மனித ரூபத்தைத் தன் மின்னல் கொண்டுத் தாக்கியதுடன், காற்றில் வெடித்து மாயமாகிட... சட்டெனச் சூழ்ந்துக்கொண்ட இருளுக்குள், தங்க நிற மாயையில் பெண்களின் உருவம் கூட்டம் கூட்டமாக உருவாகியது. அவர்களுக்கு நேரெதிரே, கொடிய உருவிலான ஆன்மாக்களும் அதே தங்க நிறத்தில் உருவாகிட.. அடுத்த கணமே அவ்வான்மாக்ககள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெண்ணின் வயிற்றை நோக்கிச் சீறிப்பாய்ந்து அவர்களுக்குள் சென்று மறைந்தது. அதேநொடி, அந்த பிம்பம் களைந்து அமைதியான பச்சை வண்ண மாயையில் ஒரு வனம் தோன்றியது. ஒரு நொடிதான் அந்த அமைதி.. மறுநொடியே சூறைக்காற்று சுழற்றியடிக்க.. எல்லாம் அலங்கோலமாக மாறிக் காற்றில் மறைந்த நொடியில் அபியின் அறை முழுவதிலும் படர்ந்தது சிவப்பு வண்ண மாயை.

அந்தச் சிவந்த நிற அறையைப் பார்ப்பதற்கே ஒருவித அமானுஷ்ய உணர்வு அபியினுள் எழுந்தது. ஆங்காங்கே தரையில் சிறிது சிறிதாக மின்னிய ஒவ்வொரு உருண்டைச் சிவப்பு மாயையும் மெல்ல மேலெழும்பித் தனித்தனி மனித உருவாக மாறிய மறுநொடியே, இரக்கமே இல்லாமல் ஒன்றையொன்று மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது. ஆங்காங்கே நீளநீளமாக முளைத்திருந்தக் கம்பங்களில், ஏதேதோ கொடிகள் பறக்க... அதிலிருக்கும் பல கம்பங்களின் உச்சத்தில், மனித உருவங்கள் அசைவின்றி குத்தபட்டிருந்ததுடன் அவைகளின் நெஞ்சின் வழியே நீட்டி கொண்டிருந்த பாதிக் கம்பத்தின்மேல் கொடிகள் பறந்துக் கொண்டிருந்தது.

ஒருவனின் தலை... ஒருவனின் பாதி உடல்... கைகள்.... கால்கள்.... இரண்டாகப் பிளக்கப்பட்ட உருவங்கள்... இன்னும் இன்னும் கொடூரமாக தாக்கிக் கொண்டும் தாக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும் உருவங்கள்... உடலில் ஆங்காங்கே பல ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு நிற்கும் ஒவ்வொரு உருவங்களையும் காணக்காண அபிக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட.. நல்லவேளையாக வெண்ணிற மாய உருவம் வரும்போது கண்ணை மூடிய ராகவி இன்னுமும் கண்களைத் திறந்திடவில்லை.

போர்களமாக மாறிபோய் இருந்த அபியின் அறையை அப்படியே ஓரங்கட்டிடுவது போல், தங்களின் யுத்தத்தைத் தொடர்ந்தபடியே அந்த உருவங்கள் யாவும் பின்னோக்கி நகர்ந்திட... சரியாக அபியின் கண்ணுக்கு முன், மிக அருகில் மெல்ல உருவாகியது இரு உருவங்கள். ஒரு உருவம், தன் கை முஷ்ட்டியை மடக்கி நெஞ்சில் வைத்துப் பணிவாகத் தலைவணங்கியபடித் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க... அதற்கு நேரெதிரே, மிக மிக மிக உயரமாக... இன்னும் இன்னும் உருவாகிக்கொண்டே சென்றது, மற்றொரு உருவம். அன்னாந்து அந்தரத்தை நோக்கிய அபியால், இன்னுமும் அதன் முழு உருவத்தைக் காண முடியவில்லை. அது, உருவாகிக்கொண்டே தான் இருந்தது. 

வேகப் பெருமூச்சுடன், மிரண்டப் பார்வையுடன், நடுங்கிடும் உதடுகள் அலரத் துடிக்க... அது முடியாமல் அக்கொடூர ரூபம் நிறைவு பெறுவதற்காக காத்திருந்த அபியின் கண்கள், சட்டெனப் பெரும் ஒளி தக்கியதும் அணிச்சையாகவே மூடிக்கொண்டது. அந்த மஞ்சள் வண்ண நட்சத்திரம், சிவப்பு ஒளியை மொத்தமாகத் தன் ஒளிக்குள் மூழ்கியது. மெல்ல, மற்ற ஐந்து நிற ஒளிகளையும் தனக்குள்ளேயே அடக்கிய நட்சத்திரம், மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி, ஐந்து வளையங்களாக மாறி விட்டத்தில் நின்ற அடுத்தநொடி, தரையில் கிடந்த வளையத்தின் உள்ளே சர்ரென புகுந்தது. அதனைத் தொடர்ந்தே மற்ற நிறங்களும் வளையத்தை அடைந்ததும், புயலடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவ்விடம். 

அபியின் அறை பழைய நிலைக்குத் திரும்பிட.. ராகவியைப் பிடித்திருந்த அவன் பிடி தளர்ந்திட... ஜன்னல் கதவெல்லாம் மெல்லமாகத் திறந்துக் கொண்டது. அவன் அறையில் ஒளி படர்ந்தது. 

கதவு திறக்கப்பட்டதும் பரபரப்பாக அவன் அறைக்குள் நுழைந்தார்கள் வீட்டிலிருந்த பெரியவர்கள் அனைவரும். அதை கவனிக்காத அபி, தன் காலுக்கடியில் சறுக்கி வந்து கிடந்த அந்த வளையத்தைக் கையில் எடுக்க... அது முன்புபோல் இல்லை. ஐந்து உருளைகளும் ஆளுக்கு ஒரு திசையில் உருண்டு ஓடியது. நடுவிலிருந்த நட்சத்திரம் மட்டும் அப்படியே எவ்வொரு பிடிமானமும் இல்லாமல் நின்றது.

"அபி! அபி.. ராவி... என்னானது இருவருக்கும்? அறைக் கதவை யார் அவ்வளவு வேகமாகச் சாத்தியது? எங்களால் திறக்கக்கூட முடியவில்லை. இவ்வளவு நேரம் குரல் கொடுத்தும் நீங்கள் இருவரும் ஏன் எந்த பதிலும் சொல்லாமல் மெளனமாய் இருந்தீர்கள்?" பதட்டமும் கோபமும் கலந்தக் குரலில், சிலைபோல் நின்றிருந்த இருவரையும் போட்டு உலுக்கினார் ரோகிணி. அவருக்கு அருகே மற்ற அனைவரும் நின்றிருக்க... அரவிந்தனின் கையில் இருந்துக்கொண்டு ரக்ஷாவும், சயனாவின் கையில் இருந்துக்கொண்டு மாயாவும் ஓவென அழுதுக் கொண்டிருந்தார்கள்.

 அபியின் அறைகதவு சடாரென இழுத்து அடைத்துக்கொண்ட நொடியில் ஒரேபோல் தொடங்கிய அழுகை தான், இன்னுமும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. கதவு அடைத்தச் சத்தத்தில் அனைவரும் ஒருபுறம் பதறினார்கள் என்றால், இங்கு குழந்தைகள் இருவரும் ஒரே நேரத்தில் வீரிட்டு அழுவது இன்னொரு பக்கம் பதைபதைப்பை ஏற்படுத்திவிட... அனைத்திற்கும் மேலாக, அபியின் அறைக்கதவு திறக்காமல் இருந்ததும் தாங்கள் குரல் கொடுத்தும் குழந்தைகள் இருவரும் பதிலளிக்காததும் பெரியவர்களின் பயத்தை பல மடங்காக்கி விட்டது.

தன் அன்னையை நிமிர்ந்து நோக்கிய ராகவியின் பார்வை, அரண்டுப்போய் இருந்தது என்றால், தன் கையிலிருக்கும் வளையத்தின் மீதிருந்த அபியின் பார்வையோ கல்லாகி உறைந்துப்போய் இருந்தது. சட்டென ஓடிச்சென்றுத் தன் அன்னையின் காலை அணைத்துக் கொண்ட ராகவி, அவள் பார்த்தது வரையில் இங்கு நடந்ததை நடுக்கத்துடன் கூற.. அவள் கூறியத் தகவலில், அதிர்ந்துப் போய் அபியை நோக்கினார்கள் அனைவரும். அவனோ, தனித்தனியாக இருக்கும் தன் பரிசு பொருளின் மீதேதான் தன் முழு கவனத்தையும் பதித்திருந்தான்.

குழந்தைகள் இருவரின் முகமும் பயத்தில் வெளிரிப்போய் இருப்பதைக் கண்ட சத்யஜித், "ஒன்றும் இல்லை. ஒன்றுமில்லையம்மா. இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. சரியா அபி? ராவி? இருவரும் தைரியமானவர்கள் தானே? சரி, சரி. பயப்படவேண்டாம். நாம் மகாராணியாரைச் சந்தித்து, இது என்னப் பரிசு பொருள்? ஏன் எம் குழந்தைகளை மிரட்டியது எனக் கேட்கலாம். சரியா?" மகனை மென்மையாக அணைத்துக் கொண்டவர், அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை வழங்கியபடி, ரோகிணியின் காலைக் கட்டிப் பிடித்திருந்த ராகவியைக் கைநீட்டி அழைக்க... அவளும் ஓடிவந்துத் தன் மாமாவை, மெல்லிய நடுக்கத்துடன் அணைத்துக் கொண்டாள்.

"அபி, உன் தங்கைகளை மாளிகைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமல்லவா? சீக்கிரம் சென்றுத் தயாராகி வா" மகனின் தலையை வருடியபடி சத்யா மென்மையாக கூறியப்பின், சரியெனத் தலையை மட்டும் ஆட்டியவன் தன் கையிலிருந்த வளையத்தை அலமாரியினுள் பூட்டி வைத்துவிட்டுத் தயாராக கிளம்பிவிட்டான். அபியின் இந்த மௌனம் அனைவருக்கும் கவலையை கொடுத்திட.. இன்று மகாராணியிடம் இதுகுறித்துக் கேட்க வேண்டுமென தீர்மானித்து கொண்டார்கள் அனைவரும்.

அதேநேரம் இருள்மாளிகையில், ஒன்பது அரக்கச் சிலைகளுக்கு முன்பாக தியானத்தில் அமர்ந்திருந்த இருளரசனும் எவரின் தொல்லையும் இல்லாமல் தனது யாகத்தின் மூன்றாம் நாளைத் தொடங்கியிருந்தார். அவரின் எண்ணம், மெல்ல ஈடேருவதற்கு அடையாளமாக, ஆதிலோகத்தின் சமநிலை மெல்ல மெல்லக் களைந்துக் கொண்டிருப்பதை அவருக்கு முன்னிலையில் தனித்தனியாக வரையபட்டிருந்த ஐந்துவண்ண வட்ட வளையங்கள், தானாக அழிந்துக் கொண்டிருபதன் மூலம் தெளிவாக விளங்கியது.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro