40. இளவரசிகளின் முதல் அடி
ரட்சக ராஜ்யம்...
வைரமாளிகையின் காலைக் கதிர்கள் வெளிப்பட்டு நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இரவெல்லாம் சரியாக உறங்கிடாமல் இருந்த அபி, இப்போது, நிதானமில்லாமல் இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருந்தான். நேற்றைய பொழுதில் தன் முன்னே தோன்றியிருந்த வெண்ணிற மாய வாயிலினுள் செல்லமாட்டேனென நின்றிருந்த தீராவை, அதனுள் தள்ளிக்கொண்டுச் சென்ற வீராவும் இன்னும் வீடு திரும்பாததால் வந்த பதட்டம் தான் இது. அவ்வாயில், மகாராணியின் சக்தியால் உருவாகிய வாயில்தான் என்பதை அறிந்ததால் மற்றவர்கள் சாதாரணமாகவே இருக்க.. அபிக்கு மட்டும் அப்படி இருக்க முடியவில்லை. தவிப்புடன் அலைந்துக் கொண்டிருந்தவனை அழைத்துத் தன் மடியில் படுக்க வைத்தார், வாயில் படியில் அமர்ந்திருந்த சத்யஜித்.
"அபி. ஏன் பயப்படுகிறாய் நீ? அவளை, மகாராணி கவனித்துக் கொள்வதாகச் சொல்லி தகவல் அனுப்பியதாய் தானே நீ சொன்னாய். பிறகென்ன கவலை உனக்கு?"
"இல்லை, அப்பா. அவள், இருளில் தனியாக இருந்தால் பயப்படுவாள்? நேற்று, இரவில் அவள் பயந்திருப்பாள் தானே? இன்னும் அவளைக் காணவில்லை."
"நீ ஏனடா அப்படி நினைக்கிறாய். வீராதான் அவளுடன் இருக்கிறானே? அவளெங்கே தனித்திருக்கிறாள்?"
"ஆனால், அப்பா.. எனக்கு அதுவும் பயமாக உள்ளது. நான் முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் தானே, அவள் அடிக்கடிச் செல்லுமிடம் பூவிலோகம் என்று... அங்கிருக்கும் குதிரைகளில் வீரா வித்தியாசமானவன். யார் மூலமாவது அவனுக்கே பிரச்சனை ஏற்பட்டால்? .. .. அவனுக்கும் எதுவும் ஆகிடக்கூடாது அப்பா."
"அபி, இருவருக்கும் எதுவும் ஆகாதடா. உனக்கே தெரியும்தானே, மகாராணிதான் இரு லோகத்தினையும் ரட்சிக்கின்றார். பூவிலோகம் அவர் பாதுகாப்பின் கீழ் தானே இருக்கிறது? எனில், அவர்களை மகாராணியே பாதுகாத்திடுவார் தானே.", சத்யஜித் எவ்வளவு கூறினாலும் அபி, சமாதானம் ஆகாமலே இருக்க.. நீண்ட பெருமூச்சு விட்ட சத்யஜித், "இருவரும் விரைவிலேயே உன்னிடம் திரும்பிடுவார்கள், அபி. நீ வருந்தாமல் அமைதியாக இரு. இதில் நீ பயப்படும் அளவிற்கு எதுவுமே இல்லையடா!" தன்னால் முடிந்த அளவிற்கு தன் மகனை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார் சத்யஜித். முழுமையாக இல்லையெனினும், தந்தையின் அரவணைப்பில் ஓரளவிற்கு நிதானமாகியிருந்தான் அபி.
✨✨✨
இன்று, விடியலிலேயே ஆதிலோகம் வந்துவிட்டக் கோவன்கள், வழக்கம்போல மையாழி மரத்திடம் செல்லாமல் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக வேறெங்கோ சுற்றிவிட்டு இப்போதுதான் அம்மரத்தினை நோக்கி நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.
"சகோதரா, இன்று மாலையில் நிச்சயமாக அவன் வந்திடுவான் எனச் சொல்கிறீர்கள் இருவரும்.. வந்ததும், அவனுக்கு நேற்றளித்த அதே பயிற்சியைத் தானே மீண்டும் கொடுக்கவேண்டும்? இன்றும் அவன் ஓடிவிட்டால்?" சக்தி, இந்தக் கேள்வியினைக் கேட்டபோதே அவர்கள் சேரவேண்டிய இடத்தை ஏறக்குறைய அடைந்திருக்க... சகோதரனுக்கு பதிலளிக்க வாயெடுத்த யுவன் எதையோ பார்த்துத் தான் கூறவந்த தகவலை அப்படியே நிறுத்தி 'முன்னால் பார்' என்பதுபோல் கண்ணால் சைகை காட்டினான். சக்தியும் விஷ்ணுவும் சட்டெனத் தங்களின் பார்வையை, பத்தடிக்கு அப்பால் இருக்கும் மையாழி மரத்தினை நோக்கித் திருப்பிட... அவர்களுக்கு முதுகைக் காட்டிய நிலையில் மண்ணில் அமர்ந்திருந்தான் ஷேனா.
"இவனை மாலையில்தானே வரக் கூறினோம். காலையிலேயே என்ன செய்கிறான்? அதுவும் அமர்ந்த நிலையில்?" யுவனின் கேள்வியைத் தொடர்ந்து, ஆச்சரியத்துடன் மூவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ள, "வாருங்கள், அவன் என்ன செய்கிறான் எனப் பார்க்கலாம்." முன்னோக்கி விரைந்த விஷ்ணுவைத் தொடர்ந்து நடந்தார்கள் மற்ற இருவரும்.
அவர்கள் மூவரும் ஷேனாவின் முன்னிலையில் சென்று அவனைப் பார்த்தநொடி, ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது மூவரின் மனமும். 'என்னால் முடியாது' எனக் கூறிவிட்டு நேற்றைய தினம் திரும்பியும் பாராமல் ஓடியவன், இன்று கண்களை அழகாக மூடி நிமிர்ந்த நிலையில் பத்மாசனத்தில் நேர்த்தியாக அமர்ந்திருந்தான். அவனைக் கண்டு கோவன்கள் உற்சாகத்தில் நிற்க.. அவர்களின் காலடி ஓசைகள் தன் செவியை அடைந்ததில், இமைபிரித்து மூன்று குருகளையும் நோக்கிய ஷேனா, மெல்லமாகத் தன் நிலையிலிருந்து எழுந்து மூவரின் பாதங்களையும் பணிவுடன் பணிந்து நின்றான்.
தங்களைப் பாதம் பணிந்து நிற்கும் சிஷ்யனைப் பூரிப்புடன் வாழ்த்திய கோவன்கள் மூவரும் அவனைத் தூக்கிவிட்டு.. தங்களின் ஒற்றைக் காலை மடக்கி அவனுக்கு நிகராக அமர்ந்தார்கள். "என்ன இது ஷேனா! புதுப்பழக்கம்?" மெல்லியக் குறுநகையுடன் சக்தி அவனை நோக்க, "பயிற்சிக்கு முன் குருவை கண்டதும் மரியாதை செலுத்திட வேண்டுமாம். அம்மா சொன்னார்." ஆர்வமாக பதில் கொடுத்தான் ஷேனா.
"அது சரிதான். ஆனால், யாம் இவ்விடம் வரும்முன் நீ பத்மாசனத்திலல்லவா அமர்ந்திருந்தாய்! நேற்றைய பொழுது அத்தனைப் போராட்டங்கள்.. அத்தனைப் பிடிவாதத்திற்கு பின்?!" முழுமையான ஆச்சரியத்தில் கேட்டான் யுவன். ஒரு சிறுவன், ஒரே நாளில் முறையான விரல்-முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தது உண்மையில் மூவருக்கும் ஆச்சரியமே.
"எனக்கு அம்மா தான் சொன்னார், வீரனாக வேண்டுமெனில் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல முயற்சித்தால்தான் எதையும் சாதிக்க முடியுமாம். அதனால்தான் நான் காலை முதலே முயற்சிக்கத் தொடங்கிவிட்டேன்." உற்சாகத்துடன் பதிலளித்தவனை 'இதையே தானடா நேற்று நாங்களும் கூறினோம்' என்னும் பார்வையில் நோக்கத் தொடங்கினார்கள் மூவரும். நேற்றைய தினத்தில் தப்பித்து ஓடியவன், இன்று மீண்டும் பயிற்சிக்கு வந்திருப்பதைக் காண்கையில் அவர்களுக்கு ஒருபக்கம் ஆச்சரியமாக இருப்பினும் அனைத்தும் அவன் அன்னைக்காக, அன்னையின் ஒற்றைச் சொல்லுக்காகவே செய்கிறான் என்பதை நினைக்கையில் கர்வமாகவும் இருந்தது. அப்போதே யுவனுக்கு மற்றொன்று நினைவுக்கு வந்தது.
"எனில்,உன் தந்தை? அவர் எதுவும் கூறவில்லையா ஷேனா?"
"தந்தைதான் நேற்றுமுதல் பூஜையில் இருக்கிறாரே. மூன்று திங்கள் வரையில் அவர் பூஜையில் மட்டும்தான் இருப்பார். அதனால்தான் நான் பகலிலேயே பயிற்சிக்கு வந்துவிட்டேன்.", அவன் பதிலைக் கேட்டதும், மூன்று திங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்றே தோன்றியது அவர்களுக்கு.
"சரி, கண்ணா. இப்போது நீ முறையாக அமரப் பழகிக்கொண்டாய். எனில், நம் பயிற்சியைத் தொடங்கிடலாமா?" யுவனின் கேள்விக்கு உற்சாகத்துடன் தலையசைத்தவன் மண்ணில் அமர்ந்து, முதலில் இடது காலைத் தூக்கி வலது தொடையில் மெல்லமாக வைத்துவிட்டு, அதேபோல் வலது காலை தூக்கி இடது தொடையில் வைத்து.. இரு கையின் விரல்களையும் யோக முத்திரையில் வைத்துத் தன் இரு முட்டிமீதும் பதித்தவன் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் குருக்களை நோக்கிட... மென் புன்னகையுடன் அவர்கள் மூவரும் ஷேனாவின் முன்னிலையில் அவனைப் போலவே அமர்ந்தார்கள்.
"கண்களை மூடிக்கொள் ஷேனா." விஷ்ணுவின் கூற்றைத் தொடர்ந்து ஷேனா தன் இமைகளை மென்மையாக மூடிக்கொள்ள.. கோவன்களின் பார்வை, அவன் மீதும் அவன் சுவாசத்தின் மீதும் அவன் செயலின் மீதுமே பதிந்திருந்தது.
"ஷேனா, இந்த தியானப் பயிற்சி உன் மனத்திறனை கூர்மையாக்கிடும்... ஏதேனும் குழப்பத்தில் நீ இருந்திடும் சமயம் தெளிவாக முடிவெடுக்க தியானம் மேற்கொள்ளலாம். விடையறியா கேள்விக்கான விடையைக் கண்டறிய இதனை உபயோகிக்கலாம். உன் இலக்கினை அடைய, முன்னால் வரும் தடைகளை தகர்த்தெறியும் வழியை காண தியானம் மேற்கொள்ளலாம். நீ ஒவ்வொருமுறை தியானம் மேற்கொள்ளும் பொழுதும் உன் சிந்திக்கும் திறன் வலுவடையும். உன் மனம் வலுவடையும். புரிந்ததா?", அவர்கள் நால்வருக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான் விஷ்ணு. "ஹாம். புரிந்தது." குருவின் குரலையே பிடித்துக்கொண்டவன் பதிலளிக்க, "சரி, இப்போது யாம் கூறியது போலவே செய் பார்க்கலாம். மெல்லமாக மூச்சை உள்நோக்கி இழு.. உன் கவனம் வேறெங்கும் இருக்கக்கூடாது. உன் அன்னை... தந்தை... வேறு யாராகினும் சரி, அவர்கள் உன்னிடம் உரையாடிய சொற்கள் யாவும் நினைவில் இருக்கக்கூடாது. இங்கு, இவ்விடம் மட்டுமே உன் சிந்தையில் பதிய வேண்டும். இந்த இடத்தில் உன்னைச் சுற்றிலும் என்னென்ன இருக்கிறதோ அதன்மீது தான் உன் ஒட்டுமொத்த கவனம் பதிய வேண்டும். உன் சுற்றத்தைக் கவனி. சூழலில் இருக்கும் மௌனத்தை கவனி. இந்த இயற்கையை, அதன் மொழியை கவனி.. ... .." இப்போது இவர்கள் கூறியவை எவையும் ஒரு சிறுவனுக்குச் சொல்வது அல்ல.. அவன் சிந்தைக்கு எட்டுவதும் அல்ல. தெளிவாகச் சிந்திக்கத் தொடங்ககிய முழு மனிதனுக்குக் கூற வேண்டியவை. இவர்கள் கூறிடும் விஷயங்கள் அவனுக்குப் புரிந்ததா, இல்லையா? அதை முழுமையாக, தெளிவாக உள்வாங்கினானா? முதலில், இவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கவனிக்கிறானா என்பது கூட தெரியாது. ஆனால், இவையெல்லாம் ஷேனாவால் புரிந்துக் கொள்ளப்படும் நாள் வரையில் இவற்றை நினைவில் வைத்திருப்பான் என்னும் ஒரேயொரு நம்பிக்கை மட்டும் மூவருக்கும் இருந்தது. அந்த நாளில், இவன் தலைசிறந்தவனாக இருப்பான் என்னும் நம்பிக்கையில், இன்று இவனை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் கோவன்கள் மூவரும்.
✨✨✨
நேரம், உச்சி வேலையைக் கடந்து வெகுநேரம் ஆகிவிட்டது. தன் கைகள் இரண்டையும் கன்னத்திற்கு முட்டுக்கொடுத்த நிலையில், தொங்கிய முகத்துடன் இரண்டு மணி நேரமாக வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கிறான் அபி. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனைத் தேற்றிய பின்னரும் 'என் குட்டி தீராவைக் காணவில்லை. எனக்குத் தேடித் தாருங்கள்' என ஊர் முழுக்கப் பறையடித்துக் கூறாததுதான் மிச்சம். காலை முதல் தன் கண்கள் காணும் அனைவரிடமும் புலம்பிவிட்டு இப்போது புலம்புவதற்கு ஆளில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருக்கிறான்.
மகாராணி எந்நிலையிலும் தீராவைத் தன்னிடமிருந்துப் பிரிக்கமாட்டார் என்னும் நம்பிக்கை இருந்தாலும் அபியின் இப்போதைய சோகத்தின் காரணம், நேற்று இரவு முதல் தீராவை பார்க்கவே இல்லை என்பதுதான். அவள் தன் வீட்டிற்கு வந்தநாள் முதல் இன்று வரையிலும் இதுபோல் நீண்ட நேரம் அவளைப்பிரிந்து அபி இருந்ததில்லை. ஏதேனும் குறும்புத்தனம் செய்துக்கொண்டு, சுட்டிக் குழந்தையாக இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டு, உலகிலேயே இல்லாத உயிரினம் ஒன்றை வரைந்து வைத்து, அதைக்காட்டி, 'இது எங்கே வாழ்கிறது? எப்படி வாழ்கிறது? எதை சாப்பிடும்?அந்த இடத்திற்கு நாம் செல்லலாமா? அங்கு என்னையும் கூட்டிச் செல்லுங்கள் மாமா.' என ஏடாகூடமாக எதாவது ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே திரியும் அவளுடைய சேட்டைகளை இன்றையநாள் முழுவதிலும் காணாமல், அவன் பொழுதுகள் வெறுமையாகக் கழிவதுப்போல் தான் இருந்தது அபிக்கு.
அந்தச் சோகத்தில் திண்ணையில் அமர்ந்திருந்தவன், திடீரெனத் தன் முதுகில் எதையோ உணர்ந்துச் சட்டென பின்னோக்கித் திரும்ப முனைய... ஆனால், அவனை முழுவதுமாகத் திரும்பவிடாமல் அவனது சட்டையைத் தன் பிடிமாணத்திற்காக இறுக்கமாக பிடித்தபடி, தன் ஒற்றைக் காலினை மட்டும் தரையில் ஊன்றிய நிலையில் எழுந்து நிற்பதற்குத் தள்ளாடிக் கொண்டிருந்தாள், அபியின் அன்பு தங்கை ரக்ஷா. அதை உணர்ந்துக் கொண்டவன், "அட, அம்மு! பார்த்து.. மெல்ல.. மெல்லமாக" அவளைத் தூக்குவதற்குப் பின்னோக்கித் திரும்பினால் கீழே விழுந்து விடுவாளோ என நினைத்துக்கொண்டு, அமர்ந்த நிலையிலேயேத் தன் ஒற்றைக் கரத்தை மட்டும் பின்னோக்கி நகர்த்தி, அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
அண்ணனின் கை தன்னைப் பிடித்துக்கொண்ட நம்பிக்கையில், ரக்ஷாவும் தன் மற்றொரு பாதத்தை ஊன்றிடுவதற்கு ஏதுவாக அபியின் கையைப் பிடித்துக்கொண்டு தத்திமுத்தி எப்படியோ எழுந்து நின்றுக்கொண்டு, "ஹஹஹ. பாப்-பாப்-பாப்-பாப்." தன்னையே பின்தொர்ந்து வந்த தந்தையை நோக்கி வெற்றிச் சிரிப்பு சிரிக்க, "அம்ம்ம்ம்மா. ரக்ஷா எழுந்து நின்றுவிட்டாள்!! சீக்கிரம் வாருங்கள்,அம்மா. இங்கு வந்துப் பாருங்கள்." காலை முதல் இருந்த சோகம் எல்லாம் காற்றில் காணாமல் போய், தன் குட்டித் தங்கையின் முதல் அடியைக் கண்டதில் உற்சாகமாகக் கத்தத் தொடங்கினான் அபி.
இடது கையால் அண்ணனின் சட்டையையும் வலது கையால் அண்ணனின் வலது கரத்தையும் பிடித்துக் கொண்டிருந்த ரக்ஷா, இப்போது இரு கரத்தையும் விட்டுவிட்டு, இரண்டடி தூரத்தில் நிற்கும் தந்தையை நோக்கி, அசைந்தாடும் தன் முதல் அடியை எடுத்துவைத்தாள். அவளின் குட்டிக் குட்டி பாதங்களால் தள்ளாடும் தளிர் நடைகளில் எட்டு அடிகள் எடுத்துவைத்து சரியாக தந்தையின் காலைப் பிடிக்கப்போன சமயம், தடுமாறி விழுவது போல் செல்ல.. முகம் நிறைந்தப் புன்னகையுடன் தன் மகளைத் தூக்கிக் கொண்டார் சத்யபாமா.
"என் குட்டி இளவரசியே! நடை பயின்றுக் கொண்டீர்களா? ஹாஹா.. உன் அக்கா நடப்பதற்கு முன் நீ நடக்க துவங்கி விட்டாயா என் செல்வமே!", தன் மகளின் கன்னத்தில் சத்யா முத்தமிட்ட அதே நொடியில், "அத்தை! மாயாதான் முதலில் நடக்கத் தொடங்கினாள். இங்கே வந்துப் பாருங்கள்." ராகவியின் குரலைத் தொடர்ந்து உற்சாகமாக விரைந்துச் செல்லும் தங்கள் மகனைப் பின்தொடர்ந்து, ஆர்வமாக வீட்டினுள் சென்றார்கள் சத்யா மற்றும் சத்யஜித்.
அங்கே, ரக்ஷாவின் உருவில் ஒத்திருக்கும் மாயா, தன் இரு கைகளையும் வைத்து ஒரு மேஜையை பிடித்தபடி எழுந்து நின்றுகொண்டு, அதன் மேலே இருந்தக் காய்கறி நறுக்கும் கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு, "பாப்பா.. அண்ணனிடம் வா, அண்ணனிடம் வா..." உற்சாகமாக கை நீட்டிடும் தன் அண்ணனை நோக்கித் தட்டுத்தடுமாறி முன்னேறினாள்.
ரட்சக ராஜ்யத்தின் வருங்கால இளவரசிகள் இருவரும் இங்குத் தங்களின் முதல் அடியை எடுத்துவைத்துத் தன் உறவுகள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்ட அதேநேரம், அங்கே வனதேசத்தில், தன்னுடைய முதல் பயிற்சியை சிறப்பாக மேற்கொண்டதற்காக தன் குருக்கள் மூவரின் பாராட்டு மழையில் உற்சாகமாக நனைந்து கொண்டிருந்தான் ஷேனா. தன் குருக்கள் மூவரும் தன்னைப் புகழ்ந்துப் பாராட்டுவதை குதூகலத்துடன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு இந்தப் பாராட்டுகள் எல்லாம் மிகப் புதியது. நினைவுத் தெரிந்தநாள் முதல் அவன் சுற்றிக் கொண்டிருப்பது மிகக்குறுகிய வட்டமே. அதில் அவன் பணிந்துச் செல்லும் மூவரில், இருளரசனுக்கு அவருடைய வேலை முடிந்தால் போதும், மறுபேச்சுக்கு இடமின்றி அவனைத துரத்திவிடுவார். அவரின் தங்கை காத்யாயினுக்குத் தன் மகள் ஷேனாவின் கையில் இருந்தால் மட்டுமே சற்றுநேரம் அமைதியாக இருப்பாள். அதனால், தன் மகளை அமைதியாக்கினால் போதும், அடுத்தநொடியே அவனை வார்த்தைகளால் கடிக்க தொடங்கி விடுவார். மூன்றாவது அவனுடைய பாசமிகு அன்னை. அவன் செய்திடும் ஒவ்வொரு சின்னஞ்சிறு காரியத்தையும் ரசித்து ரசித்துப் பாராட்டிடுவார். தன் மகன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவனைக் கொஞ்சி, புகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் அவள் மட்டும்தான். இருப்பினும், இத்தனைப் பூரிப்புடன் அவனைப் புகழ்ந்துப் பாராட்டி, இப்படி உற்சாகப்படுத்தியவர்கள் எவரும் இல்லை என்பதால், அளப்பரிய ஆனந்தத்துடன் தன் குருமார்களின் பாதம்பணிந்து அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு உற்சாகமான அன்னையை நாடி ஓடினான் ஷேனா.
அவனின் மலர்ந்த முகத்தைக் கண்டத்தில் கோவன்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. மேலும், முதல் சிஷ்யனின் முதல் வெற்றி அவர்களையும் வெகுவாக உற்சாகப் படுத்திவிட்டது. அதே உற்சாகத்துடன் மையாழியிடம் விடைபெற்றுத் தங்கள் இருப்பிடம் நாடி நடக்கத் தொடங்கினார்கள் மூவரும்.
✨✨✨
"மாமா, நான் எங்கும் செல்லவில்லை. வீராதான் என்னை வெள்ளை மாயவாயிலுக்குள் முட்டித் தள்ளினான். என்னை அவன்தான் மீண்டும் இங்கு வர விடவில்லை." இளவரசிகள் எழுந்து நின்றுவிட்ட மகிழ்ச்சியில் குடும்பமே மகிழந்துக் கொண்டிருந்த நேரத்தில், அதே வெண்ணிற மாய வாயிலின் வழியாக வந்துவிட்ட தீராவை அனைத்துக்கொண்டத் தன் அபி மாமாவைக் கண்டு அழுவதற்குத் தயாராகி நின்ற தீராவை கையில் தூக்கிக்கொண்ட அபி, "சரி, சரி. நீ அழ வேண்டாம். இப்போது என் செல்ல தீரா என்னிடமே வந்துவிட்டாள் அல்லவா."அவளை சமாதானப் படுத்தினான் அபி.
"மாமா, நான் இனி எங்கும் செல்ல மாட்டேன். அந்த வெள்ளை வாயில் எனக்கு வேண்டாம்." அபியின் கழுத்தை அவள் அனைத்துக் கொள்ள, "இல்லை, தீரா. நீ செல். மாயவாயில் மூலமாக எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால், செல்லும்முன் என்னிடம் சொல்லிவிட்டுத் தான் செல்லவேண்டும். பிறகு, விரைவாக என்னிடமே வந்திட வேண்டும். சரியா?" சற்றுத் தயங்கினாலும், மெல்லியக் குரலுடன் அபி கேட்டதைக் கண்டு வீட்டிலிருந்த பெரியவர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பிட, "சரி மாமா." அவன்மீதே தலை சாய்த்துக்கொண்டாள் தீரா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro