4. சமாரா
இருளரசனின் சகோதரி பணிந்த வேலைக்காக, காத்யாயினியின் மகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தான் ஷேனா.. அங்கே ஒரு தொட்டிலில், கண்களை மூடி அமைதியாக உறக்கத்தில் இருந்தாள் காத்யாயினியின் எட்டு மாத குழந்தை சமாரா.
காலடிகளை மெல்லமாக எடுத்துவைத்து, குழந்தையின் உறக்கம் கலையாமல் அவள் தொட்டிலருகில் சென்ற ஷேனா, அவளைத் தூக்குவதற்காக கரத்தை தொட்டிலினுள் விட... கண்கள் மூடியிருந்த நிலையிலும் அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் சமாரா..
பிறந்த பச்சிளம் குழந்தையாக இருப்பினும் அவளின் கூரிய நகங்கள் ஷேனாவின் கரத்தினுள் ஆழமாக பதிந்துக் கொண்டிருக்க.. இப்போது மற்றொரு கரத்தின் நகத்தினையும் அவன் உதிரத்தில் நனைக்க முன்வந்தாள் அவள். அதுதரும் வலியை பொறுக்க முடியாமல், கரத்தை அவள்வசம் இருந்து விடுவிப்பதற்காக ஷேனா துடித்துக் கொண்டிருந்த நேரம், திடீரென்று தொட்டிலில் இருந்த சமாராவின் கண்கள் விழித்தது... விழித்த ஒரு நொடியிலேயே அவள் விழியிரண்டும் கறுமை படர... அடுத்த நொடியில் அவளாகவே ஷேனாவின் கரத்தினை விடுவித்திருந்தாள்.
பட்டென தன் கரத்தை உருவிக்கொண்டு, கூரிய நகங்கள் பட்டு தன் கரத்தில் இருந்து வழியும் குருதியை மற்றொரு கரம்கொண்டு அடக்கிய ஷேனா, அவளை ஒரு மிரட்சியுடன் காண... எங்கோ இருந்து துள்ளிக்குதித்து ஓடிவந்தான் ஒரு சிறுவன்... சற்று முன்பாக ஒரு அறைக்குள்ளிருந்து ரகசியமாக வெளியே வந்த அதே சிறுவன். இருளரசனின் ஐந்து வயது மகன், விரோஷன ராணா.
ஷேனாவின் அருகில் வந்து நின்றவன் அவனைப் பார்த்து லேசாக சிரிக்க.. அவனை உணர்வில்லா ஒரு பார்வை பார்த்த ஷேனா, தொட்டிலில் இருக்கும் சமாராவை தூக்கிக்கொண்டு, இருளரசனும் காத்யாயினியும் இருக்கும் இடம் நோக்கி நடந்தான். செல்லும் அவன் முதுகைப் பார்த்து இன்னுமும் சிரித்துக் கொண்டேதான் இருந்தான் ராணா.
அவனை கண்டுக்கொள்ளாமல் சமாராவைத் தூக்கிக்கொண்டு சென்ற ஷேனா, இருளரசன் முன்பாக வந்து நிற்க... அவன் பின்னேயே குதித்துக் குதித்து வந்திருந்தான் ராணா. காத்யாயினி, ஷேனாவிடமிருந்து சமாராவை வாங்க.. அவன் பின்னேயே சிரிப்புடன் தன் மகன் வருவதை கண்ட இருளரசன், "இங்கென்ன செய்கிறாய் ராணா... உன்னை வெளியே சுற்றக்கூடாதென சொல்லியிருக்கிறேன் அல்லவா??..", ஒரு அதட்டு போட்டதில் மருண்டு போய் நின்றான் ராணா. இருளரசனின் குரலில் கோபம் கொந்தளிக்க... அவரையே விழித்து விழித்து பார்த்து கொண்டிருந்தான் அவரின் மகன். இது வழக்கம்போல் நடப்பது தானே என்பதுபோல் அமைதியாகவே நின்று கொண்டிருந்தான் ஷேனா.
"ராணா.. மீண்டும் மீண்டும் எத்தனைமுறை உன்னிடம் சொல்வது... இப்படியே வெளியில் அலைந்துக் கொண்டிருப்பின், உன்னை எங்கேனும் தூரமாக.. தனியாக அடைத்து வைத்திடுவேன்... இனியும் இப்படி மாளிகையின் உள்ளே சுற்றாதே... உன்னை எங்கே இருக்கச் சொன்னேனோ அங்கேயே இரு.. புரிந்ததா?..", இருளரசன் உச்ச ஸ்தானியில் கத்திக் கொண்டிருக்க... அது செவியில் ஏறியதா இல்லையா என கணிக்கவே முடியாத ஒரு பார்வையில் தந்தையை பார்த்திருந்தான் ராணா.
இருளரசனுக்கும் இதற்குமேல் இவனை எப்படி கையாழ்வது என்பது புரியவில்லை.. இவன் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதும் முகத்தில் உணர்வுகள் வெளிப்படுவதும் அபூர்வமே... பேச்சு வராதென்றெல்லாம் கிடையாது... தெள்ளந்தெளிவாக பேசுவான்... ஆனால் எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசுவான். எப்போதும் போல் இப்போதும் அவன் அப்படியே இருக்க.., "விடுங்கள் சகோதரா.. சிறுபிள்ளை அவன். இப்படி ஓடியாடத் தானே ஆசை இருக்கும். அவனை ஏன் கட்டுப்படுத்துகிறீர்கள்?" சமாராவுடன் நின்றிருந்த காத்யாயினிதான் அவள் சகோதரனை சாந்தமாக்கியது. இருளரசன், ராணாவை கட்டுபடுத்துவதற்கான காரணங்களைத்தான் அவள் அறியமாட்டாளே.
சமாராவை தன் கையில் வாங்கிய இருளரசன், அவளை ராணாவின் கையில் கொடுக்க.. ஐந்து வயது குழந்தையை போலெல்லாம் இல்லாமல், அவளைப் பூப்போலத் தூக்கிக்கொண்டான் ராணா.
"செல் ராணா... சென்று குழந்தையுடன் விளையாடு", இவ்வளவு நேரம் இருந்த கடுகடுப்பு மறைந்து அவர் மென்மையாக ராணாவிடம் பேச.. குழந்தையைக் கையில் தூக்கிய ஆனந்தத்தில் அவனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான்.
ராணா சென்றதும் அதே மென்மையுடன் ஷேனாவின் முன் குனிந்து அமர்ந்தவர், "ஷேனா... தந்தை சொல்வதை செய்வாய் தானே...", போலி சிரிப்புடன் அவன் முகம் நோக்க.. என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்து, ஷேனா திகிலடைந்தாலும் சரியென தலையாட்டத்தான் முடிந்தது அவனால்.
✨✨✨
ஆசையாக சமாராவைத் தூக்கிக்கொண்டு அவள் அறைக்கே வந்த ராணா, அவளை தொட்டிலில் படுக்க வைக்க... சுருள் சுருளாக இருந்த அவன் தலைமுடியை கொத்தாக பிடித்துக்கொண்டு சிரித்தாள் அவள். பதிலுக்கு அவனும் சிரித்துக்கொண்டே அவள் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுக்க.. அப்போதுதான் கவனித்தான் அவள் நகங்களை.
ஷேனாவின் குருதியில் ஊரி, காய்ந்துபோய் இருக்கும் அவள் நகங்களைக் கண்டவன், ஒரு குவளையில் தண்ணீரை எடுத்துவந்து அதை சுத்தம் செய்துகொண்டே அவள் முகத்தை உற்று நோக்க... சமாராவின் விழிகள் கறுமை படர்ந்தது... அதே நேரம் ராணாவின் கண்கள் ஒரு அடர்ந்த நிறத்தில் ஜொலித்தது.
ஒரே நொடியில் இருவர் கண்களும் சகஜ நிலைக்குத் திரும்பிட, சமாராவின் கைகளை சுத்தம் செய்துவிட்டு அவள் கன்னத்தை வருடிய ராணா, "இது தவறு... இனி இப்படி செய்யாதே... உனக்கு உதிரம் வேண்டுமெனில் என்னிடம் சொல்.. சரியா??", அவளிடம் கூறிக்கொண்டே ஒரு கூர்மையான பொருளை கையில் எடுத்தவன், தன் சுட்டுவிரலில் குத்தி அதை சமாராவின் உதட்டில் வைக்க.. நன்றாக சப்புகொட்டி அதை சுவைத்து உண்டாள் சமாரா.
✨✨✨
இருள்வானில் ஒற்றை நிலவைப்போல் நிழல்ராஜ்யத்தின் ஒற்றை ஜோதியாக இருக்கும் அந்த அறைக்குள், பலநாள் கழித்து இன்று வெகுவாக வாடியிருந்தது ஷிவேதனாவின் முகம். எல்லாம் ஷேனா கொண்டுவந்த அந்த புத்தகத்தால் தான். அவன் கொண்டுவந்தது என்னவோ கதைக்காகத் தான். அனால் கதையை சொல்லியவளுக்கோ, அவள் வாழ்வில் புதையுண்ட பழைய கதைகள் எல்லாம் புதிதாக மேலெழும்பக் கிளம்பிவிட்டது.
ஏழு ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த வாழ்க்கை, குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்வான தருணங்கள், உறவுகள், எல்லாம் இழந்தாள் ஒரே இரவில். மாயசக்திகளை உடையவள், நிழல்தேசத்தின் சிப்பாயை விரும்பிய ஒரே காரணத்திற்காக தன் உறவுகள், மகிழ்வுகள், ராஜபதவி என அனைத்தையும் துறந்து நிழல்தேசம் வந்துவிட்டாள்.. ஷேனா பிறக்கும் வரையில், இருள்மாளிகையிலேயே தன் கணவனுடன் இணைந்து மகிழ்வுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள், அந்த கசப்பான செய்தி அவள் காதில் ஒலித்திடும் வரையில்.. நிழல்தேசத்து அரசரை நேரில் சந்திக்க நேர்ந்த அந்தநாள் வரையில்.
ஷேனா பிறந்து இரண்டே வாரம்தான் கடந்திருக்கும். திடீரென அவன் உடல் நெருப்பாய் கொதிக்க ஆரம்பித்திருக்க, மகனை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டு புறப்பட்டவர் தான். கணவனுடன் சென்ற மகன் மீண்டும் வந்தது நிழல்தேசத்து அரசரான இருளரசனுடன். அதுவும் மயங்கிய நிலையில்.
தன் அறையின் வாயிலிலேயே நின்ற இருளரசனின் கையில், தன் மகன் மயங்கியிருந்ததை கண்டு துடித்துப்போன ஷிவேதனா வாயிலுக்கு ஓடிவர, அவருக்கு பேரிடியாக வந்தது அடுத்த செய்தி. "ரட்சக ராஜ்யத்தின் சக்தி கொண்டவளை மணம் செய்து, ஆதிலோக விதிகளை மீறிய குற்றத்திற்காக நிழல்ராஜ்ய தலைமை சிப்பாயாகிய உன் கணவன் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்.", சொல்லிக்கொண்டே கையிலிருந்த ஷேனாவை அவன் அன்னையிடம் நீட்ட.. அவனை வாங்கவந்த ஷிவேதனாவின் கைகள், இருளரசன் சொல்லிய செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றுபோனது.
அவளின் நிலைக்கு ஒருநொடி கவனத்தையே கொடுத்த இருளரசன் அந்த அறைய சுற்றிலும் பார்வையை வீசிட,"ரட்சக ராஜ்யத்தின் ஒளி", நொடிக்கும் குறைவான நேரத்தில் அவர் முகத்தில் தோன்றி மறைந்தது ஒரு ஏலனப் புன்னகை. "இது என் தேசத்தின் பாகமல்ல...", தன் பார்வையை அந்த அறையின் மூலை முடுக்கெங்கிலும் பரவியிருந்த ஒளியின் மீது பதித்தபடி மெல்லமாக குரலில் தனக்குத்தானே சொல்லியவர் தன் கையிலிருப்பவனை இன்னும் கொஞ்சம் முன்னே நீட்ட, சொட்டத் தொடங்கிய கண்ணீருடன், நடுங்கும் கைகளுடன் தன் மகனைப் பற்றிக்கொண்டார் ஷிவேதனா.
"நீங்கள் இருவரும் இங்கே இருள்மாளிகையிலேயே இருக்க வேண்டும். வேண்டியவை அனைத்தும் அறைக்கே வரும்."
"எங்களை மன்னித்திடுங்கள்..", ஷேனாவை தன் அரவணைப்பில் வைத்த நிலையிலேயே கை கூப்பியவர், "என் கணவரை விடுவித்திடுங்கள்.. நாங்கள் நிழல்தேசத்தை நீங்கிச் சென்றுவிடுகிறோம்.", கண்ணீருடன் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து விட்டார்..
"இங்கேயே இருக்க வேண்டுமெனச் சொல்லியது என் கோரிக்கையல்ல.. கட்டளை. மீறினால் உன் மகன் உட்பட மூவருக்கும் மரண தண்டனை பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை", இருளரசனின் கட்டளைக்கு கண்ணீர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை ஷிவேதனாவால். அவர் மண்டியிட்டு, கண்ணீரால் கெஞ்சி நிற்கும் நிலையை இருநொடி பார்த்தவர் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாக.. பின், ஏதோ நினைவு வந்தவராய் மீண்டும் ஷிவேதனாவின் புறம் திரும்பினார்.
"உன் மகன் குறித்து இன்னுமொரு தகவலை அறிய விழைகிறேன்.. பெற்ற தாய்க்கு மட்டுமே தன் குழந்தை மாய சக்திகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவனா இல்லையா என்பது தெரியும்.. இவன் ஒரு வீரனின் மகன்.. இவன் வீரம் வீண்போகக் கூடாது. வளர்ந்த பின் பயிற்சியளிக்கவென கேட்கிறேன்.. மாயங்களை கையாழக்கூடியவனா உன் மகன்?.", வார்தையேதும் அவள் நாவிலிருந்து எழாததால் கண்ணீருடன் இல்லையென தலையசைக்க, "கவலை வேண்டாம்.. என் சிப்பாயின் மகனாக இருப்பினும் என் மகனைப்போல் பார்த்துக் கொள்கிறேன்.", என்றுவிட்டு கிளம்பியவர், ஷிவேதனாவின் வாழ்வில் எஞ்சியிருந்த ஒரேயொரு பிடிமானத்தையும் ஒரேடியாக இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றிருந்தார்.
அன்று உடைந்தவர் தான், இன்று வரையில் தன் மகனறியாமல் கண்ணீரிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும், ஒவ்வொரு முறையும் தன் மகன் இருளரசனை தந்தையென அழைக்கும்போது 'அவர் உன் தந்தையல்ல' என கத்தவேண்டும் போல் தான் இருக்கும். ஆனால், உண்மையை சொன்னால் எங்கே தந்தையை தேடிப்போகிறேன் என சென்று வம்பில் மாட்டிக்கொள்வானோ என ஒரு பயம் தான். தனக்கிருக்கும் கடைசி உறவல்லவா இவன்.
ஆதிலோக சரித்திர புத்தகத்தைப் பார்த்ததில் நினைவிற்கு வந்த தன் சரித்திரத்தை நினைத்து அவள் கலங்கிக் கொண்டிருந்த அதேநேரம், சமாராவுடன் விளையாடி விளையாடி அவளை தூங்கவே வைத்துவிட்ட ராணவை மீண்டும் தனிமை பிடித்துக்கொள்ள.. அது பிடிக்காமல் வழக்கம்போல் இருள் மாளிகையினுள் உலாவிக்கொண்டிருந்தான். என்னதான் தந்தை கடிந்துக் கொண்டாலும் அதை கேட்கக்கூடாதென கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான் போலும்.
ஏதோ காரணத்திற்காக ராணாவை இருள்மாளிகையை விட்டு வெளியேற இருளரசன் அனுமதிப்பதில்லை... அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறையைவிட்டு வெளியேவந்து, மாளிகைக்கு உள்ளேயே சுற்றுவதற்கு கூட ராணாவிற்கு கட்டுப்பாடு தான்.. பல இடங்களுக்கு அவன் செல்ல க் கூடாதென தடை விதித்திருக்க... பாவம் ஐந்து வயது சிறுவன் என்ன செய்வான்?.. அவனுக்கு, அவன் வயதிற்கு ஓடியாடித் திரியத்தானே மனம் துடிக்கும்... அப்படி வெளியே வரும் சமயம் தந்தையிடம் மாட்டிக்கொண்டு நன்றாக வாங்கிகட்டிக் கொள்வான்.
சமாராவின் அறையிலிருந்து வெளியே வந்தவன், இங்குதான் செல்லவேண்டும் என்ற இலக்கே இல்லாமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு இறுதியாக வந்து நின்றது, ஒளி படர்ந்த அந்த அறையின் வாயிலில்தான். ஏனோ அவ்விடம் வரும்போதெல்லாம் அந்த ஒளி அவன் கண்களை உறுத்திக்கொண்டே இருக்க.. அங்கு வரும்போது மட்டும் மெய்மறந்து நின்றிடுவான். அதேபோல் தான் இன்றும், ஷிவேதனாவின் அறை வாயிலை அடைந்ததும் அவன் கால்கள் வேறு எங்கும் செல்ல நினைக்கவில்லை.. அப்படியே நின்று அந்த வித்தியாசமான அறைக்குள் நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
தினம் தினம் எண்ணியெண்ணி கலங்கும் தன் வாழ்க்கையை குறித்த கவலை, கண்ணீராக மாறி ஷிவேதனாவின் கன்னம் தீண்ட.. அதை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ராணா, அனிச்சையாகவே தன் இமைகளை அழுத்தமாக மூடி திறந்தான். மறுநொடி, அவன் விழி கறுமையில் ஜொலிக்க.. ஷிவேதனாவின் கண்கள் தானாகவே இருள் படர்ந்தது. ராணா, அவனறியாமலே ஷிவேதனாவை வசியம் செய்ய... தன் சிந்தையை இழந்து சிறுவனின் வசியத்தில் சிக்கியவள் அவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அவளை வசியப்படுத்த வேண்டுமென ராணா நினைத்திருக்கவில்லை.. எப்படி வசியம் செய்ய வேண்டும் என்பதைக் கூட அவன் அறியான்... இருப்பினும் அவன் விழிகள், காண்பவர்களை திடீர் திடீரென வசியம் செய்வது சாதாரணமாகி விட்டது இப்போதெல்லாம்.
எப்படி அவனறியாமல் வசியம் செய்கிறானோ.. அதேபோல் அவனறியாமலே விடுவித்தும் விடுகிறான்... ஷிவேதனா சரியாக வாயிலைத் தாண்ட முனைந்த நொடி அவளின் நிலை சகஜமாகிட... அறைக்குள் அமர்ந்திருந்தவள் இப்படி திடீரென்று வாயிலில் நிற்பதை பார்த்து குழப்பத்தில் திடுக்கிட்டாள்... அதேநேரம் அவளுக்கு முன், இருளுக்குள் ஒரு நிழலைப் போல் தெரிந்தது ராணாவின் உருவம். அவள் தன்னை கவனிப்பதை உணர்ந்த ராணா அங்கிருந்து ஓடுவதற்கு முனைய... அதை உணர்ந்து, பட்டென கைநீட்டி அந்த உருவத்தை பிடித்தாள் ஷிவேதனா . பிடித்தவுடன் திமிறி ஓடுவான் என்று நினைத்தால்.. இல்லை., ஷிவேதனாவின் இழுப்புக்கு ஏற்றார்போல் முன்னோக்கி வந்து, ஒளி நிறைந்த அந்த அறையினுள் தன் காலடியை பதித்தான்.
அவன் பிஞ்சு முகத்தை புரியாத பார்வையில் ஷிவேதனா பார்த்திருக்க.. அவனோ, முதல் முறையாக ஒளியானது விழிகளுக்குள் புகுவது பொறுக்காமல் இமைகளை குறுக்கிக் கொண்டான்... மேலும், தன் சரீரத்தில் அந்த ஒளி பதிவதைப் பார்த்து, உடலிலிருந்தும் முகத்திலிருந்தும் அதனை தட்டிவிட்டுக் கொண்டிருந்தான். இவனின் விசித்திர செய்கையை கண்ட ஷிவேதனா, ஏதோ ஒரு யூகத்தில் தன் முந்தானையால் அவன் முகத்தை மூடிட... அது அவனுக்கு ஒளியிலிருந்து தப்பிக்க நன்றாக இருந்தது போலும்... தன்னை முழுவதுமாக அவளின் முந்தானைக்குள் ஒளித்துக் கொண்டான் ராணா.
ஷிவேதனாவுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.. இவன் யார்?.. எப்படி இந்த இருள்மாளிகையினுள் வந்தான்?.. ஏன் ஒளியில் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறான் என நினைத்துக் கொண்டிருந்தவளின் சிந்தையில் அப்போதுதான் ஒன்று நினைவிற்கு வந்தது. அவனைத் தன் காலோடு அனைத்திருந்தவள், அவன் தலையை வருடிக்கொண்டே, "காலையில் இவ்விடம் வந்தது நீ தானே கண்ணா??..." என்றிட.. அவனிடம் வழக்கமான மௌனமே.
"யார் கண்ணா நீ?.. இங்கெப்படி வந்தாய்??", என்றதற்கு அவளிடமிருந்து மெதுவாக விலகியவன் அவள் விரலோடு கரம் கோர்த்து அவள் முகம் நோக்கி நிமிர்ந்தான்.
அவன் விழிகள் அனிச்சையாகவே அவளின் விழிகளை வசியம் செய்ய, "அம்மா.....", அடிக்குரலில் அழைத்தவனது கண்கள் அவளை ஏக்கமாக காண... அப்படியே அவளை கரம் பிடித்து இருளுக்குள் அழைத்துச் சென்றான்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro