38. குழப்பங்கள் தீர்ந்தது.
நேரம், உச்சிவேளையை நெருங்கிக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையினுள் அமர்ந்திருந்த இருளரசன், தன் தேடலுக்குத் தக்கத் தீர்வு கிடைத்துவிட்ட ஆனந்தத்தில், பூஜைக்கான ஏற்பாடுகளை உற்சாகமாகச் செய்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிள் அத்தனை ஆர்வம். நினைத்தது நடக்கப் போகிறதென அத்தனை பேராசை. தான் மட்டுமே அனைத்திற்கும் தலைமைத் தாங்கப் போகிறோம் என்னும் உச்சகட்ட சுயநலம்.
"தேவா.. இனி இப்பிரபஞ்சத்தில் உங்களின் மறுவருகையைத் தடுத்திட எவர் நினைப்பினும் அக்காரியம் ஈடேராது. நீங்கள் இந்த லோகத்தில் பிரவேசமளித்தாலே போதும். உங்களின் அடியேனாகிய எனக்கு, என் விருப்பம் நிறைவேறியதற்குச் சமம். நிச்சயமாக இது நடந்தேறும் தேவா. உங்கள் வரவிற்கு இனி நான் பொறுப்பாவேன்" தரையிலிருக்கும் ஆறு சிலைகளின் கால்களோடுப் பிணைக்கபட்டிருக்கும் சங்கிலியைத் தன் கைகளில் மொத்தமாகப் பிடித்திருக்கும் சிலையிடம் உற்சாகமாகக் கூறிக் கொண்டவர், ஒரு நீண்டப் பெருமூச்சுடன், மூன்று-திங்கள் நடக்கவேண்டிய அப்பூஜையில் அமர்ந்தார்.
அதே நேரம், இருளரசனிடம் இருந்து இதுவரையில் அழைப்பு வராததால், காலை முதல் அன்னையுடனே பேசி விளையாடிக் கொண்டிருந்தான் ஷேனா. தன் மகன் தன்னுடனே இருந்ததால் மற்றைய சிந்தனைகளை ஓரங்கட்டிவிட்டு, மகனுடன் ஆனந்தமாக பொழுதைக் கழித்தார் ஷிவேதனா. இருளரசனின் யாகம் குறித்து ஷேனா தன் அன்னையிடன் ஏற்கணவே கூறியிருக்க, அது என்ன யாகம் என்பதையெல்லாம் சிந்திக்காமல், இன்னும் மூன்று திங்கள் முழுவதுமாக இருளரசன் தன் மகனைத் தொந்தரவு செய்யமாட்டார் என்பதை நினைத்து நிம்மதிக் கொண்டார்.
இன்னும் சில நாழிகைகளில் மாலை நேரம் நெருங்கப்போவதை உணர்ந்த ஷிவேதனா தன் மகனை அழைத்து, "ஷேனா, இன்று நீ உன் குருக்களை சந்திக்கச் செல்ல வேண்டுமல்லவா? நினைவில் இருக்கிறதா?" மகனிடம் கேட்க, "ஹான்! நினைவிருக்கிறது அம்மா. அவர்கள் மூவரும் உங்களுக்குப் பரிசு கொடுத்ததுப் போலவே நானும் தினமும் அவர்களைப் பார்க்கச்சென்று உங்களுக்குப் பரிசளிப்பேன்." உற்சாகமாக அன்னையின் கேள்விக்கு விடைகொடுத்தான் ஷேனா. "என் செல்ல ஷேனா." மகனை ஆசையாக அவர் அணைத்துக் கொள்ள, "அம்மா, நான் அவர்களிடம் செல்வது உங்களுக்குப் பரிசு தானே?" உறுதி படுத்தளுக்காக ஒருமுறை அன்னையிடமே கேட்டுக்கொண்டான் அவன்.
"ஹாஹாஹா! ஆம், ஷேனா. அவர்கள் கற்றுத் தருவதைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டு நீ ஒரு மாவீரன் ஆவதுதான் எனக்குத் தலைச்சிறந்த பரிசாகுமடா"
"அப்படியென்றால் சரி, நான், இப்போதே அவர்களிடம் சென்று அவர்கள் சொல்வதைக் கற்றுக் கொள்கிறேன். நேரமாகிவிட்டதல்லவா? நான் புறப்படுகிறேன் அம்மா."
"இன்னும் நேரம் இருக்கிறது ஷேனா"
"பரவாயில்லை அம்மா. நான் உங்களுக்கான பரிசை சீக்கிரமாகக் கொடுக்கிறேன்" அன்னைக்குக் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தவன், தனக்கும் ஒரு முத்தத்தைப் பெற்றுக்கொண்டு, தன் முதல்நாள் பயிற்சிக்காக குருக்களைச் சந்திக்க உற்சாகத்துடன் புறப்பட்டான் ஷேனா.
✨✨✨
வீட்டிலிருந்து புறப்பட்ட பத்து நிமிடத்திலேயே ரத்னமாளிகையை அடைந்திருந்தார் ரோகிணி. அங்கே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சிறு சிறு குழுக்களாக நின்று வெவ்வேறு விதமான மாயக் கலைகள், போர்க் கலைகள் போன்றவற்றைப் பயிற்சி செய்துக்கொண்டும் அதைப் பயிற்றுவித்துக் கொண்டும் இருக்க... அக்கூட்டத்தினிடையே தன் சகோதரனைக் கண்டுக்கொண்டவள், உற்சாகத்துடன் நேராக அவரிடம் சென்றாள்.
"அண்ணா," உற்சாகத்துடன் தனக்குப் பின்னால் கேட்டக் குரலால் பின்னோக்கித் திரும்பிய சத்யஜித், தன் மூத்த சகோதரியின் உற்சாகம் புரியாமல், தலையசைப்பிலேயே என்னவென வினவிட, "அண்ணா, உங்களிடம் ஒரு முக்கியத் தகவல் தெரிவிக்கவேண்டும்.", அதே உணக்காகத்துடன் கூறினார் ரோகிணி.
"அம்- சற்று காத்திரு ரோகிணி, நான் வருகிறேன்." அவளை காத்திருகிக்கக் கூறியவர், தனக்கு முன்னால் நின்றிருக்கும் இருபது வயது மதிக்கத்தக்க மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை நோக்கித் திரும்பி, "இன்றைய பயிற்சிகள் அவ்வளவுதான். இன்றுமுதல், நான்கு திங்கள் வரையில் தினசரி முறையான பயிற்சி மேற்கொண்டால், இதனை சுலபமாக கையாழலாம். சென்று, தவறாமல் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்." அவர்களுக்கு விடை கொடுக்க... தங்களின் குருவை பணிந்துவிட்டு அவர்கள் நால்வரும் புறப்பட்டப்பின்னர், தன் தங்கையை நோக்கி திரும்பினார் சத்யஜித்.
"என்ன தகவல் ரோகிணி? ஏனிந்த அவசரம்! முதலில், ஏனிந்த உற்சாகம்?"
"அண்ணா! நம் வீரா.. அவன், ருத்வலோகத்தைச் சேர்ந்தவன் அண்ணா!" தங்கை, முகம்கொள்ளாப் புன்னகையுடன் கூறியச் செய்தியால் விழிவிரித்து அவளை நோக்கினார் அவர்.
"என்ன? ருத்வலோகமா? எப்படி- எதை வைத்துச் சொல்கிறாய் ரோகிணி?"
"ஆமாம், அண்ணா! நான் சொல்வது உண்மைதான். நம்புங்கள்! இருளின் ஆதிக்கத்திலிருந்து ஆதிலோகத்தைக் காப்பதற்காக பிறந்த ரட்சகனின் நண்பன் ராஜன், பறக்கும் வெண்குதிரை தானே? அவனும் ருத்வலோகத்தைச் சார்ந்தவன் தானே? இன்று, அக்கதையை நம் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கையில் வீரா நம் வீட்டிற்கே வந்துவிட்டான். அபியின் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து, அத்தனை உற்சாகமாகத் துள்ளிக் கொண்டிருந்தான். சிறு சந்தேகத்தில், அவன் நெற்றிலிருந்தக் கேசத்தை அகற்றிவிட்டு நானே பார்த்தேன் அந்த அடையாளத்தை. ரட்சகனின் ராஜனிடம் முன்பிருந்த மாயக்கொம்பு உடைக்கப்பட்டதன் அடையாளமாக, நம் வீராவின் நெற்றியில் அந்த வடு இன்றவும் இருக்கிறது அண்ணா! போதாதற்கு, நம் தீரா... அவள், கதையிலிருக்கும் குதிரையையும் நம் வீராவையும் ஒன்றெனச் சொல்கிறாள். அவளும் வீராவுடன் ஒன்றாகத்தானே நம்மிடம் வந்தாள். அவளைப் பற்றியும் நமக்கு எதுவும் முழுமையாகத் தெரியாதுதானே?" இவ்வளவு நேரமும் தன் மனதில் போட்டு அலசிக் கொண்டிருந்தவை மொத்தத்தையும் சகோதரனிடம் கொட்டிவிட்டாள் அவள்.
"என்ன! எனில், வீரா நம்மிடம் வந்ததன் பொருள்?"
"ஆதிகால ரட்சகன் மீண்டும் பிறப்பெடுப்பான் என வரலாறுகள் சொல்கிறதல்லவா? ஒருவேளை, விரைவில் அவன் பிறப்பு நிகழ உள்ளது போலும் அண்ணா. ரட்சகனுக்காக மாத்திரமே ராஜன் தன் லோகத்தை விட்டு வெளியேறிடுவான்."
"ஹான். அதை அறிவேனம்மா. ஆயின், என் குழப்பம் நம் தீரா மற்றும் தாரியைக் குறித்தது. ருத்வலோகம், மாய உயிரினங்களுக்கானது. வீராவை நாம் முதன் முதலில் சந்திக்கையிலேயே தீராவும் தாரியும் அவனுடன்தான் இருந்தார்கள். எனில், அவர்கள்?"
"எனக்கும் அதே குழப்பம் தான் அண்ணா. ஆயின், அவர்கள் நிச்சயம் சாமான்ய குழந்தைகள் அல்ல. அவர்களின் வரவிற்கும் வீராவிற்கும் ரட்சகனுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது."
"ஹ்ம்ம். ஆம், ரோகிணி. ஏதோ பெரும் காரணகாரியம் இதன்பின் உள்ளது. எந்த எல்லைக்குச் சென்றேனும் நாம் தான் நம் பிள்ளைகளைக் காக்கவேண்டும்."
"நிச்சயமாக, அண்ணா. அவர்களை நெருங்கும் எத்தீங்காயினும் நம்மைத் தாண்டித்தானே ஆக வேண்டும். இருப்பினும், அவர்கள் வெல்லப் பிறந்தவர்கள். அத்தனை விரைவில் அவர்களைத் தீமையின் சாயல் நெருங்கிடாது" கர்வமாக ரோகிணி சொல்லிக் கொண்டிருக்க.. அதேநேரம், அங்கே சாயல் அரசாங்கத்தின் அரசன், ரட்சகனின் மும்மணிகளைப் பற்றி அறிந்துக்கொண்டு அதனை அபகரிக்க பெரும் திட்டமே தீட்டி முடித்து மூன்று-திங்கள் யாகத்தில் மும்முரமாக களமிறங்கி இருந்தார்.
✨✨✨
இவ்வளவு நேரமும் அபி வாசித்துக் கொண்டிருந்த, 'ரட்சகனின் மும்மணிகள்' என்ற புத்தகத்தில் இருந்த ஒரு ஓவியத்தைத் தன் தலையைக் கொண்டு, முட்டிக்கொண்டும் வருடிக்கொண்டும் மெல்லமாக முணங்கியபடி நின்றிருந்தான் வீரா.
வீராவின் செயல் புரியவில்லை என்றாலும் அவன் ஏதோ சோகமாக முணங்குவது மட்டும் மூவருக்குமே புரிய... அது ஏனென்று புரியாமல், அபி மற்றும் ராகவி அவன் செய்பவற்றை விநோதமாகப் பார்த்து கொண்டிருந்த சமயம், "ஓஹ்ஹ்! வீரா... நீ அழாதே. பிறகு, நானும் அழுவேன்." சோககீதம் பாடியபடியே வீராவின் வலதுபுற முன்னங்காலைக் கட்டிக் கொண்டாள் தீரா.
அவளுக்கு பதில் கொடுப்பதுபோல், அந்த ஓவியத்தைத் தன் மூக்கால் உரசியபடி வீராவும் ஏதோ முனங்க, "நீ அழாதே வீரா, அவனையும் நம்மோடு அழைத்துக் கொள்ளலாம், நீ அழாதே." அவன் காலினைத் தட்டிக் கொடுத்தாள் அவள். தன் குட்டித் தங்கையை வினோதமாக நோக்கியபடியே அவர்கள் இருவரின் அருகிலும் சென்ற ராகவி, அந்த புத்தகத்தில் வீரா பார்த்துக் கொண்டிருந்த படத்தைக் கண்டு விழிகளை அகல விரித்ததுதான் மிச்சம்... அப்படியே வாயில் கை வைத்தபடி அங்கேயே நின்றுவிட்டாள். அவளின் செய்கையை பார்த்து இப்போது குழம்பியது என்னவோ அபி தான்.
"அப்படி அந்தப் படத்தில் என்னதான் இருக்கிறது, ராவி? அதைப் பார்த்ததும் வீரா சோகமாகி விட்டான். நீயும் உறைந்துப் போய் நிற்கிறாய்? அது என்ன ஓவியம்?" வீராவின் அருகில் சென்றால், எங்கே தன்னை முட்டித் தள்ளிவிடுவானோ என பயந்தபடி, சற்று தூரமாக நின்றவாறே அப்புத்தகத்தை அபி எட்டி பார்க்க.. ரட்சகனுடன் நின்றிருந்த அவனின் கொம்பில்லாத வெண்புரவி, அப்படியே வீராவை அச்சில் வார்த்தது போல் மிகுந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான். அதன் கீழ்புறத்தில் ரட்சகனின் ராஜன் என பட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
அக்காட்சியைக் கண்ட நொடியில் அபியின் கண்களும் அகல விரிந்த அதே நொடி, "தீரா சொன்னது சரிதான் ஜித்தூ! இது நம் வீரா தான்!" குரலில் அதிர்ச்சியைக் கலந்தபடி, இன்னுமும் விழியை விரித்துவைத்த நிலையிலேயேத் தன் பார்வையை அந்தப் படத்தின்மீது பதித்து நின்றிருந்தாள் ராகவி. அபிக்கும் அதே நிலை தான்.
"ஆமாம், ராவி! இவன்... வீரா! நம் வீராவே தான்" அதிர்ச்சிக் குரலில் தொடங்கியவன், மெல்லிய குரலில், குழப்பத்துடனே நிதர்சனத்தை ஒப்புக்கொள்ள, "நான்தான் முன்பே சொன்னேன் அல்லவா? அவன், என் பெரிய வீரா என்று. நீங்கள் தான் நம்பவில்லை.", வீராவின் காலில் தலையை சாய்தபடி, முகத்தைச் சுருக்கித் தன் மாமாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் தீரா.
உண்மையில், தீரா குறிப்பிட்ட அவளின் பெரிய வீரா என்பது உருவில் பெரிய வீரா இல்லை, புத்தகத்தில் இருந்த ஓவியத்தில் பெரிய வீரா என்பதே. கொம்பு வைத்த வெண்புரவியின் ஓவியம், இரு பக்கங்களுக்கு இணைத்தது போல் பெரிதாக வரையப் பட்டிருந்ததால் அதைப் பெரிய வீரா என குறிப்பிட்டிருந்தாள் இவள். தன்னை நம்பாததற்கு தீரா, இன்னும் அபியை முறைத்த நிலையிலேயே நிற்க... ஏதோ சிந்தனையில் இருந்தவன், "ஹம்ம்ம்... உண்மைதான். நீ மட்டும்தான் இவை குறித்து அறிந்திருக்க முடியும் தீரா. ஆதிலோகத்திற்கு வீரா வரும்போது தானே நீயும் எங்களுக்குக் கிடைத்தாய். அவ்வாறெனில், நீயும் அவனோடு தானே வாழ்ந்திருப்பாய்?" எங்கோ இருந்துத் தங்கள் இருப்பிடம் வந்த வீராவுடன், குழந்தையாக இருந்த தீரா மற்றும் தாரியை அபி நினைத்துப் பார்க்க, "என்ன? நான் கிடைத்தேனா? வீராவுடனா? எனில், நான் தொலைந்து விட்டேனே? வீராவுமா? எங்களைத் தொலைத்து விட்டீர்களா?", கேள்விமேல் கேள்வி கேட்ட தீராவின் விழிகள் இரண்டும் அப்பாவியாக அபியை ஏறிட்டன.
அவளின் கேள்வியை முழுமையாக உணர்ந்தப் பின்னரே, என்ன கூறினோம் என்பதை அபி நினைத்துப் பார்க்க.. தனது சொல்லை மீண்டும் ஒருமுறை மனதில் ஓடவிட்டுப் பார்த்தவன், தெளிவில்லாதத் தன் சொல்லுக்காக மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டு, தீராவிற்கு பதிலளிக்க முன்வரும் முன்peதன் தங்கையை நெருங்கியிருந்தாள் ராகவி.
"இல்லை, தீரா. நாங்கள் உன்னைத் தொலைக்கவில்லை. நீ தான் வைரமாளிகையில் இருந்து எங்களுக்குக் கிடைத்தாய். உன் கவி அக்காதான் உன்னையும் தாரியையும் வீராவையும் கண்டுபிடித்தாள். நீ எங்களைப்போல் சாதாரணமாக இங்கு பிறக்கவில்லையாம். நீ.. தனித்துவமானவள், வித்தியாசமானவள். சயனா சித்தி அப்படித்தான் சொன்னார்." தீராவின் கன்னத்தைப் பிடித்தபடி, ராகவி, மென்மையாகக் கூற.. அவளுக்கு எது புரிந்ததோ இல்லையோ, வித்தியாசமானவள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்துவிட்டது.
"நான் வித்தியாசமானவளா? நானா? ஹே, ஹே, ஹே!! நான் உங்களைப்போல் இல்லை. வித்தியாசமனாவள், வித்தியாசமானவள்!" கூச்சலிட்டபடி, கூடத்தைச் சுற்றிச் சுற்றி ஓட்டமாக ஓட... எதிரில் நடந்துவந்த சயனா தான் தன் மகளின் செயலில் பயந்துப்போய் மற்ற இருவரையும் நோக்கினார். சித்தியின் பார்வையை புரிந்துக்கொண்ட ராகவி, கதையைப் படிக்க அமர்ந்ததுமுதல் நிகழ்ந்தவை அனைத்தையும் சயனாவிடம் கூறத் தொடங்கியிருக்க. இங்கு மறுபுறம், தீவிர யோசனையில் நின்றிருந்த அபி, தாரியைக் கொஞ்சி விளையாடும் வீராவையும் அவனோடு நின்றிருந்த தீராவையும் ஏறிட்டபடி நின்றிருந்தான்.
உண்மையில் புத்தகத்தில் இருக்கும் குதிரை, நம் வீரா தானா என்னும் சந்தேகத்தில், பாதி முடிவிற்கு வந்துவிட்டான் அவன். ஆனால், இன்னுமும் சிறு சந்தேகம் அவனுள் இருக்கத்தான் செய்தது. அத்துடன், நுவழி பாட்டி இந்தப் புத்தகத்தை எதற்காகத் தன்னிடம் கொடுத்தார் என்பதும் அவன் நினைவிற்கு வர, சில கணம் வரையில் ஆழ்ந்த யோசனையில் நின்றிருந்த அபியின் கண்கள், ஏதோ விடை கிடைத்த ஆனந்தத்தில் மின்னியது.
ராகவி இன்னுமும் சயனாவிடம் தீவிரமாகக் கதை கூறிக் கொண்டிருக்க.. வீராவின் பார்வையும் அந்தப் புத்தகத்திலிருந்து நீங்கித் தரையில் ஊர்ந்துக் கொண்டிருந்த தாரியின் மீது பதிந்திருக்க.. சத்தமில்லாமல் முன்னோக்கி அடியெடுத்து வைத்த அபி, பார்வையை வீராவின் மீது வைத்தபடியே தரையிலிருந்தப் புத்தகத்தைக் குனிந்துக் கையில் எடுத்தான். நல்லவேளையாக வீராவின் கவனம் சிதறிடவில்லை. தாரியின்மீதே இருந்தது.
சற்றுமுன் வீரா பார்த்துக் கொண்டிருந்த ஓவியம் இருந்த அதே பக்கத்தைப் பிரித்து வைத்தவன், தன் ஒற்றை விரலை அந்தப் பக்கத்தில் வைத்தபடி புத்தகத்தை மூடிவிட்டு வீராவை நோக்கி மெல்லமாக நடந்தான். "வீரா..." சற்று மெல்லியக் குரலாயினும் தெளிவாகவே அபி உச்சரிக்க, அவனது குரலை கேட்ட வீரா, தன் செவியை கூர்மையாக்கியபடி பார்வையை அவனை நோக்கி திருப்பி, அபியை முட்டித்தள்ள தயாராகி நின்றான். அதையே எதிர்பார்த்திருந்த அபி, தன் கையிலிருந்த புத்தகத்தில் விரல் வைத்திருந்த பக்கத்தைச் சட்டெனத் திறந்து, அதை வீராவின் முகத்திற்கு நேராக உயர்த்தினான். அதேநேரம், இங்கு ராகவியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த சயனாவும், தன் சித்திக்குக் கதை கூறி கொண்டிருந்த ராகவியும் தங்களின் கவனத்தை அபியை நோக்கித் திருப்பினார்கள்.
அபியை முட்டித்தள்ளத் தயாராக இருந்த வீராவின் கவனம் மொத்தமும் இப்போது அபியின் கரத்திலிருந்த புத்தகத்தின் மீது நிலைகுத்தி நின்றுவிட.. அதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அபி, வீராவை மெல்லமாக நெருங்கி, அவன்மீது மென்மையாகத் தன் கரம் பதித்திருந்தான். வீராவின் கவனம் புத்தகத்தில் இருந்ததால் அவன் அபியை கண்டுக்கொள்ளவில்லை. அந்தப் புத்தகத்திலிருந்த ஓவியத்தைக் கண்டதும், வீரா, மீண்டும் சோகமாகிட... மெல்ல மெல்லத் தன் கரத்தை நகர்த்தி வீராவை வருடிய அபி, "இவன் உன் ரட்சகன் தானே, வீரா? நீ கவலைக் கொள்ளாதே, அவன் எங்கும் செல்லவில்லை. மீண்டும் நம்மிடமே வந்திடுவான். உனக்காகவே வரவளிப்பான். நீயும் அவனை விரைவிலேயே சந்திக்கப் போகின்றாய்" மென்மையாக கூறியபடியே அபி அவனை வருடிக்கொண்டே இருக்க... தன் கண்களை மூடி, அபியின் வருடலுக்கு இசைந்த வீரா, எவ்வித மறுப்பும் காட்டிடவில்லை. அதுவே அபிக்கு குதூகலமாக இருக்க, கையிலிருந்த புத்தகத்தை கீழே விட்டவன் மெல்லமாக வீராவின் நெற்றிமீதுத் தன் தலையைச் சாய்த்தான். இதற்காவது வீரா தன் மறுப்பை வெளிப்படுத்துவான் என எதிர்பார்த்திருந்த அபியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அவனோடு சேர்த்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களையும் அதிசயிக்கச் செய்வது போலவே, அபியை நோக்கித் தன் தலையை அவனாகவே முன் கொண்டுவந்தான் வீரா.
அபியின் மனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக் கொள்ள... வீராவின் கழுத்தைக் கட்டியணைத்தபடி எதேச்சையாகப் பார்வையைக் கீழ்நோக்கித் திருப்பியவனின் விழிகள், மூடிய நிலையில் கீழே கிடந்த அந்தப் புத்தகத்தின் பின்பக்கத்தை அடைந்தது. உள்ளே தனித்தனியாக வரையப்பட்டிருந்த வெண்மணி, திரிகோக மணி மற்றும் கறுமுத்து, இங்கே, முக்கோண அமைப்பில் ஒன்றாக வரையபட்டிருருந்தது. அதன் மையத்தில், ~ ரட்சகனின் சக்திகளும் மாயபுரவியின் சக்திகளும் ஒருங்கினைந்த அந்தக் கொம்பிலிருந்து பிரிந்த மும்மணிகளும் அதனைக் கையாழ்பவரின் குணத்தைப் பொறுத்தே செயல்பட்டன.. ஆக்கமெனின் பேராக்கம்.. அழிவெனில்... பேரழிவு ~ என தடித்த எழுத்துகளில் எழுதப் பட்டிருப்பதை அபி மேலோட்டமாக படித்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு சந்தேகம் அவன் மனதில் எழ.. அந்தச் சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ள, வீராவை அணைத்துக் கொண்டிருந்தத் தன் ஒற்றைக் கரத்தை மட்டும் அவனது நெற்றிக்கு நகர்த்தினான். வீராவின் நெற்றியில் தவழ்ந்துக் கொண்டிருந்த கேசத்தை, அபி, வருடத் தொடங்கிய சமயம் 'இதற்குமேல் சந்தேகத்திற்கு இடமில்லை.. இவன்தான் ரட்சகனின் நண்பன்' என அடித்துக் கூறிடும் விதத்தில் அவன் உள்ளங்கையில் தட்டுப்பட்டது வீராவின் உடைக்கப்பட்ட கொம்பு.
அதேநேரம், சட்டென இமைப்பிரித்த வீரா, நொடியும் தாமதிக்காமல் அபியை ஒரே மோதலில் தன்னை விட்டுத் தூரமாகத் தள்ளிவிட்டு, முன்னங்கால்கள் இரண்டையும் உயரேத் தூக்கி அபியின் மீது கோபமாகக் கணைக்க.. பதறியபடி விரைந்துவந்த சயனா, நொடியில் தன் மருமகனை தூக்கிவிட்டபடி வீராவின் பார்வையிலிருந்து அபியை மறைத்துக்கொண்டு இருவருக்கும் இடையில் நின்றாள்.
"வீரா!!" சயனாவின் குரல், கட்டளையாக ஒலிக்க.. வீரா அடங்கியபாடில்லை. "வீரா, நில். அமைதி- அமைதியாக நில், வீரா." தன் ஒற்றைக் கரத்தைச் சற்றே மேலே உயர்த்தியபடி அவள் மெல்ல முன்னேற... ஓரிரு கணங்களிலேயே சயனாவை அடையாளம் கண்டுக்கொண்ட வீரா, அமைதியாகி நின்றான். தரையில் தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தைகள் மூவருடன் சங்கவியும் இணைந்துக் கொண்டு, ஏதோ கேளிக்கை காட்சியை வேடிக்கைப் பார்ப்பதுபோல் அங்கே நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க.. வீரா அமைதியாகியதும், அபிக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என சோதிக்க தொடங்கினாள் சயனா. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அபி.
"அத்தை!! அத்தை, நான் வீராவை நெருங்கிவிட்டேன், பார்த்தீர்களா! என் கைகளால் அவனை வருடினேன். அவன் என்னைத் தடுக்கவில்லை. நான் இப்போது கண்டுபிடித்துவிட்டேன், அத்தை! இவன்தான் ரட்சகனின் ராஜன். இவன்தான் அது. உடைக்கபட்ட அந்தக் கொம்பின் தழும்புக்கூட அவனிடம் இருக்கிறது. இப்போது அவனுக்கு பயம். அவ்வளவுதான் அத்தை. ரட்சகனோடு வாழ்ந்தக் காலத்தில், துஷ்ட்டர்கள் அவனது சக்திகளை உறிஞ்சிய நினைவுகள், அவனை பாதித்துள்ளது என நினைக்கிறேன். ரட்சகன் மட்டுமே இவனைக் காப்பான், மற்றவர்கள் இவனைத் துன்புறுத்திடுவார்கள் என இன்றளவும் பயந்துக் கொண்டிருக்கிறான். அதனால்தான் அவன் நெற்றியை நான் தொட்டதும் என்னைத் தள்ளிவிட்டான். ஹஹா, இப்போது எனக்கு பதில் கிடைத்துவிட்டது. வீராவிடம் எப்படி நட்புக் கொள்ளவேண்டும் எனக் கண்டுபிடித்துவிட்டேன், அத்தை!" சயனாவின் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு, ஒவ்வொன்றாகக் கூறக்கூற, அவன் கண்களில் எழும் துள்ளலைத் தெளிவாகவே காண முடிந்தது அவளால்.
அத்துடன் சேர்த்து, வீராவின் இத்தனை நாள் நிலையும், சற்றுமுன் வரையில் வீராவைக் குறித்து ராகவி கூறியதும் இப்போது வீரா, அபியிடம் நடந்துக் கொண்டதும் தான் முன்பே படித்திருந்த 'ரட்சகனின் மும்மணிகள்' கதையையும் சேர்த்துவைத்துப் பார்த்தப் பின்னரே அவருக்கும் வீராவின் நிலை தெளிவாகப் புரிந்தது.
"அபி! அபி.. பொறுமை, பொறுமை! இத்தனை மகிழ்ச்சியா உனக்கு?!", அவன் பேச்சுவேகத்தைக் கண்டுச் சிரித்தவள், "ஆனால், நீ சொல்லியது உண்மைதான் அபி. வீராவின் பயமே ஆடவர் யவரையும் அவனருகில் நெருங்கிட அனுமதிக்கவில்லை. இப்போது தானடா எனக்கும் புரிகிறது" அபியின் மகிழ்ச்சியில் இணைந்துக் கொண்டவள், வீராவின் நிலையையும் புரிந்துக்கொண்டாள்.
இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாடலைக் கண்டுக்கொள்ளாமல், வீராவுடன் நின்றிருந்த தீரா, "அம்மா, வீரா பாவம். நீங்கள் அவனை பயம்புருத்தி விட்டீர்கள். பாவம் என் வீரா. நீ அழாதே, வீரா.. அவர்கள் நமக்கு வேண்டாம். நீ அஞ்சாதே.. நான் இருக்கிறேன் உனக்கு. நான் உன்னை பத்திரமாக கவனித்துக் கொள்கிறேன்." சயனாவிடம் கோபித்துக் கொண்டபடி, அபியின் செயலால் பயந்துபோய் இருந்த வீராவை கட்டிகொண்டு அவனை சமாதானம் செய்துக்கொண்டு நின்றிருந்தாள் தீரா.
"அதுசரி! நாங்களா உன் வீராவை பயம்புருத்தினோம்? அவன்தான் என் பிள்ளைகளை அச்சமடைய வைத்துவிட்டான். பார், என் குழந்தைகளை, எப்படி பயந்துப்போய், சிலையாக அமர்ந்திருக்கிறார்கள் என்று.." தரையில் அமர்ந்திருந்த மூவரையும் சயனா, சுட்டிக்காட்ட... கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடக்கிய நிலையில், தங்கள் கண்முன் இருக்கும் வெண்ணிறக் காட்சிப் பொருளாகிய வீராவை விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மாயா, ரக்ஷா மற்றும் தாரி.
"ஹும், அவர்கள் எப்போதும் இப்படித்தான் சிலைபோல் அமர்ந்திருப்பார்கள். என் வீரா பாவம்தான்." காட்டமாகக் கூறியபடி தீரா தன் முகத்தைத் திருப்பிக்கொள்ள, "ஹாஹாஹா! பாவம்தான், பாவம் தான். பத்திரமாகப் பார்த்துக்கொள் உன் வீராவை. நான், உணவு தயார்செய்ய செல்கிறேன்" தன் குட்டி மகளின் கன்னத்தை நன்றாகக் கிள்ளியபடி வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார் சயனா. அவளும், கன்னத்தை தேய்த்துக்கொண்டு, வீராவுடன் விளையாட சென்றுவிட்டாள். வீராவும், இன்று ரத்னமாளிகைக்குத் திரும்பிடும் எண்ணமே இல்லாததுபோல் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததால் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.
அன்றையப் பொழுது அப்படியே நகந்தது. ரத்னமாளிகைக்குத் தத்தம் பணிகளுக்காகச் சென்றிருந்த மற்றவர்களும், வைரமாளிகையின் ஒளி மறைவதற்குள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ராகவி, அமைதியாக இருக்க முடியாமல், சற்றுமுன்பே வீட்டிற்கு வந்திருப்பவர்களையும் இழுத்துவைத்து, சயனாவிடம் கூறியக் கதையை இவர்களுக்கும் கூறிக் கொண்டிருந்தாள்.
அபி, இவை எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுடையத் தனி லோகத்தில், வீராவை நினைத்து உற்சாகமாக அலைந்துக் கொண்டிருந்த நேரம், திடீரெனத் தன் காலை யாரோ இறுக்கமாகப் பிடிக்கும் உணர்வில் நிஜத்திற்குத் திரும்பி கீழே நோக்கிட.. அங்கே, தீரா தான் அரண்ட விழிகளுடன் ஆபியின் கால்களை கட்டிகொண்டு நின்றிருந்தாள். அவள் பார்வையோ, வேறொரு திசையில் பதிந்திருக்க.. என்னவென அதே திசையில் அபியும் பார்த்தத்தில் அவர்களுக்கு முன்பாகத் தோன்றியிருந்த வெண்நிற மாயவாயிலைக் கண்டுத் திகைத்து நின்றான்.
அவ்வாயிலைக் கண்ட நொடியே மகாராணியின் செய்தி அபிக்கு நினைவு வர.. அதை எண்ணிப் பார்த்தவனுக்கு 'செல், தீரா.. தைரியமாக உள்ளே செல். ஒன்றும் ஆகாது' எனச் சொல்வதற்கு எழுந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டையிலேயே அடைத்துக்கொண்டு நிற்க, "மாமா.. இது வேண்டாம்.. இதை இங்கிருந்துப் போகச் சொல்லுங்கள். எனக்கு வேண்டாம்." அபியின் மீதானத் தன் பிடியை இறுக்கிக் கொண்டாள் தீரா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro