37. பெரிய்ய்ய்ய வீரா!
~ "செல்! சென்றுவிடு. இங்கிருந்து தூரமாகச் சென்றுவிடு. செல்ல்ல்ல். செல்லென கூறினேன். நீ இங்கேயே இருப்பது உனக்குத்தான் ஆபத்து. செல்" ஒரு இளம் பெண்ணின் குரலானது பயம், பதட்டம், அழுகை, வலி என அனைத்தும் கலந்து ரட்சகனின் செவியை அடைய, மெல்ல தன் நடையை அந்த நிழலை நோக்கிச் செலுத்தினான் அவன்.ஒரு பெண்ணை எதிர்நோக்கியே நிழலை நோக்கி நடந்தவன், அங்குக் கண்டது என்னவோ நோய்வாய்பட்ட ஒரு சாது விலங்கான மாய வெண்புரவியைத் தான். ~
அபி, இவ்வரியை வாசித்து முடித்த அதே நொடியில் வீட்டின் வாயிலில் பெரும் ஆரவாரம் கேட்க... இரண்டே நொடி தான், தன் வெண்ணிற ரெக்கைகளை விரித்தபடி வாயில் வழியே பறந்து வந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த மூவருக்கு முன்னிலையில் முன்னங்கால்களை உற்சாகமாக உயர்த்தி மகிழ்ச்சியுடன் நின்றான் வீரா. திடீரென பறந்துவந்து தங்கள் முன்னிலையில் உற்சாகமாகக் குதித்துக் கொண்டிருந்த வீராவை, திகில் பார்வையில் அபி பார்க்க, படக்கென தரையிலிருந்து எழுந்த ராகவி மற்றும் தீரா, கால்களை தூக்கித்தூக்கி உற்சாகமாகக் கணைத்துக் கொண்டிருக்கும் வீராவை ஆர்வமாக நோக்கினார்கள்.
இவ்வளவு நேரமும் சங்கவியுடன் சேர்ந்துத் தரையை அளந்து விளையாடிக் கொண்டிருந்த பொடிவாண்டுகள் மூவரும் வீராவின் குரலால் அவனை நோக்கிக் கழுத்தை மட்டும் திருப்பிய நிலையில் அப்படியே அமர்ந்து விட.. அவர்களின் பார்வையோ 'நடுக் கூடத்தில் வெள்ளையாக மேலும் கீழும் குதித்து அசைந்துக் கொண்டிருக்கும் இது என்னது?' என்பது போல வீராவின் மீது பதிந்து நின்றது.
"வீரா, நீ வீட்டில் என்ன செய்கிறாய்? மாளிகைக்குச் செல். நான்தான் உன்னைப் பார்க்க அங்கு வருவேனே!" குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சங்கவி, வீராவைக் கண்டதும் அவனை நோக்கி ஓடி வரும்போதே, கூடத்தில் நிகழ்ந்த சலசலப்பால், சிறிய காய்கறிக் கூடையுடன் பின்பக்கத் தோட்டத்திலிருந்து அங்கே வரவளிதாள் ரோகிணி."வீரா!?" வீட்டினுள் நுழையும்போதே விழி விரித்தவள், கையிலிருந்தக் கூடையை அருகிலிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு, "இங்கென்னடா செய்கிறாய்? இன்னும் சிறிது நேரத்தில் இவர்களே உன்னிடம் தானடா வருவார்கள்?" அதிர்ச்சியும் குழப்பமும் கலந்தவாறே வீராவினருகில் வந்த ரோகிணி, அவனது பிடரி முடியை மென்மையாகக் கோதிவி்ட... அதற்கு, வாகாய் அவன் குனியும் போதே, "அம்மா, நான் 'வீரா' கதை கேட்டுக் கொண்டிருப்பதால் அவனும் கதைகேட்க வந்துவிட்டான்." வீராவின் முன்னங்கால்களுக்கு இடையே நின்றுக்கொண்டு சம்பந்தமே இல்லாத ஒரு கற்பனை விடையை ரோகிணிக்குக் கொடுத்தாள் தீரா.
"ஹாஹாஹா, அதென்ன வீரா கதை? அதற்குள் வீராவை வைத்துக் கதை எழுதிவிட்டாளா என் குட்டி மகள்?" என்றபடியே, அவளை வீராவின் கால்களுக்கு இடையிலிருந்து வெளியே இழுத்துக் கையில் தூக்கிக்கொள்ள, "அஹான்.. குட்டி மகள் எழுதவில்லை. அபி மாமாவிற்கு பாட்டி பரிசு கொடுத்த கதை." மும்முரமாகத் தலையை ஆட்டித் தன் வளர்ப்பு அன்னையின் சந்தேகத்தைப் போக்கினாள் அவள்.
"பாட்டியா?", ரோகிணியின் பார்வை, தரையில் அமர்ந்திருந்த அவரின் மருமகனையும் அவனருகில் நின்றிருந்தத் தன் மூத்த மகளையும் நோக்கிக் கேள்வியாகத் திரும்ப, "அத்தை, நேற்று நுவழி பாட்டியைச் சந்திக்கச் சென்றோமல்லவா, அப்போது அவர்தான் கொடுத்தார்." தன் மடியில் வைத்திருந்த புத்தகத்தைத் தூக்கி அத்தையிடம் காட்டினான் அபிஜித். 'ரட்சகனின் மும்மணிகள்' என்றிருந்த அந்த அட்டையைக் கண்ட மாத்திரமே அந்த கதை முழுவதுமாக ரோகிணிக்கு நினைவு வந்து விட, "ஓஹ்!", மருமகனுக்குத் தலை அசைக்கையிலேயே, "ஆம் அம்மா! இந்தக் கதையைதான் உங்கள் குட்டி மகள் சொல்கிறாள். இதிலிருக்கும் இந்த பெரிய குதிரைதான் அவளின் பெரிய வீராவாம். அப்போதிலிருந்து அதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் சொல்லிடுங்கள் அம்மா, கதையிலிருப்பவன் நம் வீரா இல்லையென." புத்தகத்தில் இருந்த வெண்புரவியைக் காட்டி, தீராவைத் தன் அன்னையிடம் குற்றம் சாடினாள் ராகவி.
"தீரா, கதையில் இருப்பவன் ரட்சகனின் நண்பன்!" தன் ஒற்றைக் கரத்தில் அமர்ந்திருப்பவளை நோக்கி ரோகிணி சொல்லும்போதே அவள் மனதினில் புதிதாக எழுந்திருந்து ஒரு குழப்பத்துடன், தன் மறு கரத்தால் வீராவின் நெற்றியை வருட தொடங்கியிருந்தாள். "ஆம் அம்மா! என் பெரிய வீரா ரச்சனின் (ரட்சகனின்) நண்பன்! அபி மாமா சொன்னான். ருத்வ லோகத்திலிருந்து ஓடி வந்துவிட்டானாம்! அவன் பாவம். அவனை தும்புறுதிறார்கள் (துன்புறுத்துகிறார்கள்). அவனையும் நம்மிடம் கூட்டி வந்திடலாம்." சோகமான முகத்துடன் ரோகிணியிடம் கூறியவள் 'பெரிய வீரா' என்பதை மட்டும் விட்டபாடில்லை.
"ஹான், ஹான். அழைக்கலாம். ஆனால், இப்போது நீ சென்று கதையைப் படி.", என அவளை கீழே இறக்கி விட்டு, "அபி, நான் ரத்னமாளிகை செல்கிறேன். சயனா, தோட்டத்தில்தான் இருக்கிறாள். இப்போது வந்திடுவாள். அதுவரையில், இவர்கள் அனைவரையும் சேட்டை செய்யாமல் பத்திரமாக கவணித்துகொள். சரியா?" அபியிடம் கூறிய ரோகிணி, "வீரா, வா நாம் செல்லலாம், உன்னை மாளிகையில் விட்டுச் செல்கிறேன்" என வீராவை அழைக்க.. அவனோ, மறுப்பாகத் தலையை சிலிர்த்துவிட்டு அபியின் மடியிலிருந்தப் புத்தகத்தை வாயால் கவ்வி இழுத்து, நின்றுக் கொண்டிருக்கும் தீராவின் அருகில் அதை பொத்தென போட்டான். அதைப்பார்த்துக் கொட்டக் கொட்ட விழிக்கும் அபியைக் நோக்கிக் கலகலவென சிரி்க்க தொடங்கினாள் ராகவி.
"அம்மா, அவன் உங்களுடன் வரமாட்டான். அவனுக்கு அபி மாமா வைத்திருக்கும் கதை வேண்டுமாம். அதனால்தான் அதை என்னிடம் கொடுத்துச் சொல்லக் கேட்கிறான். நான் அவனுக்குக் கதைச் சொல்லப் போகிறேன்." வேகவேகமாகச் சம்மணமிட்டு அமர்ந்த தீரா, அந்தப் பெரிய புத்தகத்தைத் தூக்கி மடியில் வைத்து, அபி இறுதியாக திறந்து வைத்திருந்தப் பக்கத்தைப் புரட்டி, வீராவுக்கு அவளே கதைச் சொல்லத் தொடங்கினாள்.
"வா, வீரா. இங்கு வா. நான் உனக்குக் கதைச் சொல்கிறேன். இங்கு ரட்சன் (ரட்சகன்) நடந்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கே பெரிய வீரா விழுந்துக் கிடந்தான். அதைப்பார்த்த அவன் நேராகப் பெரிய வீராவிடம் சென்று.. அவனைப் பார்த்து அழுது, அழுது... பின், அவன் கொம்பைப் பிடித்துத் தூக்கி, பெரிய வீராவை எழுந்து நிற்க வைத்துவிட்டான். அதன்பிறகு அப்படியே அந்தக் கொம்பை 'டம்' என உடைத்துவிட்டு, கீழே தொபுக்கென விழுந்துவிட்டான்." புத்தகத்தில் இருக்கும் படத்தை வைத்து, வாய்க்கு வருபவற்றை எல்லாம் தீரா ஒப்புவித்துக் கொண்டிருக்க... அவளின் உளறல் மொழிகளுக்கெல்லாம் மெல்லமாகக் கணைத்துத் தன் தரப்பிலான எதிர்ப்பை அவளுக்குத் தெரிவித்தான் வீரா.
அந்தக் கதையை அறியாத அபி மற்றும் ராகவி, இவளில் உளரலையும் புத்தகத்தில் இருந்தப் படங்களையும் தொடர்புப்படுத்திப் பார்த்ததில் இரண்டும் ஒத்துப்போகவே.. அதைச் சரியென நம்பிக் கொண்டிருந்த நேரம், "அடியே குறும்பு மகளே! படங்களைப் பார்த்துக் கற்பனையில் உதிப்பவற்றைச் சொல்கிறாயா நீ? இப்படிக் கொடு அந்தப் புத்தகத்தை. இந்தா, அபி. நீயே இவளுக்குப் படித்துச் சொல். இவளை விட்டால் வாரலாற்றையே மாற்றிவிடுவாள் போலும். நான் மாளிகைக்குச் சென்று வருகிறேன்." புன்னகையுடன் கூறிவிட்டு மாளிகைக்கு புறப்பட ஆயத்தமானார் ரோகிணி.
"சரி, அத்தை. நீங்கள் வரும்போது அம்மாவையும் அழைத்து வாருங்கள்." அத்தைக்கு விடைக்கொடுத்த அபி, விட்ட இடத்திலிருந்துக் கதையை வாசிக்கத் தொடங்கினான். கதையை, தீரா வாசிக்காமல் அபி வாசிப்பதால் அங்கிருந்து நழுவிக்கொண்ட வீரா, இப்போது, சங்கவியுடன் இணைந்துக் கொண்டு மற்ற மூன்று வாண்டுகளையும் பின்தொடரத் தொடங்கிவிட்டான்.
~ ஒரு பெண்ணை எதிர்நோக்கியே நிழலை நோக்கி நடந்தவன், அங்குக் கண்டது என்னவோ நோய்வாய்பட்ட ஒரு சாது விலங்கான மாய வெண்புரவியைத் தான்.
சுற்றிலும் வேறு எவரும் இருக்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே நிழழுக்குள் பாதம் பதித்தவன், தன் காலருகில் எதையோ உணர்ந்ததால் அங்கிருக்கும் இருளை போக்கிடத் தன் மாயத்தை வைத்து ஒளியை உருவாக்கிக் கீழே பார்த்தப் பொழுது, நலிந்துப்போன நிலையில் தரையில் கிடந்தான் அவ்வெண்புரவி. அதனைப் பார்த்த முதல் பார்வையிலேயே, இவன்தான் இத்தனைக் காலமாகத் தன் உதவியை நாடி ஏங்கியது என்பதை ரட்சகனின் மனம் அறிந்துகொண்டது. 'இவ்வளவு அருகிலிருந்தும் எப்படி இவன் என் பார்வைக்குள் சிக்காமல் போனான்? சற்றுமுன் இங்கு ஏதோ குரல் கேட்டதே? அப்பெண்ணின் குரல் யாருடையது? இங்கு எவ்வொரு பெண்ணும் இல்லையே?' எனக் குழம்பியபடியே தரையில் கிடந்தப் புரவியை நெருங்கி, அவனுக்கு நிகராக தரையில் அமர்ந்திருந்தான் ரட்சகன்.கண்கள் சொருகிடும் நிலையில், தரையில் சரிந்துக் கிடந்த அதன் தோய்ந்த முகத்தைத் தன் ஒளியின் உதவியால் கண்ட நொடியே, ரட்சகனின் மனக்குழப்பங்கள் போய், வலி அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்க... கலங்கிய மனதுடன் தன் கரம்கொண்டு அவனை வருட முனைந்த சமயம், தன்னுள் உணர்ந்த ஒருவிதமான வினோத உணர்வால், மனமுடைந்துப் போய் சட்டென பின் நகர்ந்தான்.
அவ்வுணர்வின் காரணமாய் புரவியின்மீது பார்வைப் பதித்திருந்த ரட்சகனின் கண்கள் கசியத் தொடங்கியது. அக்கணம், அவன் உணர்ந்தது மொத்தமும் அந்தப் புரவியின் ஆழ்மனதின் வெளிப்பாட்டை மட்டும்தான். தன்னைக் காக்க வந்த ரட்சகனையே தன் சக்தியை உறிஞ்ச வந்த கயவர்கள் என நினைத்து பயந்த புரவியின் அந்த பயம், அப்பட்டமாக ரட்சகனால் உணர முடிந்தது. அதன் காரணமாகவே பின்வாங்கியவனின் கண்களில் கண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்க... ஒரு காப்பாளனுக்கே உரிய சில உயரிய சக்திகளால், தன் முன்னால் விழுந்துக்கிடக்கும் புரவியின் உண்மையான வலியை, மனவேதனையை, பயத்தை என அதனுடைய முழு மனநிலையையும் தெளிவாகவே அவனால் உணரமுடிந்தது.ரணம் கொண்ட மனதுடன், சில கணம் வரையில் இருவருக்கும் இடையில் இருந்த தூரத்தை அப்படியே காத்தவன், தன் கரத்தை இருக்க மூடிக்கொண்டு எப்படியோ தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டவந்து விட்டான். அதே நேரம், தீர்மானமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அந்தப் புரவியை மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்கினான். அதே வினோத உணர்வு மீண்டும் அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தது. "அஞ்சாதே, நண்பா! இக்கணத்துடன் உன் வேதனைகளை வேரருக்கின்றேன். இம்முறை மாத்திரம் தாங்கிக் கொள்ளடா இவ்வலியினை." கசியும் கண்ணீருடன், மானசீகமாகப் புரவியுடன் உரையாடியபடி எடுத்துவைத்த அவனது ஒவ்வொரு முன்னோக்கிய அடிகளுக்கும் புரவியின் பயம் மெல்ல மெல்ல எகிறிக் கொண்டிருக்க... அதன் பயத்தின் வெளிப்பாடாக மாயக்கொம்பு மிளிரத் தொடங்கியது. அதனுடைய சக்திகள் வெளிப்படத் தொடங்கியது.
அதை அப்படியேவிட்டால் புரவியின் உயிருக்கே ஆபத்து என்பதால், தன் சக்திகளினால் அதன் மனதைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தான் ரட்சகன். ஆனால், பயனில்லை. அந்தச் சாது பிறவியும் ஒரு மாய பிறவியாகப் பிறந்துவிட்டதால், ஓர் மாயத்தை மற்றைய மாயமே கட்டுபடுத்த முடியவில்லை. அதை உடனடியாக ஓரங்கட்டியவன், புரவியின் பயத்தை பொருட்படுத்தாமல், விரைந்துச் செயல்படத் தொடங்கினான்."அஞ்சாதே நண்பா! ஒன்றுமில்லை." பதட்டம் நிறைந்த மென்மையான வார்த்தைகளுடன் முன்னேறியவன், அதன் தலைமீதுத் தன் கரம் பதிக்க... புரவியின் நெற்றியிலிருந்து அதன் மனநிலைக்கு ஏற்றதுபோல் செயல்படத் தொடங்கியது அதன் கொம்பு. இன்னும் அதற்கு பயம் தான். இத்தனைக் காலம் சந்தித்த வலியை நினைத்து அதன் மனம் அதீத பயத்தினை உணர்ந்ததன் காரணமாக, தன்னில் எஞ்சியிருந்தச் சொற்ப சக்தியையும் வெளிப்படுத்தத் தொடங்கியது அப்புரவி.
ரட்சகனின் பார்வை, பல வண்ண மெல்லிய நிறங்களை வெளியிடும் அதன் மாயக் கொம்பின் மீது பதிய, "உன் நிலைக்குக் காரணம் இதுவேயல்லவா?" முனங்கியவனின் கரம் இரண்டும் அதன் கொம்பை இறுக்கமாகப் பற்றியது. ரட்சகன், கொம்பில் கொடுத்த அழுத்தம், புரவியின் வலியைக் கூட்டிட... வலியை வெளிப்படுத்த முடியாமல் துவண்டுக் கிடந்த அதனுடைய கண்ணீர் மட்டும் மெல்லியக் கீற்றாக, திட்டுத்திட்டாக நிலத்தினைத் தொட்டுக் கொண்டிருந்தது. இன்றுடன் தன் வாழ்நாள் முடிந்தது என, தன்னில் உணரும் வலியே அப்புரவியை நினைக்க வைக்க... கண்களை முழுதாக மூடியிருந்த அதனுடைய கண்ணில் கசிந்த கண்ணீர் மொத்தமாக வற்றத் தொடங்கியது. தன்னுடைய சக்திகள் வேறொரு உயிருக்குப் பரிமாறப்படுவதன் அடையாளமாகப் புரவியின் கொம்பானது பன்மடங்காக பிரகாசித்திட.. புரவியின் கொம்பைத் தன் இருகரங்களால் பற்றிக்கொண்டு, கண்களை மூடிய நிலையில் தன் சக்திகளை உள்ளூர உணர்ந்துக் கொண்டிருந்த ரட்சகனை, அந்தப் புரவியுடன் சேர்த்தவாரு ஒரு மஞ்சள் வண்ண ஒளி, சூழத் தொடங்கியது.
தன் சக்திகள் தன்னைவிட்டு நீங்குவதை புரவியால் தெளிவாக உணர முடிந்தாலும் இத்தனைக் காலமும் அவன் உணர்ந்திருந்த உணர்வுக்கு மாறான ஒன்றுதான் இப்போது உணர்ந்துக் கொண்டிருக்கிறான். வலி இல்லை. அவன் செயல் எதுவும் தன்னை பலவீனமாக்கிடவில்லை. அதனால் இப்போது பயமும் இல்லை. புரவியின் ஆழ்மனம், கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தைப் பெற்றது. மகிழ்ச்சியைப் பெற்றது. கால்கள் நான்கையும் திடமாக ஊன்றி, மெல்ல எழுந்து நிற்கத் தொடங்கியது.
ஒருபக்கம், அந்தப் புரவியிடம் எஞ்சியிருந்த அதன் முழு சக்திகளையும் ரட்சகன் அவனுக்குள் எடுத்துக்கொண்ட அதே சமயத்தில், மறுபக்கம், அதற்குப் பதிலாக அவனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து அந்த புரவியை குணப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
மெல்ல மெல்ல வெண்புரவியின் தேகம் தேறிக்கொண்டே வர.. இங்கே, தன்னுடைய உயிர்சக்திகள் தன்னை நீங்கிச் செல்வதால் படிப்படியாகத் தன்னிலையை இழந்துக்கொண்டே வந்தான் ரட்சகன். தான் இழந்த மொத்த சக்தியையும் மீண்டும் பெற்றுவிட்ட நிலையில், கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அப்புரவி, முன்னகால்கள் இரண்டையும் காற்றில் உயர்த்தி, ராஜ மிடுக்குடன் கணைத்தவாறுத் தன் கண்களை திறந்தது. தள்ளாடும் கால்களுடன், அவனைப்பார்த்து மெல்லப் புன்னகைத்தான் ரட்சகன்.
ஆனால், ரட்சகனின் நிலையைக் கண்ணால் பார்த்த நொடியில், அப்புரவியின் கண்களிலிருந்த மகிழ்ச்சி மறைந்து, வலி படர்ந்தது. வருத்தம் கலந்தக் குரலில் முனங்கியபடி, அப்புரவியானதுத் தன் தலையால் ரட்சகனின் முகம் உரச... மெல்லியச் சிரிப்புடன் அவன் நெற்றியோடு முட்டி அதன் தலையை வருடிக் கொடுத்தபடி, "ஹஹா.. என்னைக் குறித்து வருந்தாதே நண்பா. சில நாழிகை தான்... எனக்கு ஏதும் நேராது. நான் குணமாகி விடுவேன்," தன் கால்கொண்டு சுயமாக நிற்பதற்குக் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தான் ரட்சகன்."இப்போது நீ பெற்றிருப்பது என் சக்திகளே, நண்பா. அது என்னிடம் இருந்தவரையில் எனது தமக்கையின் ரட்சையால் என்னை எவரும் நெருங்கிடவில்லை. ஆனால், அது உன்னிடம் வந்தப்பின்னர், ரட்சையால் அதை மறைக்க முடியாது." புரவியின் பின்னங்கழுத்தில் தன் கரம் கொடுத்து, அவனைப் பற்றுதாலாகப் பிடித்துக்கொண்டு நின்றிந்தான் ரட்சகன்.
"உன் சக்திகளுக்கே இத்தனை எதிரிகள் இருக்கும் பட்சத்தில், என் சக்திகளை அபகரிக்க மீண்டும் உன்னை அவர்கள் துன்புறுத்த நேரும். அதனால்...." அதன் கழுத்திலிருந்தத் தன் கரத்தை மெல்லமாக அதன் நெற்றிக்குக் கொண்டுவந்தவன், மீண்டும் அதன் கொம்பை அழுத்தமாகப் பற்றினான்.
"என்னை மன்னித்துவிடு நண்பா. நீ அழைத்த மாத்திரத்தில் என்னால் உன்னை அடைய முடியவில்லை. நான் வந்திருபின்... இவ்வளவு வலியை நீ தாங்கியிருக்க அவசியமன்றல்லவா? என்னை மன்னித்திடு. இவ்வொருமுறை மாத்திரம் இவ்வலியினைப் பொறுத்துக் கொள்வாய் என நம்புகிறேன்." என்றபடியே, தன் பற்றுதலில் நான்கு மடங்கு வலுவை கூட்டிநான் அவன். புரவியின் உச்சந்தலையில் சுறீறென்ற ஒரு வலி. அத்துடன், அதன் கொம்பு முழுவதுமாக உடைந்து ரட்சகனின் கைகளில் தவழ்ந்தது. அதே நொடி, "என்னை மன்னித்திடு, நண்பா. இனி, உனக்கு எவராலும் தீங்கு நேராது. செல்... உன்னிடத்திற்குச் செ...ல்... ....." கூறிக்கொண்டே புரவியின் காலடியிலேயே மயங்கிச் சரிந்தான் ரட்சகன்.அப்புரவிக்கு பெரிதாய் எவ்வலியும் இல்லை. கொம்பானது உடைக்கபட்ட அந்த ஒரு நொடியில் உணர்ந்த மரண வலி மட்டும்தான். இப்போது அவ்வலி, துளியும் இல்லை.
அப்புரவி, தரையில் மயங்கிக் கிடப்பவனை எழுப்ப முனைய... சோர்வின் காரணமாக மயங்கியேதான் கிடந்தான் அவன். இருந்தும், விடாமல் அவனை முட்டிக் கொண்டிருந்த அந்தப் புரவியின் கண்கள் இப்போது கசியத் தொடங்கியிருந்தது. ரட்சகனின் கையிலிருந்தக் கொம்பின் மீது புரவியின் ஒருதுளி கண்ணீர் எதேச்சையாக விழுந்த அந்த நொடி, வானை நோக்கிச் சீறிப் பாய்ந்தது ஒரு மஞ்சள் ஒளி. அதனைத் தொடர்ந்து, மெல்லக் காற்றில் மேலெழும்பிய அந்தக் கொம்பில், சிறிது சிறிதாக விரிசல்கள் விழத் தொடங்கி, பெரும் சத்தத்துடன் மூன்றாக வெடித்தது.அதிலிருந்து வெளிப்பட்ட அதிர்வு, ரட்சகனைத் தாக்காமல் இருப்பதற்காகத் தன் நீண்ட பெரும் ரெக்கையைக் கொண்டுத் தரையில் கிடந்தவனை பத்திரமாக மூடிக்கொண்டது அந்தப் புரவி. அதேநேரம், மூன்றாகப் பிரிந்திருந்த அந்தக் கொம்பின் பாகங்கள் ஒவ்வொன்றும், தனித்தனி நிறம் கொண்டு ஜொலிக்கத் தொடங்கிட... சில கணங்களில் மூன்று வித்தியாசமான ரத்தினக் கற்களாக மாறிய அந்தக் கொம்பின் பாகங்கள் மூன்றும் அப்படியே காற்றில் மறைந்து போனது. ~
அத்துடன் அந்தக் கதை முடிந்திருக்க... அடுத்தப் பக்கங்கள் முழுவதிலும் ஒருசில படங்கள்தான் இருந்தது. முதல் பக்கத்தில், கையளவில் ஒரு வெள்ளை உருளை பளபளப்பாக மின்னிக் கொண்டிருக்க.. அதன் கீழே வெண்மணி என்றிருந்தது. அடுத்தப் பக்கத்தில், நடுவே பச்சை, அதைச் சுற்றிலும் நீலம், இரண்டையும் மூடியதுபோல் சிவப்பு என மூன்று வண்ண கற்களை ஒன்றின் உள்ளே ஒன்றாக வைத்தது போல் அதே கையளவு ரத்தினம் இருக்க.. அதன் கீழே திரிலோகமணி என்றிருந்தது. அடுத்தப் பக்கத்தில், அதேபோல் கறுமை நிற ரத்தினம் இருக்க... அதன் கீழே கறுமுத்து என்றிருந்தது.
அதைப் பார்த்தபடியே அடுத்தப் பக்கத்திற்கு அனைவரும் பார்வையை மாற்றியநொடி, அபிக்கு பின்னால் வந்து நின்ற வீரா, திடீரென அவர்களுக்கிடையே தலையை நுழைக்க... படக்கென பதறிய அபி, புத்தகத்தைத் தரையில் போட்டான். அது, ஒரு பக்கத்தைத் திறந்துக் கொண்டு விழுந்தது. அந்தப் பக்கத்தில் ரட்சகனும் அந்த வெண்புரவியும் நெற்றியை மோதிக் கொண்டிருக்கும் ஓவியம் தீட்டப்பட்டிருக்க... தன் தலை கொண்டு அந்த ஓவியத்தை முட்டிக் கொண்டும் வருடிக்கொண்டும் நின்றிருந்தான் வீரா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro