Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

36. ரட்சகனின் மும்மணிகள்

விடியல் கதிர்கள் சீரான ஒரு வேகத்தில் தன் ஒளியை ஆதிலோகம் எங்கிலும் பரப்பத் தொடங்கி ஓரிரு நாழிகைகள் கடந்திருக்கும். ஒன்றாகக் கட்டிப்பிடித்துத் தூங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் மூவரில் முதலாவதாக கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தது சங்கவி தான்.

ராகவி மற்றும் தீராவுக்கு மத்தியில், மண்டியிட்டு அமர்ந்தது போல் கால்களை இருபக்கமாகவும் திருப்பி வைத்து அமர்ந்திருந்த சங்கவி, 'இவர்களை எழுப்பலாமா வேண்டாமா?' என்பது போல் தூக்கக் கலக்கத்திலேயே இருவரின் முகங்களையும் ஒருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, வேண்டாமென முடிவெடுத்துக் கொண்டதுபோல் தோளைக் குலுக்கிக்கொண்டவள், தன் தலையணையைப் படக்கெனத் தூக்கி முதுகுக்குப் பின்னால் விசிறி எறிந்தாள். அதனடியில் அழகாய் அமர்ந்திருந்தது நுவழி பாட்டி கொடுத்த அவளுடைய தங்க பந்து.

லபக்கென அதை கையில் தூக்கியவள், "உனக்குள் என்ன இருக்கிறது என்று கேள்விக் கேட்டால்தான் நீ திறப்பாயாமே? சொல், உனக்குள் எதை ஒளித்து வைத்திருக்கிறாய் நீ?", தூக்கக் கலக்கத்தில் அந்தப் பந்திடம் ஏதேதோ உளறிக்கொண்டே அதை இப்படியும் அப்படியுமாத் திருகிப் பார்த்துத் திறக்க முயன்ற சங்கவி, பத்து நிமிடங்களாக அந்தத் தங்கப் பந்தைப் போட்டுப் பாடாய்ப் படுத்தியெடுத்தும், இறுதியில் தோல்வியையே தழுவினாள். பந்தைத் திறக்கவேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில் இவ்வளவு விரைவாக விழித்துக்கொண்டாலும் அவளின் தூக்கம் இன்னும் அவளை விட்டு நீங்காதிருக்க.. இப்போது உறக்கம்தான் நமக்கு முக்கியம் என முடிவெடுக்காதக் குறையாக அப்படியே மீண்டும் மல்லாந்துக் கொண்டாள்.

தலையணையை எங்கே வீசினோம் எனத் தேட அலுப்புக் கொண்டவள், தன் தங்கையின் வயிற்றைத் தலையனையாக்கிக் கொண்டும், உடன்பிறப்பின் கழுத்தில் காலை நீட்டிக்கொண்டும், தன் தங்கப் பந்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு மீண்டும் தன் உறக்கத்தைத் தொடங்கினாள். அதேநேரம், பக்கத்து அறையில் ஆர்வமாய் தன் புத்தகத்தைத் திறந்திருந்த அபி, தலைப்பைத் தாண்டி அதன் முதல் பக்கத்தை கண்டே ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தான். அவ்வளவு அழகு அந்த ஓவியம்.

ஒரு பெரும் அறையெங்கிலும் மெல்லிய நீல நிற ஒளிக்கதிரானது கம்பீரத்தை வெளிப்படுத்தும் அற்புத விசையை எதிரொலிக்கச் செய்துக் கொண்டிருக்க... வரிசையாக இருந்த பிரம்மாண்டத் தூண்களில் இருக்கும் நீல நிற ரத்தினங்கள் யாவும் வெறும் ஓவியமே ஆயினும் அபியின் கண்களைப் பறித்தது. அவனுக்கு, இக்காட்சிகளை ஏற்கனவே பார்த்தது போலும் தோன்றியது பார்க்காதது போலும் தோன்றியது. ஆனால், இப்படி ஒரு அழகை இதுவரையில் நேரில் கண்டது கிடையாது என்னும் விஷயம் அவன் சிந்தையில் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. அந்த யோசனையுடனே அவன் மறுபக்கத்தைத் திருப்ப.. அதிலிருந்த ஓவியத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, தனக்கு இப்படியொரு எண்ணம் வரக் காரணத்தை உணர்ந்துக் கொண்டான் அவன்.

அவன் கண்கள் பதிந்திருந்த அப்பக்கத்தில், நீல ரத்தினங்கள் பதிக்கபட்ட வெண்ணிற பளிங்கு படிகட்டுகளின் மேல் வீற்றிருந்தது ஒரு ராஜ சிம்மாசனம். அந்த சிம்மாசனத்தி்ன் மேல் கம்பீரமாக மிதந்துக் கொண்டிருந்தது, மாயக் கதிரலைகளை வெளியிட்டுப் பிரகாசிக்கும் மாயவாள்.

தன்னுடைய சிறுவயதில் தன் ஷிவேதனா அத்தையிடம் இருந்துதான் இக்கதையைக் கேட்டிருக்கிறான். ~ ஆதிமகா யுத்தத்தில் உறுகுழைந்த லோகங்களைக் காக்கப் பிறக்கும் ரட்சகனானவன், ஆதிலோகத்தின் மாயங்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் இந்தப் புனித மண்டபத்தைக் கண்டறிந்து, அதனுள் ஜொலிக்கும் அவனது அற்புத வாளைக் கைபற்றி இருள் சூழ்ந்த மக்களின் வாழ்வை தன் ராஜனின் ஒளியால் மீட்டெடுப்பான் என்றேனும் ஒரு நாளில் ~ இக்கதை அபிக்கு மட்டுமல்ல, ஆதிலோகத்தில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தெரிந்த ஒன்று.

இதைக் கதையில் கேட்டதற்கே அவன் கற்பணையில் பிரம்மாண்டமாகத் தோன்றியக் காட்சிகள் யாவும் இந்தப் புத்தகத்தில் ஓவியமாகக் காண்கையில் உண்மையிலேயே மனதைக் கொள்ளைக் கொள்வது போன்றே இருக்க... அதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தவனை, கூடத்தில் ராகமாகக் கேட்டத் தங்கைகளின் குரல்கள் இரண்டும் கைதட்டி அழைத்ததில், அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டுத் தங்கைகளைத் தேடி ஓடினான் குட்டி தேவதைகளின் அண்ணன் அபிஜித்.

அங்கே, வீட்டின் நடுக்கூடத்தில், தர்ம ராஜ்யதின் வருங்கால இளவரசிகள் இருவரும் எதையோ செய்யத் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்க... வீட்டிலிருந்த அணைவரும் அவர்களை ஆர்வமாக பார்த்தபடி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தத்தித் தத்தி ஊர்ந்துச் சென்று, வீட்டின் ஒரு ஓரத்திலிருக்கும் மேஜையை அடைந்த மாயா, அதன் கால்களை தன் ஒற்றைக் கையின் பலத்தால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, பாதங்களை உபயோகித்து நிற்க முயன்றுக் கொண்டிருக்க... உடன்பிறப்பை அச்சில் வார்த்ததுபோல் இருக்கும் ரக்ஷாவும் மாயா பிடித்திருந்த அதே மேஜையின் மறுபக்கக் காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல தன் முழங்கால்களை நிமிர்த்தப் போராடிக் கொண்டிருந்தாள்.


குடும்பமே இவர்களை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க... எவரும் தன்னை கவனிக்காததால் ஊர்ந்து ஊர்ந்தே இளவரசிகள் இருவரை நோக்கி வந்த தாரிகா, அந்த மேஜையின் மேலே இருக்கும் தன்னுடைய யானை பொம்மையை கீழே போட்டு உடைத்து விடுவார்களோ என பயந்தது போல், விறுவிறுவென இருவருக்கும் பின்பாக வந்து அமர்ந்துக் கொண்டு, ஒரே இழுப்பில் இருவரையும் சேர்த்து இழுத்தாள். அவள் இழுப்பில் இருந்த வேகம், நிற்பதற்குத் தடுமாறிக் கொண்டிருந்த இருவரையும் கீழ்நோக்கி இழுத்ததில் பொத்தென தரையில் அமர்ந்தார்கள் குட்டி இளவரசிகள் இருவரும்.

மீண்டும் எழுந்து நிற்க முயற்சிப்பார்கள் என ஆர்வமாக அவ்விருவரையும் நோக்கியக் குடும்பத்தை, இரக்கமே இல்லாமல் ஏமாற்றுவது போல்,  தவழ்ந்து ஓடும் தாரியைத் துரத்தி கொண்டே நான்கு கால் பாய்ச்சலில் ஓடினார்கள் குட்டி இளவரசிகளான மாயா மற்றும் ரக்ஷா. இப்போது, தூங்கி எழுந்து வந்திருக்கும் சங்கவியும் தீராவும் அவர்களுடன் இணைந்துக்கொள்ள... தன் தங்கைகள் இருவரும் வழக்கம் போல விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே, 'ரட்சகனின் மும்மணிகள்' கதையைப் படிக்கத் தொடங்கினான் அபி. அதிலிருக்கும் சில படங்களை மட்டுமே பார்த்திருந்தவன், தங்கைகளின் குரலால் ஈர்க்கப்பட்டதால் இப்போது கதையைப் படிக்க மீண்டும் அமர.. அவன் கதை படிப்பதை பார்த்துவிட்ட ராகவியும் அவனோடு இணைந்துக் கொண்டாள். 

இருவருக்கும் பொதுவாக புத்தகத்தை நடுவில் வைத்துச் சம்மணமிட்டு அமர்ந்த அபி, "ராவி, இது எவ்விடம் எனத் தெரிகிறதா? நமக்கு வேதா அத்தை சொல்லிய கதை நினைவிருக்கிறதா? ஆதிலோகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒரு புனித மண்டபம் மறைந்துள்ளது... அதிலிருக்கும் அற்புத வாளைக் கைபற்றி இருளுடன் யுத்தமிட ஒரு ரட்சகன் வரவளிப்பான் என கூறியிருக்கிறார்.. நினைவிருக்கிறதா? இது, அந்தப் புனித மண்டபத்தைப் போல் தானே இருக்கிறது? அதேபோல் பிரம்மாண்ட சிம்மாசனத்தில் இருக்கிறது.. பார், இந்த வாளை.", விடியலில், தான் பார்த்து வியந்த ஓவியங்களை இப்போது அவளுக்கு ஒவ்வொன்றாய்ச் சுட்டிக்காட்டி வியந்து கொண்டிருந்தான் அவன்.

"ஆமாம், ஜித்தூ. இது அதே இடம் தான். எனில், இது வேதா சித்தி சொன்ன அதே ரட்சகனின் கதையா?", வியப்பு நிறைந்த பார்வையை ஓவியத்தில் பதித்திருந்தவள், புத்தகத்தைத் தன் கைகளால் வருடி கொண்டே கேள்வியை மட்டும் அபியிடம் வைத்திருக்க, "இல்லை, ராவி. அது சிறிய கதை. புனித மண்டபத்தை ரட்சகன் கண்டறிந்து, எப்படி இருளுடன் மோதுவான் என்பது மட்டும்தான் இருக்கும். ஆனால், இதைப் பார். எவ்வளவு கணமாக இருக்கிறது இந்தப் புத்தகம். இது, வேறு கதையாகத்தான் இருக்கும். படித்துப் பார்க்கலாம், வா." விளக்கம் கொடுத்துக் கொண்டே புத்தகத்தில் கதைகள் தொடங்கும் பக்கத்தை புரட்டிவைத்து, அதைச் சத்தமாக வாசிக்கத் தொடங்கினான் அபி.

"ஆதிகாலம், உயிர்கள் வாழும் காலமாக மாறிய அந்த நாட்களில் உயிர்ஜீவன்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவே பிறப்பெடுத்தான் ஒரு ரட்சகன். துன்பத்தில் தத்தளிப்பது எவ்வுயிராயினும் அவைகளைக் காத்திடவே கணம் தவறாமல் வரவளிப்பான் அவன். பாதாள லோகத்தின் ரட்சகனானவன், மாயங்கள் நிறைந்த அற்புத வெண்புரவியை தனது உற்றத் தோழனாக்கியக் கதைதான் 'ரட்சகனின் மும்மணிகள்." என்றதுடன் அப்பக்கம் முடிந்திருக்க... அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவனுக்குக் காட்சிக் கொடுத்தது, கண்ணைப் பறிக்கும் அந்த ஓவியம். இருபக்க காகிதம் முழுவதிற்கும் சேர்த்து ராஜகலையுடன் காட்சியளித்தது, மூக்கின்மேல் பல்வண்ண மாயக் கொம்பு வைத்திருக்கும் ஒளிவட்டம் சூழ்ந்த வெண்புரவி.

அதன் அழகில் சொக்கிய அபி மற்றும் ராகவி, பிரமிப்பில், திறந்த வாயை மூட மறந்திருக்க, "வீரா, வீரா, வீரா... பெரிய வீரா.. என் பெரிய வீரா," இருவருக்கும் பின்னால் இருந்து உற்சாகமாகக் கேட்டது தீராவின் குரல். இருவருக்கும் பின்னால் அமர்ந்துக்கொண்டு தரையில் வைத்திருக்கும் புத்தகத்தைச் சுட்டிக்காட்டித் திடீரென வீரா..  வீரா.. எனக் கத்திக் கொண்டிருந்தவளை, நெஞ்சில் கைவைத்தபடி நோக்கினாள் ராகவி. "அடியேய்! எங்கிருந்தடி வந்தாய் நீ! அவர்களுடன்தானே விளையாடிக் கொண்டிருந்தாய்?", ஓட்டப்பந்தையம் நடத்திடும் இதயத்தைத் தாங்கிப் பிடித்தபடி தீராவை நோக்கிய ராகவி, அரண்டு விழிக்க.. அவளோ, புத்தகத்தில் வீராவை போன்றே தத்ரூபமாக ஜொலிக்கும் வெண்புரவியை, தன் திடீர் குரலால் பயந்தவளிடமே உற்சாகமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தாள்.

"ஹாஹாஹா.. என்ன ராவி நீ? கதைப் புத்தகத்தைத் திறந்தப் பின்னர் இவள் இன்னும் விளையாடிக் கொண்டிருப்பாள் என நினைத்தது உன் தவறு. இதில், என் செல்ல தீராவிடம் கோபித்துக் கொள்கிறாயா நீ?", ராகவியை கேலி செய்தவாறு தீராவை தூக்கித் தன் மடியில் அமர்த்தினான் அபி. "அபி மாமா.. கதைக்குள் வீரா இருக்கிறான். வீரா... பெரிய வீரா..", அபியின் மடியில் அமர்ந்திருந்தாலும், அவள் இன்னும் கைதட்டி துள்ளிக் கொண்டிருக்க,"ஏய்.. ஜித்தூ மடியில் நான் தான் அமர்வேன். நீ அமரக் கூடாது தீரா", என்றபடி அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொண்ட ராகவி, தங்கையோடு சேர்த்து அபியிடம் செல்ல முயல... சுதாரித்துக் கொண்ட அபி, படக்கென புத்தகத்தைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். அதைக் கண்ட தீரா, கலகலவெனச் சிரிக்க.. அபியிடம் கோபித்துக் கொண்டதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ராகவி.

"சரி, சரி. கோபித்துக் கொள்ளாதே ராவி. நீ மட்டும் என் மடியில் அமர்ந்தால் பிறகு அவளும் கோபித்துக் கொள்வாள். இருவரும் அமர்ந்துக் கொண்டால் பிறகு யார் கதையை சொல்வதாம்?"

"அம்ம்.", என விழித்தவள், "சரி, சரி. நான் கோபிக்கவில்லை. நீ கதையைச் சொல்.", அவள் அபிக்கு அனுமதி கொடுக்க, "ஆமாம், மாமா. கதை, கதை, கதை... கதை சொல்லுங்கள்.. வீரா கதை சொல்லுங்கள்.." இப்போது, ராகவியின் மடியில் குதிக்கத் தொடங்கினாள் தீரா.

"தீ..ரா... அது நம் வீரா அல்ல. நன்றாகப் பார். அவனுக்கு மூக்கில் மாயக்கொம்பு இருக்கிறது. நம் வீராவுக்கு இப்படியா கொம்பு இருக்கும்?" அமர்ந்த நிலையிலேயே குதிப்பவளைப் பிடித்து நிதானமாக்கிய ராகவி, ஓவியத்தில் இருக்கும் குதிரையின் கொம்பை தீராவுக்குச் சுட்டிக்காட்ட, "ஹும். ஆனால், இவன் தான் என் வீரா. என் பெரிய்ய்ய்ய வீரா. மாமா, எனக்கு வீரா கதை சொல்லுங்கள்", ராகவிக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அவள் மடியிலிருந்து இறங்கி அமர்ந்துக் கொண்டாள் தீரா. இருவரின் சண்டையையும் பார்த்துச் சிரித்துக்கொண்ட அபி, "நான், கதைச் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் இருவரும் இடையிடையே சண்டையிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நான் கதையைச் சொல்வேன். சம்மதமா?" இருவரையும் மிரட்டலுடன் அவன் நோக்க... வாயில் விரல் வைத்து அவர்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்கள் இருவரும்.

 அக்காட்சியால் புன்னகைத்தவன், புத்தகத்தை நோக்கித் தன் பார்வையை திருப்பினான். தன் வேதா அத்தை சொல்லிய ரட்சகனின் கதை போல் இல்லாமல், அதன் துணைக் கதையைப் போல்  இக்கதை இருப்பதை உணர்ந்துக் கொண்ட அபி, அப்படியே இரு கதைகளையும் தொடர்பு படுத்தியே இப்போது படிக்கத் தொடங்கினான்.

~ பாதாளலோகம் எங்கிலும் ஆதிகாலம் தொடங்கி பலநூறு ஆண்டுகள் கடந்திருந்தக் காலம் அது... லோகத்தின் அரசியான ஆதிலோகினியின் உடன்பிறந்த சகோதரன் அமிழ்தபத்ரன், பாதாளலோக உயிர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, லோகத்தின் ரட்சகனாக பொறுப்பேற்றிருந்தக் காலம். 

பெரும் சக்திகளுக்கு ஈடுகொடுத்துப் பாதாளலோகத்தில் வாழ முடியாத சில இன உயிர்களுக்கெனத் தனித்தனியாக நான்கு லோகங்களை உருவாக்கியிருந்தான் அந்த ரட்சகன். எழில் கொஞ்சும் இயற்கை மற்றும் சாது உயிர்களுக்கென ஐராலோகம்; மாயாஜால சாது பிறவிகளுக்கு ருத்வலோகம்; உடலற்ற உருவங்களுக்காக ஆத்மலோகம்; காலற்ற உயிர்களுக்கு ஆழிலோகம்; என பாதாளலோகம் தவிர்த்துப் புதிதாக நான்கு லோகங்களுக்கு உயிர் கொடுத்தான் அவன்.

அந்த நான்கு லோகங்களும் ரட்சனிகனின் சக்தியால் உருவாக்கப் பட்டிருப்பினும், அவனுக்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய ஒருவனின் சக்தியாலேயே ஒன்றிணைக்க பட்டிருந்தது. ரட்சகன் வாழும் பாதாளலோகத்துடன் சேர்த்து ஐந்து லோகங்களாக உருவாகியிருந்த உயிர்களின் இருப்பிடங்கள் அனைத்திற்கும் தலைமை பொறுப்பேற்று அதனைச் சிறப்புடன் பாதுகாத்து வந்தான் அந்த காவலன்.

எவ்வுயிருக்கும் எத்தீங்கும் நேராமல், உயிர்கள் அனைத்தையும் ரட்சகன் ஒருபுறமாக பாதுகாத்துக் கொண்டிருக்க... மறுபுறம், அழிவைக் குறிக்கும் அரக்க குணம் படைத்த பாதாளலோக மறுமுனையின் அரசன், அந்த்காரரூபன், அவரின் அரக்கப் படைகளைப் பாதாளலோகம் எங்கிலும் பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டே சென்றான். அரக்க படைகளினால் மக்களின் பேராசை, பேரிடராக வளர்ந்த அந்த நாட்களில், மாயசக்தி நிறைந்த அதிசய வெண்புரவி ஒன்று, ருத்வ லோகத்திலிருந்து எப்படியோ பாதாளலோகத்தை அடைந்திருந்தது.

பாதாளலோக மக்களுக்கென இருக்கும் ஒரு தனித்துவ குணம், அதீத ஆற்றல் இருக்கும் இடத்தை மிகத்துல்லியமாகக் கண்டறிவதுதான். அந்த ஆற்றலைக் கொண்டு, ருத்வ லோகத்திலிருந்து வந்திருக்கும் வெண்புரவியின் கொம்புதான் அதன் ஆற்றல்களின் உற்பத்தியிடம் என்பதையும் அப்புரவியின் மனநிலையைப் பொறுத்துதான் அதன் கொம்பிலிருக்கும் மாயங்கள் வெளிப்படும் என்பதையும் அறிந்துக் கொண்டவர்கள் அப்புரவியை லோகத்தின் மையத்திலிருந்த இருள்மந்திரச் சிறையில் அடைத்து வைத்து தினம் தினம் அதனை சித்ரவதைக்கு ஆளாக்கி நரக வலியைக் கொடுத்து அதன் கொம்பிலிருக்கும் மாயங்களை உறிஞ்சிக்கொண்டே இருந்தார்கள்.

நாள்தோறும், சுழற்சி முறையில் சிறைக்கு காவலாக வந்த காவலர்கள் ஒவ்வொருவரும், தங்களின் பலத்திற்குத் தகுந்ததுபோல் வெண்புரவியின் சக்திகளை அபகரித்துக் கொண்டே போக... ரட்சகனை, அவனது சகோதரி, ஆதிலோகினி, இருள் மாயங்களிடமிருந்து மறைத்து வைத்திருந்ததால், ஏதோ ஒரு உயிர் பாதுகாப்பிற்கு ஏங்குவதை உணர மட்டுமே முடிந்தது. காலம் செல்லச் செல்ல, யாருக்குத் தன்னுடைய உதவி தேவை என்பது புரியாமல் ரட்சகனின் நிம்மதி பறிபோயிருக்க.. தூக்கமற்று, உணவற்று, பித்துப் பிடித்தவன்போல் இரா-பகளாகச் சுற்றிக் கொண்டிருந்தான் ~

அபியின் குரல், சோகத்துடன் கதையை வாசித்துக் கொண்டிருக்க, "ஹ்ம்ம்.. வீரா பாவம். அவனுக்கு வலிக்கும்." புத்தகத்தில், மெலிந்துப் போய் சோர்வுடன், நிற்கக்கூட திராணியற்றுத் தரையில் கிடக்கும் கொம்பு வைத்த வெண்புரவியின் ஓவியத்தைச் சோகம் குடிகொண்ட முகத்துடன் வருடினாள் தீரா. அதேநேரம், ரத்ன மாளிகையில் இருக்கும் லாயத்தில் நின்றிருந்த வீரா, தீராவின் வருடல்கள் ஒவ்வொன்றும் தனக்கே கிடைத்தது போல், முன்னங்கால்கள் இரண்டையும் காற்றில் தூக்கி உற்சாகமாய் கணைத்தான். 

தீராவின் சோகத்தைக் கண்ட அபி, "உன் பெரிய வீராவிற்கு ஒன்றும் ஆகியிருக்காது தீரா. பார். இப்போது அவன் சரியாகி விடுவான்." அவளின் தலையை வருடி சமாதானப் படுத்திவிட்டு, கதையை மீண்டும் தொடர்ந்தான்.

~ பல திங்கள்களாகத் தன் நிம்மதியைத் தொலைத்திருந்த ரட்சகன், மெல்ல மெல்ல தன் சக்திகளைப் பயன்படுத்தி இருள்மந்திரச் சிறையை ஏறக்குறைய நெருங்கியிருந்தான். ஆனால், அங்கிருப்பது ஒரு இருள்சக்தி. அவனது சகோதரி அவன்மீது போட்டிருக்கும் மாய வலையால் அது என்றும் அவன் பார்வைக்குத் தெரியப் போவதில்லை. அதனால், அவன் சக்திகள் ஆபத்திலிருக்கும் உயிரை அருகில் உணரும் இடத்தையே பல காலமாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.


அப்படித்தான் அன்றைய இரவு வீதி வழியாக பெரும் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்தவன் கண்ணில் விழுந்தது அக்காட்சி. நிழலுக்குள் தெரிந்த அக்காட்சி. ~


✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro