35. மடல்!
"ஷேனா. யார் இதை உனக்குக் கொடுத்தது?", தன் மகன் தனக்கென கொண்டுவந்திருக்கும் மடலை முழுவதுமாக படித்து முடித்திருந்த ஷிவேதனா, குழப்பத்துடன் அவனிடம் கேட்க, "அம்மா, நான் நேற்று சந்தித்த அம்மூவர் தான் அம்மா.", அன்னையின் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் சட்டென பதிலளித்தான்.
"அவர்களா?"
"ம்ம். அவர்கள், இதில் உங்களுக்கு பரிசு இருப்பதாகச் சொன்னார்கள். இதனுள் என்ன வைத்திருக்கிறார்கள் அம்மா? எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே?", ஒன்றுமில்லாத வெற்றுச் சுருளை எத்தனை முறைதான் திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் உள்ளுக்குள் ஒன்றும் கிடைக்காதிருக்க... அதிலிருக்கும் எழுத்துக்களை கவனிக்கும் அளவிற்கு ஷேனாவிற்கு போதிய ஞானம் அப்போதைக்கு இல்லை.
"ஹாஹாஹா. என் மகனே! இதில் பொருளேதும் அவர்கள் அனுப்பிடவில்லையடா. உனக்கு அவர்கள் பயிற்சி கொடுக்கப் போவதாகச் செய்தி தான் அனுப்பியிருக்கிறார்கள். இங்குப்பார், அவர்கள் இதில் தெளிவாக எழுதி இருக்கிறார்கள். இதை கவனிக்கவில்லையா நீ?", அவனை பயிற்சிக்கு அழைத்திருக்கும் வரியில் விரல்வைத்து, ஷிவேதனா காட்டிய பின்பே அதிலிருக்கும் எழுத்துக்களை, தன் அன்னை கற்றுத்தந்த பாடங்களால் மெல்ல மெல்ல எழுத்துக்கூட்டி வாசித்து பார்த்தான் அவன்.
"ஹம்ம்.. அவர்கள் இதை உங்களிடமே சொல்லி விட்டார்களா? உம்ம்ம்ம்ம்... இதை நான் கவனிக்கவில்லையே அம்மா. அவர்கள் என்னை இப்படி ஏமாற்றி விட்டார்களே? ஹம்."
"அவர்கள் எங்கே உன்னை ஏமாற்றினார்கள்?"
"இதில், உன் அம்மாவிற்கு ஒரு பரிசு உள்ளது என்று சொல்லி தானே இதை என்னிடம் கொடுத்தார்கள். ஆனால் பரிசு எங்கே உள்ளது? அவர்களின் பெரிய வாளை உபயோகிப்பதை எனக்குக் கற்றுத் தருவதை தானே சொல்லி இருக்கிறார்கள்! அதென்ன பரிசா?", முகத்தைச் சுருக்கி அவன் இங்கே கத்தியதில் அவர்களுக்கு அங்கே புரையேறியிருந்தாலும் ஆச்சரியமில்லை.
"ஹாஹாஹா. ஷேனா! ஷேனா." மகனைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டவள், அவனைக் கட்டிக்கொண்டு, "நிச்சயம் இது எனக்கு பரிசு தானடா. அவர்கள் உனக்குப் பயிற்சியளிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனில், உன்மீது அக்கறை அல்லவா காட்டி இருக்கிறார்கள்! என்னைத் தவிர வேறு சிலரும் உன்மீது அக்கறைக் கொள்ள ஆதிலோகத்தில் இருக்கிறார்கள் என்னும் தகவல் எனக்குப் பரிசு தானே ஷேனா!"
"அப்படியா! எனில், நான் தினம் தினம் அவர்களைச் சந்தித்து, அவர்கள் கற்றுத் தருவதைக் கற்றுக் கொண்டால் அது உங்களுக்குப் பரிசா அம்மா!?"
"நிச்சயமாக அது எனக்கு மிகப்பெரிய பரிசு தான் ஷேனா"
"எனில், நான் நாளையில் இருந்து அவர்களிடம் பயிற்சிக்குச் செல்லலாமா?"
"ஹான்! செல்லலாம். ஆனால், விரைவாக அன்னையிடம் திரும்பிட வேண்டும்."
"ஹாஹா. நீங்கள் இந்த உறவு சங்கிலி வழியே என்னை அழைத்திடுங்கள் அம்மா. நான் விரைந்து உங்களிடம் வந்திடுவேன்.", என மலர்ந்த சிரிப்புடன் அன்னையின் கழுத்தை அனைத்து கொண்டான் ஷேனா.
"சரி, சரி. நீ இன்னும் உணவருந்தவில்லை அல்லவா. வா, உண்ணலாம். நானே மறந்து விட்டேன் பார்", திடீரென நினைவு வந்தவராய் மகனை எழவைத்துக்கொண்டே ஷிவேதனா பரபரக்க, "இல்லை, அம்மா. அவர்கள் எனக்கு பசியாற உணவும் கொடுத்தார்கள். உங்களைப் போலவே அவர்களும் எனக்கு ஊட்டி விட்டார்கள். இப்பொழுது நீங்கள் தான் இன்னும் உணவருந்தவில்லை. வாருங்கள், நான் உங்களுக்கு ஊட்டுகிறேன்", தன்னைப் பிடித்திருந்த அன்னையின் கரத்தை மாற்றிப் பிடித்து, அவன் இப்போது முன்னே நடக்க... மகனைத் தொடர்ந்து நடந்துச் சென்ற ஷிவேதனாவின் முகத்தில் அத்துனை பூரிப்பு. எதன் காரணத்தினால் என அவரும் அறியவில்லை, மேற்கொண்டு அறிந்துக் கொள்ளவும் முனையவில்லை. ஏனோ, தன் மகனின் வாழ்வில் விடியல் கதிர்கள் மலரப் போவதாக அவரின் உள்ளுணர்வு வெற்றிக்களிப்பில் துள்ளிக் கொண்டிருந்தது.
அன்னையும் மகனும் ஒளி நிறைந்த அவ்வறையினுள் மகிழ்வுடன் உணவை ருசித்துக் கொண்டிருந்த அதே நேரம், அவர்களுக்கு நேர்-எதிர்பக்கமாக, இருள்மாளிகையின் மறுமுனையின் எல்லையில் அமைந்திருந்த அந்த மாபெரும் அறையினுள், ஒன்பது பெரும் சிலைகளுக்கு மத்தியில் ஒரு புத்தகத்தைப் புரட்டியவாறு அமர்ந்திருந்த இருளரசனின் இதழோரம் தெனாவெட்டு நிரம்பியப் புன்னகை ஒன்று தவழ்ந்துக் கொண்டிருந்தது. அவர் மனதில், இவ்வறையினுள் நுழையும் முன்பாக நிகழ்ந்த நிகழ்வு தான்.
வனதேசத்திலிருந்து இருள்மாளிகைக்குத் திரும்பியிருந்த ஷேனா கொண்டுவந்து கொடுத்து மூலிகைகள் அனைத்தும் சரியான நிறத்தில் இருந்ததால், அவன் நேரம் தவறாமல்தான் அனைத்தையும் பறித்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார் இருளரசன்.
"ம்ம். நீ செல்லலாம். நான் அழைக்கும் வரையில் மீண்டும் இவ்விடத்தை நெருங்கக் கூடாது. புரிந்ததா?", வழக்கமான அதிகாரத் தோரணையில் அவர் கூற, சரியென தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான் ஷேனா.
"பிறகென்ன? செல் இங்கிருந்து."
"தந்தையே.. அந்த- அந்த மடல். அதை, அம்மாவிடம் தான் கொடுக்கச் சொன்னார்கள் அவர்கள்."
"கொடுத்தது யாரெனச் சொன்னால்தான் அது உனக்குக் கிட்டும். இல்லையென்றால் செல் இங்கிருந்து.", என கத்தி விட்டு யுவன் கொடுத்தனுப்பிய அந்த மடலைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டு நின்றிருந்தார் இருளரசன்.
மூலிகைகளை ஷேனா அவரிடம் கொடுத்த சமயம், அவனிடம் கூடுதலாக ஏதோஒன்று இருப்பதை பார்த்துவிட்ட இருளரசர், அதை வாங்கிப் பார்க்க.. யாரோ ஒருவரிடம் இருந்து ஷிவேதனாவிற்கு மடல் எழுதப்பட்டிருந்தது. அதில், அவள் கணவனை, தான் கொலை செய்தது முதற்கொண்டு குறிப்பிட்டிருந்தவர்கள், ஷேனாவிற்குத் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப் போவதாகவும் அதற்கு அனுமதி கொடுத்து அவனை தினம் தினம் மாலையில் வனதேசம் செல்ல அனுமதிக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்கள்.
யாருமறியாமல் தான் செய்த இக்காரியத்தை அறிந்து வைத்திருப்பது யார்? அதனை இத்தனை காலம் கடந்து சொல்வதன் காரணமென்ன? இம்மடலுக்கு பின்னிருப்பவர் யார்? அவர் எதற்காக ஷேனாவிற்கு பயிற்சி கொடுக்க முனைகிறார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் அவர் ஷேனாவிடம் கேட்டுக் கொண்டிருக்க... யாரெனத் தெரிந்தால் தானே அவனும் பதில் கொடுப்பான்.
வெகுநேரம் மௌனமாகவே இருந்தவனுக்கு நேற்று தன் அன்னை கூறியது மின்னலென நினைவிற்கு வர, "தந்தையே! நேற்றைய பொழுது அவர்களை சந்தித்ததை அம்மாவிடம் சொல்லியப்பொழுது அவர்களை குள்ள மாயர்கள் என்றுதான் அம்மா குறிப்பிட்டார்.", எனத் தொடங்கி, நேற்று வனதேசத்தில் நடந்த நிகழ்வினை மொத்தமாகச் சொல்லி முடித்தான் ஷேனா. பூமியைச் சேர்ந்த மனிதர்கள் ஆதிலோகத்திற்கு வரவளிப்பார்கள் என்னும் கற்பனைக் கூட இதுநாள் வரையிலும் இல்லாமல் இருந்ததால், இருளரசனும் அவனை அப்படி நம்பினார். மடல் எழுதியது ஒரு குள்ள மாய இனத்தைச் சேர்ந்தவன்தான் என முழுமையாக நம்பிவிட்டார். மேலும், அந்தக் கொலை நடந்ததும் வனதேசம் என்பதால், குள்ள மாய இனத்தவர்கள் அங்கு நடமாடுவது ஆச்சரியம் ஒன்றுமில்லை என முடிவிற்கு வந்துவிட்டார்.
"ம்ம். இதை முன்பே சொல்வதற்கென்ன உனக்கு? சரி, சரி. இதைப் பெற்றுக்கொள். உன் அம்மாவிடமே கொடு. இப்போது செல்" அவர் கையிலிருந்த மடலை வாங்கிக்கொண்ட ஷேனா அங்கிருந்துப் புறப்படுவதற்காகத் திரும்ப, "நினைவிருக்கட்டும்... இவ்விடத்தில் இனி உன் நடமாட்டம் தென்படக் கூடாது. நான் நாளைமுதல் ஒரு முக்கிய யாகத்தில் ஈடுபட உள்ளேன். மாளிகையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளங்கியதா?", என கர்ஜித்தவர் அம்மடலைக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
"சரி, தந்தையே." அவருக்குப் பணிந்தவன், விட்டால் போதுமென ஓடியே விட, "ஹ்ம்.. நான் செய்ததை எவனோ ஒரு குள்ளமாயன் கண்டிருக்கிறான் என்னும் விஷயத்தையே அறியாமல் அல்லவா ஏழாண்டாக வாழ்ந்திருக்கிறேன். நேற்று, இவன் முதன் முதலாக வனதேசம் சென்ற கணமே ஏதோ நிகழப்போவதாகத் தோன்றியது. இருக்கட்டும், இனி பிரச்சனை இல்லை. ஷேனாவிற்கு அவனது மாயங்களைக் கையாழ அந்த ஷிவேதனா என்றும் ஒத்துழைக்க மாட்டாள். இந்தக் குள்ள மாயர்கள் அவனுக்குப் பயிற்றுவித்தால் எனக்குத்தான் அது நன்மை. நடப்பது நடக்கட்டும்.", வரவிருக்கும் பிரச்சனையை அறியாமல், ஷேனா கொண்டுவந்த மூலிகைகளை எடுத்துக்கொண்டு அந்த பிரம்மாண்ட கதவினைத் தள்ளிக்கொண்டு, ஒன்பது சிலைகள் இருக்கும் அந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிக் கொண்டார் இருளரசன்.
அவரிடமிருந்து வாங்கிச்சென்ற அந்த மடலைத்தான் ஷேனா அவன் அன்னையிடம் கொடுத்தது. அதை முழுவதுமாகப் படித்து முடித்த ஷிவேதனாவிற்கு அம்மடல் முழுமை பெறாதது போன்றே தோன்றியிருந்தாலும், அது முழுமையாகவே இருளரசனால் மாற்றியமைக்கபட்ட போலி மடல் என்பதை உணர முடியவில்லை.
இதையெல்லாம் நினைத்துப்பார்த்த இருளரசன், "எவர் நினைப்பினும் உன்னையும் உன் மகனையும் எனது பிடியிலிருந்துக் காக்க முடியாது ஷிவேதனா. மடல் மூலம் உனக்குச் செய்தி அனுப்பி, உன் கணவன் இறந்ததைச் சொல்லிவிட்டால் உன்னை தடுக்கும் ஆயுதம் வேறில்லைதான். ஆனால், என்னைத் தவிர வேறெவராலும் அந்த உண்மையை உன்னிடம் சொல்லிடவும் முடியாது, இந்தப் பொடியர்கள் என்ன செய்திடப் போகிறார்கள். இனி, அவர்களின் எச்சரிக்கையும் உன்னை அடையாது. என் அனுமதியின்றி அவர்களாலும் நிழல்ராஜ்யத்தினுள் நுழைய முடியாது. அந்தப் பொடியர்கள் யாரென விரைந்து அறிகிறேன்" மனதினுள்ளேயே சபதம் மேற்கொண்டார்.
அவ்வறையில் அமர்ந்திருந்தவர், நான்கு புத்தகங்களைப் புரட்டி முடித்துவிட்டு இப்போது ஐந்தாவது புத்தகத்தை கையில் எடுத்திருந்தார். இன்னும் சில புத்தகங்களும் கைபடாமல் அவரருகிலேயே தான் இருந்தது.. அனைத்தும் ஷிவேதனா ஷேனாவிற்காக உருவாக்கியவை தான். அதை அவன் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவனை திசை திருப்பிவிட்டு அதனை அபகரித்து வந்துதான் இதுவரை அறியாத பல ரகசியங்களை அறிந்திருக்கிறார் இருளரசர். அதில் முக்கியமான ஒன்று தான் அவர் இப்பொழுது அமர்ந்திருக்கும் இந்த அறை. ஒன்பது பெரும் சிலைகளுக்கு சிறையாகி, பெரும் சாபத்தை தன்னுள் சுமந்திருக்கும் மாய அறை.
நேற்று காலைப் பொழுதில் துவங்கிய புத்தகவேட்டை, இரவு முழுதும் உறங்காமல் இன்னும் அந்த புத்தகங்களையே தான் புரட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி எதைத்தான் தேடுகிறார் என்பது அவருக்கே தெரியாது. ஆனால், உறவுசங்கிலியை ஷேனாவின் கழுத்தில் கண்ட நொடி முதலாகத் தான் இந்தப் புதிய அவதாரம். அந்தச் சங்கிலி ஷேனாவிடம் இருக்கும் வரையில் அவனை நெருங்கக்கூட முடியாது என்பதை உணர்ந்தவர், தன் சக்திகளைப் பெருக்கிடவே வேறு வழிகளை தேடி கொண்டிருக்கிறார். ஒன்று, அவன் கழுத்திலிருக்கும் சங்கிலியைக் கழற்றிட உபாயம் வேண்டும். இல்லையேல், தன் சக்திகளைப் பன்மடங்காக்கிட வழி வேண்டும்.
இரண்டில் ஏதேனும் ஒன்று கிட்டிடாதா என இவர் இத்தனை ஆர்வம் காட்டிடக் காரணம், அவர் வீற்றிருக்கும் அறையில் இருக்கும் அந்த ஒன்பது சிலைகள் தான். ஷேனாவின் தந்தையைக் கொன்று, அவன் சக்திகள் மூலமாக ராணாவை உருவாக்கிய நாள் முதலாக, இந்த ஆறு ஆண்டுகளில் ஷேனாவிடமிருந்துப் பிரித்தெடுத்துச் சேமித்து வைத்திருக்கும் சக்திகளுடன், தன் முழு சக்தியையும் சேர்த்துக் கொடுத்தால் கூட அவரால் அனைத்து சிலைகளுக்கும் ஒரே நேரத்தில் விடுதலை கொடுக்க முடியாது. இதில், இவ்வளவு நாள் சேகரித்திருந்த சக்திகளையும் மொத்தமாக இழுத்துக்கொண்டது ஷேனாவின் உறவுசங்கிலி .
சரி, இருக்கும் சக்திகளை வைத்து ஒரேயொரு சிலைக்கு மட்டும் விடுதலை கொடுக்கலாம் என்றால், அதுவும் சிக்கல் தான். தனியாக விடுபடும் சிலையை மீண்டும் சிறைபடுத்துவது மிக மிக எளிது. அப்படி நிகழ்ந்தால் இருளரசரின் சக்திகளே வீண். அதனால், சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என சரியான தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார் இவர்.
ஷிவேதனா என்னவோ, தன் மகனுக்காக எழுதிய புத்தகங்களில் அவருக்குத் தெரிந்த சில சரித்திரக் கதைகளை மட்டுமே எழுதி வைத்திருக்க.. அதில், இருளரசருக்குத் தெரிந்த ஒருசில கதைகளின் பின்னணியை வைத்துதான் தன் பிரச்சனைக்கு ஏதேனும் வழி கிடைக்கிறதா என தேடி கொண்டிருக்கிறார். அப்படி கண்டறிந்த தகவல் தான், நேற்று ஷேனாவை பறித்துவரக் கூறிய அம்மூலிகைகள்.
~ ஓர்நாள் உச்சிவேளையில் பறிக்கப்படும் குறிப்பிட்ட மூலிகைகளை, மறுநாள் உச்சிவேளை தொடங்கிடும் யாகத்தீயிலிட்டு முழுதாக மூன்று திங்கள் வரையில் தடையில்லாமல் வணங்கினால், யாகத்தில் அமரும் நபருக்கு அதீத ஆற்றல் கிடைக்கும். மேலும், காலதேவனே நேரில் வந்து கேட்பதை கொடுப்பார்~ இதை வனதேசத்தின் மூலிகைகள் குறித்த ஒரு கதையை பார்த்துக் கொண்டிருந்த சமயம், தன் அனுபவ அறிவால் அறிந்துக்கொண்டார். மேலும், அந்த ஒன்பது பெரும் அரக்கச் சிலைகளை விடுவித்து, தன் தேவனாகிய இருளை இப்பிரபஞ்சம் முழுக்க மீண்டும் பரப்பிடவே இந்த ஏற்பாடுகள்.
மிதமான ஒரு வேகத்தில் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, இமைக்காத அவரின் விழியை நில்லாமல் அலைபாய விட்டுக் கொண்டிருந்தவர், தன் கையில் வைத்திருக்கும் அந்தத் தடித்த புத்தகத்தின் பக்கங்கள் தீர்ந்து போனதாக அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு மறு புத்தகத்தை கையில் எடுக்க.. அதன் முதல் பக்கத்தை திறந்த கணம், அந்த காகிதத்தில் இருந்து பாய்ந்த பளிச்சென்ற ஒளி, நேராக சென்று அவர் விழித்திரையை தாக்கியது.
கண்களைக் கூசச்செய்த பிரகாசத்தை தாங்கிட முடியாமல், ஒற்றைக் கரம்கொண்டு முகத்தை மறைத்துக் கொண்ட கண்களை குறுக்கியவர், உச்சக்கட்ட ஆர்வத்துடன் கடினபட்டு அந்தப் புத்தகத்தை நோக்க முயல.. அதன் முகப்பில் வார்த்தையாகச் செதுக்கப்பட்டிருந்த தலைப்பை கண்டே இருளரசனின் விழிகள் இரண்டும் ஏகத்திற்கு விரிந்தது.
முகத்தை மறைத்திருந்த அவரின் கரம் அணிச்சையாக நீங்கி, புத்தகத்தின் மீதிருந்த வார்த்தையை பேராசையுடன் வருடியது. அவர் முகத்தில் ஒரு பேரானந்தம். அதேநேரம், பயம் கலந்த பெரும் படபடப்பு அவர் நெற்றியில் பதட்ட ரேகையாக மாறிப் படர்ந்தது. இருள் சூழ்ந்த அறையில் மிளிர்ந்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் உதவியால், விசாலமாக விரிந்திருந்த இருளரசரின் கண்மணிகளுக்கு மத்தியில், ஜொலித்தபடி பிரதிபலித்தது அந்த முகப்புப் பக்கத் தலைப்பு. "ரட்சகனின் மும்மணிகள்".
அவர் அந்தப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நொடியில், வைரமாளிகையின் வைரம் தன் விடியல் கதிர்களை ஆதிலோகமெங்கும் பரப்பிக்கொண்டிருக்க.. இங்கே, இருளரசரின் கரத்தில் தவழும் அந்தப் புத்தகத்தை அச்சில் வார்த்தது போலவே, நுவழி பாட்டி பரிசாகக் கொடுத்தப் புத்தகத்தைத் தன் கையில் வைத்து அதன் முகப்பை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தான் அபி.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro