Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

34. நுவழி பாட்டி.

"சரி, கண்ணா. சொல், இந்த மூலிகைகள் எத்திசையில் கிடைக்கும்?", தேட வேண்டும் எனக்கூறி ஷேனா கொடுத்தக் காகிதங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தக் கொண்டே யுவன் கேட்க, "எனக்கு எப்படித் தெரியும்?", எவ்வொரு சலனமும் இன்றி அவன் கொடுத்த பதிலில் யுவனுடன் சேர்ந்து விஷ்ணுவும் ஒரே போல் ஷேனாவை குனிந்து நோக்கினார்கள்.

"என்ன? எனில், உனக்குத் தெரியாதா?", காகிதம் யுவனிடம் இருக்க.. குரல் விஷ்ணுவிடம் இருந்து வந்தது. "அஹான். தெரியாது."

"மூலிகையின் நாமம்?"

"மம்ஹும், தந்தை எனக்குச் சொல்லவில்லை."

"சரிதான். எனில், எவ்வாறு இதைத் தேட?", விஷ்ணுவின் குரல் லேசாக உயர.. ஷேனா அரண்டு நோக்கினான். "நான் முன்பே தேடலைத் தொடங்கியிருந்தால் இவை இருக்கும் இடத்தை நெருங்கியிருப்பேன். நீங்கள்தான் தாமதம் செய்தீர்கள். உச்சி வேளை தொடங்கி அரை நாழிகையில் மூலிகைகளைப் பறிக்க வேண்டும்." அப்பாவியாய் இருவரையும் நோக்க... அவன் பிஞ்சு முகத்தைக் காண்கையில் கோவன்களுக்குப் பரிதாபம் தான் மிஞ்சியது. "சரி கண்ணா. நீ அஞ்சாதே. யாம் பார்த்துக் கொள்கிறோம்...", ஷேனாவை சமாதானம் செய்த விஷ்ணு, "என்ன செய்யலாம் சகோதரா?", யுவனை நோக்கித் திரும்ப.. சற்று சிந்தித்த யுவன், "அந்த மூலிகைகளையே இவ்விடம் வர வைக்கலாம்." விஷமமாய்க் கூறியதில் உடன்பிறப்பின் திட்டத்தைக் கச்சிதமாக அறிந்துக் கொண்டான் விஷ்ணு. 

தன் கரத்தை அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது பதித்த யுவன், கண்களை மூடி ஏதோ செய்ய.. சில நொடிகளில் அங்கு நிகழ்ந்தக் காட்சியால் தன் கண் முன்னே நடக்கும் நிகழ்வை நம்ப முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல், வாய் பிளந்த நிலையில் நோக்கிக் கொண்டிருந்தான் ஷேனா. அவன் கையில் வைத்திருந்தக் காகிதத்தில் இருந்த பாதிக்கும் மேலான மூலிகைகளும் மலர்களும் அவன் கண் முன்னேயே குவிந்துக் கிடக்க... மீதம் இருந்த அனைத்தையும் ஒரு கொடி, ஏதோ வித்தை காட்டுவது போல் சுழன்றுச் சுழன்று சேகரித்து வந்து ஷேனாவின் முன்னிலையில் குவித்துக் கொண்டிருந்தது. அனைத்தும் அந்தக் கொடியிடம் யுவன் கேட்டுக்கொண்ட வேண்டுகோள் படியே.

"இதை எவ்வாறு செய்தீர்கள்? உங்களுக்கும் மாயம் தெரியுமா?. என் அம்மாவும் மாயம் அறிந்தவர் தான். ஆனால், எனக்குதான் தெரியாது. அதுமட்டும் எனக்கும் தெரிந்திருந்தால் நானும் இதே போல் செய்திடுவேன்." மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்துக்கொண்டு உற்சாகமாக அவன் கூற.. அவனை நோக்கிப் புன்னகைத்துக் கொண்டார்கள் கோவன்கள் இருவரும். 

இவை அனைத்தையும் சேகரித்துக்கொண்டு இருள்மாளிகைக்குச் செல்லத் தாமதம் ஆகிடும் என நினைத்து இவ்வளவு நேரமும் பயந்துக் கொண்டிருந்த ஷேனா, இப்போது முகம் நிறைந்தப் புன்னகையுடன் அமர்ந்திருக்க... அவனது அளப்பறிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவன் முகத்தில் அழகாகத் தெரிந்தது அந்தக் கன்னக்குழி. அவன் கண்ணில் மின்னிய மகிழ்வைக் கண்டு கோவன்கள் இருவரின் முகமும் கூட புன்னகையில் மலர்ந்திருக்க.. காகிதங்களில் உள்ள மூலிகைகள் அனைத்தையும் சரிபார்த்து முடித்த ஷேனா, அவை அனைத்தையும் ஒரு பெரிய இலையில் சுருட்டி மடக்கி கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தான்.

ஷேனா, புறப்படுவதற்குத் தயாராக நிற்பதைக் கண்ட யுவன், "சரி, கண்ணா.. நாளை முதல் இதே இடத்திற்கு,வாள் சுழற்றும் பயிற்சிக்கு வந்திடு. எந்த பொழுது உனக்கு வசதியாக இருக்கும்?" சாதாரணமாகவே அவனிடம் வினவ, "பயிற்சிக்கு தினமும் வரவேண்டுமா என்ன? ஒரே நாளில் அந்த பெரிய வாளை சுழற்றக் கற்றுத்தர முடியாதா உங்களால்?", இவ்வளவு நேரமும் அவர்கள் எந்த உடன்படிக்கையில் தனக்கு உதவினார்கள் என்பதை மறந்து, தினசரி பயிற்சியில் இருந்து தப்பிக்கத் திட்டம் தீட்டினான் ஷேனா.

"அட! அதெவ்வாறடா இயலும்? அதை நீ தூக்கிப் பார்த்தாய் தானே? அதை சரியாக பிடிக்கக்கூட இயலவில்லை உன்னால். இதில், ஒரேநாளில் எவ்வாறு கற்றுக் கொள்வாய்?", விஷ்ணு கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, "சரி, சரி. அதைப்பற்றி மீண்டும் சந்திக்கையில் சொல்கிறேன். நான் என் அம்மாவைப் பார்க்கச் செல்லவேண்டும்.", எனக் கூறிக்கொண்டே நான்கு கால் பாய்ச்சலாக ஓடியே விட்டான்.

ஓரிரு நோடியிலேயே பார்வையில் இருந்து தொலைந்தவன் சென்ற திசையை நோக்கிய விஷ்ணு, "சகோதர! இன்றே இவன் அன்னைக்கு நாம் மடல் அனுப்பியிருக்கலாமோ? இவன் மீண்டும் வருவானா என்பதே சந்தேகமாக உள்ளதே?", என யுவனை நோக்க.. பதிலேதும் இன்றியே ஒரு வெற்றிப் புன்னகையை மட்டும் சிந்தினான் யுவன். முதலில் அப்புன்னகையின் காரணம் புரியாமல் விழித்த விஷ்ணு, பின், காரணத்தை அறிந்து, "எப்பொழுதடா மடலை எழுதினாய்? எப்பொழுது அவனிடம் கொடுத்தாய்? நான் உன்னுடன் தானே இருந்தேன்?", இன்ப அதிர்ச்சியில் விழி விரித்து யுவனை நோக்கினான் விஷ்ணு.

"தாமிருவரும் உணவுண்ட இடைவெளியில் எழுதி விட்டேன். வரும் வழியில் அவனிடம் கொடுத்தும் விட்டேன். நிச்சயம் நாளைய தினம் மாலை பொழுதில் அவன் மீண்டும் இவ்விடம் வரவளிப்பான், சகோதரா. எனக்கு நம்பிக்கை உள்ளது.", விஷ்ணுவின் தோளில் கை போட, "சரிதான். அவன் அன்னையே அவனை அனுப்பி வைப்பார் நம்மிடம். எனில், இப்போது புறப்படலாம்", புன்னகையுடன், வந்தக் வழியே சகோதரனை அழைத்துச் சென்றான் விஷ்ணு. 

✨✨✨


ரத்ன மாளிகையின் விசேஷ விலங்கினத்திற்கான லாயத்தில் ஒரு ஓரமாக நின்று, வீராவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மூவரை நோக்கிக் கொண்டே சோகமாக நின்றிருந்தான் அபிஜித். வீராவைக் காண ஆவலாக வந்தவனை நெருங்கவே விடாமல் அவன் ஓடிவிட, இப்போது, தூரத்தில் நின்று அவர்களைப் பாத்துக் கொண்டிருக்கிறான் அபிஜித்.

எதன் காரணமாகவோ வீராவுக்கு ஆண்களைக் கண்டாலே ஆகவில்லை. தன்னை நண்பனாக ஏற்காமல் இருப்பினும் தன் பரிசையாவது ஏற்றுக்கொண்டானே என்பதே அபிக்கு இருந்த சிறு மகிழ்ச்சி. நீலமும் பச்சையும் கலந்தெடுத்த ஒருவித நீல நிறத்தில், தன் மீதிருக்கும் புதிய கடிவாளத்துடன், இங்கும் அங்குமாகத் துள்ளிக் குதித்து ஓடி கொண்டிருந்த வீராவை இழுத்துப் பிடித்து அவன் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தாள் ராகவி. 

'வீராவை பிடிக்கிறேன்' என்ற பெயரில் அவன் கழுத்தில் குரங்கு போல் நான்கு கால்களால் தொங்கிக் கொண்டிருந்த தீரா, ராகவி ஊற்றிடும் தண்ணீரால் இரண்டாம் முறையாக குளித்துக் கொண்டிருக்க... தொப்பலாக நனைந்துவிட்ட தங்கையைக் கண்டு கைக்கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள் சங்கவி. இவற்றை, தூரமாக நின்று நோக்கிக் கொண்டிருந்த அபி, யாரோ ஒருவரின் செருமல் சத்தத்தில் பின்னோக்கித் திரும்ப.. தோள் சுருங்கி, கூன் விழுந்த மூதாட்டி ஒருவள் ஒரு வித்தியாசமான தடியை ஊன்றியபடி அவனருகில் நின்றுக் கொண்டிருந்தார்.

"நுவழி பாட்டி! இங்கென்ன செய்கிறீர்கள் நீங்கள்?", அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து அம்மூதாட்டியை அபி நோக்க, தளர்ந்தக் கரத்தில் அவன் கன்னம் ஏந்தியவர், "என் செல்வமே!", கரகர குரலில் கூறி, அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டார்.

"வாருங்கள் பாட்டி. இப்படி வந்து அமருங்கள்." அவரை அழைத்துச் சென்று, திண்ணை போன்ற ஓரிடத்தில் அமர்த்தியவன், "நீங்கள் எதற்காக பாட்டி இவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள்?"அவரருகிலேயே அமர்ந்துக்கொண்டான்.

 "உன்னைக் காணதான் செல்வமே. உனக்கு இன்னும் சில திங்களில் பிறந்தநாள் வருகிறதல்லவா, அதற்குப் பரிசு கொடுக்க தான்"

"அதற்கு, மூன்று திங்கள் இருக்கிறதே பாட்டி. ஏன் இப்போதே கொடுக்கிறீர்கள்."

"இப்போதே தான் கொடுக்க வேண்டும். நாளை முதல் ஒரு மாவீரணுக்கான ஆயுதத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளேன். உன் பிறந்தநாளுக்கு என்னால் உன்னைக் காண இயலாதடா." தன் கையில் இருந்தத் தடியை அருகில் வைத்துவிட்டு மற்றொரு கையில் வைத்திருந்த சுருக்குப் பையை பிரித்துக் கொண்டே அவர் தன் கரகர குரலால் பதில் கொடுக்க, பரிசு என்றதுமே ஆர்வமாக அவரை நோக்கிக் கொண்டிருந்தவன், "உங்களால் வர முடியாவிட்டால் என்ன பாட்டி.. நானே வருவேன் அல்லவா?", என்றவனை நோக்கி மெல்லமாகப் புன்னகைத்தார் நுவழி பாட்டி. "இல்லையடா என் செல்வமே. நானே வந்து கொடுப்பதுதான் சரியாக இருக்கும் அப்பரிசிற்கு மரியாதையாகவும் இருக்கும். இதோ! இதுவே உனது பரிசு. இதைப் பெற்றுக்கொள்." சிறு சிவப்புநிற பொதியை அவனிடம் நீட்ட... ஆர்வமாக வாங்கி பிரித்துப் பார்த்தான் அபி. 

கையளவிலான தங்க-வட்ட வளையத்தின் நடுவே, வித்தியாசமான உலோகத்தினால் செய்யப்பட்ட நட்சத்திரக் குறியீடு ஒன்று எவ்வித பிடிமானமும் இல்லாமலே சுற்றிக் கொண்டிருக்க... அதன் ஐந்து முனைகளுக்கு இடைப்பட்ட இடத்திலும் சிவப்பு, நீலம், கருப்பு, பச்சை, வெள்ளை என் ஐந்து கற்கள் வெவ்வேறு குறியீடுகளுடன் மிதந்துக் கொண்டிருந்தது. அவைகள் மிகச் சிறிய அளவில் இருந்ததால் என்ன குறியீடு என்பதை அபியால் சரியாக கவனிக்க முடியவில்லை.

"இது என்ன பாட்டி? இதெப்படி பிடிமானம் இன்றியே சுழல்கிறது?", என வியந்துக் கேட்டுக்கொண்டே அபி திரும்ப, "காலம் கைகூடிடும் நேரத்தில் உணர்வாய் என் செல்வமே", என்றபடியே எழுந்து நின்றார் அவர்.

"ஹம். பாட்டி சொன்னால் ஆயிரம் அர்த்தம் இருக்கும். சரி, பாட்டி. நீங்கள் நாளை தானே உங்களின் பணியை தொடங்க உள்ளீர்கள்? இன்றைய பொழுது நான் உங்களைப் பார்க்க வரலாமா?"

"அனுமதிக்கு அவசியமானது இல்லை செல்வமே. என் வாயில் உனக்காக எந்நாழியும் திறந்திருக்கும்."

"ஹஹா. சரி, பாட்டி." உற்சாகமாக பாட்டிக்கு விடை கொடுத்தவனை தூரத்தில் கேட்டச் சிரிப்பொலி கலைத்தது. வீராவுடன் இணைத்து குளித்து முடித்த தீரா, தலையைத் துவட்டுவதற்காக ராகவியின் துப்பட்டாவை இழுத்துக்கொண்டே அவள் பின்னே செல்ல.. அவளோ, நழுவி நழுவி ஓடிக் கொண்டிருந்தாள். அவர்களைக் கண்டதும் அபி மீண்டும் சோகமாகிட, "வருந்த வேண்டாம் என் செல்வமே. நீ மாலையில் இல்லத்திற்கு வா. அவனிடம் நட்புகொள்ள உனக்கு மட்டும் ஒரு ரகசிய வழி சொல்கிறேன்." கண்ணடித்துக் கூறிவிட்டு ஒரு மாயவாயில் வழியே நுவழி பாட்டி சென்று விட.. பாட்டியின் சொல்லால் உற்சாகம் ஆகிவிட்டான் அபி.

நுவழி பாட்டி சென்றதும், அதே திண்ணையில் அமர்ந்துக்கொண்ட அபி, அவர் கொடுத்தப் பரிசை பத்திரமாய் கையில் வைத்துக்கொண்டு, அந்த லாயத்தை சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு மிருகமாக அபி பார்த்துக் கொண்டிருக்க.. திடீரென எங்கோ இருந்து கேட்ட தீராவின் அலறலால் திடுக்கிட்டுத் தன் பார்வையை அவள் புறமாகத் திசை மாற்றினான். ஆனால், அவன் பயந்தது போலெல்லாம் எதுவும் இல்லை. ஈரமாகி நின்றிருந்த தீராவை ஊதி ஊதியே காய வைத்துக் கொண்டிருந்தது ஒரு ஒட்டகம். தீராவைக் கண்டு புன்னகைத்துக் கொண்டிருந்த அபி, அக்காட்சியை முழுமையாகப் பார்த்து ஆச்சரியத்தில் விழி விரித்தான்.

அந்த ஒட்டகம் மெல்லமாக ஒரு மூச்சு ஊதியதற்கே தீரா, காற்றில் பாதி உயரம் பறந்துவிட்டு மீண்டும் தரைக்கு வந்திருந்தாள். அப்படி பறக்கும் சமயம்தான் இந்த அலறல். மீண்டும் மீண்டும் அந்த ஒட்டகம் ஊதிக் கொண்டே இருக்க.. மேலே மேலேப் பறந்து விளையாடிக் கொண்டிருந்த தீராவை விடுத்து, அந்த மிருகத்தின் முழு உருவையும் பார்த்து அப்படியே வாயை பிளந்து விட்டான் அபி. அதன் தலை மட்டுமே தீராவின் முன்பாக இருக்க.. ஜவ்வாக நீண்டிருந்த அதன் கழுத்துக்கு கீழே உடலை காணவில்லை.. தன் வேலை முடிந்ததாக அந்த மிருகம் தன் தலையை பின்னோக்கி நகர்த்தியதில் அபியின் பார்வையும் அதன் தலையையே பின் தொடர்ந்துச் சென்றது. 

சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றிச்... அந்த லாயத்தையே முழுமையாகச் சுற்றி.. இறுதியாக, தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நான்கு கால்களுடன் வந்து பொருந்திக் கொண்டது, அந்தத் தலையுடன் கூடிய ஒட்டகக் கழுத்து. இப்போது பார்ப்பதற்கு அது சாதாரண ஒட்டகம் போல தான் இருந்தது.

இதேபோல் தான் அங்கிருக்கும் ஒவ்வொரு விலங்கினமும் ஒவ்வொரு ரகம். பார்ப்பதற்கு குதிரை, கழுதை, ஒட்டகம், ஆடு, மாடு, பூனை என சாதாரண மிருகம் போல் தெரிந்தாலும் எவையும் சாதாரண மிருகம் கிடையாது. பல வித்தியாசமான தன்மைகளைக் கொண்டிருப்பதால் தான் அவர்களுக்கென தனியொரு இடம். அந்த ஒட்டகத்தின் செயலைக்கண்டு வியந்து முடித்த அபியின் பார்வை, காலையில் தன்னிடம் வந்த மகாராணியின் செய்தி நினைவிற்கு வந்ததால் மீண்டும் தீராவின் மீதே பதிந்தது. 

~ நீங்கள் உங்களின் குழந்தையாய் பாவித்து வளர்கும் தீரா சாமான்ய குழந்தை அல்ல, அபிஜித். பிரிந்துச் சென்ற இரு லோகங்களின் இணைப்பு பாலம் அவளே. ஆதிலோகத்திற்கும் பூவிலோகத்திற்குமான இணைப்பு பாலத்தினை உடைத்திடாதீர்கள். அவளை பூவிலோகம் செல்ல அனுமதியுங்கள்~ என்றிருந்த அந்தச் செய்தியை நினைத்துப் பார்த்தவனுக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக விளங்கியது. நீலி சொன்னது போலவே தீரா சென்றுத் திரும்பியது பூவிலோகம் தான். மேலும், அவளை மகாராணியே தான் அவ்விடம் செல்ல அனுமதித்திருக்கிறார். 

"என்னை மன்னியுங்கள் மகாராணியாரே. ஏனென்று நானறியவில்லை. நீங்களே தான் அவளை வழிநடத்துகிறீர்கள் என்பதை நன்கறிந்திருந்தும் எனக்கு ஏனோ அச்சமாகவே உள்ளது. இனி அவளை நான் தடுக்கவில்லை. ஆனால், நானாகவே முன்வந்து அவளை அனுமதிக்கவும் மாட்டேன். நீங்களே அவளை வழி நடத்திடுங்கள். இனி, நான் குறுக்கிட மாட்டேன்." மனதினுள்ளேயே தீர்மானமாக கூறிக் கொண்டவனின் பார்வை, அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேரெதிரே, மகாராணி இருக்கும் வைர மாளிகையின் வாயிலின் மீது பதிந்திருந்தது.

"ஜித்தூ. இது என்ன?." தீரா, சங்கவியுடன் ஓடிக் களைத்த ராகவி, அபியிடம் வந்து அமர்ந்துக்கொண்டு அவன் கையில் இருந்த வளையத்தையும் அதில் வண்ண வண்ணமாக ஜொலிக்கும் ஐந்து உருளைகளையும் நோக்கியபடியே கேட்க, "நுவழி பாட்டி கொடுத்தார்கள் ராவி. என் பிறந்த நாள் பரிசாக. இப்போதுதான் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்", பார்வையை தன் கையிலிருந்த பொருளின் மீது வைத்துக் கொண்டே பதிலளித்தான் அபிஜித். 

"ஆனால், அதுதான் இன்னும் வரவில்லையே ஜித்தூ? அதற்குள் ஏன் பரிசு?"

"ஆம் ராவி. என் பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று திங்கள் உள்ளது. ஆனால் பாட்டிக்கு என் பிறந்தநாளன்று, ஆயுதம் செய்யும் பணி இருக்கிறதாம் . ஆயுதம் தயாரிக்கும் சமயம் அவர்தான் வேறு எங்கும் வர மாட்டாரே. அதனால்தான் இப்போதே கொடுத்துவிட்டார்"

"ஹாம். பாட்டியையும் அவர்களின் பரிசு பொருட்களையும் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டது. எனக்கும் நுவழி பாட்டியை சந்திக்க வேண்டும். எனக்கும் அவரின் பரிசு பொருட்கள் வேண்டும். அவரின் இல்லத்திற்குச் சென்று நீண்ட காலம் ஆகிவிட்டது ஜித்தூ."

"அட! இதற்கெல்லாமா வருந்துவாய் நீ? கவலைக் கொள்ளாதே ராவி. இன்று மாலையில் நான் பாட்டியைச் சந்திக்கச் செல்லவிருக்கின்றேன். நீயும் வா என்னுடன்", அபி கூறி முடித்த நொடியில் ராகவியின் முகம் பிரகாசம் கொள்ள. அதே நேரம், "மாமா, மாமா, மாமா.. நானும், நானும்..." என்ற சங்கவியின் குரலுடன் இணைந்து, "நானும் வருவேன். என்னையும் அழைத்துச் செல்லுங்கள். என்னை மட்டும் தனித்து விட்டு நீங்கள் எப்படிச் செல்லலாம்?", தீராவும் அபியின் கால்களைப் பிடித்துகொண்டு குதிக்கத் தொடங்கிவிட்டாள்.

"சரி, சரி. சரிஈஈஈஈஈ. நானும் ராவியும், தீராவையும் கவியையும் அழைத்துக்கொண்டு இன்று மாலையில் நுவழி பாட்டியை சந்திக்கப் போகின்றோம். சரிதானே?", அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை அபி அடக்கிட, "ஹே ஹே ஹே ஹேஏஏஏஏ. ", உற்சாகத்தில் குதிக்கத் தொடங்கினார்கள் சங்கவி மற்றும் தீரா.

சிறிது நேரத்திற்கு பின், ரத்னமாளிகையில் இருந்து உற்சாகமாக புறபட்ட குட்டி பட்டாளம், உச்சிவேளை கடந்து சில நாழிகைகளுக்கு பின்னரே வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் வேகவேகமாக மதிய உணவை ருசித்து முடித்து, நால்வருமாக இணைந்துத் தங்களின் நுவழி பாட்டியை சந்திக்க ஆர்வமாக புறப்பட்டார்கள். 

ஆதிலோகத்தில் பிறந்து, அங்கேயே வாழும் எவராயினும் அவரின் ஞானமே அவரின் முதுமை. அந்த வரிசையில், ரட்சக ராஜ்யத்தில் உள்ள மாபெரும் முதியவர் எனில் குழந்தைகள் கூட சுட்டிக்காட்டிடும் ஒருவரே நுவழி பாட்டி. ரட்சக ராஜ்யத்தில் வாழும் அனைவரிலும் அதீத ஞானம் கொண்டவர். என்னதான் மஹா ஞானியாக இருப்பினும், அவரிடம் வரும் பல கேள்விகளுக்கு மௌனத்தையும் மர்ம புன்னகையையுமே பதிலாக கொடுப்பார். அதனாலேயோ என்னவோ, பெரியவர்கள் எவரும் நுவழி பாட்டியிடம் அதிகம் பேசிக் கொள்வதில்லை. ஆனால், மரியாதை மட்டும் ஏராளம்.. தாராளம்.

பெரியவர்கள் இப்படி இருக்க.. குழந்தைகளோ அப்படியே அவர்களுக்கு நேர்மார். பதில் கிடைக்கவில்லை எனினும் பாட்டியை கேள்விக்கடலில் மூழ்க்கி விட்டு, அவரையே கரைசேரும்படி தன்னந்தனியாக தத்தளிக்க விட்டிடுவார்கள் ரட்சக ராஜ்யத்தின் இளசுகள். குழந்தைகளின் அந்த இடைவிடாத கேள்விகளையும் அவர்களின் மெல்லத் துளிர்க்கும் ஞானத்தையும் மேலும் ஊக்குவிக்கவே அவரைக் காண வரும் அனைத்துக் குழந்தைக்கும் ஏதேனும் பரிசினை நிச்சயம் கொடுத்தனுப்புவார். 

அவரின் மினுமினுக்கும் பரிசுகள் குழந்தைகளைப் பெரும்பாலும் ஈர்க்கும். அவர் எப்படி ஞானத்தில் முதியவரோ, அப்படியே மாயத்திலும் அதி அனுபவசாலி. அவரின் பரிசுப் பொருட்கள் பெரும்பாலும் மாயங்கள் நிறைந்ததாகவே இருக்கும். யாருக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும். அதை எதற்காக கொடுக்கிறோம் என்பது வரையில் நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஆனால், குழந்தைகள் அதை உபயோகிக்கும் பக்குவம் வரும் வரையில், ஒன்று அதிலிருக்கும் மாயங்களை செயலிழக்க வைத்திருப்பார், இல்லை, அதிலிருக்கும் அதீத மாயத்தை கட்டுக்குள் கொண்டுவந்து முழு சக்தியை உபயோகிக்கும் சாவியை அவர்களின் ஞானத்தின் வளர்ச்சியிலேயே பதுக்கி வைத்திருப்பார். ஆதிலோகத்தின் பெரும்பாலான மக்கள் மாயங்களைக் கையாழ்பவராக இருப்பினும் இன்னும் ஒருசிலர் அதனை உபயோகிக்க இயலாத சாமான்ய மக்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சில மாய உபகரணங்களையும் தன் கைப்படவே செய்துக் கொடுப்பார். 

இப்போதும் அதுபோலவே எதையோ அவர் செய்துக் கொண்டிருக்க.. படாரென திறந்துக்கொண்ட அவரின் வாயில் கதவைத் தொடர்ந்து குடுகுடுவென உள்ளே ஓடி வந்தது இரு உருவம். அது யாரென அறிந்துக்கொண்ட நுவழி பாட்டி, மெல்லச் சிரிப்புடன் வாயிலுக்கு வர.. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை அளவிலான பெரிய பளிங்குப் பந்து மீது தன் மூக்கை மோதிக்கொண்டு அதனுள் தெரியும் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் தீரா. அவளைப் பார்த்துக் கொண்டே அவளருகில் வந்தவர், தீராவின் அருகிலிருந்த சங்கவியை பார்க்க.. அவளோ, அந்தரத்திலிருந்து கயிறு கட்டி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு இள-மஞ்சள் கிளியை நேராக பார்க்க முயற்சித்துத் தன் தலையை திருப்பிய நிலையில் நின்றிருந்தாள்.

பாட்டி, அவர்களின் அருகில் சென்றப் பின்னரே இருவரையும் தொடர்ந்து மெல்ல நடந்து வந்த அபி மற்றும் ராகவி வாயிலினுள் நுழைந்தார்கள். பட்டென பின்னால் திரும்பிய தீரா மற்றும் சங்கவி, தாங்கள் நோக்கி கொண்டிருந்தவற்றை அப்படியே விட்டுவிட்டு, பாட்டிக்கு இருபுறமும் நின்றுக்கொள்ள, "வாருங்கள், வாருங்கள். நம் பாட்டியின் வீடு தான்", அவர்களை வரவேர்த்தாள் சங்கவி. சிரித்துக்கொண்டே அவள் தலையை செல்லமாகத் தட்டிய நுவழி பாட்டி, "வாருங்கள் செல்வங்களே. உங்களுக்காக இனிப்புகள் தயாரித்து வைத்துள்ளேன். வந்து எடுத்துக் கொள்ளுங்கள்", அவர்களை அழைத்துச் சென்று ருசிமிக்க பலவித இனிப்புகள் வைத்திருக்கும் மேஜையில் அவர்கள் நால்வரையும் அமர்ந்த்தினார்.

நால்வரும் உற்சாகமாக பேசிக்கொண்டே பாட்டியுடன் இணைந்து இனிப்புகளை ருசித்து கொண்டிருக்க... அவர்களுடன் அமர்ந்து பேசியபடியே அவர்களுக்கு பழரசம் பிழிந்து கொண்டிருந்தவரின் பார்வை அடிக்கடி தீராவை தீண்டித்தீண்டி வந்தது. நுவழி பாட்டியின் வீட்டிற்கு மற்ற மூவரும் அடிக்கடி வந்திருக்க.. தீரா இங்கு வருவது இதுவே முதல்முறை. அவரின் பார்வை அடிக்கடி தீராவையே தீண்டிக் கொண்டிருப்பதைக் கவனிக்காத ராகவி, தான் வந்தக் காரியத்தை பாட்டியிடம் கேட்கத் தொடங்கினாள்.

"நுவழி பாட்டி. நீங்கள் ஜித்தூவிற்கு மட்டும் பரிசு கொடுத்திருக்கிறீர்கள்? எங்களுகில்லையா?", முகத்தை சோகமாக்கியபடி பாட்டியை நோக்கிட, "யார் சொன்னது அப்படி? என் வைரத்திற்கு இல்லாத பரிசா?", ராகவியின் கன்னத்தை அவர் வருட, "அக்கா வைரமெனில் நான் யார்? என்னைத் தானே செல்லமாக வைரமென அழைப்பீர்கள் நீங்கள்?", சண்டைக்குக் கிளம்பினாள் சங்கவி.

"ஹாஹாஹா. நீயும் வைரம் தானம்மா. என் மூத்த வைரத்தின் தங்கையாகிய இளைய வைரம்.. இனிய வைரம்...", என சமயோஜிதமாக சங்கவியை சமாளிக்க... கையில் வைத்திருந்த இனிப்பைக் கொறித்துக் கொண்டிருந்த தீரா, "எனில் நான்? நான், இளைய வைரத்தின் குட்டித் தங்கை வைரமா?" கேள்வியையும் அவளே கேட்டு பதிலையும் அவளே கூறி, வாயை மூடிச் சிரித்துக் கொண்டாள். அவளை பார்த்து கலகலவென அபி சிரிக்க, "நீ வைரமல்ல செல்வமே. நீ என் தங்க முத்து.", எனக்கூறி இப்பொது பாட்டி சிரிக்க, "ஹான்! தங்கமா? இல்லை, முத்தா? ஏதேனும் ஒன்று சொல்லுங்கள் பாட்டி." கேள்வியாக நோக்கினான் அபி.

"இரண்டும் தனித்தனி எனினும், இனி, இவள் மூலம் இரண்டும் ஒன்றாகதான் இருந்ததாக வேண்டும். சரி, உங்கள் அனைவருக்கும் ஒன்று வைத்திருக்கிறேன்." என்றவர் அங்கிருந்து நகர்ந்து விட, இளையவர்களாக இருந்த சங்கவிக்கும் தீராவிற்கு ஒன்றுமே புரியவில்லை எனில் அபிக்கும் ராகவிக்கும் அவரின் சொல் புரிந்தாலும் தெளிவாகப் புரியவில்லை. 

இருவரும் தலையை சொரிந்துக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த சமயம், சிறியதாக மூன்று சுருக்குப் பைகள் மற்றும் தடிமனாக ஒரு சதுர புத்தகத்தையும் தூக்கிக்கொண்டு வந்து மேஜை மீது வைத்தார் நுவழி பாட்டி. மூன்று பைகளையும் சிறுமிகள் மூவரிடமும் ஒவ்வொன்றாக அவர் நீட்டிட.. அவர்கள் மூவரும் அதை ஆர்வாக வாங்கிய கணமே அபியின் பார்வை மேஜை மீதிருந்த புத்தகத்தின் மீது பதிவதை கவனித்த நுவழி பாட்டி, அவனுக்குப் பின்பக்கமாக நின்றுக்கொண்டு, "உங்கள் நட்பிற்காக உதவுகிறேன் என்றேனல்லவா? இதை முழுமையாக படி. உனக்கே அவனுடன் நட்புகொள்ள வழி கிடைக்கும்." கிசுகிசுக்கும் குரலில் அவன் காதில் கூற.. அணிச்சையாகவே அவன் கரம், புத்தகத்தைத் தன் பக்கமாக இழுத்தது.

"உஃப்ப். பாட்டி, இந்த பந்து ஏன் திறக்க மாட்டேன் என்கிறது?", தனது பைக்குள் இருந்துக் கிடைத்த வெள்ளி உருளையைக் கையில் வைத்திருந்த ராகவி, பாட்டியிடம் நொந்துக்கொள்ள, 

"எனக்கும் திறக்கவில்லை"

"ஆம், பாட்டி. என்னுடையதும் திறக்கவில்லை." என ராகவியை போலவே குரல் கொடுத்தார்கள் சங்கவி மற்றும் தீரா. அவர்களின் கையிலும் அதே போலான இரு உருளைகள், திறப்பதற்கு இடைவெளியுடனே இருந்தது. ஆனால் திறக்கவில்லை. ராகவியிடம் வெள்ளி பந்து, சங்கவியிடம் தங்க பந்து மற்றும் தீராவிடம் நீல பளிங்குப் பந்து இருப்பதை கவனித்த அபி, நுவழி பாட்டியை கேள்வியாக நோக்கிட, "என் செல்வங்களே! இதனை நீங்கள் மூவரும் திறக்க வேண்டுமெனில், தினமும் வைர மாளிகையின் விடியல் கதிர்கள் வெளிப்படும் சமயம் தான் முயற்சிக்க வேண்டும். என்று உங்கள் மனதில் இதனுள் என்ன இருக்கிறது என்னும் கேள்வி உண்மையாகவே எழுகிறதோ, அன்றைய நாளின் இறுதி ஒளி கீற்று மங்கிடும் பொழுது உங்களுக்கு விடையும் கிடைக்கும். உள்ளிருக்கும் பரிசும் கிடைக்கும்." எனக்கூற.. அதுவரையில், நினைத்தாலும் திறக்கமுடியாது என்பதை புரிந்து கொண்டவர்கள், "சரி, அதுவரையில் இந்த மினுமினுக்கும் உருளையை வைத்து பந்து விளையாடலாம் என முடிவெடுத்து கொண்டார்கள் மூவரும். 

நால்வரும், பாட்டியிடம் வெகு நேரமாக பேசி விளையாடிக்கொண்டே இருக்க.. பட்டென அவர்களை இருள் சூழ்ந்தது. சரியாக சொல்லவேண்டுமானால், இரவாகியது. 

சிறு விளக்கு ஒன்றை ஏற்றிய பாட்டி, நால்வரையும் நோக்கி, "இருளுக்கு ஒளியை கண்டால் அச்சம். உங்களுக்கெல்லாம் இருளைப் பார்த்து அச்சமா, என் செல்வங்களே?", என வினா எழுப்ப, "இல்ல்ல்ல்லை." கோர்வையாக கத்தினார்கள் நால்வரும். "ஹான். என் செல்வங்கள் தைரியசாலிகள். எங்கே?. இதே தைரியத்துடன் உங்களின் இலக்காகிய இல்லைத்தை அடையுங்கள் பார்க்கலாம்.", நால்வரையும் நோக்கி பாட்டி கூறிட, "நாங்கள் தைரியமாக சென்றிடுவோம் பாட்டி. நீங்கள் பத்திரமாக இருங்கள்." பாட்டியிடம் கூறிக்கொண்டே மூவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் அபி.

இருள் சூழ்ந்த சாலையில், கையில் ஒளிரும் மாய ஒளிபந்துடன், மூவரையும் வழிநடத்தி கூட்டி செல்லும் அபியைக் கண்டு ஒரு மர்மப் புன்னகையுடன், தன் வீட்டினுள் சென்று கதவை அடைத்து கொண்டார், நுவழி பாட்டி.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro