Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

32. விதிமீறல்!

"ஏன் முடியாது? நிச்சயமாக சொல்கிறேன்" விஷ்ணுவின் கேள்விக்கு உடனடியாக பதில் கொடுத்த மையாழி மரம், இருநொடி அமைதிக்குப் பின், "சொல்வதற்கென்ன, நேரடியாக உங்களின் கண்முன்னேயே காண்பிக்கின்றேன் அம்மூன்று விதிமீறல்களையும்." என்றது, சிறு சிரிப்புடன்.

நிகழ்ந்த விதிமீறல்களை நேரடியாகக் காண்பிக்கின்றேன் என மையாழி மரம் கூறியதும், அதெப்படி சாத்தியம் என கோவன்கள் மூவரும் ஒருவரை ஒருவர் குழப்பப் பார்வையில் பார்த்துக்கொண்ட அதே நொடியில் நிலத்தில் எழுந்தது சிறு அதிர்வு. திகிலுடன் தரையை நோக்கிய மூவரும், சடசடவென்ற சத்தத்துடன் இணைந்து நிலத்தில் சிலபல விரிசல்களுடன் நீளமான வெடிப்பு மேலெழும்புவதைக் கண்டு மெல்ல பின்னோக்கி நகர.. மண் தரையைப் புடைத்துக்கொண்டு வெளியே வந்த மூன்ற பெரும் வேர்கள், கோவன்கள் மூவரின் முன்பாக காற்றில் மிதந்தபடி நின்றது.

"அஞ்சவேண்டாம் கோவன்களே! நான், சுவாசம் கொடுப்பவள். உங்கள் சுவாசங்களை நிறுத்திவிட மாட்டேன்.", அவர்கள் முன்பாக நின்ற மையாழி மரத்தின் வேர்களிலிருந்து வெளிவந்த கிளை வேர்கள், தனித்தனியாக அவர்கள் மூவரையும் பாதம் முதலாகச் சுற்றி வளைத்தத் தருவாயில் அவர்களில் எழுந்த திடீர் சந்தேகத்தை உடனடியாகத் தீர்த்தது மையாழி மரம். அதன் சொல்லைக் கேட்டு நிதானமடைந்த மூவரும், தங்களைச் சுற்றிடும் வேர்களிலிருந்து விடுபடப் போராடுவதை நிறுத்திவிட்டுத் தங்கள் கண்களை சுற்றிடும் கிளை வேர்களின் மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கிட.. வேர் கூட்டினுள் அவர்கள் மூவரையும் முழுமையாக மூழ்கடித்துவிட்ட அக்கிளை வேர்கள், தங்கள் பணியைத் தொடங்கியது. 

அந்த வேர்-கூட்டினுள், அவர்கள் நிற்கும் அதே வனப்பகுதி தென்பட்டது. ஆனால், இப்போது இருப்பது போல் அல்ல.. சில காலங்களுக்கு முன்பாக இருந்த இடம் அது. அவ்விடத்தில், நிஜத்தில் நடப்பது போன்றே கோவன்கள் கண்களின் முன்பாக தோன்றத் தொடங்கியது அக்காட்சி. தெளிவில்லாமல், மங்களாக. 

"அந்நிகழ்வுகளை எவ்வாறு நான் மறக்க? பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் எம்மில் பெறும் மாற்றத்தை நிகழ்த்திய நிகழ்வானாலும், அவைகள் ஆதிலோகத்தின் விதியை மீறிய நிகழ்வுகள்." சிறு கீற்றாகக் கூட ஒளி புகாத அளவிற்கு கோவன்கள் மூவரையும் அந்த வேர்கள் சுற்றி வளைத்திருந்த நிலையிலும் மையாழியின் குரல் அவர்களை அடைய.. அதே நேரம், அவர்கள் கண்முன்னே மங்களாகத் தோன்றத் தொடங்கியிருந்தக் காட்சியில், தோள்பட்டையிலிருந்து முழங்கை வரையில் ஏற்பட்டிருந்த பெரிய கீரலிலிருந்து ரத்தம் சொட்டிடும் நிலையில் மையாழி மரத்தின் அடியில் நின்றிருந்தாள் ஒரு பெண். அவளுக்கு முன்பாக ரத்தக் கரையற்ற வாளுடன் நின்றிருந்தான் ஒரு வீரன்.

"இந்த சந்திப்பு நிகழ்ந்த நொடியில்தான் அரும்பியது என் முதல் மொட்டு" மையாழியின் குரலுடன் இணைந்தே அக்காட்சி மறைத்து, ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு காட்சிகள் தோன்றியது. அனைத்திலும் அதே பெண்ணும் வீரனும் தான். காட்சிகள் மங்களாகவே தோன்றினாலும், சில நொடிகளே நீடித்தாலும் அதிலுள்ள இருவரின் பந்தத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள்  தெளிவாக புரிந்துக்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. 

"அக்காதல்-", மையாழி மரம் முழுமையாக முடிக்கும் முன், "காதலிப்பது இங்கு விதிமீறலில் அடங்குமா என்ன?", வேர்-கூட்டினுள் இருந்தபடியே சக்தி கேட்க, தான் சொல்லவந்ததை விடுத்து அவனுக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கியது மையாழி மரம். 

"அவ்வாறில்லை கோவனே. காதல், விதிக்கு அப்பாற்பட்டது. ஆயின், இக்காதல் எதிரெதிர் துருவங்களின் காதல். ஒரு புறம் ஒளி மட்டுமே இருக்குமெனில் மறுபுறம் இருள் மட்டுமே நிலைத்திருக்கும்."

"தாம் கூறவருவது விளங்கவில்லை. சற்று தெளிவாகக் கூறுங்களேன்."

"சொல்கிறேன். அவள், தர்ம மஹா சாம்ராஜ்யத்தின் இளவரசி. அவன், நிழல் தேசத்தின் தளபதி. இருவரில் ஒருவர் மாய சக்திகளற்றவராக இருந்திருந்தால் கூட எதுவும் பிரச்சனையில்லை. ஆனால், இவர்களின் விஷயத்தில் அப்படி இல்லையே. இரு துருவ மாயங்கள் இணைவதுதான் இங்கே விதிமீறல். எனினும், இருவரின் காதல் புனிதம். அதுவே தடைகளை தகர்த்து விதியினை மீறச் செய்துவிட்டது.", மையாழியின் விளக்கம் முடிந்த நொடி, அந்தக் காட்சியில் தெரிகின்ற வீரன், அப்பெண்ணைக் கரம்பிடித்து நிழல் தேசத்தினுள் அழைத்துச் சென்றான். அதுவரையில் தெரிந்த பிறக் காட்சிகளில், அப்பெண்ணின் கழுத்தில் பளிச்சென்றிருந்த சிவப்பு நிற சங்கிலி இப்போது காணவில்லை.  

"அவள், தன் ராஜ அதிகாரத்தைத் துறந்து, வேற்று ராஜ்யம் அடைந்ததில் தர்மராஜ்யத்தின் அரியாசனம் வெறுமை கொண்டது. அது, லோகத்தின் சமநிலையைக் கலைத்தது. அவளை நிழல்தேசத்து வீரன் தன்னவளாக ஆக்கிகொண்ட நேரம்தான் மொட்டாக இருந்த எனது மலர், மலர்ந்து விரிந்தது." மையாழியின் விளக்கத்தை கோவன்களால் புரிந்துக்கொள்ள முடிந்தது.  அதேநேரம், அடுத்தக் காட்சி தோன்றியது. அதில் தெரிந்ததும் அதே வீரன் போல தான் இருந்தார். கையில், ஒரு பிஞ்சு குழந்தையை அடர்-நீல நிற துணியைக்கொண்டு பத்திரமாகச் சுற்றிப் பிடித்திருந்தார். கையில் ஈட்டிகளுடன் வந்த இரு சிப்பாய்கள் அக்குழந்தையை அவர் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுக்க.. அடுத்த நொடியே, கோவன்கள் நிற்கும் இடத்தைத் தாண்டி வந்த முரட்டு-உருவம் கொண்ட ஒரு நபர், தனது வாளைக் கொண்டு அந்த வீரனின் நெஞ்சைக் குத்தி அவரைக் கொன்றார். அந்த முரட்டு உருவத்தைப் பார்த்த கோவன்களுக்கு, அந்த உருவத்தை எங்கோ பார்த்தது போலவே தோன்றிக்கொண்டிருக்க.. காட்சிகள் அணைத்தும் முடிந்ததும் அவர்களைச் சுற்றியிருந்த வேர்கள், பழைய நிலைக்கே திரும்பியது. அந்த முரட்டு-உருவம் கொண்ட நபரை குறித்த யோசனையிலேயே இன்னும் இருந்த மூவருக்கும் மையாழி கொடுத்த விளக்கத்தால் தெளிவு கிடைத்தது.   

"என் மலர் மலர்ந்து சரியாக ஓராண்டிற்கு பின்னர் தான் அது வாடியது. சரியாக, இருளரசனின் வாளால் அந்த வீரனின் மரணம் நிகழந்த சமயத்தில்."

"என்ன? மரணம் கூட விதிமீறலா?", ஆதிலோகத்தின்  விதிகளைக் கேட்டுத் தலையை பிய்த்துக்கொள்ளாதக் குறையாகக் குரல் கொடுத்தான் விஷ்ணு.

"ஆம், கோவனே. இங்கு, அசையும் சிறு துறும்பிற்குக் கூட விதி உள்ளது. இயற்கையாக ஒரு மரணம் நிகழும் பட்சத்தில் அவரின் ஆத்மா இயற்கையுடன் கலந்திடும். அதுவே, செயற்கையாக நிகழும் எனில், இந்த வனதேசத்தின் உள்ளேயே எங்கேனும் சிவப்பும்-நீலம் கலந்த நிறம் கொண்ட ஒளி பந்தாகி, அதன் இயற்கை மரணத்தை விரும்பிடும் வரையில் இந்த அலைந்துத் திரியும். இதுவே மரணத்திற்கு விதிக்கபட்ட விதி. ஆன்மாவின் விதி. ஆனால், அன்றைய தினத்தில் இருளரசன் கரத்தால் மடிந்தவரின் ஆன்மா இன்றளவும் இயற்கையில் கலந்திடவில்லை. அதே நேரத்தில் வனதேசத்திலும் சுற்றித் திரியவில்லை. அதனால், அந்த மரணம் விதியினை மீறிய மரணமாகவே கருதபடுகிறது. முதல் இரு விதிமீறல்கள் காதலுக்காக மீறப்பட்டது எனில், இது ஆன்மாவின் விடுதலையை தடை செய்த விதிமீறலாகும்."

"இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது எமக்கு. கொலை செய்த நபரை தாங்கள் இருளரசன் என்கின்றீகள் என்றால், யாம் நேற்றைய பொழுது சந்தித்த அச்சிறுவனை அழைத்துச் சென்ற அந்நபர், தன்னை இருளரசன் என்றே அடையாளப் படுத்திக் கொண்டார். அவனும் அவரை தந்தையெனவே அழைத்தான். ஆனால் அவனிடம் அவர் காண்பித்த கடுமை.. அவர் மெய்யாகவே அச்சிறுவனின் தந்தை தானா? இல்லை, கொலையுண்ட  அந்த வீரனிடமிருந்து தூக்கிச்சென்ற குழந்தைதான் அவனா என சிந்திக்க வைக்கிறது எம்மை" தங்களுக்கும் இந்த நான்காம் விதிமீறலுக்கும் இடையில் உள்ள தொடர்பை புரிந்துக்கொண்ட யுவன், அது ஷேனாவை சந்தித்ததால் தான் நிகழ்ந்துள்ளது என யூகித்திருந்தான். இருந்தாலும் அதனை தெளிவாக்கிக்கொள்ள மையாழியிடமிருந்தே அந்த பதிலை எதிர்நோக்கினான். அவன் யூகத்தின்படியே மையாழி மரமும் அதையே உண்மையெனவும் கூறிவிட்டது. 

ஷேனா தான் மையாழி மரம் காண்பித்த அந்த குழந்தை என்பதை உணர்ந்துக் கொண்ட மூவருக்கும், இருளரசன் அவனின் நிஜ தந்தை அல்ல என்பது புரிந்துவிட, அவன் நிலையை நினைத்து மனம் சற்று பாரமாகவே இருந்தது. 

ஷேனா மற்றும் மையாழி மரத்திற்கு இடையில், இப்போது தாம் மூவரும் வந்திருப்பதால் தங்களாலேயே இன்றும் ஏதோ விதி மீறப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால், ஏற்கனவே அது குறித்து கேள்வி எழுப்பியும் மையாழியிடம் பதில் கிடைக்காமல் போனதால் வேறு கேள்வி கேட்க முடிவெடுத்தான் சக்தி.

"அது சரி. அதென்ன? செயற்கை மரணம் நிகழ்ந்தால், ஆன்மா இங்கேயே சுற்றித் திரியும் என ஏதோ கூறினீர்களே?"

"ஆதிலோகத்தின் மரணத்தைப் பொறுத்தவரையில் மக்கள் இயற்கை மரணத்தை விட்டு வெகு தொலைவில் இருகிறார்கள். இயற்கையாக அவர்களுக்கு மரணம் வரும் சமயம் அதை அவர்களேதான் விரும்பி ஏற்க வேண்டும். அப்படி அவர்கள் அந்த மரணத்தை ஏற்கவில்லை எனில், அவர்களின் உயிரை வேறு எந்த ஒரு சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது. அது, என்றும் மாறாத அதே வலிமையுடன் திடமாகவே இருக்கும். அதுவே, நிகழ்வது செயற்கை மரணம் எனில், அதனை எவரேனும் ஒருவர் மற்றவருக்கு நிற்பந்தமாக அளிப்பதாகும். அவ்வாறு செயற்கை மரணம் நிகழும் பட்சத்தில் அந்த ஆத்மா விரும்பிடும் வரையில் இயற்கையில் கலந்திடாமல் அதன் போக்கில் சுற்றித் திரியும். ஆத்மாக்களுக்கு என இருக்கும் சில தனித்துவமான மாய சக்திகள், அவர்கள் விரும்பியதைச் செய்ய துணை நிற்கும். அதைத்தான் அப்படிச் சொன்னேன் நான்", சக்தியின் கேள்விக்கு விடை கொடுத்தது மையாழி மரம்.

"தாம் சொல்வதைப் பார்த்தால் இந்த லோகத்து மக்கள், மரணமற்றவர்கள் என்பதற்கு சமமாக தெரிகிறதே?", யுவன் சிந்தனையுடன் தீவிரமாக கேட்ட கேள்வியில் அவன் சகோதரன்களும் குழம்பி போய் மையாழி மரத்திடம் பதிலை எதிர் நோக்க, "ஹாம்.. அது அவ்வாறில்லை. இங்கு வாழும் மக்கள் யாவரும் மரணம் அற்றவர்கள் என்பதை விட, இளமை மாறாதவர்கள் என்பதே சரியாக இருக்கும் கோவனே. ஒருவர் தனது இளமை பருவத்தை கடக்க அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்பது கணக்கில்லை. அவர்களின் வாழ்வினில் எத்தனை ஞானம் பெறுகிறார்கள் என்பதே கணக்கு. அவர்களின் அறிவும் திறனும் வளர்வதே அவர்களின் முதிர்ச்சி. கற்றது கையளவே என்பதால் அவர்களின் இளமை பயணமும் மிக மிக மெல்லமாகவே நிகழும். இயற்கை மரணத்தை முழுவதுமாக புரிந்து கொண்ட பின்னரே அவர்களை அந்த மரணம் நாடி வரும். அதுவரையில் அவர்களின் வாழ்க்கை சக்கரம் நில்லாமல் சுழன்றுக் கொண்டே தான் இருக்கும்", கோவன்களின் மனதில் புது புது கருத்துகளை பதித்து கொண்டே இருந்தது மையாழி மரம். அவர்களும் கொஞ்சம் கூட சளைக்காமல், கேள்வி மேல் கேள்வியாக அந்த மரத்திடம் தொடுத்த வண்ணமே தான் இருந்தார்கள். அப்படியே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக, ஆதிலோகத்தின் வரலாறை, அதன் தொடக்கம் முதலாகக் கேட்டறிந்தார்கள்.

ஆரம்பத்தில், ஆதிலோகத்தை குறித்து இருந்த சந்தேகம், குழப்பம், தயக்கம் என அனைத்துமே நேரம் செல்லச் செல்ல மையாழியின் பதில்களாலும் ஆதிலோகத்தின் அற்புதத்தின் மீது தோன்றிய நம்பிக்கையினாலும் அடியோடு இல்லாமல் போனது அவர்களுக்கு. தங்களது நண்பர்கள் எண்வரையும் கூட இவ்விடத்திற்கு அழைத்துவரும் எண்ணங்களும் அவர்களுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது . இருப்பினும், 'தாங்கள் இவ்விடம் வந்ததற்கே இன்னதென்று தெரியா ஏதோ ஒரு விதி மீறபட்டு விட்டது. விதிமீறல்கள் லோகத்தின் அழிவிற்கே கூட அழைத்து செல்லும் என்று வேறு மையாழி குறிப்பிட்டுள்ளது. இதில் நண்பர்களும் இவ்விடம் வந்து ஏடாகூடமாக எதுவும் நிகழ்ந்திட வேண்டாம். பூமியின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள தாங்கள் வந்தது மட்டுமே போதும்' என எண்ணிக் கொண்டார்கள்.

மையாழியின் உதவியால் ஆதிலோகம் குறித்து கோவன்கள் மூவரும் பலவற்றை அறிந்துக் கொண்டே போக... யுவனின் ஆழ்மனதில் வெகுநேரமாக ஏதோ ஒரு கேள்வி மேலெழும்பிக் கொண்டே இருந்தது. ஆனால், ஆர்வமாகக் கதை கேட்டுக் கொண்டே இருந்தவன் அதனை மொத்தமாக கவனிக்கத் தவறியிருக்க, "சரி, வெகுநேரம் ஆகியது போல் இருக்கிறது. அங்கு நம்மைக் குறித்து பதட்டத்தில் இருப்பார்கள் நம் நண்பர்கள்", என விஷ்ணு கூறிய பின்னரே யுவனின் மனதில் ஒரு ஓரத்தில் எழுந்த கேள்வி மொத்தமாக மேலெழும்பி நின்றது. தன் சிந்தையில் அக்கேள்வி மிளிர்ந்த அடுத்த கணமே சுற்றி இருக்கும் சூழலை ஆராய்ந்த யுவன், "ஆம்! நாம் இவ்விடம் வந்து வெகுநேரம் ஆகிவிட்டது! ஆயின், ஆதவனின் உச்சிக் கதிர்கள் இன்னும் அத்தனை வீரியமாகத் தென்படவில்லையே? சூழலிலும் மிதமான வெப்பமே நிலவுகிறது. எவ்வாறு!?" அக்கேள்விக்குப்  பின்னரே விஷ்ணு, மற்றொன்றை உணர்ந்தான். "சகோதரா! இங்கு ஆதவனின் உஷ்ணம் மாத்திரமல்ல. ஆதவனே தென்படவில்லை!", எனக் குழப்பத்துடன், வானில் சுற்றிச் சுற்றி சூரியனை தேடிய விஷ்ணுவை குறுகிட்ட மையாழி மரம், "இங்கு ஆதவனென்பது வைரமாளிகையின் உச்சத்தில் மின்னும் வைரமே. அதுவே ஆதிலோகத்தின் ஆதவன். என்னதான் பூவிலோகமும் ஆதிலோகமும் பிரபஞ்சத்தில் ஒரே ஆதவனைச் சுற்றி வந்தாலும் இங்கு தென்படாதவாறு பூவிலோகம் ஆதவனை மறைத்துக் கொள்கிறது. அதன் காரணமாகவே எம் மகாராணியார் வைர மாளிகையை உருவாக்கினார். அவ்வைரத்தின் மாயங்களை கொண்டே இங்குள்ள இயற்கை வளர்வதால், பார்வையில் தென்படும் அனைத்துத் தாவரங்களும் மாயசக்திகள் பலவற்றை உடையவை.", என ஆதிலோகத்தின் இயற்கை அமைப்பினை மையாழி கூறி முடிக்க, "எனில், இரவிலும் இதேபோல் தானா?", அடுத்த வினாவினை முன்வைத்தான் சக்தி. 

"பூவிலோகம் ஆதவனை மாத்திரமே மறைத்துள்ளது கோவனே. பூவிலோகத்திற்கும் ஆதிலோகத்திற்கும் இடையே உள்ள விசையின் காரணமாக இரண்டிற்கும் இடையே சிக்கிச் சுழலும் மதி, இரு லோகத்திற்கும் பொதுவானவளே. ஆயின், ஓரிடத்தில் வளர்பிறையெனில் மற்றொரு இடத்தில் தேய்பிறை.. அங்கு பௌர்ணமி எனில் இங்கு அமாவாசை என்றே ஒளி கொடுப்பாள் அவள். பாவம்! இருவருக்கும் இடையே சிக்கி கொண்டு போராடுகிறாள்", மெல்லியதொரு சிரிப்புடன் கூறி முடித்தது மையாழி மரம். அதன் சிரிப்பின் காரணம் என்னவென்று அவர்களால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அம்மரம் கூறிய தகவல் அவர்களை பிரம்மிக்கச் செய்தது உண்மையே. 

"அதி அற்புதம்!", வியப்பில் தங்களுக்குள்ளேயே முனங்கிக் கொண்ட மூவரின் பார்வையும் ஒரே போல் இடது புறமாகத்திரும்ப.. தொலைவில் பிராகசித்து மின்னிக் கொண்டிருந்த மூன்று உயர்ந்த மாளிகைகளில், நடுவாக இருந்த வெள்ளி நிற மாளிகையின் உச்சத்தில் ஜகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது மாபெரும் வைரம். மிகத் தொலைவில் இருந்ததால் மாளிகைகளில் உச்சி மட்டுமே பார்வைக்கு புலப்பட... இருப்பினும், நேற்றைய பொழுதில் ஷேனாவுடன் மேலே பறந்த சமயம் கண்ட காட்சிகளே அந்த மாளிகைகளின் முழு அழகையும் வர்ணித்து கூறிட போதுமானதாக இருந்தது அவர்களுக்கு.

ஆதிலோகத்தின் மாய அற்புதங்கள் பலவற்றினைக் குறித்து அறிந்து வியந்த கோவன்கள் மூவரும், தாங்கள் வந்து வெகுநேரம் ஆகியதால், நண்பர்கள் தவிப்பில் காத்திருப்பார்கள் என மையாழி மரத்திற்கு நன்றி கூறிவிட்டு, மதியவேலை துவங்கும் நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, வந்த வழியாகவே நடந்துக் கொண்டிருந்த சமயம், அங்கே ஒரு மரத்தின் கீழ் சோர்ந்துப்போய் அமர்ந்திருந்த ஷேனாவை  பார்த்துவிட்டார்கள்.

✨✨✨


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro