Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

31. மையாழி சொன்ன கதை

இரண்டாவது நாளாக ஆதிலோகத்தினுள் தங்கள் பொன் பாதங்களைப் பதித்து நின்றார்கள் கோவன்கள் மூவரும். நல்ல வேளையாக நேற்று அவர்கள் பார்த்த அந்த மாயவாயில், மகாராணியின் உதவியால் அப்படியே தான் இருந்தது. நேற்றுப் பார்த்த அதே வண்ண வண்ண மரங்கள்.. மினுமினுக்கும் மலர்கள்.. சலசலக்கும் தென்றல் காற்று என எல்லாம் சூழ்ந்த ஆதிலோகத்தின் வனதேசத்தின் மையத்தில் நின்றிருந்தார்கள் அவர்கள்.

எங்கிருந்து தொடங்குவது? எங்கு சென்று, யாரிடம் கேட்டுத் தகவல்களைச் சேகரிக்கலாம் என மூவரும் சுற்றிமுற்றிப் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்த நேரம், "பூவிலோகத்தின் காப்பாளர்கள்! ஹ்ம்ம்.. ஆதி-கோவன்கள், ஆதிலோகத்திலா?", வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவரின் தளர்ந்தக் குரல், இவர்களின் வருகையை ஏற்கனவே எதிர்பார்த்தது போன்றும் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்காதது போன்றும் அவர்களின் செவியினை அடைந்ததில் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினார்கள் மூவரும்.

"யாரம்மா தாம்? எங்கிருக்கின்றீர்கள்?", குரல் மட்டுமே கேட்க, குரலுக்குச் சொந்தகாரரைக் காணாமல், நிற்கும் இடத்தைச் சுற்றிக்கொண்டே கேட்டான் சக்தி. 

"அதை, ஓரிடத்தில் நின்று கேட்க வேண்டியது தானடா? நில் இப்படி", சக்தியின் தலையில் கைவைத்து அவனை நிறுத்திய யுவன், "யாரம்மா தாங்கள்? எம்மைக் குறித்து எவ்வாறு அறிவீர்கள்? ஆட்சேபனை இல்லையெனில் எம் முன் பிரவேசிக்கலாமே?", குரலுக்கு உரியவரைத் தேடிக்கொண்டே வினவினான்.

"ஹஹ்ஹஹ்ஹா... நான் உங்கள் முன்பாகவே தான் இருக்கின்றேன் கோவன்களே! என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் இங்கு வந்ததன் காரணத்தை அறிந்தவள். உங்களுக்கு விடையளிக்கக் காத்திருப்பவள். இந்த ஆதிலோகத்தின் மொத்த வரலாறும் அறிந்த ஒரே ஒரு வாழும் உயிர். மையாழி விருக்ஷம்." அக்குரல் ஓய்ந்த நொடி, மூவரின் கண்களும் அவர்களுக்குக் குறுக்கே இருந்த அந்த பிரம்மாண்ட மரத்தினில் பதிந்தது. நூல் போலான பலவித கொடிகள் சூழ்ந்து, பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்த பிரம்மாண்ட மரத்தினைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றார்கள் மூவரும். அப்போதுதான் அந்த அதிசயத்தையும் கண்டார்கள்; அங்கிருக்கும் மொத்த மரங்களிலேயே இந்த மரம் மட்டுமே பூலோகத்தின் மரங்களை ஒத்துப் போவதுபோல் அரக்கு நிற சாதாரண மரத் தண்டுடன் பசுமை இலைகளைக் கொண்டிருந்தது.

"தாம்தான் எம்முடன் உரையாடுகின்றீரா?", உறுதிபடுத்திக் கொள்வதற்காக, யுவன், அந்த மரத்தை நோக்கிக் கேள்வி எழுப்பிட, "நானே தான் கோவனே", மெல்லியச் சிரிப்புடன் பதிலளித்தது மையாழி மரம். ஒரு மரம் பேசுவது பிறருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், ஓரறிவு முதல் ஆறறிவு ஜீவ-ஜீவிகளிடம் ஜென்ம ஜென்மங்களாகப் பேசிக்கொண்டிருக்கும் பூமியின் ஆதி கோவன்களாகிய இவர்களுக்கு அந்த ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை.

"யாம் வந்த நோக்கத்தையும் எம் வினாக்களுக்கு விடையையும் அறிவதாகக் கூறினீர்கள்? எங்கே, சொல்லுங்கள் பார்க்கலாம்?", என்ன விடை வரும் என விஷ்ணு அம்மரத்தைக் கூர்ந்து கவனிக்க, "ஹாம்ம்ம்... சொல்கிறேன் கேளுங்கள். முதலில், இந்த ஆதிலோகத்தை அறிந்துக் கொள்ளுங்கள். உங்கள் இடதுபுறம் இருப்பதோ ஒளியின் ஆட்சி நிறைந்த ரட்சக மஹா சாம்ராஜ்யம். வலது புறம் இருப்பதோ நிழலின் ஆதிக்கம் கொண்ட இருள் தேசம். நீங்கள் மூவரும் இக்கணம் நின்றிருப்பதோ, அரிய பல அற்புத மாயங்களின் இருப்பிடமான வனதேசம். இவை அனைத்தும் அடங்கியதே ஆதிலோகம். பிறகு, ஆதிலோகத்தால் பூவிலோகத்திற்கு ஆபத்து நேருமா என்றால்? எம் மக்கள் பூவிலோகம் வரவளிக்க அவர்கள் மட்டுமே விரும்பினால் போதாது, எம் மகாராணியும் விரும்பிட வேண்டும். மேலும், நீங்கள் அறியாத ஒரு தகவல் என்னவென்றால், எம் மகாராணியார் பூவிலோகத்தினையும் சேர்த்தே ரட்சிக்கின்றார். எனவே இக்கேள்வி உங்களது மனதில் எழ எவ்வொரு அவசியமும் இல்லை. தன் பிள்ளைகளுக்குள்ளேயே போர் மூழ அவர் என்றும் அனுமதிக்க மாட்டார்.", கோவன்கள் தேடிவந்த தகவல்களை ஒரே மூச்சில் மொத்தமாக் கூறி முடித்தது அம்மரம். அதன் சொல்லைக் கேட்டு விக்கித்துப் போய் நின்றார்கள் கோவன்கள்.

"அதென்ன பூவிலோகம்", விஷ்ணு கேட்க, "உங்கள் பாணியில் பூலோகம்" பதில் கொடுத்தது மையாழி மரம்.

"அவ்வாறெனில், இங்கிருக்கும் மக்களால் பூலோகத்திற்கு ஆபத்து இல்லை என்கிறீர்களா?", சக்தியுடன் சேர்ந்து மற்ற இருவரும் கூட, மையாழி மரத்திடம் ஒரே விஷயத்தை தான் மீண்டும் மீண்டும் கேட்டார்கள். "ஹஹஹஹா. நிச்சயம் இன்னலேதும் ஈடேராது கோவன்களே. உங்களிடம் பொய்சொல்லி எனக்கென்ன பயன்?"

"எவ்வொரு வினாவும் வினவாமலே எம்மனதினை படித்தது போல் பதிலளித்தீரே, அதுவே எமக்கு சந்தேகத்தை விளைவிக்கிறது.", தீவிர யோசனையுடன் எங்கோ பார்த்தபடி விஷ்ணு கூறிட.. மற்ற இருவரும் கூட ஏதோ யோசனையிலேயே ஆம் என தலையசைத்தார்கள்.

"ஹம்.. நீங்கள் இம்முறை வரவளிப்பதை மட்டுமல்ல.. இம்மண்ணில் என் வாழ்நாள் வரையில் மீண்டும் மீண்டும் எத்தனை முறை இவ்விடம் வரவளிப்பீர்கள்? எக்காரணத்திற்காய் வரவளிப்பீர்கள் என்பது வரையில் நானறிவேன்."

"அவ்வாறாயின், யாம் வரவிருக்கும் தகவலை தாம் முன்னமே அறிவீர்கள். அப்படி தானே?", மையாழி மரத்தின் பதிலால் யுவன் சற்று குழம்பிட, "நிச்சயமாக.", எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பதிலளித்தது அம்மரம்.

"தாம் இவ்விஷயம் குறித்து எவ்வாறு அறிவீர்?"

"பலநூறாயிரம் ஆண்டுகள் முன்பாக நான் நிலத்தினில் துளிர்த்த சமயத்தில் இரு சிறுவர்கள் என் வாழ்விடம் விடுத்து என்னை எடுத்து வந்து இவ்விடத்தில் நட்டார்கள். அவர்கள் சொல்லித்தான் நானறிவேன்."

"என்ன? சிறுவர்கள் கூறியா?"

"ஆம்."

மையாழி மரம் கூறிடுவது, நம்பத் தகுந்ததாக தெரியவில்லை அவர்கள் மூவருக்கும். சிறுவர்களின் சொல்லை நம்பி எப்படி இந்த உலகம் ஆபத்தானது இல்லை என நம்புவார்கள் இவர்கள்? ஆனால், நம்பவைத்து இவர்களைத் தெளிவாக்கத்தான் மையாழி மரம் இருக்கிறதே. அவர்களின் மௌனத்தில் இருக்கும் குழப்பத்தைக் கணித்து, ஆவர்கள் கேள்வியைக் கேட்கும் முன்பாகவே பதிலைச் சொல்லிவிட்டது.

"குழம்பிட வேண்டாம் கோவன்களே! அவர்கள் ஒன்றும் சாதாரண மனித பிறவியல்ல.. சிறுவர்களானாலும் பிரபஞ்சத்தின் அதிபயங்கர மாயத்தினை தனித்து நின்று அடக்கியாழும் அதி சக்தி கொண்டவர்கள்."

"யாரவர்கள்?..", சக்தி, ஒற்றை வரியில் வினவிட, "யாரென யானறியேன். ஆனால், இந்நிலத்தைச் சேர்ந்தவர் அல்ல. பூவிலோகத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. மாயவாயில் வழியாக தினம் தினம் என் முன்னே தான் வந்து விளையாடுவார்கள். அவர்கள் அதிகமாக விளையாடுவது, கற்பனையாக பல கதைகள் உருவாக்கியே. அவர்கள் சொல்லிய ஒவ்வொரு கதையும் இன்றும் எம் நினைவினில் ஆழமாக பதிந்துள்ளது. அவர்களின் ஒவ்வொரு கதையும் இந்த பலநூறாயிரம் ஆண்டுகளாக நிகழ்வதை தினம் தினம் உணர்கிறேன். அதில், அறிந்துக் கொண்டதுதான் உங்கள் வரவு குறித்த தகவல்.", நம்பலாமா வேண்டாமா என அம்மூவரும் இன்னுமும் குழம்பி கொண்டிருக்க, "சந்தேகம் ஏதும் வேண்டாம் கோவன்களே! என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம்", என மென்மையாக பதிலளித்தது அம்மரம்.

"அது சரி, இங்கு ஏன் தம்மைப் போன்ற வேறு விருக்ஷமே தென்படவில்லை?", மையாழி மரத்தைப் பார்த்தநொடி தன் மனதினில் உதித்த கேள்வியை விஷ்ணு இப்போதே கேட்டான்.

"நான் தான் சொன்னேனே கோவனே.. எனது பிறப்பிடம் இதுவல்ல. அச்சிறுவர்கள் தான் என்னை எடுத்துவந்து இவ்விடத்தில் நட்டது."

"அது சரி தான்... ஆயின், தாம் கூறியதை வைத்துப் பார்த்தால் பலநூறாயிரம் ஆண்டாக தாம் இங்குதான் வசிக்கின்றீர்கள். தமது சந்ததிகளைக் கூட இவ்விடம் காண இயலவில்லையே? அதான் வினவினேன். மெய்யாகவே இங்கு தம்மை போன்ற வேறு விருக்ஷம் இல்லையா?"

"இல்லை. நிச்சயமாக இல்லை கோவனே. என்னைப் போன்ற ஒரு விருக்ஷம் இந்த ஆதிலோகத்தில் கிடையாது. இங்கு, என்னை போன்ற முதன்மை விருக்ஷசம் நானே."

"அவ்வாறெனில். இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில் தம்மிலிருந்து வந்த விதைகள் மூலமாகக் கூட ஒரு விருக்ஷமும் வளரவில்லையா?", தன் தரப்புச் சந்தேகத்தையும் யுவன் முன்வைக்க, "ஹம். இருக்கலாம். ஒருவேளை, என்னிலிருந்து விதைகள் வந்திருக்கும் பட்சத்தில். ஆனால், இன்றளவும் என்னிலிருந்து ஒரு மலர் கூட மலரவில்லையே", மையாழி மரம் கூறிய பதிலால் உச்சகட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மூவரும், "என்ன? இத்தனை ஆயிரம் ஆண்டாக ஒரு மலரேனும் மலரவில்லையா?", என அதிர்ந்து மேல்நோக்கி நிமிர, உண்மை தான்; அம்மரத்தைச் சுற்றியிருந்த கொடிகளில் மட்டுமே மலர்கள் மலர்ந்திருந்தது.

"ஹம். இல்லை. ஆயின், ஒருநாள் கட்டாயம் மலரும். ஆதிலோகத்தில் பிறக்கும் உயிர்கள், தங்களின் விதிகளை மீறிடும் அக்காலங்களில். விதிமீறலில் ஜனிக்கும் உயிர்களின் விதியானது என்னோடு இணையும் ஏதேனும் ஒருநாளில், என்னிலும் மலர்கள் துளிர்க்கும். என் சந்ததியினரும் ஆதிலோகம் எங்கிலும் பரவிடுவார்கள்.", எனக்கூறி மையாழி-மரம் பெருமூச்சு விட, "விதிமீறல்கள் எனில்? விதிமீறல் என எதை குறிக்கின்றீர்கள் தாம்?", ஏதோ புரிந்தது போல் தீவிர முகபாவத்துடன் வினவினான் சக்தி. அவனது தீவிரத்தை கண்ட பின்பே மற்ற இருவருக்கும் அவன் சிந்திக்கும் கோணம் புறிபட, சக்தியின் அதே தீவிரம் சகோதரர்கள் இருவரையும் தோற்றிக்கொண்டது.

"ஒவ்வொரு லோகமும் ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, விதியின் வர்ணனையாலேயே உருவாக்கப்படும். ஒவ்வொரு விதிமுறைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள், ஒரு உயிர் ஜனிப்பதற்காக உடைக்கப்படும் பட்சத்திலோ.. அல்லது, வேறு ஏதேனும் காரணத்தினால் விதியை மீறும் பட்சத்திலோ அது விதிமீறலாகும். அந்த விதிமீறல் ஒரு லோகத்தினை அதன் அழிவுக்கே கூட அழைத்துச் செல்லும்", என மையாழி மரம் கூறிய அதே நொடியில், கையளவிலான காய்ந்த மலர் ஒன்று கோவன்களின் காலடியில் சருகாகி விழுந்தது.

மூவரும் அதிர்ந்து போன முகத்துடன் அதை நோக்க.. அதை குனிந்து கையில் எடுத்தான் யுவன். இரத்தச்சிவப்பு நிற சூரியகாந்தி மலர் போல், இளநீல நிற மகரந்தத் துகள்களைக் கொண்டிருந்த அம்மலர், பல நாட்கள் முன்னரே மலர்ந்து காய்ந்தது போல் தென்பட, "ஓஹ்! இதை நான் மறந்தே விட்டேன். ஏழு ஆண்டுகள் முன்பாக என்னில் மலர்ந்த முதல் மலர் இதுதான்.", என மையாழி கூறிய பதிலால் வாயடைத்து நின்றார்கள் கோவன்கள். சற்றுமுன் அம்மரம் கூறிய வார்த்தைகள் மூவரின் மனதிலும் மீண்டும் ஒலித்தது. --- ஒவ்வொரு லோகமும் ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, விதியின் வர்ணனையாலே உருவாக்கப்படும். ஒவ்வொரு விதிமுறைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள், ஒரு உயிர் ஜனிப்பதற்காக உடைக்கப்படும் பட்சத்திலோ. அல்லது, வேறு ஏதேனும் காரணத்தினால் விதியை மீறும் பட்சத்திலோ அது விதிமீறலாகும். அந்த விதிமீறல் ஒரு லோகத்தினை அதன் அழிவுக்கே கூட அழைத்துச் செல்லும் ---

"ஏதேனும் விதிமீறலினாலே தம்மில் மலர்கள் மலருமெனில், இது எவ்விதிமீறலின் அடையாளம்? ஏழு ஆண்டுகளுக்கு முன் எதற்காய் இம்மலர் மலர்ந்தது?", யுவன், தன் கரத்தில் ஏந்தியிருந்த மலரினைச் சுட்டிக்காட்டியவாறு எழுப்பிய அதிர்ச்சிக் குரலுக்கு மையாழி பதில் கொடுக்கும் முன்பாகவே, "மலர் மலர்ந்து ஏழு ஆண்டுகளாகிறதெனில்.... அது இன்றுதான் மண்ணில் வீழ்கிறதா?", விஷ்ணுவின் குழப்பக் குரல் அவர்களைக் குறுகிட்டது.

"ஆம், கோவனே! எனது மலர் மலர்வதற்கு மட்டுமல்ல, அது மடிவதற்கு, மண்ணில் சரிவதற்கு, பிஞ்சு அறும்புவதற்கு, அது காயாகி கனிவதற்கு, கனியிலிருக்கும் விதை மண்ணோடு உறவாடுவதற்கு, என் முதல் வாரிசு ஆதிலோகத்தில் தலை நிமிர்வதற்கு!! என அனைத்திற்கும் ஏதேனுமொரு விதிமீறலே காரணமாகி நிற்கும். இம்மலர் மலர்ந்த நேரம்தனில் நிகழ்-"

"எனில்? இக்கணம் இம்மலரானது மண்ணில் வீழ எவ்விதி மீறபட்டிருக்கிறது?", மையாழியின் முழுமையான விடைக்கு முன்பாகவே பதட்டத்துடன் யுவன் வினவ... மரத்தின் பதிலின் மீது கவனம் பதித்திருந்த சக்தி மற்றும் விஷ்ணு, யுவனின் கேள்விக்குப் பின்னரே உணர்ந்தார்கள்; தற்போதும் ஏதோ விதிமீறல் நிகழ்ந்துள்ளதால் தான் இம்மலரானது மண்ணை நோக்கி விழுந்துள்ளது என்பதை.

"எதுவாகவும் இருக்கலாம். ஏன்... வேற்று லோகத்தைச் சேர்ந்த நீங்கள் மூவரும் இம்மண்ணில் பாதம் பதித்து நிற்பதாகக் கூட இருக்கலாம். அதனைக் குறித்து யானரியேன் கோவனே. ஆயின், ஒன்றினை நன்கறிவேன். இம்மலரானது முதன் முதலில் மொட்டாகத் தோன்றிய  நொடியில் எந்த விதியானது மீறப்பட்டதோ, இம்மலர் மலர்ந்து அதன் மூலம் தோன்றும் பிஞ்சானது காயாகி கனிந்து விதையாகி, அது ஒரு உயிராக மண்ணில் தோன்றும் வரையில் மீறப்படும் விதிகளனைதும், மலர், மொட்டாகத் தோன்றிய நேரத்தில் மீறிய விதியுடன் தொடர்புடையதாகவே இருந்திடக்கூடும். அதேநேரம், ஒவ்வொரு விதிமீறலிலும் எனது பங்களிப்பும் நிச்சயம் இனைந்திருக்கும். இவற்றை வைத்துப் பார்ப்பின், இக்கணம், நீங்கள் இவ்விடம் வீற்றிருக்கும் சமயமே இம்மலர் மண்ணில் வீழ்ந்துள்ளது. மொட்டு தோன்றிய சமயமும் அது மலர்ந்த சமயமும் வாடிய சமயமும் நிகழ்ந்த மூன்று விதிமீறல்களுடன் தொடர்புடைய ஏதோ ஒன்றுடன் தாம் மூவரில் எவரோ ஒருவர்- அல்ல, மூவருமே தொடர்பு கொண்டுள்ளீர்கள்.. ஒருவர் மாத்திரமெனில் அவர் தனித்து நிற்கும் சமயம் இம்மலர் வீழ்ந்திருக்க வேண்டும்.", நீண்ட நெடியதொரு விளக்கத்தை கூறி முடித்தப்பின் அமைதியானது மையாழி மரம்.

மையாழி, ஒரேமூச்சில் கூறிய தகவல்கள் அனைத்தையும்  மீண்டும் ஒருமுறை மனதில் ஓட்டிப்பார்த்த பின்பே கோவன்களுக்கு அம்மரம் கூற வருவது தெளிவாக விளங்கியது. "மூன்று விதிமீறல்களுடன் தொடர்புடைய ஏதோ ஒன்றுடன் யாமும் தொடர்பு கொண்டோமா?", சக்தி யோசனையாக தனக்கு தானே கேட்டுக்கொள்ள, "யாம் இவ்விடம் வரவளித்ததே நேற்றைய பொழுதில் தானே?", யுவனும் சிந்தனையுடன் கூற, "இதற்கு முன் நிகழ்ந்த மூன்று விதிமீறல்களும் என்னவென்பதை தம்மால் கூற இயலுமா?", நேரடியாக விஷயத்திற்கே வந்துவிட்டான் விஷ்ணு.



  ✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro