Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

26. நீலி

வனதேசம்..

நில்லாத சலசலப்புடன் நிசப்தமாக ஓடிக் கொண்டிருந்த அந்த மௌனமான ஓடைக் கரையில், இளநீல நிற பனிமலர் பூக்கள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே திடீரென இளஞ்செந்நிற மின்னல் ஒன்று வெட்டியது. தீப்பொறிப் போன்ற அந்த மின்னலுடன், மினுமினுப்புத் துகள்கள் இணைந்து அந்த மின்னலைச் சூழ.. கீற்றாக வந்த மின்னல், மெல்ல மெல்ல ஒரு சுழலாக மாறி சிறியதாக சுழன்றடித்திட... சர்ரென அதனுள் இருந்து வெளிப்பட்டாள் அவள். மாய தேவதை இன தலைவரின் மகள், நீலி. கையளவு உருவுகொண்ட பட்டாம்பூச்சிப் போல், ஜொலிக்கும் நீலநிற ரெக்கைகளைக் கொண்டும், தேன்சிட்டின் வேகத்துடனும் அங்கிருக்கும் மலர்களைச் சுற்றிச்சுற்றிப் பறக்கத் தொடங்கியவள் அந்தச் சுழலைவிட்டு வெளியே வந்ததும் அந்த மின்னலும் சுழலும் தானாகவே மூடிக் கொண்டது.

மாய-தேவதை இனத்தைச் சேர்ந்தவர்களின் இருப்பிடத்தை எவராலும் அவ்வளவு எளிதாகக் கண்டறிய முடியாது. ஒருவேளை, ரட்சகராஜ்ய மக்களோ நிழல்ராஜ்ய மக்களோ இவர்களில் யாரையாவது வனதேசத்தில் பார்த்து, அவர்களைப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு மட்டும் இவர்களின் இருப்பிடத்தை அடையும் அனுமதி கிடைத்துவிடும். அதேநேரம், அவர்களிடம் பிடிபட்ட தேவதை, அவர்கள் கேட்கும் உதவியையும் செய்தே தீரவேண்டும். அதன்படி, இன்று ஒருவருக்கு உதவி செய்திடவே இங்கு வரவளித்திருக்கிறாள் நீலி.

"இங்கு தானே வரச்சொன்னான் அவன். எங்கே காணவில்லை?", சுற்றிலும் எவரையோ தேடியவளுக்கு, தேடிய நபர்தான் கிடைத்தபாடில்லை. என்ன செய்யலாம் என சிந்தனையுடன் சென்று ஒரு மலர் மீது ஜம்மென அமர்ந்துகொள்ள... அதேநேரம், அம்மலரில் தேனெடுக்க வந்தது ஒரு பட்டாம்பூச்சி. சரி இதனிடம் கேட்கலாம் என முடிவெடுத்து அந்தப் பட்டாம்பூச்சியை அழைத்தாள்.

"ஹே! தோழியே! என் நண்பன் அபியை இங்கு எங்கேனும் பார்த்தாயா?"

"....... ... .... ... ......."

"என்ன?? எனில், அப்டியொரு லோகம் மெய்யாகவே இருக்கிறதா என்ன? ம்ம்!! ஆயின், அங்கு ஏன் சென்றார்கள்? அவ்விடம் குறித்து அபி அறிந்திருக்க வாய்ப்பில்லையே"

"... ..... ...."

"ஹான், ஹான். இருக்கலாம் இருக்கலாம். அவன் அறிந்த இடங்களையெல்லாம் நானும் அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லையே. என் இருப்பிடத்தைக் கூடத்தான் எவரும் அறிந்ததில்லை. ஆனால் அவன் அறிந்துக் கொண்டானே! சரி, அதைவிடு. நிச்சயமாகத் தான் சொல்கிறாயா? அங்குதான் இருவரும் சென்றார்களா?"

"... ... .."

".... ம்ம்ம்... சரி, நீ செல். நான் பார்த்துக்கொள்கிறேன்"

"..... ...... ... .... .... ...."

"சரி, சரி. ஏனிந்த சினம். நீ நிம்மதியாக உன் தேனை எடுத்துக்கொள். நானே இங்கிருந்து... இம்மலரின் மீதிருந்து... புறப்படுகின்றேன். இதை பொறுமையாச் சொன்னால் கேட்க மாட்டேனோ?", இறுதி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டாள் நீலி.

இதுவும் இவர்களின் விசேஷ சக்திகளுள் ஒன்றே. ஒரு நபர் ஏதேனும் ஒரேயொரு பூச்சி இனத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். அந்தப் பூச்சியைப் போலவே தங்களின் உருவத்தை மற்றிக்கொள்ளவும் முடியும். அவ்வாறு நீலியின் சக்தி, பட்டாம்பூச்சி இனத்தின் தகவல் பரிமாற்றங்களைப் புரிந்துக்கொள்வதும் அவைகளை போல் உருமாருவதுமே.

அபி, தன்னுடைய பயிற்சியை மேற்கொள்வதற்காக வனதேசத்திற்கு அடிக்கடி வரவளிப்பான். மேலும், நான்கு வயது முதலே அவனின் ஷிவேதனா அத்தை அவனுக்கு கொடுத்த பல புத்தகங்கள் மூலமாக வனதேசத்தின் இரு மாய இனங்களைக் குறித்து அறிந்துக் கொண்டவன் எப்படியோ நீலியைப் பிடித்து மாய தேவர்களின் இருப்பிடத்தையும் கண்டுக்கொண்டான். அப்போதிலிருந்து அவன் மாயதேவதை இனத்தின் மறைவிடத்திற்கு வந்துபோவது வழக்கம்.

இன்று, தீராவிற்கு பயிற்சிக் கொடுக்க உதவிடவே நீலியை அழைத்திருந்தான் அபி. ஆனால், அந்தப் பட்டாம்பூச்சி கூறியது என்னவோ, "அவர்கள் இருவரும், ஆதிலோக வாசிகளால் பூவிலோகம் என்று கூறப்படும் பூமிக்கு, ஒரு மாயவாயிலை உருவாக்கி அதனுள் சென்றிருக்கிறார்கள்", என்பதே. தன்னைத் தேனெடுக்க விடாமல் மலர் மீது அமர்ந்திருந்தவளை அந்தப் பட்டாம்பூச்சி சரமாரியாகத் திட்டியதில் அதனிடமிருந்து தப்பித்து வந்திருந்த நீலி, சரி நாமும் அந்த வாயிலைக் கண்டுபிடித்து பூவிலோகம் செல்லலாம் என முடிவெடுத்து விட்டாள்.

இதுவரையில், மூத்தோர் சொல்லும் கதைகளில் மட்டுமே பூவிலோகம் என்னும் பூமியைக் குறித்துக் கேட்டறிந்தவளுக்கு இப்பொழுது புதியதொரு லோகத்தைக் காண்பதற்கு மனதில் ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் துள்ளிக்குதிக்க.. தீராவினால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த வாயிலைத்தேடி, ஆர்வத்துடன் சென்றாள் நீலி. எப்படியோ, அந்தப் பட்டாம்பூச்சி குறிப்பிட்ட இடத்தை அடைந்திருந்த நீலி, அந்த மாயவாயிலைக் கண்டுபிடித்து அதனுள் சென்றும் விட்டாள்.

அபி பார்த்த அதே காட்சி... அபியிடம் இருந்த அதே அதிர்ச்சி.. பூமியின் அழகில் பிரம்மித்துப் போனாள் நீலி. கண்ணில் படும் ஒவ்வொருக் காட்சியும் அவளுக்கு புதுமையான அனுபவத்தையே அள்ளித்தர... ஆர்வ மிகுதியில் எங்கெங்கோ சுற்றித் திரியத் தொடங்கியிருந்தாள் அவள். இங்கு வந்ததே அபியையும் தீராவையும் பார்க்கத்தான் என்பதையே மறந்தவள், எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்க.. சிறகு போன போக்கில் பறந்தவளை நிறுத்தியது என்னவோ முப்பதடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்ட வரவேற்பு சாளரம் தான்.

ஏதோ பெரும் ராஜ்யத்தின் நுழைவாயில் போலும். அதி அற்புதமான சிற்பங்களையும் நுணுக்கமானச் சித்திர வேலைபாடுகளையும் தன்னுள் தாங்கி நின்ற அந்த பிரம்மாண்ட சாளரம், இயற்கையையும் விடாமல் தன்னுடன் அதனையும் இணைத்துக்கொண்டு பலவண்ண மலர்க்கொடிகளால் தன்னைத் தானே அலங்கரித்து நின்றது. திறந்த வாய் மூடாமல் அதன் ஒவ்வொரு துரும்பையும் ரசித்து ரசித்து வியந்த நீலி, பல நிமிடங்களின் பின் சாளரத்தின் உச்சத்தை அடைய... அதில் சில பழமைத் தமிழ் எழுத்துகள் அவள் பார்வையில் விழுந்தது.

அந்தச் சாளரத்தின் மீது ஒவ்வொரு எழுத்தும் அவள் உறுவைக் காட்டிலும் இருமடங்கு பெரியதாகப் பொறிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி வாசித்தாள் அவள். முழுதாக ஒரு நிமிடம் கடந்திருக்க.. வேந்தன்யபுர சாம்ராஜ்யம் என மொத்தமாக உச்சரித்து முடித்தவள், "உஃப்ப்... ராஜ்யத்தின் பெயரை உச்சரிக்கவே இவ்வளவு நேரமா? சரிதான்", பெருமூச்சு விட்டபடி நொந்துக்கொண்டாள். பூமியின் அழகை, மேற்கொண்டுச் சுற்றிப் பார்ப்பதற்காக பரந்துவிரிந்த வேந்தன்யபுர சாம்ராஜ்யத்தினுள் நுழைந்தாள்.

எங்கெங்கோ பறந்து சென்றவள் இறுதியாக வேந்தன்யபுர அரண்மனையினுள்ளேயே நுழைந்திருக்க... அவளுக்கு முன்பாக இருந்தது மூன்று பெரிய ஓவியங்கள். அதிலிருந்த மூவரின் உருவங்களையும் வேறுபடுத்திக் காட்டியது, சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை என்றிருந்த அவர்களின் மூவ்வேறு விழிகள் தான். அவர்களின் ஓவியத்தின் கீழே, யுவேந்திரன், சக்திவேந்திரன், விஷ்னுவர்தேஷ்வரன் என அவர்களின் பெயர்களுடன் சேர்த்து அனல் கோவன், திரவக் கோவன், கார்க்கோவன், முக்கோவன்களாகிய வேந்தன்யபுர இளவரசர்கள் என மூவரின் முழு புகழும் சித்திர எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.

வேந்தன்யபுர சாம்ராஜ்ய அரண்மனையின் உள்ளேயிருந்த, அந்த நாட்டின் முடி இளவரசர்களான இப்புவியின் காவலர்கள் மற்றும் ஆதிக் கோவன்களின் பிரம்மாண்ட ஓவியத்தின் முன்னிலையில் சிறு புள்ளியெனப் பறந்துக் கொண்டிருந்தாள் நீலி. முதல் படத்தில் நெருப்பு வளையம் சூழ யுவனும் இரண்டாம் படத்தில் நீர் வளையம் சூழ சக்தியும் மூன்றாம் படத்தில் சூறைக்காற்று சூழ விஷ்ணுவும் கம்பீர தோற்றத்துடன் அம்மூன்று பெரும் சக்திகளையும் விரலசைவில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது போல வரையப் பட்டிருந்த ஓவியம், கோவன்களின் முழு ஆற்றலையும் காட்டிடுவதற்கு போதுமானதாக இருந்தது. அம்மூன்று படங்களுக்கு எதிர்பக்கமாக இருந்த சுவற்றிலோ, எட்டு மாவீரர்களின் ஓவியங்கள். அதில் நால்வர், பெரிய தீரா சந்தித்த மூவரும், குட்டி தீரா, மூலிகைக் கூடையுடன் சந்தித்த ஒருவனும்.

கோவன்களின் படங்களைப் போன்றே நிலசக்தி, ஆகாயசக்தி, இயற்கைசக்தி, மேலும் சில மறைவான சக்திகளுடன் வீற்றிருப்பதையும் அதன் கீழ், சஹாத்ய வம்ச சூரர்கள் என எழுதபட்டிருப்பதையும் அவள் கவனித்தாள்.

இவை அனைத்தையும் கண்ட நீலி, "அந்தப் பட்டாம்பூச்சி இது பூவிலோகம் என்றல்லவா சொல்லியது. ஆனால், இவ்வோவியத்தில் இருப்பவர்கள் மாயங்களைக் கையாழ்கிறார்கள்? இங்கும் மாயங்களை உபயோகிப்பவர்கள் இருக்கிறார்களா என்ன? நானறிந்த வரையில் ஆதிலோகத்தில் இப்படியொரு ராஜ்யம் இல்லை. எனில், நிச்சயம் இது பூவிலோகமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், மாயங்கள் இங்கெப்படி?", தீவிரச் சிந்தனையில் இருக்கையிலேயே அவளுக்கு அபியின் நினைவு வந்துவிட.. அப்போதுதான் எதற்காக இங்கு வந்தோம் என்பதையும் நினைவுக் கூர்ந்தாள் அவள்.

"அய்யோ... வந்தக் காரியத்தையே மறக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறதே இவ்விடம். ஹ்ம்ம்... இருப்பினும் நான் மீண்டும் ஆதிலோகம் சென்றாக வேண்டும். சென்றதும், முதலில் என் நண்பனைச் சந்தித்து, இவ்விடம் குறித்து இன்னும் நிறைய வினவ வேண்டும். வாய்ப்பிருந்தால் மீண்டும் வருகிறேன் வேந்தன்யபுரமே! வருகிறேன் கோவன்களே! வருகிறேன் சஹாத்ய வம்ச சூரர்களே! முக்கியமாக கோவன்களே... உங்களுக்காகவே நான் விரைவாக மீண்டும் வருவேன்", சுவற்றின் இருபுறத்திலும் இருந்த ஓவியங்களிடமும் அந்த ராஜ்யத்திடமும் விடைபெற்று, வந்தவழியிலேயே புறப்பட்டுச் சென்றாள் நீலி.

ஒருவழியாக, வேன்தன்யபுரத்தின் அடர்ந்த வனத்தை அடைந்துவிட்டவள், "இவ்வழியாக எங்கோ இருந்து தானே வந்தோம்?", என தலையைச் சொரிந்துக் கொண்டே பறந்துக் கொண்டிருக்க... எப்படி கிடைக்கும் அவள் வந்த வழி? அதான் அனைத்து வாயிலையும் ஒரே மாயத்தால் மூடிவிட்டானே அபி. அது தெரியாமல் அவள் வந்த வழியையே தேடிக்கொண்டிருக்க.. ஆச்சரியம்!! தீராவினால் இறுதியாக திறக்கப்பட்ட மாயவாயில் இன்னுமும் மூடப்படாமல் மகாராணியின் வெண்ணிற சக்தியால் அவளுக்காகவேன திறந்துநின்று வழி கொடுத்தது. அதைக் கண்டவள் முகம் மலர, "நன்றி மகாராணி", உற்சாகமாக சொல்லிவிட்டு அதனுள் நுழைந்தாள் அவள்.

அதேநேரம், அவள் பார்த்துவிட்டு வந்திருக்கும் அந்த ஓவியங்கள் குறிப்பிட்ட அத்தனை புகழுக்கும் உரிய கோவன்கள் மூவரும் இப்பொழுது, பூமியின் சூழலோடு சற்றும் ஒத்துப்போகாத.. வித்தியாசமான சூழலில் விதவிதமாக முளைத்திருந்த வண்ண மரங்கள் நிறைந்திருந்த அவ்வனத்தை, தங்கள் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநேரம் பார்த்து சர்ரென பறந்துவந்த ஒரு குட்டி கல், மூவரில் மூத்தவனான யுவேந்திரனின் தலையைப் பதம்பார்க்கப் பாய... அவன் தலையைத் தாக்க கணப்பொழுது இருந்த நேரம் அது எரிந்து சாம்பலானது. சிவப்பு நிறத்துடன் மின்னும் அவனின் விழிகளிலிருந்து பாய்ந்து வந்த நெருப்பு, அந்தக் கல்லை எரித்து சாம்பலாக்கி இருந்தது.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro