25. மாயம்! மாயம் ! மாயம்!
தன்னைச் சுற்றிலும் இருக்கும் வித்தியாசமான அடர்ந்த மரங்களை, சந்தேகப் பார்வையில் பார்த்தபடி அவ்வனத்தின் வழியே பொடிநடையாக நடந்துக் கொண்டிருந்தான் அபி. இவ்வளவு அடர்த்தியான வனத்தில் மனித நடமாட்டம் இருக்காது என்னும் ஒருவித குருட்டு நம்பிக்கையினாலும்.. மேலும், விலங்கினத்தால் தீராவிற்கு ஒருபோதும் தீங்கு நேராது என்பதாலும் அவன் பெரிதாக அலட்டிக்கொல்லாமல் அவளை அவள் போக்கிற்கே விட்டுவிட்டு பொறுமையாக நடந்துக் கொண்டிருந்தான்.
இது தங்களின் வனதேசம் அல்ல என்பதை அவனால் நிச்சயமாகக் கூற முடியும். இருப்பினும், தீராவிற்கு வனதேசமே புதிதுதான் என்னும் பட்சதில் இது எந்த வனம்? அவளால் எப்படி இவ்விடத்தை மனக்கண்ணில் நினைத்துக்கொண்டு மாய வாயிலை உருவாக்க முடிந்தது? முன்பின் தெரியாத இடம் மனதினுள் உதிக்காது என்கையில் இவ்விடம் எப்படி அவள் மனதில் உதித்தது? ஒருவேளை, இது அவளின் கற்பனையா? கற்பனையெனில், கற்பனையான ஒரு இடம் எப்படி நிஜத்தில் வந்தது? என்னும் பல கேள்விகளுடன் தீராவை தேடிக்கொண்டே அபி நடந்துக் கொண்டிருக்க.. அவன் செல்லும் வழி நெடுகிலும், மாயங்கள் உபயோகித்ததற்கான மந்திரச் சுவடுகள் மினிமினுப்பாகத் தரையில் சிந்திக்கிடந்தது.
"ஹ்ம்ம்.. இவள் எத்தனை முறைதான் மாயவாயிலைத் திறந்தாளோ? எவ்வளவு சுட்டித்தனம்", வாய்விட்டுப் புலம்பிக்கொண்டே தலையில் கைவைத்துக் கொண்டவனுக்கு தீராவின் தளிர் நடையின் கொலுசொலி செவியை அடைய.. ஒலி வரும் திசை நோக்கிச் செவியைக் கூர்மையாக்கிய அபி, அடுத்தநொடியே அத்திசையை நோக்கி வேகமெடுத்தான். சரியாக தீரா இருக்கும் இடத்தை அபி அடைந்தநொடி, அவளின் உயரத்திற்கு ஒரு மாய வாயிலினை உருவாக்கி, குடுகுடுவென அதனுள் ஓடிவிட்டாள் தீரா.
"இவளை", கடுகடுத்துகொண்டே அந்த வாயிலை நோக்கிச் சென்ற அபி, அதனுள் நுழைய முற்பட்ட அதேநேரம், தீராவின் பயமில்லா அலரலுடன் சேர்ந்துக் கேட்ட புதியக் குரலால், மாய வாயிலைக் கடந்து மறுபுறம் செல்லாமல் அப்படியே நின்றுவிட்டான் அபி.
வேறு யாரோ ஒருவர் அங்கு இருக்கிறார். அவருக்குத் தங்களைப் பற்றியும் தங்களின் இருப்பிடம் பற்றியும் தெரிந்திடக் கூடாதெனப் பதறிய அபி, முதலில் தீராவை கவனிக்க முடிவெடுத்துத் தன்னுடைய மாயங்களைக் கொண்டு தீராவின் மாயவாயிலைக் கண்ணாடிப் போல் மாற்றிவிட்டான். அதன் மூலமாக அப்புறம் இருப்பவரைக் காணவும், அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும். ஆனால், மறுபக்கம் இருப்பவரால் அபியைக் காண முடியாது.
தான் உபயோகித்த இந்த மந்திரத்தின் மூலமாக அபி கண்டது என்னவோ ஆறடி மாவீரனாக நிற்கும் ஒரு நபரையும், அவரின் கையில் ஜம்மென சொகுசாக அமர்ந்துக்கொண்டு, ஒரு கரத்தால் தன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே அந்த நபரை முறைத்துக் கொண்டிருந்த தீராவையும் தான்.
மாயவாயிலைத் திறந்துக்கொண்டு வேகமாக ஓடிவருகையில், தனக்கு எதிரே நின்றுக்கொண்டுத் தன் தலையை அவர் காலில் மோதிக்கொள்ளச் செய்த நபரைத் தன்னுடைய முட்டைக் கண்களால் முறைத்துக் கொண்டே அவர் கரங்களில் அமர்ந்திருந்தாள் தீரா. மூலிகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்ததன் அடையாளமாகக் கையில் வைத்திருந்த மூலிகைக் கூடையை ஒரு கையிலும், தீராவை மறுகையிலும் பிடித்திருந்த அந்நபரோ, குழப்பம் குடிகொண்ட பார்வையில் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவு அடர்ந்த வனத்தில் ஒரு சிறுமி? அதுவும், தீடீரென எங்கோ இருந்து வந்து, தன் காலின் மேல் மோதி நிற்கிறாள்? இத்தனைக்கும் அவள் காலில் நிறைசலங்கைக் கொலுசுதான் அணிந்திருக்கிறாள். அவ்வாறு இருக்கையில் தான் எப்படி இவள் வரவை கவனிக்காமல் நின்றிருந்தோம் எனத் தீவிர யோசனையுடன் தீராவையே பார்த்திருந்த அந்த நபர், "யாரம்மா நீ? எவ்வாறு இங்கு வந்தாய்?", மூலிகைக் கூடையைத் தோளிலிருந்து கழற்றிக் கீழே வைத்துவிட்டு, அவளின் குட்டிக் கைகளால் தேய்த்துக் கொண்டிருந்தத் தலையை மெல்லமாகத் தேய்த்து விட்டபடியே கேட்க, "நான் மாய வாயிலைத் திறந்து வந்தேன்", என பதிலளித்தவள், பார்வையை மூலிகை நிறைந்த அந்த மூங்கில் கூடையினுள் செலுத்தினாள்.
அவள் பதிலால் சிறிது அதிர்ந்தும் சிறிது குழம்பியும் காணப்பட்டவன், குழந்தையவள் ஏதோ உளருகிறாள் என அதை அப்படியே விட்டுவிட்டு, "சரி, உன் நாமம் என்ன?", என அவளை நோக்க... அவளோ அதற்கு பதிலளிக்காமல், "அது என்ன?", என, மஞ்சள் வண்ண மூலிகைகள் நிறைந்தக் கூடையினுள் விரலை நீட்டினாள்.
தரையில் இருந்தக் கூடையை நோக்கியவன், "இது, வெட்டுக் காயங்களுக்கு பயன்படுத்தும் மூலிகை.", எனக் கூறிக்கொண்டேத் தன் கையிலிருந்து அவளை இறக்கிவிட்டு, ஒரு மஞ்சள் இலையை எடுத்து அவள் கையில் கொடுத்தான். அதை வாங்கித் தன் இரு கைகளாலும் திருப்பித் திருப்பிப் பார்த்த தீரா, அப்படியே அதை கசக்கிப் பிழிய... அவள் கை முழுவதிலும் பிசுபிசுவென பச்சை திரவம் ஒட்டிக்கொண்டது. அதைப் பார்த்து மெல்லிய சிரிப்புடன் அவளருகில் அரைமண்டியில் அமர்ந்தவன், அவளின் கைகளைத் துடைத்துக் கொண்டிருந்த நேரம், "அடேய்!! யானறியாமல் எப்பொழுதடா ஒரு குழந்தைக்குத் தந்தையானாய்?", போலியான அதிர்ச்சியுடன் கத்திக்கொண்டே, அவனுக்குப் பின்னால் இருந்து வந்தான் மற்றொருவன். காலாவும் மதியும் பூமிக்குச் சென்றபோது அங்கிருந்த பெரிய தீரா பார்த்துச் சிலையாகி நின்ற மூவரில் ஒருவன்.
அவனின் கேள்வியால் முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல், ஒரு குறும்பு சிரிப்புடன், "இன்று தானடா. உன்னிடம் கூறலாம் என்றுதான் உன்னைத் தேடிக் கொண்டிருந்தேன். நல்வேளையில் நீயே வரவளித்தாய்.", என பதில் கொடுக்க.. "ஹஹஹா.. அது சரி..", நண்பனின் சொல்லால் சிரித்துவிட்டவன், "யாரம்மா நீ? தனிமையில் இங்கென்ன செய்கிறாய்?", அவர்கள் இருவரின் அருகிலும் வந்தவன் தீராவை நோக்க, "நான் தீரா. பயிற்சிக்காக மாமாவுடன் வந்தேன். இப்போது, நான் செல்கிறேன்", எனக் கூறியவள், அடுத்தநொடியே ஒரு மாய வாயிலைத் திறந்துக்கொண்டு அதனுள் சென்று மறைந்திருந்தாள்.
இந்நொடி, தங்கள் கண்முன்னே நடந்ததைக் கண்டு உறைந்துப் போனவர்கள், ஓரிரு நொடிகள் கழித்தே அவள் இங்கிருந்து மறைந்ததை கவனித்தார்கள். இப்பொழுது, அவள் எங்கே என்னும் பதட்டம் அவர்களைப் பிடித்துக்கொள்ள, சிறு கொலுசொலி கேட்டதில் பட்டென மேல்நோக்கி நிமிர்ந்தார்கள் இருவரும். அங்கு, ஒரு மரக்கிளையின் மேல் ஜம்மென அமர்திருந்தாள் தீரா.
அதைக்கண்டுப் பதறிய இருவரும், "அட! மரத்தின் மீது என்ன செய்கிறாய் நீ? கீழே இறங்கு", பதட்டத்தில் கத்திய அடுத்தநொடியே மரத்தின் மீதிருந்து தொபக்கென குதித்தாள் தீரா. அவள் செய்கையால் அதிர்ந்து ஓடிச்சென்று அவளைப் பிடித்துக் கொண்டான், மூலிகைக் கூடையுடன் அவளை முதலில் சந்தித்தவன். .
"யார் நீ? இவ்வளவு சேட்டைக்காரியாக இருக்கின்றாய்?", எனக் கேட்டவனின் கையிலிருந்துக் குதித்துக் கீழே இறங்கிய தீரா, "நான் சேட்டைக்காரியல்ல.. தீரா.", என்றாள் அவனை முறைத்துக்கொண்டே. அதன் பின்னரே அவள் மாயத்தை உபயோகித்ததை நினைவுக் கூர்ந்தவன், "அது சரி தீரா, எங்கிருந்து வருகிறாய் நீ?", சிறு கலக்கத்துடனே கேட்க, "நான், வீட்டிலிருந்து வருகிறேன்", என்றவளின் பதிலில், வீட்டிலிருந்தா? எனத் தலையில் கைவைத்து விட்டார்கள் இருவரும்.
"ஆம் வீட்டில் இருந்து தான்"
"சரி, உன் வீடு எங்கிருக்கிறது?", இவ்வளவு நேரமும் அமைதியாக நின்று நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவன், தன் நண்பன் சேகரித்துக் கொண்டிருந்த மூலிகைக் கூடையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டே கேட்டக் கேள்விக்குத் தன் கைகள் இரண்டையும் அகல விரித்துக் காட்டிய தீரா, "அது, தூஊஊஊஊஊரத்தில் இருக்கிறது. நடந்து நடந்து நடந்து நடந்து நடந்து செல்ல வேண்டும். ஆனால், நான் அப்படிச் செல்ல மாட்டேனே! நான், இப்படி மாய வாயில் திறந்து.. இப்படிச் சென்றுவிடுவேன்", என மீண்டும் ஒரு மாய வாயிலைத் திறந்து நேராக வீட்டிற்கே சென்றுவிட்டாள் அவள்.
நடந்த நிகழ்வின் காரணமாக அவ்விருவரும் இமைக்க மறந்து நின்றிருந்த நொடி, "இங்கென்ன செய்கிறீர்கள் இருவரும்?", இருவரின் முதுகிலும் தட்டியபடி அவர்களுக்கு நடுவில் வந்து நின்றான் இன்னொருவன். பெரிய தீரா பார்த்த மூவரில் இன்னொருவன்.
அதிர்ச்சிமாறா முகத்துடன் அவனை நோக்கித் திரும்பிய மற்ற இருவரும், "திடீரென எங்கிருந்தோ வந்தாள்... திடீரென இங்கிருந்து ஒரு மாயமான ஒளியினுள் புகுந்து அந்த மரத்தின் கிளைமீது அமர்ந்திருந்தாள்.. பின், தீடீரென, வீட்டிற்குச் செல்கிறேன் எனக் கூறிவிட்டு அதேபோல் ஒரு ஒளியினுள் சென்று மறைந்துக் கொண்டாள்", தங்களைத் தேடி வந்த நண்பனிடம், இவ்வளவு நேரமும் தாங்கள் கண்டதை விளக்கத் தொடங்க... அதை, முழுவதுமாகக் கேட்டு முடித்தவனோ, 'இவன்களுக்குத் தலையில் அடியேதும் விழுந்து விட்டதா? ஒரே நேரத்தில் இருவருக்கும் எப்படி அடி பட்டது?, என்னும் விதத்தில் பார்வையாலேயே இருவரின் தலையையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையைப் புரிந்துகொண்ட ஒருவன், "என்னடா நோக்குகிறாய்? எமக்கு தலையில் அடியேதும் ஏற்படவில்லை", என சிறு முறைப்புடன் கூற, "அவ்வாறு நோக்காதே... யாம் மெய்யை தானடா பறைகிறோம்", தன் பங்கிற்கும் சேர்த்து அவனை முறைத்தான் மற்றொருவன்.
இதையெல்லாம் மாயவாயிலுக்கு அப்புறமாக இருந்தே கவனித்துக் கொண்டிருந்த அபி, "எப்படியாயினும் இவர்களின் நினைவிலிருந்து தீராவைக் குறித்த நினைவுகளை நீக்கிட வேண்டும். ஆனால், அதற்கு எந்த மாயத்தை உபயோகிக்க வேண்டும்?", என தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தீராவால் உருவாக்கப்பட்டு அபியால் கண்ணாடி போல் மாற்றப்பட்டிருந்த அந்த மாயவாயிலைச் சுற்றிலும் பிரகாசமான வெண்ணிற ஒளி மொத்தமாகச் சூழ்ந்துக் கொண்டிருந்து. அதைக்கண்டு விழியை அகல விரித்த அபி, அந்த சமிங்ஞையை தெளிவாகப் புரிந்துக் கொண்டான்.
நான் செய்ய நினைக்கும் செயலை, செய்ய வேண்டாமென மாகாராணியாரே விரும்புகிறார் எனில் அதில் நிச்சயம் காரணம் இருக்கும், என மனதினுள்ளேயே கூறிக் கொண்டவன், "உங்கள் உத்தரவுபடியே செய்கிறேன் மகாராணி", மானசீகமாக அவரைப் பணிந்துவிட்டு, இதுவரையில் தீராவினால் உருவாக்கபட்ட அனைத்து மாயவாயிலையும் தன் சக்தியைக் கொண்டு ஒட்டுமொத்தமாக மூடிவிட்டுத் தானும் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டான்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro