23. மாய கலைகள் பயிற்சி
ரட்சக ராஜ்யம்...
காலங்கள் கணக்கில்லாமல் நாட்கள் மிக விரைவாகவே நகர்ந்துவிட்டது. ஊர்மக்கள் கணிப்பின்படி, ரட்சகராஜ்யத்தின் வருங்கால இளவரசிகள் இருவரும் படுசுட்டியாகத் தான் இருந்தார்கள். அவர்கள் இருவரும் தவழ்க்க ஆரம்பித்ததும் தான் ஆரம்பித்தார்கள், வீட்டில் இருப்பவர்களின் முழு கவணமும் அவர்களின் மீதே தான் இருக்க வேண்டும் என்னும் நிலை ஆகிவிட்டது. கவனம் ஒருநிமிடம் தவறினாலும் மறுநாளே ஏதேனும் ஒரு பொருளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிலை வந்துவிடும். கைக்கு எட்டும்படியாக ஒரு பொருளையும் வைக்க முடியாது. அப்படியே மறந்து எதையவாது வைத்துவிட்டால் போதும், அடுத்தநாள் அது எந்தத் திசையில், எந்த இடுக்களுக்குள் சென்று ஒளிந்துக் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வைத்த அவர்களுக்கும் கூட.
அன்றும் வழக்கம் போல குட்டி இளவரசிகள் இருவரும் அவர்கள் பாட்டிற்குத் தரையில் எத்தனை அடி நீளம் இருக்கிறது எனக் கைகள் கால்களைக் கொண்டுத் தவழ்ந்துத் தவழ்ந்தே அளந்துக் கொண்டிருக்க.. அப்போதே உறக்கத்திலிருந்து எழுந்துவந்தாள் தாரிகா. இவ்வளவு நேரமும் அபியின் மடிமீது அமர்ந்துக் கொண்டு அவன் செய்யும் சிறுசிறு மாய வித்தைகளை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த தீரா, தன்னுடைய குட்டித் தங்கை எழுந்து வந்ததும், "மாமா... அபி மாமா, நான் தாரியிடம் செல்கிறேன். நான் விளையாட செல்கிறேன்.", அபியின் மடியிலேயே குதிக்கத் தொடங்கினாள்.
"அட... தீரா- எனில், இன்று உனக்கு இடப்பெயர்வு மாயத்தைக் கற்றுக்கொள்ள ஆவல் இல்லையா? சரி, செல். நீ உன் குட்டித் தங்கையுடனும் என் தங்கைகளுடனும் சென்று விளையாடு. நான் மட்டும் தனிமையில் பயிற்சிக்குச் செல்கிறேன். ஹ்ம்ம்", போலியாக கோபித்துக்கொண்டு அவளைத் தன் மடியிலிருந்து தூக்கி முன்னால் நிறுத்தியவன் அங்கிருந்து நகரமுனைய. இரு நொடிகள் தீவிரமாக எதையோ யோசித்தவள் குடுகுடுவென ஓடிவந்து அபியின் முன்பாகக் கைகட்டி, ஒற்றை புருவத்தை உயர்த்தி நின்றாள்.
பதிலுக்கு அபியும் அவளைப் போலவே புருவம் உயர்த்தி என்னவென்றுக் கேட்க, "பயிற்சிக்கு மாலை தானே செல்ல வேண்டும்? இன்னும் காலம் இருக்கிறதே?", அருகிலிருந்த ஒரு மணல் குடுவையைத் தன் பார்வைக் கொண்டு தீண்டியவள், தன் புருவங்களை இன்னும் வளைத்தாள்.
"ஹாஹாஹா.. புத்திசாலி குழந்தை", அபி, குனிந்து அவள் தலையைக் கலைத்துவிட, "அதை நான் அறிவேன்", எனப் பெருமிதம் கொண்டவள், "சரி, சொல்லுங்கள் அபி மாமா.. மாலையாவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது தானே?", மீண்டும் அந்த மணல் குடுவையைச் சுட்டிக்காட்டிக் கேட்டவளை அப்படியே தன் கைகளில் தூக்கி கொண்டவன், "ஹான்.. மாலை ஆவதற்கு இன்னும் காலம் இருக்கிறது தான். ஆனால், மாயங்களை கையாழ்வதற்கு உனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு இப்போதே உன் முதல் பயிற்சியைத் தொடங்கிடச் செல்லலாம் என நினைத்தேன். சரி, நீ சென்று விளையாடு. மாலையே பயிற்சிக்குச் செல்லலாம்", சொல்லி வாயை மூடவில்லை அவன், "நன்றி மாமா", அவன் காதிலேயே கத்திவிட்டு அவனிடமிருந்துக் குதித்து ஓடிவந்து, மூன்று பொடி வாண்டுகளுடன் இணைந்துக் கொண்டாள் தீரா.
முதலில், குட்டி வாண்டுகள் மூவரும் சமத்தாகத்தான் அவர்கள் மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எப்போது தீரா அவர்களுக்கு மத்தியில் வந்து அமர்ந்தாளோ, ரக்ஷாவிற்கு அதற்குமேல் சமத்தாக இருக்க முடியவில்லை போலும். தீராவிற்கு பின்பக்கமாக தவழ்ந்துச் சென்று அவள் முதுகைத் தன் தலையால் இடிக்க.. தன் தங்கை செய்வது போலவே தானும் செய்வேன் என மாயா, முன்பக்கம் இருந்து இடிக்க... அக்காவை முட்டி முட்டி விளையாடும் இருவரையும் பிடித்து இழுக்கும் முயற்சியில் இறங்கினாள் தாரி.
தீரா, தன்னை முட்டித் தள்ளும் இருவரிடம் இருந்தும் என்னதான் விலகி விலகி அமர்ந்தாலும் ஆசையாக விளையாட வந்தவளிடம் ஆசைத்தீர விளையாடிக் கொண்டிருந்தார்கள் சேட்டைக்கார இளவரசிகள் இருவரும். நேரம் ஆக ஆக தாரியும் அவர்களுடன் இணைந்துக் கொண்டு தன் சகோதரியை தன்னுடைய பிஞ்சுக் கைகளால் அடித்து விளையாடத் தொடங்கிவிட்டாள்.
அவளுக்கு வந்தக் கோபத்திற்கு வேறு யாராவதாக இருந்திருந்தால் ஒரே அடியாக அடித்துப் போட்டிருப்பாள். ஆனால், இவர்களோ தீராவின் பாசமான குட்டி பொம்மைகள் ஆயிற்றே! அடிக்க மனம் வராமல் ஓவென அழுதுக்கொண்டே எழுந்து அபியிடம் ஓடிவிட்டாள்.
"ஹும்ம்ம்ம்ம்.... மாமா... மாஆஆஆமாஆஆஆ.... அபி மாமாஆஆஆஆ", எனக் கத்தியபடி அபி இருக்கும் அறையினுள் ஓடியவள், வலிக்கவே இல்லை என்றாலும் வழியாதக் கண்ணீரை வரவைக்கத் தன் கண்கள் இரண்டையும் கசக்கிக் கொண்டே அபியை பிடித்துக்கொண்டு, "மாமா.. அவர்கள்.. அவர்கள், என்னை அடிக்கிறார்கள். அவர்கள் இப்படி-இப்படி அடிக்கிறார்கள்", இருமுறை அவனை முட்டியும் காட்டி, அபியின் கையைப் பிடித்துத் தொங்கினாள். "யாரது? யார் அடித்தது என் செல்லக் குழந்தையை?", யாரென்பது தெரிந்திருந்தும் போலிக் கோபத்தில் கத்திக்கொண்டே அவளை அழைத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான் அபி.
"அவர்கள் தான் மாமா", தரையில் இருக்கும் மூன்று வாண்டுகளையும் தீரா சுட்டிக்காட்ட... இப்போது சமத்தாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் மூவரும்.
"அவர்களா? ஹாஹா.. அவர்கள் அடித்தது உனக்கு வலிக்கிறதா என்ன?"
"ம்ம்ம்.. வலிக்கிறது. எனக்கு அவர்கள் வேண்டாம்", கோபமாக முகத்தை சுருக்கிக் கொண்டாள் தீரா.
"வேண்டாமா? எனில், அவர்களை வெளியே அனுப்பி விடலாமா?"
"உம்ம்ம்ம்?", முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு அவள் அபியை நோக்கிட, "சொல் தீரா. அவர்களை வெளியே அனுப்பி விடலாமா?", கள்ளச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான் அபி.
"இல்லை, இல்லை வேண்டாம். அவர்கள் சிறியவர்கள். எங்கேனும் தொலைந்து விடுவார்கள்", அபி கேட்டதற்கு அவசர அவசரமாக மறுப்புத் தெரிவித்தாள் அவள். இல்லையென்றால் மூவரையும் தூக்கிச்சென்று ராகவியிடம் கொடுத்து விடுவானே.. பிறகு, இவள் யாரை வைத்து விளையாடுவாள்?
அவள் வேகமாக மறுத்ததைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், "அப்படியென்றால்? அவர்கள் இங்கேயே இருக்கட்டும். நாம் வெளியே செல்லலாமா?", அவள் முகத்திற்கு நேராக குனிந்து நின்று அபி கேட்க, "உம்ம். செல்லலாம்", மூஞ்சூறு குட்டியைப்போல் சுருங்கிய அவளின் முகம், அவள் இன்னுமும் கோபமாக இருப்பதாகக் கூறியது. "ஹாஹாஹா.. அதற்கு ஏன் உன் முகம் இப்படிச் செல்கிறதாம்?", அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், தன் வலது கை விரலைச் சொடுக்கிட.. நீளமாக ஒரு கோடு வந்து நீல நிற வாயிலாக விரிந்தது. அபி கிள்ளியத் தன் மூக்கைத் தேய்த்துக் கொண்டே அவனை முறைத்துப் பார்த்தபடி, முதலில் தீரா அந்த வாயிலினுள் செல்ல.. அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான் அபி.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro