22. உறவுசங்கிலி கதை
ஓராண்டுக்குப் பிறகு....
தன் மகனுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய புத்தகத்தின் இறுதி பக்கங்களைத் தன்னறையில் அமர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்த ஷிவேதனாவை, திடீரென எங்கிருந்தோ வந்து பின்னிருந்து அனைத்துக் கொண்டான் ஆறு வயது ஷேனா. மகன் வெளியே சென்று பத்து நிமிடமே ஆகியதால் அவன் வரவை இவ்வளவு விரைவாக எதிர்பார்த்திராத ஷிவேதனா, ஒருநொடி திடுக்கிட்டாள்.
"ஷேனா... இப்படியா அன்னையை அச்சமூட்டுவாய்?"
"ஹாஹாஹா... அம்மா பயந்துவிட்டார்.. அம்மா பயந்துவிட்டார்... ஹே! ஹே! அம்மா பயந்துவிட்டார்...", கைத்தட்டிக் குதியாய்க் குதித்த மகனை முதுகில் தட்டித் தன் மடியில் இழுத்து அமரவைத்த ஷிவேதனா , "குறும்புக்காரா... இப்போது தானே புறப்பட்டுச் சென்றாய். அதற்குள் வந்துவிட்டாய்?", புன்னகையுடன் வினவ, "அம்மா.. தந்தையைக் காணவில்லை அம்மா.", மகனின் சொல்லை விசித்திரமாக நோக்கினாள் அவள்.
"காணவில்லையா? அவர் எங்கே செல்லப் போகிறார்?"
"நான் அறியேன். ஆனால், தந்தையைக் காணவில்லை. அதனால், உங்களிடமே வந்துவிட்டேன். நேற்று நீங்கள் எனக்குக் கதைச் சொல்வதாகச் சொன்னீர்கள் அல்லவா? தொலைந்துப்போன அந்தப் புத்தகத்திலிருந்தக் கதையைச் சொல்லுங்கள் அம்மா. இந்த உறவு சங்கிலியை உருவாக்கியவரின் கதைதானே அது?", தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை ஆசையுடன் பார்த்துக்கொண்டே ஆர்வமாக கேட்டான் ஷேனா.
"ஆம் கண்ணா. ஆனால், சற்று பொறுமையாக இரு. இந்தப் புத்தகத்தை முடிக்க இன்னும் நான்கு பக்கங்களே உள்ளது. இதை முடித்தப்பின் உனக்குக் கதையைச் சொல்கிறேன். சரியா?"
"சரி அம்மா. விரைவாக இதனை முடித்துவிட்டு வாருங்கள்", என்றவன், அன்னை செய்பவற்றை உள்வாங்கிக்கொண்டே, கதைக் கேட்பதற்கு ஆர்வம்கொண்டு அவர் மடிமீது அமர்ந்திருந்தான். சில நிமிடங்களிலேயே அந்த நான்கு பக்கங்களையும் உருவாக்கி முடித்த ஷிவேதானா, மொத்தக் காகிதங்களையும் ஒன்றாகச் சேர்த்து அடுக்கி வைக்க, "அம்மா. உங்களின் அனைத்து வேலையும் முடிந்துவிட்டதா? எனில், எனக்கு இப்பொழுதே கதையைச் சொல்லுங்கள். தொலைந்துப்போன அந்தப் புத்தகத்திலிருந்தக் கதை", அன்னை மடிமீது வாகாய் படுத்துக்கொண்டு மீண்டும் கதைக் கேட்கத் தயாராகிவிட்டான் அவன் .
அப்போதே முடித்துவைத்த அந்த புதிய புத்தகத்தை முழுவதுமாக இணைத்தவள் அதனை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, மடியில் கிடக்கும் மகனுக்குத் தட்டி கொடுத்தவாரே பேச்சைத் தொடர்ந்தார் .
"அது ஏன் ஷேனா!? உனக்கு அந்தக் கதை மீது மட்டும் இத்தனை ஆர்வம்?"
"அதை நான் அறியேன் அம்மா. ஆனால், அந்தக் கதையானது இந்த உறவு சங்கிலி குறித்தக் கதைதானே? எனக்கு இதை மிக மிக பிடித்திருக்கிறது. எனில், அந்தக் கதையும் எனக்கு மிக மிக பிடிக்கும். அதனாலேயே தான் நான் அதனை விரும்பிக் கேட்கிறேன்"
"ஓஹோ! அப்படியா விஷயம். என் ஷேனாவிற்கு உறவுசங்கிலியின் மீது இத்தனைப் பிரியமா? அப்படியென்றால் சரி, என் செல்ல ஷேனாவிற்கு அவன் கழுத்தில் கிடக்கும் மாய சங்கிலியான உறவு சங்கிலியின் கதையை நான் இப்போதே சொல்கிறேன்.. கேள். இந்த உறவு சங்கிலி, மிக மிக மிக மிக மிக தூஊஊஊஊரமாக இருக்கும் பிரியமான உறவுகளையும் அவர்களின் மனங்களையும் இணைப்பதற்காகவென முற்காலங்களில் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கிடுவது எளிமையான காரியம் தான். ஆனால் இதனை முதன் முதலில் உருவாக்கியதுபோல் இன்று வரையில் யாராலும் உருவாக்க முடியவில்லை"
"ஏன் அம்மா!?"
"ஏனெனில், முதன் முதலில் உருவாக்கிய உறவுசங்கிலி, அனைத்திலும் விசேஷமானது. அனைத்திலும் தனித்துவமானது. அதனால்தான் அதை யாராலும் இன்று வரையில் செய்ய முடியவில்லை"
"ஹான்!? ஆனால் ஏன் அம்மா? முதன் முதலில் உருவாக்கியவர் அதை எப்படிச் செய்ய வேண்டுமெனப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கவில்லையா?"
"இல்லை, ஷேனா. அவரிடம் கேட்பவர் அனைவருக்கும் அதனைக் கற்றுத்தான் கொடுத்தார். ஆனால், அவர் செய்த அளவிற்கு அதீத சக்தி உடையதாக வேறு எந்த உறவு சங்கிலியும் வரவில்லை. ஏனெனில், அதன் செய்முறை அத்தகையது! நமக்குப் பிரியமான ஒருவரின் நினைவுகளையும் அவர்களின்மேல் நாம் வைத்திருக்கும் உண்மையான பிரியத்தையும் மனதில் நிறுத்திக்கொண்டு, தூய மாயங்களைச் சிவப்பு ரத்தினத்தினுள் செலுத்தித்தான் இதனைச் செய்யவேண்டும். ஆனால், இதனை முதன் முதலில் உருவாக்கிய நபர், தன் பிரியமானவர் குடிகொண்டிருக்கும் நினைவுகளையும் அவர்கள் மீது கொண்ட பிரியத்தையும் தன் மனதில் அளவுக்கடந்து நிலை நிறுத்திவிட்டார். அதனால், அவரின் இதயத்துடிப்பையும், மனதின் சிந்தனைகளையும் அவரறியாமல் மொத்தமாகவே அந்தச் சங்கிலியினுள் இணைத்துவிட்டாராம். அதனால், அவரின் உயிர் அந்தச் சங்கிலிக்குள்ளும் இணைந்து இருந்தது. அது, அவரின் பிரியமானவரைப் பலமுறை காத்தது. அதேபோலான வேறொரு உறவுச்சங்கிலியைச் செய்ய பலரும் பல முயற்சிகள் செய்தார்கள். ஆனால், வேறு எவராலும் அந்த அளவிற்குத் தனக்கு பிரியமானவர்களை மனதில் ஒருநிலைப் படுத்த முடியவில்லை. அதனால், அவர் மாய்ந்தப் பின்னரும் அவரின் உயிரும் நினைவும் அவர் கைப்பட செய்த அந்த தனித்துவமான முதல் உறவு சங்கிலியில் மட்டும்தான் இன்று வரையிலும் உயிர்த்து நிற்கிறதாம்"
"வ்வாஆஆஆஆ!! யாரம்மா அவர்? அந்தச் சங்கிலிதான் இதுவா?", ஷேனா, தன் கண்ணில் ஆர்வம் மின்ன அன்னையிடம் கேட்டுக் கொண்டிருக்க. மகனின் கேள்வியால், இந்த உறவுசங்கிலியானது முதன்முறையாக ஷேனாவிடம் செல்லும்பொழுது நடந்த நிகழ்வுகள் ஷிவேதானாவின் மனக்கண்ணில் ஓடக்கிளம்பிய அதேநேரம், 'ஷ்ருஷ்யத்' இங்கே தனியொரு அறையில், ஷேனாவினால் காணவில்லை எனச் சொல்லப்படும் புத்தகத்தை விரித்துவைத்த நிலையில், அதில் இருந்த உறவுசங்கிலியின் படத்தினையும் அதைக் கையில் ஏந்தி நிற்பவனின் முகத்தினையும் தாளின் கீழ்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த பெயரினையும் படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் இருளரசன் .
தன் கழுத்தில் கிடப்பதுதான் அந்த முதல் உறவுசங்கிலியா? அதை உருவாக்கியவர் யார்? எனக் கேள்விக்கேட்டு ஷேனா தன் அன்னையை வியந்துநோக்க, "இல்லை, ஷேனா. இது அவரின் சங்கிலி இல்லை. அவரின் சங்கிலி, பல காலங்களுக்கு முன்னரே தொலைந்துவிட்டது. ஒருவேளை, அது மீண்டும் கிடைத்தாலும் அதனை உபயோகிப்பதற்கு அதை உருவாக்கிவர் இருக்கவேண்டும் அல்லது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அவர்கள் இருக்க வேண்டும். இருவரில் ஒருவர் சங்கிலியுடன் இருந்தால்தான் அதை உபயோகிக்க முடியும். ஆனால், இருவருமே பல காலங்களுக்கு முன்னரே மரணித்து விட்டார்கள் ஷேனா", மகனின் கேள்விக்கு ஷிவேதனா பதில் கொடுத்து முடிக்க, "ஹோ! எனில், அவர்கள் மீண்டும் வர முடியாதா அம்மா?", சோகமான குரலில் கேட்டான் ஷேனா. அவனது சோகத்திற்கு காரணம் என்னவென்பது ஷிவேதனாவிற்குத் தெளிவாக புரியவில்லை.
"சரி, அதை விடு. இது வெறும் கதை தானே? இப்போது உனக்குக் கதை வேண்டுமா வேண்டாமா??"
"ஹான்ன்ன்ன்ன்.. வேண்டும்ம்ம்ம்ம்ம்! சொல்லுங்கள் அம்மா. எனக்குக் கதை வேண்டும்"
"ஹாஹாஹா. ஹ்ம்ம். உன்னை இப்படித்தான் இனிமேல் கட்டுப்படுத்த வேண்டும் போலும். சரி, உனக்கு நான் முன்பே ஆதிகால கதையச் சொல்லியிருக்கிறேன் தானே?"
"ஹான். அங்கேதானே அந்தக் கொடிய அரசன் அந்க்காரனும் அன்பான அரசி ஆதியும் வாழ்ந்தார்கள். அவர்களின் கதை தானே அம்மா?"
"ஆம், ஷேனா. அவர்கள் கதைதான். அதில், இந்த உறவுசங்கிலியை உருவாக்கிய நபரைத் தன் கைப்படவே உருவாக்கியது அந்தக் கொடிய அரசனான அந்த்காரன் தான்"
"ஹான்! அவரா?"
"ம்ம். அவரே தான். ஒருநாள், தன்னுடைய சக்திகள் மொத்தத்தையும் ஒன்றுதிரட்டிய அந்தக்காரன், தன்னிடம் நல்ல குணங்கள் அதிகம் உள்ளதா தீய குணங்கள் அதிகம் உள்ளதா என ஆராய்ந்தான். அதில், அவனுக்கே அதிர்ச்சியளிப்பதுபோல் நல்ல குணங்கள் தான் அதிகமாக இருந்தது."
"நல்ல குணங்களா? பிறகு ஏன் அவர் அத்தனைக் கொடிய அரசனாக இருந்தார்?"
"அதே சந்தேகம் தான் அவருக்கும். இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தும் ஏன் யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை? ஏன் கொடுமைக்காரன் என்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தித்த அரசன், தன்னைத்தானே நீரில் பார்த்துக்கொண்டானாம். தன்னுடையக் கொடூரமான ரூபத்தை நீர்-பிரதிபளிப்பில் பார்த்தவன், இந்த உருவத்தைத் தான் அனைவரும் வெறுக்கிறார்கள். கொடூர குணங்களால் எனக்கு இந்த ரூபமே நிலைத்து விட்டது. என்னுடைய நன்மையின் ரூபம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும், எனத் திட்டம் தீட்டிய அரசன், தன்னிடம் உள்ள மொத்த நற்குணங்களையும் ஒன்றுதிரட்டி, தனக்கு சமமான மாய ஆற்றல்களை அந்த நன்மையின் ரூபத்திற்கு அளித்து, அவனை ஒரு செயற்கை மனிதனாக உருவாக்கினான். தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவன் (உருவாக்கப்பட்டவன்) என்பதால் அவனுக்கு ஷ்ருஷ்யத் என பெயரிட்டான். அந்த ஷ்ருஷ்யத் தான் இந்த உறவுசங்கிலி கதையின் நாயகன். முதன்முதலில் உறவு சங்கிலியினை உருவாக்கியவன்", உறவுசங்கிலி நாயகன் உருவாகிய கதையை கூறிவிட்டு, அடுத்ததாக அவன் உறவுசங்கிலியை உருவாக்கிய கதையைக் கூறிடுவதற்குச் சற்று இடைவெளி விட்ட அந்தநேரம், அவள் மடிமீது வாகாகப் படுத்தபடி அன்னையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஷேனா, படக்கென எழுந்து அவள் தொடை மீது அமர்ந்தான். திடீரென அவன் முகம் ஒருவித பயத்தில், படபடப்பில், இருள் சூழ்ந்திருக்கும் வாயிலை நோக்கி மின்னல் வேகத்தில் திரும்பியது .
"என்னானது ஷேனா?", மகனின் தீவிரம் தாயையும் தொற்றிக்கொள்ள, "அம்.. அம்மா, தந்தை என்னை அழைக்கிறார். நான் செல்கிறேன். உறவு சங்கிலியைப் பற்றி பிறகு எனக்குச் சொல்லுங்கள்"
"ஆனால், அரசரைக் காணவில்லை என்றாயே? அட கண்ணா.. ஷேனா நில். அவர் குரலெதுவும் என் செவியை அடையவில்லை?", ஷிவேதனா இங்குக் கத்திக் கொண்டிருக்க... ஷேனாவோ, விறுவிறுவென வாயிலை நோக்கிப் பாதி நடந்தும் பாதி ஓடியும் என அந்த இருளுக்குள் மறைந்துவிட்டான். மகன் சென்ற திசையை நோக்கி பெருமூச்சு விட்டுக்கொண்ட ஷிவேதனா, "இவன் செவித்திறன் கூர்மையாக இருக்கின்றதா? இல்லை, எனக்கு வயோதிகம் கூடிக்கொண்டேச் செல்கிறதா?", தனக்குத்தானே வியந்துக்கொண்டாள் ஷிவேதனா.
இருளரசனின் குரல் எவ்வழியாக வந்தது என்பதைக் கணக்கச்சிதமாகக் கண்டறிந்து, இருளுக்குள் மின்னலாகி ஓடிய ஷேனா, மூச்சிரைப்பதை மறைத்து அவர் முன்பாக நிலத்தை நோக்கி நின்றான். முகத்தில் ஏதோ புதுவித பிரகாசத்துடன் ஒரு புத்தகத்தில் இருந்து சிலபல பக்கங்களை பரட் பரட்டென கிழித்து, அதனை ஷேனாவின் கையில் கொடுத்த இருளரசன், "ஷேனா... உடனடியாக வனதேசம் செல். சென்று, இதிலுள்ள பொருட்களை சேகரித்து வா", என அந்தப் பக்கங்களை அவன் கையில் ஒப்படைத்தவர், "நன்றாக நினைவில்கொள் ஷேனா., சரியாக உச்சிவேளை (மதியவேளை) தொடங்கி அரை ஜாம நாழிகையில், இம்மூலிகை இலைகளையும் மலர்களையும் நீ எடுத்து வரவேண்டும். அதன் முன்பும் எடுக்கக் கூடாது; தாமதமும் ஆகிட கூடாது. நினைவில் நிறுத்திக்கொள்.", கடுமையான குரலுடன் அவனை உடனடியாக வனதேசம் புறப்படுமாறு பணிந்தார். வேறு வழியில்லாமல் அவருக்குத் தலையை அசைத்தவன் அங்கிருந்து புறப்பட.. அவன் அங்கிருந்து சென்றதும், ஷேனாவிடம் இருந்து திருடப்பட்ட அந்தப் புத்தகத்தில் மீதமிருந்த தாள்களைப் பக்கம் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த இருளரசன், "ஷ்ருஷ்யா! என்ன நேரினும் சரி; உன் வாழ்க்கைச் சக்கரத்தினை மீண்டும் சுழல்வதற்கு நான் என்றும் அனுமதியேன்", என மெல்லமான குரலில் கர்ஜித்தவாறே அந்தப் புத்தகத்தில் இருக்கும் நபரின் முகத்தில் ஓங்கிக் குத்தித் தனதுக் கோபத்தினை வெளிக்காட்டினார் இருளரசன் .
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro