19. காலத்தின் சங்கமம்
அந்தக் காட்டின் வழியாகக் கால் போனப் போக்கில் நடந்துக் கொண்டிருந்த தீராவை திடீரென ஒரு காட்சி ஈர்க்க.. 'இந்தக் காட்டுக்கு நடுவுல இப்படி ஒரு கோட்டையா??.. இத்தன வருஷமா என் கண்ணுல சிக்கல?' என வாய்விட்டுச் சொல்லாதக் குறையாக, ஒரு குழப்பப் பார்வையுடன், அங்குத் தெரியும் பிரம்மாண்டக் கோட்டைக்குள் காலடியை எடுத்துவைத்தாள் அவள். வெளியிலிருந்து பார்க்க வேண்டுமானால் பாழடைந்தக் கோட்டைப் போல் தெரியலாம். ஆனால், உள்ளுக்குள்....
கண்ணைப் பரிக்கும் பிரம்மாண்டக் காட்சியுடன் சுவறெங்கும் ஓவியங்களைச் சுமந்து நின்றது அந்தக் கோட்டை. அவற்றில் ஒவ்வொரு ஓவியமாக அவள் பார்த்துக்கொண்டே வர, சட்டென ஒரு ஓவியத்தில் நிலைக்குத்தி நின்றது அவளின் பார்வை. அதில், சற்றுமுன்பு அவள் பார்த்த அந்த மூன்று மருத்துவர்களும், ராஜா-காலத்து ஆடையை அணிந்துக்கொண்டு ஆளுக்கு ஒரு மூலிகைச் செடி என, வண்ண வண்ண மூலிகைகளைக் கையில் வைத்துக்கொண்டு நிற்க.. அவர்களுடனேயே இன்னும் சிலரின் ஓவியங்களும் அங்கே வரையப் பட்டிருந்தது. அம்மூவரையும் நேரில் பார்த்தபொழுது எப்படி பே'வென நின்றாளோ, அதேபோல் தான் இப்போது அந்த பதினொரு பேர் நிற்கும் ஓவியத்தையும் பார்த்து நிற்கிறாள் தீரா.
"எல்லாரும் அப்டியே இருக்கீங்க டா.. ஆனா உங்கள ஏன் இந்தக் கோட்டைல வரஞ்சு வச்சுருக்காங்க?", அந்த ஓவியங்களுடன் அவள் வாய்விட்டே பேசிக் கொண்டிருக்க, "யார் நீயிர்??..", வெற்றறையில் திடீரென ஒலித்த கம்பீரக் குரலால் திடுகிட்ட தீரா, சுற்றிலும் நோக்கினாள்.
"கூறிடுங்கள் தேவி.. யார் நீயிர்? எம் கோவன்கள் மற்றும் சூரர்களின் ஓவியங்களை ஏன் இப்படி நோக்குகிறீர்கள். அவர்களைக் குறித்து எவ்வாறு அறிவீர்கள்??", அக்குரல் அதன்பாட்டிற்குத் தன் கேள்வியை அடுக்க.. சுற்றிச்சுற்றித் தன் பார்வையை சுழற்றி, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரைத் தேடிக்கொண்டேதான் இருந்தாள் தீரா.
"சுற்றிலும் எதை நோக்குகிறீர்? யான் தம் முன்னேயேதான் வீற்றிருக்கிறேன்.", மீண்டும் தீரா சுற்றிலும் நோக்கிட... குரல் மட்டும் தான் வந்ததே ஒழிய எவரும் தென்படவில்லை.
"ஹோய்!.... யார்ரா நீ..??.. எங்கருக்க??.."
"அஹ்ஹ்!! என்னக் கொடிய மொழி இது?? சற்று கீழே குனிந்து நோக்கிடும் தேவி...", தீராவின் இனிய தமிழால் கடுப்பாகிய அக்குரல், சலிப்புடன் கூற.. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கீழே குனிந்துப் பார்த்தவள், "எங்க? ஒண்ணுமே காணும்?", எனத் தரையைத் தன் பார்வையால் அளக்கத் தொடங்கிய நொடி, "ஆஹ்... என்ன உரையாடுகிறீர்கள்? நான் இங்கேயே.. தங்களின் கண்முன்னேயே தான் வீற்றிருக்கிறேன்", மீண்டும் கடுப்புடன் ஒலித்த அக்குரலை அடுத்த நொடியில் கண்டுபிடித்துவிட்டாள் தீரா. ஒரு விரல் அளவுக்கே உள்ள வாலிபன் அவன்.
"யார் நீ?", அவனை பார்த்த அடுத்த நொடியில் தீராவின் குரல் கர்ஜனையாக ஒலிக்க, "நான் யாரென்பது இருக்கட்டும். முதலில், தாங்கள் யாரெனக் கூறுங்கள் தேவி.. தங்களுக்கும் எம் இளவரசர்கள் மற்றும் தளபதிகளுக்கும் என்ன சம்பந்தம்", அவளுக்குச் சளைக்காமல் ஒலித்தது அவனின் குரல். அதேநேரம் அவன் கை, அந்தப் பதினொரு பேர் கொண்ட ஓவியத்தைச் சுட்டிக்காட்ட, "அவர்கள் என் சகோதரர்கள்", தன் தோரணையில் உள்ள கம்பீரம் குறையாமல் பதில் கொடுத்தாள் அவள்.
"சகோதரர்களா?", அவன் குரல் சந்தேகமாக ஒலிக்க, "ஆம்.. நான் அவர்களின் சகோதரி தீரா.", அவள் குரல் ஓய்ந்தநொடி, வாயடைத்து போய்விட்டான் அவன்.
"தீரா!!!.. மெய்யாகவே தாம் தான் அவளா?.. ஆனால் அவள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவள் ஆயிற்றே!"
"ஆம்.. என் வயது கிட்டத்தட்ட ஐயாயிரத்தைத் தாண்டித்தான் இருக்கு.. அதற்கென்ன?", அவள் கேட்ட நொடியில், மயங்கி விழாதக் குறையாகத்தான் நின்றிருந்தான் அவன். ஆம், தீராவின் வயது ஐயாயிரத்தைக் கடந்ததுதான். அதை இவனிடம் தைரியமாக அவள் ஒப்புக்கொள்ளக் காரணம், இவன் சாதாரண மனிதன் கிடையாது என்னும் அவளின் நம்பிக்கையே. விரல் அளவு உருவத்தில் இருக்கிறான் என்றால் இவன் நிச்சயம் சராசரி மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவித்து பழகியவனாகத்தான் இருக்க முடியும். மேலும், கிட்டத்தட்ட அவளுக்கு நான்கு வயது இருக்கும்பொழுது பழகிய நபர்களின் ஓவியங்களைக் காட்டி, யாரோ கோவன்கள் சூரர்கள் என அவனுக்கு பழக்கப்பட்டவர்களைப் போல் பேசுகிறான் என்றால் இவனுக்கே அவர்களைத் தெரிந்திருக்கிறது. அப்படிப் பார்க்கையில், அவன் வயதும் நிச்சயம் சில ஆயிரங்களைக் கடந்துதான் இருக்கும். அதனால் அவனிடம் தன் வயதை அறிவிப்பது ஒன்றும் குறையல்லவே.
"அது எப்படி சாத்தியம்?? ஆனால்... ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்பெயரை அவர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். எனில்!, கோவன்களும் சூரர்களும் ஓய்வுக்காலம் முடிந்து வந்தபோது அடிக்கடிக் குறிப்பிட்ட சிறுமி தாங்கள் தானா?? ஓஹ்!", என எழுந்துக்கொண்டவன், தீராவின் கால் மீது எம்பிகுதித்து.., "பணிகின்றேன் தேவி. யான் சேவன். தம்மைக் குறித்து எம் இளவரசர்களும் தளபதிகளும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பு யான் ஒரு சாதாரன மனிதன் தான். சாகாவரம் பெற்றதுடன் இந்த சிறிய உருவிற்கு மாறி ஐயாயிரம் ஆண்டுகளாக இங்கு தான் வாழ்ந்து வருகிறேன். கோவன்கள் மற்றும் சூரர்களின் மறுபிறப்பில் தொடரவிருக்கும் போர் குறித்து அவர்களுக்கு நினைவுக் கூறவும்... போரில் அவர்களுக்கு துணை நிற்கவும்தான் யான் இன்றளவிலும் வாழ்ந்து வருகிறேன்", என பணிவுடன் கூறி நிற்க, "எதே? மறுபிறப்பா? ஆமா, அது என்ன போர்? ஜென்ம ஜென்மமா தொடர்ர போர்?..", எனத் தெளிவாகக் குழம்பிப்போன தீரா, சேவனை நோக்கினாள்.
"அதோ.. அந்த ஓவியத்தில் உள்ள அனைத்தும் அவர்களின் சென்ற ஜென்மத்தில் நிகழ்ந்த யுத்தபோரின் காட்சிகளே!!.. வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் சிக்கிய கோவன்களும் சூரர்களும் அவர்களின் துணைவியர்களும் மரணத்தை தழுவினார்கள். ஆனால் போர் இன்னும் முற்று பெறவில்லை. தங்கள் பகையைப் பழிதீர்க்க, மீண்டும் தொடரவிருக்கும் அவர்களின் முன்ஜென்ம காதலுக்காக மீண்டும் பிறப்பெடுப்பார்கள். இந்நேரம் அவர்கள் பிறப்பெடுத்திருப்பார்கள். அவர்களின் வருகைக்காகவே யான் காத்திருக்கிறேன்", எனத் தொடங்கி... யுத்தப்போர் குறித்து ஓவியங்களாக இருக்கும் அந்தக் கதையை கூறத் தொடங்கியிருந்தான் சேவன்.
"ஆனா? இளவரசர்களா இவனுங்க?", ஒருவழியாக சேவன் தன்னைப் புரிந்துக்கொண்டான் என்னும் நிம்மதியுடன் தீராவின் அதிர்ந்த பார்வை, ஓவியத்தில் இருப்பவர்களை நோக்கித் திரும்பிட, "ஆமாம் தீரா. அதோ அங்கே மேல பறக்கும் மூவரும் வேந்தன்யபுரத்தின் இளவரசர்கள். கீழே உள்ள எண்வரும் சகாத்ய வம்ச சூரர்கள் என அழைக்கப்படும் மருத்துவத் தளபதிகளும் படைத்தளபதிகளும். அவர்களின் மாய சக்திகளை வைத்து வேந்தன்யபுரத்தை பலமுறை காத்தவர்கள்..", எனக் கூறிய நொடி, தீராவின் விழி விரிந்தது.
"மாயமா? என் முன்னாடி அவங்க இதுவரையும் எந்த பவர்ஸயும் யூஸ் பன்னதில்லயே. இந்தப் பெயின்டிங்ஸ்ல கூட அவங்க ஏதோ பவர்ஸ் வச்சு சண்ட போடுற மாதிரிதான்-", வார்த்தையை பாதியில் நிறுத்தியவள் மெல்ல எழுந்து அந்த ஓவியத்தின் அருகில் சென்று அதனை வருடிக்கொண்டே, "ஆதி கோவன்கள்!! சூரர்கள்! பூமியில மாயங்களோட இவங்க என்ன செஞ்சாங்க? அதனாலதான் நான் மேஜிக் யூஸ் பண்ணும்போதெல்லாம் அவங்க ஷாக் ஆகவே இல்லையா?", தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவளின் மனதில், பற்பல நினைவுகள் ஓடத் தொடங்கியது.
அவள் பேசுவதெல்லாம் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்து அப்பாவியாக விழித்த சேவனிடம் ஏதோ கேட்பதற்காக தீரா வாயெடுத்த நேரம் அவளின் அழைபேசி ஒலிக்க., சேவனை அப்படியே விட்டவள் தன் மொபைலை கையில் எடுத்து நோக்கினாள். அதில் அபி மாமா என்பவரிடமிருந்து அழைப்பு வந்திருக்க அதைக் கண்டதும் அதனை ஏற்று காதில் வைத்தாள்.
"ஹலோ, மாமா?"
".. ..??"
"பூமில தான், மாமா. ஏன் கேக்குற?"
"??"
"ஆங்! முக்கியமான நாளா? இன்னைக்கா?"
".. .. .. ??"
"என்னது? பதவிப் பிரமாணமா! அவளுங்களுக்கா? என்ட்ட சொல்லவே இல்ல! ஒருநாள் தானே நான் அங்க இல்ல. அதுக்குள்ள இவளோ நடந்துருச்சா?"
".. .. .. ."
"மாமா... எனக்குத் தெரியாதுன்னு உனக்கு தெரியாது?"
".. .. .. ..."
"ஹும். போ மாமா. எல்லாத்தையும் என்கிட்ட லேட்டாவே சொல்லிட்டு. சரி, நா ஒடனே வரேன். நீ ஃபோன வை." என படபடப்புடன் கூறியபடியே மொபைலை வைத்துவிட்டு சேவனை நோக்க. அவனின் பார்வையோ, "ஏன் இவள் பைத்தியம் போல் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறாள்??", என்னும் மைன்ட் வாய்ஸுடன் அவளை வினோதமாக நோக்கியது.
"சரி சேவா. எமக்கு ஒரு முக்கியப் பணி உள்ளது. உன்னை சந்தித்தத்தில் மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்கலாம். வருகிறேன்.", என்றுவிட்டு நொடிப்பொழுதில் ஒரு மாயவாயிலைத் திறந்துக்கொண்டு ஓடி மறைந்தவள் சென்ற திசையை வினோதமாக நோக்கினான் சேவன்.
இவ்வளவு நேரம் அங்கு நடந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த மதி, "அண்ணா என்ன'ண்ணா இதெல்லாம்", என காலாவை பார்க்க, "பத்ரனோட ஜென்ம வாக்கு அவன மட்டுமில்ல மதி.. இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் மாத்தீருச்சு. எல்லாமே இங்க மறுபடியும் நடக்கும்..", ஆழ்ந்த அர்த்ததுடன் ஒலித்தது காலாவின் வார்த்தைகள்.
✨✨✨
note : கோவன்கள், சூரர்கள், சேவன்... இவர்கள் எல்லாம் காவல் வீரா கதையைச் சேர்ந்தவர்கள் அல்ல. எழுத்தாளர் தீரா தீ எழுதிய புனைவுக் கதை 'மீண்டும் தொடரும் காதல்' கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro