17. ரட்சகன் வீடு.
"யாரு வீடு'ண்ணா இது?!", பூமிக்கு போகலாம் என தன் தங்கையை அழைத்துவந்த காலா, அவளை நேரடியாக அழைத்து வந்து நிறுத்தியிருக்கும் ஒரு வீட்டின் முன்னிலையில் நின்றுக்கொண்டு, அந்த வீட்டைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் திருடன் போல், பூந்தோட்டத்தைத் தாண்டியிருக்கும் முன்வாயில் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.
"சொல்றேன். அதுக்கு முன்னாடி, நா உனக்கு ஒரு பவர் சொல்லிக் குடுத்தேனே.. அது நியாபகம் இருக்கா?"
"இருக்கே.. ஏன் கேக்குற?"
"அத யூஸ் பண்ணு.", சுற்றிலும் எச்சரிக்கையாக பார்த்துக்கொண்டே காலா கூற, தன் கண்களை மூடிக்கொண்டு ஒரு சொடுக்கிட்டாள் மதி.
"அண்ணா, டன்..", தங்கையின் குரலைத் தொடர்ந்து காலா அவளைப் பார்க்க, அவன் பார்வைக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனாலும் அவளை நோக்கிப் புன்னகைத்தவன், "இப்போ வா உள்ள போலாம்..", அவர்கள் நிற்கும் இடத்திலிருந்த இரும்பு-கேட்டை லேசாகத் திறந்துக்கொண்டு தோட்டத்தைக் கடந்து முன்வாசலுக்குள் நுழைய.. அவ்விருவரும் அங்கு இருப்பதை சிறிதும் சட்டை செய்யாமல் அவர்களை கடந்து குடுகுடுவென வீட்டுக்குள் ஓடினான் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.
மதி, அந்தச் சிறுவனைப் புன்னகையுடன் பார்க்க.. ஓடிச் சென்றவன் அங்கே நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணியை அனைத்துக் கொண்டு அவர் காலடியிலேயே அமர்ந்துக் கொண்டான். மதியின் பார்வை தன் அண்ணனை நோக்கித் திரும்ப.. அந்த நேரம் காலாவின் கண்களோ, நிறைமாத வயிற்றுடன் இருக்கும் அந்தப் பெண்மணியையே உணர்ச்சிவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்துவிட்டாள்.
"யாரு அண்ணா இவங்க..", அண்ணனின் மீது தன் பார்வையை வைத்தபடியே அவள் கேட்க, "நமக்கு அம்மா மாதிரி மதி", அந்தப் பெண்மணியின் மீது பார்வையை வைத்தபடியே கூறினான் அவன்.
"ஓஹ்!! அப்போ பத்ரா அண்ணாக்கு?"
"அவனுக்கும் தான். அதுமட்டுமில்ல.. உன் பத்ரன் அண்ணா, இங்கதான் இருக்கான்..", மதியின் அடுத்தக் கேள்விக்கு சிறு சிரிப்புடன் காலா பதில் கொடுக்க.. அவளோ, மொத்தமாக குழம்பிப்போய் பத்ரனை தேடக் கிளம்பிவிட்டாள்.
"என்ன.. இங்கயா?"
"ம்ம்.."
"எங்க?", தனக்கு பின்னாலும் முன்னாலும் என அவள் சுற்றிச் சுற்றி தேட, "இங்கன்னா இங்க இல்ல மதி.. அங்க இருக்கான்", அவள் முகத்தைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பி, அந்த பெண்மணியை சுட்டிக் காட்டினான் காலா. அங்கே, வளைகாப்பு முடிந்தக் கையுடன், கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்துக் கொண்டு ஒரு சாதாரண காட்டன் நைட்டியில், இப்போதே தங்கள் இருவரையும் கடந்து ஓடிய சிறுவனைப் பார்த்து பலமாக சிரித்தபடி அமர்ந்திருந்தாள் அவள். தேவயாசினி.
அவளை நன்றாக பார்த்தப் பின்பே, காலா ஏன் அவளைப் பார்த்து அம்மாவை போல் என அறிமுகப் படுத்தினான் என்பது புரிய.. மதியின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்த அதே நேரம், "ஹர்ஷா.. அத்தைய தொந்தரவு பண்ணாத..", என சொல்லியபடியே வந்த ஒருவர், தேவாவின் பக்கத்திலேயே இன்னொரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துக் கொண்டார்.
"அண்ணா! வந்துட்டீங்களா.. இங்க பாருங்க.. இவன் என் புள்ள கிட்ட என்னென்னலாம் கேக்குறான் பாருங்க..", தேவா உற்சாகமாகக் கூற.. அவரின் நிறைமாத வயிற்றின் மீது தன் ஒற்றைக் காதைப் பதித்து வைத்துத் தன் கேள்விக்கான பதிலை உள்ளிருக்கும் சிசுவிடம் எதிர்நோக்கிக் கொண்டிருந்தான் இவர்களைக் கடந்துச் சென்ற அந்த சிறுவன்.
"ஹர்ஷா குட்டி.. நீ கேட்டது பாப்பாக்கு கேக்கலையாம் டா.. மறுபடியும் கேளு?", என்றவர், தன் சகோதரனுக்கு கண்ணைக் காட்டி அவனை கவனிக்குமாறு சைகை செய்ய.. "ஹான்? கேக்கலையா?? ஓய்.. குட்டி.. நீ என் மச்சானா? இல்ல மகாராணியா??", அத்தையின் வயிற்றை நோக்கிக் கேட்டவன் மீண்டும் தன் காதினை அவர் வயிற்றின் மீது வைத்துக் கொண்டான்.
தன் மருமகனின் கேள்வியால் தேவயாசினி கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட, "அடேய்.. இங்க தங்கச்சி பாப்பா.. அங்க மகாராணி கேக்குதோ உனக்கு?? ", என கீழ்தள அறையின் உள்ளே இருந்து வந்தது இன்னொரு பெண்ணின் குரல். ஆனால் அவர் சொல்லையெல்லம் அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவனுக்கு இப்போது தேவை, பதில்.
"ஹர்ஷா, ஹர்ஷா...", அவனை தன் மடிமீதே அனைத்துக் கொண்ட தேவயாசினி, "யாரா இருந்தா நமக்கென்ன டா ராஜா? எப்டியும் நீ தா வளக்கப்போற", எனக் கூறிப் புன்னகைக்க.. ஒருநொடி அத்தையின் வயிற்றின் மேலிருந்து தலையை நிமிர்த்தியவன், "ஹை!! சூப்பரு... உனக்கு ஓகே தானே குட்டி?", என மீண்டும் அவள் மடியில் சாய்ந்துக் கொண்டான்.
"அத்த.. இந்தக் குட்டி எப்போ வரும்?..."
"உன் குட்டி, இன்னும் கொஞ்ச நாள்லயே உன்கிட்ட வந்துருவான் டா ஹர்ஷா", எனக் கூறியவளின் பார்வை காலண்டரை நோட்டமிட, தேதியோ 09/08/2000 எனக் காட்டியது. அதே நேரம், உள்ளிருக்கும் குட்டி உயிர் இங்குமங்கும் வேகமாக உருளத் தொடங்கிவிட, தேவயாசினியின் முகம் லேசாக சுருங்கினாலும், "ஆஹா.. ஹர்ஷா, சீக்கிரமே வாராங்கலாம் உன்ன பாக்க... ஹாஹாஹா.. அப்போ நீயே வளத்துக்கோ.. எனக்கு வேல மிச்சம்.", என சிரிப்புடன் பதில் கொடுத்தார் அவர்.
"ஹான்? ஹஹா!! ஹையா.. எனக்கு தா, எனக்கு தா. அம்மா, தங்கச்சி பாப்பாவையும் நான் தான் வளப்பேன்.. சரியா??", என மேலும் கீழுமாக குதிக்க, "ஷப்பா.. இவன் இந்த தங்கச்சிய விட மாட்டான் போலவே யா.. ஏன்டா ஹர்ஷா, தங்கச்சி பாப்பாக்கு பதிலாக தம்பி பாப்பா வந்தா என்ன செய்வ நீ?", அறைக்குள் இருந்தபடியே அவன் அன்னை கேட்க, "உம்ம்.. தம்பி பாப்பாலாம் வேணாம்... நா தூக்கி போட்டுறுவேன்.", அவனின் கோபக் குரலால் குடும்பமே ஒன்றுகூடி கலகலவென சிரித்தது. அதேநேரம், தேவயாசினியின் வயிற்றினுள் இருப்பவனும், ஹர்ஷனின் குரல் கேட்டதில் உற்சாகம் கொண்டதுபோல் ஆட்டம்போடத் தொடங்கிவிட்டான்.
வாயிலில் நின்றபடி இவையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மதி, "ஆனா அண்ணா.. பத்ரா அண்ணா நம்ம வீட்டுக்கே இப்போ தானே வந்துருக்கான்.. அதுக்குள்ள அவன இங்க அனுப்பணுமா..", என சிணுங்க.., "ஆமா மதி.. அவன நம்மட்டயே ரொம்ப நேரம்லாம் வச்சுருக்க கூடாது", அவளை சமாதானம் செய்தான் அவன்..
"ம்ம்", காரணத்தை புரிந்துக்கொண்டு அவளும் அரை மனதுடன் ஒப்புக்கொள்ள, "சரி சரி சோகமாகாத மதி.. உனக்கு இன்னொரு ரகசியம் சொல்றேன் வா.", என காலா கூறிய நொடியில் அவள் முகம் மீண்டும் மலரத் தொடங்கியது.
"ஹை!! ரகசியமா.. சூப்பரு..", உற்சாகமாக துள்ளிக்கொண்டு, காலா செல்லும் வழியிலேயே ஓடினாள் அவள்..
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro