15. மூன்றாம் திருப்புமுனை
இளநீல திரைசீலைகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்க.. சற்று முன்பே தன் வாழ்வில் நுழைந்திருக்கும் அந்தக் கைக்குழந்தையை தன் பிள்ளையை தூக்குவதுபோல் ஒரு தந்தையாக மாறி, கையில் வைத்துக்கொண்டு ஜன்னலருகில் நின்றிருந்த காலா, நிலை குழைந்துபோனா பாதாள லோகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெறுமையான பார்வையுடன் அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், "காலா, இப்படியே இருப்பதால் நிகழ்ந்தவை மாறிடுவதில்லை", கர்ணவிஜயனின் குரல் கேட்டு பின்னால் திரும்பினான் அவன்.
"உண்மைதான் குரு", மெதுவான குரலோடு பெருமூச்சு விட்டவன், கர்ணவிஜயனின் காலடியில் தவழ்ந்து கொண்டிருந்த இன்னொரு குழந்தையையும் பார்க்கத் தவறவில்லை.
"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்", தன்னருகில் தவழ்ந்து கொண்டிருந்தவளை ஒருமுறை பார்த்துவிட்டு காலா நிற்கும் ஜன்னலருகில் வந்தவர், தோட்டத்தில் புதிதாக இருக்கும் மாபெரும் கண்ணாடிக் குடுவையையும் பார்த்தார். அதனுள்ளே, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் பல ஒளிபந்துகள் மின்னிக்கொண்டே இங்கும் அங்குமாக பறந்துக் கொண்டிருந்தது. அவைகளுக்கு நடுவே, இரு வெள்ளை ஒளிபந்தும் இருந்தது.
"ஹ்ம்ம்ம்.. அடுத்து செய்யப்போவதை நானே அறியாதிருக்கும் பொழுது எப்படி உங்களிடம் சொல்வது?", ஒரு விரக்தியுடன் காலாவும் அந்த கண்ணாடிக் குடுவையைப் பார்க்க, "நான் ஒரு யோசனை சொல்லலாமா?", கர்ணவிஜயனின் பார்வை காலாவை நோக்கித் திரும்பிய நொடியில், "என்னை வழிநடத்த உங்களுக்கு அனுமதி வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா..", அவன் பார்வையும் தன் குருவை நோக்கித் திரும்பியது.
மெல்லிய சிரிப்புடன் தன் பார்வையை அவன் கையிலிருக்கும் குழந்தையிடம் நகர்த்தியவர், "இவர்கள் இருவரையும் என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். இவர்கள் செல்ல வேண்டிய இடத்தை நான் தீர்மானிக்கிறேன்.", தரையில் தவழ்ந்துக் கொண்டிருந்தவளை பார்த்தபடி தன் வார்த்தையை முடித்த அதே நேரம், "ஹலோ.. வீட்டுல- ச்சை, கோட்டைல யாராச்சும் இருக்கீங்களா?", இருவரின் செவியையும் அடைந்தது ஒரு பெண்ணின் குரல். அவள் குரலைக் கேட்ட நொடியில் காலாவின் கண்ணில் சிறு தெளிர்ச்சி தோன்றிட, "செல்ல வேண்டிய இடத்தை நீங்கள் தீர்மானியுங்கள் குரு.. அழைத்துச் செல்வது யாரென நான் தீர்மானிக்கிறேன்", என்ற காலாவின் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த வெறுமை மறைந்து ஒரு விஷமப் புன்னகைத் தோன்றியிருந்தது.
✨✨✨
தங்களுக்கு புதிய இளவரசிகள் கிடைத்துவிட்டார்கள் என்னும் உற்சாக கொண்டாட்டத்தில், வைர மாளிகையின் முன்னிலையில் மக்கள் கூட்டம் கோலாகலமாக ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தார்கள். சத்யஜித்திற்கும் அளப்பறியா ஆனந்தம் தான். ஆனால், இப்பதவி இதற்கு முன் தன் தங்கையிடம் இருந்தது என்பதை நினைக்கும்போது தங்கையின் நினைவால், மனம் கணமானது.
மக்கள் யாவரும் ஒருவருக்கொருவர் இனிப்பை வழங்கி மகிழ்வுடன் அன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க.. தொட்டிலில் இருக்கும் இரு குட்டி தேவதைகளும், "நாங்களும் கொண்டாடுவோம்", என சொல்லாமல் சொல்வது போல் தங்களுக்குள்ளேயே பேசி சிரித்து கை-கால்களை ஆட்டிக்கொண்டு, இறுதியாக ஓய்ந்துபோய், தூக்கம் சொக்க விழித்திருந்தார்கள்.
அதை கவனித்த சத்யபாமா தன் கணவனை உலுக்கி, "இருவரும் தூங்க வேண்டும்.. வீட்டிற்குச் செல்லலாமா?...", என குழந்தைகளைச் சுட்டிக்காட்ட... சரியென தலையசைத்தவர் மாயாவை கையில் தூக்கிக்கொண்டு சுற்றிச்சுற்றி தன் தங்கைகளை தேடினார்.
ரக்ஷாவை தூக்கிக்கொண்ட சத்யபாமா, "யாரைத் தேடுகிறீர்கள்?...", என கணவனை நோக்க, "அபி இன்னும் வரவில்லை... அவனை அழைத்துவரச் சொல்வதற்காக சயனா அல்லது ரோஹினியை அனுப்பலாமென தேடினேன்... அவர்களையும் காணவில்லை.", பார்வையைச் சுற்றிலும் செலுத்தியபடியே கூறினார்.
"கவலை வேண்டாம்.., அபியை பார்க்கப் போவதாகச் சொல்லித்தான் சற்றுமுன் ராவி வந்து சயனாவை அழைத்துச் சென்றாள். அவர்கள் வீட்டிற்கு வந்திடுவார்கள்.. நாம் புறப்படலாம்...", மனைவியின் சொல்லை ஏற்றுக்கொண்டு இரு குட்டி இளவரசிகளுடன் தங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள் இருவரும்.
தன் சித்தியை கைப்பிடித்த இழுத்துச் சென்றுகொண்டிருந்த ராகவி, "வாருங்கள் சித்தி.. ஜித்தூ நீண்ட நேரம் அழுது அழுது கொண்டிருக்கிறான்....", தீவிர முகபாவத்துடன் அவள் முன்னோக்கி நடக்க.. அவள் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள் சத்யஜித்தின் இளைய சகோதரி சயன சங்கரி.
"ஓ... அவன் அழுது அழுது கொண்டிருக்கிறானா?.."
"ஆம்... அவன் எப்போதும் அப்படித்தான்.. நான் நல்ல பெண்... அவனைப்போல் அல்ல..."
"ஹஹஹா... சரி, என் மருமகன் ஏன் அழுகிறான்?.. காரணம் அறிவாயா ராவி?..."
"நான் எப்படி அறிவேன்? அவன் சொன்னால் தானே அறிவேன். நான் சென்றுக் கேட்டால்.. அவன் அழுது அழுது கொண்டிருக்கிறான்.", முகத்தைச் சுருக்கித் தன் கோபத்தை வெளிக்காட்டிய ராகவி, ஒரிடத்தில் நின்று, கைகளை கட்டிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொள்ள... அவள் செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்த சயனாவின் பார்வை, அங்கிருந்த படிகட்டில் பதிந்தது. தொங்கிய முகத்துடன் முட்டியை கட்டிக்கொண்டு, காலிலேயே தலைசாய்த்த நிலையில் அமர்ந்திருந்தான் அபிஜித்.
சோகமே தன் ரூபமாக அமர்ந்திருக்கும் அபியை கண்ட சயனா, ராகவியை கையில் தூக்கிக்கொண்டு அவனருகில் சென்று அமர.. தன் சித்தி தன்னை இறக்கி விட்டதும் அபியை இடித்துக் கொண்டு அவனுக்கு மறுபக்கமாக சென்று அமர்ந்துக் கொண்டாள் ராகவி.
"ஜித்தூ... என்னிடம் தான் எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாய்.. உன் அத்தையிடம் சொல்.. ஹ்ம்ம்...", ராகவி சலித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள... தானாகவே அத்தை மீது சாய்ந்துக் கொண்டான் அபி.
"என்னானதடா?...", அவள் மென்மையாக கேட்க... அத்தையின் மடியிலேயே சாய்ந்திருந்தவன், ஒன்றுமில்லை என தலையை மட்டும் ஆட்டினான். அதைக்கண்டு மூச்சை இழுத்துவிட்டாள் சயனா.
"உன் வேதா அத்தையை நினைத்து வருந்துகிறாயா?", சயனா தன் மருமகனின் தலையை வருடிக்கொண்டே கேட்க, "வேதா அத்தைக்கு என்னை பிடிக்கவே இல்லை... அவர் என்னிடம் மீண்டும் வரப்போவதே இல்லையா?", கண்ணீர் தேங்கிய விழிகளுடன் சயனாவை நிமிர்ந்து நோக்கினான் அபி.
"அப்படி இல்லை கண்ணா...", அவன் கண்ணீரை துடைத்தபடி சொல்ல, "இல்லை... அப்படிதான்... வேதா அத்தைக்கு அபி வேண்டாம்... அபியை பிடிக்கவில்லை அவருக்கு... எனக்கும் வேதா அத்தை இனி வேண்டாம்...", அபியின் கண்கள் மீண்டும் உடைந்த மடையாகிட... அவன் சொற்களால், தானும் வலியை அனுபவித்தாள் சயனா.
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அபி. உன் வேதா அத்தைக்கு எல்லாரை விடவும் உன்னைத்தான் அதிகம் பிடிக்கும். அவர் நிச்சயம் உன்னை வெறுக்க மாட்டார்.. வேண்டுமென்றால் நீயே பார்.. ஓர்நாள் உன்னைத்தேடி உன் அத்தை அவராகவே வருவார். அவர் வரும்பொழுது நீ இப்படி அழுவது குறித்து அறிந்தால் அவர் வருந்த மாட்டாரா?", அபியின் கண்களை துடைத்துக் கொண்டே கூற, "உண்மையாக?", கலங்கிய விழிகளுடன் நிமிர்ந்து, கேள்வியாக சயனாவை நோக்கினான் அபி.
"உண்மையாக.", சயனா தன் மருமகனை சமாதானமாக்கிட, "வேதா அத்தைக்கு என்னைத்தான் அதிகம் பிடிக்குமெனில் விரைந்து என்னிடம் வரச் சொல்லுங்கள்....", அமர்ந்த நிலையிலேயே சயனாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் அவன்.
தான் ஒரு உருவம் அருகில் அமர்ந்திருப்பதை கவனிக்காமல் அத்தையும் மருமகனும் கொஞ்சிக் கொள்வது பொறுக்காமல், "இல்லை இல்லை... என் வேதா சித்திக்கு ராவியை தான் முதலில் பிடிக்கும்... ஜித்தூ, பிறகு தான் பிடிக்கும்...", சொல்லிக்கொண்டே அபியின் மடிமீது ஏறி மறுபக்கமாக தாண்டிச் சென்று சயனாவின் மறுபக்க கழுத்தை கட்டிக் கொண்டாள் ராகவி.
"இல்லை ராவி... முதலில் நான் தானே பிறந்தேன்.. அதனால் என்னைதான் வேதா அத்தைக்கு முதலில் பிடிக்கும்.. பிறகு தான் நீ பிறந்தாய்...", அபி தன் அழுகை மறந்து சண்டைக்குத் தயாராகிட... ஒருநொடி அவனை பிடித்து அமைதியாக்கியபடி ரகசியமாக அவனிடம் கண்ணடித்த சயனா, "சரி விடு அபி. ராவியே அவள் வேதா சித்திக்கு முதன்மையாக இருக்கட்டும்.", அபியிடம் கூறியவள், ராகவியை நோக்கித் திரும்பி, "ராவி.. என் மருமகன் உனக்காக அவனிடத்தை விட்டுக் கொடுக்கிறான்.. நீயே முதன்மையாக இருந்துக்கொள் உன் வேதா சித்திக்கு. என் அபி, எனக்கு முதன்மையாக இருக்கட்டும்", ராகவியை வெறுப்பேற்றுவதற்காகவே, சயனா, அபியை தூக்கித் தன் மடியில் வைத்துக்கொள்ள, "ஹான்ன்ன்ன்ன்... சித்தி.. உன் அபி அல்ல... அவன் என் ஜித்தூ", சிணுங்கிக்கொண்டே சுற்றி வந்து சயனா மடியில் அமர்ந்திருக்கும் அபியின் மடியில் சென்று அமர்ந்துக் கொண்டாள் ராகவி.
சயனா, அப்படியே தன் பிள்ளைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க.. வேறெங்கோ இருந்து ஒரு சிரிப்பு சத்தம், இங்கிருந்த மூவரின் செவியையும் அடைந்தது. அது சங்கவியின் சிரிப்பொலி தான். தனியாக எங்கிருந்து என்ன காரணத்திற்காக சிரித்துக் கொண்டிருக்கிறாள் என புரியாமல், அபி மற்றும் ராகவியை அழைத்துக்கொண்டு, சத்தம் வரும் திசையில் நடந்த சயனா அங்கு கண்டக் காட்சியில் குழப்பத்தின் உச்சத்தில் சென்று நின்றாள்.
இதுவரையில் ஆதிலோகத்தில் பார்க்கவே செய்யாத இரு குழந்தைகள் அங்கே இருக்க.. அதில், ஒரு கைக்குழந்தையை தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் சங்கவி. அவளுக்கு நேரெதிரே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை, சங்கவியையும் அவள் மடியில் இருக்கும் கைக்குழந்தையையும் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருக்க.. அங்கு வந்த மூவரையும் கவனித்த சங்கவி, "அபி மாமா... பார்... என்னிடமும் இரு தங்கைகள் இருக்கிறார்கள். உன்னைப்போல் எனக்கும் இரு தங்கைகள் கிடைத்துவிட்டார்கள்..", என உற்சாகமாக சிரிக்க.. ஒரு ஆர்வத்தில் அபியும் ராகவியும் அவர்களிடம் ஓடினார்கள். ஆனால் சயனாவின் நிலைதான் பரிதாபம்... ஒன்றுமே புரியாமல் இன்னமும் சிலையாகிப் போய் தான் நின்றிருந்தாள்.
சங்கவியின் மடியிலிருந்த கைக்குழந்தையோ, நிர்மலமான உறக்கத்தில் கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் தூக்கத்திலேயே எதற்காகவோ தன் குட்டி இதழ்களை குவித்து அழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் சங்கவிக்கு முன்பாக அமர்ந்திருந்த அந்த மூன்று வயது சிறுமி, இவ்வளவு நேரமும் சங்கவியை மட்டுமே பார்த்துத் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க... இப்போது அவளுடன் அபி மற்றும் ராகவியையும் சேர்த்து மூவரையும் தன் முட்டைக் கண்களை உருட்டி உருட்டி தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
சயனா, இன்னுமும் குழப்பத்திலேயே சற்று விலகி நின்றிருக்க.. அமர்ந்த இடத்திலிருந்து எழாமல் அவளைக் கத்தி அழைத்தாள் சங்கவி. "சித்தி, இங்கு வாருங்கள். இவர்களை நம் வீட்டிற்குத் தூக்கிச் செல்லலாம். இது என் தங்கை. இது அக்காவின் தங்கை.", இரு குழந்தைகளையும் அவள் சமமாக பங்கு போட... அவள் குரலிலேயே இருப்பிடம் உணர்ந்து, தன்னந்தனியாக தரையில் இருக்கும் குழந்தைகளை நோக்கி அடியெடுத்து வைத்தாள் சயனா.
சங்கவி, இரு குழந்தைகளையும் தனக்கொன்று அக்காவிற்கு ஒன்று என பங்கு போட்டுக் கொண்டதும், "எனில் எனக்கு??", அப்பாவியாக கேட்ட அபியிடம், "உனக்கெல்லம் கிடையாது. உனக்குதான் புதிதாக இரு தங்கைகள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் இவர்கள் எனக்கும் என் தங்கைக்கும் மட்டும்தான். உனகில்லை. ", அபியுடன் ராகவி சண்டையிட, "ஆமாம் ஆமாம். அபி மாமாவிற்கு கொடுக்க மாட்டேன்.", அக்காவுடன் இணைந்துக்கொண்டாள் சங்கவி. அவர்களுக்கு என்னவோ அந்த குட்டி குழந்தைகள் இரண்டும், இரண்டு பொம்மைகள் போல் தெரிந்தார்கள் போலும்.
சண்டையிடும் அவர்களருகில் வந்து, ஒரு காலினை பாதியாக மடக்கி அமர்ந்திருந்த சயனா, இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அவள் மூளையில் அவர்களின் பேச்சு எதுவும் பதியவில்லை. மாறாக, பார்வை பதிந்திருந்தது அந்த புதிய குழந்தைகளின் மேல்தான். ஆதிலோகத்தில் யார் இந்த அடையாளம் தெரியாத இரு குழந்தைகள் எனும் கேள்விதான் அவள் சிந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அவள் யோசனையிலேயே உழன்றுக் கொண்டிருக்க அவள் சிந்தனையைக் கலைப்பது போலவே அவள் மீது படர்ந்தது ஒரு ஸ்பரிசம்.
"அம்மம்மம்மம்... மம்மம்மம்மம்மா... ஆ.. ஆ.. அம்மம்மா...", அந்த மூன்று வயதுக் குழந்தைதான் சயனாவின் பாதங்களைச் சுரண்டி அவளை அழைத்துக் கொண்டிருந்தது. மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தைபோல் இருந்தாலும் இன்னும் சரியாக பேசவில்லை. இருந்தும் அந்த மழலை-அழைப்பில் சயனாவின் இதயத்தில் இதமான ஒரு சிலிர்ப்பு எழ.. அந்தக் குழந்தையை பூப்போல் தன் கையில் ஏந்தினாள் அவள். உடனே சயனாவின் தோளின் மீது அழகாக தலை சாய்த்துக் கொண்டாள் அந்தக் குழந்தை.
"கவி, யாரிவர்கள்? யார் அழைத்து வந்தது இவர்களை?", தன்மீது சாய்ந்துக் கிடப்பவள் முதுகைத் தட்டிக்கொண்டே சயனா கேட்க, "மாயா...", என்றபடி தன் மடியில் கிடப்பவளை அபியின் பார்வையில் இருந்து ஒளித்துவைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் சங்கவி. அவள் பதிலில் அதிர்ந்தது என்னவோ சயனா தான்.
"என்ன? மாயாவா? எந்த மாயா?...", தனக்குத் தெரிந்தவரையில் ரட்சகராஜ்யத்தில் இருப்பது ஒரேயொரு மாயா தான். அது, நேற்று பிறந்த தன் அண்ணன் மகள் தான் என குழம்பிப்போய் நின்றாள் சயனா.
"ஆம் சித்தி. மாயா தான். அவளை நான் 'யார் நீ?' என்று கேட்டேன். அவள், மாயா என்றுதான் சொன்னாள். பிறகு, இவர்கள் இருவரையும் என்னிடம் கொடுத்து, பத்திரமாக பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு.. அங்கு சென்றுவிட்டாள்.", வைர மாளிகையின் வாயிலை நோக்கி விரலை நீட்டினாள் சங்கவி. சயனா தான் பாவம், எதுவுமே விளங்காமல் குழப்பத்தில் நின்றாள்..
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro