14. ஷ்ருஷ்யத் !?!...
மயங்கியிருந்த ஷேனாவின் காயங்களில், உறவுசங்கிலியின் மூலமாக கிடைத்த ரத்த பஸ்பத்தை பூசிவிட்ட ஷிவேதனா, தன் மகன் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தாள். நீண்டநேரம் கடந்தும் அவன் கண்விழிக்காமல் இருக்க... கவலையுடன் மகனருகில் இருந்தவருக்கு வேறொரு குழப்பமும் மூளையைப் போட்டுக் குடைந்துக் கொண்டிருந்தது.
மனதிற்கு நெருக்கமான உறவுகள் தொலைவில் இருக்கையிலும் அவர்களுடன் உரையாடுவதற்கென்றே உருவாக்கப்பட்டு பயன்படுத்தபடும் ஒரு அணிகலன் தான் உறவுசங்கிலி. இதை ஆதிலோகத்தில் பலர் பயன்படுத்தினாலும் இதன் தோற்றம் உருவாகியது பாதாள லோகத்தில்தான். ஷிவேதானா அறிந்தவரையில், பாதாள லோகத்தில் உருவாக்கப்பட்ட அந்த முதல் உறவுசங்கிலியின் முழு சக்திகளை கொண்டு இதுவரையில் வேறெந்த உறவுசங்கிலியும் செயல்பட்டதில்லை.. இப்போது ஷேனாவின் கழுத்தில் கிடக்கும் இந்த ஒன்றினைத் தவிர.
"அபி, என்ன மாயத்தை வைத்தடா இதை செய்தாய் நீ?.. முதல் உறவுசங்கிலியையே எடுத்துவந்துக் கையில் கொடுத்தது போலுள்ளது.. இல்லை, என் மீதான உன் பிரியம் அத்தனை ஆழமானதா?", தன்னிடம் உள்ள உறவுசங்கிலியை கையில் வைத்துக்கொண்டு பேசியவளின் முகத்தில், உணர்வுகள் துடைத்தெடுத்து வெறுமையே மிஞ்சியிருந்த அந்த நேரத்தில்.. "ம்ம்.. ம்மா..", ஷேனாவின் முணங்கள் கேட்க.. கையிலிருந்த உறவுசங்கிலியை அப்படியே பக்கத்தில் வைத்தவள் மகனை கவனித்தாள்.
"ஷேனா.. ஷேனா கண்களைத் திறந்து என்னைப் பார்... உனக்கு ஒன்றுமில்லையே?", சிறு பதட்டத்துடன் அவன் கன்னத்தைத் தட்ட, "ம்மா.. நான் இன்னும் சற்றுநேரம் தூங்குகிறேன்.", மெத்தையில் கிடந்தவன் சிறு முணங்களுடன் மெல்ல ஊறி வந்து அன்னையின் மடிமேல் படுத்துக்கொண்டான். அவ்வளவு நேரம் பதறிக் கொண்டிருந்த ஷிவேதனா, மகனின் செய்கையைக் கண்டு விழிக்கத்தொடங்க... இரு நொடிக்குப் பின்பே அவளுக்கு புரிந்தது தன் மகனுக்கு ஒன்றுமில்லை அவன் நலமாக, மிகத் தெளிவாகத்தான் இருக்கிறான் என்பது.
"சரி ஷேனா.. நீ அமைதியாக தூங்கு..", மெல்லிய புன்னகையுடன் மகனின் தலையை கோதத் தொடங்கிட, அப்படியே கடந்தது மணித்துளிகள். மகனை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் மீண்டும் தன் நினைவலைகளுக்குள் மூழ்கவும் தொடங்கிவிட்டாள். சில நிமிடங்கள் கடக்க.., "அம்மா..", தூக்கம் நீங்கிடாத கண்களை விரித்து வைத்துக்கொண்டு, தலையை மட்டும் அன்னையை நோக்கி நிமிர்த்தியபடி ஷேனா மெல்லமாக அழைக்க, "என்ன ஷேனா?" யோசனையில் இருந்த அவனின் அன்னை, மகனை நோக்கிக் குனிந்தாள்.
அன்னையிடம் இருந்தத் தன் பார்வையை தாழ்த்திய ஷேனா, "இது என்னதம்மா??", அவன் கழுத்தில் புதிதாகக் கிடக்கும் சிவப்பு சங்கிலியை இரண்டுக் கைகளாலும் பிடித்துக்கொண்டு அதைப் பார்த்தபடியே கேட்க.. மகனின் கைகளோடு சேர்த்தே அவனின் உறவுசங்கிலியை தன் வலது கரத்தால் பிடித்தாள் ஷிவேதனா.
"இது உறவுச்சங்கிலி கண்ணா", புன்முறுவலுடன் ஷிவேதனா பதில் கொடுக்க, "அப்படியென்றால்?", கண்களை கசக்கிக்கொண்டு மெல்லமாக எழுந்து, அன்னையின் மடிமேல் அவனாகவே அமர்ந்தான்.
"அப்படியென்றால்.. ம்ம்.. அது. .. .. அது, உனக்கு கிடைத்த பரிசு ஷேனா", இறுதியாக எப்படியோ அவனுக்கான பதிலை கண்டுபிடித்து அவள் சொல்லிவிட.., "பரிசா!!!.. ஆஹ்ஹ்ஹ்!!!.. எனக்கா?!?", துள்ளிக்கொண்டு மெத்தையைவிட்டு கீழே குதித்தவன், நிலைக்கண்ணாடியின் முன் சென்று நின்றுவாறு தன்னைத்தானே அழகுபார்க்கத் தொடங்கினான். மகனின் ஆவலைப் பார்த்த ஷிவேதனாவின் மனதில் உதித்த குழப்பங்கள் எல்லாமே தற்காலிகமாக மறைந்துபோய்விட.. உற்சாகமாக இருக்கும் மகனை, தானும் அழகுபார்க்கத் தொடங்கினாள்.
"அம்மா!!.. அழகாய் இருக்கிறது இந்த சிவப்பு நிற கல்.. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...", போதுமென்ற அளவுக்கு கண்ணாடியைப் பார்த்து முடித்தவன், ஓடிவந்து அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "யார் தந்த பரிசு இது?", நீங்காத உற்சாகத்துடன் கேட்க, "அம்ம்... அது.. உன் மேல் பிரியமாக இருக்கும் ஒருவர்", மகனை அனைத்தபடியே அவளும் பதில் கொடுத்தாள். "அப்படியென்றால் அது நீங்கள் தான்..", மகிழ்வு நிறைந்த முகத்துடன் அன்னை மடியில் பொத்தென அவன் அமர்ந்துவிட.. சிறு சிரிப்பும் அரவனைப்பும் தான் ஷிவேதனாவின் பதிலாக இருந்தது. அதேநேரம் வேறொன்றும் அவர் நினைவில் உதிக்க.. பதட்டமாக மகனைத் தூக்கி முன்னே நிறுத்தினார் ஷிவேதனா.
"ஷேனா.. இப்போது உனக்கு எப்படி இருக்கிறது.. வலிக்கிறதா?", காயம்பட்ட அவன் கைகளை ஆராய.. ரத்த பஸ்பத்தின் சக்தியால் எப்போதோ அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய் இருந்தது. "ஹ்ம் .. நல்லவேலையாக குணமாகிவிட்டது..", நிம்மதி பெருமூச்சுவிட்டவர், "சரி, எப்படி உனக்கு காயம் ஏற்பட்டது?.. நான் எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?.. .. உன்னுடன் இருந்த அந்த சிறுவன் எங்கே?.. அவன் உன்னை ஏதேனும் காயப் படுத்தினானா?", பயமும் கவலையும் ஒன்றுசேர்ந்து வெளிபட்டது அவள் குரலில். ஆனால் ஷேனாவிடம் இருந்து வெளிபட்ட உணர்வு, பயம் மட்டுமே.
அவன் எதுவும் பேசாமல் அன்னையின் முகத்தையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அதை கவனித்தவளுக்கு ஏதோ தவறாகத் தோன்றியது. "ஷேனா .. என்ன நடந்தது.. அம்மாவிடம் சொல்.."
"அன்.. அம்மா.. அது ", அவன் தயங்க, "அரசர் ஏதேனும் உன்னைக் காயப்படுத்தினாரா?", ஷிவேதனாவின் முகம் தீவிரமடைந்தது..
"அஹான்.. இல்லை அம்மா.."
"பிறகு?"
"ஹன்.. அது.. .. சமாரா-", ஒருவழியாக நடந்ததைச் சொல்ல வந்தவன் சட்டென வார்த்தையை நிறுத்தினான்.
"சமாரா?", இதுவரையில் கேட்டிடாத ஒரு பெயரை ஷேனாவின் வாயால் கேட்டதில் ஷிவேதனா குழம்ப, "அம்மா.. என்னை தந்தை அழைக்கிறார். நான் செல்கிறேன்.. பிறகு வருகிறேன்..", என்பதுடன் சேர்த்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவன், அன்னையின் அடுத்தச் சொல்லைக் கேட்க அங்கே இல்லை. ஓடிவிட்டான் அந்த இருளுக்குள்.
ஷிவேதனாவால், தன் மகனை நினைத்து நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
✨✨✨
தான் அழைத்தக் குரலுக்குத் தன்னைத் தேடி வந்துவிட்ட ஷேனாவை, இருளரசன் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் இடம், அதே இடம் தான்.. வினோதமான சிலைகள் இருக்கும் அந்த சபை. அவருக்கு என்னவோ அது பழக்கப்பட்ட இடமாக இருக்கலாம்.. ஆனால் ஷேனாவிற்கு, இதுநாள் வரையில் இந்த இடம் இருள்மாளிகையில் தான் இருக்கிறதா? என கேள்வி எழுப்பக்கூடிய ஓரிடம்.
நிழல் ராஜ்யத்தின் என்றும் மாறா அதே இறுக்கமான இருள், வழியெங்கிலும் சூழ்ந்திருக்க... அவ்வழியாக இருளரசன், முன்னால் நடந்தபடி ஷேனாவை தன் வேகத்திற்கு இழுத்துக் கொண்டு வேகநடையில் சென்றுக் கொண்டிருந்தார். அவரின் நீண்ட கால்கள் செல்லும் வேகத்திற்கு ஈடுகொடுத்துத் தன் குட்டிக் கால்களினால், ஓடுகிறானா நடக்கிறானா என கணக்கிட முடியாத அளவு வேகத்தில் அவர் பின்னேயே நகர்ந்து கொண்டிருந்தான் ஷேனா.
நடக்க நடக்க வழியானது நீண்டுக்கொண்டே தான் சென்றது.. நிலவிடும் இறுக்கமான சூழலும் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் சென்றது. இறுதியாக பல நிமிட நடைக்குப் பின்னர் அந்த மாபெரும் கதவின் முன்பாக வந்து நின்றார்கள் இருவரும்.
ஷேனாவின் பார்வைக்கு, அந்த கதவே பல அடிகள் உயரத்தில் உயர்ந்து நிற்க.. பத்தடிக்கும் மேலாக இருந்த அக்கதவினை திகில் பார்வையுடன் நோக்கினான் ஷேனா. பார்ப்பதற்கு கம்பீர ராஜகலையில் மிடுக்குடன் இருப்பினும் ஷேனாவின் பார்வைக்கு அச்சத்தைத் தூண்டிடும் விதமாக ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அது.
அந்தக் கதவினைத் தன் முழு பலத்தைக்கொண்டு தள்ளித் திறந்த இருளரசன், "உள்ளே வா ஷேனா...", கர்ஜித்துவிட்டு முன்னேறி நடக்க... கம்பீரக் கதவினைப் பார்த்துக்கொண்டே மிரட்சியில் நின்றிருந்தவன், அவரின் குரலால் மேலும் திடுக்கிட்டு, தயங்கிய நடையுடன் அவரைத் தொடர்ந்தே அறையின் உள்ளே நுழைந்தான். நடுவே சென்ற நடைபாதையின் வழியைத் தொடர்ந்தே சென்ற ஷேனாவின் பார்வை, கிட்டத்தட்ட முப்பது அடிகளுக்கு அப்பால் இருந்த பிரம்மாண்ட சிம்மாசனத்தை அடைந்த நொடியில் அப்படியே உறைந்து நின்றது... பார்வை மட்டுமல்ல அவன் நடையும் தான். காரணம், அந்த சிம்மாசனம் தான்.
அது, சாதாரண மனிதனுக்கான ஆசனம் போல் இல்லாமல் ஏதோ மலையளவு அரக்கன் அமர்வதற்கான இருக்கைப்போல், பார்ப்பதற்கே மிகக் கொடூரமாக.. கரடுமுரடாக பிரம்மாண்ட உருவில் இருக்க... அந்த சிம்மாசனத்தில் அமருவதற்காக பெரிய பெரிய கொடிய உருவங்கள் ஷேனாவின் கற்பனையில் பலவிதமாக உருவாகிக் கொண்டே இருந்தது. அதேபோல், அவன் சிந்தையில் உதித்த மாபெரும் அரக்கன்களைப் போலவே அந்த நீண்ட நடைபாதையின் இருபுறத்திலும் விசித்திரமான கொடிய மனிதர்களின் சிற்பங்கள்.. சற்று நேரத்திற்கு முன்பு வரையில் கருநிற போர்வைகளால் போர்த்தப்பட்டிருந்த அந்த சிலைகள்.. அச்சுப் பிசகாமல் ஒரே போல் வீற்றிருந்தது.. ஒவ்வொரு சிலைக்கும் எனத் தனித்தனி ஆசனங்களும் சிற்பத்தின் பின்னேயே இருந்தது. இருப்பினும், அனைத்திலும் பெரிதாக இருந்தது, அறையின் எல்லையில் இருக்கும் அந்த மாபெரும் ஆசனம்தான்.
வேகமாக நடந்துசென்ற இருளரசன், மையத்தில் இருந்த மேடைக்குக் கீழேயே ஷேனாவை நிற்க வைத்துவிட்டு அவர் மட்டும் மேடையில் ஏறி நிற்க.. கீழே நின்றிருந்த ஷேனா, தனக்கு இடதுபுறம் இரண்டு கொடிய சிற்பம் அதனதன் இருக்கைக்கு அருகிலும்... வலதுபுறம் இரண்டு கொடிய சிற்பம் அதனதன் இருக்கைக்கு அருகிலும் இறுகிய முகத்துடன் நிற்பதை, எச்சிலை விழுங்கியபடி பார்த்தான்.
சரியாக ஷேனா நிற்கும் இடத்திற்கு நேரெதிரே, இருளரசன் நிற்கும் அந்த மேடையில், நான்கு சிற்பத்திற்கும் தலைமை தாங்கிடுவதுபோல் மிக கொடிய ஒருவனின் சிற்பம்.. சற்று தனித்துவமான உருவ அமைப்புடன் இருளரசனுக்கு அருகில், மேடையின் மையத்தில் இருந்தது. ஆனால் அது தலைவன் இல்லை என்பது குழந்தையான ஷேனாவிற்கே தெளிவாக புரிந்தது.. காரணம், கீழே இருக்கும் நான்கு சிற்பத்திற்கும், மேடையில் தனியாக இருந்த ஒரேயொரு சிற்பதிற்கும் சேர்த்துவைத்து ஆணையிடும் தோரணையில் அந்த பிரம்மாண்ட சிம்மாசனத்திற்கு பக்கவாட்டில் இருந்தது அந்த ஒழுங்கில்லாத, ஏதோபோல் இருக்கும் சிற்பம்.
மற்ற ஐந்து சிற்பங்களை காட்டிலும் மிக கோரமாக.. இறுக்கமான முகத்துடன்.. அனைத்திலும் மிக பிரம்மாண்ட உருவில்.. கிட்டத்தட்ட அந்த மாளிகையின் மொத்த உயரத்தையும் தொட்டுவிடும் அளவில்.. ஐம்பது அடிக்கும் மேலான உயரத்தில் இருந்த அந்த கரிய சிற்பத்தைப் பார்த்தாலே போதும், இவை அனைத்திற்கும் தலைவன் அதுதான் என ஷேனாவே கூட அழகாய் கணித்து விடலாம்.
மாளிகையின் உயரத்திற்கு இருந்த சிற்பத்தின் காலடியில்.. அதாவது அந்த மேடையின் மையத்தில், அதன் கணுக்காலுக்கே எட்டும் அளவில் இருந்தது இருளரசனின் உருவத்தை நினைவூட்டும் தோரணையில் இருந்த அந்த மனிதசிலை. இவை ஒவ்வொன்றையும் காணக்காண ஷேனாவின் இதயம் குதிரையில் ஏறி ஓட ஆரம்பித்திருக்க... அரண்ட விழிகளுடன் இவை அனைத்தையும் அவன் பார்த்துக் கொண்டிருந்த நேரம், இரக்கமற்ற முகபாவத்துடன் நின்றிருந்த அந்த சிலையின் கைகளில் பெரும் கொத்தாக இருந்த சங்கிலிகளுக்கு நடுவிருந்து ஒரு கோளை உருவியெடுத்த இருளரசன், "ஷேனா... இங்கு வந்து நில்", என அவனை அரட்டியபடி, மேடைக்குக் கீழே சிலைகளுக்கு மையத்தில் இருந்த சிறு குழி போன்ற ஓரிடத்தைக் கைகாட்டி நின்றார்.
இவ்வளவு நேரம் இல்லாத குழி இப்போது எப்படி வந்தது என சிந்தித்தபடியே, இருளரசன் காட்டிய குழியினுள் இறங்கிய ஷேனா, நடுக்கத்துடன் நிற்க.. அவன் மூளை கதறியது இனி நடக்கப்போவதை நினைத்து.
மீண்டும் ஒருமுறை அதே வலி... அதே வேதனை... எலும்பு முறிய, தசைகள் விரிய, நரம்புகள் அறுந்து இதயம் தன் துடிப்பை நிறுத்திடத் துடிக்கும்படியான அதே வலி.. அதையெல்லாம் நினைவு கூர்ந்த ஷேனா, என்றும் போலவே இன்றும் மௌனமாக தான் நின்றான்.
இருளரசன், அந்த கோளிலிருந்த மாய விசையை ஷேனாவை நோக்கி செலுத்திட.. விசையின் தாக்கத்தினால் எழுந்த வலிகளை தன்னுள் அடக்கிக்கொண்டு பல்லை கடித்தபடி நின்றான் ஷேனா. தன் கையிலிருக்கும் கோளின் உச்சியிலிருந்த நீள்வட்ட உருளையில் ஷேனாவின் உயிர்சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பிடுவதை, பேராசைப் பொங்கும் விழியில் பார்த்தபடி நின்றிருந்தார் இருளரசன். மெல்ல மெல்ல அந்த உருளையில் ஷேனாவின் ஆற்றல்கள் நிரம்பிக் கொண்டிருக்க... அது முழுவதுமாக நிரம்பிய அடுத்தநொடி, ஷேனாவின் மீதான தன் விசையை இன்னும் இருமடங்காக அதிகரித்த இருளரசன், ஷேனாவிடம் இருந்து இழுக்கும் சக்தியை மறுபக்கமாக மேடை மீதிருந்த சிறிய சிற்பத்தை நோக்கிச் செலுத்தத் தொடங்கினார்.
அதுவரையில் சாதாரணமாகவே இருந்த ஷேனாவின் உடல், இப்போது அந்த கொடிய சிற்பத்தில் கலக்கும் அவனது உயிர்சக்தியின் தாக்கத்தால் மெல்ல மெல்ல கறுமை படரத் தொங்கியது. அவனுக்கு இருந்த வலியில் இது பலமடங்கு அதிகமான வலியைக் கொடுக்க.. தாங்க முடியாதவன் கத்தவும் முடியாமல், கைகள் இரண்டையும் இறுக்கமாக மூடிக்கொண்டு.. கண்களையும் மூடிக்கொண்டு.. தரையில் கரத்தை அழுத்தமாக அழுத்தியபடி, மண்டியிட்டுச் சரிந்தான்.
வலி பொறுக்காமல் பல்லைக் கடித்த நிலையில் தலைகுனிந்து இருந்தவனது பாதத்திலிருந்து மெல்ல மேல்நோக்கிப் படர்ந்துகொண்டே சென்ற கறுமை, அவன் நெஞ்சினில் பரவத் தொடங்கிய அந்தநொடி, சடாரென சுவற்றில் தூக்கி எறியப்பட்டு பத்தடிக்கு அப்பால் சென்று கீழே விழுந்தார் இருளரசன்.
அதேநொடி ஷேனாவும் மயங்கி தரையில் விழ... அடர்சிவப்பு நிற ஒளியை அவ்விடமெங்கிலும் பரப்பிக்கொண்டு, அந்த அறைக்குள் இருந்த இருளை விரட்டியடித்தபடி அவன் கழுத்திலிருந்து மேலெழும்பிய உறவுசங்கிலி, அவனையும் சேர்த்துத் தூக்கியபடி காற்றில் மிதக்கத் தொடங்கியது. அதேநேரத்தில், அங்கிருந்த ஆறு பெறும் சிலைகளில் இதுவரை சேமிக்கபட்ட ஷேனாவின் சக்திகளுடன் சேர்த்து, அதில் ஏற்கனவே இருந்த சக்திகளும் இணைந்து அதிவேகமாக அவனுள் சென்று இறங்கத் தொடங்கியது.
தன் கண் முன்னே நடக்கும் காட்சியை நம்பமுடியாமல்.. நம்பாமல் இருக்கவும் முடியாமல் வாயைப் பிளக்காத குறையாக விழிகள் இரண்டும் வெளியே விழுந்திடும் அளவிற்கு ஷேனாவை பார்த்துக் கொண்டிருந்தார் இருளரசன்.
சிவப்பு ஒளி தன்னைச் சூழ.. உறவுசங்கிலியின் தயவால் மயங்கிய நிலையிலேயே அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த ஷேனாவை விதிர்விதிர்த்து போய் இருளரசன் பார்த்துக் கொண்டிருக்க.. சிலைகளின் மொத்த சக்தியும் ஷேனாவினுள் இறங்கி முடித்த நொடி, காற்றிலேயே நிமிர்ந்து நின்றவனின் கண்கள் அகலத் திறந்துக்கொண்டது. அவன் விழிகள் இரண்டும், உறவுசங்கிலியின் மாணிக்கத்தை ஒத்த நிறத்தில் அடர்சிவப்பு வண்ணமாக பிரகாசித்து ஜொலித்திட... இருளரசனின் உதடுகள் முணுமுணுத்தது அந்த பெயரை. ஷ்ருஷ்யத்.
சொல்லி, வாயைமூடி, ஒரேயொரு நொடிதான் கடந்திருக்கும்.. ஒளி மொத்தமும் மறைந்து அவ்விடத்தை பழையபடிக்கே இருள் ஆக்கிரமித்தது. அப்படியே மெல்லமாக தரையில் விழுந்தான் ஷேனா.
நிகழ்ந்ததை ஜீரணிக்க முடியாமல் வாயடைத்துப்போய் நின்றிருந்த இருளரசனின் பார்வை நிலைக்குத்தி நின்றது என்னவோ ஷேனாவின் கழுத்தில் கிடந்த உறவுசங்கிலியின் மீது தான். "இந்த ஆபரணம்??.. இது எப்படி ஷேனாவிடம்??... இது இவனிடம் இருக்கிறதென்றால்... இவன்?..", என புலம்பியவரின் கண்ணில் அத்தனை மிரட்சி. இதுநாள் வரையில் அவர் கண்ணில் தோன்றிடாத புத்தம்புது மிரட்சி.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro