Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

12. இரண்டாம் திருப்புமுனை

தங்கநிறத் துகள்களால் ஆனா குழந்தை உருவம் ஒன்று அவள் கைகளில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்க... அதைக் கட்டுப்படுத்த வேண்டி மாயங்களை உபயோகித்தாவது தன் கவனத்தை திசை திருப்பி, மனதுக்கு கொஞ்சம் அமைதி தேடிக் கொண்டிருந்தாள் ஷிவேதனா. அவளின் ஒரு கையில் குழந்தையின் மாய தோற்றம் இருக்க.. மறுகையில், புதிகாக வந்த உறவு சங்கிலி.

எப்போது அந்த உறவுசங்கிலி அவள் கைக்கு வந்ததோ அந்த நொடியிலிருந்து அவள் மனம் அமைதி கொண்டிருக்கவில்லை. நினைவுகள், தன் மருமகனைச் சுற்றிச் சுற்றியேதான் வந்துக்கொண்டிருந்தது. விரல்கள், புதிதாக வந்த உறவு சங்கிலியையே தான் வருடிக் கொண்டிருக்கிறது.

குழந்தையின் மாய தோற்றத்தின் மீது கவனம் செலுத்துகையில் இருநொடிக்கு மனம் அமைதி கொண்டால், மறுநொடி அவள் மருமகனின் முகம் கண்முன் தோன்றிடுகிறது. என்னதான் சமாதானம் சொன்னாலும் அவள் மனம் ஏற்க மறுக்கிறது.. அவள் மனதை இப்போது நிறப்பியிருப்பது 'அபி என்னை மொத்தமாக வெறுத்து விட்டான்' என்ற எண்ணம் மட்டுமே.

கையிலிருந்த மாய தோற்றத்தையும் உறவுசங்கிலியையுமே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் திடீரென கருமை சூழ்ந்துக்கொள்ள.. பொன் துகள்களால் ஆகியிருந்த அந்தக் குழந்தை-உருவம், சட்டென கரும்புகையாகி காற்றில் கலங்கியது. அவளின் மறுகையில் இருந்த உறவுசங்கிலி, ரத்தம் நெருப்பாக மாறி எரிவதுபோல் காற்றில் இரண்டடிக்கு எழும்பி எரியத்த தொடங்கியது. இவை இரண்டையுமே கவனிப்பதற்கு ஷிவேதனாதான் சுயநினைவு கொண்டிருக்கவில்லை.. வசியத்திற்கு கட்டுபட்டு வாயிலைத் தாண்டி இருளுக்குள் நடக்கத் தொடங்கினாள். அவள் சென்றதும் அந்த அறையில், உறவுசங்கிலி மட்டுமே அந்தரத்தில் பறந்தபடி எரிந்துக் கொண்டிருந்தது.

அதேநேரம் காத்யாயினி, ராணாவையும் சமாராவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டப்பின் மீண்டும் மாளிகைக்குள்ளே வந்திருந்த இருளரசன், அமைதி சூழ்ந்த ஒரு பாதையின் வழியாக நடக்கத் தொடங்கினார். ஆங்காங்கே நிற்கும் சிப்பாய்கள் கூட அந்த வழியில் காணவில்லை. கண்ணுக்குத் தெரிவது ஒன்றே ஒன்றுதான். ஒற்றையடி பாதை போன்ற அந்த நீண்ட நடைபாதையில் முட்டுச்சந்து போல் முடிவாக இருக்கும் வினோதமான பிரம்மாண்டக் கதவு.

அதிசயம்! அந்த ஆழ்ந்த இருளில் கூட அது கண்ணுக்கு தெரிகிறது. அதிலிருந்து ஒளியெல்லாம் எதுவும் வெளிப்படவில்லை, ஆனால் பார்வைக்குத் தெளிவாக தெரிகிறது. மின்னும் தங்கத்தின்மேல் கரியைப் பூசி வைத்திருப்பது போன்ற நிறத்தில், இருபுறமும் தள்ளித் திறப்பது போன்ற அந்த கதவில் உருளை உருளையாக தங்க உருளைகள் அரைவட்டம் போல இருக்க.. அந்த அறைவட்டத்தின் நடுவே இருந்தது கதவின் கைபிடி. ஒருவேளை, ஜொலிக்கும் தங்கத்திலிருந்து வெளிவரும் ஒளியை அதன்மீது பூசப்பட்டிருக்கும் கரியநிறம் மறைப்பதால்தான் ஒளியே இல்லாதது போல் தெரிகிறதோ என்னவோ..

யாரும் வந்துபோகாத அந்த தனிஅறையின் இரு கதவுகளையும் தன் கைகலாலேயே தள்ளித்திறந்து உள்ளே நுழைந்த இருளரசன், வாயில்முதல் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளத்தில் நேராக நடக்கத் துவங்கினார். இருள்மாளிகையின் மற்ற அறைகளைப் போலெல்லாம் இல்லை அந்த அறை.. சுற்றிலும் தீக்கம்பங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாய் நின்று அறைக்கே ஒளி தந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும், இருளின் சாயல் அங்கு அதிகமாகவே தென்பட்டது. மேலும், அது ஒரு ராஜசபை கூடும் இடம்போல் தெரிந்தது.

நேராக சென்ற சிவப்புக் கம்பளம், நான்கு படிகட்டுகளைத் தாண்டியிருக்கும் சிறிய மேடையில் சென்று முடிந்தது.. அந்த மேடையின் மறுமுனையில், தோராயமாக ஒரு முப்பது படியாவது மேல்நோக்கி சென்றிருக்கும். அதன் முடிவில், ஒரு மாபெரும் ராஜ சிம்மாசனம்.

கீழிருந்து நேராக கம்பளம் செல்லும் வழியின் இருபுறமும் இரண்டிரண்டு சிறிய ஆசனங்கள். அந்த நான்கு ஆசனங்களுக்கு முன்பாகவும் இருளரசனை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும் ஏதோ ஒன்று, கரிய நிற போர்வையால் போர்த்தப் பட்டிருந்தது. அவைகள், மனித உருவம் கொண்ட ஏதோ ஒன்றுதான் என்பது போர்வைக்கு கீழே தெரியும் இரு கால்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அதேநேரம், அவைகள் நான்கின் கால்களிலும் சங்கிலிகள் கோர்க்கப்பட்டிருந்தது.

கீழே, இந்த நான்கு சிலைகள் இருக்க.. மையத்தில் இருக்கும் மேடையில், இருளரசனை நினைவூட்டிட்டும் தோற்றத்தில், அவர் உயரத்தை ஒத்த ஒரு சிலை. நான்கு சிலைகளின் கால்களிலும் கோர்க்கப்பட்டிருக்கும் சங்கிலிகளும் ஒரே கொத்தாக மேடையிலிருக்கும் சிலையின் கையில் இருக்க.. அந்த சங்கிலி கொத்தை, தனக்கு அருகிலிருக்கும் ஏதோ ஒன்றிடம் குடுக்க முனைந்த நிலையிலேயே அது சிலையாகி இருந்தது. அதை ஏதோ ஒன்று என சொல்வதை விட, அலங்கோலமாக்கப்பட்ட முப்பது-அடி அரக்க சிலை என்றே கூறலாம்.

வாயிலில் நுழைந்த இருளரசன் நேராக வந்து நின்றது, மேடையில் அவரைப்போன்றே இருக்கும் அந்த சிலையின் முன்னால் தான். "தேவா!... காலம் மீண்டும் சுழலத் தொடங்கிவிட்டது தேவா!! தொடங்கிவிட்டது.. ஹஹாஹ்!!.", அவர் கண்ணிலும் முகத்திலும் மகிழ்ச்சியின் வெறி முழுதாக பரவியிருந்தது.

"தொடங்கிவிட்டது மீண்டும் ஒரு ஆதிகாலம்...", சிலையை நோக்கியிருந்தவர் இப்போது சபையின் புறமாகத் திரும்பி, இரு கைகளையும் விரித்துவைத்து உறக்கக் கத்திச் கூச்சலிட.. யாருமே இல்லாத அந்த வெற்று அறையில், பலர் உற்சாகமாக கொண்டாடும் ஆரவார ஓசை தெளிவாகவே கேட்டது. ஆனால், கண்ணுக்குத் தான் யாருமே தெரியவில்லை.

இரு நொடிக்கு அதே ஆனந்த வெறியுடன் வெற்று சபையை பார்த்திருந்தவர், "ஆனால் தேவா.. ராணாவை மீண்டும் அழைத்ததன் காரணம் இப்போது-..", மீண்டும் சிலையை நோக்கி திரும்பியவர், பெருமூச்சுடன் தன் சொற்களை முடிக்காமல் நிறுத்திக்கொண்டார்.

"...... நான் அறிவேன் தேவா.... அவனை அந்த அமில அகழியை விட்டு தூரமாக வைக்க வைக்க நம் திட்டங்களும் நிறைவேறத் தாமதமாகும், அவன் நினைவுகளின் மீட்சிக்கும், அபார சக்திகளுக்கும் வலிமை கூடும். .. .. .. ஆனால், ஜ்வாலாங்கினி இருக்கும் இடத்தில் அவன் இருக்க வேண்டாம். அதைவிட பெருந்தோல்வி நமக்கு வேறில்லை.. அவன் சக்திகள் கூடினால் என்ன?, நம் அரக்க சேனைகள் உள்ளதே நம்மிடம். அவனை நம் சேனையில் இணைப்பது என் பொறுப்பு தேவா.. .. இருள் ராஜ்யம் ஓங்குக!!!", சிலையிடம் தீவிரமாக சூழுரைத்தவர், மீண்டும் சபையை நோக்கிக் கத்த, "இருள் சாம்ராஜ்யம் ஓங்குக!! இருள் சாம்ராஜ்யம் ஓங்குக!!", கண்ணுக்குத் தெரியாத கூட்டத்தின் பின்பாட்டு, இப்போது அந்த சபையை நிறைத்தது.

✨✨✨

இருள்மாளிகையின் வெளிபுறத்தில், திடீரென சுயநினைவிற்கு வந்தாள் ஷிவேதனா. எங்கு நோக்கினும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க... தான் எப்படி இங்கு வந்தோம் என்பது புரியாமல் விழித்தவளின் செவியை அடைந்தது அந்த முணங்கள் சத்தம்.

"அம்...ம்மா.. ... ம்மா..", வலியில் பிதற்றும் அந்த அழைப்பு தன் மகனுடையதுதான் என உணர்ந்தவள், அதிர்ந்துபோய் அவன் பெயரைக் கூவி அழைக்க.. மீண்டும் அழுகையுடன் மிக அருகிலேயே கேட்டது அதே முணங்கல் சத்தம். ஷிவேதனாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசியத்தொடங்க... அப்படியே கீழே அமர்ந்தவர் தன் கைகளைக் கொண்டு இருளில் துளாவித்துளாவி தன் மகனைத் தேடத் தொடங்கினார். ஆனால் எந்த முயற்சியும் கைக்கொடுக்கவில்லை.

அவள் மனம் கிடந்துத் துடித்தது. மகனை கண்டுபிடிக்க முடியவில்லையே என தன்னை தானே சபித்தது. அந்நேரம், இருளுக்குள் உதவியை தேட வழியே இல்லாமல் இருந்த அந்தநேரம், திடீரென பிரகாசித்து ஜொலித்தது ஒரு செந்நிற ஒளி. அவர் கழுத்திலிருந்த உறவுசங்கிலின் வாயிலாக வந்த அந்த ஒளி. இறுதியாக, அவளுக்கு கை கொடுத்ததும் அதே ஒளிதான்.

உறவுசங்கிலி இப்படி ஒளிரக்கூடியதா என அவர் ஆச்சரியத்துடன் பார்க்கும்போதே ஷேனாவின் முனங்கள் சத்தம் மீண்டும் அவர் செவிகளை வந்தடைய. இம்முறை எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஷேனாவை கண்டுபிடித்துவிட்டார்.

"ஷேனா.. ஷேனா என்னானது உனக்கு.. எழுந்திரு கண்ணா..", உறவுசங்கிலியின் உதவியால் தன் மகனைக் கண்டுகொண்டவர் அவனை அப்படியே தூக்கி மடியில் வைத்து எழுப்பிப்பார்க்க, ம்ம்ஹும்.. ஒரு முன்னேற்றமும் இல்லை. அவன் மயக்கத்தில் இருந்த நிலையிலேயே வலியில் முணங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து துடித்தவர், மகனின் கைகள் இரண்டிலும் ரத்தம் வழிந்தோடியிருக்கும் அந்த ஆழ்ந்த விஷக்காயத்தையும் பார்த்துவிட.. அடுத்த நொடியே அவனை கையில் தூக்கிகொண்டு நடக்கத் தொடங்கினார். ஷிவேதனாவின் கழுத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தபடி உயர்ந்த அந்த சங்கிலியும் அவர்களுக்கு வழிகாட்டியாக மாறிட, அதன் உதவியுடன் தங்கள் அறையை நோக்கி விரைந்தார் ஷிவேதனா.

மகனுடன் தன் அறையை அடைந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியாக இருந்தது அந்த நிகழ்வு.. அவள் அறையைவிட்டு செல்லும்போது எரியத்தொடங்கிய மற்றொரு உறவுசங்கிலி, இன்னுமும் அப்படியே எரிந்துக்கொண்டிருக்க.. இப்பொழுது, ஷிவேதனாவிற்கு வழிகாட்டியாக இருந்த உறவுசங்கிலியும் அதனுடன் சேர்ந்து எரியத்தொடங்கியது.

நொடிகள் கடக்க.. ஷிவேதனா அதிர்ச்சியில் உறைந்துபோய் வாயிலிலேயே நிற்க.. உறவுசங்கிலிகள் இரண்டும் எரியும் நிலையிலேயே மெல்ல மெல்லச் சுற்றத்தொடங்கி, பம்பரம் போல் வேகமாக சுற்றத் தொடங்கியது. அதன் விசையிலிருந்து ஒருவித சிவந்த துகள்கள் மினுமினுப்புடன் தரையில் கொட்டிட.. அதை பார்த்த ஷிவேதனாவின் உதடுகள், ரத்த பஸ்பம்! என முணுமுணுத்தது. கண்கள் அதிர்ச்சியுடன் அகல விரிந்தது.

ஒருசில நொடியிலேயே ஒரு கைப்பிடிக்குள் அடங்கிடும் அளவிற்கு அந்தத் துகள்கள் சேர்ந்ததும், உறவுசங்கிலிகள் இரண்டும் தானாகவே அடங்கிட.. மகனை விரைவாக மெத்தையில் கிடத்தியவர், அந்த சிவப்புத் துகள்களை எடுத்து அவனின் விஷக் காயங்களின் மேல் பூசினாள். அதேநேரம் உறவுசங்கிலிகளும் மெல்லமெல்ல கீழிறங்கியது.

மகனின் காயத்தில் அந்த ரத்த பஸ்பத்தை பூசி முடித்தவள், முதலில் கீழே வந்த தன்னுடைய உறவுசங்கிலியை தன் கழுத்திலேயே மீண்டும் அணிந்துக் கொண்டு, அதைத் தொடர்ந்தே வந்த மற்றொரு சங்கிலியை கையில் பிடிக்க முயல.. அவள் கையிலெல்லாம் சிக்காத அதுவோ, நேராகச் சென்று ஷேனாவின் கழுத்தில் தானாக மாட்டிக்கொண்டது.

வழக்கம்போல, இதை டிவியில் பார்த்த காலா, "சேர வேண்டிய இடத்துல போய் சேந்துருச்சு..", நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

✨✨✨

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro