11. முதல் திருப்பு முனை
விடியல் பொழுது தொடங்கி வெகுநேரம் கடந்திருந்தது. இருள் மாளிகையினுள் அவன்பாட்டிற்கு உலாவிக் கொண்டிருந்தான் ஷேனா. காலை விடிந்தப்பின் இவ்வளவு நேரம் ஆகியும் இருளரசன் தன்னை அழைக்காததால், அவனாகவே உணவுக்கூடம் சென்று தனக்கும் அன்னைக்கும் என இரு உணவுத் தட்டுகளை எடுத்துக்கொண்டு அன்னையிடம் சென்றான். வழக்கம்போல் அவனையே எதிர்நோக்கி அறைக்குள் காத்திருந்த ஷிவேதனா, இன்று அவன் சீக்கிரமே வந்துவிட்டதை அதிசயித்துப் போய் பார்த்தார்.
"ஷேனா... என்ன, இன்று விரைவாக வந்துவிட்டாய்?", அவன் கைகளில் இருந்த உணவுத் தட்டுகளை வாங்கிக்கொண்ட ஷிவேதனா, உணவுமேஜையை நோக்கி நடந்துகொண்டே கேட்க", இன்று தந்தையை காணவில்லை அம்மா..", சாதாரணமாக கூறியபடி அன்னையைத் தொடர்ந்து நடந்தான்.
அவன் வார்த்தைகளைக் கேட்ட ஷிவேதனாவின் இதழோரம் வெறுமை கலந்த புன்னகை ஒன்று தோன்றியது... "அரசர் மெய்யாகவே எங்கேனும் மாயமாக மறைந்து போனால் நன்றாகத்தான் இருக்கும்...", என மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டவர், "சரி வா ஷேனா. உனக்கு உணவூட்டுகிறேன்..", என அவனை தன்னுடன் அமரவைத்து உணவை ஊட்டிவிடத் தொடங்கினார்.
உணவை ஊட்டிக்கொண்டே, அவன் கேட்கும் கற்பனை கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த ஷிவேதனா, திடீரெனக் கேட்ட ஒரு குழந்தையின் அழுகுரலால் திடுக்கிட்டு வாயிலை நோக்கினார். அதேபோல் ஷேனாவும் குழப்பமாக வாயில் பக்கமாக திரும்பினான்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டால் அதைத் தூக்கிச் சமாதானம் செய்யவேண்டும் என்றுதான் எந்த தாய்க்கும் தோன்றும். ஆனால் இக்குரலைக் கேட்டநொடி ஷிவேதனாவின் நாடி நரம்பெல்லாம் பயத்தில் நடுநடுங்கத் தொடங்கியது. திடீரெனக் கேட்ட அந்த குழந்தையின் அழுகுரல் யாருடையது என்பது ஷிவேதனாவுக்கு தெரியவில்லை என்றாலும் அது சமாராவின் குரல்தான் என்பது ஷேனாவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அக்குரல் யாருடையது என்பதுகுறித்து ஷிவேதனா சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே வாயிலில் ஒரு உருவத்தின் நிழலாடியது. அதனை கவனித்தவர், "யாரது வாயிலில்?", எனக் குரலெழுப்ப... இம்முறை ஷிவேதனாவின் குரலுக்கு எவ்வித தயக்கமும் காட்டாமல், ஒளி நிறைந்த அந்த அறையினுள் நுழைந்தான் ராணா. அவன் நுழையும்போதே எதன் காரணமாகவோ ஷேனா அவனை முறைக்கத் தொடங்கியிருக்க... வாயிலில் இருந்தவன் மெல்ல மெல்ல தன் அன்னையை நெருங்கி வருவதைக் கண்டு பட்டென எழுந்து தன் அன்னை மடிமீது ஏறி அமர்ந்து கொண்டான்.
இவ்வளவு நேரமும் ராணாவை நோக்கியபடி இருந்த ஷிவேதனா, தன் மகனின் இந்த திடீர் செயலால் ஷேனாவை நோக்கித் திரும்ப... அப்போதுதான் கவனித்தார் ராணாவை நோக்கிய அவனின் கோபப் பார்வையை. அதைப் பார்த்து குழம்பியவாரே, "ஷேனா... நீ இவனை அறிவாயா?? இவன் உன் தோழனா?", ராணாவை சுட்டிக்காட்டி கேட்டவாறே தன் மகனை நோக்க.., "இவன் ராணா மட்டும்தான்... தோழனெல்லாம் கிடையாது...", என பதில் மொழிந்தவனின் புருவங்கள், இன்னுமும் ராணாவை நோக்கி முறைத்துக் கொண்டேதான் இருந்தது. அதைக் கண்ட ஷிவேதனா சிரித்துக்கொண்டே, "இங்கு வா கண்ணா.", அன்னநடையிட்டு வருபவனைத் தன் கைகளை நீட்டி அழைக்க... மெல்ல மெல்ல அவளருகில் வந்து சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டான் ராணா.
ராணாவை பார்த்து மென்மையாக புன்னகைத்த ஷிவேதனா, ஷேனாவின் உணவிலிருந்து ஒருவாய் எடுத்து அவனிற்கு ஊட்டிவிட... அறைக்குள் நுழைந்ததிலிருந்து ஷிவேதனாவின் முகத்தின் மீது பதித்தத் தன் பார்வையை மாற்றாமலேயே அதைப் பெற்றுக்கொண்டான் ராணா. அதேநேரம், சமாராவின் அழுகுரல் இன்னும் வேகமாக அதிகரிப்பதை உணர்ந்து படக்கென எழுந்து நின்றான். என்னவென்று ஷிவேதனா அவனைப் பார்க்க.. ராணா என்ன நினைத்தானோ, சட்டென அவளின் கன்னத்தில் தன் பிஞ்சு உதடுகளைப் பதித்துவிட்டு மறுநொடியே அவள் மடியில் அமர்ந்திருந்த ஷேனாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு எங்கோ ஓடினான்.
ஒன்றும் புரியாத ஷேனா, தன் அன்னையை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ராணாவின் இழுப்புக்கு ஏற்றவாறு அவனைத் தொடர்ந்து செல்ல... இங்கு, ராணா கொடுத்த முத்தத்தில், அவனையும் ஷேனாவோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தான் தோன்றியது ஷிவேதனாவுக்கு.
ஷேனாவை இழுத்துக்கொண்டு ராணா வந்து நின்றது இருள்மாளிகையின் கிழக்கு வாயிலில் தான். காத்யாயினி மற்றும் சமாராவுடன் முத்துமாளிகைக்குப் புறப்படத் தயாராகி, அவன் வெளியே வந்த சமயம் திடீரென வீரிட்டு அழத் தொடங்கினாள் சமாரா. சில கணம் அமைதியாக அவளையே பார்த்திருந்த ராணா, அவள் உதிரத்திற்காகத் தான் அழுகிறாள் என்பதை உணர்ந்து, தனது கரத்தை அவள் கரத்தினுள் வைக்க.. ஏனோ அவன் கரத்தைத் தட்டிவிட்டாள் சமாரா. மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் அவள் அப்படியே செய்துக் கொண்டிருக்க.. விறுவிறுவென மாளிகையினுள் ஓடிவிட்டான் ராணா.
தன் மகனின் செயலுக்குக் காரணம் புரியாத இருளரசன், குழப்பம் குடிகொண்ட முகத்தோடு வாயிலில் நின்றுக் கொண்டிருக்க... அவரருகிலேயே நின்றிருந்த காத்யாயினியின் கையில் இருந்த சமாரா, ஏன் எதற்கென்றே தெரியாமல் வீலென அழுதுக் கொண்டிருந்தாள். அதைக்கண்ட ராணா, தான் இழுத்துவந்த ஷேனாவின் கையை வேகமாக பிடித்து இழுத்து, அவன் மணிக்கட்டை சமாராவின் கையில் பிடித்துக் கொடுக்க... அதற்காகத்தான் காத்திருந்ததுபோல் அவன் கரத்தினில் தன் ஐவிரலின் நகங்களையும் உள்ளிறக்கினாள் அவள். ஆனால் எப்போதும் போலெல்லாம் இல்லை... இம்முறை சமாராவின் நகங்கள் அனைத்தும் அவளின் விரலுக்கு மேலாக, விரலின் பாதி அளவிற்கு வளர்ந்திருந்தது..
அவள் நகங்கள் சிறியதாக இருக்கையிலேயே ஷேனாவால் அதன் வலிகளை பொறுத்துக்கொள்ள முடியாது... இப்போது இரு மடங்காக வளர்ந்திருந்த அந்த நகங்கள் அவனின் சக்திகளையும் இரு மடங்கு வேதத்திலேயே உறிஞ்சத் தொடங்கியிருக்க... அது தரும் வலியில் துடிதுடித்து அலறத் தொடங்கினான் ஷேனா. ஆனால் அவன் அலறல்களுக்கு ஆறுதல் அளிக்கத்தான் எவரும் அங்கில்லை. மாளிகைக்கு வெளிப்புறம் இருந்ததால் ஷிவேதனாவுக்கும் இவன் குரல் கேட்க வாய்ப்பில்லை என இருளரசனும் அப்படியே நின்று விட்டார்.
சில நிமிடங்கள் கடந்ததும், தனக்குத் தேவையான சக்திகள் கிடைத்ததும் தானாகவே ஷேனாவை விடுவித்தாள் சமாரா. அதற்குமேல் தாங்க முடியாமல் ஷேனா மயங்கி கீழே சரிய.. அப்படி ஒரு ஜீவன் அங்கே இருக்கிறான் என்பதைத் துளியும் சட்டை செய்யாமல் தன் மகள் அமைதிக்கொண்டதே போதும் என சகோதரனிடம் விடைபெற்றுக்கொண்டு ராணாவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்படாள் காத்யாயினி. அவர்கள் தூரமாகச் சென்றதும் இருளரசனும் எனக்கென்னவென்று மாளிகையினுள்ளே புகுந்து கொண்டார்.
காத்யாயினியின் கையை பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த ராணாவின் செவிகளில் மட்டும், "இறக்கமது துளியேனும் நெஞ்சத்தில் இருக்கவேண்டும் தேவா" என ஒரு பெண்ணின் மென்குரல் ஓங்கி ஒலிக்க.. அத்தையின் கைபிடித்து நடந்துக் கொண்டிருந்தவன், மெல்லமாக பின்னோக்கித் திரும்பி ஷேனாவை நோக்கிட... அவனின் விழிகள் இரண்டும் கரிய நிறத்தைத் தனதாக்கி ஜொலித்து மின்னியது.
இக்காட்சியை, தன் 32-இன்ச் எல்.இ.டி டிவியில் பார்த்துக்கொண்டிருந்த காலா, ராணா செய்யும் செய்கையின் அர்த்தம் புரிந்தவனாக தன் உதடுகளை லேசாக மேல்புறம் வளைத்துச் சிரிக்க.. இங்கே இருள்மாளிகை வாயிலில், ஷேனாவின் புறமாக திரும்பியிருந்த ராணாவின் உதடுகளும் அதேபோல் கொஞ்சமாக மேல்நோக்கி வளைந்தது. டிவியில் அக்காட்சியைப் பார்த்த காலாவிற்கு, ராணா, தன்னை நோக்கியே சிரிப்பதுப்போல் தெரிந்தது.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro