Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

விதியின் ஏற்பாடுகள்!

இரவின் இருள் சூழ்ந்த அந்த மொட்டைமாடியில், நிலவின் வெளிச்சத்தில் மின்னியது அவளின் கண்ணீர் தடங்கள். தேவயாசினியிடம் பேசிவிட்டு மொபைலை அணைத்திருந்த சங்கரி, கண்ணீர் உடைந்த கண்களுடன் சிலையாகிப்போய் நின்றிருந்தாள், அவளின் எதிர்மறையான எண்ண அலைகளுடன். நாளைய அசம்பாவிதத்தை தடுக்க முடியாது தான், ஆனால் வேறு வழி இல்லையே! என்றேனும் ஒருநாளில் ரட்சகன் ஆதிலோகத்திற்குச் செல்வான் என்பது அவளுக்குத் தெரியும். அந்நாளில் தேவயாசினியை எப்படி சமாதானம் செய்ய போகிறோம் என்பது பற்றியே இத்தனை நாளும் பயந்துக் கொண்டிருந்தாளே தவிர அந்த நாளை காண அவளே இந்த உலகில் இருக்க மாட்டாள் என்பதை இன்று வரையில் ஒரு நாளும் நினைத்ததில்லை. மேலும், இந்த தகவலை எப்படி தன் கணவனிடம் கூறப்போகிறோம் என்பதையும் நினைத்து தான் அவளின் துக்கம் இப்போது இருமடங்காகிக் கொண்டிருக்கிறது.

நேரம் நகர்ந்துக்கொண்டே போனது. இப்படியே உடைந்துப்போய் இருந்தால் பிரயோஜனமில்லை, எப்படியும் அனைத்தையும் சமாளித்துதான் ஆகவேண்டும் என முடிவெடுத்தவள், நாளை என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தாள். தான் மாடிக்கு வந்து வெகுநேரம் ஆகியதை உணர்ந்து கீழே செல்லலாம் என படியின் பக்கமாகத் திரும்பியவள், அங்கே தெரிந்த ஒரு கரிய உருவத்தை கண்டு ஒருநொடி திடுக்கிட்டு நெஞ்சில் கைவைக்க... சில கணங்களுக்கு பின்பே உணர்ந்தாள், அந்த கரிய உருவம், தன் ஆசை புதல்வன்தான் என்பதை. அன்னையின் திடீர் அழுகையை கண்டு தவிப்பு நிறைந்த முகத்துடன்.. அவளிடம் செல்லலாமா வேண்டாமா என்னும் யோசனையுடன் மாடியின் ஓரத்திலேயே நின்றிருந்தான், அர்ஜுன்.

'ஆத்தி!! இவன் எப்ப வந்தான்?!' அதிர்ச்சியுடன் தன் மகனை நோக்கிய சங்கரி, "டேய்! அர்ஜுன்" அவனை கத்தி அழைக்க.. தரையை நோக்கியபடி ஏதோ தீவிர யோசனையில் மூழ்கியிருந்த அர்ஜுன், தன்னிலை உணர்ந்தவனாய் அன்னையை நோக்கி படக்கென நிமிர்ந்தான்.

"அம்மா! தோ வரேன்.." வேகமாக சங்கரியின் முன் சென்று நிற்க.. இதை கண்ட மற்றொரு உருவம், 'இவன் எப்ப டா வந்தான்?...' சின்டெக்ஸின் பின்னால் அமர்ந்தபடி விழிவிரித்து அவனை நோக்கியது.

"டேய், அர்ஜுன்.. இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?" மகனை இந்த நேரத்தில் இவ்விடத்தில் எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில் வினவ.. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவன், "அத விடும்மா, அதுவா இப்போ முக்கியம். உன் பின்னாடியே அண்ணன் வந்தானே.. அவன் எங்க?" தன் ஜேம்ஸ்பாண்ட் பார்வையை சுற்றிலும் சுழல விட்டபடி ஹஸ்கி வாய்சில் ஒரு குண்டை தூக்கிப் போட்டதில், "என்னது அவனுமா?" மீண்டும் அதிர்ந்தாள், சங்கரி. மறுநொடியே சுதாரித்துக் கொண்டவள், "அடேய், ஹர்ஷா! எங்க டா ஒளிஞ்சுட்டு இருக்க?" தன் மூத்த மகனின் பெயரை ஏலம் விட.. தம்பியை கண்டதிலிருந்தே இங்கிருந்து எஸ்கேப் ஆகும் வழியை யோசித்தபடி சின்டெக்ஸ் பின்னால் அமர்ந்திருந்தவன், "உள்ளேன் அம்மா!" அன்னையின் அழைப்பால் திடுக்கிட்டு எழுந்தவன் நேராக அவர்களிடம் வந்து சேர்ந்தான்.

"ஏன்டா... ரெண்டு பேரும் அம்மாவயே ஃபாலோ பண்றீங்களா?" சங்கரி, இருவரின் காதுகளையும் பிடித்துத் திருக, "ஆ.. ஆ.. ஆ... மம்மி வலிக்குது.." கத்திக்கொண்டே அவளின் பிடியிலிருந்து விடுபடத் திமிரினர்கள் இருவரும்.

"இந்நேரத்துல இங்க என்ன டா பண்ணுறீங்க ரெண்டு பேரும்?" சிறு முறைப்புடன் சங்கரி தன் மகன்களை நோக்க, "மொதல்ல நீ இங்க என்ன பண்ணுறன்னு சொல்லு ம்மா.." கேள்வியை அவள் பக்கமே திருப்பி விட்டான், ஹர்ஷன்.

"ஆமா, கொஞ்சம் முன்னாடி எதுக்கு அழுத நீ?"

"அப்பறம், யாரு தேவா? எங்கேயோ கேட்ட மாறியே இருக்கு எனக்கு" அடுக்கடுக்கான கேள்விகளுடன், அன்னையை குறுக்கு விசாரனை செய்யத் தயாராகிவிட்டார்கள், மகன்கள் இருவரும்.

★★★

தன் அண்ணியிடம் பேசிய பின்பே தேவயாசினிக்கு சற்று ஆறுதலாக இருக்க.. எப்படியும் ரக்ஷவனை கவணித்துக்கொள்ள அண்ணனும் அண்ணியும் வந்து விடுவார்கள் என்னும் நம்பிக்கையில் தன் இல்லத்திற்கு வந்திருந்தாள்.

நாளைதான் தன் மகனுக்கு அவனது பிறப்பின் நோக்கத்தை உணர்த்துவதற்கு இறுதிநாள். இறுதி முயற்சியாக நாளைய தினத்தில் ஒருமுறை அவனை கோவிலுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கலாம் என மனதில் நினைத்துக்கொண்டே வீட்டின் வாயில் கதவை தள்ள.. அது மெல்லமாகத் திறந்துக் கொண்டது.

"ஹ்ம்ம்.. இன்னைக்கும் பூட்டாமலே தூங்கிட்டானா? பொறுப்பில்லாத பய" மகனை வசைபாடிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தவள், கதவை தாழிடப் போன சமயம், காலையில் மித்ராவும் மயூரியும் கூறியது நினைவிற்கு வந்துவிட்டது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டவள், மகனின் இந்த பிறந்தநாளையாவது கொஞ்சம் விசேஷமாக கொண்டாடலாம்.. இனி நினைத்தாலும் அதை காண முடியாது என கதவினை சாத்தி மட்டும் வைத்துவிட்டு வீட்டினுள்ளே சென்றாள்.

பத்து நிமிடத்தில் முகம், கை, கால் அலம்பிவிட்டு அடுப்பங்கறையினுள் நுழைந்த பின்பு, கண்டாள் அந்த அதிசயத்தை! மகனின் உண்மையான பொறுப்பினை! அன்னைக்கு நான்கு தோசைகள் சுட்டு ஹாட்-பாக்ஸில் வைத்துவிட்டு, மொத்த கிட்சனையும் சுத்தம் செய்துவிட்டு பாத்திரங்களையும் கழுவி வைத்திருந்தான். மகனை எண்ணி வியந்தபடி தோசையை தட்டில் வைத்தவள், சட்னியை எடுக்க.. அதை பார்த்தப் பின்பே அவளுக்கு புரிபட்டது, இந்த வேலைகளை எல்லாம் செய்தது தன் மகன் அல்ல என்பது. பார்கவி அம்மாவோ, இல்லை, மித்ராவோதான் இங்கு வந்திருக்கிறார்கள். இவன், உடன் நின்று உதவி வேண்டுமானால் செய்திருப்பான். காரணம், ரக்ஷவ் வைக்கும் சட்னியில் தேங்காய் துருவலும் தண்ணீரும் மட்டுமே மிதக்கும். உப்பு காரமெல்லாம் பெயருக்கு என்று உள்ளுக்குள் கிடக்கும். ஆனால் இந்த சட்னி, உண்மையான சட்னியை போலவே தான் இருக்கிறது.

ஒருநிமிடம் மகனை எண்ணி இவ்வளவு பெருமிதம் கொண்டோமே என தன்னை தானே நினைத்து சிரித்து கொண்ட தேவயாசினி, தோசையுடன் உணவு மேஜைக்கு வர.. அதேநேரம் கதவினை திறந்துக்கொண்டு பூனை நடையிட்டு வீட்டினுள் நுழைந்தாள், மயூரி.

"தேவா ம்மா! சொன்னமாறியே கதவ தெறந்து வச்சுட்டீங்களே!" மிக மிக மெல்லியக் குரலில் கூறியபடி உற்சாகத்துடன் ஓடிவந்தவள், தோசையில் ஒரு வாய் பெற்றுக்கொண்டாள்.

"ஹம்.. இல்லனா ஜன்னல ஒடச்சுட்டு வந்துருவீங்கள்ல அக்காவும் தங்கச்சியும்"

"ஹிஹி.. ஆமா, ஆமா. வந்துருவோம்." இன்னும் ஒரு வாய் தோசையினை பெற்றுக் கொண்டாள்.

"சரி, மித்ரா எங்க டி?"

"அக்கா, கேக் செஞ்சுட்டு இருக்கா ம்மா. நீங்க வர்றத பாத்துட்டு தா நா வந்தேன். ஆமா, அவன் நல்லா தூங்கீட்டான் தானே? திடீர்ன்னு எந்திரிச்சுற மாட்டானே?"

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல மயூ.. எட்டு மணிக்குத் தூங்குனா காலைல எட்டு மணிக்கு தா எந்திரிப்பான். எடைல அவன எழுப்புறது முடியவே முடியாது. இன்னைக்கு நீயே அனுபவிப்ப பாரு."

"ஹ்ம்ம்.. அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம், ம்மா. இப்போ, நீங்க சீக்கிரம் சாப்புடுங்க. நா போய் டெக்கரேஷனுக்கு திங்ஸ்லாம் எடுத்துட்டு வந்துறேன்." வந்தது போலவே சத்தமில்லாமல் புறப்பட்டாள், அவள்.

பின், தேவயாசினி உணவினை உண்டு முடிக்கவும், மயூரி, அலங்காரப் பொருட்களுடன் வருவதற்கும் சரியாக இருக்க.. இருவருமாகச் சேர்ந்து ஹாலிலேயே அலங்காரத்தை தொடங்கினார்கள்.


❣️ ✨சாகச பயணங்கள் சளைக்காமல் வரும் ✨❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro