ரட்சகனின் ஆத்ம-ஒளி நுழைவாயில்
ரக்ஷவின் பாதங்கள் அந்த புனித தளத்தின் வாயிலை தொட்ட நொடிமுதலாக அவனை சுற்றியிருந்த அனைத்துமே அவனுக்கு நிசப்தமாகியது. அவன் செவியில் ஒலித்தது ஒன்றே ஒன்று தான். ஒரு குரல். தன் பெயரை சொல்லி அழைக்கும் ஒரேயொரு மெல்லியக் குரல்.
அக்குரலை தொடர்ந்து தன்னைமறந்து முன்னோக்கி நடந்தவன் கவனிக்கவில்லை, அந்த வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருக்கிறது; அந்த பூட்டை தாண்டி ஒரு விசை தன்னை உள்ளே அழைத்துச் செல்கிறது என்பதையெல்லாம்.
அவனுக்குப் பின்னால் ஏகபட்ட விஷயங்கள் நடக்கிறது. இருந்தும், எதையும் கவனிக்காத ரட்சகனோ நேராக முன்னோக்கி மட்டுமே தான் நடந்தான். அந்த மாய தளத்தினுள் நுழைந்தவனுக்கு எதிரில் தடையாக நின்றிருந்த வாயில்களும் ரட்சகனின் வரவை அறிந்துத் தானாகவே வழி கொடுத்து நின்றது.
வெளியே, தனது சக்திகளையும் தன்னையும் அபகரிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இருவரின் பார்வையிலும் இருந்து வெகுதூரம் வந்த பின்புதான் அவன் தன்னிலையை அடைந்தான். ஆனால், ரட்சகனை முழுதாகத் தன் பிடியிலிருந்து விட்டுவிடாத அக்குரலோ, அவனை தன்னுடைய மாயத்திலிருந்து விடுவித்தக் கையோடு அடுத்த மாயக் கட்டுக்குள் வழியனுப்பிவிட்டு தான் சென்றது.
தான் நிற்கும் இடத்தின் தோற்றத்தை கண்டு அவ்விடத்திலேயே மெய்மறந்து நின்றான், ரக்ஷவன். குரலை தொடர்ந்தே உள்ளே வந்திருந்தவன், ஆலயத்தின் முக்கிய அறைக்குள்தான் இப்போது நிற்கிறான். இன்று மாலையில் அபியும் தீராவும் ஆதிலோகத்தின் மாயத்தை உணர்ந்த அதே இடம். ஆனால், அவர்கள் பார்த்தபோது இருந்த நிலையில் இல்லை அந்த மாயச் சுவர்கள் யாவும்.
தங்களின் ரட்சகன் ஒருவழியாக தங்களை பார்ப்பதற்கு இவ்விடம் வந்துவிட்டான்... தனக்கான இருப்பிடத்தை அவன் அடைந்துவிட்டான் என்பதை உணர்ந்தப் பூரிப்பில், பல வண்ணக் கலவைகளில் மின்னிக் கொண்டிருக்கிறது, அங்கிருக்கும் சுவர்கள்.
என்னதான் ரட்சகனின் உடலின் வழியே உதிரமாக ஓடும் மாயத்தின் ஆற்றலை இன்றளவிலும் அவன் உணராமல் இருந்தாலும் அவன்தான் ரட்சகன் என்பது பொய் இல்லையே! அவனுள் ஓடும் மாயத்தின் ஈர்ப்பானது அவன் அழைத்தால்தான் வெளிவர வேண்டும் என விதிமுறைகள் எதுவும் இல்லையே! அவனை மீறிய அவனின் ஆற்றல்கள் அந்த சுவர்களின் வண்ணங்களை கையில் பிடிக்குமாறு ரக்ஷவனின் மனதினுள் உந்துதல் கொடுத்தபடியே இருக்க... தயங்கித் தயங்கி மேலெழும்பிய அவன் கைகள், சில நொடி தயக்கத்தின் பின் மெல்லமாக அந்த சுவர்களின்மேல் பதிக்கப்போன சமயத்தில் சரியாக அவ்விடத்தை அடைந்தான், அர்ஜுன்.
"ரக்ஷவ், அங்க வெளிய-" பளிச்செனத் தன் கண்ணை தாக்கிய வானவில்-கலவை-வண்ண-ஒளியால் அர்ஜுனின் சொல் தடைபட்டது. அவனின் கவனம் தடம் மாறித் தன் கண்களை மூடுவதில் குறியாகிய நேரம், ரக்ஷவின் கை பதிந்தச் சுவற்றிலிருந்து வெளிபட்டு, கோவில் கோபுரத்தை தாண்டி விண்ணை நோக்கிச் சீறிச் சென்றது அந்த வண்ணக் கலவை ஒளி, ரட்சகனின் சக்தியோடு இணைந்ததின் தாக்கமாக.
அதிவேகமாக விண்ணை நோக்கிப் பாய்கின்ற வெளிச்சத்தை, அடுக்கடுக்காக இன்று சந்தித்த அதிசயங்களின் வரிசையில் அடுத்து ஒரு அதிசயமாக பார்த்திருந்த அர்ஜுனுக்கு நேரெதிரே, அந்த வண்ண ஒளியின் துவக்கப் புள்ளியிலிருந்து தெரிந்து வந்தக் கீற்று ஒன்றிலிருந்து தோன்றிய நுழைவாயில் ரட்சகனுக்காக வழி கொடுத்து காத்திருக்க... கண்ணை கூசும் ஒளியை மீறி அங்கு நடப்பவற்றை கவனித்த அர்ஜுன், அடுத்த செயலை யோசிக்கும் முன்பாக, வெளிச்சம் நிரம்பிய வெள்ளை வாயிலினுள் நுழைந்து மறைந்து போயிருந்தான், ரக்ஷவன். அவனுடன் சேர்ந்து அந்த வாயிலும் மூடிக்கொண்டது.
✨✨✨
அர்ஜுனை பத்திரமாக கோவில் நுழைவாயில் வரை அனுப்பிவிட்ட தீரா, சமாராவால் தட்டிவிடப்பட்ட அபியின் வாளை கையில் எடுத்து, அந்த பிசாசின் பிடியிலிருந்து விடுபடத் திமிறிக் கொண்டிருக்கும் தன் மாமாவின் கைக்கு வீச... தன் ஆத்மசக்தியோடு இணைந்த அவ்வாள் தன்னை நோக்கி வருகையில் என்றுமே அதை தவற விட்டிறாத அபியோ, இன்று சமாராவின் பிடியிலிருந்து விடுபடுவதே தன் ஒரே குறியாகத் திமிரிக் கொண்டிருந்தான். வௌவாளின் ரூபத்தில் இருக்கும் சமாராவோ, ராஜ பதக்கங்களின் சக்தியால் தன்னை தாக்கிய இளவரசிகளின் மீதிருந்த மொத்தக் கோபத்தையும் சேர்த்து அபியின் மீது காட்டுவது அவளின் பிடியிலேயே தெரிந்தது.
அபியின் வாள் அவன் கையை அடையாமல் நிலத்தை அடைந்ததைக் கண்டு ஒருநொடி குழம்பிய தீரா, "மாமா, என்னாச்சு உங்களுக்கு!" அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து நோக்கிட.. அப்போதுதான் கவனித்தாள், அபியின் சக்தியை அவள் உறிஞ்சிக் கொண்டிருக்கிறாள் என்பதை. தீராவின் குரல் கேட்டு அவர்களை நோக்கிய இளவரசிகளும் இப்போதுதான் அதை கவனிக்கிறார்கள்.
"தீரா, ஏதாவது செய்" ஒருபுறம் ஷேனாவின் ராஜபதக்கத்திலிருந்துத் தங்களை தாக்கிடும் அவனின் ஆத்ம சக்தியை தங்கள் இருவரின் சக்திகளையும் ஒன்றுசேர்த்து ஈடுகொடுத்துக் கொண்டிருக்கும் இளவரசிகள், தங்கள் சகோதரனை காக்க எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்றிருந்தத் தருணம், சிலைபோல் மலைத்து நிற்கும் தீராவை நோக்கிய ரக்ஷாவின் குரலை கேட்ட அடுத்தநொடி, சட்டென தன் மனதில் தோன்றியதை செய்தாள், தீரா.
கீழே விழுந்த அபியின் வாளினை கைபற்றியவள், இம்முறை, வெளவாலின் ரூபத்திலிருக்கும் சமாராவை நோக்கி அதை வீசி எறிய... சரியாக அதேநேரம், கோபுரத்தின் உச்சியிலிருந்து விண்ணை அடைந்த ரட்சகனின் ஆத்ம ஒளியானது தனியாக ஒரு கிளையாய் பிரிந்துவந்து சமாராவின் வௌவால் ரெக்கையில் குத்தி நின்ற அந்த வாளினுள்ளே பாய்ந்தது. இளவரசிகளின் சக்தியையே தாங்க முடியாத அவளுக்கு ரட்சகனின் சக்தியை எப்படி தாங்கிட முடியும்? வலியில் துடித்து அலறினாள், சமாரா.
அக்காட்சியை கண்டு தீரா உறைந்து நிற்க.. சமாராவின் அலறலை கேட்டு ஷேனாவின் கோபம்தான் அதிகரித்தது. அதன் விளைவாக அவன் சக்தி இரட்டிப்பாக வீரியம்கொள்ள.. இரெண்டே நொடியில் வீசி எறியப்பட்டார்கள், இளவரசிகள் இருவரும். நேரம் கடத்தாத ஷேனா, தனக்கு மனைவி ஆக்கப்பட்டவளிடம் விரைய.. அதேநேரம், அந்த பிசாசின் பிடியிலிருந்து கீழே விழுந்திருந்தத் தன் மாமாவிடம் விரைந்தாள், தீரா.
"சமாரா, நான் சொல்றத கேளு" அவள் இரெக்கையிலிருந்த வாளை பிடுங்கி எடுத்த ஷேனா, "இப்போ கெளம்பலாம்.. உன்னால இங்க தாக்குபுடிக்க முடியாது" வாளை எடுத்ததும் பலவீனமாகித் தன் சுய ரூபத்திற்கு மாறிவிட்டவளிடம், எப்போதும் இருக்கும் தன் உணர்வற்ற குரலில் சொல்ல.. ரட்சகனின் தூய சக்தியால் துடித்துக் கொண்டிருந்தவள் அவன் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காமல் தன் மாயவாயிலை திறந்துவிட்டாள்.
அவளை தன் கையில் தூக்கிக்கொண்ட ஷேனா, கண்களை மூடி நிமிர்ந்து நிற்க.. அவன் உடல்வழியே வெளிபட்டு பரவிய அவனின் ஆத்மசக்தியானது அந்த சுற்றுவட்டாரம் முழுவதையும் ஆக்கிரமித்ததை அடுத்து சமாராவின் மாயவாயிலினுள் சென்று மறைந்தான், அவன்.
சமாராவின் பிடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கிய தன் மாமாவின் காயத்தில் கட்டிட்டுக் கொண்டே இவையெல்லாம் கவனித்த தீரா, லேசான காயத்துடன் அவளிடம் விரைந்த இளவரசிகளின் உதவியுடன், அபிக்கு சிகிச்சை கொடுக்க அவனை அழைத்துக்கொண்டுத் தன் மாயவாயிலின் வழியாக ஆதிலோகத்திற்கு விரைந்தாள்.
❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro