Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தீரா தேடிடும் உதவி

இன்றைய பொழுது முழுக்க ரக்ஷவனின் கவசம் உடையாமல் தான் இருக்கும் என்பதால், அதற்குள், தன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிடுவதற்காக இன்று பள்ளி முடிந்ததும் தன் ஆதிலோக வீட்டிற்குச் செல்லாமல், நேராக வேதபுர (வேந்தன்யபுரத்தின் நவீன கால பெயர்) வனத்திலிருக்கும் கோட்டையை நோக்கி நடந்துக் கொண்டிருக்கிறாள், தீரா. இப்போது அவள் சிந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பது ரக்ஷவனும் வான்மதியும் தான். 

கடந்த பதினான்கு ஆண்டுகளாக ரக்ஷவன் குறித்த சிந்தனைகள் அவளை விடாமல் துரத்துவது வழக்கம்தான். ஆனால், இந்த ஓராண்டாக வானுவும் அதனுள் நுழைந்து விட்டாள். அவள், பூமியில் வாழும் சாதாரண பெண் தான், எனினும், அவளுடனான பழக்கம் தீராவிற்கு ஏனோ வித்தியாசமாகவே தெரிகிறது.

"தீரா, நீயிர் மட்டும் தனித்து வரவளித்து இருக்கின்றீர்? நீலி வரவில்லையா?" யோசனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தவளை சட்டென களைத்தது ஒரு குரல். அக்குரலை நொடியில் அடையாளம் காணத் தெரிந்தவளுக்கு, குரலின் உரிமையாளரை கண்டுபிடிக்கத் தான் சிரமமாக இருந்தது. ஓரிரு நொடிகள் மேலும் கீழுமாகத் தேடிக் கண்டு பிடித்துவிட்டாள், அந்த இரண்டு-இன்ச் உருவத்தினை. இப்போது தீரா வந்திருக்கும் அதே கோட்டையில், கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற சேவன் தான் அது.

"ஏன்டா சேவா, நான் எப்ப வந்தாலும் நீ ஏன் அவளையை கேக்குற? கண்ணுக்கு முன்னாடி நிக்குற என்னைய என்னைக்காச்சும் கேட்டுருக்கியா நீ?"

"ஹான்? நான் தான் உம்மை என் கண்ணாற கண்டு விட்டேனே! நலமாகத் தானே என் முன்னே வீற்றிருக்கின்றீர். பிறகேன் உம்மை கேட்க வேண்டும்?"

"சரிதான் போ... எப்டியாச்சும் சமாளிச்சுடுற."

"அது போகட்டும்.. நீலி எங்கே?" தன் கேள்விக்கான பதில், வேண்டுமே வேண்டுமெனப் பிடிவாதமாக நிற்பதுபோல் நின்றான், அந்த விரல் அளவு மனிதன். 

"அவள எப்பவுமே கூட்டிட்டு வர முடியாது டா சேவா. நா தா உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அபி மாமா என் கூட வந்தா மட்டும்தான் என்னால மாயலோகம் போக முடியும். அங்க போனா தா நீலிய கூட்டிட்டு வர முடியும்" என்றுவிட்டு, அங்கே மண் தரையில் கால்நீட்டி அமர்ந்துவிட்டாள். சிறிதுநேரம் அவளிடம் பற்பல கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்த சேவனும் ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிட.. அவளருகிலேயே அவனும் அமர்ந்துவிட்டான்.

சேவன் அமைதியாகியதும் தீரா மீண்டும் தன் யோசனைக்குள் மூழ்கிவிட, "அதோ! சூரர்கள் வந்து விட்டார்கள்!" திடீரென கத்திய சேவனின் குரல், அவளை நிஜத்திற்கு அழைத்து வந்தது. சேவன் சுட்டிக் காட்டிய திசையை நோக்கி நிமிர்ந்தவள், அங்கு இரண்டு நபர்கள் தங்களை நோக்கி வருவதை பார்த்துவிட்டாள். அவர்கள், அதே சூரர்கள் தான். சில நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன், தீராவின் மழலை பருவத்தில் அவளால் சகோதரன்களாக ஏற்கப்பட்டவர்கள். வேந்தன்யபுர மகா சாம்ராஜ்யம் என்னும் இன்றைய வேதபுரத்தின் பாதுகாவலர்கள். சென்ற ஜனனத்தில் செய்யத் தவறிய ஒரு செயலை செய்யவென, புனர் ஜென்மம் எடுத்திருக்கும் சகாத்ய வம்ச சூரர்கள். (இவர்களை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள தீராதீயின் மீண்டும் தொடரும் காதல் கதையை படிக்கலாம்)

எப்போது, சிசுவாக இருந்த ரட்சகனை பாதுகாக்கும் பொறுப்பு தீராவின் கைக்கு வந்ததோ அப்போதே அவள் இந்த கோட்டைக்கு அடிக்கடி வருவது வழக்கமாகி போனது. அப்படி ஒருநாள் வரும்பொழுது தான், மறுபிறப்பு எடுத்திருக்கும் சூரர்களையும் கோவன்களையும் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அதற்கு முன்பாகவே, சேவன் கூறிய தகவல்களால் அவர்கள் அனைவரும் மறுபிறப்பு எடுத்திருப்பதை அறிந்துக் கொண்டவள், அவர்கள் அறியாமலே அவர்களை தனித்தனியாக சந்தித்து வந்திருந்தாள். ரக்ஷவன் பிறந்திருந்த சமயம், அவர்கள் அனைவருக்கும் தங்கள் பூர்வஜென்ம நினைவுகள் திரும்ப வந்துவிட்டதால் அதன்பின் அவர்களே தீராவை அடையாளம் கண்டு கொண்டார்கள். முன்பை போலவே அவளை தங்களின் தங்கையும் ஆக்கிக்கொண்டார்கள். இரண்டு முறையும் அவளை பள்ளியில் சேர்த்து விட்டதும் அவர்கள் தான்.

"ஓய்,  குட்டச்சி! என்னடி? எல்லாரையும் அவசரமா கூப்டுருக்க? அதுவும் ஒரே நேரத்துல" சற்று நெருங்கி வரும்போதே தீராவை சீண்டி கொண்டு வந்தான், சரண். ஆனால் அதையெல்லாம் இப்போதைக்கு பொருட்படுத்தாதவள், "என்ன, ரெண்டு பேரு மட்டும் தா வந்துருக்கீங்க? மத்தவங்க எங்கடா?" தீவிரமாக அவர்களை நோக்க, "ஏன், எங்களுக்கெல்லாம் வேற வேல எதுவுமே இருக்காது பாரு. அவனுங்க எல்லாரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருக்கானுங்க. நீ விஷயத்த மட்டும் சொல்லு, நாங்க கன்வே பண்ணிக்கிறோம்" விடை கொடுத்தான் அவன்.

"அட பாவிகளா! கன்வே பண்ணுற விஷயம்னா நானே சொல்லிருக்க மாட்டேனா? இப்போ நா கேக்கப்போற ஹெல்ப், ஒரு நாள்ல முடிய போறது இல்லடா! எவ்வளவு நாள் போகும்னு என்னாலயே சொல்ல முடியாது. அதெல்லாம் வெளக்கமா விலாவாரியா சொன்னா தான் புரியும்" சினுங்கினாள் அவள்.

"எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு, தீருமா; அதெல்லாம் நாங்க சமாளிச்சுப்போம்." சரணுடன் வந்த முகிலர்ஜுனன் அவளை சமாதானம் செய்ய முயல... வேறு வழியில்லாமல், ரட்சகனுக்காக தான் எடுத்திருக்கும் காரியம் தொடங்கி, நாளைய ரக்ஷவனின் பிறந்தநாள் முதல் அவனது கவசங்கள் அவனை விட்டு நீங்கி, எதிரிகள் அவனை சூழப் போவதையும்; அவனும், அவனது சக்திகள் எதையும் உணராமல் விளையாட்டு பிள்ளையாக ஓடியாடித் திரிவதையும் மொத்தமாக கூறி, அந்த சின்ன பிள்ளையை ஏகத்திற்கும் குற்றம்சாடத் தொடங்கினாள், தீரா.

தான் பூமியில் தங்கியிருக்க முக்கிய காரணம் ரக்ஷவன் தான் என தொடங்கி, அவன் தவழ்க்க தொடங்கிய நாளுக்கு முன்பிலிருந்து இன்று வரையில் எப்படியெல்லாம் அவனை கண்காணித்து வருகிறாள் என கிட்டதட்ட அரைமணி நேரமாக தீரா கூறி கொண்டிருக்க.. அனைத்தையும் மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருத்தார்கள் மற்ற மூவரும்.

"அப்போ, நீ பூமியில அதிகமா சுத்திட்டு இருக்குறதுக்கு காரணம் அந்த சின்ன பையன பாதுகாக்குறது தா?" ஒருவழியாக தீராவின் வாய் ஓய்ந்தப்பின், ஒரு உறுதி படுத்தலுக்காக சரண் கேட்க, "ஆமா டா" இவ்வளவுநேரம் கதை கூறிய சோர்வால் ஒற்றை வரியில் பதில் கூறியபடி, கோட்டை வாயிலில் சரணின் நில-சக்தியால் இப்போதே உருவாக்கப்பட்ட கல் மேஜையில் அமர்ந்தாள். சரணின் சக்தி இதுவே.. நிலத்தினை அடக்கியாழவும் முடியும் அதன் அதிர்வுகளை உணர்ந்து, எதிர்வரும் ஆபத்தினை கணிக்கவும் முடியும்.

தீராவை தொடர்ந்து சரணும் முகிலும் அந்த கல் மேஜையில் அமர, "அப்படி யாரந்த கயவர்கள்? இவ்வளவு நேரமும் நீயிர் குறிப்பிட்ட அந்த சிறுவனுக்கு எவ்வாறு எதிரிகள் தோன்றினார்கள், தீரா? அதுவும், பிறக்கும் பொழுதே! எதற்காய் வேண்டி ஒரு சின்னஞ்சிறுவனை கொல்வதற்கு எண்ணுகிறார்கள் அவர்கள்?" முகிலின் இடது காலில் அமர்ந்தபடி, தீவிர முகபாவத்துடன் சேவன் கேட்டதற்கு, "அது ஒரு பெரிய கத டா சேவா" என வியந்துக் கூறி, தீரா பெருமூச்சு விட, "அத நீ சுருக்கமா சொல்லு, கேக்குறோம்." அவள் குறிப்பிட்ட அந்த பெரிய கதையை கூறுமாறு பணிந்தான், சரண்.

"எனக்கு அதபத்தி முழுசாலாம் தெரியாது. ஏதோ, தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு தெரியும். அத மட்டும் சொல்லுறேன், கேளுங்க. ஃபர்ஸ்ட்.. இப்போ நாம இருக்குற பூமியும், ரட்சகனோட இடமான ஆதிலோகமும் ஒரே நாள்ல தான் பொறந்துச்சு.. அதாவது, அதுக்கு முன்னாடி இருந்த ஒரு லோகமான பாதாள லோகத்தோட அழிவு மூலமா தா இந்த ரெண்டு உலகமும் உருவாச்சு. பிரபஞ்சத்தோட முதல் உயிர்கள் உருவானது பாதாள லோகத்துல மட்டும் தா. அது தா, இப்போ, உயிர்கள் வாழ்ந்துட்டு இருக்குற எல்லா லோகத்துக்கும் தாய் பூமி. அப்படிபட்ட எடத்துல உருவான முதல் உயிர் ஆதிலோகினி. அவங்களோட தம்பி தான் அமிழ்தபத்ரன். இப்போ நா பாதுகாத்துட்டு இருக்குற ரக்ஷவனோட முற்பிறவி" பிரபஞ்சத்தின் துவக்க புள்ளியையும் ரக்ஷவன் யார் என்பதையும் அவள் கூற.. அதை சேவன் மட்டும்தான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான், மற்ற இருவரின் முகத்தில் அவ்வளவாக ஆச்சரியம் இல்லை. அதை கவணித்துக் கொண்டே மேலும் தொடர்ந்தாள், தீரா.

"ஆதியும் சரி அமிழ்தனும் சரி.. ரெண்டு பேருமே சாதாரணமானவங்க கெடையாது.. அவங்க மாயத்தோட ரத்த வாரிசு.. அப்போ இருந்தவங்க எல்லாரும் அவங்க ரெண்டு பேரையுமே ரட்சகர்கள்ன்னு தா சொல்லுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரியே, உதவி தேவ படுறவங்க தன்னோட உதவிக்காக யாரையாவது கூப்புடுறதுக்கு முன்னாடியே இவங்க போய் முன்னாடி நிப்பாங்க. 

ஆனா, ஒரு காலத்துக்கு மேல அவங்க ரெண்டு பேரோட சக்தியுமே இருள்சக்தியோட கலக்க ஆரம்பிச்சுது. அப்போ, அவங்கலாளேயே அவங்க பவர்ஸ கன்ட்ரோல் பண்ண முடியாம போச்சு..  அதனால நெறைய மக்கள் இருள்சக்தியோட கட்டுபாட்டுக்கு போக ஆரம்பிச்சாங்க.. அவங்க ரெண்டு பேரும் தா பிரபஞ்சத்தோட தலைமை. உயிர்கள் வாழுற முழு லோகத்துக்கும் அவங்க தா காவல். அவங்களோட அந்த உயர்ந்த எடத்த இருள்சக்தி புடிக்க நெனச்சுது. அதனால, பாதாள லோகத்துல ஒரு பெரிய போரே உருவாச்சு.. அந்தப் போர் முடியுறதுக்கு முன்னாடியே இருள்சக்தி எல்லாம் ஒன்னுசேந்து, அங்க இருந்த போர்வீரர்கள்.. மாய மிருகங்கள்.. மக்கள்ன்னு எல்லாரோட ஆத்மாக்களயும்  திருடி, ஏதோ குறுக்குவழியில மந்திரம் செஞ்சு இந்த பிரபஞ்சத்தையே ஆக்கிரமிக்க திட்டம் போட்டு ஏதோ பெரிய பேரழிவ உண்டாக்க பாத்ததா எல்லாரும் சொல்லுவாங்க.. ஆனா அது என்னன்னு யாருக்குமே சரியா தெரியாது. ஏன்னா அப்போ தா பாதாள லோகம் அழிஞ்சுது. 

இருள்சக்தி கிட்டருந்து பிரபஞ்சத்த காப்பாத்துறதுக்கும் பாதாள லோகத்துல இருந்த மக்களோட ஆத்மாக்கள், அழிவு சக்திக்கு பயன்பட கூடாதுன்னும் ஆதிலோகினி தன்னோட லோகத்த தானே அழிச்சுட்டு, பூமியவும் ஆதிலோகத்தையும் உருவாக்குனாங்க. ரெண்டு உலகத்தையும் பாதுகாக்குறதுக்காக அவங்களோட ஆத்மாவ பிரபஞ்சத்துலயே கலந்துட்டாங்க. அதுமூலமா, பிரபஞ்சம் இருக்குற வரையும் அவங்களுக்கு அழிவு இல்ல.. அதேநேரம் இருள்சக்திகளோட வீரியத்த அவங்களால பாதிக்குப் பாதியா பிரபஞ்சத்துல குறைக்க முடிஞ்சது. 

ஆனா, பாதாள லோகத்துல இருந்த உயிர்கள தா அவங்களால காப்பாத்த முடியாம போச்சு.. அந்த லோகம் அழியும்போது அதுல இருந்த உயிர்கள் மட்டும் இல்ல, அவங்க யூஸ் பண்ண மாயத்தால உயிர்களோட சேந்து அதோட ஆத்மாக்களும் மொத்தமா அழிஞ்சு போச்சு.. ஆத்மா அழிஞ்சதால அவங்கள்ல யாருமே மறுபிறவி எடுக்க முடியாம போச்சு. அதுல இருந்து தப்பிச்ச ஒரே ஆத்மா ரட்சகனோடது மட்டும் தா. அதுக்கு காரணம் அவனோட காதலிக்கு அவன் குடுத்த ஜென்ம வாக்கு"

"ஜென்ம வாக்கா?" ஒரேபோல் கோரசாக ஒலித்தது, இரு சூரர்களின் குரலும். இப்போதே அவர்களின் முகத்தில் குழப்பம் படரத் தொடங்கியது. காரணம், மற்ற தகவல்களை, மையாழி மரம் கூறியதாக கோவான்கள் சொல்லக்கேட்டு முற்பிறவியிலேயே அறிந்திருந்தார்கள். ஆனால், ஜென்ம வாக்கு விஷயம் புதிது. "அது என்ன வாக்கு? ஆத்மாவ எப்டி காப்பாததுச்சு?" தன் வியப்பினை முடிந்தளவிற்கு வெளிக்காட்டாமல் முகில் கேட்க, அவர்களின் திடீர் அதிர்ச்சியை கவனிக்காத தீரா, "ஆமா.. ஜென்ம வாக்கு தா ரட்சகன் மறுபிறப்பு எடுக்க ஒரே காரணம். மாய சக்திகள் இருக்குற எந்த உயிரா இருந்தாலும், ஜென்ம வாக்க தன்னோட துணைக்கும் நெருங்குன உறவுகளுக்கும் குடுக்கலாம். இந்த பிரபஞ்சமே அழிஞ்சு போய் வாழுறதுக்கு வழியே இல்லாம போனாலும் கூட, அந்த வாக்க காப்பாத்துறதுக்காகவே வாக்கு குடுத்த ஆத்மாக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனா, ஒரே ஒரு வாய்ப்பு தா கெடைக்கும். ஒருவேள அந்த வாய்ப்ப சரியா பயன்படுத்திக்காம அந்த ஆத்மா தோத்துட்டா அது மொத்தமா அழிஞ்சு போய்ரும். அப்படிபட்ட அழிவு, பிரபஞ்சத்துக்கே பேரழிவா இருக்கும். அதனால யாரும் அத உபயோகிக்குறது கெடையாது. அவனோட வாக்கு- "

"அப்போ.. அந்த வாக்க நெறைவேத்துற ஒரே காரணத்துக்காக தா அவன் போறந்துருக்கான்னா, அது நிறைவேறுனதும் என்ன ஆகும்?" தீரா கூறிடும் முன்பே அவளை இடைமறித்தான் சரண்.

"ஒன்னும் ஆகாது. எந்த பிரச்சனையும் இல்லாம அவன் அவனோட வாழ்க்கைய சந்தோஷமா வாழுவான். மொதல்ல இப்டி குறுக்க குறுக்க கேள்வி கேக்காத.. அப்பறம் நா மறந்துருவேன்" சிலிர்த்துக்கொண்டே சீரியவளை கண்டு லேசாக சிரித்தவன் தன் கைகளால் வாயினை மூடிக் காண்பிக்க... சிறு முறைப்புடன் மேலும் தொடர்ந்தாள் தீரா.

"இப்போ அந்த வாக்க நெறைவேத்துறதுக்காக தா அவன் போறந்துருக்கான். அது என்ன வாக்குனா.. எந்த எடத்துல வச்சு இருள்சக்தி அவனையும் அவன் அக்காவையும் ஜெயிச்சு மொத்த லோகத்தொட நிம்மதியவும் கெடுத்துச்சோ, அதே எடத்துல வச்சு அந்த இருள மொத்தமா அடக்குறதா வாக்கு குடுத்தான். போர் நடத்த அந்த எடம், ஆதிலோகத்துல ஏதோ ஒரு எடத்துல இருக்குறதாவும்... ரட்சகன் அங்க வரும்போது அவன் அழிக்க வேண்டிய இருள்சக்தியும் அங்க வந்து சேந்துரும்னும் சரித்திரங்கள் சொல்லுது. ஆனா, அது பொய் சொல்லிருச்சு." சரித்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை அவள் முகத்தில் வெளிபடுத்த, "பொய்யா? அப்டி என்ன பொய் சொல்லுச்சு உன் சரித்திரம்?" அவளை வினோதமாக பார்த்துக்கொண்டே கேட்டான், முகில்.

"ரட்சகன் பொறந்து பதிநாலு வருஷம் ஆவுரதுகுள்ள அவனோட முழு சக்தியோட ஆதிலோகத்துக்கு வருவான்னும் தா அந்த சரித்திரம் சொல்லுச்சு.. நாளைக்கு அவனோட பதிநாலாவது பொறந்தநாள். இன்னும் ஒன்னும் நடக்கலையே! இதுல அவன் பொறந்ததுல இருந்து அவன அழிக்க நெனைக்குற அந்த மண்டையனுங்களுக்கு வேற இவன் இருக்குற எடம் நாளைக்கே தெறிஞ்சுரும். ஒழுங்கா மரியாதையா நா கூப்புடும்போதுலாம் வந்து, அந்த தடியனுங்க கூட சண்ட போடணும் ஆமா," முதலில் நொந்துக் கொண்டவள், இறுதியாக, தன் சகோதரன்கள் இருவரையும் மிரட்டலாக நோக்க.. அவளை கண்டு இருவரும் வாய்விட்டு சிரித்த அதேநேரம், "அதனால் அவர்களுக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது தீரா?" அந்த விஷயம் மட்டும் புரியாமல் தலையை சொறிந்தான், சேவன்.

"புதுசா எதுவும் இல்ல டா சேவா, ரட்சகன் தன்னோட சக்திகள உணர்றதுக்கு முன்னாடியே அவன அழிசுட்டா அவனோட ஜென்ம வாக்கு நிறைவேறாது. அவனுக்கு மறுபிறப்பே இருக்காது. அதனால இருள்சக்திய தடுக்க யாரும் இருக்க மாட்டாங்க. ஆதிலோகினியால அந்த இருள்சக்திய பிரபஞ்சத்துல மட்டும்தான் அடக்க முடியும். எதாவது ஒரு லோகத்துல அந்த இருள்சக்தி பரவீட்டா அத யாராலையும் தடுக்க முடியாது. அப்டியே எல்லா லோகங்களையும் கைப்பத்திறலாம். அப்படி செஞ்சுட்டா அந்த லோகங்கள்ல இருக்குற ஆன்மாக்கள வச்சு பழையபடிக்கு மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பத்திரலாம்ன்னு தா இப்போ இவன கொல்ல நெனைக்குறாங்க" சேவனுக்கு தெளிவாக விளக்கமளித்தாள், தீரா.

"அதுசரி.. இருள்சக்தி இருள்சக்தின்னு சொல்லுறியே, அவங்க யாருன்னு தெரியுமா? எந்த மாதிரி இருக்கும் அவங்க சக்திலாம்?" நாளை நிச்சயம் ஏதோ ஒரு போராட்டம் நடக்கும், அதற்கு தங்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டுமென, சரண், தீராவிடம் விளக்கம் கேட்க, "எனக்கே அதெல்லாம் தெரியல டா. அவங்க யாரு என்னன்னுலாம் ஒன்னுமே தெரியாது. அதனால தா உங்க எல்லாரையும் கூப்புடுறேன்" எதிர்மறையான பதில் கொடுத்ததற்கு, சூரர்கள் இருவரும் யோசனையில் ஆழ்ந்தார்கள்.

"ஆனா... நிழல்தேசத்தோட இளவரசன் அவங்க பக்கம் டா. அதுமட்டும் நல்லா தெரியும். ரக்ஷவ் பொறந்த அன்னைக்கு அவன்தான் எங்கள தாக்குனது. ரக்ஷவோட கவச சக்திகள் உடைஞ்சதும் கண்டிப்பா நாளைக்கும் வருவான். அவன அன்னைக்கி சமாளிக்குறதுக்கே பாதி நாள் ஆச்சு, நாளைக்கு என்ன ஆக போகுதோ!" அன்றைய நினைவை எண்ணி அவள் பதற, "ஹாஹா.. நீ கவலபடாத, தீருமா, பூமிக்கு எந்த ஆபத்து வர்றதா இருந்தாலும் அது எங்களை தாண்டி தான் வந்தாகணும். டோன்ட் வர்ரி... அந்த இருள்சக்திய நிச்சயமா நம்ம ரட்சகன் அழிப்பான். அதுவரையும் அவன பாதுகாக்குறது எங்க பொறுப்பு. ஹேப்பியா?" முகில் கேட்டதில் தீராவின் வாய், காது வரையில் நீண்டது.

"ஈஈஈ... ஹேப்பி, ஹேப்பி!! ஆனா, காப்பாத்துறது மட்டுமில்ல.. அவனோட சக்திகளையும் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வெளிய கொண்டு வந்தாகனும்." தீவிர குரலில் முடிக்க, "ம்ம்.. கொண்டு வந்துறலாம். அதுக்கு முன்னாடி அவன எங்களுக்கு ஒரு இன்ட்ரோ மட்டும் குடு. மத்தத நாங்க பாத்துக்குறோம்" சரண் புன்னகையுடன் கூற, "அதுக்கு, என்னைய மொதல்ல அவனுக்கு ஒழுங்கா இன்ட்ரோ குடுக்கணுமே டா." அவள் நொந்துக் கொள்ள, "எனில், நீயிர் யார் என்பதே அச்சிறுவனுக்கு தெரியாதா?" சேவன் வாயை பிளக்க, "ரைட்டு.." அவளை எற இறங்க பார்த்தார்கள், சூரர்கள் இருவரும்.


❣️ ✨சாகச பயணம் சளைக்காமல் வரும்✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro