தீரா
நிசப்தம் மட்டுமே ஆட்சி புரிந்துக் கொண்டிருந்த அந்த விசாலமான அறையில் பளிச்சென மின்னும் வெண்ணிற பளிங்குச் சுவர்கள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க... வெளிப்புற வெளிச்சம் உள்ளுக்குள் வராவிடிலும் செயற்கை மின்விளக்குகளுக்கான அவசியமே இல்லை என்பது போல ஒளியை தந்துக் கொண்டிருந்தது அந்த பளிங்கு சுவர்கள்.
இது ஒரு பிரம்மாண்ட நூலகம் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக கண்ணாடி கதவிட்ட முப்பதடி மர அலமாறிகள் யாவும் நேர்த்தியான முறையில், அறையின் எல்லா ஓரங்களிலும் நீள நீளமாக நிமிர்ந்து நின்றன. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலாக இருந்த அலமாரிகள், ஒவ்வொன்றும், குறைந்து ஆயிரம் புத்தகங்களையாவது தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.
பரந்து விரிந்திருக்கும் மைய அறையின் இரு ஓரங்களிலும் இரு வாயில்கள் அமைந்திருக்க... இடது மற்றும் வலது ஓரங்களில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி போடும் அளவில் குட்டி குட்டி அறைகள் வரிசையாக அமைந்திருந்தது. மௌனம் நிரம்பிய அந்த குட்டி நூலக அறைகளில் ஒன்றினுள் மலையென குவிந்துக் கிடக்கும் புத்தக குவியல்களுக்கு மத்தியில் தன் தலையை தாங்கிப் பிடித்துக்கொண்டு தவிப்பின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள், தீரா.
அவளை சுற்றிலும் பலவிதமான புத்தகங்கள் சிதறிக் கிடக்க.. அவைகளின் முகப்புகளில் "ரட்சகனின் ராஜன்" "ஆதிகால ரட்சகன்" "ஆதி வளர்த்த பத்ரன்" "ராஜனின் தோழன்" "ரட்சகனின் மும்மணிகள்" "ரட்சகனின் மறுபிறப்பு" என இருக்கும் அனைத்து புத்தகங்களும் ஆதிலோகத்தின் ரட்சகனை குறிப்பதாகவே இருந்தது.
ஆனால், அவை எவையுமே இவளின் தேடலை நிறைவு செய்திடவில்லை என்பதுபோல் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவளின் பார்வை, அடுத்ததாக எந்த புத்தகத்தை எடுக்கலாமென புத்தக அலமாரிகளின் பக்கமாக திரும்பி, அமர்ந்த இடத்திலிருந்தே அலசி ஆராயத் தொடங்கியது.
ரட்சகன் குறித்து ஆதிலோகத்தில் இருக்கும் புத்தகங்களில் கிட்டதட்ட முக்கால்வாசி தகவல்களை இந்த ஓராண்டில் மட்டுமே சேகரித்து விட்டாள் இவள். ஆனால், இவளின் கேள்விக்கான பதில்தான் இன்னும் கிடைத்தபாடில்லை. அந்த ஆதங்கத்துடன் அவள் தலை முடியை பிடித்துகொண்டு மேஜையில் தலைசாய்த்து அமர்ந்தவாறே, வேறு ஏதேனும் புத்தகத்தின் மூலம் தன் தேடலுக்கான விடை கிடைத்திடாதா என்னும் ஏக்கத்துடன் புத்தக வரிசைகளை நோட்டமிட்டு கொண்டிருக்க... இத்தனை நாளும் இல்லாமல் இன்றுதான் அவள் கண்ணில் தட்டுபட்டது அந்த வித்தியாசமான புத்தகம்.
படக்கென மேஜையிலிருந்து தன் தலையை நிமிர்த்தியவள் தூரத்தில் இருக்கும் அந்த சிறிய புத்தகத்தை வினோதமாக பார்த்து கொண்டிருக்கையிலேயே அவள் கால்கள் அந்த குட்டி அறையை விட்டு வெளியேறி நடந்தது.
சரியாக, அவள் ஆமர்ந்திருந்த அறைக்கு நேராக முதலாவதாக இருந்த அலமாரியின் கீழ் வரிசையில் கடைசியாக இருந்தது, உள்ளங்கை அளவிலான அந்த புத்தகம். அதிலிருக்கும் அனைத்து புத்தகங்களும் இரண்டு கைகளை கொண்டே தூக்க முடியும் அளவிற்கு இருக்கும் நிலையில் இது மட்டும் உள்ளங்கை அளவில் இருப்பது எதற்காக? என்னும் குழப்பத்துடன், சிறிய புத்தகங்கள் இருக்கும் அலமாரியில் இருந்து எடுத்து யாரேனும் இங்கு மாற்றி வைத்துவிட்டார்களா? என்ற யோசனையுடன், கண்ணாடி கதவை திறந்துக்கொண்டு கீழே அமர்ந்தவள், ஒற்றை கையால் அப்புத்தகத்தை உருவியெடுக்க முனைய... அவள் நினைத்த அளவிற்கு அது அவ்வளவு எளிதாக இல்லை, இரண்டு கைகளையும் உபயோகித்தே அதனை தூக்க முடிந்தது.
அப்புத்தகம் சரியாக அவளின் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. ஆனால், எடைதான் அதன் உருவத்திற்கு எதிராக இருந்தது. இரும்பினை உருக்கி அதனை காகிதங்களாக மாற்றிக் கோர்த்து வைத்தது போல் இருந்தது, அந்த உள்ளங்கை அளவிலான புத்தகம். இருந்தும் அவளுக்கு அது பெரிதாக தெரியவில்லை.
இந்த மாயாஜால உலகில் இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. பொதுவாக, இங்கிருக்கும் பாதிக்கும் மேலான புத்தகங்கள் ஒருவரின் நினைவு அல்லது பலரின் நினைவுகளை, மாயத்தால் சிறைவைத்து உருவாக்கப் பட்டவையே. அப்படி உருவாகும் புத்தகங்கள், அதிலிருக்கும் நினைவுகளின் வலிமையை கொண்டே இவ்வளவு கணமாக இருக்கின்றது.
தான் கையில் எடுத்த அந்த புத்தகத்தை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவள், அதன் முகப்பு பக்கத்தை நோக்க சகோதரன்களின் விளையாட்டுகள் என எழுதப்பட்டிருந்த முகப்புப் பக்கதில், வெள்ளை மற்றும் நீலம் என இரு உருளைகளை தாங்கிக் கொண்டிருக்கும் வெண்ணிற பெரும் நாகம் ஒன்று இருந்தது.
'இத எங்கேயோ பாத்துருக்கோமே' என நெற்றி சுருங்க குழப்பதுடன் அந்த முகப்பு பக்கத்தை பார்த்தபடியே அலமாரியை மூடிவிட்டு, தான் அமர்ந்திருந்த அதே அறைக்குள் நுழைந்த தீரா, மேஜையில் பரப்பிக் கிடந்த மற்ற புத்தகங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு உள்ளங்கை அளவிலான அந்த புத்தகத்தை மேஜையின் மேலே வைக்கும் போதே மின்னலென அவள் நினைவிற்கு வந்தது, இதற்கு முன்பாக படித்த பல சரித்திர புத்தகங்களின் நினைவுகள்.
'ஆஹ்! இது ஆதிலோகினி! அவங்க பூமியவும் ஆதிலோகத்தையும் பாதுகாக்குறத குறிக்குற படமாச்சே இது. ஆனா, சகோதரன்கள்ன்னு போட்டுருக்கு? அவங்களுக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தானே, இன்னொரு சகோதரன்? ஒருவேல, இதுல சகோதரன்னு மீண் பண்ணுறது ரெண்டு உலகத்தையோ?' குழப்பத்துடனே அவள் அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தினை விரிக்க.. அதிலிருந்து பளிச்சென பாய்ந்துவந்த ஒளி, அவள் விழிகளை தாக்கியது.
கண்களை கூசச்செய்யும் ஒளியால் ஒற்றை கரம் கொண்டு முகத்தை மறைத்தவள், ஒளியினை தாண்டி அந்த பக்கத்தை படிக்க முனைய... சட்டென அவளின் கவனத்தை ஈர்த்தது, காற்றில் எழும்பிய வார்த்தைகள். புத்தகத்திலிருந்து காட்சிபடம் போல் மேலெழும்பி, அவள் முன்னிலையில், காற்றில் மிதந்தது அந்த எழுத்துக்கள்.
"நினைவுகளின் மீட்சி சொல்லும் கணமே மெய் பொருள் விளக்கிடும் என் நினைவுகள்"
-மாயவனின் கையெழுதில்
கைகளால் முகத்தினை மறைத்த நிலையிலேயே அவ்வார்த்தைகளை வாசித்தாள், தீரா. அடுத்தநொடியே புத்தகத்தின் மறுபக்கம் தானாகத் திரும்பிட... காற்றில் எழுதியிருந்த வார்த்தைகள் மறைந்து, ஒரு காட்சிபடம் ஓடத்தொடங்கியது.
பாறைகளும் மலைகளும் சூழ்ந்த கரடு முரடான வறண்ட நிலம் ஒன்றில் இரு சிறுவர்கள் ஏகபோக மகிழ்ச்சியுடன் உற்சாகமாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது, புத்தகத்திலிருந்து அவ்வளவாக வெளிச்சம் வராததால் முகத்தை மறைத்திருந்த கரத்தை விளக்கிவிட்டு நன்றாகவே அந்த காட்சியை பார்த்தாள் தீரா.
குட்டி குட்டி சிறுவர்களே இருவரும். ஆறு ஏழு வயதுதான் இருக்கும். காதோடு காது வைத்தாற்போல் ஏதோ ஒன்றினை அவர்களுக்குள்ளேயே மாற்றிமாற்றி பேசிக் கொள்கிறார்கள். அதில், உற்சாகம் கொண்டு கைதட்டி சிரித்து கொள்கிறார்கள். இப்படியே ஓரிரு ரகசியங்கள் பேசியபின், ஒருவன், தன் விரலினை சொடுக்கிட.. பொன்நிறத்தில் ஒரு மாயவாயில் அவர்களின் உயரத்திற்கு தோன்றியது–இந்த நிறத்திலும் மாயவாயில் உள்ளதா என வியந்துக் கொண்டாள், தீரா. மற்றொருவனை இழுத்துக்கொண்டு அதனுள் நுழைந்தான், அவன். ஒரு நிமிடம் வரையில் அப்படியே இருந்தது அக்காட்சி.
அடுத்த பக்கத்தை திருப்பலாமா என தீரா நினைத்து கொண்டிருக்கையிலேயே அந்த பொன் வாயிலினுள் இருந்து வெளிவந்தார்கள் சிறுவர்கள் இருவரும். முதலில் வந்தவனின் கையில் ஒரு மரக்கன்று இருக்க, அவனை தொடர்ந்து வந்தவனின் விரலசைவில், கல்லும் மண்ணும் நீரும் அவனை சுற்றி வளையம் போல் சுற்றிக் கொண்டிருந்தது.
மரக்கன்றை வைத்திருந்தவன், சுற்றி முற்றி எதையோ தேடி ஒரு இடத்தில் கை காட்டி, "இங்கே" என விரல் நீட்டிட... உடனிருந்தவன், தன்னை சூழ்ந்திருந்த–கல் மண் நீர்–அனைத்தையும் அவ்விடம் நோக்கிச் செல்லுமாறு கையசைத்தான்.
மூன்றும், ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, சகோதரன்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் குவியலாக விழுந்தது. அதைக்கண்டு உற்சாகமாக கைதட்டியவர்கள் அக்குவியலினுள் குதித்து, சேரும் சகதியுமாக கைகளை பிணைத்து ஒரு குழியை தோண்டி அந்த மரத்தினை நட்டுவிட்டார்கள். காற்றில் அசைந்து அழகாகச் சிரித்தது அந்த மரம்.
"அண்ணா, இதை என்ன செய்யலாம்?" மரம் எடுத்து வந்தவனிடம், மீந்துக் கிடக்கும் மண் குவியலை கைகாட்டி மற்றொருவன் கேள்வியாக நோக்க.. விஷம பார்வையுடன் அவனை நோக்கியவன், "விளையாடலாம்.. ஹாஹாஹா" ஒரே தாவலாக அவன் மீது பாய்ந்தான். இருவரும் ஒன்றாக அந்த சேற்றினுள் விழுந்தார்கள். சிரிப்புடன் கட்டி புரண்டார்கள்.
அவர்கள் நிஜத்தில் எவ்வளவு நேரம் உருண்டு பிரண்டார்களோ! காட்சிப்படத்தில், சில நொடிகளிலேயே அது களிமண் குவியலாக மாற்றம் கொண்டிருந்தது. அந்தளவிற்கு பிணைந்து வைத்திருக்கிறார்கள் அந்த சேற்றினை.
இருவரின் மீதும் ஒட்டியிருந்த சேறானது நன்றாக காய்ந்துப்போய் வரவரவென்று அவர்களின் மேனியில் ஒட்டியிருக்க.. மரகன்றினை எடுத்துவந்தவன், மெல்ல மெல்ல அதனை தட்டிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே இன்னொருவன், தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டினான். அவன் கையசைவிற்கு ஏற்றது போல எங்கிருந்தோ வந்த சூறைக்காற்றானது நொடியில் அவனது மேனியை மூடியிருந்த சேற்று மண் முழுவதையும் தடையமே இல்லாமல் சுத்தம் செய்ததுடன், அருகிலிருப்பவனை காற்றில் தூக்கிச் சுழற்ற... இவன், கைக்கொட்டிச் சிரித்தான். அவனும், அந்தரத்தில் சுழன்றுக்கொண்டே கலகலவென சிரித்தான்.
காற்றுடனான சிறிதுநேர விளையாட்டிற்கு பின்பாக மொத்தமாக சோர்ந்துப் போனவர்கள், ஓரிடத்தில் அமர்ந்து விளையாடலாம் என முடிவெடுத்துவிட்டார்கள் போலும், அந்த களிமண்ணில் உருண்டைகள் உருட்டியும் பொம்மைகள் செய்தும் விளையாடினார்கள்.
போதுமான அளவு பொம்மைகள் செய்து முடித்தப்பின் அவரவர் செய்த பொம்மைகளை வரிசையாக அடுக்கிவைத்து தத்தம் கரங்களில் இருந்து பொன்னிறத்திலும் வெண்ணிறத்திலும் மாயக் கதிர்களை பொம்மைகளை நோக்கிச் செலுத்த.. அவைகள் அனைத்தும் உயிர் பெற்றது போல், தத்தக்கா பொத்தக்காவென நடக்கத் தொடங்கியது. தாங்கள் செய்துவைத்து மண் பொம்மைகள் அனைத்தும் நடமாடுவதை கண்டதில், சற்றுமுன் இருந்த உற்சாகம் மீண்டும் அவர்களை பிடித்துக்கொள்ள.. ஓடும் பொம்மைகளை துரத்திப் பிடிக்கத் தொடங்கினார்கள்.
அந்த ஓடி-பிடித்து விளையாட்டில், மொத்தமாக ஓடிய பொம்மைகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டார்கள் போலும். இவ்வளவு நேரமும் சிரித்து விளையாடி கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் சண்டை மூண்டது .
"அண்ணா, அதை நான் தான் பிடித்தேன்... எனக்கு கொடு"
"ஆனால், இது நான் செய்தது, நீ ஏன் என்னுடையதை எடுத்தாய்? நான் தர மாட்டேன்."
"ஆனால், எனக்கது வேண்டும். நான்தான் எடுத்தேன். கொடு... ம்ம்ம்ம்ம்... கொடு." நேர்த்தியாக வடிவமைக்கபட்ட பொம்மைகளுக்காக இருவரும் மல்லுக்கு நின்ற நேரம்... "காலா! பத்ரா! சண்டையிடாமல் விளையாடத் தெரியாதா?" இளஞ்சிவப்பு வஸ்திரத்தில், ரதியின் மறுரூபமாய்.. கண்ணில் கண்டிப்புடன் நடந்து வந்தாள், ஒரு யுவதி. அவளுக்குப் பின்னே, ஒரு வெண்ணிற மாயவாயில் அவளுக்கு வழிவிட்டு நின்றது.
அவளை கண்டதும் சிறுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி விலகி நிற்க.. தன்னுடைய பொம்மைகளை பத்ரனின் கரத்திலிருந்து பறித்து நின்றான் காலன்.
"காலா...." அவன் செய்கையால் தன் குரலில் கட்டளையுடன் அந்த யுவதி அவனை நோக்க, "ஆதி.. இது என்னுடையது... நான் தான் செய்தேன். பத்ரன் தான் அவனுடையதை விடுத்து என்னுடையதை எடுத்துக்கொண்டான்." காலன் குற்றம் சாடும்போது பத்ரனின் கண்கள் அழுகைக்குத் தயாராகி நின்றது. அதைகண்டு, அவ்விருவரின் அருகில் சென்ற ஆதி, இருவரின் தோளையும் பிடித்து மென்மையாக தன்னருகில் இழுத்து அவர்களுக்கு நிகராக கீழே அமர்ந்தாள்.
"பத்ரா... நீ ஏன் காலனுடையதை எடுத்தாய்?"
"அது அழகாக இருந்தது..." பாவமாக முகத்தை வைத்திருக்கும் பத்ரனின் பதிலால் ஆதியின் முகத்தில் லேசாக புன்முறுவல் அரும்பியது.
"காலா, பத்ரன் உனக்கு இளையவன் தானே? உன்னுடையதில் அவனுக்கு பங்கு கொடுக்க மாட்டாயா? அவன் ஆசைகொண்டு கேட்பின் அதனை தரமாட்டாயா நீ?" ஆதி, மென்மையாக கேட்டப்பின், பத்ரனையும் தன் கையில் இருக்கும் பொம்மையையும் மாற்றி மாற்றி பார்த்த காலன், "நான் தருவேன்..." இரண்டு பொம்மைகளை பத்ரனிடம் கொடுத்திட.. அதை பெற்றுக்கொண்ட பத்ரனின் முகத்தில் அத்தனை ஆனந்தம். அந்த இரு பொம்மைகளையும் தன் மடியில் கிடத்திவிட்டு அப்படியே கீழே அமர்ந்துவிட்டான் அவன். அதேசமயம், அந்த பொம்மைகளை கொடுத்த நொடியில், சற்றே வளர்ந்த; பக்குவம் கொண்ட சிறுவனின் உருவம் கொண்டான், காலன். தரையில் அமர்ந்த நிலையில் கண்கள் சிரிக்க அவனை நிமிர்ந்து நோக்கினான் பத்ரன். அக்காட்சியினை கண்டு புன்னகைத்து கொண்டிருந்த ஆதி, அமைதியாக அவர்களுடன் இணைந்து விளையாடத் தொடங்கினாள்.
அத்துடன் புத்தகத்திலிருந்து வந்த ஒளி மறைந்து விட... புத்தகத்தின் முதல் பக்கம் சாதாரணமான காகிதமாக மாறியது. உடனே, அப்பக்கத்தில் இருந்த எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினாள், தீரா.
காட்சியாக ஓடிய படம்தான் கதையாக எழுதப்பட்டிருந்தது, அந்த பக்கத்தில். தான் கண்ட காட்சியின் மூலமும் அந்த கதையின் மூலமும் அவர்களே ஆதிலோகினியும் அவளின் இரு சகோதரர்களும் என்பதை தீராவால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், ஆதிலோகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்த வரையில், ஆதிகால ரட்சகனான அமிழ்தபத்ரன் ஒருவனே ஆதிலோகினிக்கு இருக்கும் ஒரே சகோதரன். எனில், காலா என்னும் இந்த இன்னொருவன் யார் என்பதுதான் அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அந்த குழப்பத்துடனே அவள் மறுபக்கத்தை திருப்ப முனைந்த நொடி, "உன் கேள்விக்கான விடை இங்கு ஆதிலோகத்தில் இல்லை, தீரா." என்ற குரல் கேட்டு, அந்த புத்தகத்தை விடுத்து படக்கென எழுந்து நின்றாள் அவள். அவள் முன்னிலையில், நீல நிற ஒளிபந்தாக வீற்றிருந்தார், ஆதிலோக மகாராணி.
"மகாராணி?"
"ஆம் தீரா... உன் கேள்விக்கான விடை ஆதிலோகத்தில் இல்லை" மகாராணி கொடுத்த பதிலுக்கு அவளால் பெருமூச்சு விட மட்டுமே முடிந்தது.
"ஆனால், மகாராணி... ரட்சகனின் கவசம் உடையும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னுமும் அவனது சக்திகளை அவன் உணர்ந்து கொள்ளவில்லையே. என்ன செய்வது மகாராணி? அவன் எப்படி உணர்வான் அதனை? எனக்கு எதுவும் விளங்கவில்லை"
"இதுவரையில் அவன் மாயங்களை சந்திக்காததால் கூட அவனது சக்திகளை உணராமல் இருந்திருக்கலாம், தீரா. அவன் சக்திகளை எழுப்பிட முனைய வேண்டும் நாம். அவனை குறித்து அவன் உணர்ந்தால் மட்டுமே ரட்சகனால் ஆதிலோகம் வரவளிக்க முடியும். ஆனால்.... .... .... விதியின் எண்ணம் என்னவோ?" உண்மையில் தீராவின் கேள்விக்கான விடை ஆதிலோகத்திலும் இல்லை, ஆதிலோக மகாராணியிடமும் இல்லை. அந்த பதிலை வைத்திருப்பது, விதி மட்டுமே.
"மகாராணி, அவன் கவசங்கள் வேகமாக பலமிழந்துக்கொண்டு வருகிறது. இளவரசிகள் உண்டாக்கிய எல்லை தடையும் வழுவிழக்கிறது. எதிரிகளின் பார்வை விரைவில் அவன்மீது, விழும் மகாராணி. நான் அவனை காத்தாலும் அவனுக்கு தற்காப்பும் தேவையெனவே தோன்றுகிறது எனக்கு." என்ன செய்வதென புரியாமல் அவள் தவித்து கொண்டிருக்க, "ஆம், நானும் கவனித்தேன். குறிப்பாகச் சொல்லப்போனால், இன்னும் இரு நாள் பொழுதுகள் தான் தீரா. இன்றிலிருந்து இரண்டாம்நாள் அஸ்தமனதில், அவனுக்கு பதினான்கு வயது தொடங்கவிருக்கிறது.. அவன் கவசங்களும் அவனை முழுமையாக நீங்கிடும்" என்ற சொல்லால், அவள் விழிவிரித்து மகாராணியை நோக்க, "ஹ்ம், அதற்குள் ரட்சகனுக்கு தன்னிலையை உணர்ந்திட உன்னால் முடியுமா, தீரா?" என்னும் கேள்வியால் தன்னிலையை மீட்டுக்கொண்டாள் அவள்.
"ம்ம்.. முடியுமளவு முயற்சிக்கின்றேன், மகாராணி. முடியாவிட்டாலும் சரி, எதிரிகள் அவனை நெருங்கிடாமல் அவனை ஆதிலோகம் அழைத்துவரும் பொறுப்பு எனதாகும். எச்சூழலிலும் அதனை நான் மறவேன்." அவள் திடமாகக் கூறிட, "இவ்வார்த்தையே போதும், தீரா. உன்மீது எனக்கு நம்பிக்கையுள்ளது... ... ஹம்.. பிறகு, உமக்கு உதவிகள் வேண்டுமாயின் எவரையேனும் அழைத்துக்கொள். இனியும் ரட்சகனின் அடையாளம் குறித்து ரகசியம் காக்க அவசியமில்லை."
"உத்தரவு, மகாராணி" மகாராணியின் இந்த சொல்லே அவள் இருந்த நிலைக்குப் போதுமெனத் தோன்றியது. கூறவந்த தகவலை கூறியதும் அவளிடம் இருந்து விடைபெற்ற மகாராணி, மறைந்துவிட.. காலை ஏழு மணி ஆகியதாக கூறி அலாரம் அடித்தது, அவளின் ஸ்மார்ட் வாட்ச்சில்.
தன் மணிகட்டினை நோக்கியவள், "ஒரு மனுஷி எத்தன தடவ தா எட்டாங்கிளாஸ் படிக்குறதாம்? இந்த லூசு பயலுக்காக நா என்னென்னலாம் செய்ய வேண்டி இருக்கு.. ஷப்பா.. " நொந்துக் கொண்டவாரே, புறப்படத் தயாராகினாள், தன் பள்ளிக்கு . இரண்டாம் முறையாக எட்டாம் வகுப்பு பயில.
❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro