திட்டம் என்ன?
"அப்பா, அபி மாமாக்கு எப்போ சரி ஆகும்?" அபிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டு, கிட்டதட்ட அரைமணி நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த அரவிந்தனிடம் எதிர்பார்ப்புடன் கேட்டாள், தீரா. அவளை தொடர்ந்தே தங்களின் மாமாவை நோக்கினார்கள், இளவரசிகள். இரவு நேரம் என்பதால் வேறு எவரையும் எழுப்பிடாமல் அரவிந்தனை மட்டும் எழுப்பி, விஷயத்தை சொல்லி உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்கள் அவர்கள்.
"அவன் கண்ணு முழிக்கவே கிட்டதட்ட ஒரு வாரம் ஆகும் தீரு மா.. காயம் ரொம்ப ஆழமா இருக்கு. அதுவரையும் பூமில நீங்க மூணு பேரும் தான் சமாளிக்கணும்." பெருமூச்சுடன் கூறினார், தீராவின் வளர்ப்புத் தந்தையாகிய அரவிந்தன்.
"இல்ல, மாமா. இனி எங்கலாலயும் அங்க போக முடியாது" ரக்ஷாவின் அமைதியான சொல்லுக்கு, தீராவின் ஏன் என்னும் கேள்வி வார்த்தையாக வந்ததென்றால், அரவிந்தனின் பார்வையே அக்கேள்வியை சுமந்து இளவரசிகளை நோக்கியது.
"ம்ச். கடைசியா அவன் போறதுக்கு முன்னாடி என்ன செஞ்சான்னு நீ கவனிக்கலையா, தீரா?" அலுத்துக்கொண்டது போல் தீராவை நோக்கி எழுந்த மாயா, "அது எல்லை கவசம். இனி திரிபுரா நகரத்துக்குள்ள எங்க ரெண்டு பேராலையும் போகவே முடியாது, மாமா." ஷேனாவின் மீதான எரிச்சலுடன் தன் மாமாவிடம் முடித்தாள்.
"அட கடவுளே! இனி பதினாலு வருஷம் ஆகுமே அந்த கவசம் ஒடைய!" மாயாவின் சொல்லை கேட்டு அரவிந்தன் அதிர்ந்தாலும் உடனடியாக, மாற்று யோசனைகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால், சரியானதாக எந்த யோசனையும் பிடிபடவில்லை.
"கவியும் ராவியும் வேற ஒரு வாரத்துக்கு தேவராஜ்யம் கெளம்பீட்டாங்க; அவங்க இருந்தாலாச்சும் உனக்கு துணையா அனுப்பலாம்" அவரின் பார்வை தக்க விடையின்றித் தன் மகளை நோக்க, "ஒன்னும் பிரச்சன இல்ல, ப்பா. பூமிலயே தான் எனக்கு அண்ணணுங்க இருக்கானுங்களே. நா அவனுங்கட்ட நேத்தே பேசிட்டேன். அங்க நா சமாளிச்சுக்குறேன், நீங்க மாமாவ மட்டும் நல்லபடியா பாத்துக்கோங்க. என்னை பத்தி கவல படாதீங்க." அவளின் ஆறுதல் சொல்லுக்கு பிறகே சற்று நிம்மதிக் கொண்டார், அரவிந்தன்.
"சரி, இப்போ நா கெளம்புறேன். அபி மாமாவ பத்ரமா பாத்துக்கோங்க." இளவரசிகளிடம் திரும்பியவள், "சீக்கிரமே நம்ம ரட்சகன நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துறேன்." அவர்கள் மூவரிடமும் விடைபெற்று, பூமியில் தான் பாதியில் விட்டுவந்த வேலையை கவனிக்க புறப்பட்டாள், தீரா.
✨✨✨
கடந்த ஐந்து நிமிடங்களாக பல்லை கடித்த நிலையில் அலறும் ஷேனாவின் அலறல் ஒலி அந்த நடைபாதை எங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருக்க.. அதை காதில் வாங்கிக்கொண்டே, ஒலி வரும் அறையை நோக்கித் தன் வேக அடிகளை வைத்து நடந்தார், இருளரசன்.
இளவரசிகளின் ராஜபதக்க சக்தி தாக்கிய தாக்கம், அபியின் ஆத்ம-வாள், அதனுடன் இணைந்துத் தாக்கிய ரட்சகனின் உயிர்-ஒளி என அனைத்தும் ஒன்றிணைந்து சமாராவின் சக்தியை வெகுவாக வலுவிழக்கச் செய்திருக்க... பல ஆண்டுகள் கழித்து இன்று, வெறிகொண்டுத் தன் சக்தி-தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். வழக்கம்போல அதன் பலி, ஷேனா.
"சமாரா... என்ன இது? நீ சென்ற காரியம் இப்படி தோல்வியுடன் வருவதா?" தனது வௌவால் ரூபத்தில் இருந்துக்கொண்டு, சுவற்றோடு தள்ளப்பட்ட ஷேனாவின் நெஞ்சில் தன் நீண்ட நகங்களைக் கொண்டு துளையிட்டு அவன் சக்திகளை உறிஞ்சிக்கொண்டே அவன் தோள்பட்டையில் தன் பற்களால் துளையிட்டு ரத்தத்தை குடித்துக் கொண்டிருந்தவள், திடீரென காற்றில் முளைத்து வந்துக் கேட்கும் தன் மாமாவின் குரலால் தன் செயலை சட்டென நிறுத்திவிட்டு பின்னால் திரும்பி நோக்கினாள்.
அது காற்றில் முளைத்த வார்த்தை இல்லை, தன் மாமாவே தான் நேரில் வந்திருக்கிறார் என்பதை உணந்துக் கொண்டவள், ஷேனாவிடமிருந்து முழுதாக விலகி நடக்க.. நிலையில்லா ஒரு பெருமூச்சுடன் அவளை தொடர்ந்து இரண்டடி எடுத்த வைத்த ஷேனா, அருகிலிருந்த நாற்காலியின் கைபிடியை பற்றிக்கொண்டு அங்கேயே நின்றுவிட்டான்.
"கவலை கொள்ளாதீர்கள், மாமா. சமாரா பின்வாங்கினால், பின்விளைவுகள் சாதாரணமாக இருக்கப் போவதில்லை என்பதே அர்த்தம்." தன் நகத்திலிருக்கும் ஷேனாவின் ரத்தத்தை நாவினால் சுத்தம் செய்துகொண்டே இருளரசனுக்கு பதில் கொடுத்தவள், தன் அலமாரியை நோக்கி நடந்தபடி, "இனி நம்மை மீறி எத்திட்டமும் அவர்களால் செயல்படுத்த முடியாது." ஆணவப் புன்னகையுடன் ஒரு திரவக் குப்பியை கையிலெடுத்துக்கொண்டு மீண்டும் ஷேனாவிடம் நடந்தாள்.
"என்ன சொல்கிறாய், சமாரா? அவர்கள் திட்டம் எப்படி நமக்குத் தெரியும்?"
"பொறுத்திருந்து பாருங்கள், மாமா. உங்கள் மருமகள் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்" அந்த திரவக் குப்பியை திறந்து ஷேனாவின் காயத்தில் சில சொட்டுகளை விட்டவள், "ஷேனா....... வலிக்கிதா?" திமிரேறியத் தன் விழியால் அவன் விழிக்குள் ஆழமாக நோக்க, "இல்ல, ..... உன்னோட சக்திய பாதுகாக்குறது தான் என்னோட முதல் கடமை" நீண்ட பெருமூச்சுகளுக்கு மத்தியில் வந்தது அவனின் வலிமை குன்றிய குரல். முழுவதுமாக இருள் படர்ந்து சகஜமாகியது அவன் கண்கள்.
"ஹ்ம். இததான் எதிர்பாத்தேன்" அவளுக்கென வைத்திருக்கும் தனியொரு புன்னகையுடன் அவனை நீங்கி நடக்க.. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது ஷேனாவிற்கு. இருந்தும், தன்நிலையை இழுத்துப் பிடித்துக்கொண்டவன், அந்த நாற்காலியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தன்னை ஏமாற்றும் எண்ணத்தில் இருக்கும் கால்களின் உதவியுடன் நின்றிருந்தான்.
"அவர்கள் திட்டம் புரிந்தாலும், இன்னும் எத்தனைமுறை அங்கு சென்றாலும் மீண்டும் அவர்கள் வந்திடுவார்களே சமாரா. இளவரசிகள் மற்றும் அந்த ரட்சகனின் சக்திக்கு முன்னால் உன் சக்தியால் ஈடுகொடுக்க முடியாது"
"இல்லை, அரசே! இனி அந்த இளவரசிகளின் தொல்லை வராது." ஓரத்திலிருந்து வந்த ஷேனாவின் குரல், இருளரசனை சட்டென அவ்விடம் நோக்கித் திரும்பச் செய்ய, "இத்தனை காலமும் எதை கொண்டு நம்மை தடுத்தார்களோ, அதையே அவர்களுக்கு எதிராய் திருப்பிவிட்டென்; அந்நகரில் எல்லை கவசத்தை இம்முறை நான் உருவாக்கிவிட்டேன்." பெருமூச்சுகளுக்கு இடையே சொல்லிய அவன் சொல்லில் ஒரு திமிரும் கர்வமும் வெளிப்பட்டது. "சபாஷ், ஷேனா! என் மகனென நிரூபித்துவிட்டாய் நீ" இருளரசன் முகத்திலோ நிம்மதியின் உச்சகட்டம் நிழலாடியது.
"பிறகு, அவர்களின் சகோதரனை இனி நான் கவனித்துக் கொள்கிறேன்." அவ்விருவருக்கு நடுவில் வந்த சமாரா, "நீங்கள் கவலை கொள்ளாதீர்கள், மாமா. கூடிய விரைவில் அந்த ரட்சகன் உங்கள் காலடியில் கிடப்பான்." தன் மாமாவை நோக்கி புன்னகைத்தாள்.
"உன் திட்டம் என்னவென விளங்கவில்லை, சமாரா. ஆனால், என் மருமகளின் ராஜ தந்திரம் என்றால் அது சிறப்பானதாக தான் இருக்கும்."
"நிச்சயமாக மாமா, இம்முறை உங்கள் ஆசைக்கு கடிவாளமிட மாட்டேன். அடுத்து நான் இருள்மாளிகையுள் வருகையில் அந்த ரட்சகனுடன் தான் வருவேன். அதற்குமுன், இப்போது உணவுக்கு செல்லலாமா?"
"தாராளமாக"
"சேவர்களே! ஷேனாவின் உணவை இங்கே எடுத்துவாருங்கள்" வாயிலில் நிற்கும் மாய அரக்கர்களுக்கு கட்டளை பிறப்பித்தவள், "நீ ஓய்வெடுத்துக்கொள், ஷேனா" என்றதுடன் தன் மாமாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இருளரசனும் சமாராவும் அந்த அறையை நீங்கிய அடுத்தநொடி, கைப்பிடியை பிடித்திருந்தத் தன் பிடியை ஷேனா தளர்த்திய அடுத்த நொடி, தடுமாறித் தரையில் பொத்தென அமர்ந்தான் அவன். பல காலம் கழித்து அவனிடம் மீண்டும் அதே வலி. ஆனால், அவனால் இந்த வலியை கூட முழுமையாக உணர முடியவில்லை. வலிக்கிறது என்பது மூளைக்குத் தெரிகிறது தான். அவன் உடலும் அதை உணர்கிறது தான். இருந்தாலும், இதுதான் வலி என பிரித்தறிய முடியவில்லை அவனால்.
தன்னை மறந்துக் கண்ணை மூடியவன் அந்த நாற்காலியின் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.
❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro