குடும்பம்
~ எப்போதும் ஆள் நடமாட்டம் நிறம்பியிருக்கும் அந்த பகுதி, இப்போது வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றிலும் பூத்துக் குலுங்கும் மலர் கொடிகளுக்கு நடுவே செல்லும் படிகளுக்கு மத்தியில் அவள் மட்டுமே நடந்துக் கொண்டிருக்கிறாள், ஜல் ஜல் கொலுசொலியுடன்... பிறை மதியின் மந்தார ஒளியுடன்.
வைரங்களை செதுக்கிச் செய்த படிகள்–அவள் நடந்துக் கொண்டிருக்கும் படிகள்–நேராகச் சென்று நிறைவுற்றது, வைரமாளிகையின் மையக் கோட்டையின் பிரம்மாண்டக் கதவின் முன். ஆதிலோகத்தின் மகாராணி வாழும் கோட்டையின் விசாலமான கதவின் முன்.
மகாராணியின் அழைப்பின்றி வரும் யவருக்கும் அக்கதவுகள் திறக்காது என்பதை அறிந்திருப்பதால் அவ்வளவு எளிதில் யாரும் செல்ல நினைத்திறாத அந்த கதவின் முன் இப்போது நிற்கிறாள் அவள். கதவுக்கு மட்டும் மனித உருவம் இருந்திருந்தால், அதன் முழங்கால் உயரம் தான் இருப்பாள் அவள். அந்த வர்ணனையை நினைத்துக் கொண்டவள் நிஜமாகவே அதை ஒரு மனிதனாக நினைத்துக் கொண்டாள் போலும், வழி கொடுக்கச் சொல்லிடும் பார்வையுடன் அதன் முகம் நோக்கி அவள் நிமிற.. சத்தமே இல்லாமல் விசாலமாகத் திறந்துக் கொண்டது அக்கதவு. எவ்வித தயக்கமும் இன்றித் தன் அடிகளை முன்னோக்கிச் செலுத்தினாள் அவள்.
கோட்டையின் வரவேற்புக் கூடத்தின் நாலாபுறமும் மின்னும் வைரங்களில் மினுக் மினுக் ஒளி! ஒளியை தவிர்த்து அங்கு வேறு எதுவுமே இல்லை- இல்லை, ஒன்று இருக்கிறது! வெள்ளை நிற வைர ஒளியை தவிர்த்து, வித்தியாசமாக ஒளியை தந்துக் கொண்டிருக்கும் அந்த மயிலாசனம்!! கண்ணாடி போல் ஜொலிக்கும் அந்த மயிலாசனத்தின் உச்சத்தில் ஒரு உருண்டை கல் பதிக்கப்பட்டு, அதிலிருந்து ஐந்து நிற ஒளிகள் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு என ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றுக்கொன்று அளவில் சிறியதாகிக் கொண்டே போகும் நான்கு கற்களையும் மொத்தமாகச் சேர்த்து மூடியிருக்கும் கண்ணாடி போலான வைரம் அது. உள்ளுக்குள் இருக்கும் நான்கு கற்களின் ஒளியானது அவைகளை மூடியிருக்கும் வைரத்தின் ஒளியுடன் இணைந்து, ஐந்து வண்ணக் கதிர்களாக, அந்த மயிலாசனத்திலிருந்து குறிப்பிட்டத் தொலைவு வரையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இக்காட்சியில் அவளுக்கு வியப்பெல்லாம் எதுவும் இல்லை. இது, அவளுக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆம்! இதை அவள் அறிவாள். இது, பஞ்ச ரட்சக மணி. ஆதிலோகத்தின் ஐந்து இனங்களையும், நிரந்தர இருள் என்னும் பேராபத்திலிருந்துத் தற்காலிகமாகக் காத்துக் கொண்டிருக்கும் மணி.
அவள் நேராகச் சென்று அந்த மயிலாசனத்தின் முன்னிலையில் நிற்க.. அதன் மையத்திலிலிருந்து உருவாகி அவள் முன்னிலையில் வந்து நின்றது ஒரு நீல நிறத்திலான ஒளிபந்து. ஒளிபந்தின் ரூபத்தில் இருக்கும் ஆதிலோகத்தின் மகாராணி.
"மகாராணி, என்னை அழைத்ததன் காரணம்? ஏதேனும் முக்கிய காரணம் உண்டா?" அவள் குரலில் தெளிவு தெரிகிறது. நிச்சயம் அவள் அறிந்திருக்கிறாள், ஏதோ ஒரு முக்கிய காரணமாக தான் இந்த அழைப்பு என்பதை.
"காரணம் முக்கியமானது தான். எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு கடினமானது."
"செய்ய வேண்டியதை சொல்லுங்கள் மகாராணி. உங்கள் வார்த்தைகளை சிரம் மேற்கொண்டுச் செய்து முடிக்கிறேன்."
"நீங்கள் இந்த ஆதிலோகத்தை நீங்கிச் செல்ல நேரிடும், அக்காரியத்திற்காக. நீண்டகாலம். காரியம் முடிவடையும் காலம் வரையில் உங்கள் உறவுகளை பிரியக்கூடும். அவர்களுடனான எல்லா தொடர்பையும் இழக்கக் கூடும். தயாரா நீங்கள்?"
"மகாராணி, நீங்களே பணியும் செயலாதலால் மறுகேள்வியின்றி செய்கிறேன். எனக்கு நம்பிக்கை உள்ளது, என் காரியம் முடிவடையும் நாளில் என் குடும்பம் இங்கு எனக்காக காத்துக் கொண்டிருக்கும்." சில நொடிகள் யோசனையை கடந்து வந்தது அவளின் பதில்கள்.
"நிச்சயமாக. உங்களின் காரியம் நிறைவடையும் நாளில் நானே உங்களை மீண்டும் அழைக்கின்றேன், உங்கள் ஆதிலோக குடும்பத்தை காண. இப்போது..." மகாராணியின் குரல், தடைபட்டது சில நொடிகளுக்கு. அவர்களுக்கு பக்கவாட்டில் தோன்றியது ஓர் வெள்ளை நிற மாயவாயில். "நீங்கள் காணும் முதல் மனித உயிரின் மூலமாக தான் உங்களின் புதிய குடும்பம் உருவாகவிருக்கின்றது. உங்களின் இரண்டு புதல்வன்களும் உங்களின் எவ்வித உந்துதலும் இல்லாமல் அவர்களாகவே வந்து இந்த ஆதிலோகத்தில் பாதம் பதிக்கும் நாளில் உங்களின் கடமை நிறைவு பெரும். அதுவரையில், இங்கிருக்கும் எவருடனும் எவ்வித தொடர்பும் கூடாது. நீங்கள் செய்ய வேண்டியவைகளை நானே நேரடியாக வந்து உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்" மகாராணியின் சொற்களுக்குச் சம்மதமாய் தலையசைத்தவள், தன் குடும்பத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக் கூட வேண்டவில்லை. அப்படி பார்த்தாலும் அது இறுதி சந்திப்பாக இருக்காது என்பதும் அவளுக்குத் தெரியும். அதே எண்ணத்துடன் அந்த மாயவாயிலுக்குள் காலடி பதித்தாள் அவள்.
அவள் எதிர்பார்த்த நிலப்பரப்பில் பதிய வேண்டிய பாதங்கள், நிலத்தின் மீது பதியவில்லை. மாறாக, முதல் அடியை வைக்கும்போதே தடுமாறி, மொத்தமாக விழுந்தாள் அந்த மாயவாயிலினுள். அவளின் மூச்சுக்குழல் அடைத்தது. நுரையீரல் எங்கிலும் நீர். ஆழ்ந்த நீர்பரப்பின் உள்ளே தத்தளிக்கத் தொடங்கினாள் அவள்.
கண்ணுக்கு எட்டும் தொலைவில்தான் மேற்பரப்பு தெரிகிறது. ஆனால், என்னதான் முயன்றாலும் மேலே செல்ல மட்டும் முடியவில்லை. மெல்ல மெல்லத் தன் சுயநினைவை இழக்கத் தொடங்கினாள் அவள். அவளுக்குள் இருந்த இறுதி சுவாசக் காற்று, நீர் குமிழ்களாக மாறி கடலின் மேற்பரப்பை அடைந்த அந்த நொடி, கடல்ராஜன் தன் பெரும் அலைகளை அழைத்து அவளை நோக்கி அனுப்பிட.. தக்க சமயத்தில் அவளை இழுத்துக்கொண்டு கரையில் சேர்த்தது, கடல் ராஜனின் அலைகள்.
"ஹலோ... ஹலோ, கண்ண தெறங்க.. உங்களுக்கு ஒன்னுமில்லங்க.. கண்ண தெறங்க.. நா பேசுறது கேக்குதா? ஹலோ, ஏங்க..." ஓர் பெண்ணின் குரல் அவளை கன்னத்தில் தட்டி எழுப்பிட முனைந்துக் கொண்டிருந்தது. அக்குரலுக்கு, அவளின் செவியும் மூளையும் அசைந்துக் கொடுத்தாலும் கண்கள் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்க, "சங்கரி.... சங்கரி, என்னாச்சு மா? சங்கரி, கண்ண தெற... ஒன்னுல்ல.." பெண்ணின் குரல், இப்போது, உரிமையுடன் அழைக்கும் ஒரு ஆணின் குரலானது. ~
நிலமையை உணர்ந்துக்கொண்ட மூளையும், இது நிஜமல்ல என்பதை புரிந்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தன் கனவிலிருந்து நிஜத்திற்கு வந்தது. அவள் கண்கள் சட்டென விரிய.. லேசான பதட்டம் சூடிய முகத்துடன், மெத்தையில் படுத்திருக்கும் தன் மனைவியின் முன்னால் அமர்ந்திருந்தார், செல்வகுமார்.
"இப்போ என்னாச்சு சங்கரி? இப்டி மூச்சு தெனறுது, மறுபடியும் அதே கனவா?"
"ம்ஹூம்.. அதில்லங்க.."
"அப்போ?"
"இருவத்தி அஞ்சு வருஷம் ஆகீருச்சு," சங்கரியின் கண்கள், அருகிலிருக்கும் காலண்டரை நோட்டமிட, "ஓஹ், அதுவா." மெல்ல நிதானம் கொண்டது செல்வகுமாரின் முகம். சங்கரியின் கண்கள் இன்னுமும் அந்த காலண்டரை நோக்கியே இருக்க... அவள் கண்ணில் தெரிந்த வேதனையை உணர்ந்துக்கொண்ட அவளின் கணவர், அவளின் கையை மெல்லப் பற்றினார்.
"கவல படாத மா, அவங்க எல்லாரும் நல்லா தா இருப்பாங்க. கூடிய சீக்கிரமே நீயும் அவங்கள பாக்க தான் போற," கடந்த இருபது ஆண்டுகளாக இதே நாளில், இதேபோலான பதட்டமான விடியலில் அவர் சொல்லும் அதே வார்த்தைகள் தான். ஆனாலும் அவ்வார்த்தைகளை கேட்கையில் அவளுக்குள் சிறு நிம்மதி.
தன் கணவனை நோக்கிய சங்கரி மென்மையாக சிரிக்க, அவர்களின் கவனத்தை களைக்கவென படாரெனத் திறந்துக் கொண்டது அறை கதவு. கதவு வழியே ஓடிவந்தான் அவர்களின் இளைய மகன், அர்ஜூன்.
"ம்மா, உங்க ஃபீவர் இப்போ எப்டி இருக்கு?" சகஜமாக கேட்டுக்கொண்டே வந்து அவ்விருவருக்கும் நடுவில் அமர்ந்துக்கொள்ள, "ம்மா, நா உன்ட்ட தங்கச்சி தானே கேட்டேன். ஏன் இந்த பிசாசு பயல பெத்த.." சிடுசிடுவென உள்ளே வந்தான், வாலிப பருவத்தின் தொடக்கத்தில் இருக்கும் இவர்களின் மூத்த மகன், ஹர்ஷவர்தனன்.
"ஏன்டா! காலங்காத்தாலையேவா?" சங்கரி சலித்துக் கொள்ள, "ம்மா, பைக் கீ வாங்கி குடு ம்மா அவன்ட்டருந்து," அதே சிடுமூஞ்சி போஸுடன் தன் தம்பியை முறைத்தான் ஹர்ஷா.
"ம்மா, நா ஒரே ஒரு தடவ ஓட்ட கேட்டேன். தர மாட்டுறான் ம்மா"
"உனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல டா வெண்ண. நீலாம் ஓட்டக் கூடாது"
"அது ஆகலனாலும் எனக்கு வண்டி ஓட்ட தெரியும் டா."
"லைசன்ஸ் இல்லாமல் ஓட்ட போறியோ? நீ போற வேகத்துக்கு என் வண்டிய தா புடிப்பாங்க. எவன் ஃபைன் கட்டுறது?"
"ஏன்.... ஊருல இருக்குறவன் எல்லாம் லைசன்ஸ் வச்சுட்டு தா ஓட்டுறானுங்களோ?"
"டேய் அஜ்ஜு, ரூல்ஸ கொஞ்சமாச்சும் மதியேன்டா," தன் தவ புதல்வன்களின் விடியல் நேர வாக்குவாதத்தை பொறுக்க முடியாமல் அர்ஜுனை நோக்கினார், செல்வகுமார்.
"ஹஹா! ஐயாலாம் ஐயாவே போட்ட ரூல்ஸா இருந்தா கூட மதிக்க மாட்டேன். இதுல எவன் எவனோ போடுறத கேப்பேனா?"
"அர்ஜூன். காலைலயே ஆரம்பிக்காதீங்க ரெண்டு பேரும். சாவிய குடு அண்ணன்ட்ட. பொழுதோட உங்கள்ட்ட கத்த முடியல டா என்னால" சங்கரி, சிறு எரிச்சலுடன் தன் இளைய மகனை கண்டிக்க, "நொண்ணன்ட்ட குடுக்கணும்!" வாய்க்குள் முணங்கிக் கொண்டவன், "அவனுக்குன்னு தனியா வண்டிய வாங்கி குடுத்ததும் தான் குடுதீங்க, அதையே வச்சுட்டு சீன் போடுறான்." பல்லைக் கடித்துக்கொண்டு தன் அரை-கால் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்தான்.
"என் வண்டி, நான் என்னமோ பண்ணுறேன். உனக்கென்ன டா?"
"ப்பா. காலங்காத்தாலையே எங்க போறன்னு கேளுங்க ப்பா" ஏதோ தன்னால் முடிந்த ஒரு நல்ல காரியத்தை அண்ணனுக்கு செய்து விட்டதாக ஒரு நிம்மதி அவன் முகத்தில்.
"அவன் கேக்குறது சரி தா, விடிய காத்தாளா எங்க டா போற?" அர்ஜுனின் ஆசை நிறைவேறியதை போல், மூத்த மகனிடம் கேள்வியை கேட்டுவிட்டார், செல்வகுமார்.
"ஜிம் போறேன் ப்பா." தயக்கமே இல்லாமல் ஹர்ஷன் பதில் கொடுக்க, கணவனும் மனைவியும் ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
"அர்ஜூன், சாவிய அண்ணன்ட்ட குடு," அதற்குமேல் எதுவும் கேட்காமல், அர்ஜுனுக்கு கட்டளையிட்டார், செல்வகுமார். முறைத்துக்கொண்டே தன் கையிலிருக்கும் சாவியை அவன் கையில் ஓங்கி அடித்தான்.
தம்பியை முறைத்துக் கொண்டே சாவியை பெற்றுக் கொண்டவன், அறை கதவை நோக்கி நடக்க, "இரு, வண்டில காத்த புடுங்கி விடுறேன்" அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டே அவனை பின்தொடர்ந்தான் அர்ஜுன்.
"சாவடிச்சுறுவேன் டா" அவன் பின்னந்தலையிலேயே சுளீரென ஒரு அடியை வைத்தான் ஹர்ஷன். பதிலுக்கு, இவனும் அடிப்பதற்குத் தன் கையை ஓங்க, அவன் கையை முறுக்கிப் பிடித்து ஹர்ஷன் தடுத்ததும், தன் முழங்காலை தூக்கி அண்ணனின் முதுகிலேயே ஒரு உதை வைத்தான் அர்ஜுன். அதற்குமேல் நடந்த சண்டை, அவர்கள் அன்னை-தந்தை பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது.
தன் புதல்வன்களின் தலை மறைந்ததும், வாயிலை நோக்கி பெருமூச்சு விட்ட சங்கரி, "இன்னும் வெளையாட்டு புள்ளைங்களாவே இருக்கானுங்களே இவனுங்க" விரக்தியுடன் நொந்துக் கொண்டாள் அவள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro