ஏன்? எதற்கு? எப்படி?
தேவ ராஜ்யம்:
தங்கள் கண் முன் இருக்கும் அதிசயத்தை கண்டு வாயடைத்துப் போன நிலையில் நின்றிருந்தார்கள், ரட்சக ராஜ்ய இளவரசிகளும் அவர்களின் அத்தை மகள்களும். அலைகள் ஆர்ப்பரிக்கும் அந்த கடலை கண்ட நொடியில், இத்தனை காலங்களாகத் தாங்கள் ஆதிலோகத்தில் தான் இருந்தோமா? இல்லை, இந்த கடல் தான் புதிதாகத் தங்களின் லோகத்துக்கு வந்திருக்கிறதா என வியத்தபடி நின்றிருந்த நால்வருக்கு அருகில் பறந்துக் கொண்டிருந்தார்கள், தேவ ராஜ்யத்தை சேர்ந்த மூவர்.
தேவ அரசரின் யூகத்தையும் சந்தேகத்தையும் ராகவி மற்றும் சங்கவிக்கு விளக்கிச் சொல்லியிருந்த ரட்சகராஜ்ய இளவாசிகள், அவர்களையும் அதே குகைக்கு அழைத்து வந்திருக்க.. ஏற்கனவே இளவரசிகளை அழைத்துச் சென்ற அதே புனித குகையின் உள்ளே இன்னும் முன்னேறி அவர்களை அழைத்துச் சென்ற தேவ அரசர், இறுதியாக அவர்கள் நால்வரையும் அழைத்து வந்திருப்பது அந்த குகையின் மறுபக்க எல்லைக்கு தான். அதை குகையின் எல்லை என்பதை விட பரந்து விரிந்த மணல் கரையை கொண்ட பெருங்கடல் என்பதே சரியாக இருக்கும்.
"ஆதிலோகத்துல கடலா?" இளைய இளவரசி வாய் விட்டுச் சொல்லிவிட்டாள் என்றால் மற்ற மூவரும் சொல்லவில்லை, அவ்வளவு தான்.
வடக்கே அனாலி பர்வதம் முதல் தெற்கே அராலி பர்வதம் வரையில் மட்டுமே ஆதிலோக வரைபடத்தை அறிந்து வைத்திருக்கும் நம் ஆதிலோக மக்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு எல்லை என்பது இரண்டு மாய இனங்களின் வாழ்விடம் தான். ஆனால், உண்மையில் அந்த எல்லைகளின் எல்லையில் இருக்கும் மெய்யான எல்லை என்பது என்னவென்று அந்த மறைவிடங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. தேவ ராஜ்யத்தில் மறைந்திருக்கும் அதிசயம் தான் இந்த பெருங்கடல்.
"நான்தான் முன்பே சொன்னேனே, இளவரசி! ஆதிலோகம் உருவான சரித்திரம் வேண்டுமானால் நம் ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஒன்றாக இருக்கலாம், ஆனால், ஆதிலோகத்தின் ஐந்து ராஜ்யங்களும் எப்படி உருவானது எத்தகைய அமைப்பை கொண்டது என்பது இன்றளவும் பெருமளவில் மறைக்கப்பட்டு தான் உள்ளது."
"ஆனா, ஏன்?"
"எல்லாம் எங்க இனத்தோட பாதுகாப்ப உறுதிபடுத்த தான், இளவரசி" மாயாவின் கேள்விக்கு விளக்கம் கொடுத்த நீலியை தொடர்ந்து, "பலறோட கண்ணுல இருந்து மறைக்க வேண்டிய அற்புத ரகசியங்கள் இங்க நெறைய இருக்கு. இன்னைக்கு இத நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய தேவை இருக்குறதால மட்டும் தான் இந்த ரகசியம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. இனிமேல், இந்த ரகசியங்கள் யாருக்கும் தெரியாம பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்க நாலு பேருக்கும் இருக்கு" என அவர்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றினையும் கொடுத்தான், சமர். அவன் சொல்லுக்கு சம்மதமாய் ஒருசேர தலையசைத்தார்கள் நால்வரும்.
அவர்களின் ஒப்புதலுக்கு பின்பே ராகவி மற்றும் சங்கவியை நெருங்கிய தேவ அரசர், "இதற்கு மேல் நீங்கள் தனித்து தான் செல்ல வேண்டும். ஆழிலோகம் உங்களின் வருகையை ஏற்றுக்கொண்டால், சந்தேகமே வேண்டாம், நீங்கள் இருவராய் இருப்பினும் நீங்களே எம் ஆழி தேவதைகள்" எனக் கூற, அவருக்கு தலையசைத்துவிட்டு முன்னேறி நடந்தார்கள், இருவரும்.
எந்த யோசனையும் இல்லாமால் தலையை அசைத்து விட்டாலும் அவர்களின் மனதில் ஒரு சிறு சலனம், சிறு தயக்கம். தங்களை இந்த கடல் ஏற்றுக்கொள்ளுமா என்ற தயக்கமா?.. இல்லை இதன் காரணம் வேறு ஏதோஒன்று. அது அவர்களுக்கும் புரியவில்லை.
அலைகள் ஆர்ப்பரிக்கும் அந்த கடலை நோக்கி மெல்ல முன்னேறிய சகோதரிகள் இருவரும் சிறிது தயங்கியே தான் நடந்தார்கள். அவர்கள் முழங்கை முதல் விரல் நுனி வரையில் சுரந்துக் கொண்டிருந்த நீரானது அவ்விருவரும் கடலை நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதை பார்த்த படியே நடந்தவர்கள் கரைதொடும் அலையை அடைய ஏழு அடிகளே இருந்த நொடி, இருவரின் கைவழியே கீழ்நோக்கி விழுந்துக் கொண்டிருந்த நீரானது யானையின் தும்பிக்கை போல் மேலெழும்பி கடலை நோக்கிச் சீரிட... தங்களில் தோன்றிய திடீர் மாற்றத்தால் மிரண்டு விழித்த இருவரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றதில் தங்கள் அரசிகளின் தயக்கம் உணர்ந்த கடலானது அவர்களின் தலைக்கு மேலே தன் அலையை இழுத்துச் சென்று இருவரையும் கடலுக்குள் இழுத்துக் கொண்டது.
நொடி நேரத்தில் நடந்து முடிந்த செயலால் அதிர்ந்த ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரும், கடலுக்குள் மூழ்கிய தங்கள் அத்தை மகள்களை காக்கும் எண்ணத்தில் முன்னேற முனைந்த நேரம், "வேண்டாம், இளவரசிகளே" அவர்களை தடுத்த தேவ அரசரின் முகத்தில் ஒருவித ஆனந்தம் மலர்ந்திருந்தது. அதன் காரணத்தை ஓரளவு யூகித்து மீண்டும் கடலை நோக்கித் தங்கள் பார்வையை அவர்கள் திருப்பிட.... வானை தொடும் நோக்கில் துள்ளிக் குதித்துக் கடலின் ஆழம் நோக்கிப் பாய்ந்தது இரு பெரும் மீன்கள். அந்த மீனின் துடுப்பை பற்றுதலாகப் பிடித்தபடி நீண்ட கூந்தலும் இரு கைகளும் கொண்ட மீன்! .... இல்லை, அவர்கள் கடல் கண்ணிகள்.. ஆழி தேவதைகளாகிய ராகவி மற்றும் சங்கவி.
இருவரும் கடல் கண்ணிகளாக உருவெடுத்திருந்த நிலையில் இரண்டு டால்ஃபின்களின் உதவியுடன் கடலின் ஆழம் நோக்கிச் செல்லும் காட்சியை வியந்து பார்த்திருந்த அனைவரும் பேச மறந்து நின்றிருந்தார்கள்.
"வாவ் .. அப்போ அண்ணிங்க தான் ஆழி தேவதைகளா?" நீங்காத ஆச்சரியத்துடன் முதலில் பேசியது மாயா தான். அவள் கேள்விக்கு தேவ அரசர் மௌனமாக தலையசைத்த நேரம், "அன்- இந்த விஷயம்கூட எங்க வீட்டுக்கு தெரிய கூடாதா?" சிறு தயக்கத்துடன் பொதுவாகக் கேட்டாள், ரக்ஷா.
"இது லோகமே அறிய வேண்டிய மகிழ்வான செய்தி, இளவரசி. ஆழி லோகத்தின் ஒருபாதி நம் லோகத்தில் இருப்பது மட்டுமே மறைக்கப்பட வேண்டியது. அதுவும் ரட்சகனின் வருகை வரையில் தான். அவன் வந்துவிட்டால், அவன் பார்த்துக்கொள்வான்" ரட்சகராஜ்ய இளவரசிகளை நோக்கித் திரும்பியவர், ஆழி தேவதைகளை கண்ணார கண்டுவிட்ட பெரு மகிழ்வுடன் இளவரசிகளுக்கு விளக்கம் சொல்லிய நேரத்தில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வந்ததது மாயாவுக்கு.
"மாமா தான் கூப்புடுறாங்க" பொதுவாக கூறியபடியே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
"ஹலோ மாமா..."
"....."
"நெஜமாவா?! ஆனா.. இவளோ சீக்கிரமே எப்டி? கொரஞ்சது ஒரு வாரமாச்சும் ஆகும்ன்னு சொன்னீங்?"
",,, ...."
"சரி, மாமா. அம்மா இல்லாத நேரமா பாத்து நாங்க வாரோம்ன்னு அண்ணன்ட்ட சொல்லீருங்க"
"....."
"ம்ம். அண்ணன பத்ரமா பாத்துக்கோங்க.."
"...."
"சரி, மாமா. நா வைக்கிறேன்" முகத்தில் நிலைத்த புன்னகையுடன் அரவிந்தனின் அழைப்பை துண்டித்தக் கையோடு உற்சாக மிகுதியில் தன் உடன்பிறப்பை அள்ளிக் கட்டிக்கொண்டாள், ரட்சகராஜ்ய மூத்த இளவரசி.
"என்னன்னு சொல்லிட்டு குதி அம்மு.. நானும் சந்தோஷ படுவேன்ல?"
"அம்மூ அண்ணன் கண் முழிச்சுட்டான்." என மீண்டும் குதிக்க, ஒருநிமிடம் தன் சகோதரியின் நிலைக்கே சென்றுவிட்ட ரக்ஷா, "ஆனா.. ஒரு வாரம் ஆகும்ன்னு அரவிந்த் மாமா சொன்னாங்க?" இரண்டு நிமிடங்கள் கடந்த பின்பு தான் குழப்பமாகினாள்.
"அதா மாமாவும் சொன்னாரு.. எப்டி இவளோ சீக்கிரமே எந்திருச்சான்னு ஒண்ணுமே புரியலயாம். ஆனா அண்ணன் இப்போ ஆல் ஓகேவாம்."
"எனில், நீங்கள் சென்று உங்கள் சகோதரனை கவனியுங்கள், இளவரசிகளே. ஆழி தேவதைகள் அவர்கள் அரியாசனத்தை அடைந்து மீண்டும் ராஜ்யம் திரும்பிடுவதற்கு சில காலம் எடுக்கும்." அவ்வளவு நேரமும் சகோதரிகளின் உற்சாக மிகுதியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த தேவ அரசரின் சொல் அவர்களை அடைந்த பின்பே தங்களை வேடிக்கை பார்க்கும் மூவரை கவனித்த இளவரசிகள், அசடு வழிய சிரித்தபடி, "சரி, அப்போ நாங்க கெளம்புறோம். அண்ணிங்கள பத்துன சந்தோஷமான விஷயத்த எல்லார் கிட்டயும் சொல்லணும்" என்றபடி அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டவர்கள், " சரியா அம்மாவோட சமையல் டைமிங்ல தான் போகணும் ம்மூ.. இல்லைனா நாம கைமா தான்" தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி ரட்சகராஜ்யம் நோக்கி புறப்பட்டார்கள் மாயா மற்றும் ரக்ஷா.
✨✨✨
மாலை நான்கு மணி இருக்கும்., தன் வீட்டு ஜன்னலில் நின்று சாலையை கவனித்துக் கொண்டிருந்தான் ரக்ஷவ். தெரு விளக்குக் கம்பம் தரையில் கிடக்க.. மரக் கிளைகள் அலங்கோலமாய் சாலையில் சிதறிக் கிடக்க.. குப்பை தொட்டிக்குள் இருந்திருக்க வேண்டிய குப்பைகளெல்லாம் கன்னாபின்னாவென அந்தத் தெரு முழுக்கப் பறந்துப்போய் கிடக்கும் அந்த காட்சியை மௌனமாக அவன் பார்த்துக் கொண்டிருந்த நேரம், "என்ன ஸார்! நீங்க செஞ்சு வச்ச சாகசத்த ரசிச்சுட்டு இருக்கீங்களா?" சாதாரணாமாகக் கேட்டபடி அவனுக்கு பின்னால் வந்து நின்றான், அர்ஜுன்.
"நெஜமாவே இதெல்லாம் நானே தான் செஞ்சேனா?" பின்னால் திரும்பாமல் அமைதியாக கேள்வியை கேட்ட ரக்ஷவ், மௌனமே நீடிப்பதை உணர்ந்துத் தன் நெற்றியை நீவிக் கொண்டே அர்ஜுனை எதிர்கொள்ள, "விடு ரக்ஷவ், எதையும் நீ தெரிஞ்சே செய்யலைல... இப்போ நாம செய்ய வேண்டியதெல்லாம் உனக்கு புதுசா வந்துருக்குற பவர கன்ட்ரோல் பண்ணுறது தான்" ரக்ஷவ் முகத்தில் படர்ந்த சலனத்தை கவனித்து, அர்ஜுன் அவனுக்கு ஆதரவாக தோளில் கை போட்ட நேரம், ரக்ஷவின் மணிக்கட்டில் இருந்துக்கொண்டு நீல நிறத்தில் மின்னியது அவனது ஆத்ம-வாள். அதை கவனித்தார்கள் இருவரும்.
"ம்ம்.. உன் பவர் வந்தப்போ கூட இது மின்னுச்சாம்.. ஹர்ஷா சொன்னான்.. ஆனா கோல்ட் கலர்ல."
"கோல்ட் கலரா?"
"ஆமா, இப்போ ப்ளூவா இருக்கு. இதுக்கு ஏதாச்சும் ரீசன் இருக்குமா?"
"இருக்கலாம். கண்டு புடிக்கனும்"
"ஆனா அந்த யூடியூப் அக்கா சொன்னத வச்சு பாத்தா பஞ்ச பூதத்துல காத்து தா கடைசியா கன்ட்ரோல் ஆகுறது.. ஆனா அது தான் இப்போ உன்கிட்ட ஃபர்ஸ்ட்டா வந்துருக்கு.. இப்போ நாம என்ன பண்ணுறது"
"ஃபர்ஸ்ட்டா இருந்தாலும் லாஸ்ட்டா இருந்தாலும் அத கன்ட்ரோல் பண்ண நான் ஸ்ட்ராங்கா இருக்கனும்.. அதுக்கு மெடிடேஷன் தான் சரின்னு தோணுது."
"ம்ம். அத சொல்லிட்டு தானே இப்போ வந்துருக்க. போ போ உன் பாரூ மம்மி குடுத்த ரெண்டு மணி நேரத்துல அர மணி நேரம் போய்ருச்சு. சீக்கிரமா மெடிடேஷன ஆரம்பி.."
"சரி சரி ஆரம்பிக்கிறேன். அதுக்கு முன்னாடி போய் ஃபிரெஷ்-அப் ஆகீட்டு வந்துறேன்" லேசாக சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ரக்ஷவ்.
அவன் மயங்கி சரிந்த நேரமே சரியாக கிச்சனில் இருந்து வெளியே வந்த பார்கவி அம்மா, தன் வீடே தலை கீழாக இருப்பதையும் ஜன்னல் உடைந்து கீழ கிடக்கும் நிளையில் அதன் பக்கத்திலேயே ரக்ஷவன் மயக்கத்தில் கிடப்பதையும் தன் மகள்கள் அதிர்ச்சியில் வெளிரிப்போய் நிற்பதையும் கண்டு உரைந்துவிட, திடீரென அந்த தெருவுக்கு மட்டும் சூறாவளி வந்து விட்டாது... அதில் பயந்துப்போய் தான் ரக்ஷவன் மயங்கி விட்டானென ஹர்ஷனும் மித்ராவும் சேர்ந்தது பார்கவி அம்மாவை நம்ப வைத்துவிட்டார்கள்.
முகத்தில் தண்ணீர் தெளித்தும் ரக்ஷவன் எழாததை கண்டு பதறிய பார்கவி அம்மா மருத்துவரை அழைத்து அவனுக்கு சிகிச்சை செய்த பின்பே, காலை பதினோரு மணி போல மயங்கியவன் மதியம் இரண்டரை போல் தான்சிறு சோர்வுடன் எழுந்தான்.
உணவுண்டப்பின், தன் வீட்டிற்கு சென்று மைண்ட் ரிலாக்சேஷன் மெடிடேஷன் செய்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக படிக்க வருவதாக பார்கவி அம்மாவிடம் ரக்ஷவன் சொல்ல.. இப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு படிக்கட்டும் என அவரும் இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுத்ததை அடுத்து ரக்ஷவ் மட்டும் வீட்டிற்கு வந்துவிட, நடந்ததை மற்றவர்கள் சொல்லிக் கேட்ட அர்ஜுனும் அவனை தொடர்ந்தே அவனுக்கு விளக்கம் கொடுக்க வந்துவிட்டான்.
ஃப்ரெஷ்-அப் ஆக சென்ற ரக்ஷவன், சரியாக அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், தன் வீட்டுத் திண்ணையில் ஆஜராகிட... அர்ஜுனின் திட்டபடியே ஆப்ரேசன் மெடிடேஷனின் முதல்கட்ட பயிற்சி தொடங்கியது அந்த ஞாயிறு நேர மாலையில்.
ஆதிலோக நாயகன் அழகாக பத்மாசனத்தில் அமர்ந்து தன் எண்ணங்களை ஒருநிலை படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பதை அவன் வீட்டுக்கு நேரெதிரே இருக்கும் வீட்டிலிருந்து இருவர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக சொல்ல வேண்டுமானால், சில மணி நேரங்களுக்கு முன்பாக அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவரும் மற்றும் அவருக்கு அசிஸ்டென்ட் என சொல்லி வந்திருக்கும் தீராவின் உடன்பிறவா வேதபுரத்து சகோதரர்களில் இருவரான ரவி மற்றும் வீர்.
பார்கவி அம்மா மருத்துவருக்கு அழைப்பு விடுக்கையிலேயே இவர்கள் இருவரையும் அழைத்து வந்துவிட்ட தீரா, பார்கவி அம்மாவின் அழைப்பை ஏற்ற மருத்துவரை வந்த வழியிலேயே வழியனுப்பி விட்டாள். ரட்சகனை சோதித்த இருவரும் அவன் உடல் இந்த சக்தியை தாங்குமளவு இன்னும் வலு பெறவில்லை என தீராவுக்கு விளக்கம் கொடுத்ததுடன் ரக்ஷவனுக்கு சில விசேஷ மூலிகை கஷாயங்களையும் கொடுத்துவிட்டு தான் சென்றார்கள். அனைத்தும் பார்கவி அம்மா கவனிக்காத நிலையில் தான்.
"என்ன டா பாக்குறீங்க.." எதிர் விட்டை தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கும் தன் அண்ணன்களுடன் வந்து நின்றபடியே தீரா கேட்க, "பரவால்ல... பையன் ஃபர்ஸ்ட் டைம் மெடிடேஷன் பண்ணுறான்னாலும் முக்கால்வாசி சரியா தான் செய்யுறான்." பார்வையை திருப்பாமல் பதில் கொடுத்தான், வீர்.
"ம்ம்.. இதெல்லாம் சரியா தான் செய்யுறான். ஆனா அவன் போக வேண்டிய வழிய கண்டு புடிக்க மாற்றானே" என நோந்துக் கொண்டவள், "சரி, நான் மாயவாயில இங்க வீட்டுக்குள்ளையே ஓப்பன் பண்ணி வச்சுட்டேன். இது நேரா நம்ம வேதபுரம் வீட்டுக்கு உங்கள கூட்டிட்டு போய்ரும். நீங்க எப்போ வேணும்னாலும் போய்ட்டு வந்துக்கலாம். ஆனா எப்போமே இங்க யாராச்சும் ஒருத்தர் இருந்துட்டே இருக்கனும். என்னால சாத்தியமா தனியா சமாளிக்க முடில டா" என இன்னும் சத்தமாக நொந்துக்கொள்ள, "சரி சரி ரொம்ப அழுவாத... எங்கள்ல யாராச்சும் இருக்கோம் எப்போமே" ரவி சொன்ன பின்பே அவள் முகத்தில் சிரிப்பு வந்தது.
"சரி, அபி மாமா கண் முழிச்சுட்டானாம். நான் போய் ஒரு எட்டு அவன பாத்துட்டு அர மணி நேரத்துல வந்துறேன். அதுவரையும் இவன் மேல ஒரு கண்ண வச்சுக்கோங்க. கொஞ்சம் அசந்தாலும் அந்த ஷேனா வந்து தூக்கிட்டு போய்ருவான்.'
"அதெல்லாம் நாங்க ரெண்டு கண்ணையும் அவன் மேலையே வச்சு பாத்துக்குறோம். நீ எதையும் யோசிக்காம போய்ட்டு வா" என ரவி தைரியம் சொன்ன பின்பு, அங்கிருந்து அதிலோகம் நோக்கி மாயவாயிலை திறந்தால், தீரா.
✨✨✨
ரட்சக ராஜ்யம்:
அபியின் அறையில், உடன்பிறப்புகள் மூவருடன் அவர்களின் மாமா அரவிந்தனும் மட்டும் இருந்த நேரம், சரியாக அங்கே ஆஜராகினாள் தீரா.
"வா டி.. நாங்க வந்ததுல இருந்து அண்ணன் எங்கள கூட விசாரிக்கல.. உன்னையும் ரட்சகனையும் தான் கேட்டுட்டே இருக்கான்." தன் இளைய தங்கை சொல்லை கேட்டு நிமிர்ந்து நோக்கினான், கட்டிலில் காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருந்த அபிஜித்.
"டோன்ட் வர்ரி மாமா. எந்த பிரச்சனையும் இல்ல அங்க. உனக்கு எப்டி இருக்கு இப்போ?"
"நான் நல்லா தான் இருக்கேன். ரட்சகன் இப்போ தனியாவா இருக்கான்?"
"அதெல்லாம் அங்க ஆள் செட் பண்ணிட்டு தான் வந்துருக்கேன் மாமா. அதோட ஒரு குட் நியூஸ் கூட இருக்கு. அவன் பவர் வெளிய வர ஆம்பிச்சுருச்சு" உற்சாகமாக சொல்லிக்கொண்டே அவன் அருகில் தீரா அமர, "நெஜமாவா" கோரஸ் பாடினார்கள் இளவரசிகள் இருவரும்.
"ஆமா டி. நான் என்ன பொய்யா சொல்ல போறேன். சரியா இன்னைக்கு காலைல ஒரு பதினோரு மணி போல"
"பதினோரு மணியா அபி கூட அப்போ தான் கண் முழிச்சான்." அவர்களுக்கு எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த அரவிந்தன் கூற, "பாருங்க மாமா, எங்க ரட்சகன் பூமில இருந்துட்டே இங்க அபி மாமாவ எழுப்பீட்டான்." கூறி சிரித்தாள் மாயா.
"அதோட உங்களுக்கு இன்னொரு வேலையும் இருக்கு" தீரா விஷமமாக இளவரசிகளை நோக்கியதில், "என்னாது....." எச்சரிக்கையுடன் அவர்கள் இவளை பார்க்க, "அவன் ஆத்ம-வாள் குட்டியா இருக்குறது தான் பிரசனன்னு இவளோ நேரம் நெனச்சுட்டு இருந்தேன்.. ஆனா அவன் பவர் வெளிய வந்தப்போ ஆத்ம நிறத்துல இருக்க வேண்டிய அவனோட வாள் கோல்டு கலர்ல மின்னுச்சு.. அதுக்கான ரீசன வெட்டியா இருக்குற நீங்க ரெண்டு பேரும் தான் கண்டுபிடிக்கணும்" அசால்ட்டாக கூறினாள் தீரா.
"அடியேய்... அங்க வர முடியாதுன்னு எங்கள வச்சு செய்யுறியா நீ?" ரக்ஷாவின் குமுறல்களை எல்லாம் கண்டுகொள்ளவே செய்யாத தீரா, "ஹிஹிஹி... சரி அத விடுங்க.. ராவி அக்கா கவி அக்காக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுதா." என பேச்சை மாத்த, "அதுவும் ஒரு குட் நியூஸ் தான்" சோகம் மறந்து உற்சாகம் கொண்ட இளவரசிகள், இவ்வளவு நேரமும் தங்கள் மாமாவிடமும் அபியிடமும் சொல்லிய கதையை இப்போது திராவிடம் ஆரம்பித்தார்கள். இதில் யாருமே கவனிக்காதது என்னவென்றால் அபியின் முகத்தில் தொன்றியிருந்த மாற்றமும் அவனின் விநோதமான அமைதியும் தான்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro