ஆழி தேவதைகள்!
"இளவரசிகளே" குளக்கரையின் ஓரமாக அமர்ந்திருக்கும் ராகவி மற்றும் சங்கவிக்கு அருகில் அமர்ந்திருந்த ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரையும் அழைத்தபடி அவர்களுக்குப் பக்கவாட்டில் சிறிய உருவமாக பறந்துக் கொண்டிருக்கும் தேவ அரசருக்கு அருகில் பறந்துக் கொண்டிருந்தார்கள் அவரை இங்கு அழைத்து வந்த நீலியும் சமரும்.
"தேவ அரசரே... வாங்க.." அவரின் குரலை கேட்டதுமே எழுந்து நின்ற நால்வரும் தேவ அரசரை வணங்கி வரவேற்க, "இதுக்கு என்ன காரணம்.. என்ன தீர்வுன்னு கண்டு புடிச்சுட்டீங்களா, தேவ அரசரே?" சோர்ந்து போயிருந்தத் தன் அண்ணிகளை நோக்கிப் பார்வையை செலுத்தியபடியே கேட்டாள், ரக்ஷா.
"ம்ம்.. அப்படி தான் நினைக்கிறேன், இளவரசி... அம்.. அது... தீர்வு தானென என்னால் நிச்சயமாக சொல்லிவிட முடியாது. அதை காண்பதற்கு நீங்களே என்னுடன் வந்தால் சரியாக இருக்குமென நினைக்கிறேன்"
"நாங்களும் வரணுமா?" அவரை நோக்கி வெறுமையான குரலில் கேட்டாள், சங்கவி. தேவ அரசரின் பிடிமானமில்லாத சொற்களை கேட்கையில் அதன் பின்னிருக்கும் விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆவல் அவளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உடலின் சோர்வு அவளை இப்படி கேட்கச் செய்துவிட்டது.
"ம்ம். நீங்களும் வந்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால், இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலைமையில்... .... உங்கள் விருப்பம்தான்"
"அப்போ நாங்க இங்கேயே இருக்கோம். நீங்க போய்ட்டு வாங்க." இளவரசிகளை பார்த்த ராகவி, அப்படியே தேவ அரசரை நோக்கியும் தன் பார்வையைத் தொடர்ந்துக்கொண்டே கூறினாள். அவர்கள் நிலமையை புரிந்துகொண்டு சரியென தலையசைத்த இளவரசிகள், தேவ அரசர் முன்னோக்கிப் பறக்க அவரை பின்தொடர ஆரம்பித்தார்கள்.
✨✨✨
மணிக்கட்டில் இருக்கும் தன் புதிய-குட்டி வாள் மின்னிக்கொண்டே சற்று மேலே எம்பிப் பறப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரக்ஷவ் முகத்தின் மேல் ஏதோ ஒரு உருவத்தின் நிழலாட "எவன் டா அது வெளிச்சத்த மறைக்கிறது" என நிழல் வந்த திசை நோக்கித் திரும்பியவன் கண்கள் அதிர்ச்சியில் விரிய.. விக்கித்துப் போனான் அவன். ரக்ஷவ் மட்டுமல்ல அவனை சுற்றி அமர்ந்திருந்த மற்ற நால்வரின் நிலை கூட அதுவே தான்.
கையில் தாங்கியிருக்கும் இரு வாள்களுடன் வாயிலில் நின்றிருந்த ஷேனாவின் பார்வையும் அவனுக்கு அருகில் நிற்கும் சமாராவின் பார்வையும் நிலைத்து நின்றது, ஒளிரும் மணிக்கட்டுடன் நிற்கும் ரட்சகனின் மீது தான். அவன் கையில் இருப்பது அவனின் ஆத்ம-வாள் என்பதை இருவராலும் யூகிக்க முடியவில்லை. ஏதோ ஒன்று மின்னிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும்தான் அவர்களால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
"யார்ரா இவங்கலாம்" மிரண்டிருந்த விழிகளுடன், வாயிலில் நிற்கும் இருவரை பார்த்துக்கொண்டே எழுந்த ரக்ஷவன், பின்னால் இருக்கும் சுவற்றை நோக்கி மெல்லமாக நடந்துக்கொண்டே தன் அருகில் இருந்த அர்ஜுனின் கையை பிடித்து பிசைந்தபடி மெல்லியக் குரலில் கேட்க.. மறுபுறம், மித்ரா மற்றும் மயூரிக்கு முன்னால் கேடையம் போல நின்றிருந்த ஹர்ஷன், அவர்கள் இருவரின் கையையும் பிடித்து ரக்ஷவன் செல்லும் அதே சுவற்றை நோக்கிப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே மெல்ல பின்னோக்கி அடி வைத்தான்.
"டேய்.. நேத்து உன்ன புடிக்க வந்தது இவங்க ரெண்டு பேரும் தான் டா.." அர்ஜுன், எச்சிலை கூட்டி விழுங்க, "அப்போ எங்க டா உன் ரெஸ்கியூ ஸ்குவாடு" ஹர்ஷாவின் குரல் ஆரம்பிக்கும் போதே வீட்டின் உள்ளே தன் வேக எட்டுகளை எடுத்து வைத்த ஷேனா, நேராக ரக்ஷவை நோக்கி விரைவதை பார்த்து ஹர்ஷன் கத்திய அதே நொடியில் அனைவரின் கைகளும் அவர்களுக்கு கவசம் போல முன்னுக்கு வந்து முகத்தை மூடிக்கொண்ட நேரத்தில், "அர்ஜுன், அவங்க கிச்சன விட்டு வெளிய வராம பாத்துக்கோ" என கேட்டது ஒரு பெண் குரல்.
"ஹான், ஓகே" அவன் இருந்த அதிர்ச்சியில் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்க மறந்துவிட்டு ரக்ஷவனின் கையை ஊதறித் தள்ளிக்கொண்டு வேகமாக அங்கிருந்து நகர.. மித்ராவும் மயூரியும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டார்கள்.
"ஒரு.. நிமிஷம்... இப்போ யாரு சொன்னீங்க?" கிச்சனை நோக்கி வேகமாக இரண்டடி வைத்திருந்த அர்ஜுன், இது மித்ரா, மயூரி இருவரின் குரலும் அல்ல... வேறு எதோ பழக்கப்பட்ட குரல் என்பதை உணர்ந்து மெல்லமாக பின்னோக்கித் திரும்பினான். சகோதரிகள் இருவரும் நாங்கள் இல்லை என தலையை மட்டுமே ஆட்ட, "சொன்னத செய் டா வெண்ண... மீண்டும் அதே குரல்.. குரல் மட்டும்தான் கேட்டது.
கூர்மை மின்னும் இரு வாள்களுடன் ரக்ஷவை நோக்கி வேகமாக உள்ளே வந்தவனை, கண்ணுக்கு தெரியாத எதோ ஒன்று தடுப்பதை பார்த்துக்கொண்டே கிச்சனை நோக்கி விரைந்தான் அவன்.
"என்ன ப்பா?" தீடீரென உள்ளே விரைந்து வந்தவனை மீன் கழுவிக் கொண்டே பார்கவி அம்மா பார்க்க, "அம்... ஒன்னும் இல்ல ஆன்டி.. அன் தண்ணி- தண்ணி குடிக்க வந்தேன்" சிறு குழப்பத்துடன் எதோ வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.
"அங்க தான் இருக்கு.. பாரு"
"ஹான்.."
அவனுக்கு ஒரே குழப்பம்... என்ன டா வெளியே பேச்சு மூச்சே இல்லாமல் இருக்கிறதே என கையில் எடுத்திருந்த தண்ணீர் டம்ளருடன் மெதுவாக கிச்சன் வழியாக வெளியே எட்டிப் பார்க்க.. எரிச்சலுடன் கத்தியபடியே ரக்ஷவை நோக்கி விரைந்து வந்தான், தரையில் விழுந்து இப்போது மீண்டும் எழுந்திருந்த ஷேனா.
விழிகள் விரிய... எங்கே அவனின் குரல் பார்கவி அம்மாவை அடைந்து விட்டதோ என சட்டேன அவன் உள்ளே திரும்பி வர, "இப்போ என்ன ப்பா?" மீண்டும் அதே போல் சாதாரணமாகவே கேட்டார் அவர்.
"அன்.. ஒன்னுல்ல ... நான்.. வந்து.. எதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா?" யோசித்து யோசித்து கோர்வையாக பேசிவிட்டவன் மூளையில் தான் பெரும் குழப்பம். அதை தீர்த்துக் கொள்ளலாம் என பின்னோக்கி நடந்துகொண்டே, தன் வேண்டுகோளை மறுக்கும் பார்கவியிடம் பேசியவன், மெல்லமாக கிச்சனை விட்டு வெளியே தலைகாட்ட .. பொருட்கள் எல்லாம் டம் டும் என உடையும் சத்தம் கேட்டதுமே படக்கென கிச்சனுக்குள் வந்துவிட்டான்.
இப்போது அவனுக்கு அனைத்தும் புரிந்து போனது.. இது எல்லாமே குரல் கொடுத்த அந்த மாயக்காரியின் வேலையாக தான் இருக்கும்... அதனால் தான் பார்கவி அம்மாவை கிச்சனை விட்டு வெளியே வராமல் தடுக்கும்படி சொல்லியிருக்கிறாள் என முடிவு செய்துக் கொண்டவன், "சும்மா சொல்லுங்க ஆன்டி.. ஹால்லயே இருக்க போர் அடிக்கிது... எங்க வீட்லலாம் அம்மாக்கு நான் தான் ஹெல்ப் பண்ணுவேன்.. நான் வேண்ணா சமைக்க தேவையான காய்லாம் வெட்டுறேனே.." பார்கவி அம்மாவின் கையிலிருக்கும் மீன்களின் அளவை கண்டு, எப்படியும் இன்னும் ஒரு அரை மணி நேரத்திற்கு அவர் எங்கும் நகரப் போவதில்லை என நிம்மதி கொண்டபடி மெல்ல பேச்சு கொடுத்துக்கொண்டே காய்கறி கூடையை உருட்டத் தொடங்கிவிட்டான், அர்ஜுன்.
✨✨✨
"தேவ அரசரே... இது என்ன இடம்?" நீலியும் சமரும் அவர்களின் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டதும் தேவ அரசரை தொடர்ந்து வந்திருந்த இளவரசிகள் இருவரும், இப்போது, ஜொலிக்கும் பாறைகள் கொண்ட குகை ஒன்றினுள் நின்றுக் கொண்டிருந்தார்கள். குகையின் பாறைகள் முழுக்கமுழுக்க ஓவியங்களும் சித்திர எழுத்துக்களும் மட்டுமே நிறைந்திருந்தது.
"இது தேவலோகத்தின் கிழக்கு எல்லை. எங்களின் ஒரு ரகசிய இடம்.. இன்னும் தெளிவாக சொன்னால் எங்களின் புனிதமான இடம் இது." என்றபடியே ஒரு சித்திர எழுத்துப் பாறைக்கு அருகில் அவர்களை அழைத்துச் சென்றார் அவர்.
"ஆதிலோகம் உருவான வரலாறு நம் எல்லா ராஜ்யங்களிலும் ஒன்றுதான், இளவரசி. ஆனால், நம்முடைய ராஜ்யங்கள் எப்படி உருவாகியது என்ற வரலாறு அந்தந்த ராஜ்யங்களை தாண்டி அவ்வளவாக வெளியே சென்றதில்லை. இது தேவலோக சரித்திரக் கதையும் எங்களின் நம்பிக்கையும்." என்றபடியே அந்த பாறைக்கு அருகில் பறந்தார் அவர். அதை பார்த்த இளவரசிகளுக்கு அந்த ஓவியம் சொல்லவரும் கதை புரிவது போலும் இருந்தது புரியாதது போலும் இருந்தது.
"பஞ்சலோகம் பற்றி அறிவீர்கள் தானே, இளவரசி?"
"ம்ம்.. ஆதிலோகம் உருவாகுறதுக்கு முன்னாடியே அது அழிஞ்சு போச்சுன்னு தான் இவ்ளோ காலம் நெனச்சுருந்தோம்.. ஆனா, இன்னைக்கு காலைல நுவழி பாட்டி சொன்னாங்க, அது நிலை குழஞ்சு வெவ்வேறு எடத்துல பிரிஞ்சி போய் இன்னும் அதோட அரியாசனதுக்கு உரியவங்களுக்காக காத்திருக்குன்னு." தேவ அரசரின் கேள்விக்கு மாயா பதில் கொடுக்க, "அது உண்மைதான், இளவரசி... பஞ்ச லோக அரியாசனங்கள்" என சொல்லிக்கொண்டே அந்த பாறையின் மையத்தில் இருக்கும் ஓவியத்தின் அருகே பறந்தார் அவர். "அவை ஐந்தும் சங்கமிக்கும் ஒரு புள்ளியில் பிறந்த நுழைவாயில் வழியாக தான் ஆதிலோகத்தை நம் இரட்சகன் உருவாக்கினான். அந்த ஐந்து தலைமைகளும் அவர்களின் ஆத்ம காவலர்களுடன் அரியாசனத்தில் அமர்ந்து நுழைவாயிலுக்குக் கட்டளை பிறப்பித்தால்தான் அது வழி கொடுக்கும்."
ஒரு மேடை போல் இருந்தது அவர் சுட்டிக் காட்டிடும் அந்த ஓவியம். ஒரு கல் மேடை போல். அந்த மேடையின் நடுவில் தங்க நிற ஐந்து-முனை நட்சத்திரக் குறியீடு.. ஒவ்வொரு முனையையும் பிரிக்கும்படி ஐந்து லோக சின்னங்களும் உள்ளங்கை போலான குழியை தாங்கிக்கொண்டு இருக்க... அதை சுற்றியுள்ள ஐந்து பெரிய கல்-சிம்மாசனத்தில் அந்தந்த லோகங்களின் முத்திரைகள் இருந்தது.
"பஞ்ச லோகத்திலிருந்து ஆதிலோகம் வருவதாகிலும் சரி.. இங்கிருந்து அங்கு செல்வதானாலும் சரி, வாயில் ஒன்றுதான் திறவுகோல் ஒன்று தான்."
அவர் சொல்ல சொல்ல அந்த ஓவியத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் இளவரசிகள் இருவரும். ஓவியத்தில் இருக்கும் அந்த வட்ட வடிவ மேடையை காண்கையில், ரக்ஷாவிற்கு, அது தன் சகோதரனிடம் இருக்கும் ஒரு பொருளை போலவே தோன்றியது. நுவழி பாட்டி கொடுத்ததாக அவன் சொல்லிக்கொள்ளும் ஒரு பரிசு பொருள்.
இந்த குழப்பத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஓரங்கட்டியவள், "சரி இப்போ இதுக்கும் அண்ணிங்க நெலமைக்கும் என்ன சம்பந்தம், தேவ அரசரே?" இன்னுமும் அந்த ஓவியத்தின் அருகில் பறந்துக் கொண்டிருப்பவரை நோக்கினாள், அவள்.
"இவைகளில் ஒரு அரியாசனதிற்கு உரியவர்கள் அவர்கள தானென சந்தேகிக்கிறேன்" என சொல்லிக்கொண்டே அந்த ஓவியத்தை விட்டுவிட்டு இளவரசிகளை அடைந்தார், தேவ அரசர்.
"என்ன?" அதிர்ச்சியில், அவரை நோக்கி நிமிர்ந்த மாயா, "ஆனா, ஏன்?" குழப்பத்துடன் அவரை பார்க்க, "இதை அறிந்தால் உங்களுக்கே விளங்கும்.. இங்கு காணுங்கள்..." அருகிலேயே இருக்கும் மற்றொரு பாறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார் அவர்.
"பஞ்சலோகம் தன் நிலையை இழக்கும் முன்னரே அவைகளுக்குள் சிறு பிளவு ஏற்பட்டது. ஆத்மலோகத் தலைவன் அதன் பொறுப்பை விட்டு நீங்கிச் சென்றதும் சரியான தலைமை இன்றி தன்னை பிற லோகங்களிடம் இருந்து விலக்கிக் கொண்டது ஆத்மலோகம்.. மாய மிருகங்கள் வாழும் ருத்வலோகத்தின் உயிர்களுக்கு பிற லோக உயிர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்க ரட்சகனே அதை தனித்து வைத்தான். அன்றிலிருந்து இந்த நுழைவாயில் செயலற்று போனது. அதனால், இரட்சகன் மற்ற லோகங்களுக்காக ஒரு திறவுகோளை உருவாக்கினான். திரிலோகமணி." அவர் சொன்னது போலவே வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் பச்சை, நீலம், சிவப்பு என மூன்று நிறங்கள் கலந்த கலவையாக இருந்தது திரிலோகமணி.
"ஐராலோகம், ஆழிலோகம் மற்றும் பாதாளலோகத்தை இணைக்கும் மணி.
பஞ்சலோகங்கள் நிலை குழைந்தபோது திரிலோகமணி பிரபஞ்சத்தில் எங்கோ தொலைந்து போனாது.
ரட்சகன் ஆதிலோகம் வந்ததும் மூலோக தலைமைகளும் இணைந்து அந்த மணியை அடைந்து.. ஆதிலோகத்தில் இருக்கும் மூலோகங்களுக்கான வாயிலை திறந்து பஞ்சலோக இணைவுக்காக செல்லும் ரட்சகனுக்கு வழி அமைப்பார்கள் என்பதே எங்களின் நம்பிக்கை." என சொல்லி முடித்தவர், அடுத்ததாக ஒரு பாறையின் அருகே அவர்களை அழைத்துச் செல்ல... மூன்று பெண்களின் உருவம் வரையப்பட்டிருந்தது.
அது தத்ரூபமாகவெல்லாம் இல்லை, வரைய பழகும் குழந்தைகள் வரைந்து வைத்த பொம்மைகள் போல இருந்தது அந்த ஓவியம். ஆனால், ஒன்று தெளிவாக தெரிந்தது... ஒரு பெண்ணின் கைகளில் இருந்து நீண்டு வளர்ந்திருக்கும் வாள் போலான ஒன்று நீர் தான் என்பதும், அதேபோல் மற்றொரு பெண்ணின் கைகளில் இருப்பது மரக் கிளைகளும் செடி கொடிகளும் என்பதும்.
"இதை காணுங்கள், இளவரசி.. முதன் முதலாக திரிலோகமணியை கையாண்ட மூவர். ஐராலோக அரியாசனத்தின் அதிபதியான வனதேவதை... ஆழிலோக தலைமையான ஆழிதேவதை மற்றும் பாதாளலோகத்தின் தலைமை." அந்த மூன்று பொம்மைகளையும் சுட்டிக் காட்டியபடி சொன்னார், அவர்.
இளவரசிகளுக்கு இப்போது புரிந்தது அவரின் சந்தேகம். ஆழிதேவதை என அவர் குறிப்பிட்ட அந்த பொம்மையின் கையிலிருந்து வெளிவருவது போலவே தான் தங்கள் அண்ணிகளுக்கும் கையின் வழியாக நீர் சுரக்கிறது.
"அப்போ... அண்ணிங்க தான் ஆழிதேவதைன்னு சொல்றீங்களா?" மாயா கேட்க, "என் யூகம் அதுவே. ஆனால், இருவருக்குமே சக்திகள் உயிர்த்திருப்பது தான் குழப்பமாக உள்ளது. எங்கள் நம்பிக்கையில் ஆழிதேவதை ஒருவளே" பதில் கொடுத்தவர் மனதிலும் முழுமையான தெளிவு இல்லை.
"சரி, இப்போ அண்ணிங்களோட நெலமைய எப்டி சரி பண்ணுறது?"
"என் யூகம் சரியானதென்றால்.... ஆழிராஜ்ய அரியாசனம் அவர்களை அழைக்கிறது. அவர்களேதான் அதை தேடிச் செல்ல வேண்டும். அங்கு சென்றால்தான் இவர்களின் நிலமை சரியாகும். அதுவரையில் தற்காலிக கவசத்தை உருவாக்கிட மட்டுமே என்னால் உதவிட முடியும், இளவரசி."
"ம்ம். எல்லாம் சீக்கிரமே சகஜமாகும்ன்னு நம்புவோம்."
"ஆனா, இவளோ காலம் இல்லாம இப்போ ஏன் இந்த சக்தி வெளிவருது?" ரக்ஷாவின் சந்தேகம் அவள் சகோதரியையும் பிடித்துக் கொண்டது. இருவரும் இணைந்தே தங்கள் பதிலை எதிர்நோக்கினார்கள், தேவ அரசரிடம்.
"காலம் நெருங்கிய சமயமே அனைத்தும் நிகழ்கிறது, இளவரசி. மூலோக தலைமைகளும் இணைந்தே திரிலோகமணியை கைபற்ற முடியும். அதன் பின்னரே ரட்சகன் பஞ்சலோகங்களை ஒன்றிணைக்க முடியும்.
ரட்சகன் விரைவில் இங்கு வரவிருக்கிறான் அல்லவா? எனில், அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் செயல்பட த் தொடங்கிடும் தானே?" என்றபடி இளவரசிகளை அவர் பார்க்க.. இப்போது அனைத்தும் புரிந்தது அவர்களுக்கு.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro