Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆயுதம்.

கண்முன்னே இருப்பது கனவா நிஜமா என பிரம்மித்திருந்த நிலையில் அந்த அறையினுள்ளே உறைந்து நின்றிருந்தான், ரக்ஷவன். காரணம், தன் கனவில் தோன்றி இம்சிக்கும் அதே இடம் இது. பளிச்சென ஜொலிக்கும் அதே வெற்று அறை. நீல நிறத்தில் ஒளிரும் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட அதே தூண்கள் நீண்டுயர்ந்து வரிசைகட்டி நிற்கிறது. ஒவ்வொரு ரத்தினமும் ஒன்றுக்கொன்று சலைக்காமல் ஜொலித்துக் கொண்டு, ஒளி சேர்த்துக் கொண்டுடிருக்கும் அதே அறையின் அடுத்த எல்லையின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சிம்மாசனத்தில், ரத்தினங்களின் ஒளியை மிஞ்சித் தன் முழு பிரகாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நீல நிற பளிங்கு வாள், அவ்விடத்தின் ஒட்டுமொத்த அழகையும் ஜொலிப்பையும் இரட்டிப்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது.

"அப்போ! காரணமில்லாம அந்த கனவு வரல!" தனக்குத் தானே சொல்லிக் கொண்ட ரக்ஷவன் ஒவ்வொரு அடியாக முன்னோக்கி வைக்கும் அதே நேரத்தில் சிம்மாசனத்தின் ராஜாவாய் அதன்மேல் மிதந்துக் கொண்டிருந்த அந்த வீர வாளை உற்று நோக்கி கொண்டிருந்தது, அவனின் பழுப்பு நிற விழிகள்.

நுழைவாயிலினுள் நுழைந்ததிலிருந்து அந்த வாளினை நெருங்கிட அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் பிரகாசத்தை பிரம்மாண்டமாய் பிரதிபலிக்கும் பளிங்கு வாளின் மீது வைத்தத் தன் கண்ணை எடுக்கவில்லை, ரட்சகன். அவன் எண்ணங்களோ குழப்பத்தில் பல திசைக்கு பாய்ந்தது. ஆனால், அவன் கண்கள் எங்கும் போகவில்லை.

இதனுடன் இணைந்தே, தன் கனவில் இதை நெருங்கும் ஒவ்வொரு முறையும் பொழுது விடிந்துத் தன் பாசத் தாயின் முகத்தை கண்டதுடன் அன்றைய தினம் தொடங்குவதும் அவன் நினைவுக்கு வர.. அந்த நினைவுகளால் அவன் கண்ணின் ஓரம் துளிர்த்தக் கண்ணீருடன் வாளை நெருங்கியிருந்தவன் அதை தன் கையில் பிடிக்கப்போன சமயம், "அதை அடைய நீ இன்னும் தயார் ஆகவில்லை, ரட்சகனே!" அவனை தடுத்தது, ஒரு குரல்.

குரலை கேட்ட ரக்ஷவன் திடுக்கிட்டு பின்னால் திரும்பிய நொடி நேரத்தில், தன்னை நெருங்கி வந்துவிட்டு மீண்டும் பின்னோக்கிச் செல்ல முனையும் தன் எஜமானனின் கையை அப்படியே விட்டுவிட மனமில்லாத அந்த வாளோ, தன் கைபிடியிலிருந்து நூல் போலான சக்தியை வெளியிட்டு ரக்ஷவனின் மணிக்கட்டை சுற்றிவளைத்த அதே வேகத்தில் அந்த நூலுடன் சேர்ந்தே உள்வாங்கப்பட்டு, அவன் வலது கையை சுற்றிய மாய வளையத்தினுள் குறுகிப்போய், கடலின் ஆழத்தை காட்டிடும் மென்பச்சை நிற வாளாக மாறி அவனின் சுண்டுவிரல் அளவிற்குச் சுருங்கி அதில் கோர்த்துக்கொண்டுத் தொங்கியது.

தன் கையை பார்த்து லேசாக அதிர்ந்தவன், மீண்டும் குரல் வந்த திசையில் பார்க்க... கழுத்து வரையிலான கேசத்துடன் வெண்ணிற நீண்ட ஆடையில் நின்றிருந்த ஒருவர் அவனை நோக்கி மென் புன்னகையுடன் நடந்து வந்தார். ரக்ஷவின் கண்கள், எச்சரிக்கையுடனே அவரை நோக்கியது.

"நீங்க யாரு? இது... என்ன மாதிரியான இடம்?"

"இது உனக்கான இடம். உனக்கு மட்டுமே உரிமையாகிய இடம்."

"எனக்கா? அப்போ நீங்க எப்டி வந்தீங்க?"

"நீதான் என்னை வரச் சொன்னாய். நினைவில்லையா?"

"நானா? நா எப்போ சொன்னே?"

"நீதான் சொன்னாய், ரட்சகனே! உன் சொல்லை மீறி இங்கு எதுவும் நடந்திடாது"

"அப்போ இங்க நா எது சொன்னாலும் நடக்குமா?"

"நிச்சயமாக நடக்கும். இயற்கையை மீறிய செயல்களை நீ சொல்லாமல் இருக்கும் வரையில்."

"ஒஹ். சரி, நீங்க யாரு? நா எதுக்கு உங்கள இங்க வர சொன்னேன். எப்போ சொன்னேன்? கொஞ்சம் சொல்றீங்களா? ஏன்னா எனக்கே தெரியல"

"நான் கர்ண விஜயன். உன் வாழ்வின் ரகசியத்தை அறியும் பாதையில் உன்னை அழைத்து செல்லவே வந்திருக்கிறேன். அதற்கு நீ விரைவாக தயார் ஆகிட வேண்டும்."

"எனக்கு புரியல.. வாழ்வின் ரகசியமா? என்ன ரகசியம்.. எதுக்கு தயார் ஆகனும்?"

"தேவையில்லா வீண்பேச்சு இப்போது வேண்டாம், ரட்சகனே! நீ என்னுடன் பேச வேண்டியவை நிறைய இருக்கிறதுதான். ஆனால், இது தருணமில்லை. விரைந்து உன்னை நீ தயார் செய்துக்கொள்." அதற்குமேல் அவனிடம் பேச மனமில்லாதது போல், கர்ண விஜயன், பின்னால் திரும்பி நடக்க, "ஆனா, நா என்ன செய்யனும்? அம்மாவும் இதே தான் சொன்னாங்க... ஆனா என்ன செய்யனும் எதுவுமே தெரியாது எனக்கு. நீங்களாச்சும் சொல்லுங்க" அவரை பின்தொடர்ந்தே நடந்தான், ரக்ஷவன்.  

"நினைவில் கொள், பஞ்ச பூதங்களும் உன் சேவகர்கள்..." தன் நடையை நிறுத்தியவர், அவனை நோக்கித் திரும்பி, "அவர்களை அழைத்துக் கட்டளையிடும் உன் ஆற்றலை நீ உணர்ந்தால்தான் இவ்வாளினை உன்வசம் கொள்ள முடியும்" அவன் மணிக்கட்டை பிடித்து அதில் புதிதாக தொங்கிக் கொண்டிருக்கும் சிறிய வாளினை சுட்டிக்காட்டி, "உன்னையும் உன் அன்புக்குரியவர்களையும் அழிக்க வரும் அவனை உன்னால் வெல்ல முடியும்" அவன் உடனடியாக செய்துமுடிக்க வேண்டியவைகளை சுருக்கமாகச் சொல்லி முடித்தார், கர்ண விஜயன். 

"ஹம்.. அன்புக்குறியவங்களா? என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? என் அம்மாவ காப்பாத்த முடியாதே என்னால" அவனின் குரல் விரக்தியுடன் ஒலிக்க.. பார்வை, தரையை வெறிக்க.. ரக்ஷவன் செவியை அடைந்தது, கற்பனையில் மட்டுமே அவன் எண்ணிக் கொண்டிருந்த அந்த சொற்கள்.  

"முடியும், ரட்சகனே! உன்னால் மட்டுமே அது முடியும். அதற்கு முதலில் உன்னை நீயே தாயார் செய்ய வேண்டும்.  உன் அன்னை இருக்கும் இடத்தை நீ உணர வேண்டும்"

அவர் சொன்ன வார்த்தைகள் சற்று தாமதமாகவே அவனுக்கு புரிய "என்ன?"அதிர்ந்து நிமிர்ந்தவனுக்கு முன்னால் இருந்தவரை காற்றில் மறைந்து ஏமாற்றத்தையே கொடுத்தது, அந்த அறை.

"ஹலோ... எங்க போய்ட்டீங்க? நீங்க சொன்னது எனக்கு புரியல. தெளிவா சொல்லுங்க.. ஹலோ... எதோ ரகசிய பாதையில அழைத்து செல்லனும்ன்னுலாம் சொன்னீங்க?..... இப்டி தன்னந்தனியா விட்டுட்டு போய்ட்டீங்க?.. ஹலோ... திரும்பி வாங்க. நா பேசுறது கேக்குதா?" என்னதான் முயன்றாலும் ரட்சகனின் சொல்லுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அவன் வந்த வாயில்தான் இப்போது அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. 

கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக அங்கேயே சுற்றிக்கொண்டு அவருக்காகக் காத்திருந்தவன், இனி அவர் வரப்போவதில்லை என்பதை புரிந்துக்கொண்டான். தான் செய்ய வேண்டியவைகளை அவர் சொல்லிவிட்டார். ஆனால், எப்படி தொடங்க என்னும் குழப்பத்திற்கு விடையளிக்கவேணும் அவர் மீண்டும் வந்திட மாட்டாரா? தன் கேள்விக்கான பதிலை கொடுத்திட மாட்டாரா என சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டே, இறுதியாக, தான் வந்த வழியே வெளியேறினான், ரக்ஷவன்.

அவன் அந்த ஒளி-வாயிலுக்குள் மறைந்த நொடி முதலாக பதட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த அர்ஜுன், மீண்டும் முழு உருவமாக ரக்ஷவன் தன் முன்னே வந்து நிற்பதை கண்ட பின்பே, "ஹப்பா! ஒருவழியா வந்துட்டியா நீ. நான் பயந்தே போய்ட்டேன்" நீண்ட பெருமூச்சுடன் அவனை அனைத்துக்கொண்டான். 

"ரக்ஷவ், உனக்கு ஒன்னும் இல்லைல?" அனைப்பிலிருந்து விலகியவன், "எங்க போய்ட்ட நீ? திடீர்ன்னு மேல இருந்து வெளிச்சம் வரவும் கரக்ட்டா காணாம போய்ட்ட.  நா எப்டி பயந்தேன் தெரியுமா? எங்க ஏதும் ஏலியன்-கீலியன்  வந்து உன்ன கிட்னாப் பண்ணிட்டு போய்ருச்சோன்னு நெனைக்குற அளவுக்கு போய்ட்டேன்" அர்ஜுன், அவன் போக்கில் புலம்பிக் கொண்டிருக்க.. ரக்ஷவின் கவனமோ அவன் கையை பற்றிக்கொண்ட புதிய வளையத்தின் மீதே இருந்தது. 

"என்னதிது ரக்ஷவ்?" அவன் பார்வையை தொடர்ந்து அர்ஜுனும் அதை பார்க்க, "ஹ்ம்? தெரியல. அந்த வெளிச்சத்துக்குள்ள போனதும், டெய்லி என் கனவுல வர்ற ஒரு எடத்துக்கு நான் போய்ட்டேன். அங்க இது என் கைய புடிச்சுக்குச்சு." தெளிவில்லாத விளக்கம் கொடுத்தான், ரக்ஷவன் 

"கனவுல வந்த எடமா?"

"ம்ம். அதே எடம் தான். எதுவுமே மாறல"

"எப்டி?"

"அதான் எனக்கும் புரியல. ஆனா, அங்க வந்தவரு சொன்னாரு... அது எனக்கான எடமாம். நா எது சொன்னாலும் அங்க நடக்குமாம்"

"ஹே, ஹேய்! ஒருநிமிஷம். நீ சொல்லுறது சுத்தமா எனக்கு புரியல. மொதல்ல இருந்து தெளிவா சொல்லு நடந்தத. யாரு வந்தா? என்ன சொன்னா?"

"ஹான், அது-" நடந்ததை முழுதாகச் சொல்ல வாயெடுத்தவன், தன் சுற்றத்தை ஆராய்ந்தபடி, "அன்- அர்ஜுன். நாம வீட்டுக்கு போய்ட்டு பேசலாமா? எல்லாரும் பயந்துட்டு இருப்பாங்கல்ல." யோசனையுடனே அவன் கேட்க, "அதுசரி. இப்போவாச்சும் இது தோணுச்சே." அவனை மேலும் கீழும் பார்த்த அர்ஜுன், "ஹ்ம், அதுவும் சரி தான். வா வீட்டுக்கு போனதும் எல்லாருக்கும் சேத்து ஒன்னாவே கத சொல்லிக்கலாம்." அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். 

வரும்போது வழிகொடுத்த முன் வாயில், இம்முறை ரட்சகனையும் சேர்த்தே கேட்-ஏறிக் குதிக்கச் செய்துவிட்டது. உள்ளே வரும்போது இருந்த பிசாசுகளை காணவில்லை என்னும் குழப்பத்துடனே, ரக்ஷவனை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தான், அர்ஜுன்.   

❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro