அழகியின் வலியும் வழியும்
~ மரத்தில் சாய்ந்து எவ்வளவு நேரம் கண்ணயர்ந்திருந்தானோ, விழிப்பு தட்டி மெல்லமாக அவன் கண் திறந்த நேரம், மடியில் துயில் கொண்டிருந்த அவனின் அழகி இல்லை...
பதறி எழுந்தவன் சுற்றிலும் அவளை தேடி நோக்க... அது அவர்கள் இருந்த அந்த சோலைவனமே கிடையாது... கருங்கும்மென இருண்டுபோய் கிடந்த ஒரு குகை அது.
அவளை காணாமல் அவன் உள்ளம் பதற... கண்கள் அந்த இருளிலும் அவளின் உருவத்தை தேடி அலைய... நல்லவேலையாக அங்கு தூரத்தில் தோன்றியது ஒரு சிவந்தநிற வெளிச்சம்.
திக்குத் தெரியாமல் தவித்திருந்தவனுக்கு ஒளியின் துணை கிடைத்தால் வேறென்ன?.. காலில் இடிக்கும் பாறைகளை கடந்து நேராக அந்த ஒளியின் வழியிலேயே விரைந்தவன் குகையை விட்டு வெளியேறி வெளியே வந்து பார்க்க... பட்டை மரங்கள் இலைகலற்று குச்சி குச்சியாக நிற்கும் வறண்ட காட்டின் நடுவே இருக்கும் நீர் நிரம்பிய குட்டை ஒன்றினை வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
"அங்கென்ன செய்கிறாய்?" அவன் பதட்டமாக அவளை நோக்கி விரைய, "குழம்பிய மனதிற்கு குட்டைகள் தான் விடை கொடுக்கும்" என கூறியவள், அவனை நோக்கித் திரும்பிய நொடியில் சிறு புன்னகையுடன் அதனுள் குதித்தாள். நீருக்குள் இருந்து தோன்றிய மஞ்சள் வண்ண ஒளி, அவன் கண்முன்னேயே அவனின் அழகியை விழுங்கிச் சென்றது. ~
"போகா.. போகாதே... நீ... போகாதே..வா..எங்கு சென்றாய்" மாயவாயில் வழியாக அப்போதே அவ்விடத்தை அடைந்திருந்த சமாரா, காற்றில் கையை துளாவிக்கொண்டே, தான் உருவாக்கிய கருநிற நெருப்பின் அருகில் புரண்டுக் கொண்டிருக்கும் ஷேனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேறு ஒரு மாயவாயிலை திறந்து அதனுள் சென்றாள்.
✨✨✨
"ஹே பாப்பா.." புதிதாக தான் உணர்ந்த சக்தியை தேடித் தேடி பள்ளி வாயிலுக்கே வந்துவிட்ட தீராவின் செவிகளை சேர்ந்தது, சமீபத்தில் எங்கேயோ அவள் கேட்ட குரல். பள்ளி வாயிலை நோக்கி அவள் தலை தானாகவே திரும்ப.. இன்னுமும் அந்த ஜெயில்-கைதி போஸை மாற்றாதது போல் அவளை பார்த்து நின்றான், காலையில் அவள் கையில் பென்சில் பாக்ஸை கொடுத்து விட்டவன்.
"தம்பி பேரு கூட கேக்காம ஓடிட்ட? பாக்ஸ கரக்ட்டா அவன்ட்ட குடுத்தியா?"
"ஹான், குடுத்தேன் குடுத்தேன்.. அந்த குச்சி டப்பாவ கரக்ட்டா உங்க தம்பி தமிழ் கிட்ட தான் குடுத்தேன்." அவனிடம் பேசவென வாயிலை நோக்கி நகர்ந்தபடியே கூறியவளின் முதல் கூற்றை கேட்டு சிரித்துக்கொண்டவன், "தமிழா?" அவள் உச்சரித்த பெயரை கேட்டு புருவம் உயர்த்தினான்.
"ஆமா. அவ்ளோ பெரிய பேருல அது மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு" அந்த நீளமான பெயரை நினைத்து அவள் பெருமூச்சுவிட, "யோக தமிழ் மாறன். நாங்க மாறன்னு கூப்புடுவோம்." புன்னகையுடன் பதில் கொடுத்தவன், "சரி, நீ மட்டும் என்ன வெளிய சுத்தீட்டு இருக்க? எக்ஸாம் இல்லைனா உள்ள விட மாட்டாங்களே?" சட்டென கேட்ட கேள்வியால் பரபரவென பார்வையை எல்லா திசையிலும் பறக்கவிட்டாள் தீரா.
"அ.. ஆமா... விட மாட்டாங்க... நான் எக்ஸாம்க்கு தான் வந்தேன்..." அடுத்தடுத்த வார்த்தைக்கு அவள் கோர்வையை தேடிக் கொண்டு இருக்கும்போதே தேர்வு முடிந்ததாக மணி அடிக்க, "சீக்கிரமா முடிச்சு குடுத்துட்டு சீக்கிரமா வந்துட்டேன்." என ஒருவழியாக சமாளித்துவிட்டாள்.
"ஓஹ்" தலையசைத்துவிட்டு அவன் தரையை நோக்கிக் கொண்டிருக்க.. தேர்வை முடித்துக்கொண்டு வந்த மாணவர் கூட்டத்தில் ரக்ஷவ் மற்றும் மயூரி தீவிரமாக எதையோ ஆலோசித்துக் கொண்டு வருவதை கவனித்த தீரா, அவர்கள் நேராக மாடியேறி வகுப்பறையை நோக்கி செல்வதை கவனித்துக்கொண்டே பார்வையை சுழலவிட்டாள். இன்னுமும் அந்த புதிய சக்தி அவளை சுற்றியே இருப்பது போல தான் அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆனால் அது எங்கிருந்து வெளிவருகிறது என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. அந்த சக்தியை தேடி கண்களை சுற்றிக் கொண்டிருந்தவளின் பார்வையில் இப்போது சிக்கியது, அவளின் உடன்பிறவா சகோதரன்களான ரவி மற்றும் வீர் தான். வாயிலுக்கு வெளியே சற்று தள்ளி ஒரு பைக்கில் சாய்ந்துக்கொண்டு 'இவ எப்படா நம்மள கவனிப்பா?' என்பது போல் தீராவையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவருமே.
"அன்.. என் அண்ணனுங்க வந்துட்டானுங்க.. நான் கெளம்புறேன்" தன் முன்னால் நிற்பவனிடம் சொல்லிக்கொண்டே கேட்டை திறந்து வெளியேறியவள் சிறு புன்னகையுடன் அவனிடம் விடைபெற்று தன் சகோதரன்களிடம் நகர்ந்தாள்.
"என்ன? மேடம் பாய் ஃப்ரெண்ட எங்களுக்குலாம் இன்ட்ரோ குடுக்க மாட்டீங்களா? " நக்களுடன் ரவி கேட்க, "எவ்ளோ நேரமா இங்க இருக்கீங்க?" அவனை முறைத்துக்கொண்டு கேட்டாள் அவள்.
"ஃபிப்டீன் மினிட்ஸ்?"
"ஓஹ்"
"ஏன் என்னாச்சு?" அவளை கிண்டல் செய்தும் எவ்வித சீண்டலும் இல்லாமல் குழப்பத்தில் இருப்பவளை ஏறிட்டான் வீர்.
"ஒன்னும் ஆகல.." ஏதோ யோசனையோடே மெதுவாக சொன்னவள், "சரி.. அவனுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு.. ஈவ்னிங் தான் வெளிய வருவான். அதுவர அவன கவனிச்சுக்குறீங்களா? நான் ஆதிலோகம் போய்ட்டு வாறேன்." அதே அமைதியுடன் கேட்க, "சரி ஓகே.", "போய்ட்டு வா " வேறு எதுவும் சொல்லவில்லை இருவரும்.
"கவனம் டா.. நீங்க ரெண்டு பேரும் உள்ள போகனுன்னா தான் பர்மிஷன் தேவ.. ஆனா அவன புடிக்க வர்றதுங்க வாசல் வழியாலாம் வறாதுங்க அதுங்களா உள்ள போய்ரும்"
"நாங்களும் தான்" அவள் சீரியசாக டியூஷன் எடுக்க... கூலாக பதில் கொடுத்தபடி விஷமமாக புன்னகைத்தார்கள் இருவரும்.
✨✨✨
~ தொப்பலாக நனைந்த நிலையில் இருந்திருக்க வேண்டியவன், நீருக்குள் இருந்து எழுந்து வந்ததற்கு எவ்வித தடையமும் இல்லாமல் நின்றிருந்தான். மீண்டும் அதே பூஞ்சோலையின் நடுவில். ஆனால் அவளை மட்டும் காணவில்லை.
பரபரப்பாக இங்குமங்கும் ஓடி ஓடித் தேடினான் அவளை... அவனின் ஒவ்வொரு அடிக்கும் குலுங்கிச் சிரிக்க வேண்டிய அந்த புல்வெளி, மயான அமைதியுடன் இருந்தது இப்போது. சூழலின் மாறுபாட்டை கூட கவனிக்காமல் அவளை தேடி அலைந்தவன் இறுதியாக கண்டுபிடித்தான், வானை முட்டும் உயரம் கொண்ட ஒரு மரத்தை அன்னாந்து நோக்கி வெறித்தபடி நிற்கும் அவனின் அழகியை.
"இங்கென்ன செய்கிறாய்? " உணர்வில்லா அவள் முகத்தை கவனித்துக்கொண்டே மெல்ல முன்னேறியவன் உயிர்ப்பில்லா அவள் கண்களை காண, "இது யாரென்று அறிவாயா?" மீண்டும் அந்த மரத்தை நோக்கித் திரும்பிக் கொண்டாள். அவனும் அவனது அழகியின் திசையிலேயே காண, "உனக்கு எதுவுமே நினைவில் இல்லை.. வா.. கூட்டிச் செல்கிறேன் உன் நினைவுகளுடன் இணைய" என்றபடியே அவள் கைகளை உயர்த்தி நின்ற நேரம் கதவு போல் திறந்துக் கொண்டது அந்த வானலவிலான மரம்.
அதனுள் முதலடியை அவள் வைக்க.. அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்தவன், மரத்தினுள் இப்படி ஒரு இடமா என வியந்து பார்த்துக் கொண்டிருந்த சமயம், மேல்நோக்கித் தன் விரலை சுட்டிக் காட்டியவளை தொடர்ந்து அத்திசையை நோக்கியவனுக்கு பெரும் அதிர்ச்சி.
அவன் செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த பாதாளத்தில் அடி ஆழத்தில் தான் நிற்கிறான் இப்போது. அனைத்தும் தொடங்கியபோது அவன் நின்றிருந்த அந்த உச்சி பாறையை தான் சுட்டிக் காட்டிக்கொண்டு நிற்கிறாள் அவள்.
"நீ உன் வழியாகவும் இங்கு வந்திருக்கலாம்... ஆனால், என் வழியில் உனக்காக காத்திருப்பவைகளை அறிந்திருக்க முடியாது." கண்ணீர் ததும்ப சொல்லிக்கொண்டே அவள் பின்னோக்கி நகர... விரைந்து முன்னேறி அவளை தன்னோடு இழுத்துத் தனக்குள் புதைத்தான்.
"உனக்காக காத்திருக்கிறேன்.."அவன் நெஞ்சுக்குள் பேசினாள் அவள். "நான்... நாங்கள் .. எல்லோரும் காத்திருக்கிறோம். வா.. விரைந்து வா. என் வழியாக வா" அவளின் ஒவ்வொரு மெல்லிய சொல்லுக்கும் பதட்டத்துடன் அவள் நெற்றிமீது முத்தங்கள் வைத்துக் கொண்டிருந்தவன், சட்டென அவளை பிரிந்து விலகி நிற்க... அவள் பின்னோக்கி நடக்கத் தொடங்கினாள் மீண்டும். பற்றி எறியத் தொடங்கிய தேகத்துடன். அதன் அனல் அவனை சுட்டது.
"என்ன செய்கிறாய் நீ?" தெளிந்த அதிர்ச்சியுடன்... பயத்துடன் அவன் கத்த, "இது நான் செய்யவில்லை.. நீயன்றி நான் அனுபவிக்கும் வலி. என்னை நீங்கி நீ எனக்கு தந்த வலி" அமைதியாக சொன்னபடி அவள் பின்னால் நகர்ந்துக்கொண்டே போக, "இல்லை.. உன் வேதனையை என்னால் தாங்கிட முடியாது.. என்னை நீங்கி செல்லாதே." தன் அழகியை மீண்டும் அடைய முன்னேறினான் அவன்.
"நான் நீங்கி செல்லவில்லை. நீ தான் விலகி நிற்கிறாய். விலகிச் சென்று வலியை தருகிறாய் ~
'ஆஹ்ஹ்ஹ்' கை நெருப்பில் சுட்டுக்கொள்ள... வலியில் கத்தியபடி கண்விழித்தான் ஷேனா.
"ஒரு நாள் முழுக்க தூங்கீருக்கீங்க இளவரசரே!" சற்று தள்ளி ஒரு மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த சமாரா, எதையோ கொரித்துகொண்டே சாதாரணமாக பேச, "நாள் முழுக்க அவ கூட தான் இருந்தீங்களோ?" ஷேனாவின் மௌனத்தை கண்டு மீண்டும் அவளே பேசினாள்.
"நான் உன்ன பாக்கும்போது நீ தண்ணில இருந்த.. உனக்கு ஜுரம் அதிகமா இருக்கு. வனதேசம் போய் மூலிகை எடுத்துட்டு வந்து குடுக்கவும் தான் இப்போ எந்திருச்சுருக்க"
"நன்றி சமாரா"
"அவசியம் இல்ல.. உன்னோட சக்திகள் எனக்கு தேவ.. அதுக்கு நீ முழிச்சுருக்கனும்" அவள் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல.. மீண்டும் மௌனமாகினான் ஷேனா.
"இன்னைக்கு ரட்சகன நெருங்கீட்டேன்.." சமாரா எதிர்பார்த்தது போலவே அவன் கவனம் அவளை நோக்கி திரும்பிட, "ஆனா, அவனோட சக்திக்கு ஈடா இன்னொரு சக்தியும் இங்க இருக்கு" என்றாள் யோசனையுடன்.
"என்ன சொல்ற நீ?"
'ரட்சகனோட கவசம் உடைஞ்ச அன்னைக்கு ரெண்டு திசைலயும் சக்திகள உணர்ந்தேன்னு சொன்னேன்.. நியாபகம் இருக்கா?" அவள் கேள்வியின் பின்பே, ஷேனா, அன்றைய நாளின் நினைவுகளை அலசி ஆராய, "நெஜமாவே இங்க இன்னொரு அதி சக்தி இருக்கு.. அதுவும் ரட்சகனோட சக்திக்கு ஈடா." அவன் யோசித்து முடிக்கும் வரையில் பொறுமை இல்லை சமாராவிடம்.
"ஒருவேள ரட்சகன் மறுஜென்மம் எடுத்த மாதிரி அவனோட சகோதரியும் எடுத்துருந்தா?" முழுதாக ஒரு நிமிடம் கடந்து வந்தது அவன் பதில்.
"இத ஏன் நான் யோசிக்காம போனேன்." அவள் வாய்க்குள் முணுமுணுத்து கொண்ட நேரம், "ரட்சகன நெருங்குனேன்னு சொன்ன?" துவக்கப் புள்ளியில் வந்து நின்றான் அவன்.
"ஹான். ஆனா அவன் பக்கத்துல போனதும் அவனோட சக்திகள என்னால உணர முடியல"
"உணர முடியலன்னா? எனக்கு புரியல"
"மாமா சொல்லி கேள்வி பட்டுருக்கேன். ஆதி மஹா யுத்தத்துல இருளோட வாரிசு கிட்ட இருந்த மொத்த சக்தியவும் ரட்சகன் எடுத்துக்குட்டான்.. ஆனா, அடுத்த கொஞ்ச நாள்லயே ஆதிலோகம் அழிஞ்சு போச்சு. அதனால இருள்-வாரிசோட சக்திகள எப்டி பயன்படுத்தனும்னு அவனால தெரிஞ்சுக்க முடியாம போச்சு. நேத்து வெளிவந்தது அவனால கட்டுபடுத்த முடியாத அந்த இருள் சக்தி தான். அதனால தான் அதுக்கான தடையம் நிலையா இல்ல"அவள் நீண்ட விளக்கம் கொடுக்க.. பாவம் நிழல்தேச இளவரசனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
"எத வச்சு சொல்லுற நீ?"
"நீ கவனிக்கலையா? அவனோட ஆத்ம+வாள் தங்க நிறத்துல மின்னுச்சே!"
"அதனால?"
"என்ன அதனால? மொத்த தேசத்துக்கும் தெரியும் இருள் வாரிசுக்கு மட்டும் தான் தங்க நிற ஆத்ம ஒளி இருக்கும்ன்னு, அது ரட்சகன் கிட்ட இருக்குன்னா இது தானே அர்தம்"
"இருள் வாரிசு கிட்ட மட்டும் தான் தங்க நிற ஆத்ம- ஒளி இருக்குமா?"
"என்ன தெரியாத மாதிரி கேக்குற நீ?"
"என்னோட ஆத்ம ஒளியும் அது தானே?"
"ஆமா... அதனால தான் இருள் வாரிசோட அரியாசனம் உன்ன தேர்ந்தெடுத்துருக்கு"
"என்ன சொல்ல வர்ற நீ? அப்போ? நான் இருளோட வாரிசுன்னு சொல்றியா?"
"இருக்கலாம்... யாருக்கு தெரியும்?" தோளை குழுக்கிக் கொண்டவள், "உன்னால மாயங்கள உபயோகப்படுத்த முடியாது தான். இருளோட வாரிசுகிட்ட இருந்த சக்திகள போனா ஜென்மத்துல ரட்சகன் எடுத்துக்குட்டான்.. ஆனா அவர மாதிரியே உன்கிட்டயும் குறையாத சக்திகள் இருக்கு தான?." சொல்லிவிட்டு சற்று அமைதி காத்தாள் அவள்.
ஷேனாவின் முகம் குழப்பத்தின் ஆழத்திற்கு பயணிக்க, "அப்டி இல்லாம கூட இருக்கலாம். உன் ஆத்ம சக்தி இன்னும் உன் கிட்ட தான் இருக்கு... அத உன்னால உபயோகப்படுத்த மட்டும் தான் முடியாது. ஒருவேள நீ இருள்-வாரிசுக்கு பொறந்த வாரிசா கூட இருக்கலாம்." இன்னும் குழப்பினாள் அவனை.
"அவருக்கு வாரிசு இருந்துச்சா?" இம்முறை அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் தெரியும், இதுவரை அவன் காட்டியதெல்லம் அதிர்ச்சியே கிடையாது... இப்போது அவன் கண்களின் தெரிந்ததே ஒரு திடுக்கிடும் உணர்வு... உலக அதிர்ச்சிகளில் கலப்படமில்லா அதிர்ச்சி அது தான்.
"ம்ம். ஆதிலோகம் அழியிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு கொழந்த பொறந்துச்சாம். ஆணா பெண்ணான்னு யாருக்கும் தெரியாது. தெரிஞ்சவங்கள அவரு விட்டு வைக்கல.. ஒருவேள அந்த கொழந்தையோட மறுபிறப்பா கூட நீ இருக்கலாம் ஷேனா.. அரியாசனம் தகுதி இல்லாதவங்கள தேர்ந்தெடுக்காது."
மீண்டும் ஆழ்ந்த யோசனைகுள் அவன் செல்ல... தன் சொல்லை தொடர்ந்தாள் சமாரா.
"இன்னொரு விஷயமும் கொஞ்சம் முன்னாடி தான் புரிஞ்சுது. அவன முதல் முறையா பாக்கும்போது அவனோட சக்தி வெளிபட்ட நேரத்துல நீ இருந்த... நேத்தும் நீ இருந்த... அவனோட சக்தி வெளிபாடு நிலையா இருந்துச்சு.. இன்னைக்கு நீ பக்கத்துல இல்ல.. அது நிலையா இல்ல. "
"என்ன சொல்ல வர்ற?"
"ஆன்மா ஒரு நிலையான அமைப்போட இருக்குறதுக்கு அது முழுமையடஞ்சு இருக்கனும். ரட்சகனோட ஆத்சக்தி கூட இருள் வாரிசோட சக்தியும் கலந்துருக்கு. ஆனா, அவனுக்கு அத கட்டுபடுத்த தெரியல.. நீ கூட இருக்கைல அவன் சக்தி கட்டுபாட்டுக்கு வந்துருது."
'இப்போ என்ன செய்யலாம் சொல்லு? "
"இப்போதைக்கு ஒன்னும் இல்ல... நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு.." கண்ணில் விஷமும் இதழில் ஆணவமும் கலந்து சொன்னாள் அவள்.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro